மனத்தாழ்மையுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்
“பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”—1 பேதுரு 5:5.
1, 2. மலைப் பிரசங்கத்தில், சந்தோஷமாயிருப்பதை மனத்தாழ்மையாயிருப்பதோடு, இயேசு எப்படி சம்பந்தப்படுத்திப் பேசினார்?
சந்தோஷமாயிருப்பதற்கும் மனத்தாழ்மையாயிருப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறதா? பெரும்பான்மையர் அறிந்த தம்முடைய பிரசங்கத்தில், இயேசு கிறிஸ்து, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், ஒன்பது சந்தோஷங்களை அல்லது மகிழ்ச்சி மிகுந்த நிலைகளை விவரிக்கிறார். (மத்தேயு 5:1-12) சந்தோஷமாயிருப்பதை மனத்தாழ்மையாயிருப்பதோடு இயேசு சம்பந்தப்படுத்திக் காட்டினாரா? ஆம், அவர் சம்பந்தப்படுத்திக் காட்டினார், அவர் குறிப்பிட்ட அநேக சந்தோஷங்களில் மனத்தாழ்மையாயிருப்பது உட்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு நபர் ஆவிக்குரிய தேவையின் மேல் உணர்வுள்ளவராக இருக்கவேண்டுமெனில், மனத்தாழ்மையாயிருப்பது அவசியம். மனத்தாழ்மையாக உள்ளவர்களே நீதியின்மேல் பசிதாகமுள்ளவராயிருப்பர். மேலும் பெருமையுள்ளோர் சாந்தமுள்ளவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் இருப்பது கிடையாது, அவர்கள் சமாதானத்தை உண்டுபண்ணுபவர்களுமல்ல.
2 மனத்தாழ்மையுள்ளவர்கள் சந்தோஷமாயிருப்பதற்குக் காரணம் மனத்தாழ்மையாயிருப்பது சரியானதாகவும் நேர்மையாகவும் இருக்கிறது. மேலும், மனத்தாழ்மையுள்ளவர்கள் சந்தோஷமாயிருப்பதற்குக் காரணம் மனத்தாழ்மையாயிருப்பது ஞானமானது; யெகோவா தேவனோடும் சக கிறிஸ்தவர்களோடும் நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்ள அது உதவுகிறது. கூடுதலாக, மனத்தாழ்மையுள்ள ஆட்கள் சந்தோஷமாயிருப்பதற்குக் காரணம் மனத்தாழ்மையாயிருப்பது அவர்களுடைய பங்கில் அன்பின் வெளிக்காட்டாக உள்ளது.
3. நேர்மை நம்மை ஏன் மனத்தாழ்மையாகவே இருக்க வைக்கிறது?
3 நேர்மையாயிருப்பது ஏன் நம்மை மனத்தாழ்மையாயிருக்க வைக்கிறது? ஒரு காரணம் என்னவெனில், நாம் அனைவரும் அபூரணத்தைச் சுதந்தரித்து, தொடர்ந்து தப்பிதங்களை இழைக்கிறோம். பவுல் அப்போஸ்தலன் தன்னைக் குறித்து இவ்வாறு கூறினார்: “என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.” (ரோமர் 7:18) ஆம், நாம் அனைவருமே பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாக ஆகியிருக்கிறோம். (ரோமர் 3:23) நேர்மை நம்மை பெருமையாயிராதபடிச் செய்யும். செய்த தவறை ஒப்புக்கொள்வதற்கு மனத்தாழ்மை தேவைப்படுகிறது. மேலும் தவறிழைக்கையில், குற்றத்தை ஒப்புக்கொள்ள நேர்மை நமக்கு உதவும். நாம் எதைச் செய்வதற்குப் பிரயாசப்படுகிறோமோ, அதைச் செய்வதிலிருந்து தொடர்ந்து தவறுகிறோம். அதனால் மனத்தாழ்மையாயிருக்க நமக்கு நல்ல காரணமுண்டு.
4. நாம் மனத்தாழ்மையாக இருப்பதற்கு 1 கொரிந்தியர் 4:7-ல் என்ன நிர்ப்பந்தமான காரணம் கொடுக்கப்பட்டுள்ளது?
