போர்கள் தவிர்க்க முடியாதவையா?
செய்திகளில் போர் ஒரு சோர்வடையச் செய்யும் அம்சமாக இருக்கிறது. மிகக் கொடூரமான அந்த அறிவிப்புகள் சந்தேகமின்றி உங்களை வருத்தப்படுத்துகின்றன. ஆனால் பல பூசல்களுக்கு ஏன் போராயுதங்கள் நடுநின்று தீர்வு காண்பவையாக இருக்க வேண்டும் என்றும் அவை உங்களை ஒருவேளை யோசிக்கச் செய்யலாம். மனிதர் சமாதானத்துடன் வாழ ஒருபோதும் கற்றுக்கொள்ள மாட்டார்களா?
போர் என்னும் கொள்ளைநோய்க்கான பரிகாரம் எய்ட்ஸ்-க்கு ஒரு நிவாரணத்தைவிட மிகச் சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது. இந்த 20-ம் நூற்றாண்டில், முழு தேசங்கள் போருக்கு ஆயத்தமாக்கப்பட்டிருக்கின்றன; இலட்சக்கணக்கான ஆண்கள் யுத்தத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்; நூற்றுக்கணக்கான நகரங்கள் தகர்த்தழிக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் படுகொலைக்கான எந்த முடிவும் தென்படவில்லை. ஒரு லாபகரமான போராயுத வாணிகம், உலகத்தின் படைகள்—மற்றும் கொரில்லாக்கள்—பயங்கரமாகச் செயல்படுவதில் தொடரும் என்று உறுதிப்படுத்துகிறது.
போர் கருவிகள் அதிக பயங்கரமானவையாக ஆனதும், காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கைகள் உயர்ந்துகொண்டுபோயின. முதல் உலகப் போரில் போரிட்ட 6 கோடியே 50 லட்ச படைவீரர்களில் பாதிக்கும் மேலானோர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். சுமார் 30 வருடங்களுக்குப்பின், இரண்டே அணுகுண்டுகள் 1,50,000-ற்கு அதிகமான ஜப்பானிய பொது மக்களின் உயிர்களை அழித்துப்போட்டன. இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு சச்சரவுகள் பெரும்பாலும் அந்தந்த இட எல்லைகளுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. இருந்தாலும், அவை விசேஷமாகப் பொது மக்களுக்குச் சாவுக்கேதுவானவையாக இருக்கின்றன; அவர்களே காயமடையும், இறக்கும் ஆட்களில் 80 சதவீதத்தை உருவாக்குகின்றனர்.
எதிர்பார்ப்புக்கு மாறாக, தேசங்களுக்கு மத்தியிலுள்ள பூசல்களைத் தடுப்பதற்கு ஒரு வழியாக, போரை முறியடிக்க ஒப்பிடமுடியாத முயற்சிகளைக் கண்டிருக்கும் ஒரு யுகத்தில் இந்த மொத்த படுகொலை சம்பவித்திருக்கிறது. சமீபத்தில் பனிப் போரின் முடிவோடு, ஒரு புதிய, சமாதான உலக ஒழுங்குமுறை வெளிப்படும் என நம்பிக்கைகள் பலமாக இருந்தன. எனினும், உலகளாவிய சமாதானம் எப்போதும்போல் ஏமாற்றமாகவே தொடர்ந்திருக்கிறது. ஏன்?
ஓர் உயிரியல்சார்ந்த தேவையா?
போர்கள் தவிர்க்க முடியாதவை—தேவையானவைகூட—ஏனென்றால் அவை வெறுமனே தொடர்ந்து வாழ்ந்திருப்பதற்கான ஒரு பரிணாம போராட்டத்தின் பாகம் என்று சில சரித்திராசிரியர்கள் மற்றும் மனித இன ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். அப்படிப்பட்ட சிந்தனையால் செல்வாக்குச் செலுத்தப்பட்டு, “உயிரியல், சமூக மற்றும் ஒழுக்க முன்னேற்றத்திற்காக” போர் செய்யப்படுகிறது என்று இராணுவ ஆராய்ச்சியாளர் ஃபிரீட்ரிக் வான் பெர்ன்ஹார்டி 1914-ல் வாதாடினார். வல்லவர்களை விட்டுவிட்டு, பலவீனமான நபர்களை அல்லது தேசங்களை நீக்கிப்போடுவதற்கான ஒரு வழியே போர் என்பது அந்தக் கோட்பாடு.
