கிழக்கிலும் மேற்கிலும், யெகோவா தம்முடைய மக்களைப் பலப்படுத்துகிறார்
பிரசங்க வேலை தடைசெய்யப்பட்ட பிராந்தியங்களில், வன்முறையால் பிளவுபட்டிருக்கும் நாடுகளில், சமீபத்தில் தடை நீக்கப்பட்ட தேசங்களில்—உண்மையில் உலகளாவிய பிராந்தியமெங்கும்—யெகோவா தம்முடைய சாட்சிகளுக்கு “அசாதாரணமான வல்லமையை” தொடர்ந்து கொடுத்துவருகிறார்.—2 கொரிந்தியர் 4:7, NW.
தடையின்மத்தியிலும் செழிப்பு
தூரக்கிழக்கு தீவு கூட்டத்தில் பிரசங்க வேலை இப்பொழுது 17 ஆண்டுகளாகத் தடையின்கீழ் இருந்துவருகிறது. சாட்சிகள் உற்சாகம் இழந்துவிட்டார்களா? இல்லவே இல்லை! கடந்த மே மாதத்தில், 10,756 பிரஸ்தாபிகள் என்ற ஒரு புதிய உச்சநிலையை அவர்கள் அடைந்தனர். இவர்களில் 1,297 பேர் முழுநேர ஊழியர்களாகச் சேவைசெய்தார்கள். உலக நிலைமைகள் மோசமாக மாறமாற, தீவிலுள்ள மக்கள் எப்பொழுதையும்விட சத்தியத்திற்கு அதிகமாய் செவிசாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் அக்கறை காண்பித்தவர்களின் வீடுகளில் நடத்தப்படும் 15,654 பைபிள் படிப்புகளை அறிக்கை செய்துவருகின்றனர். முன்பு, இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பிற்காக அமைதலாக நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு 25,397 பேர் ஆஜராயிருந்தனர்.
உள்ளூர் சூழமைவுகளின்படி மீண்டும் விவேகத்துடன் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகள் நடந்தபோது, ஐக்கிய மாகாணங்களில் வெளியிடப்பட்ட அதே புதிய பிரசுரங்களை தங்கள் மொழியில் பெறுவதில் சகோதரர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தனர். மொழிபெயர்ப்பாளர்களும் அச்சுப்பிழை திருத்துபவர்களும் மற்றவர்களும் கூடுதல் மணிநேரங்கள் வேலைசெய்வதற்கு மனமுவந்து செயல்பட்டனர்; ஆதலால் நூற்றுக்கணக்கான பக்கங்களையுடைய அந்த முக்கியமான புதிய வெளியீடு சரியான கால அட்டவணையின்படி அவர்களால் தயாரிக்கப்பட முடிந்தது. மேலும், சாட்சியல்லாதவர்களால் நடத்தப்படும் ஓர் அச்சாலை, அச்சடிப்பதிலும் கட்டமைப்பதிலும் (பைண்டிங்) ஒரு நேர்த்தியான வேலையை மனமுவந்த ஒத்துழைப்புடன் செய்வதில் மகிழ்ச்சியடைந்தது. அதன் ஆயிரத்திற்கு அதிகமான வர்ணமிகு படங்களுள்ள அந்தப் பிரசுரத்தைப் பெறுவதில் மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். பல அரசாங்க அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளை மதிக்கின்றனர், எதிர்ப்பு முக்கியமாக கிறிஸ்தவ மண்டல மதகுருக்களிடமிருந்து வருகிறது. தடை சீக்கிரத்தில் நீக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
அமெரிக்காக்களைப் பற்றி என்ன?
இந்த மேலை நாடுகளில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பிரச்னைகளை துணிவோடு சமாளிப்பதற்கு கீழை நாடுகளில் உள்ள சகோதரர்களோடு சேர்ந்து செயல்படுகின்றனர். மேலும் கடினமான சூழ்நிலைகளை மேற்கொள்வதற்கு யெகோவாவின் பரிசுத்த ஆவி அவர்களுக்கு உதவிசெய்கிறது. உதாரணமாக, லத்தீன்-அமெரிக்க தேசத்திலிருந்து வரும் பின்வரும் அறிக்கையைக் கவனியுங்கள். இங்கு போதைமருந்து கடத்தலைக் கட்டுப்படுத்தும் தொகுதியினர் காடுகளினூடே கடந்துபோகின்றனர்.
