அன்பு (அகாப்பே)—எதுவல்ல, எது
‘உங்கள் சகோதர நேசத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.’—2 பேதுரு 1:5, 7, NW.
1. (அ) பைபிள் எந்தக் குணத்திற்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கிறது? (ஆ) எந்த நான்கு கிரேக்க வார்த்தைகள் அடிக்கடி “அன்பு” என்று மொழிபெயர்க்கப்படுகின்றன, 1 யோவான் 4:8-ல் குறிப்பிடப்படுவது எது?
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் ஏதாவதொரு குணத்திற்கு அல்லது நற்பண்பிற்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கிறதென்றால் அது அன்பாக இருக்கிறது. கிறிஸ்தவ வேதாகமத்தின் மூல மொழியாகிய கிரேக்க மொழியில், “அன்பு” என்று அடிக்கடி மொழிபெயர்க்கப்படும் நான்கு வார்த்தைகள் இருக்கின்றன. நாம் இப்போது அக்கறைசெலுத்துகிற அன்பு ஈராஸ் (eʹros) அல்ல (கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் காணப்படாத ஒரு வார்த்தை), இது பாலின கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது; அது ஸ்டார்கே-யும் (stor·geʹ) அல்ல, இது இரத்த உறவை அடிப்படையாகக் கொண்டது; அது ஃபீலியா-வும் (phi·liʹa) அல்ல, இது ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதை அடிப்படையாகக் கொண்ட, நண்பர்களுக்கிடையே உள்ள கனிவான அன்பு; இது முந்தின கட்டுரையில் கலந்தாராயப்பட்டது. ஆனால் அது அகாப்பே (a·gaʹpe)—நியமத்தை அடிப்படையாகக் கொண்ட அன்பு, தன்னலமற்ற தன்மையோடு அர்த்தத்தில் ஒன்றுபட்டிருக்கிறது என்று சொல்லலாம்; அப்போஸ்தலன் யோவான் “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” என்று சொன்னபோது குறிப்பிட்ட அன்பாக இது இருக்கிறது.—1 யோவான் 4:8.
2. அன்பு (அகாப்பே) பற்றி நன்றாகவே என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
2 இந்த (அகாப்பே) அன்பைப் பற்றி, பேராசிரியர் உவில்லியம் பார்க்ளே தன்னுடைய நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் என்ற புத்தகத்தில் இவ்வாறு சொல்கிறார்: “அகாப்பே, மனதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது: இது [ஃபீலியாவில் வருவதுபோல] நம் இருதயங்களில் திடீரென்று தன்னிச்சையாக வரும் உணர்ச்சி மட்டுமல்ல; இது நாம் தெரிந்தும் வாழ்வில் செயல்படுத்தும் ஒரு நியமமாக இருக்கிறது. அகாப்பே, மனவிருப்பத்தோடு முக்கியமாய்ச் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஒரு வெற்றி, ஜெயம், சாதனையாக இருக்கிறது. யாருமே இயல்பாகவே தன்னுடைய எதிரிகளுக்கு அன்புகாட்டுவதில்லை. ஒருவர் தன்னுடைய எதிரிகளின்மீது அன்புகாட்டுவதற்கு நம்முடைய இயல்பான மனச்சாய்வுகள் உணர்ச்சிப்போக்குகள் அனைத்தையும் வென்று வரவேண்டியிருக்கிறது. இந்த அகாப்பே . . . உண்மையில் அன்புகாட்டவே முடியாத ஒன்றிற்கு அன்புகாட்டுவதற்கும், நாம் விரும்பாத மக்களுக்கு அன்புகாட்டுவதற்கும் உள்ள திறமையாகும்.”
3. இயேசு கிறிஸ்துவும் பவுலும் அன்பைக் குறித்து என்ன வலியுறுத்திக் கூறினார்கள்?