போரினால் விதவைகள் மற்றும் அனாதைகளான லட்சக்கணக்கானோரை அந்த வாதம் நிச்சயமாகவே ஆறுதல் செய்யாது. ஒழுக்கரீதியில் பொருந்தாததாக இருப்பது மட்டுமல்லாமல், இந்த எண்ணம் நவீன போர் நடவடிக்கைகளின் கொடுமையான உண்மைகளைப் புறக்கணிக்கிறது. இயந்திரத் துப்பாக்கி வல்லவர்களை மதித்துக் காப்பதில்லை; வெடிகுண்டு பலமானவர்களையும் பலவீனமானவர்களுடன் சேர்த்து நிர்மூலமாக்குகிறது.
முதல் உலகப் போரின் துயரமான பாடங்களை அசட்டைசெய்துகொண்டு, இராணுவ முற்றுகையின் மூலம் ஒரு சிறந்த இனத்தைப் படிப்படியாக உருவாக்குவதாக கனவு கண்டார் அடால்ஃப் ஹிட்லர். மைன் காம்ஃப் என்ற தன் புத்தகத்தில் அவர் எழுதினார்: “மனிதவர்க்கம் அதன் என்றென்றுமான போராட்டத்தில் பெரிதும் வளர்ந்திருக்கிறது, நித்திய சமாதானத்தில்தான் அது அழிந்துபோகிறது. . . . பலமானவர்கள் ஆதிக்கம் செலுத்தவேண்டுமே தவிர பலவீனமானவர்களுடன் ஒன்றிணைந்து செல்லக் கூடாது.” என்றாலும், மனிதவர்க்கத்தை மேம்படுத்துவதற்கு மாறாக, ஹிட்லர் லட்சக்கணக்கான உயிர்களைப் பலியாக்கி, ஒரு முழு கண்டத்தைப் பாழாக்கிவிட்டார்.
எனினும், போர் ஓர் உயிரியல் தேவை இல்லையென்றால், மனிதவர்க்கத்தைச் சுய அழிவை நோக்கி உந்துவிப்பது என்ன? என்ன சக்திகள் இந்த ‘காட்டுமிராண்டிகளுடைய தொழிலின்’ உள்ளாகத் தேசங்களை அச்சுறுத்தி அடக்குகின்றன?a பின்வரும் பட்டியல், சமாதானத்தை உருவாக்குவோரின் மிகச் சிறந்த முயற்சிகளைத் தடைசெய்கிற சில அடிப்படையான காரணங்களாகும்.
போரின் காரணங்கள்
தேசப்பற்று. போர் நடவடிக்கைகளை முன்னேற்றுவிப்பதற்கு அரசியல்வாதிகளாலும் தளபதிகளாலும் அடிக்கடி தூண்டப்பட்ட மிக வல்லமை வாய்ந்த சக்திகளில் ஒன்று தேசப்பற்றாகும். அநேக போர்கள் “தேசிய அக்கறைகளை” பாதுகாப்பதற்காக அல்லது “தேசிய மதிப்பை” தற்காப்பதற்காகத் தொடுக்கப்பட்டிருக்கின்றன. சரியோ தவறோ என்னுடைய நாடு என்ற மனப்பான்மை நிலைத்திருக்கையில், அப்பட்டமான சண்டைகூட, பகைவர் தாக்குமுன் அவரது ஆற்றலைக் குறைப்பதற்கான தாக்குதல் என்பதாக நியாயவிளக்கம் செய்யப்பட முடியும்.
