ஆலோசனை கொடுக்கையில்
நீங்கள் மற்றவர்களை மதிக்கிறீர்களா?
மதிப்புடன் ஆலோசனை கொடுக்கப்படுவது எவ்வளவு நன்மையானதாக, எவ்வளவு பயனளிப்பதாக இருக்கிறது! “தயவான, கரிசனையுள்ள, அக்கறையுள்ள ஆலோசனை நல்ல உறவுகளை உருவாக்குகிறது,” என்று எட்வர்ட் சொல்கிறார். “ஆலோசகர் ஒரு விஷயத்தைக் குறித்ததில் உங்கள் பக்கத்தையும் கேட்க மனமுள்ளவராய் இருப்பதைக் காண்பிப்பதன்மூலம் உங்களுக்கு நன்மதிப்பையும் மரியாதையையும் காட்டுகிறார் என்று நீங்கள் உணரும்போது, அந்த ஆலோசனை ஏற்றுக்கொள்வதற்கு அதிக எளிதாக இருக்கிறது,” என்று உவாரென் வலியுறுத்துகிறார். “ஓர் ஆலோசகர் என்னை மரியாதையுடன் நடத்தும்போது, நான் அவரைத் தாராளமாக அணுகி அவரிடம் ஆலோசனை கேட்க முடிகிறது,” என்று நார்மன் குறிப்பிடுகிறார்.
மதிக்கப்படுவதற்கான மனிதனின் இயல்பான உரிமை
அனலான, சிநேகப்பான்மையான, அன்பான ஆலோசனை உண்மையில் வரவேற்கப்படுகிறது. நீங்கள் ஆலோசனை கொடுக்கப்பட விரும்பும் விதத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுப்பது பயனளிப்பதாய் இருக்கிறது. (மத்தேயு 7:12) ஒரு நல்ல ஆலோசகர், செவிகொடுத்துக் கேட்க நேரம் எடுத்துக்கொள்கிறார்; மேலும், ஆலோசனை கொடுக்கப்படுபவரைக் குறைகாண்பதற்கும் கண்டனம் செய்வதற்கும் பதிலாக, அவரை—அவருடைய சிந்தனையை, அவருடைய நிலைமையை, அவருடைய உணர்ச்சிகளை—புரிந்துகொள்ள முயலுவார்.—நீதிமொழிகள் 18:13.
கிறிஸ்தவ மூப்பர்கள் உட்பட இன்றைய ஆலோசகர்கள், ஆலோசனை கொடுக்கும்போது மற்றவர்களை மதிப்பதற்கு விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது. ஏன்? மற்றவர்களுடன் மதிப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் மனப்போக்கு சமுதாயத்தில் நிலவிவரும் எளிய காரணத்துக்காகவே. இது தொற்றக்கூடியதாய் இருக்கிறது. மதிப்புடன் நடத்தப்படுவதை யாரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ, அவர்கள் தொழில் வல்லுநர்களாக, மதத் தலைவர்களாக, அல்லது யாராக இருந்தாலும்சரி, பெரும்பாலும் அவர்களே அதைக் கொடுக்கத் தவறுகிறார்கள். உதாரணத்திற்கு, வேலைசெய்யுமிடத்தில் ஒரு வேலை நீக்கம் செய்யப்படுதல், வேலையில் அமர்த்தியவர் மற்றும் வேலை செய்பவர் ஆகிய இருவருக்குமே அதிர்ச்சியும் அழுத்தமும் தரக்கூடியதாய் இருக்கிறது. குறிப்பாக தாக்கப்படுபவர் மதிப்பற்ற விதத்தில் நடத்தப்பட்டால், அது தன்மதிப்பை இழக்கச் செய்வதாய் இருக்கிறது. இந்தச் சூழமைப்பில் இருக்கும் மேற்பார்வையாளர்கள், அந்தக் “கடினமான செய்தியை தெளிவாக, சுருக்கமாக, தொழில்ரீதியில் சொல்லி, அந்த நபரின் மதிப்பைப் பாதிக்காமல் வைத்துக்கொள்ளும்படி” அளிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ளவேண்டுமென தி வான்கூவர் சன் அறிக்கை செய்கிறது. ஆம், எல்லா மனிதர்களும் மதிப்புடன் நடத்தப்படுவதற்கு தகுதி உடையவர்கள்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அறிவிக்கிறது: “எல்லா மனிதர்களும் சுதந்திரமாகப் பிறந்திருக்கின்றனர்; மதிப்பிலும் உரிமைகளிலும் சமமாக இருக்கின்றனர். அவர்கள் பகுத்தறிவும் மனச்சாட்சியும் வழங்கப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் ஒருவருடன் ஒருவர் சகோதரத்துவ உணர்வுடன் செயல்படவேண்டும்.” மனிதனின் மதிப்பு தாக்குதலின்கீழ் இருப்பதால், ஐக்கிய நாடுகளின் சாசனமும் சர்வதேச மனித உரிமை அறிவிப்பின் முகப்புரையும் இந்தத் தன்மையை நல்ல காரணத்துடன் ஏற்கின்றன. அவை “அடிப்படை மனித உரிமைகளில், மனிதனின் மதிப்பு மற்றும் தகுதியில் விசுவாசத்தை” வலியுறுத்துகின்றன.