3 ஆம், யெகோவா தேவனின் தூய்மையான வணக்கத்தை மற்ற எல்லா வகையான வணக்கமுறைகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது, இப்படிப்பட்ட அன்பில் அதன் வலியுறுத்தலாகும். மிகச் சரியாகவே, இயேசு கிறிஸ்து இரண்டு முக்கியமான கட்டளைகளை நமக்குச் சொன்னார்: “முதலாம் கட்டளை உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக’ என்பதே. இரண்டாம் கட்டளை, ‘உன்னிடத்தில் அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக,’ என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை.” (மாற்கு 12:29-31, NW) அப்போஸ்தலன் பவுல், 1 கொரிந்தியர், அதிகாரம் 13-ல் அன்பைப் பற்றி இதேவிதமாக வலியுறுத்திக் கூறுகிறார். அன்பே தவிர்க்கமுடியாத முக்கியமான பண்பு என்பதை அழுத்திக்கூறிய பின், இறுதியாக அவர் இவ்வாறு சொன்னார்: “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.” (1 கொரிந்தியர் 13:13) இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களைத் தனிப்படுத்திக் காட்டும் அடையாளமாக அன்பு இருக்கும் என்று சரியாகவே சொன்னார்.—யோவான் 13:35.
அன்பு இல்லாத காரியங்கள்
4. பவுல் 1 கொரிந்தியர் 13:4-8-ல் அன்பு எதுவல்ல என்றும், எது என்றும் சொன்ன அம்சங்கள் எத்தனை?
4 அன்பு என்பது எது என்பதைச் சொல்வதைவிட அது எதுவல்ல என்று சொல்வது எளிதானது என்று ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சிறிது உண்மை இருக்கிறது; ஏனென்றால் அப்போஸ்தலன் பவுல் அன்பைப் பற்றிய தன்னுடைய அதிகாரத்தில் 1 கொரிந்தியர் 13, வசனங்கள் 4 முதல் 8-ல், அன்பு எதுவல்ல என்பதற்கு ஒன்பது காரியங்களையும், அன்பு எது என்பதற்கு ஏழு காரியங்களையும் சொல்கிறார்.
5 அன்பு எதுவல்ல என்பதைச் சொல்லும்போது முதலாவதாகப் பவுல், அன்புக்குப் “பொறாமையில்லை” என்று சொல்கிறார். இது சிறிது விளக்கத்தைக் கேட்கிறது; ஏனென்றால் பொறாமையில் நல்ல மற்றும் கெட்ட அம்சங்கள் அடங்கியிருக்கின்றன. ஒரு சொற்களஞ்சியம் “பொறாமை” என்பதை, “போட்டியுணர்ச்சியுள்ள எரிச்சல்” என்றும், “இம்மியும் பிசகாத தனிப்பட்ட பக்தி” என்றும் கருத்துரைக்கிறது. எனவேதான் மோசே யாத்திராகமம் 34:14-ல் (NW) சொன்னார்: “நீ அந்நிய கடவுளை வணங்கக் கூடாது; ஏனென்றால் பொறாமையுள்ளவர் என்ற பெயரை உடைய யெகோவா, எரிச்சலுள்ள கடவுளாய் இருக்கிறார்.” யாத்திராகமம் 20:5-ல் (NW) யெகோவா சொல்கிறார்: “உன் கடவுளாகிய நான் யெகோவா, தனிப்பட்ட பக்தியை முற்றிலுமாக எதிர்பார்க்கிறேன்.” இதே கருத்தோடு, அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “நான் தேவ பொறாமையோடு உங்கள்மேல் பொறாமையாய் இருக்கிறேன்.”—2 கொரிந்தியர் 11:2, NW.
6. அன்பு பொறாமையற்றது என்பதை என்ன வேதாகம முன்மாதிரிகள் காட்டுகின்றன?
6 எனினும், மொத்தத்தில் பார்த்தால், “பொறாமை” ஒரு தவறான அர்த்தத்தைக் கொடுக்கும் சொல்லாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான், கலாத்தியர் 5:20-ல் இது, மாம்சத்தின் செயல்களோடு பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஆம், இப்படிப்பட்ட பொறாமை தன்னலமிக்கதாயும், வெறுப்பை உண்டாக்குவதாயும் இருக்கிறது; வெறுப்பு அன்பின் எதிர்ப்பதம் ஆகும். ஆபேலைக் கொலைசெய்யும் அளவிற்கு பொறாமை காயீனைத் தூண்டிவிட்டது. மேலும் இது யோசேப்பின் பத்து ஒன்றுவிட்ட சகோதரர்கள் யோசேப்பைக் கொலைசெய்யும் அளவிற்கு அவர்கள் அவனை வெறுக்கும்படி செய்தது. ஆகாப் ராஜா, நாபோத்தின் திராட்ச தோட்டத்தைப் பொறாமையினால் பெற முயற்சித்ததுபோல, அன்பு மற்றவர்களின் உடைமைகளை அல்லது உயர்வுகளைப் பொறாமையுடன் நோக்காது.—1 இராஜாக்கள் 21:1-19.