4 நேர்மை ஏன் நம்மை மனத்தாழ்மையாயிருக்கச் செய்யும் என்பதற்குப் பவுல் அப்போஸ்தலன் இன்னொரு காரணத்தைக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: “உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” (1 கொரிந்தியர் 4:7) சந்தேகமில்லாமல் நமக்குத்தானே புகழைச்சேர்த்துக்கொண்டு நம் உடைமைகள், திறமைகள், சாதனைகள் ஆகியவற்றைக் குறித்து நாம் பெருமைப்பட்டுக்கொண்டோமேயானால், அது நேர்மையான காரியமாக இருக்காது. கடவுளுக்கு முன்பாக நல்மனச்சாட்சி உடையவர்களாக இருப்பதற்கு நேர்மை உதவுகிறது, அப்போது நாம் “எல்லாவற்றிலும் நேர்மையோடு நடக்க”லாம்.—எபிரேயர் 13:18, கத்தோலிக்க பைபிள்.
5. தவறு இழைத்திருக்கையிலும், நேர்மை எப்படி நமக்கு உதவும்?
5 தவறிழைக்கையில், மனத்தாழ்மையாயிருக்க நேர்மை நமக்கு உதவுகிறது. நாம் செய்த காரியம் நியாயம் என்றோ இன்னொருவர்மீது பழியைச் சுமத்தவோ முயலுவதற்கு மாறாக, அது குற்றத்தை நாம் உடனடியாக ஒப்புக்கொள்ள வைக்கிறது. இதற்கிசைவாக, ஆதாம், ஏவாள்மீது பழியைச் சுமத்தியபோதிலும், தாவீது, ‘எல்லாரும் பார்க்கும்படி பத்சேபாள் குளித்திருக்கக்கூடாது. என்னால் சோதிக்கப்படாமல் இருக்கமுடியவில்லை’ எனச் சொல்லி அவள்மீது பழியைச் சுமத்தவில்லை. (ஆதியாகமம் 3:12; 2 சாமுவேல் 11:2-4) உண்மையில், ஒருபட்சத்தில், நேர்மையாயிருப்பது மனத்தாழ்மையாயிருக்க நமக்கு உதவுகிறது; மறுபட்சத்தில், மனத்தாழ்மையாயிருப்பது நேர்மையாயிருக்க நமக்கு உதவுகிறது எனச் சொல்லலாம்.
யெகோவாவின்மீது விசுவாசம் வைப்பது மனத்தாழ்மையாயிருக்க நமக்கு உதவும்
6, 7. கடவுளின்மீது விசுவாசம் வைப்பது, எப்படி மனத்தாழ்மையாயிருக்க நமக்கு உதவுகிறது?
6 யெகோவாவின்மீது விசுவாசம் வைப்பதுங்கூட மனத்தாழ்மையாயிருக்க நமக்கு உதவும். படைப்பாளரும், சர்வலோக பேரரசருமாயிருப்பவர் உண்மையில் எவ்வளவு மகத்தானவர் என்பதை மதித்துணருவது, நாம் நம்மையே அதிக முக்கியமானவர்களாக எண்ணாமல் இருக்கும்படி செய்யும். இதை எவ்வளவு அழகாக ஏசாயா தீர்க்கதரிசி நமக்கு நினைப்பூட்டுகிறார்! ஏசாயா 40:15, 22-ல், “இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும் எண்ணப்படுகிறார்கள்; . . . அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்,” என நாம் வாசிக்கிறோம்.
7 நாம் அநியாயமாக நடத்தப்பட்டிருக்கிறோம் என உணரும்போதும் யெகோவாவின்மீது விசுவாசம் வைப்பது நமக்கு உதவும். அதை நினைத்து எரிச்சலடைவதற்கு மாறாக, மனத்தாழ்மையோடு நாம் யெகோவாவில் காத்திருப்போம். இதையே சங்கீதம் 37:1-3, 8, 9-ல், சங்கீதக்காரன் நமக்கு நினைப்பூட்டுகிறார். பவுல் அப்போஸ்தலன் இதே குறிப்பைத்தான் கூறுகிறார்: “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”—ரோமர் 12:19.