யெகோவா மனிதனை உள்ளார்ந்த மதிப்புடன் சிருஷ்டித்தார்
யெகோவா ஒரு மதிப்புள்ள கடவுளாக இருக்கிறார். அவருடைய ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தை, “மதிப்பும் மேன்மையும் அவருக்குமுன் இருக்கின்றன,” என்றும் “[அவருடைய] மதிப்பு வானங்களுக்கு மேலாக விவரிக்கப்படுகிறது,” என்றும் சரியாகவே குறிப்பிடுகிறது.—1 நாளாகமம் 16:27, NW; சங்கீதம் 8:1, NW.
ஒரு மதிப்புள்ள கடவுளாகவும் சர்வலோக பேரரசராகவும் இருப்பதால், பரலோகத்துக்குரிய மற்றும் பூமிக்குரிய தம்முடைய எல்லா சிருஷ்டிப்பின்மேலும் அவர் மதிப்பை அளிக்கிறார். அவருடைய மகிமைப்படுத்தப்பட்ட ஆட்சிபுரியும் குமாரனாகிய அரசர் கிறிஸ்து இயேசு, அவ்வாறு மதிக்கப்பட்டவர்களில் தலைசிறந்தவர். “மதிப்பையும் மேன்மையையும் அவர்மேல் வைத்தீர்,” என்று தாவீது தீர்க்கதரிசனமாக எழுதினார்.—சங்கீதம் 21:5, NW; தானியேல் 7:14.
கவலைக்குரியவிதத்தில், சரித்திரம் முழுவதிலும் இந்த அடிப்படை மனித உரிமை மிகவும் துர்ப்பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய செயல்கள்மூலமாக பிசாசாகிய சாத்தானாக மாறிய ஒரு வல்லமையான தூதன், கடவுளுடைய பேரரசாட்சியின் உரிமை, நீதி, மற்றும் தகுதியை சவாலிட்டான். அவ்வாறு செய்வதன்மூலம், அவருடைய ஆட்சிசெய்யும் உரிமையை சவாலிடுவதுடன், அவன் யெகோவாவுக்கு அவமரியாதை காண்பித்து, அவருடைய மதிப்புள்ள பெயரை அவமதித்தான். அவன் மட்டுக்கு மீறிய மதிப்பைத் தனக்குத்தானே எடுத்துக்கொண்டான். பிசாசைப்போலவே, பைபிள் காலங்களில் இருந்த நேபுகாத்நேச்சாரைப்போன்ற வல்லமைவாய்ந்த மனித ஆட்சியாளர்கள் தங்களுடைய ‘வல்லமை மற்றும் தங்களுடைய பெருமிதம்’ பற்றி பெருமைபாராட்டி இருக்கின்றனர். தங்களுக்குத் தாங்களே நியாயமற்ற மதிப்பை உரியதாக்குவதன்மூலம் யெகோவாவின் மதிப்பை அவர்கள் தாக்கியிருக்கின்றனர். (தானியேல் 4:30) மனிதவர்க்க உலகத்தின்மேல் சுமத்தப்பட்ட சாத்தானின் ஒடுக்கக்கூடிய ஆட்சி, மனிதனின் மதிப்பைத் தாக்கியும், தொடர்ந்து தாக்கிக்கொண்டும் இருக்கிறது.