7. (அ) யெகோவா பெருமை பேசுவதை வெறுக்கிறார் என்று எந்தச் சம்பவம் காண்பிக்கிறது? (ஆ) அன்பு ஏன் யோசனையற்ற விதத்திலும் பெருமை பேசாது?
7 பவுல் அடுத்தபடியாக, அன்பு “பெருமை பேசாது” என்று நம்மிடம் சொல்கிறார். பொருமையாகப் பேசுவது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது. ஏனென்றால் இது ஒருவரை மற்றவர்களைவிட உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசும்படி செய்விக்கிறது. யெகோவா பெருமை பேசுபவர்களை வெறுக்கிறார். நேபுகாத்நேச்சார் ராஜா பெருமையாகப் பேசினபோது அவனை அவர் தாழ்த்திய பாங்கிலிருந்து இதைக் காணலாம். (தானியேல் 4:30-35) தற்பெருமை பேசுதல், ஒருவர் தன்னுடைய சாதனைகளிலோ உடைமைகளின்பேரிலோ அளவுக்கு மிஞ்சிய சந்தோஷத்தைப் பெற்றிருப்பதால் யோசனையற்று அடிக்கடி செய்யப்படுகிறது. கிறிஸ்தவ ஊழியத்தில் தங்களுடைய சாதனையைக் குறித்து சிலர் ஒருவேளை தற்பெருமையாகப் பேசத் தூண்டப்படலாம். மற்றவர்கள், ஒரு மூப்பரைப்போல, தான் வாங்கிய $50,000 மதிப்புள்ள ஒரு புதிய மோட்டார் வண்டியை பற்றி தன்னுடைய நண்பர்களிடம் தொலைபேசியில் பேசியவரைப் போலிருக்கலாம். இவையெல்லாம் அன்பற்றவை, ஏனென்றால் இது பெருமை பேசுபவர்களை அவர்கள் பேசுவதற்குச் செவிகொடுப்பவர்களைவிட மேலானவர்களாக ஆக்குகிறது.
8. (அ) இறுமாப்பு அடைந்திருப்பவர்களைப் பற்றி யெகோவாவின் நோக்குநிலை என்ன? (ஆ) அன்பு ஏன் அப்படி நடந்துகொள்ளாது?
8 கூடுதலாக, அன்பு “இறுமாப்பு அடையாது” என்று நாம் சொல்லப்படுகிறோம். இறுமாப்புடையவன், அல்லது கர்வமுடையவன் அன்பற்ற விதத்தில் தன்னை மற்றவர்களுக்கு மேலாக உயர்த்துகிறான். இப்படிப்பட்ட மனநிலை அதிக முட்டாள்தனமானது, ஏனென்றால் “கர்வமுள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ தகுதியற்ற தயவைக் காட்டுகிறார்.” (யாக்கோபு 4:6, NW) அன்பு இதற்கு எதிர்மாறாகச் செயல்படுகிறது; இது மற்றவர்களை உயர்ந்தவர்களாக கருதுகிறது. பிலிப்பியர் 2:2, 3-ல் (NW) பவுல் எழுதினார்: “நீங்கள் ஏக சிந்தனையும் ஏக அன்பும் உள்ளவர்களாய் இருந்து, ஒன்றுபட்ட ஆத்துமாக்களாய் மனதிலே ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். போட்டி மனப்பான்மைக்கும், தற்பெருமைக்கும் இடம் தரவேண்டாம். மனத்தாழ்மையோடே மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்.” இப்படிப்பட்ட மனநிலை மற்றவர்களை செளகரியமாக உணரச்செய்கிறது; ஆனால் கர்வமுள்ளவனோ போட்டி மனப்பான்மையின் காரணமாக மற்றவர்களை அசெளகரியமாக உணரச்செய்கிறான்.
9. அன்பு ஏன் மரியாதையற்ற விதத்தில் நடந்துகொள்ளாது?