மனத்தாழ்மை—ஞானமார்க்கம்
8. மனத்தாழ்மை ஏன் யெகோவாவோடு ஒரு நல்ல தொடர்பை வைத்திருக்கச் செய்கிறது?
8 மனத்தாழ்மையாயிருப்பது ஏன் ஞானமார்க்கமாக இருக்கிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முன் குறிப்பிட்டபடி, ஒரு காரணம் என்னவெனில், நம்மை உண்டாக்கியவரோடு நல்ல தொடர்பை வைத்துக்கொள்ள அது நமக்கு உதவுகிறது. கடவுளின் வார்த்தை, நீதிமொழிகள் 16:5-ல், “மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்” எனத் தெளிவாகக் கூறுகிறது. நீதிமொழிகள் 16:18-லும், “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை,” என நாம் வாசிக்கிறோம். பெருமையுள்ள ஆட்கள் பிற்காலத்தில் எப்போதாவது துயரத்தை அனுபவிப்பர். நாம் 1 பேதுரு 5:5-ல் வாசிக்கிற பிரகாரம், அது உண்மையில் அவ்வாறே நடக்கவேண்டும்: “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” ஜெபித்துக்கொண்டிருந்த பரிசேயனையும் ஆயக்காரனையும் பற்றி இயேசு கூறின உவமையில் இந்தக் குறிப்பைத்தான் நீங்கள் கவனிப்பீர்கள். மனத்தாழ்மையாயிருந்த அந்த ஆயக்காரனே அதிநீதிமானாகக் கருதப்பட்டான்.—லூக்கா 18:9-14.
9. இன்னற்காலங்களில் மனத்தாழ்மை எப்படி உதவியாயிருக்கிறது?
9 மனத்தாழ்மை ஞானமார்க்கமாக இருக்கிறது, ஏனெனில் மனத்தாழ்மை யாக்கோபு 4:7-ல் காணப்படும் புத்திமதிக்கு நம்மைச் சுலபமாகச் செவிசாய்க்க வைக்கிறது: “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.” மனத்தாழ்மையாயிருந்தால், யெகோவா இன்னலை அனுமதிக்கும்போது, நாம் கலகஞ்செய்யமாட்டோம். நம்முடைய சூழ்நிலைமைகளைக் கண்டு மனநிறைவடைந்து, சகித்திருக்க மனத்தாழ்மை நமக்கு உதவும். பெருமையுள்ள ஒரு நபர், மனநிறைவற்றவனாக, எப்போதும் அதிகத்தை விரும்புபவனாக, துன்பமான சூழ்நிலைமைகளில் கலகஞ்செய்பவனாகவுமிருப்பான். மறுபட்சத்தில், மனத்தாழ்மையுள்ள நபர் கஷ்டங்களையும் சோதனைகளையும் தாங்கிக்கொள்வான். யோபுவுங்கூட அதைத்தான் செய்தார். யோபு தன்னுடைய எல்லா உடைமைகளையும் இழந்து, வேதனைதரும் நோயினால் பீடிக்கப்பட்டுப் பாடுபட்டார். பின்னர் “தேவனை தூஷித்து ஜீவனை விடும்” எனச் சொல்லி அவருடைய மனைவியுங்கூட பெருமையான போக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கொடுத்தாள். அதற்கு அவர் எப்படிப் பதிலளித்தார்? பைபிள் பதிவு நமக்குச் சொல்கிறது: “அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான். இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.” (யோபு 2:9, 10) யோபு மனத்தாழ்மையாயிருந்ததினால், அவர் கலகஞ்செய்யவில்லை. ஆனால் யெகோவா எவற்றையெல்லாம் அனுமதித்தாரோ அவற்றிற்கு ஞானமாகக் கீழ்ப்பட்டிருந்தார். மேலும் முடிவில் அவர் நிறைவான வெகுமதியைப் பெற்றார்.—யோபு 42:10-16; யாக்கோபு 5:11.
மனத்தாழ்மை மற்றவர்களோடு நல்ல தொடர்பைக் கொண்டிருக்க உதவுகிறது
10. மனத்தாழ்மை எப்படி சக கிறிஸ்தவர்களோடு நம்முடைய தொடர்பை முன்னேற்றுவிக்கிறது?
