பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்கு விசேஷ கவனம் தேவை
“உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.”—சங்கீதம் 128:3.
1. செடி வளர்ப்பையும் பிள்ளை வளர்ப்பையும் எவ்வாறு ஒப்பிடலாம்?
அநேக விதங்களில், பிள்ளைகள் செடிகளைப்போல வளர்ந்து முதிர்ச்சியடைகிறார்கள். ஆகவே, ஒரு மனிதனுடைய மனைவியை ‘கனிதரும் திராட்சக்கொடியாகவும்’ அவனுடைய பிள்ளைகளை ‘[அவன்] பந்தியைச் சுற்றியுள்ள ஒலிவமரக் கன்றுகளாகவும்’ பைபிள் ஒப்புமைப்படுத்திப் பேசுவதில் ஆச்சரியமேயில்லை. (சங்கீதம் 128:3) ஒரு விவசாயியைக் கேட்டீர்களென்றால், சிறுசெடிகளை வளர்ப்பது சுலபமான காரியமல்ல என்று உங்களிடம் சொல்வான். விசேஷமாக சீதோஷ்ண நிலைமையும் நிலத்தின் தன்மைகளும் மோசமாக இருந்ததென்றால் கஷ்டமாயிருக்கும். அதேபோல, பிள்ளைகளை நன்கு பக்குவப்படுத்தப்பட்ட தெய்வ பயமுள்ள ஆட்களாக வளர்ப்பது, இந்தக் கொடிதான “கடைசிநாட்களில்” மிகவும் கடினமாக இருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1-5.
2. அமோக விளைச்சலுக்கு, சாதாரணமாக எது தேவைப்படுகிறது?
2 அமோக விளைச்சலை அறுக்க, விவசாயிக்கு வளமான நிலமும், நல்ல சூரிய ஒளியும், தண்ணீரும் தேவை. பண்படுத்தி, களைகளை நீக்குவதோடு, பூச்சிக்கொல்லியையும் பாதுகாப்பதற்கான மற்ற நடவடிக்கைகளையும் அவன் மேற்கொள்ளவேண்டும். விளைச்சல் தொடங்கி அறுப்புக்காலம் வரை கஷ்டமான சமயங்களை எதிர்ப்படலாம். நல்ல விளைச்சல் இல்லையென்றால், என்னே வருத்தம்! ஆனால், கஷ்டப்பட்டு வேலை செய்தபிறகு, ஓர் அமோக விளைச்சல் இருந்ததென்றால் சாகுபடியாளருக்கு என்னே திருப்தி!—ஏசாயா 60:20-22; 61:3.
3. முக்கியத்துவத்தில், செடிகளும் பிள்ளைகளும் எவ்வாறு ஒத்திருக்கின்றன, பிள்ளைகள் எப்படிப்பட்ட கவனிப்பைப் பெறவேண்டும்?
3 நிச்சயமாகவே, ஒரு விவசாயினுடைய அறுப்பைக் காட்டிலும் வெற்றிகரமான, பலன்தரும் மனித உயிர் வெகு விலையேறப் பெற்றதாயிருக்கிறது. ஆகவே, ஏராளமான பயிரை விளைவிப்பதைக் காட்டிலும் ஒரு பிள்ளையை வெற்றிகரமாக வளர்ப்பது இன்னும் கூடுதலான நேரத்தையும் முயற்சியையும் உட்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை. (உபாகமம் 11:18-21) ஒரு சின்னஞ்சிறு குழந்தையை ஜீவ தோட்டத்தில் நட்டு, பாசத்துடன் நீர்ப்பாய்ச்சி போஷித்து, ஆரோக்கியமான வரம்புகளில் வளர்த்தால், நலிந்த ஒழுக்க மதிப்பீடுகள் நிறைந்திருக்கும் ஓர் உலகிலுங்கூட, அது ஆவிக்குரிய விதத்தில் நன்றாக வளர்ந்து தழைக்கக்கூடியதாயிருக்கும். ஆனால் அந்தக் குழந்தையை மோசமாக நடத்தி, ஒடுக்குவோமென்றால் அது உள்ளாக வாடிவதங்கி, ஆவிக்குரிய விதத்தில் சாகவுங்கூடும். (கொலோசெயர் 3:21; எரேமியா 2:21-ஐயும் 12:2-ஐயும் ஒத்துப்பாருங்கள்.) ஆம், எல்லா பிள்ளைகளுக்கும் விசேஷ கவனம் தேவையே!
சிசுப்பருவம் முதல் தினசரி கவனிப்பு
4. “சிசுப்பருவம் முதல்” பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட கவனிப்புத் தேவைப்படுகிறது?