9 அன்பு “மரியாதையற்றவிதத்தில் நடந்துகொள்ளாது” என்று பவுல் மேலும் சொல்கிறார். சொற்களஞ்சியம் “மரியாதையற்ற” என்பதை, “மடத்தனமான கீழ்த்தரமான நடத்தையையோ, நடத்தைகளை அல்லது ஒழுக்க நெறிகளை அவமதிக்கிறவிதத்தில் நடந்துகொள்வதையோ குறிக்கிறது” என்று வரையறுக்கிறது. மரியாதையற்ற விதத்தில் (அன்பற்றவிதத்தில்) நடந்துகொள்கிறவர் மற்றவர்களின் உணர்ச்சிகளை அசட்டை செய்கிறார். பல பைபிள் மொழிபெயர்ப்புகள் கிரேக்க வார்த்தையை, “முரட்டுத்தனமாக” என்று மொழிபெயர்க்கின்றன. இப்படிப்பட்டவர் நியாயமானது, நல்லது என்று கருதப்படுகிறதை அவமதிப்பார். நிச்சயமாகவே, மற்றவர்களிடமாக அன்பான கரிசனை, முரட்டுத்தனமான அல்லது மரியாதையற்ற காரியங்கள் அனைத்தையும், மற்றவர்களைப் புண்படுத்தும், திடுக்கிடச்செய்யும் காரியங்களையும் செய்யாதபடி தவிர்ப்பதை அர்த்தப்படுத்தும்.
அன்பு எதுவல்ல என்பதைக்குறிக்கும் மற்ற அம்சங்கள்
10. எந்த வழியில் அன்பு தன்னலத்தைத் தேடாது?
10 அடுத்து நாம், அன்பு “தன்னலத்தைத் தேடாது,” அதாவது நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களையும் மற்றவர்களுடையதையும் பற்றி கேள்வி எழும்புகையில் அவ்வாறு செய்யாது என்று சொல்லப்படுகிறோம். அப்போஸ்தலன் மற்றொரு இடத்தில் இவ்வாறு சொல்கிறார்: ‘தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.’ (எபேசியர் 5:29) நம் விருப்பம் மற்றவருடைய விருப்பத்தோடு போட்டியிடும்போது, அதில் வேறு ஏதும் பைபிள் நியமங்கள் உட்படவில்லையென்றால், ஆபிரகாம் லோத்திடம் நடந்துகொண்டதுபோல நாம் நடந்துகொள்ளவேண்டும். மற்றவரின் விருப்பம் நிறைவேற அன்புடன் விட்டுக்கொடுக்கவேண்டும்.—ஆதியாகமம் 13:8-11.
11. அன்பு சினமடையாது என்றால் அதன் அர்த்தம் என்ன?
11 அன்பு சீக்கிரத்தில் நிலைகுலைந்துப் போவதில்லை. எனவேதான் பவுல், அன்பு “சினமடையாது” என்று சொல்கிறார். அது எளிதில் புண்பட்டுவிடாது. அது தன்னடக்கத்தை அப்பியாசிக்கிறது. விசேஷமாகத் திருமணமான தம்பதிகள், தாங்கள் ஒருவருக்கொருவர் பொறுமையிழந்து கோபங்கொண்ட குரலில் சப்தமாக கூச்சலிடுவதையோ கத்துவதையோ செய்யாதிருக்க கவனமாய் இருப்பதன்மூலம் இந்தப் புத்திமதியைப் பின்பற்ற கடுமையாக முயற்சிக்கவேண்டும். சில சூழ்நிலைகளில் நாம் எளிதில் கோபமடைந்துவிடுகிறோம். இதற்காகவே தீமோத்தேயுவுக்கு இந்தப் புத்திமதியைக் கொடுக்கவேண்டிய தேவையை பவுல் உணர்ந்தார்: ‘கர்த்தருடைய ஊழியன் சண்டைபோடுகிறவனாய் இராமல், எல்லாருக்கும் இனியவனாகவும், போதக சமர்த்தனாயும், துன்பத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பவனாகவும் இருக்கவேண்டும்’—ஆமாம், சினமடையாது—‘தன்னை எதிர்ப்பவர்களுக்குச் சாந்தத்தோடு உபதேசிக்கவேண்டும்.’—2 தீமோத்தேயு 2:24, 25, NW.
