இயேசு பனிக்காலத்தில் பிறந்தாரா?
“கடும்பனி எருசலேமை ஸ்தம்பிக்கச்செய்கிறது,” மேலும் “இடைவிடாது பெய்த பனி வடக்குப் பகுதியைத் திக்குமுக்காடச் செய்கிறது.” 1992-ல், இந்த நூற்றாண்டின் இஸ்ரவேல் தேசத்தினுடைய கடும்குளிர்காலப் பகுதிகளில் ஒன்றாக எருசலேம் இருந்ததால், தி ஜெரூசலம் போஸ்ட்டில் இருந்த இப்படிப்பட்ட தலைப்புச் செய்திகள் இஸ்ரவேல் வாசகர்களுக்கு ஒரு சாதாரண விஷயமாயிருந்தது.
ஜனவரிக்குள் எர்மோன் மலையின் உச்சி, 22 முதல் 40 அடி அளவிற்குப் பனியால் மூடப்பட்டிருந்தது, குளிர்காலம் இன்னும் முடியவில்லை. கோலான் உச்சிகள், மேல் கலிலீ ஆகிய இடங்களிலிருந்து கீழே, எருசலேம் மற்றும் அருகிலுள்ள பெத்லகேமை (மேல் அட்டையில் காணப்படுகிறது) கடந்துபோய், தெற்கேயும் நெகெப் வரையாக இஸ்ரவேலரின் அன்றாட வாழ்க்கையும் வேலைகளும் ஓர் அழகிய மற்றும் இனிய, ஆனாலும் ஆற்றல்மிக்க பனிக்காலத்தால் திரும்பத் திரும்ப ஸ்தம்பித்தன. ஜெரூசலம் போஸ்ட் கட்டுரை ஒன்று சொன்னது: “கட்யூஷ ராக்கெட்டுகளின் பொழிவு கடந்த வாரத்தில் செய்யத் தவறிய ஒன்றை, அதாவது குடியிருப்புகளை மூடி, வசிப்பவர்களைத் தங்களுடைய வீடுகளுக்குள் வலுக்கட்டாயமாக இருக்கும்படி செய்வதை, கடும்பனி வீழ்வு நேற்று சாதித்தது.”
அந்தக் கடுமையான குளிர்காலம் நகர வாசிகளைவிட அதிகமானோருக்குப் பேரழிவைக் கொண்டுவந்தது. இரவு நேர தட்பவெப்பநிலைகள் உறைநிலைக்குக் கீழே திடீரென்று குறைந்ததால், நூற்றுக்கணக்கான பசுக்களும் கன்றுகுட்டிகளும் ஆயிரக்கணக்கான கோழிகளும் மிகுந்த குளிரினால் இறந்துபோயின என்பதைப் பற்றி அறிக்கைகள் வந்தன. பனி போதாதென்பதுபோல, பலத்த, கடும் மழைகளும் சேதத்தைக் கொண்டுவந்தன. ஒரு நாள், இரண்டு இளம் ஆய பையன்கள் திடீர் பெருவெள்ளத்தில் மாட்டிக்கொண்ட தங்களுடைய ஆடுகளில் சிலவற்றைக் காப்பாற்ற வெறியுடன் வெளிப்படையாக முயற்சி செய்தபோது, அவர்கள்தாமே வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி மாண்டனர்.
இது வழக்கமான மத்திய கிழக்குக் குளிர்காலமாக இல்லாவிட்டாலும், இஸ்ரவேல பத்திரிகை எரெட்ஸ் இவ்வாறு அறிக்கைசெய்தது: “எருசலேமில் பனி என்பது எதிர்பார்க்கப்படுவதைவிட மிக சாதாரண நிகழ்ச்சியே என்று கடந்த 130 ஆண்டுகளாக இஸ்ரவேல் தேசத்தில் தொகுக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட வானிலை ஆராய்ச்சி குறிப்பு வெளிப்படுத்துகிறது . . . 1949-லிருந்து 1980 வரை, எருசலேம் நகரம் இருபத்தி நான்கு பனிவிழும் குளிர்காலத்தைக் கொண்டிருந்தது.” ஆனால் இது வெறுமனே ஒரு வானிலை ஆராய்ச்சி மற்றும் மனித அக்கறையைத் தூண்டும் விஷயமாக இருக்கிறதா, அல்லது இது பைபிள் மாணாக்கருக்கு விசேஷித்த அர்த்தத்தை உடையதாக இருக்கிறதா?