இனவேறுபாட்டு பகைமை. அநேக உட்பிராந்திய போர்கள், இனங்கள், மரபு குழுக்கள் மற்றும் இனத்தொகுதிகளுக்கு இடையிலான நெடுங்கால பகையால் தொடங்கப்பட்டுத் தீவிரமாக்கப்பட்டவையே ஆகும். முன்னாள் யுகோஸ்லாவியா, லைபீரியா, மற்றும் சோமாலியாவின் துயரகரமான போர்கள் சமீபத்திய உதாரணங்கள்.
பொருளாதார மற்றும் இராணுவ போட்டி. முதல் உலகப் போருக்குமுன் வெளிப்படையாகச் சமாதானமாய் தோன்றிய நாட்களில், ஐரோப்பிய வல்லரசுகள் உண்மையில் பெரிய படைகளைக் கட்டியமைத்தனர். ஜெர்மனியும் கிரேட் பிரிட்டனும் ஒரு போர்க்கப்பல் கட்டும் போட்டியில் ஈடுபட்டிருந்தன. கடைசியில் படுகொலையில் ஈடுபட்ட ஒவ்வொரு பெரிய தேசமும், ஒரு போர் தன் வல்லமையை அதிகரித்து, எதிர்பாராத பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும் என்று நம்பியதால், நிலைமைகள் ஒரு சண்டைக்குத் தயாராகவே இருந்தன.
மத சம்பந்தமான சண்டைகள். குறிப்பாக இன பிரிவுகளால் பலப்படுத்தப்பட்டிருக்கையில், மத வேறுபாடுகள் ஒரு வெடித்தெழும்பும் கலவையை உண்டுபண்ணலாம். லெபனான் மற்றும் வட அயர்லாந்தின் சண்டைகள், மேலும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலிருந்த போர்களும், மத பகையில் வேரூன்றப்பட்டிருக்கின்றன.
போரை நாடும் ஒரு காணக்கூடாதவன். பிசாசாகிய சாத்தானான “இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்” முன்னொருபோதும் இருந்ததைவிட இப்போது அதிக சுறுசுறுப்பாக இருக்கிறான் என்று பைபிள் வெளிப்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 4:4) அதிக கோபம் நிரம்பியவனாயும், “கொஞ்சகால”மாத்திரமே கொண்டிருப்பதாலும், அவன் போர்கள் உட்பட பூமியின் அவல நிலையை மேலும் கெடுக்கும் நிலைமைகளைத் தூண்டுவித்துவருகிறான்.—வெளிப்படுத்துதல் 12:12.
போரின் இந்த அடிப்படை காரணங்கள் துடைத்தழிப்பதற்கு எளிதானவை அல்ல. “இறந்தவர்கள் மட்டுமே போரின் முடிவைக் கண்டிருக்கின்றனர்” என்று 2,000-ற்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்னர் பிளேட்டோ சொன்னார். அவருடைய மங்கலான மதிப்பீடு, நாம் ஏற்கும்படி கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு கசப்பான உண்மையாக இருக்கிறதா? அல்லது ஒருநாள் போரில்லாத ஓர் உலகம் இருக்கும் என்று நம்புவதற்கு நாம் காரணத்தைக் கொண்டிருக்கிறோமா?
[அடிக்குறிப்புகள்]
a போரை “காட்டுமிராண்டிகளுடைய தொழில்” என்று விவரித்தவர் நெப்போலியன் ஆவார். அவருடைய வயதுவந்த வாழ்க்கையின் பெரும்பகுதியை இராணுவத்திலும், கிட்டத்தட்ட 20 வருடங்கள் உச்ச உயர் படை அதிகாரியாகவும் செலவிட்டிருந்ததால், அவர் யுத்தத்தின் காட்டுமிராண்டித்தனத்தை நேரடியாக அனுபவித்தார்.
[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]
Cover: John Singer Sargent’s painting Gassed (detail), Imperial War Museum, London
[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]
Instituto Municipal de Historia, Barcelona