12. (அ) எந்த வழியில் அன்பு வன்மம் வைக்காது? (ஆ) நாம் தொடர்ந்து வன்மம் வைத்திருப்பது ஏன் ஞானமற்றது?
12 அன்பு எதுவல்ல என்பதைத் தொடர்ந்து சொல்கிறவராகப் பவுல் ஆலோசனை சொல்கிறார்: “அன்பு . . . வன்மம் வைக்காது.” செய்யப்பட்ட தீங்கை அன்பு அலட்சியப்படுத்தும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. நாம் வினைமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும்போது காரியங்களை எப்படிக் கையாளுவது என்பதை இயேசு காண்பித்தார். (மத்தேயு 18:15-17) ஆனால் நாம் தொடர்ந்து மனக்கசப்பை வளர்த்து, வெறுப்புணர்ச்சிகளை விடாது வைத்திருப்பதை அன்பு அனுமதிப்பதில்லை. வன்மம் வைக்காது என்றால், ஒரு தடவை காரியம் வேதப்பூர்வமாகக் கையாளப்பட்ட பிறகு அதை மன்னித்து மறந்துவிடுவதைக் குறிக்கிறது. ஆம், தவறைத் தொடர்ந்து சிந்தித்து வன்மம் வைப்பதன்மூலம், உங்களையே புண்படுத்திக்கொள்ளவோ, உங்களை நீங்களே துயர்மிகுந்தவராக ஆக்கவோ செய்யாதீர்கள்!
13. அநீதியில் சந்தோஷப்படக்கூடாது என்றால் என்ன, ஏன் அன்பு அதைச் செய்யாது?
13 மேலுமாக, அன்பு ‘அநீதியில் சந்தோஷப்படாது’ என்று நாம் சொல்லப்படுகிறோம். உலகமானது அநீதியிலே சந்தோஷப்படுகிறது; வன்முறைமிக்க மற்றும் ஆபாசமான புத்தகங்கள், திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவை பிரபலமாவதிலிருந்து இது தெளிவாய் காணப்படலாம். இப்படிப்பட்ட சந்தோஷமெல்லாம் தன்னலமானவை; கடவுளுடைய நீதியான நியமங்களுக்கு அல்லது மற்றவர்களின் நலனிற்கு மதிப்புத் தராதவை. இப்படிப்பட்ட எல்லா தன்னலமான சந்தோஷமும், மாம்சத்திற்கென்று விதைப்பதைக் குறிக்கிறது, குறித்த காலத்தில் மாம்சத்தினால் அழிவை அறுக்கவேண்டிய நிலை வரும்.—கலாத்தியர் 6:8.
14. அன்பு என்றும் தோல்வியடையாது என்று நிச்சயமாக ஏன் சொல்லப்படமுடியும்?
14 இப்போது இறுதியாக, அன்பு செய்யாத மற்றொன்று “அன்பு என்றும் தோல்வியடையாது,” என்பதாகும். ஒரு பொருளில், அன்புக்கு என்றும் தோல்வி கிடையாது அல்லது முடிவு இராது; ஏனென்றால் கடவுள் அன்புள்ளவராயிருக்கிறார், அவர் ‘நித்திய ராஜாவாகவும்’ இருக்கிறார். (1 தீமோத்தேயு 1:17, NW) ரோமர் 8:38, 39-ல் நம்மீதுள்ள யெகோவாவின் அன்பு என்றும் தோல்வியடையாது என்று நாம் உறுதியளிக்கப்படுகிறோம்: “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” மேலுமாக, அன்பு என்றும் குறைவுடையதாய் இருப்பதில்லை என்பதிலும் அன்பு என்றும் தோல்வியடையாது. அன்பு எந்தச் சமயத்தின், எந்தச் சவாலின் தேவைகளையும் பூர்த்திசெய்ய திறமையுள்ளதாக இருக்கிறது.
அன்பு எதுவாக இருக்கும் காரியங்கள்
15. அன்பு எதுவாக இருக்கிறது என்ற அம்சத்தில் நீடிய பொறுமையை ஏன் பவுல் முதலாவதாகப் பட்டியலிட்டார்?