தனிப்பட்ட பிராந்தியம் ஒன்றிற்கு சாட்சிகளின் தொகுதி ஒன்று பஸ்ஸில் போனது. அவர்கள் பஸ்ஸைவிட்டு இறங்கியவுடன், அந்தக் கிராமத்திலிருந்து பக்கவழியாக சிறிய சாலை ஒன்று பிரிந்துபோவதைக் கண்டார்கள். எனவே, ஐந்து சகோதரர்கள், சகோதரிகளையும் சிறு பிள்ளைகளையும் கிராமத்தில் ஊழியம்செய்யும்படி நியமித்துவிட்டு, இந்தக் கரடுமுரடான சாலை எங்கே போகிறது என பார்க்க போனார்கள். அந்தச் சகோதரர்களில் ஒருவர் சொல்கிறார்:
“அந்தச் சாலையில் இரண்டு மணிநேரம் நடந்தபின்பு மிகச் சில வீடுகளே தென்பட்டன. பின்பு, முகமூடியணிந்து ஆயுதம் தரித்திருந்த எட்டு மனிதர்கள் திடீரென்று காடுகளினூடேயிருந்து வந்தனர். சிலர் இயந்திர துப்பாக்கிகளை வைத்திருந்தனர், சிலர் வெட்டுக்கத்திகளை வைத்திருந்தனர். நாங்கள் எதிர்ப்பட்டது என்ன? அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தோம், ஆனால் நாங்களோ பேசாமல் அமைதலாய் வெறுமனே முன்னோக்கிப் போகும்படி சொல்லப்பட்டோம். நாங்கள் செய்தோம்! அடர்த்தியான காட்டுப் புதர்கள் வழியே இன்னும் இரண்டு மணிநேரங்கள் நடந்துசென்றோம். இது எங்களை வெட்டவெளியான, தெளிவாகவே ஆயுதந்தரித்தவர்களடங்கிய இடத்திற்குக் கொண்டுவந்தது; இந்த இடம் முகாமாக இருந்தது. துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாவலர்கள் எங்கும் தென்பட்டனர். மையத்தில் நேர்த்தியாகக் கட்டப்பட்ட ஒரு வீடு இருந்தது. அதற்கு நாங்கள் வழிநடத்தப்பட்டோம்.
“நாங்கள் உட்காரவைக்கப்பட்டவுடன் ஒருவர், தெளிவாகவே முகாமின் தலைவர் அவர், எங்களோடு பேசினார். நேர்த்தியாக உடையணிந்தவராயும், நன்கு கல்விகற்றவராயும், பெருந்தன்மையுடையவராயும், இருந்தார். அவர் எங்கள் சகோதரத் தொகுதியிலுள்ள ஒருவரைச் சுட்டிக் காட்டி அவரை எழுந்திருக்கும்படி சொன்னார். பின்பு அவரிடம் அவர் கேட்டார்: ‘[எங்களுடைய] கட்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ நாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை முழுவதும் உணர்ந்துகொண்டு அந்தச் சகோதரர் சொன்னார்: ‘உங்கள் தொகுதியைப் பற்றி எங்களுக்குத் தெரியும், ஆனால் இதிலோ வேறு எந்த அரசியல் கட்சியிலோ எங்களுக்கு அக்கறையில்லை. நாங்கள் இங்கு இருப்பதற்கு ஒரே காரணம், கிறிஸ்து இயேசுவினால் ஆட்சிசெய்யப்படும், யெகோவா தேவனின் ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதற்கே ஆகும். அது, இந்தக் காரிய ஒழுங்குமுறையிலுள்ள எல்லா அரசியல் சார்ந்த அரசாங்கங்களைச் சீக்கிரத்தில் அழித்து, எந்த மனிதனும் அல்லது மனித தொகுதியும் கொண்டுவரமுடியாத ஒன்றை, அதாவது இந்தப் பூமியில் பரதீஸிய நிலைமைகளின்கீழ் அற்புதகரமான ஆசீர்வாதங்களை மக்களுக்குக் கொண்டுவரும்.’
“அந்த மனிதனின் அபிப்பிராயம் மாறியது. அவர் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். ‘இதையெல்லாம் நீங்கள் எங்குக் கற்றுக்கொண்டீர்கள்? அப்படிப் பேசுவதற்கு நீங்கள் எப்படிப் பயிற்றுவிக்கப்பட்டீர்கள்?’ ஒன்றரை மணி நேரத்திற்கு, உலக நிலைமைகளைப் பற்றி ஒரு நல்ல சாட்சி கொடுக்கவும், மனிதகுலத்திற்கான ஒரே நம்பிக்கையைப் பைபிள் குறிப்பிடுகிறது என்று காண்பிக்கவும் எங்களால் முடிந்தது. ரோமர் 13-ம் அதிகாரத்தையும் நாங்கள் விளக்கினோம்—அதாவது மேலதிகாரங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிகிறோம், ஆனால் யெகோவாவின் வார்த்தைக்கும் அவர்களுடையதற்கும் முரண்பாடு இருக்கும்போது, எங்கள் கடவுள் யெகோவாவிற்கு முதலில் நாங்கள் கீழ்ப்படிகிறோம். இறுதியில், எங்களிடத்திலிருந்த புத்தகங்களை நாங்கள் அவரிடத்தில் கொடுத்தோம். அவற்றில் மூன்றையும் ஒரு பைபிளையும் அவர் எடுத்துக்கொண்டார்; எங்களைத் திகைப்பில் ஆழ்த்தும்வண்ணம், அவற்றிற்கு நன்கொடையும் கொடுத்தார். அவர் அவற்றை வாசிப்பதாகச் சொன்னார்.