எப்போதாவது உங்களுடைய மதிப்பு புண்படுத்தப்பட்டிருக்கிறதா? ஆலோசனை கொடுக்கப்பட்டபோது, அளவுக்குமீறி குற்ற உணர்வுள்ளவர்களாக, வெட்கப்படுத்தப்பட்டவர்களாக, அவமானம் செய்யப்பட்டவர்களாக, அல்லது தரக்குறைவானவர்களாக உணர வைக்கப்பட்டிருக்கிறீர்களா? “அக்கறை, பரிவு, மற்றும் மதிப்பு இருப்பதாக என்னால் உணர முடியவில்லை. நான் தகுதியற்றவராக உணர வைக்கப்பட்டேன்,” என்று ஆன்ட்ரீ வலியுறுத்துகிறார்; அவர் மேலுமாகச் சொல்கிறார்: “இது ஏமாற்றத்திற்கும் கவலைக்கும், மனச்சோர்வுக்கும்கூட வழிநடத்தியது.” “உங்களுடைய மிகச் சிறந்த அக்கறைகளைக் கருத்தில் கொண்டிராதவராக நீங்கள் உணரும் ஒருவரிடமிருந்து ஆலோசனையை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது,” என்று லாரா சொல்கிறாள்.
இந்தக் காரணத்திற்காக, கிறிஸ்தவ கண்காணிகள் தேவனுடைய மந்தையை மரியாதையுடனும் மதிப்புடனும் நடத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். (1 பேதுரு 5:2, 3) மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுப்பது தேவையானதும் பயனுள்ளதுமாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை எழும்பினால், எவ்வித தயக்கமுமின்றி, மற்றவர்களுடைய மதிப்பைத் தாக்கும் உலகப்பிரகாரமான மனிதர்களின் சிந்தனை மற்றும் நடத்தையிலிருந்து நீங்கள் உங்களை எப்படிப் பாதுகாக்க முடியும்? உடன் கிறிஸ்தவர்களுடைய மதிப்பையும் அத்துடன் உங்களுடையதையும் காத்துக்கொள்ள உங்களுக்கு எது உதவி செய்யும்?—நீதிமொழிகள் 27:6; கலாத்தியர் 6:1.
மதிப்பைக் காக்கும் நியமங்கள்
இந்தப் பொருளைக் குறித்து கடவுளுடைய வார்த்தை ஒன்றும் சொல்லாமலில்லை. ஒரு திறம்பட்ட ஆலோசகர், இந்த உலகத்தின் ஞானத்தைச் சார்ந்திருப்பதற்கு மாறாக, கடவுளுடைய வார்த்தையின் ஆலோசனையில் முழுமையான நம்பிக்கை வைப்பார். பரிசுத்த எழுத்துக்கள் மதிப்புமிக்க புத்திமதிகளைக் கொண்டிருக்கின்றன. அவை பின்பற்றப்படும்போது, ஆலோசகரையும் அறிவுரை கொடுக்கப்படுபவரையும் மதிப்புள்ளவர்களாக்குகின்றன. இவ்வாறு, கிறிஸ்தவ கண்காணியாகிய தீமோத்தேயுவுக்கு பவுலின் கட்டளை பின்வருமாறு இருந்தது: “முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு.” (1 தீமோத்தேயு 5:1, 2) இந்தத் தராதரங்களைப் பற்றிக்கொண்டிருப்பதன்மூலம் எவ்வளவு வருத்தங்கள், புண்பட்ட உணர்ச்சிகள், மனக்குழப்பங்கள் தவிர்க்கப்படலாம்!