4 பச்சிளம் குழந்தையைப் பெற்றோர் பெரும்பாலும் தொடர்ந்து கவனித்துக்கொள்ளவேண்டும். ஆனால், குழந்தைக்கு உடல் சம்பந்தமாக அல்லது பொருளாதார சம்பந்தமாக மட்டும் தினசரி கவனிப்புத் தேவையா? கடவுளுடைய ஊழியனாகிய தீமோத்தேயுவினிடம், “உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிசுப்பருவம் முதல் அறிந்திருக்கிறாய்,” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:15, NW) எனவே, சிசுப்பருவத்திலிருந்தே தீமோத்தேயுவுக்குக் கிடைத்த பெற்றோருடைய கவனிப்பு, ஆவிக்குரிய கவனிப்பையும் உட்படுத்தியது. ஆனால் சிசுப்பருவம் எப்பொழுது துவங்குகிறது?
5, 6. (அ) பிறவாத குழந்தையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (ஆ) பிறவாத குழந்தையின் நலனைக் குறித்து பெற்றோர் அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று எது காட்டுகிறது?
5 பவுல் இங்குப் பயன்படுத்திய (ப்ரீஃபாஸ் [breʹphos]) என்ற கிரேக்க வார்த்தை பிறவாத குழந்தைக்குங்கூட பொருந்துகிறது. முழுக்காட்டுபவனாகிய யோவானின் தாயாகிய எலிசபெத்து தன் சொந்தக்காரியாகிய மரியாளிடம் சொன்னாள்: “நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள [சிசு, NW] [ப்ரீஃபாஸ்] களிப்பாய்த் துள்ளிற்று.” (லூக்கா 1:44) ஆக, பிறவாத குழந்தைகளும் சிசுக்கள் என்று அழைக்கப்படுகின்றன; அவை கருப்பைக்கு வெளியே நடக்கிற செயல்களுக்குப் பிரதிபலிக்கவுங்கூடும் என்று பைபிள் காட்டுகிறது. அப்படியானால், இன்று பெரும்பாலும் ஊக்குவிக்கப்பட்டுவருகிற பிரசவ முன்கவனிப்பு, பிறவாத சிசுவின் ஆவிக்குரிய நலனுக்கு கவனம் செலுத்துவதையும் உள்ளடக்குமா?
6 இது சிந்தித்துப்பார்க்கவேண்டிய ஒரு விஷயமாயிருக்கிறது, ஏனென்றால், பிறவாத குழந்தைகள் கேட்பதிலிருந்து பயனடையவோ பெரிதும் பாதிக்கவோ கூடும் என்று அத்தாட்சி காட்டுகிறது. ஓர் இசையமைப்பாளருக்கு, தான் பழகிக்கொண்டிருந்த பல்வேறு இசைகள் விநோதமான விதத்தில் நன்கறிந்த இசைகளாகத் தொனித்தன. அதில் விசேஷமாக யாழ் இசை. யாழ் வாசிப்பதில் கலைஞராயிருந்த தன் தாயிடம் அந்த இசைப் பெயர்களை அவர் சொன்னார். அப்போது, மகன் வயிற்றிலிருந்தபோது அதே இசையமைப்புகளைப் பழகிக்கொண்டிருந்ததாகத் தாய் சொன்னார். அவ்வாறே, தாய்மார்கள் டிவியில் பகல் நிகழ்ச்சிக் கோவைகளைப் பழக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தால், பிறவாத குழந்தையானது எதிர்மாறான வகையில் பாதிக்கப்படும். ஆதலால்தான் ஒரு மருத்துவ பத்திரிகை “கரு பகல் நிகழ்ச்சிக் கோவைக்கு அடிமையாவது” பற்றி குறிப்பிட்டது.
7. (அ) பிறவாத குழந்தையின் நலனின்பேரில் எவ்வாறு அநேக பெற்றோர் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்? (ஆ) ஒரு குழந்தைக்கு என்னென்ன சாமர்த்தியங்கள் இருக்கின்றன?
7 சாதகமான தூண்டுதலின் மூலம் சிசுக்களுக்கு வரும் பயனை உணர்ந்தவர்களாக, அநேக பெற்றோர் ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அதற்கு வாசித்துக்காட்டி, பேசி, பாடவுஞ்செய்கிறார்கள். நீங்களும் அவ்வாறே செய்யலாம். உங்களுடைய சிசு, என்ன பேசுகிறீர்கள் என்று புரிந்துகொள்ளாவிட்டாலும், அது உங்களுடைய இனிமையான குரலாலும் பாசங்கலந்த தொனியாலும் ஒருவேளை பலனடையும். பிறந்த பிறகு, குழந்தை நீங்கள் சொல்வதைக் கிரகிக்க ஆரம்பிக்கும், ஒருவேளை நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் வெகுசீக்கிரமாகக் கிரகிக்கக்கூடும். பேசுகிற மொழியைக் கேட்கத் துவங்கியவுடன் இரண்டு மூன்று வருடங்களுக்குள்ளாக, பிள்ளையானது ஒரு சிக்கலான மொழியைக் கற்றுக்கொள்கிறது. குழந்தை, “சுத்தமான பாஷை”யாகிய பைபிள் சத்தியத்தையுங்கூட கற்றுக்கொள்ளத் துவங்கலாம்.—செப்பனியா 3:9.