“பின்பு, இந்தத் தலைவர் அந்த ஆட்களில் ஒருவனிடம் எங்களை முகாமிற்கு வெளியே கொண்டுபோய் விடும்படி சைகையில் உத்தரவிட்டார். மற்றொரு பிராந்திய சாட்சிகொடுத்தலில் நாங்கள் அடைந்த வெற்றிக்கு யெகோவாவிற்கு நன்றியோடு சீக்கிரத்தில் எங்கள் வழியில் நாங்கள் திரும்பினோம்.”
பிளவுபட்ட ஆப்பிரிக்கா
தூரக்கிழக்கிற்கும் தூரமேற்கிற்கும் இடையே ஆப்பிரிக்க கண்டம் இருக்கிறது. குலப்போர் அங்குள்ள சில நாடுகளை வன்முறையின் பெருநீர்ச்சுழிகளாக மாற்றியிருக்கிறது. லைபீரியாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் பொங்கியெழுந்த உள்நாட்டு போரினால் மீண்டும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முதலில் தலைநகரத்திலும் அதைச் சுற்றிலும் அக்டோபர் மற்றும் நவம்பர் 1992-ல் சண்டை நடந்தது. பின்பு, நாட்டுக்குள்ளும் போர் பரவியதால், சகோதரர்கள் மற்ற மக்களோடு சேர்ந்து புதர்களுக்குள் ஓட நேர்ந்தது; இதனால் எல்லா சபைகளும் சிதறிப்போயின. ஆனாலும் அவர்களுடைய உற்சாகம் குறையாமல் நிலைத்திருக்கிறது. அவர்கள் ஓடிப்போனபோது, பிரசங்கம்செய்தனர்; இது உள்ளே உள்ள ஒதுக்கமான பகுதிகளிலும் ஒரு மகத்தான சாட்சி கொடுக்கப்படுவதில் விளைவடைந்திருக்கிறது.
தங்கள் வீடுகளைவிட்டு வரும்படி கட்டாயப்படுத்தப்பட்ட சகோதரர்களின் ஒரு சபை, ரப்பர் தோட்டங்களுக்கு மத்தியில் தற்காலிக ராஜ்ய மன்றம் ஒன்றைக் கட்டியது. இராணுவ இடத்திற்கு அருகிலுள்ள நகர மக்கள் விமானக் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்கு பகல் நேரத்தில் அருகிலிருக்கும் ரப்பர் தோட்டங்களுக்கு ஓடிவருவர். உட்பகுதியில் இருக்கும் சகோதரர்கள் (தலைநகரமாகிய மன்ரோவியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பல பிரஸ்தாபிகள் உட்பட) வெளி ஊழியத்திற்கு ஏற்பாடு செய்தனர்; இவர்கள் ரப்பர் மரங்களுக்குக்கீழ் பதுங்கிவாழும் ஆயிரக்கணக்கானோருக்கு இடைவிடாது பிரசங்கம் செய்துவருவதைக் காணலாம்! ஒரு விமானம் வரும்போதெல்லாம், சகோதரர்களும் சகோதரிகளும் பக்கத்திலுள்ள குழிக்குள் குதித்துவிடுவார்கள்; பின்பு, ஆபத்து கடந்தவுடன் தொடர்ந்து சாட்சிகொடுக்க ஆரம்பிப்பர்.
வியப்பூட்டும்வண்ணமாக, சங்கத்திற்கு ஊழிய அறிக்கைகளை அனுப்பிவைக்க முடிகிற ஆயிரத்திற்கு மேற்பட்ட சபை பிரஸ்தாபிகள், இந்த உள்நாட்டு போர் நிலைமைகளிலும்கூட, வெளி ஊழியத்தில் சராசரியாக 18.1 மணிநேரங்கள் செய்திருக்கின்றனர். மேலும் 3,111 பைபிள் படிப்புகள் மாதந்தோறும் நடத்திவருகின்றனர்.