மற்ற நபருக்கும், அவர் ஒரு மதிப்பான, அக்கறையுள்ள முறையில் நடத்தப்படவேண்டிய அவருடைய உரிமைக்கும் சரியான மரியாதையே வெற்றிகரமான ஆலோசனை கொடுத்தலுக்குத் திறவுகோல் என்பதைக் கவனியுங்கள். சரிப்படுத்துதல் தேவைப்படும் ஒருவர் ஏன் அந்த விதத்தில் சிந்திக்கிறார், செயல்படுகிறார் என்று கண்டுபிடிக்க விரும்பி, பயணக்கண்காணிகள் உட்பட கிறிஸ்தவ மூப்பர்கள் இந்தப் புத்திமதியைப் பின்பற்ற முயல வேண்டும். அவருடைய நோக்குநிலையை அவர்கள் கேட்க விரும்ப வேண்டும்; உதவி செய்யப்படுபவரை வெட்கப்படுத்துவதை, தரக்குறைவாக உணரவைப்பதை, அல்லது அவமானப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு எல்லா முயற்சியையும் எடுக்க வேண்டும்.
ஒரு மூப்பராக, நீங்கள் அவரில் அக்கறைகொள்கிறீர்கள் என்றும், அவருடைய பிரச்னைகளில் அவருக்கு உதவ விரும்புகிறீர்கள் என்றும் உங்கள் சகோதரர் அறியும்படிச் செய்யுங்கள். உங்களுடைய உடல் பரிசோதனைக்காக ஒரு நல்ல டாக்டரை அவருடைய அலுவலகத்தில் சந்திக்கச் செல்லும்போது அதையே அவர் செய்கிறார். ஒரு சிநேகப்பான்மையற்ற, உணர்ச்சியற்ற அறையில் உங்கள் உடைகளை நீக்கவேண்டும் என்ற எண்ணம்தானே உங்களை சங்கடமாகவும் தாழ்வாகவும் உணர வைக்கக்கூடும். உங்களுடைய தன்மதிப்பிற்கு உணர்வுள்ளவராய் இருந்து, உங்களுடைய நோயின் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான பரிசோதனையை அவர் செய்கையில், போர்த்திக்கொள்ள ஒரு போர்வையைக் கொடுத்து உங்களை மதிக்கும் ஒரு டாக்டரை நீங்கள் எவ்வளவு போற்றுவீர்கள்! அதேவிதமாக, அந்த நபருக்குச் சரியான மரியாதை காண்பிக்கும் ஒரு கிறிஸ்தவ ஆலோசகர் தயவும் உறுதியும் உள்ளவராய் இருக்கிறார்; இருப்பினும் ஆலோசனை பெறுபவரை மதிப்பால் உடுத்துவிக்கிறார். (வெளிப்படுத்துதல் 2:13, 14, 19, 20) எதிர்மாறாக, கடுமையான, சிநேகப்பான்மையற்ற, உணர்ச்சியற்ற ஆலோசனை, உங்களை வெட்கப்படுத்துவதாக, தரக்குறைவாக, உங்கள் மதிப்பு நீக்கப்பட்டதாக உணர வைக்கும் அடையாளப்பூர்வ உடை நீக்கலைப்போன்று இருக்கும்.
மதிப்புடன் ஆலோசனை கொடுப்பதற்கு, தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணிகள் விசேஷமாகக் கவனமுள்ளவர்களாய் இருக்கின்றனர். வயதானவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது, அவர்கள் தங்கள் மாம்சப்பிரகாரமான பெற்றோருக்குக் காண்பிக்கும் அதே அன்பைப் பிரதிபலிக்கின்றனர். அவர்கள் கரிசனையாக, சிநேகப்பான்மையாக, கனிவாக இருக்கின்றனர். அவ்வித மென்மையான உணர்ச்சி தேவைப்படுகிறது. ஆலோசனையைச் சரியாகக் கொடுப்பதற்கும் பெறுவதற்கும் சாதகமான ஒரு சூழலை அது உருவாக்குகிறது.
மூப்பர்களே, நடைமுறையான ஆலோசனை உயர்த்துவதாக, உற்சாகமளிப்பதாக, கட்டியெழுப்புவதாக, நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். எபேசியர் 4:29 குறிப்பிடுகிறது: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.”