10 மனத்தாழ்மை ஞானமார்க்கமாக இருக்கிறது, ஏனெனில் நம் சக கிறிஸ்தவர்களிடம் நல்ல தொடர்பைக் கொண்டிருக்கச் செய்கிறது. பவுல் அப்போஸ்தலன் நமக்கு ஒரு நல்ல ஆலோசனையைக் கொடுக்கிறார்: “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.” (பிலிப்பியர் 2:3, 4) மற்றவர்களோடு போட்டிப் போடுவதிலிருந்தும் அல்லது மற்றவர்களைவிட மேம்பட்டு விளங்க முயற்சிப்பதிலிருந்தும் மனத்தாழ்மை நம்மை ஞானமாகக் காக்கும். இத்தகைய மனநிலைகள் நமக்கும் நம் சக கிறிஸ்தவர்களுக்கும் பிரச்னைகளைக் கிளப்பிவிடும்.
11. தவறுகள் இழைப்பதைத் தவிர்க்க, மனத்தாழ்மை ஏன் நமக்கு உதவுகிறதாயிருக்கும்?
11 அநேக முறைகள் மனத்தாழ்மை தவறுகள் இழைப்பதைத் தவிர்க்க நமக்கு உதவும். எப்படி? எப்படியெனில், மனத்தாழ்மை மட்டுமீறிய தன்னம்பிக்கை கொள்ளாதபடி நம்மைக் காக்கும். மாறாக, 1 கொரிந்தியர் 10:12-ல் உள்ள பவுலின் ஆலோசனையை நாம் மதித்துணருவோம்: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” பெருமையுடையவன் அதிக தன்னம்பிக்கை வாய்ந்தவனாக இருக்கிறான். ஆகையால் புறச்செல்வாக்குகளாலும் அல்லது தன்னுடைய சொந்த பலவீனங்களாலும் தவறுகள் இழைக்கும் மனச்சாய்வு அவனுக்கு இருக்கிறது.
12. மனத்தாழ்மை எந்த வேதப்பூர்வ கடமையைப் பூர்த்திசெய்ய நம்மை உந்துவிக்கும்?
12 மனத்தாழ்மை கீழ்ப்பட்டிருப்பதன் தேவையைப் பூர்த்திசெய்ய நமக்கு உதவும். எபேசியர் 5:21-ல் நமக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கிறது: “கிறிஸ்துவுக்கிருக்கும் பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.” உண்மையில், நாம் அனைவருமே கீழ்ப்பட்டிருக்கவேண்டும் அல்லவா? பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கும், மனைவிகள் தங்கள் கணவர்களுக்கும், மேலும் கணவர்கள் கிறிஸ்துவுக்கும் கீழ்ப்பட்டிருப்பது அவசியம். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:22; 6:1) அடுத்து, எந்தவொரு கிறிஸ்தவ சபையிலும் உதவி ஊழியர்கள் உட்பட அனைவரும் மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதலைக் காட்டவேண்டும். மூப்பர்களுங்கூட, பிரத்தியேகமாக வட்டாரக் கண்காணியால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிற உண்மையுள்ள ஊழியக்கார வகுப்புக்குக் கீழ்ப்பட்டிருப்பது உண்மையல்லவா? மேலும், வட்டாரக் கண்காணி மாவட்ட கண்காணிக்குக் கீழ்ப்பட்டிருப்பது அவசியம், மற்றும் மாவட்ட கண்காணி அவர் சேவைசெய்யும் நாட்டிலுள்ள கிளை அலுவலக ஆலோசனை குழுவுக்குக் கீழ்ப்பட்டிருப்பது அவசியம். கிளை அலுவலக ஆலோசனை குழுவிலுள்ள உறுப்பினர்களைப் பற்றியென்ன? அவர்கள் “ஒருவருக்கொருவ”ரும் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார”ரைப் பிரதிநிதித்துவம் செய்யும் நிர்வாகக் குழுவுக்கும் “கீழ்ப்படிருந்திருக்”கவேண்டும். முறையாக இது, சிங்காசனத்திலேற்றப்பட்ட அரசர், இயேசுவுக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். (மத்தேயு 24:45-47) எந்தவொரு மூப்பர் ஆலோசனை குழுவிலும் இருக்கிறபடி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றவர்களுடைய கருத்துக் கோணங்களை மதிக்கவேண்டும். உதாரணமாக, தன்னிடம் ஒரு மிகச் சிறந்த ஆலோசனை இருக்கிறதென ஒருவர் நினைக்கலாம். ஆனால் இருக்கிற மற்ற உறுப்பினர்களில் போதிய எண்ணிக்கையானோர் அவருடைய ஆலோசனைக்குச் சம்மதம் தெரிவித்தால் தவிர, அவர் அதைக் குறித்துத் தொடர்ந்து கவலைப்படக்கூடாது. உண்மையில், நம்மெல்லாருக்கும் மனத்தாழ்மை தேவைதான், ஏனெனில் நாம் அனைவருமே கீழ்ப்பட்டிருக்கிறோம்.