ஆப்பிரிக்காவில் கடந்த நான்கு வருடங்களில், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையின்மீதிருந்த தடைகள், 18 நாடுகளில் நீக்கப்பட்டிருக்கின்றன. சந்தோஷத்திலும் சந்தோஷம்! அக்டோபர் 1967-ல் மலாவியிலுள்ள சாட்சிகளின்மீது போடப்பட்ட தடை, ஆகஸ்ட் 12-ல் நீக்கப்பட்டது. நற்செய்தியின் மறைமுக பிரசங்கவேலை எப்போதும் செழிப்படைந்தது; சாட்சிகள், ஒடுக்குபவர்களால் கொல்லப்பட்ட தங்களுடைய பல அன்பான தோழர்களை உயிர்த்தெழுதலில் மறுபடியும் வரவேற்பதற்கு காத்திருக்கவேண்டியதிருந்தாலும், இப்போது அவர்கள் விடுதலையில் முன்னேற முடிகிறது. மொஸாம்பிக்கில் அக்டோபர் 4, 1992-ல் ஒரு சமாதான உடன்படிக்கை அமலானது. கடந்த 16 ஆண்டுகள் நடந்த பாழாக்கின போரின் காரணமாக முன்பு போக முடியாத பிராந்தியங்களெல்லாம் இப்போது சென்றடையப்படுகின்றன. கரியோகோ பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக அமைப்போடு கொண்டிருந்த எல்லா தொடர்பையும் இழந்திருந்த 375 சகோதர சகோதரிகளோடு தொடர்பு மறுபடியும் பெறப்பட்டது. விசேஷித்த ஒரு நாள் அசெம்பிளி ஒன்று மாவட்டத்தின் தலைநகரமாகிய மிலன்ஜ்ஜில் நடத்தப்பட்டது; இது முன்பு சித்திரவதை முகாமிருந்த இடமாகவும் யெகோவாவின் சாட்சிகளுக்கு “மறுகல்வி” மையமாகவும் அறியப்பட்டிருந்தது. இதில் மலாவியிலிருந்து வந்த அகதிகள் பெரும்பாலும் இருந்தனர். ஆச்சரியத்தில் ஆழ்த்திய 2,915 பேர் மொத்தத்தில் ஆஜராயிருந்தனர், இதில் யெகோவாவின் சாட்சிகளை வரவேற்ற நகர நிர்வாகியும் உட்பட்டிருந்தார். எனவே, முன்னாள் “மறுகல்வி” மையம், தெய்வீக போதனைக்கான ஒரு மையமாக அந்த நாளில் மாறியது.
ஒரு மிஷனரி எழுதுகிறார்: “டேட்ட மாநிலத்தில் தங்களை அகதிகளின் முகாம்களில் கண்ட நம்முடைய சகோதரர்களைப் பற்றி, UNHCR-ன் [United Nations High Commissioner for Refugees (ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர்)] பிரதிநிதியால் ஓர் அக்கறையைத் தூண்டும் கருத்தறிவிப்பு செய்யப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் மற்ற தொகுதிகளிலிருந்து வேறுபட்டு, அவர்களுக்கென்று தனிப்பட்ட முகாம்களை அமைத்திருந்தனர். அவர் சொன்னார், ‘அவர்களுடைய முகாம் மட்டுமே நேர்த்தியாக நடத்தப்பட்டுவந்தது,’ தொடர்ந்து சொன்னார், ‘யெகோவாவின் சாட்சிகள் சுத்தமானவர்கள், ஒழுங்கமைக்கப்பட்டவர்கள், மேலும் போதிக்கப்பட்டவர்கள்.’ பின்பு நானும்கூட புதர்களினூடே பார்க்கும்படி அவர் என்னை விமானத்தில் எடுத்துச்சென்றார். வானத்திலிருந்து இரண்டு முகாம்களை விமானி சுட்டிக்காட்டினார். ஒன்று, எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் மிக அருகருகில் கட்டப்பட்டு, அலங்கோலமாகவும், அழுக்காகவும் இருந்த களிமண்வீடுகள். மற்றொன்று, நன்றாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தது; வீடுகள் சாலைகளால் வரிசைகளாகப் பிரிக்கப்பட்டும் இருந்தன. வீடுகள் நேர்த்தியான தோற்றத்தையும் கூட்டப்பட்டு சுத்தம்செய்யப்பட்ட முற்றங்களையும் கொண்டிருந்தன. சில, வீடுகளில் தயாரிக்கப்பட்ட வர்ணப்பூச்சுகளாலும்கூட வர்ணம் பூசப்பட்டிருந்தன. ‘இதில் எது உங்களுடையது என்பதை ஊகிக்க முடிகிறதா?’ என்று விமானி சொன்னார். இந்த முகாமிலிருந்த சகோதரர்களைச் சந்திப்பது எனக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்தச் சாட்சிகளின் கிராமத்தில், இப்போது எட்டுச் சபைகள் இருக்கின்றன.”