கடுமையான வார்த்தைகளை, மொழி நடையை, அல்லது நியாயவாதத்தைப் பயன்படுத்துவதற்கு எவ்வித அவசியமும் இல்லை. மாறாக, மற்ற நபருக்கான மரியாதையும், அவருடைய தன்மானம் மற்றும் மதிப்பிற்குரிய உணர்ச்சிகளைக் காத்துக்கொள்வதற்கான விருப்பமும், காரியங்களை ஓர் உடன்பாடான, ஆக்கப்பூர்வமான முறையில் அளிக்க உங்களை உந்துவிக்கும். அவரை ஏமாற்றமடையவும் தகுதியற்றவராக உணரவும் செய்கிற கருத்துக்களை அழுத்திக் காண்பிப்பதற்கு மாறாக, எந்தக் குறிப்புகளையும், அவருடைய நல்ல அம்சங்களுக்கு அல்லது பண்புகளுக்கு நேர்மையான, உண்மையான பாராட்டுதலைக் கொடுக்கும் முன்னுரையுடன் அளியுங்கள். நீங்கள் ஒரு மூப்பராகச் சேவித்தால், உங்களுடைய ‘அதிகாரத்தை, தகர்ப்பதற்கு அல்ல, ஆனால் ஊன்றக் கட்டுகிறதற்கு’ பயன்படுத்துங்கள்.—2 கொரிந்தியர் 10:8.
ஆம், கிறிஸ்தவ கண்காணிகளிடமிருந்து வரும் எந்த ஆலோசனையின் பலனும், தேவையான உற்சாகத்தைக் கொடுப்பதற்காக, பிரயோஜனமானதை அளிப்பதற்காக இருக்கவேண்டும். அது உற்சாகமிழக்கச் செய்வதாய் அல்லது “பயமுறுத்து”வதாய் இருக்கக்கூடாது. (2 கொரிந்தியர் 10:9) ஒரு வினைமையான தவறைச் செய்த ஒருவருக்குக்கூட ஓரளவு தன்மரியாதையும் மதிப்பும் வழங்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆலோசனையானது அவரை மனந்திரும்புதலுக்குத் தூண்டக்கூடிய தயவான, இருந்தாலும் உறுதியான சிட்சையளிக்கும் வார்த்தைகளால் சமநிலைப்படுத்தப்பட்டதாய் இருக்கவேண்டும்.—சங்கீதம் 44:16; 1 கொரிந்தியர் 15:34.
குறிப்பிடத்தக்கவிதத்தில், இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டம் இந்த நியமங்களை உள்ளடக்கியது. அது ஆலோசனையையும் சரீரப்பிரகாரமான சிட்சையையும்கூட அனுமதித்தது; அதே நேரத்தில் ஓரளவு தனிப்பட்ட மதிப்பைக் கொண்டிருப்பதற்கான ஒரு தனி நபரின் உரிமையையும் காத்துக்கொண்டது. “குற்றத்திற்குத் தக்கதாய் . . . கணக்கின்படி” அடிகளால் அடிப்பது அனுமதிக்கப்பட்டது; ஆனால் இது மட்டுக்குமீறியதாய் இருக்க விடப்படவில்லை. தவறைச் செய்தவர் ‘உண்மையில் அவமதிக்கப்படாதபடி’ அடிகளின் எண்ணிக்கைக்கு ஒரு வரையறை வைக்கப்பட்டிருந்தது.—உபாகமம் 25:2, 3.
மனந்திரும்பக்கூடிய தவறுசெய்தவர்களின் உணர்ச்சிகளைக் குறித்து அக்கறையுள்ளவர்களாய் இருப்பது இயேசுவுக்குரிய தனிப்பண்பாகவும் இருந்தது. அவரைக் குறித்து, ஏசாயா தீர்க்கதரிசனம் சொன்னார்: “அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.”—ஏசாயா 42:3; மத்தேயு 12:17, 20; லூக்கா 7:37, 38, 44-50.
மலைப் பிரசங்கத்திலுள்ள இயேசுவின் வார்த்தைகள் ஒற்றுணர்வுக்கான தேவையை மேலுமாக அழுத்திக் காண்பிப்பவையாய் இருக்கின்றன: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) நல்ல உறவுகளை வளர்ப்பதற்கு இந்த நியமம் அவ்வளவு முக்கியமாக இருப்பதால், அது பொதுவாக பொன் விதி என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிறிஸ்தவ மூப்பராக, ஆலோசனை கொடுக்கும்போது மற்றவர்களை தயவுடனும் மதிப்புடனும் நடத்துவதற்கு அது எப்படி உங்களுக்கு உதவும்?