பைபிள் மாணாக்கருக்குரிய உட்பொருள் என்ன?
இயேசுவின் பிறப்பைப் பற்றி நினைக்கும்போது, கிறிஸ்துமஸ் சமயத்தில் பெரும்பாலும் காட்டப்படும், உணர்ச்சியைத் தூண்டும் மாட்டுக்கொட்டில் தொட்டிக் காட்சியைப் பலர் மனக்கண்ணுக்குக் கொண்டுவருகின்றனர். அங்கே சுற்றியிருக்கும் நிலப்பகுதிகளில் பனி மிருதுவாகப் படர்ந்து இருக்க, குழந்தை இயேசு கதகதப்புக்காகத் துணியால் சுற்றப்பட்டு, தம்முடைய அம்மாவின் பாதுகாப்பில், கிடத்தப்பட்டிருக்கிறார். இந்தப் பிரபலமான காட்சி, வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்ச்சியின் பைபிள் விளக்கத்திற்கு இசைவாக இருக்கிறதா?
இயேசுவின் பிறப்பைப் பற்றிய ஒரு தெளிவான சான்றளிக்கப்பட்ட பதிவைப் பைபிள் எழுத்தாளர் லூக்கா சொல்கிறார்: “அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளிகளில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே [பெத்லகேமில்] பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.”—லூக்கா 2:8-14.
இன்றுள்ள சாதாரண இஸ்ரவேல் தேசத்தானிடம் நீங்கள் இந்தப் பதிவை வாசித்துக் காட்டி, இயேசு பிறந்த இந்தச் சமயம் ஆண்டின் எந்தக் காலப்பகுதி என்று கேட்டால், அவர் பெரும்பாலும் “ஏப்ரலுக்கும் அக்டோபருக்கும் இடையில் ஏதோவொரு சமயம்” என்று பதிலளிப்பார். ஏன்? பதில் எளிதானதுதான். நவம்பரிலிருந்து மார்ச் வரை, இஸ்ரவேலில் குளிர் மற்றும் மழைக் காலம்; டிசம்பர் 25, நிச்சயமாகவே குளிர்காலத்தில் இருந்தது. மேய்ப்பர்கள் இராத்திரியிலே தங்களுடைய மந்தைகளைக் காத்துக்கொண்டு வயல்வெளிகளில் தங்குபவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள அறிக்கைகளைச் சிந்திக்கையில், இது ஏன் என்பதை நீங்கள் தெளிவாகவே அறிந்துகொள்ள முடியும். இயேசு பிறந்த இடமாகிய பெத்லகேம் உயர்வான இடத்தில், எருசலேமிலிருந்து ஒருசில மைல்கள் தூரத்தில்தான் இருக்கிறது. வானிலை மிகக் கடுமையாய் இல்லாதிருக்கும் ஆண்டுகளிலும்கூட குளிர்கால இரவில் அங்கு குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.—மீகா 5:2; லூக்கா 2:15.
இயேசு பிறந்த சமயத்தின் வரலாற்றை கூர்ந்து ஆராய்வது, அவர் டிசம்பர் பனியில் பிறக்கவில்லை என்ற உண்மையைத் தெளிவாக்குகிறது. இயேசுவின் தாய், மரியாள், பிரசவ காலத்தில் இருந்தபோதிலும், நாசரேத்திலிருந்த தன் வீட்டிலிருந்து பெத்லகேமிற்குப் பயணம்செய்ய வேண்டிய நிலையில் இருந்தாள். ரோம ஆட்சியாளர் அகுஸ்துராயனால் குடிமதிப்பு எழுதப்படவேண்டும் என்ற கட்டளைக்கு இணங்க அவளும் யோசேப்பும் அவ்வாறு செய்தார்கள். (லூக்கா 2:1-7) யூத மக்கள் ஏற்கெனவே ரோம ஆட்சிக்கும் அதனுடைய அதிகப்படியான வரிவிதிப்புக்கும் எதிர்த்துக் கலகம்செய்யும் தருவாயில் இருந்தனர். அதிகக் கடுமையான, நட்புக்குக் கேடான குளிர்கால வானிலையின்போது பதிவுசெய்ய பயணம்செய்யும்படி ரோம் ஏன் அவர்களைத் தேவையில்லாமல் கோபப்படுத்த வேண்டும்? பயணம்செய்ய அனுமதிக்கும் காலமாகிய வசந்த காலம் அல்லது இலையுதிர் காலம் போன்ற ஒரு காலப்பகுதியில் கட்டளையிடப்பட்டிருந்திருக்கலாம் என்பது அதிக நியாயமானதாகத் தோன்றவில்லையா?