“கழுகு தேசத்தில்”
இல்லை, இது கழுகைச் சின்னமாகக் கொண்ட ஐ.மா. அல்ல! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் ஐரோப்பிய தேசம் அல்பேனியா இருக்கிறது; அரசாங்க மொழியில் அதன் பெயர் ஷ்குயிபரீயா, இதன் அர்த்தம் “கழுகு தேசம்.” இந்தத் தேசத்தில் யெகோவாவின் சாட்சிகளின்மீது இருந்த கொடூரமான 50 வருட தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருகிற சகோதரர்களோடு வணக்க சுதந்திரத்தை அனுபவிப்பதில் அவர்கள் ஐக்கியப்பட முடிகிறது. அவர்கள் உண்மையிலேயே “வாய்ப்பான காலத்தை வாங்குகிறார்கள்.” (எபேசியர் 5:16, NW) அல்பேனியாவின் சரித்திரத்தில் முதல் அசெம்பிளி, ஒரு நாள் அசெம்பிளி மார்ச் 21, ஞாயிற்றுக்கிழமை, தலைநகரமாகிய டிரானாவில் ஒரு நேஷனல் தியேட்டரில் நடத்தப்பட்டது. சனிக்கிழமை பிற்பகல், சாட்சிகளடங்கிய 75 விருப்பார்வ ஊழியர்கள் தொகுதி ஒன்று உருக்குலைந்த நிலையிலிருந்த கூட்டம் நடக்கும் இடத்தை, பிரகாசமான, சுத்தமான அசெம்பிளி மன்றமாக மாற்றியிருந்தது. மன்ற இயக்குநர் குழு மலைத்துப் போய்விட்டது. 75 விருப்பார்வ ஊழியர்களில் ஏறக்குறைய 20 பேர் மட்டுமே முழுக்காட்டுதல் எடுத்தவர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
தட்பவெப்பநிலையும் பொருத்தமாக இருந்தது. வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்தபோது, வரவேற்பு—பெரும்பாலும் சைகைகளினாலும் கட்டித்தழுவுதலினாலும்—செய்யப்பட்டதானது அந்த விசேஷித்த அசெம்பிளி தினத்தை அதிக விசேஷித்ததாக ஆக்கியது. உள்ளங்கைகளை வானத்தைநோக்கி விரித்தவண்ணமாக, சகோதரர் நாஷோ டோரீ ஆரம்ப ஜெபத்தைச் செய்தார். அவர் 1930-ல் முழுக்காட்டப்பட்டார், இப்போது அவர் சட்டப்படி ஒரு குருடர். நிகழ்ச்சிநிரல் அல்பேனிய மொழியில் நடத்தப்பட்டது. மிகுதியான பகுதி வெளிநாட்டைச் சேர்ந்த விசேஷித்த பயனியர்களால் நடத்தப்பட்டது. விஜயம்செய்ய வந்திருந்த கிரேக்க சகோதரர்கள் உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் அன்புடன் வடிவமைத்திருந்த ஒரு குளத்தை நோக்கி 41 புதிய சகோதரர்களும் சகோதரிகளும் நடந்துபோனபோது, அசெம்பிளிக்காக அல்பேனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த ஆறு பாடல்களில் ஒன்றாகிய “கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல்” பாடலை ஆஜராயிருந்த 585 பேர் பாடினர். என்னே ஒரு மாற்றம்! முன்பெல்லாம், ஒரு பைபிளை வைத்திருந்தால், அடிமைத்தன முகாம்களுக்கு அனுப்பப்படுவதைக் குறிக்கும். இரண்டு அல்லது மூன்று நபர்களடங்கிய தொகுதிகளாகக் கூட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
அசெம்பிளிக்கு அடுத்த நாள், அரங்கத்தின் இயக்குநரிடமிருந்து உவாட்ச் டவர் அலுவலகம் ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்றது. பொதுவாக அவர் அரங்கத்தைப் பயன்படுத்துபவர்களின்மீது அதிக அக்கறை காண்பிப்பதில்லை. அது உதவி இயக்குநரின் வேலையாக இருந்தது. ஆனால் அவர் சொன்னார்: “உங்களுக்கு நன்றி என்று சொல்லத்தானே நான் உங்களுக்கு ஃபோன் செய்தேன். இந்த இடத்தை இவ்வளவு சுத்தமாக நான் கண்டதேயில்லை. நான் அதை விளக்கவேண்டுமென்றால், நேற்று வானத்திலிருந்து ஒரு தென்றல் எங்கள் அரங்கத்தின்மீது வந்திறங்கியது என்று நான் சொல்வேன். நீங்கள் எங்களுடைய மன்ற வசதிகளைப் பயன்படுத்த எப்பொழுது விரும்பினாலும், தயவுசெய்து திரும்பிவாருங்கள். உங்களுக்கே நாங்கள் முதலிடம் தருவோம். உண்மையில் சொல்லப்போனால், மூன்று மாதத்திற்கு ஒருமுறை உங்களை எந்தவித வாடகையும் இல்லாமல் வந்துபோகும்படி செய்யவேண்டும்.”
சாட்சிகள் உற்சாகத்தோடும் நன்றியுணர்வோடும் தங்கள் நகரங்களுக்குத் திரும்பிச்சென்று, இயேசுவின் மரண நினைவுநாளுக்காகத் தயாராக ஆரம்பித்தனர். வெறும் 15 நாள்கள் பின்பே, செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 6, முதல் வெளிப்படையான நினைவுநாள் ஆசரிப்பு ஏழு இடங்களில் நடத்தப்பட்டது.