15 நல்ல பக்கமாகிய, அன்பு எதுவாக இருக்கிறது என்ற காரியங்களுக்கு இப்போது வரும்போது, பவுல் ஆரம்பிக்கிறார்: “அன்பு நீடிய பொறுமை உடையது.” (NW) நீடிய பொறுமை இல்லாமல், அதாவது ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லாமல், கிறிஸ்தவக் கூட்டுறவு என்ற ஒன்று இருக்கமுடியாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது ஏனென்றால் நாம் அனைவருமே அபூரணராக இருக்கிறோம். நம் அபூரணமும் குறைபாடுகளும் மற்றவர்களுக்குச் சோதனையாக இருக்கின்றன. அன்பு எது என்பதை விளக்க அப்போஸ்தலன் பவுல் இந்த அம்சத்தை முதலாவதாகப் பட்டியலிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!
16. குடும்ப அங்கத்தினர்கள் எந்த வழிகளில் ஒருவருக்கொருவர் தயவைக் காட்டலாம்?
16 அன்பு ‘தயவானதாயும்’ இருக்கிறது என்று பவுல் சொல்கிறார். அதாவது அன்பு, உதவிசெய்வதாயும், கரிசனையுள்ளதாயும், மற்றவர்களைப் புரிந்துகொள்வதாயும் இருக்கிறது. தயவு சிறிய மற்றும் பெரிய விஷயங்களில் வெளிக்காட்டப்படுகிறது. கள்ளர்கள் மறைந்திருந்து தாக்கிய மனிதனுக்கு, அயலானாக இருந்த சமாரியன் நிஜமாகவே தயவு காட்டினான். (லூக்கா 10:30-37) “தயவுசெய்து” என்று சொல்வதில் அன்பு பூரிப்படைகிறது. “ரொட்டியை எடுத்துத்தா” என்று சொல்வது கட்டளை. “தயவுசெய்து” என்ற வார்த்தையை முன்போட்டு சொல்வது, ஒரு வேண்டுகோள். 1 பேதுரு 3:7-ல் (NW) உள்ள ஆலோசனையைப் பின்பற்றினால் கணவர்கள் தங்கள் மனைவிகளோடு தயவோடு நடந்துகொள்வார்கள்: “அவ்வாறே கணவர்களே, நீங்கள் நல்லறிவுடன் அவர்களோடு வாழ்க்கை நடத்துங்கள்; பெண்ணினம் பெலவீன பாண்டமாய் இருக்கிறபடியினாலும், உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைப் பெறுவதில் உடன் உரிமையாளர்கள் என்பதினாலும் அவர்களுக்குக் கனத்தைச் செய்யுங்கள், அப்போதுதான், உங்கள் ஜெபங்களுக்குத் தடை ஏற்படாது.” மனைவிகள் தங்களுடைய கணவர்களுக்கு “ஆழ்ந்த மரியாதையை” காட்டும்போது அவர்களோடு தயவாய் நடந்துகொள்கிறார்கள். (எபேசியர் 5:33, NW) எபேசியர் 6:4-ல் (NW) உள்ள ஆலோசனையை தந்தைமார் பின்பற்றினால், அவர்களுடைய பிள்ளைகளோடு தயவாய் நடந்துகொள்கிறார்கள்: “தந்தைகளே, உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், யெகோவாவுக்கு ஏற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் வளர்த்தல் வேண்டும்.”
17. அன்பு சத்தியத்தில் சந்தோஷப்படும் இரண்டு வழிகள் யாவை?
17 அன்பு அநீதியில் சந்தோஷப்படாது, ஆனால் “சத்தியத்தில் சந்தோஷப்படும்.” அன்பும் சத்தியமும் ஒன்றோடொன்று ஒன்றி செயல்படுகின்றன—கடவுள் அன்புள்ளவர்தான், அதே சமயத்தில் அவர் ‘சத்தியக் கடவுள்’ ஆகவும் இருக்கிறார். (சங்கீதம் 31:5, NW) பொய்யை அப்பட்டமாக்கி, சத்தியம் வெற்றி சிறப்பதைக் காண்பதில் அன்பு சந்தோஷப்படும்; இன்று யெகோவாவை வணங்குபவர்களின் எண்ணிக்கையில் இருக்கும் அதிகரிப்பிற்கு இது பகுதி காரணமாக இருக்கிறது. எனினும், சத்தியம் அநீதிக்கு எதிர்ப்பதமாக இருப்பதால், அன்பு நீதியில் சந்தோஷப்படும் என்ற கருத்தும் இருக்கலாம். மகா பாபிலோனின் வீழ்ச்சியைக் குறித்து யெகோவாவின் வணக்கத்தார் செய்யும்படி கட்டளையிடப்பட்டதுபோல, அன்பு நீதியின் வெற்றியில் சந்தோஷப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 18:20.