13, 14. (அ) எந்தப் பிரத்தியேக சூழ்நிலைமையில் மனத்தாழ்மை நமக்கு உதவும்? (ஆ) ஆலோசனையை ஏற்றுக்கொள்வதன் சம்பந்தமாக பேதுரு என்ன முன்மாதிரியை வைத்தார்?
13 பிரத்தியேகமாக, நாம் ஆலோசனையையும் சிட்சையையும் சுலபமாக ஏற்றுக்கொள்வதற்கு மனத்தாழ்மை நமக்கு உதவுவதால், மனத்தாழ்மை ஞானமார்க்கமாக இருக்கிறது. சில சமயங்களில் நம் எல்லாருக்கும் சிட்சை தேவைப்படுகிறது, அப்போது நீதிமொழிகள் 19:20-ல் (NW) உள்ள ஆலோசனைக்கு நாம் நன்கு செவிசாய்க்கவேண்டும்: “நீ உன் எதிர்காலத்தில் ஞானமுள்ளவனாகும்படி, ஆலோசனைக்குச் செவிசாய்த்து சிட்சையை ஏற்றுக்கொள்.” நன்றாகக் கூறப்பட்டிருக்கிறபடி, மனத்தாழ்மையுள்ளவர்கள் சிட்சிக்கப்படுகையில், புண்பட்டவர்களாகவோ சந்தோஷமற்றவர்களாகவோ உணரமாட்டார்கள். மேலும், எபிரெயர் 12:4-11-ல் பவுல் அப்போஸ்தலன் மனத்தாழ்மையோடு சிட்சைக்குக் கீழ்ப்பட்டிருப்பதன் ஞானத்தைப் பற்றி நமக்கு ஆலோசனை கொடுக்கிறார். இவ்விதமாக மட்டுமே நம்முடைய பிற்கால வாழ்க்கைப் போக்கை ஞானமாக நடத்தவும் அதன் பலனாக நித்திய ஜீவனாகிய பரிசை அடையவும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம். அது என்னே ஒரு சந்தோஷகரமான முடிவாக இருக்கும்!
14 இதன் சம்பந்தமாகப் பேதுரு அப்போஸ்தலனின் முன்மாதிரியை நாம் குறித்துக் காட்டலாம். பவுல் அப்போஸ்தலனிடமிருந்து அவர் கடுமையான புத்திமதியைப் பெற்றார். இதைத்தான் கலாத்தியர் 2:14-ல் உள்ள பதிவிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்: “அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?” பேதுரு அப்போஸ்தலன் புண்படுத்தப்பட்டாரா? புண்பட்டாலும், நீண்ட காலத்திற்கு இல்லை. “நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுல்” என அவர் 2 பேதுரு 3:15, 16-ல் பின்னர்க் குறிப்பிடுவதிலிருந்து இது தெரிகிறது.
15. நாம் மனத்தாழ்மையாயிருப்பதற்கும் சந்தோஷமாயிருப்பதற்கும் என்ன தொடர்பிருக்கிறது?