பராட் நகரத்தில் கூட்டத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 170-க்கு அதிகரித்திருக்கிறது, உள்ளூர் பாதிரி கடுகடுவென்று இருக்கிறார். பராட்டிலிருந்த ராஜ்ய பிரஸ்தாபிகள் 33 பேரில், 21 பேர் அசெம்பிளியில் முழுக்காட்டுதல் எடுத்திருந்தனர். நினைவுநாள் ஆசரிப்புக்கு 472 பேர் ஆஜராயிருந்ததாக பராட் அறிக்கை செய்தது. மற்ற இடங்களிலும் நினைவுநாள் ஆசரிப்புக்கு ஆஜரானவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் விசேஷித்த பயனியர்களின் நல்ல வழிநடத்துதலின் பயனாக குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
அல்பேனியாவின் கத்தோலிக்கர் அதிகமிருக்கும் நகரத்தில் கத்தோலிக்க சர்ச் இருக்கிற இடமாகிய ஷ்கோடரில், மாதாந்திர செய்தித்தாள் ஒன்றை சர்ச் அச்சடிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு வெளியீடும் “யெகோவாவின் சாட்சிகளைத் தவிர்ப்பது எப்படி?” என்ற பொருளைக் கலந்தாராய்ந்திருக்கிறது. கடைசி வெளியீடு சொன்னது: “யெகோவாவின் சாட்சிகள் ஷ்கோடரை ஆக்கிரமித்துவிட்டனர்”! இரண்டு சாட்சிகள் அடங்கிய அந்தப் பெரிய படை, 74 நல்நடத்தைக் கொண்ட, விளையாட்டு மனப்பான்மையற்ற நபர்களை நினைவுநாள் ஆசரிப்பிற்காகக் கூட்டிச்சேர்த்தது. நினைவுநாள் ஆசரிப்பு பேச்சைக் கேட்டபின், 15 குடும்பங்கள் பைபிள் படிப்புகளுக்காகக் கேட்டன. டுரஸ் என்ற மற்றொரு நகரில் நான்கு சாட்சிகள் அடங்கிய ஒரு படை இருக்கிறது. அங்கு ஆஜரானவர்களின் எண்ணிக்கை மலைக்கவைக்கும் 79.
சாட்சிகளைக் கல் எறிந்து துரத்துவோம் என்று மிரட்டின கத்தோலிக்க இளைஞரின் எதிர்ப்பினால், கால்மீட்டி ஈ ஃபோஜெல் என்ற மலைக்கிராமத்தில் நடக்கவேண்டிய நினைவு ஆசரிப்பு கூட்டம், உள்ளூர் சகோதரரின் வீடு ஒன்றிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. அங்கு 22 பேர் அமைதலாக ஆஜராயிருந்தனர். அந்தத் தொகுதியில் ஐந்து பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள், அவர்களில் மூவர் டிரானாவில் நடந்த அசெம்பிளியில்தான் முழுக்காட்டப்பட்டனர்.
வ்லோரில் இரண்டு இளம் ஆட்கள் தி உவாட்ச்டவர் பிரதியைப் பெற்று, படித்து, சங்கத்திற்கு இவ்வாறு எழுதினர்: “தி உவாட்ச்டவர் இதழிலிருந்து சத்தியத்தை நாங்கள் கற்றுக்கொண்டதால், யெகோவாவின் சாட்சிகள் என்று எங்களை நாங்களே இப்பொழுது அழைத்துக்கொள்கிறோம். தயவுசெய்து உதவிக்கு ஏற்பாடுசெய்யுங்கள்.” இரண்டு விசேஷித்த பயனியர்கள் அங்கு நியமிக்கப்பட்டனர், இந்த இளம் ஆட்களில் ஒருவர் விரைவில் ஒரு பிரஸ்தாபியாகத் தகுதிபெற்றார். அவர் வ்லோரில் நினைவுநாள் ஆசரிப்புக்கு ஆஜராயிருந்த 64 பேர் மத்தியில் இருப்பதில் சந்தோஷமடைந்தார்.