18. எந்த அர்த்தத்தில் அன்பு சகலத்தையும் தாங்கும்?
18 அன்பு “சகலத்தையும் தாங்கும்” என்றுங்கூட பவுல் நமக்குச் சொல்கிறார். கிங்டம் இன்டர்லீனியர், அன்பு அனைத்தையும் மூடிவிடும் என்ற குறிப்பைக் கொடுக்கிறது. பொல்லாதவர்கள் செய்ய துடிப்பதுபோல, இது ஒரு சகோதரரின் “குற்றத்தைப் பறைசாற்றாது.” (சங்கீதம் 50:20, NW; நீதிமொழிகள் 10:12; 17:9) ஆம், 1 பேதுரு 4:8-ல் உள்ள அதே கருத்துத்தான் இங்கு இருக்கிறது: “அன்பு திரளான பாவங்களை மூடும்.” நிச்சயமாகவே, யெகோவாவுக்கு விரோதமாகவும் கிறிஸ்தவச் சபைக்கு விரோதமாகவும் செய்யப்படும் பொல்லாத குற்றங்களை மூடி மறைக்கும்படி உண்மைமாறாத்தன்மை ஒருவரை அனுமதிக்காது.
19. என்ன விதத்தில், அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும்?
19 அன்பு “சகலத்தையும் விசுவாசிக்கும்.” அன்பு நல்லெண்ணமுடையது, நல்லெண்ணம் இழப்பதில்லை. இது, அன்பு ஏமாளித்தனமானது என்று அர்த்தப்படுத்துவதில்லை. உணர்ச்சிவசமான வார்த்தைகளை உடனே நம்பிவிடுவதில்லை. ஆனால் ஒருவர் கடவுள்மீது விசுவாசம் வைக்கவேண்டுமென்றால், நம்புவதற்கு விருப்பம் உடையவராக இருக்கவேண்டும். எனவே, அன்பு சந்தேகப்படாது, அநாவசியமாக குற்றஞ்சொல்லாது. கடவுள் இல்லை என்று பிடிவாதமாகச் சொல்லும் நாத்திகர்களைப் போலவோ, நாம் எங்கிருந்து வந்தோம், நாம் ஏன் இங்கே இருக்கிறோம், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறியமுடியாது என்று சொல்கின்ற அறியொணாமைக் கொள்கையினரைப்போலவோ, அன்பு விசுவாசிப்பதை எதிர்ப்பதில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் கடவுளுடைய வார்த்தை உறுதியான நம்பிக்கையை நமக்குத் தருகிறது. அன்பு விசுவாசிக்கத் தயாராகவும் இருக்கிறது, ஏனென்றால் அது நம்பத்தக்கதாகவும், அநாவசியமாக சந்தேகப்படாததாயும் இருக்கிறது.
20. நம்பிக்கையோடு அன்பு எப்படித் தொடர்புடையதாக இருக்கிறது?
20 அன்பு “சகலத்தையும் நம்பும்,” என்று இன்னும் அதிகமாக அப்போஸ்தலன் பவுல் நமக்கு உறுதிப்படுத்துகிறார். அன்பு எதிர்மறையாக இருப்பதற்குப்பதில் உடன்பாடானதாக இருப்பதால், கடவுளுடைய வார்த்தையில் வாக்குக்கொடுக்கப்பட்ட எல்லா காரியங்களின்மீது பலமான நம்பிக்கை உடையதாக இருக்கிறது. “உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே,” என்று நாம் சொல்லப்படுகிறோம். (1 கொரிந்தியர் 9:10) அன்பு நம்பத்தக்கதாக இருப்பதைப் போலவே, நம்பிக்கையோடுகூடிய எதிர்பார்ப்பையும் உடையதாக இருக்கிறது; எப்போதும் சிறந்ததை எதிர்நோக்கி இருக்கிறது.
21. அன்பு சகித்துப்போகிறது என்பதற்கு வேதாகமப்பூர்வ சான்று என்ன?