15 மற்றொரு காரியம், போதுமென்றிருப்பது, மனநிறைவு உள்ளவர்களாயிருப்பதாகும். நாம் நம்முடைய வாழ்க்கை பங்கைக் குறித்தும், நம்முடைய சிலாக்கியங்களைக் குறித்தும் நம்முடைய ஆசீர்வாதங்களைக் குறித்தும் மனநிறைவுள்ளவர்களாக இல்லையெனில், சந்தோஷமாக இருக்கவே முடியாது. “கடவுள் அதை அனுமதிப்பாரேயானால், நான் அதைச் சகித்திருப்பேன்,” என்ற மனநிலையையே மனத்தாழ்மையுள்ள கிறிஸ்தவன் கொண்டிருப்பான். அதையே, 1 கொரிந்தியர் 10:13-ல் நாம் வாசிக்கிற பிரகாரம், பவுல் அப்போஸ்தலன் சொல்லக்கூடியவராக இருக்கிறார்: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” ஆகவே, மனத்தாழ்மை எப்படி ஞானமார்க்கமாக இருக்கிறதென நாம் திரும்பவும் கவனிக்கிறோம். ஏனெனில் வாழ்க்கையில் நம்முடைய பங்கு என்னவாயிருந்தாலும், சந்தோஷமாயிருக்க அது நமக்கு உதவுகிறது.
மனத்தாழ்மையாயிருக்க அன்பு நமக்கு உதவும்
16, 17. (அ) நாம் மனத்தாழ்மையாயிருக்க உதவும் அதிமேம்பட்ட தன்மையை எந்த வேதப்பூர்வ முன்மாதிரி உயர்த்திக்காட்டுகிறது? (ஆ) என்ன உலகப்பிரகாரமான முன்மாதிரியும் இந்தக் குறிப்பை விளக்கிக் காட்டுகிறது?
16 எல்லாவற்றையும்விட, அகாப்பே என்ற தன்னலமற்ற அன்பு மனத்தாழ்மையாயிருக்க நமக்கு உதவும். பவுல் பிலிப்பியர்களுக்கு விளக்கிக்காட்டும் வாதனை-கழுமர அனுபவத்தை இயேசுவால் ஏன் அவ்வளவு மனத்தாழ்மையோடு சகித்திருக்க முடிந்தது? (பிலிப்பியர் 2:5-8, NW) கடவுளுக்குச் சமமமாயிருக்க ஏன் அவர் எண்ணங்கொள்ளவில்லை? ஏனெனில், “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்” என அவர்தாமே கூறினார். (யோவான் 14:31) அதனால்தான் எல்லா சமயங்களிலும் அவர் தம்முடைய பரலோக தகப்பன், யெகோவாவுக்கு மகிமையையும் கனத்தையும் கொடுத்தார். இப்படி, வேறொரு தருணத்தில், தம்முடைய பரலோக தகப்பனே நல்லவர் என்பதை அவர் வலியுறுத்திக் காட்டினார்.—லூக்கா 18:18, 19.
17 அமெரிக்காவைச் சேர்ந்த, ஜான் கிரீன்லீஃப் விட்யியர் என்ற ஒரு முற்கால கவிஞருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இந்தக் குறிப்பை விளக்கிக் காட்டுகிறது. இந்த நபர் இளைஞராயிருக்கையில் ஒரு காதலியைக் கொண்டிருந்தார். எழுத்துக்கூட்டுப் போட்டி ஒன்றில், ஒருமுறை இவள் ஒரு வார்த்தையைச் சரியாக எழுத்துக்கூட்டிச் சொன்னாள். இவரோ எழுத்துக்கூட்டித் தவறாகச் சொன்னார். அவள் இதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள். ஏன்? கவிஞர் ஞாபகப்படுத்துகிற பிரகாரம், அவள் சொன்னாள்: “நான் அந்தச் சொல்லை சரியாகச் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். உங்களைவிட பெரிய ஆளாக இருக்கவே எனக்கு விருப்பமில்லை . . . ஏனென்றால், உங்களை நான் நேசிக்கிறேன்.” ஆம், அன்பு மனத்தாழ்மையாயிருப்பதன் காரணமாக, நாம் ஒருவரை நேசித்தோமேயானால், அவர் நம்மைவிட மேன்மையானவராக இருக்க விரும்புவோமேவொழிய, தாழ்வாக இருக்க விரும்பமாட்டோம்.
18. எந்த வேதப்பூர்வ ஆலோசனைக்குச் செவிசாய்க்க மனத்தாழ்மை நமக்கு உதவும்?