ஐக்கிய மாகாணங்களில் சத்தியத்தைக் கற்ற அல்பேனிய சகோதரர் 1950-களில் தன்னுடைய சொந்த ஊராகிய கிரக்காஸ்டெருக்குத் திரும்பி வந்து, அங்குத் தன்னுடைய மரணம்வரைக்கும் தன்னால் இயன்றவரை சேவைசெய்தார். அவருடைய மகனின் இருதயத்தில் சத்தியத்தின் விதைகளை விதைத்தார். தடையுத்தரவு நீக்கப்பட்டபோது, இந்த மகன் உவாட்ச் டவர் சொஸையிட்டியிடம் உதவிக்காகக் கேட்டார். இதற்கருகில் வடக்குப் புறமுள்ள கிராமத்தில் வாழும் மற்றொரு அக்கறை காண்பிப்பவரும் உதவிக்காக எழுதியிருந்தார். எனவே நான்கு விசேஷித்த பயனியர்கள் அங்கு அனுப்பப்பட்டார்கள். நினைவுநாள் ஆசரிப்புக்குப் பின் புதன்கிழமை காலை, அவர்களில் ஒருவர் சொஸையிட்டியின் டிரானா அலுவலகத்திற்கு இவ்வாறு ஃபோன் செய்தார்: “யெகோவாவின் ஆவி எவ்வளவு காரியங்களைச் சாதித்திருக்கிறது என்பதை நான் சொல்லாமல் இருக்கமுடியாது. நாங்கள் அதிக சந்தோஷமாய் இருக்கிறோம். நினைவுநாள் ஆசரிப்பு வெற்றிகரமாய் முடிந்தது.” அவர்களுடைய ஏழு ராஜ்ய பிரஸ்தாபிகள் உட்பட, ஆஜராயிருந்தவர்களின் எண்ணிக்கை, 106.
நினைவுநாள் ஆசரிப்புக்கு வந்திருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை என்ன? ராஜ்ய பிரஸ்தாபிகள் வெறும் 30 பேராக இருந்தபோது, 1992-ல், வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 325. 1993-ல், 131 பிரஸ்தாபிகள் வந்திருந்தவர்களின் எண்ணிக்கையினராக 1,318 பேரைக் கூட்டிச்சேர்த்திருந்தனர். இரண்டு ஆண்டுகளிலும், ஆஜராயிருந்தவர்களின் எண்ணிக்கை, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட பத்து மடங்கு அதிகமாயிருந்துவந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு குறுகிய காலத்தில் ‘சின்னவன் ஆயிரமாவதை’ காண்பது எவ்வளவு ஊக்கமூட்டுவதாக இருக்கிறது!—ஏசாயா 60:22.
“உன் கூடாரக் கயிறுகளை நீளமாக்கு”
யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை பூலோகத்தின் எல்லா மூலைகளிலும் விரிவடைவதால், அழைப்பு இவ்வாறு கொடுக்கப்படுகிறது: “உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் [மேன்மையான வாசஸ்தலங்களின், NW] திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; [உன் கூடாரக் கயிறுகளை நீளமாக்கு, NW]; உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்.” (ஏசாயா 54:2, 3) கடவுளுடைய ‘மேன்மையான வாசஸ்தலத்தில்’ இந்தப் பெருகுதல்—அவருடைய வணக்கத்தார்களின் உலகளாவிய சபையில் காணப்படுகிறது—கிழக்கு ஐரோப்பாவில் தெள்ளத்தெளிவாக இருக்கிறது, விசேஷமாக முன்னாள் சோவியத் யூனியனின் தேசங்களில் அவ்வாறு இருக்கிறது. அடக்குமுறையின் பல பத்தாண்டுகளில் யெகோவா தம்முடைய ஊழியர்களைப் பாதுகாத்தப் பின்பு, அமைப்பை விரிவுபடுத்தவும் பலப்படுத்தவும் தம்முடைய சாட்சிகளுக்கு தேவைப்படும் ஆற்றல்மிக்க சக்தியை இப்போது கொடுத்துவருகிறார்.
ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவில் லோகோமாட்டிஃப் விளையாட்டு ஸ்டேடியத்தில் ஜூலை 22-25-ல் 23,743 பேர் என்ற உச்சநிலை எண்ணிக்கையில் கடந்த ஆண்டின் திரும்புகட்டமான “தெய்வீக போதனை” தொடர்வரிசை சர்வதேச மாநாட்டிற்கு வந்திருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயும்கூட இது சாத்தியம் என்று யார் நினைத்திருக்கக்கூடும்? ஆனால் அவர்கள் அங்கு வந்திருந்தனர்! ஜப்பானிலிருந்தும் கொரியாவிலிருந்தும் 1,000-க்கு மேற்பட்டோர், ஐக்கிய மாகாணங்களிலிருந்தும் கனடாவிலிருந்தும் கிட்டத்தட்ட 4,000 பேரும், மேலும் தென் பசிபிக், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மற்ற பகுதிகளிலிருந்தும் மற்ற ஆயிரக்கணக்கானோர் 30-க்கு மேற்பட்ட தேசங்களிலிருந்தும் வந்திருந்தனர்—உண்மையில் கிழக்கும் மேற்கும் சந்தித்தன. இவர்களெல்லாருக்கும் 15,000-க்கு மேற்பட்ட தங்களுடைய ரஷ்ய சகோதர சகோதரிகளோடு சுதந்தரமாக கதம்பமாதல் எவ்வளவு உற்சாகமளிப்பதாய் இருந்தது! சந்தோஷம் பொங்கிவடிந்தது.