பைபிள் அடிப்படையிலான கணக்கீடுகள்
டிசம்பர் மாதம் அல்லது வேறெந்த குளிர்கால மாதமும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய பதிவுகளுக்குப் பொருத்தமாக இருந்ததென்பதை வரலாற்று மற்றும் வானிலைச் சான்றுகள் தகுதியற்றதாக்குகின்றன. மேலுமாக பைபிள், தீர்க்கதரிசனத்தின் மூலமாக இயேசு பிறந்த ஆண்டின் காலப்பகுதியைப் பற்றி வெளிப்படுத்துகிறது. இதை அது எங்கே காண்பிக்கிறது?
தானியேல் புத்தகம் 9-ம் அதிகாரத்தில், மேசியாவைப் பற்றி, அதிகமாக மனதைக் கவரும் தீர்க்கதரிசனங்களில் ஒன்றை நாம் காண்கிறோம். இது அவருடைய வருகையையும், பாவத்திற்கு ஈடாக ஒரு கிரய பலியைக் கொடுத்து கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு “நித்திய நீதியை” தருவிக்க அடிப்படையை நிறுவுவதற்கு மரணத்தில் அவர் சங்கரிக்கப்படுவதையும் பற்றி விளக்குகிறது. (தானியேல் 9:24-27; ஒப்பிடுக மத்தேயு 20:28.) இந்தத் தீர்க்கதரிசனத்தின் பிரகாரம், இதெல்லாம் எருசலேமை மறுபடியும் கட்டுவதற்குக் கட்டளைக் கொடுக்கப்பட்ட பொ.ச.மு. 455-ம் ஆண்டில் ஆரம்பித்து, 70 வார ஆண்டுகள் காலத்திற்குள் நிறைவேற்றப்படும்.a (நெகேமியா 2:1-11) இந்தத் தீர்க்கதரிசனத்தில் உள்ள கால பிரிவுகளிலிருந்து, 70-ம் வார ஆண்டுகளின் ஆரம்பத்தில் மேசியா வரவேண்டும் என அறியலாம். இயேசு, மேசியானிய பாத்திரத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்த பொ.ச. 29-ல் முழுக்காட்டுதலுக்காகத் தம்மை அளித்தபோது இது நடந்தது. “அந்த வாரம் பாதி சென்றபோது,” அல்லது மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு, மேசியா மரணத்தில் சங்காரம் செய்யப்படுவார்; இதன்மூலம் மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் வரும் எல்லா பலிகளின் மதிப்புக்கும் முடிவைக் கொண்டுவருவார்.—எபிரெயர் 9:11-15; 10:1-10.
இந்தத் தீர்க்கதரிசனம் இயேசுவின் ஊழியம் மூன்றரை ஆண்டுகள் என வெளிப்படுத்துகிறது. பொ.ச. 33-ன் வசந்தகாலத்தில், நிசான் 14-ல் (யூத நாள்காட்டி பிரகாரம்) பஸ்கா அன்று இயேசு இறந்தார். அந்த ஆண்டில் இதற்கு ஒத்த நாள் ஏப்ரல் 1. (மத்தேயு 26:2) மூன்றரை ஆண்டுகள் பின்னோக்கி கணக்கிட்டால் அவருடைய முழுக்காட்டுதல் பொ.ச. 29 அக்டோபரின் ஆரம்பத்தில் கொண்டுபோய் விடும். முழுக்காட்டுதலின்போது இயேசு ஏறக்குறைய 30 வயதடைந்திருந்தார் என்று லூக்கா நமக்கு அறிவிக்கிறார். (லூக்கா 3:21-23) இது இயேசுவின் பிறப்பும்கூட கிட்டத்தட்ட அக்டோபரின் ஆரம்பத்தில் இருந்திருக்கலாம் என்பதை அர்த்தப்படுத்தும். லூக்காவின் பதிவுக்கு இசைவாக, ஆண்டின் அந்தப் பருவத்தில் மேய்ப்பர்கள் இன்னும் ‘வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்திருப்பார்கள்.’—லூக்கா 2:8.