18 இது எல்லா கிறிஸ்தவர்களுக்கும், பிரத்தியேகமாக சகோதரர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கிறது. ஒரு விசேஷ ஊழியச் சிலாக்கியத்தை, நமக்குப் பதிலாக நம்முடைய சகோதரர் பெற்றதற்காக, நாம் ஆனந்தமடைவோமா அல்லது ஒருவகையான, இலேசான பொறாமையும் பகைமையும் கலந்த உணர்ச்சியை நாம் கொண்டிருப்போமா? நம்முடைய சகோதரரை நாம் மெய்யாக நேசித்தோமெனில், அந்த விசேஷ நியமிப்பை அல்லது பொறுப்பை அல்லது ஊழியச் சிலாக்கியத்தைப் பெற்றதைக் குறித்து நாம் ஆனந்தமடைவோம். ஆம், மனத்தாழ்மை “கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” என்ற புத்திமதிக்குச் செவிசாய்ப்பதை =24மிகவும் சுலபமாக்கும். (ரோமர் 12:10) இன்னொரு மொழிபெயர்ப்பு வாசிக்கிறது: “ஒருவரையொருவர் உங்களிலும் மேலாக கனப்படுத்துங்கள்.” (நியூ இன்டர்நேஷனல் வெர்ஷன்) மேலும், பவுல் அப்போஸ்தலன் “ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்,” என நமக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறார். (கலாத்தியர் 5:13, கத்.பை.) ஆம், அன்பிருந்தால், நம்முடைய சகோதரர்களுக்குச் சந்தோஷமாக உதவ தயாராக இருக்கவும், அவர்களுக்காகக் கஷ்டப்பட்டு அடிமையைப்போல வேலைசெய்யவும், நம்முடைய சொந்த நாட்டங்களையும் நலனையும் முதலில் கருதுவதற்கு மாறாக அவர்களுடையதைக் கருதக்கூடியவர்களாயும் இருப்போம். இவற்றைச் செய்வதற்கு மனத்தாழ்மை அவசியம். மனத்தாழ்மை நம்மைநாமே பெருமைப்படுத்திக் கொள்வதிலிருந்தும் நம்மைக் காக்கும். இவ்வாறு மற்றவர்களில் பொறாமையையோ பகைமையுணர்ச்சியையோ கிண்டிவிடுவதை நாம் தவிர்ப்போம். பவுல், அன்பு “தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” என எழுதினார். ஏன்? ஏனெனில் பெருமையடிப்பதற்கும் செருக்கடைவதற்குமான உள்நோக்கம், தன்னலமும் ஜம்ப மனப்பான்மையுமேயாகும். அன்போ தன்னலமற்றத் தன்மையின் ஊற்றுமூலமாக இருக்கிறது.—1 கொரிந்தியர் 13:4.
19. பெருமையும் தன்னலமும் போல, மனத்தாழ்மையும் அன்பும் கைகோத்திருக்கும் என்பதை என்ன பைபிள் முன்மாதிரிகள் விளக்கிக் காட்டுகின்றன?