21 இறுதியில், அன்பு “சகலத்தையும் சகிக்கும்,” என்று நாம் உறுதிப்படுத்தப்படுகிறோம். இவ்வாறு செய்ய அதால் முடிகிறது; ஏனென்றால் 1 கொரிந்தியர் 10:13-ல் (NW) அப்போஸ்தலன் பவுல் நம்மிடம் சொல்கிறார்: “மனிதருக்குப் பொதுவாய் வருகிற, மனிதனால் தாங்கக்கூடிய சோதனை தவிர வேறு எதுவும் உங்களுக்கு வந்ததில்லை. கடவுளோ, நம்பத்தக்கவர்; வெல்ல முடியாத சோதனைக்குள்ளாகும்படி உங்களை விடமாட்டார். சோதனை வரும்பொழுது அதைச் சகித்துக்கொள்ளும் திறனளித்து அதனின்று தப்பவும் வழிசெய்வார்.” நாம் எபிரெயர் 12:2, 3-ல் ஞாபகப்படுத்தப்படுவதுபோல, வேதாகமத்திலுள்ள கடவுளுடைய ஊழியர்களின் பல எடுத்துக்காட்டுகளைக் கவனிக்கும்படி அன்பு நம்மைத் தூண்டும்; அவர்களில் மிக முக்கியமானவர் இயேசு கிறிஸ்து.
22. கடவுளின் பிள்ளைகளாக நாம் எப்போதும் நடத்தையில் வெளிப்படுத்த அக்கறையுள்ளவர்களாய் இருக்கவேண்டிய அதிமுக்கியமான குணம் எது?
22 நிச்சயமாகவே, அன்பு (அகாப்பே) அதிமுக்கியமான குணம். இது எதுவல்ல, எது என்ற இரண்டு கோணங்களிலும் அதை கிறிஸ்தவர்களாகிய நாம், யெகோவாவின் சாட்சிகள், வளர்க்கவேண்டிய தேவையிருக்கிறது. கடவுளின் பிள்ளைகளாக நாம் ஆவிக்குரிய இந்தக் கனியை நடத்தையில் வெளிப்படுத்த எப்போதும் அக்கறையுள்ளவர்களாய் இருப்போமாக. இவ்வாறு செய்வது கடவுளின் சாயலில் இருப்பதைக் குறிக்கிறது; ஏனென்றால், நினைவில் வையுங்கள், “தேவன் அன்பாகவே இருக்கிறார்.”
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
◻ இயேசு கிறிஸ்துவும் பவுலும் அன்பிற்கு எவ்வாறு முதன்மையான முக்கியத்துவம் கொடுத்தனர்?
◻ எந்த அர்த்தத்தில் அன்பு பொறாமைகொள்ளாது?
◻ அன்பு எப்படி ‘சகலத்தையும் தாங்குகிறது’?
◻ அன்பு என்றும் தோல்வியடையாது என்று ஏன் சொல்லப்படலாம்?
◻ என்ன இரண்டு வழிகளில் சத்தியத்தோடு அன்பு சந்தோஷப்படுகிறது?
5. “பொறாமை” எவ்வாறு விளக்கப்படுகிறது, வேதாகமத்தில் நல்ல அர்த்தத்தில் இது எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?
[பக்கம் 21-ன் பெட்டி]
அன்பு (அகாப்பே)
எதுவல்ல எது
1. பொறாமையில்லை 1. நீடிய பொறுமை உடையது
2. பெருமை பேசாது 2. தயவானது
3. இறுமாப்பு அடையாது 3. சத்தியத்தில் சந்தோஷப்படும்
4. மரியாதையற்றவிதத்தில் நடந்துகொள்ளாது 4. சகலத்தையும் தாங்கும்
5. தன்னலத்தைத் தேடாது 5. சகலத்தையும் விசுவாசிக்கும்
6. சினமடையாது 6. சகலத்தையும் நம்பும்
7. வன்மம் வைக்காது 7. சகலத்தையும் சகிக்கும்
8. அநீதியில் சந்தோஷப்படாது
9. என்றும் தோல்வியடையாது
[பக்கம் 18-ன் படம்]
பெருமையோடு பேசியதற்காக நேபுகாத்நேச்சாரை யெகோவா தாழ்த்தினார்