எந்த மூலத்திலிருந்து?
அக்டோபர் ஆரம்பத்தை இயேசுவின் பிறப்பின் சமயமாகச் சான்று குறிப்பிடுவதால், அது ஏன் டிசம்பர் 25-ல் கொண்டாடப்படுகிறது? தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இயேசுவின் பிறப்பிற்குப் பின்பு நூற்றாண்டுகள் கழிந்தபின்பே இந்தப் பண்டிகை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று காண்பிக்கிறது: “4-ம் நூற்றாண்டின் காலத்தில், அநேக கீழதேச சர்ச்சுகள் டிசம்பர் 25-ஐ கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டமாகச் சிறிதுசிறிதாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தன. எருசலேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு அதிக காலமாக நீடித்தது, ஆனால் பின்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.”
கிறிஸ்துவுக்குப் பின்பு பல நூற்றாண்டுகள் கழிந்தபிறகு ஏன் அந்தப் பழக்கம் அவ்வளவு எளிதாகக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது? தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இந்தப் பொருளின்பேரில் கூடுதலான புரிந்துகொள்ளுதலைக் கொடுக்கிறது: “மத்திப குளிர்காலத்தில் கொண்டாடப்படும் புறமத சம்பந்தமான வேளாண்மை மற்றும் சூரிய சடங்குகளோடு, கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டம் தற்செயலாக ஒரே காலத்தில் வந்ததால், கிறிஸ்துமஸுடன் சம்பந்தப்பட்ட பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பல்வேறுபட்ட மூலங்களிலிருந்து வளர்ந்துவந்திருந்தன. ரோம உலகில் வேளாண்மைத் தெய்வ திருவிழா (Saturnalia) (டிசம்பர் 17) மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்கும் பரிசுகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் உரிய காலமாக இருந்தது. டிசம்பர் 25, நீதியின் சூரியனாகிய ஈரானிய மர்மக் கடவுள் மித்ராவின் பிறந்த தினமாகவும் கருதப்பட்டு வந்தது.”
இதெல்லாம் உண்மையில் “தற்செயலாக ஒரே காலத்தில்” வந்த காரியமாக இருந்ததா? நிச்சயமாகவே இல்லை! பொ.ச. நான்காம் நூற்றாண்டில், கான்ஸ்டன்டைன் பேரரசரின் ஆதிக்கத்தின்கீழ் கிறிஸ்தவத்தைத் துன்புறுத்தும் ஒன்றாக இருந்த ரோமப்பேரரசு, ‘கிறிஸ்தவத்தை’ ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மதமாக ஆதரிக்கும் அளவிற்குக் குறிப்பிடத்தக்க வகையில் திடீர் மாற்றமடைந்தது. பொதுப் போக்கோடு சேர்ந்து, உண்மையான அர்த்தத்தில் கிறிஸ்தவத்தின் பின்னணியில்லாதவர்களாக இருந்தவர்கள், இந்தப் புதிய விசுவாசத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தங்களுக்கு அறிந்த புறமத பண்டிகைகளையெல்லாம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட “கிறிஸ்தவ” தலைப்புகளோடு கொண்டாட ஆரம்பித்தனர். ‘நீதியின் சூரியனுடைய’ பிறந்த தேதியாக ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட டிசம்பர் 25-ஐ விட வேறு எந்தத் தேதி கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கு அதிகப் பொருத்தமான தேதியாக இருக்கும்?
இது முக்கியமா?
யூத பின்னணியைக் கொண்டிருந்தவர்களாகிய இயேசுவின் முதல் சீஷர்கள், அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. என்ஸைக்ளோப்பீடியா ஜூடாய்க்கா சொல்கிறபடி, “பிறந்த நாள்களைக் கொண்டாடுவது பாரம்பரிய யூத வழக்கங்களில் அறியப்படாமல் இருக்கிறது.” ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் நிச்சயமாகவே இப்படிப்பட்ட கொண்டாட்டத்தை ஏற்றிருக்க மாட்டார்கள். அவருடைய பிறப்பைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, அவருடைய மரணத்தை நினைவுகொள்ளுங்கள் என்ற இயேசுவின் கட்டளைக்கு மரியாதையைக் காட்டியிருப்பர்; இதைக் குறித்து மறுக்கப்பட முடியாத ஒரு தேதியை, அதாவது நிசான் 14-ஐ அவர்கள் கொண்டிருந்தனர்.—லூக்கா 22:7, 15, 19, 20; 1 கொரிந்தியர் 11:23-26.