19 சவுல் அரசனோடும் அவருடைய மகன் யோனத்தானோடும் தாவீது கொண்டிருந்த உறவு, அன்பும் மனத்தாழ்மையும் எவ்வாறு கைகோத்திருக்கின்றன என்பதற்கும், அதேவிதமாக பெருமையும் தன்னலமும் எவ்வாறு கைகோத்திருக்கின்றன என்பதற்கும் எடுப்பான உதாரணமாக இருக்கிறது. போரில் தாவீது அடைந்த ஜெயங்களினிமித்தம், “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” என இஸ்ரவேலப் பெண்கள் பாடினர். (1 சாமுவேல் 18:7) தாழ்மையாயில்லாமல் பெருமையினால் பீடிக்கப்பட்டவனாக, அதுமுதல் தாவீதின்மீது கொன்றுபோடக்கூடிய பகையை தன் மனதில் சவுல் வளர்த்துவந்தான். அவனுடைய மகன் யோனத்தானின் மனப்பான்மையிலிருந்து இது எவ்வளவு மாறுபட்டதாயிருந்தது! யோனத்தான் தன் உயிரைப்போல தாவீதைச் சிநேகித்தாரென நாம் வாசிக்கிறோம். (1 சாமுவேல் 18:1) ஆகவே நிகழ்வுகளின் நாளாவட்டத்தில், யெகோவா தாவீதை ஆசீர்வதித்து வந்திருக்கிறார் எனவும், இஸ்ரவேலின் அரசனாக சவுலுக்குப் பின் யோனத்தான் அரசனாக ஆகாமல், அவரே அரசனாக ஆவார் எனவும் தான் அறியவந்தபோது, யோனத்தான் எவ்வாறு பிரதிபலித்தார்? பொறாமையோ பகைமையுணர்ச்சியோ யோனத்தான் கொண்டாரா? இல்லவே இல்லை! 1 சாமுவேல் 23:17-ல் நாம் வாசிக்கிறபடி, தாவீதுமீதிருந்த மட்டிலா அன்பினிமித்தம், அவர், “நீர் பயப்படவேண்டாம், என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர், அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார்,” எனச் சொல்லக்கூடியவராக இருந்தார். தாவீதின்மீதிருந்த யோனத்தானின் மட்டிலா அன்பு, தன்னுடைய தகப்பனுக்குப் பின் இஸ்ரவேலின் அரசனாக வரவேண்டியவரை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளச் செய்தது. அதுவே கடவுளின் சித்தமாக இருந்ததென்பதை யோனத்தான் அறிந்து கொண்டார்.
20. அன்புக்கும் மனத்தாழ்மைக்குமுள்ள பிணைப்பை இயேசு எப்படிக் காட்டினார்?
20 மேலும், தாம் இறப்பதற்கு முன்பு இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களோடு இருந்த அந்தக் கடைசி இரவன்று நிகழ்ந்த காரியம் அன்புக்கும் மனத்தாழ்மைக்குமிடையே உள்ள உறவை எடுத்துக்காட்டுகிறது. யோவான் 13:1-ல், “இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்” என இயேசுவைக் குறித்து நாம் வாசிக்கிறோம். அதைத் தொடர்ந்து, ஒரு பணிவிடைக்காரனைப்போலச் செயல்படுபவராக, தம்முடைய அப்போஸ்தலர்களின் கால்களை இயேசு கழுவிவிட்டார் என நாம் வாசிக்கிறோம். மனத்தாழ்மைக்கு என்னே ஒரு பலமான பாடம்!—யோவான் 13:1-11.
21. சுருங்கச் சொன்னால், ஏன் நாம் மனத்தாழ்மையாயிருக்க வேண்டும்?
21 உண்மையிலேயே, மனத்தாழ்மையாயிருப்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. மனத்தாழ்மையாயிருப்பதே சரியான, நேர்மையான காரியம். அதுவே விசுவாசமார்க்கம். யெகோவா தேவனோடும் நம் சக விசுவாசிகளோடும் நல்ல தொடர்பைக் கொண்டிருக்கச் செய்வது அதுவே. ஞானமார்க்கம் அதுவே. எல்லாவற்றிற்கும் மேலாக, அதுவே அன்பு மார்க்கம். அதுவே மெய்ச் சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது.
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
◻ மனத்தாழ்மையாயிருப்பதில் எவ்வழிகளில் நேர்மை உதவியாயிருக்கிறது?
◻ யெகோவாவின்மீது விசுவாசம் வைப்பது, ஏன் மனத்தாழ்மையாயிருக்க நமக்கு உதவும்?
◻ மனத்தாழ்மையாயிருப்பது ஞானமார்க்கமென எது காட்டுகிறது?
◻ மனத்தாழ்மையாயிருப்பதற்கு அன்பு ஏன் நமக்குப் பிரத்தியேக உதவியாயிருக்கிறது?
[பக்கம் 21-ன் படம்]
யோபு தன்னை மனத்தாழ்மையோடு யெகோவாவுக்குக் கீழ்ப்படுத்தினார். அவர் “தேவனைத் தூஷித்து ஜீவனை” விடவில்லை
[பக்கம் 23-ன் படம்]
பவுல் எல்லாருக்கும் முன்பாகப் பேதுருவுக்குப் புத்திமதி கொடுத்தபோது அவர் மனத்தாழ்மையோடு கீழ்ப்படிந்தார்