நீங்களும் தவறுகளைச் செய்கிறீர்கள் என்பதை மனதில் கொண்டிருங்கள். யாக்கோபு குறிப்பிட்டபடி, “எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.” (யாக்கோபு 3:2) மற்றவர்களுடைய குறைகளைப்பற்றி அவர்களிடம் பேசவேண்டிய தேவை ஏற்படும்போது, இதை நினைவில் கொள்வது, உங்களுடைய குறிப்புகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்லவும் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் உதவும். அவர்களுடைய மென்மையான உணர்ச்சிகளை அங்கீகரியுங்கள். இது மட்டுக்குமீறிய குறைகூறுதலை, சிறிய தவறுகளுக்கு அல்லது குற்றங்களுக்குக் கவனத்தை ஈர்ப்பதைத் தவிர்க்க உங்களுக்கு உதவிசெய்யும். இயேசு பின்வருமாறு சொன்னபோது இதை அழுத்திக்காட்டினார்: “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.”—மத்தேயு 7:1, 2.
மற்றவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்—பிசாசை எதிர்த்து நில்லுங்கள்
சாத்தானின் சூழ்ச்சிமுறைகள், உங்களைவிட்டு மதிப்பை அகற்றி, அவமான, தகுதியற்ற, நம்பிக்கை இழந்த உணர்ச்சிகளை உண்டாக்குவதற்காகத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. உண்மையுள்ள யோபுவில் எதிர்மறையான உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும்படி அவன் எப்படி ஒரு மனித ஏதுவைப் பயன்படுத்தினான் என்று கவனியுங்கள். பாசாங்குக்கார எலிப்பாஸ் வலியுறுத்தினான்: “அவர் [யெகோவா] தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் [பரிசுத்த தூதர்கள்] புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே. புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் [பாவமுள்ள மனிதர்கள்] அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?” (யோபு 4:18, 19) ஆகவே, அவனுடைய சொற்படி, யோபு கடவுளுக்கு ஒரு பொட்டுப்பூச்சியைவிட அதிக மதிப்புடையவராய் இருக்கவில்லை. உண்மையில், எலிப்பாஸ் மற்றும் அவனுடைய கூட்டாளிகளின் ஆலோசனை, கட்டியெழுப்புவதற்கு மாறாக, நல்ல காலங்களைப்பற்றிய ஞாபகத்தைக்கூட இழக்கும் நிலையில் யோபை விட்டிருக்கும். அவர்களுடைய நோக்கில், அவருடைய கடந்தகால உண்மைத்தன்மை, குடும்பப் பயிற்றுவிப்பு, கடவுளுடன் கொண்டிருந்த உறவு, இரக்க செயல்கள் யாவும் ஒன்றுக்கும் தகுதியற்றவையாக இருந்தன.
அதேவிதமாக இன்று, மனந்திரும்பும் தவறுசெய்தவர்கள், குறிப்பாக அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடியவர்களாய் இருக்கின்றனர்; அவர்கள் ‘அதிக துக்கத்தினால் அமிழ்ந்துபோகக்கூடிய’ ஆபத்து இருக்கிறது. மூப்பர்களே, அப்படிப்பட்டவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது, ஓரளவு மதிப்பை அவர்கள் காத்துக்கொள்ள அனுமதிப்பதன்மூலம் அவர்களுக்கான ‘உங்கள் அன்பைக்குறித்து உறுதியளியுங்கள்.’ (2 கொரிந்தியர் 2:7, 8) “மதிப்புக் குறைவுடன் நடத்தப்படுவது, ஆலோசனையைக் கேட்பதைக் கடினமாக்குகிறது,” என்று உவில்லியம் ஒத்துக்கொள்கிறார். அவர்கள் கடவுளுடைய கண்களில் மதிப்புள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்ற அவர்களுடைய நம்பிக்கையைப் பலப்படுத்துவது அவசியம். அவர்கள் உண்மையுடன் சேவித்த கடந்த வருடங்களின் “[அவர்களுடைய] கிரியையையும், . . . [அவர்கள்] தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு [யெகோவா] அநீதியுள்ளவரல்லவே,” என்று அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்.—எபிரெயர் 6:10.