கிறிஸ்துவுக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு, அப்போது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமாக இருந்த யூத மக்கள் ஏறக்குறைய தங்களுடைய பாபிலோன் சிறையிருப்பின் முடிவில் தீர்க்கதரிசனம்மூலம் எச்சரிக்கப்பட்டனர்: “புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.” (ஏசாயா 52:11) யெகோவாவின் உண்மை வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிவர வேண்டியதிருந்தது. அவர்கள் பாபிலோனில் கண்ட அசுத்தமான புறமதப் பழக்கங்களையும் வணக்கமுறைகளையும் ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத காரியமாக இருக்கும்.
ஆச்சரியமின்றியே, இதே கட்டளை 2 கொரிந்தியர் 6:14-18-ல் கிறிஸ்தவர்களுக்கு மறுபடியும் சொல்லப்பட்டது. கிறிஸ்துவை ஏற்க மறுத்த யூத ஜனத்திற்குப் பதிலாக அவருடைய சீஷர்கள் உண்மை வணக்கத்தின் பிரதிநிதிகளாக ஆனார்கள். ஆவிக்குரிய இருளிலிருந்து வெளியேறி, சத்திய வெளிச்சத்திற்குள் பிரவேசிக்க மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டிய பொறுப்பை உடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். (1 பேதுரு 2:9, 10) புறமத ஆரம்பத்தை உடைய பழக்கவழக்கங்களோடும் விடுமுறை நாள் பண்டிகைகளோடும் கிறிஸ்துவின் போதகங்களை கலந்தார்களெனில் இதை அவர்கள் எப்படிச் செய்யமுடியும்?
பிரபலமான போக்குடன் எவ்வளவிற்குக் கவர்ச்சியாக “வெண்பனிக் கிறிஸ்துமஸ்” (White Christmas) தோன்றுகிறதோ அவ்வளவிற்கு அதைக் கொண்டாடுவது ‘அசுத்தமானதைத் தொடுவதற்கு’ சமம். (2 கொரிந்தியர் 6:17) உண்மையிலேயே கடவுளையும் கிறிஸ்துவையும் நேசிக்கிற ஒருவர் அதைத் தவிர்க்க வேண்டும்.
இதனுடைய தோற்றங்கள் புறமத கொண்டாட்டங்கள் என்ற உண்மையோடு, கிறிஸ்துமஸ் சத்தியத்தைக் குறிப்பதில்லை என்பதையும் கண்டோம்; ஏனென்றால் இயேசு அக்டோபரில் பிறந்தார். ஆம், ஒருவருடைய கற்பனையில் என்ன காட்சி வந்தாலும்சரி, இயேசு பனிக்காலத்தில் பிறக்கவேயில்லை.
[அடிக்குறிப்புகள்]
a இந்தத் தீர்க்கதரிசனத்தின் முழு கலந்தாலோசிப்பிற்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட யுத்தம் இல்லாத ஓர் உலகம் எப்போதாவது இருக்குமா? (Will There Ever Be a World Without War?) என்ற ஆங்கில சிற்றேட்டில் பக்கம் 26-ஐப் பார்க்கவும்.
[[பக்கம் 4, 5-ன் படம்]
கிழக்கிலிருந்து பார்க்கப்படுவதுபோல் பனிமூடிய எருசலேம்
[படத்திற்கான நன்றி]
Garo Nalbandian
[பக்கம் 6-ன் படம்]
எருசலேமின் மதில்கள் ஓரமாகப் பனி
[பக்கம் 7-ன் படம்]
கீழே காணப்படுவதுபோல், வெதுவெதுப்பான காலப்பகுதியில்தான் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு பாறைகள் நிறைந்த மலைப்பகுதிகளில் இரவிலே தங்க முடியும்
[படத்திற்கான நன்றி]
Garo Nalbandian