வியப்பூட்டும் மொத்த எண்ணிக்கையான 1,489 புதிய சாட்சிகள் முழுக்காட்டப்பட்டனர். முழுக்காட்டுதல், தி நியூ யார்க் டைம்ஸ்-ன் முன் பக்கத்திலுள்ள அருமையான படம் உட்பட, உலகமெங்கும் உள்ள தகவல் தொடர்பு ஏதுக்கள்மூலம் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டது. முழுக்காட்டுதல் நடந்தபோது இடிழுழக்கம்போன்ற கை தட்டுதல் இருந்தபோதிலும், பேச்சாளர் மாநாட்டை இவ்வளவு சிறப்பாக நடத்த உதவிய 4,752 விருப்பார்வ ஊழியர்களுக்கும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றிகூறினபின்பு, “எல்லாவற்றிற்கும் மேலாக நாம் யெகோவாவிற்கு நன்றிசெலுத்துகிறோம்!” என்று அவர் சொன்னபோது கை தட்டுதல் அதையும்விட மிஞ்சிவிட்டது. ஆம், யெகோவாவின் ஆவி ஆர்த்தடாக்ஸ் மதவெறியர்களின் கடுமையான எதிர்ப்பை அடக்கிவைத்திருந்து, மாநாட்டை ஒரு கிளர்ச்சியூட்டும் உண்மையாக இருக்கச் செய்த அடிப்படை ஊக்கத்தைக் கொடுத்திருந்தது.
எனினும் இன்னும் அநேகர் ஆகஸ்ட் 5-8-ல் உக்ரேனிய நகரமாகிய கீவ்வில் கூடிவரவேண்டியதிருந்தது. மீண்டும், மனமுவந்து முன்வந்த விருப்பார்வ ஊழியர்கள் முற்றிலுமாக அரங்கத்தைப் புதுப்பித்தனர். இந்தப் பிரமாண்டமான ராஜ்ய மன்றம் உச்சநிலை எண்ணிக்கையாக 64,714 பேருக்கு இடமளித்தது. மறுபடியுமாக, கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் மற்றும் உலகமெங்கும் உள்ள எல்லா இடங்களிலிருந்தும் சாட்சிகள் வந்தனர். முக்கியமான பேச்சுகள் 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. கூட்டங்கூட்டமாக ஒன்றுபட்டு வந்திருந்த ஏறக்குறைய 53,000 பிரதிநிதிகள் ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் சந்திக்கப்பட்டு, அவர்களுடைய தங்கும் இடங்களாகிய விடுதிகள், பள்ளிகள், மற்றும் தனிப்பட்டவர்களின் வீடுகள், மேலும் படகுகள் போன்ற இடங்களுக்கும் வழிநடத்தப்பட்டார்கள். இதெல்லாம் நயமான பயன்மிக்க வழிநடத்துதலினால் மிகக் குறைவான செலவில் செய்யப்பட்டது. அது நகரின் போலீஸ்காரர்களிடமிருந்து வியப்புரைகளையும் புகழுரைகளையும் வெளிப்படுத்தச் செய்தது.
வியக்கவைத்த மாநாட்டு நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் முழுக்காட்டுதல்; இது முழு இரண்டரை மணிநேரத்தையும் எடுத்தது. மொத்த எண்ணிக்கையாக 7,402 புதிய சகோதர சகோதரிகள் யெகோவாவுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினர். அந்தச் சமயத்தில் கைதட்டுதல் சத்தம் மிகப் பரந்த அரங்கம் முழுவதும் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. இது முன்பு பதிவான முழுக்காட்டுதலின் உச்சநிலையாகிய 7,136-ஐவிட அதிகமாக இருந்தது. அப்போது 1958-ல் நியூ யார்க் நகரத்தில் 2,53,922 ஆட்கள் மாநாட்டிற்கு வந்திருந்தனர்.
இந்த நியாயத்தீர்ப்புக் காலம் அதன் முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும், ‘பூமியின் கடைசிபரியந்தமும்கூட’ செம்மறியாடுகளைப் போன்ற மக்கள் மனித சரித்திரத்திலேயே காணப்படாதவகையில் ஐக்கியமாய் கூட்டிச்சேர்க்கப்படுகின்றனர். உண்மையில், யெகோவாவின் பேரரசாட்சியை சரியென நிரூபிப்பதற்காகச் செய்யப்படும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கும் இயேசுவின் விலைமதியா கிரய பலியின்மீது தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்தை அறிவிப்பதில் “சகல தேசத்தாரிடமிருந்தும், கோத்திரத்தாரிடமிருந்தும், மக்களிடமிருந்தும், மொழிக்காரரிடமிருந்தும் வந்த . . . திரள் கூட்டத்தினர்” ஆவிக்குரிய இஸ்ரவேலரோடு சேர்ந்துகொள்கின்றனர்.—அப்போஸ்தலர் 1:8; வெளிப்படுத்துல் 7:4, 9, 10, NW.
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
மாஸ்கோவிலும் கீவ்விலும் கிழக்கு மேற்கைச் சந்திக்கிறது