ஆலோசனை கொடுக்கும்போது மற்றவர்களை மதிக்கும்படி உங்களுக்கு உதவக்கூடிய கூடுதலான அம்சங்கள் யாவை? எல்லா மனிதர்களும் கடவுளுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருப்பதால், மதிப்பிற்கான ஓர் இயல்பான உரிமையை அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பதை அங்கீகரியுங்கள். அவர்கள் யெகோவா தேவனாலும் இயேசு கிறிஸ்துவாலும் மதிப்புள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்; மீட்பின் கிரயம் மற்றும் உயிர்த்தெழுதலின் இரட்டை ஏற்பாடுகள் அந்த உண்மைக்குச் சான்றுபகர்கின்றன. ஒரு பொல்லாத தலைமுறை கடவுளுடன் சமாதானத்தைக் கொண்டிருக்க கோருவதற்கு, கிறிஸ்தவர்களைப் பயன்படுத்துவதன்மூலம், ‘[அவர்களுக்கு] ஓர் ஊழியத்தை நியமித்து,’ யெகோவா அவர்களுக்கு மேலுமான மதிப்பைச் சேர்க்கிறார்.—1 தீமோத்தேயு 1:12.
மூப்பர்களே, உங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களில் மிகப் பெரும்பான்மையானோர், சுத்திகரிக்கப்பட்ட பூமியின் வருங்கால அஸ்திவார அங்கத்தினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வளவு மதிப்புமிக்க, அருமையான தனி நபர்களாய் இருப்பதால், அவர்கள் நன்மதிப்பு கொடுக்கப்படுவதற்குத் தகுதி உடையவர்களாய் இருக்கின்றனர். ஆலோசனை கொடுக்கும்போது, யெகோவா மற்றும் இயேசு ஆகிய இருவரும் அவர்களுக்கு எப்படிக் கரிசனையைக் காண்பிக்கின்றனர் என்பதை நினைவுகூர்ந்து, சாத்தானின் சவால்களின் மத்தியிலும் மதிப்பு மற்றும் தன்மானத்திற்குரிய ஓர் உணர்ச்சியைக் காத்துக்கொள்ள உங்கள் சகோதரருக்கு உதவ உங்கள் பாகத்தைத் தொடர்ந்து செய்யுங்கள்.—2 பேதுரு 3:13; ஒப்பிடவும் 1 பேதுரு 3:7.
[பக்கம் 29-ன் பெட்டி]
மதிப்பைக்கொடுக்கும் ஆலோசனை
(1) உண்மையான, நேர்மையான பாராட்டை அளியுங்கள். (வெளிப்படுத்துதல் 2:2, 3)
(2) நன்கு செவிகொடுத்துக் கேட்பவராய் இருங்கள். தெளிவாகவும் தயவாகவும் பிரச்னையையும் ஆலோசனைக்கான காரணத்தையும் அடையாளம் கண்டுகொள்ளுங்கள். (2 சாமுவேல் 12:1-14; நீதிமொழிகள் 18:13; வெளிப்படுத்துதல் 2:4)
(3) உங்கள் ஆலோசனைக்கு வேத எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருங்கள். நம்பிக்கையளிப்பவராய், நியாயமானவராய், உற்சாகமளிப்பவராய் இருந்து, ஒற்றுணர்வைக் காண்பியுங்கள். ஆலோசனையைப் பெறுபவருடைய மதிப்பு மற்றும் தன்மானம் பாதிக்காதபடி காத்துக்கொள்ளுங்கள். (2 தீமோத்தேயு 3:16; தீத்து 3:2; வெளிப்படுத்துதல் 2:5, 6)
(4) ஆலோசனையை ஏற்று, பொருத்திப் பிரயோகிப்பதால் ஆசீர்வாதங்கள் வரும் என்று ஆலோசனை பெறுபவருக்கு உறுதியளியுங்கள். (எபிரெயர் 12:7, 11; வெளிப்படுத்துதல் 2:7)
[பக்கம் 26-ன் படம்]
ஆலோசனை கொடுக்கும்போது கிறிஸ்தவ மூப்பர்கள் மற்றவர்களை மதிக்கவேண்டியது அவசியம்