8. (அ) தீமோத்தேயு பரிசுத்த வேத எழுத்துக்களை “சிசுப்பருவம் முதல்” அறிந்திருப்பதாகச் சொல்கையில் பைபிள் எதை அத்தாட்சிப்பூர்வமாகக் குறித்துக்காட்டுகிறது? (ஆ) தீமோத்தேயுவின் விஷயத்தில் எது உண்மையாக இருந்தது?
8 தீமோத்தேயு ‘பரிசுத்த வேத எழுத்துக்களை சிசுப்பருவம் முதல் அறிந்திருந்தார்’ என்று சொல்லுகையில், பவுல் எதை அர்த்தப்படுத்தினார்? தீமோத்தேயு, பிள்ளையாயிருந்த சமயத்திலிருந்து ஆவிக்குரிய பயிற்சியைப் பெறாமல், குழந்தைப்பருவம் முதல் அந்தப் பயிற்சியைப் பெற்றார் என்று அத்தாட்சிப்பூர்வமாகக் குறித்துக்காட்டினார். இது ப்ரீஃபாஸ் என்ற கிரேக்க சொல்லினுடைய அர்த்தத்துக்கு இசைவாயிருக்கிறது; பொதுவாக இந்தச் சொல் பச்சிளம் குழந்தையைக் குறிப்பிடுகிறது. (லூக்கா 2:12, 16, NW; அப்போஸ்தலர் 7:19, NW) தீமோத்தேயு தனக்கு நினைவுதெரிந்த நாள்முதற்கொண்டு தன் தாயாகிய ஐனிக்கேயாளிடத்திலிருந்தும் தன் பாட்டியாகிய லோவிசாளிடத்திலிருந்தும் ஆவிக்குரிய போதனைகளைப் பெற்றார். (2 தீமோத்தேயு 1:5) ‘முளையை வளைக்கிறபடியே மரம் வளரும்’ என்ற பழமொழி தீமோத்தேயுவின் விஷயத்தில் உண்மையிலேயே பொருந்தியது. ‘நடக்கவேண்டிய வழியிலே நடத்தியதால்,’ அவர் கடவுளுடைய மிகச் சிறந்த ஊழியராக ஆனார்.—நீதிமொழிகள் 22:6; பிலிப்பியர் 2:19-22.
அவசியமான விசேஷ கவனிப்பு
9. (அ) பெற்றோர் எதைச் செய்வதைத் தவிர்க்கவேண்டும், ஏன்? (ஆ) ஒரு குழந்தை வளர்ந்துவருகையில், பெற்றோர் என்ன செய்யவேண்டியது அவசியம், அவர்கள் யாருடைய முன்மாதிரியைக் கவனமாகப் பின்பற்றவேண்டும்?
9 பிள்ளைகளுங்கூட செடிகளைப்போல இருக்கிறார்கள்; எப்படியென்றால், அவர்கள் யாவரும் ஒரே குணவியல்புகளை கொண்டில்லாதவர்களாகவும் ஒரே விதமான பராமரிப்பு முறைகளுக்குப் பிரதிபலிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். ஞானமுள்ள பெற்றோர் வித்தியாசங்களை மதித்து ஒரு பிள்ளையை இன்னொரு பிள்ளையோடு ஒத்துப்பார்ப்பதைத் தவிர்ப்பார்கள். (கலாத்தியர் 6:4-ஐ ஒத்துப்பாருங்கள்.) உங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமான ஆட்களாக மலரவேண்டுமானால், அவர்களுடைய தனிப்பட்ட ஆளுமை குணாதிசயங்களைக் கவனித்து, நல்ல குணங்களை வளரவிட்டு கெட்ட குணங்களைக் களைந்துபோடவேண்டும். நேர்மையின்மை, பொருளாசை அல்லது தன்னலம் ஆகியவற்றை குறித்ததில் ஒரு பலவீனத்தையோ ஒழுங்கீனமான போக்கையோ கண்டுபிடித்தால் என்ன செய்வீர்கள்? இயேசு தம் அப்போஸ்தலருடைய பலவீனங்களைத் திருத்தியதுபோல, தயவாக அதைத் திருத்துங்கள். (மாற்கு 9:33-37) விசேஷமாக, அவனுக்குள்ள திறமைகளுக்காகவும் நல்ல குணங்களுக்காகவும் தவறாமல் ஒவ்வொரு பிள்ளையையும் பாராட்டுங்கள்.
10. பிள்ளைகளுக்கு எது விசேஷமாகத் தேவையாயிருக்கிறது, அதை எவ்வாறு அளிக்கலாம்?
10 பிள்ளைகளுக்கு விசேஷமாகத் தேவையானதெல்லாம் அன்பான விசேஷ கவனிப்பே ஆகும். இயேசு தம்முடைய ஊழியம் நிறைவடையப்போகும் நாட்களில் மிகவும் வேலையாக இருந்தபோதிலுங்கூட, அப்படிப்பட்ட விசேஷ கவனத்தைச் செலுத்துவதற்கு சிறு பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்கினார். (மாற்கு 10:13-16, 32) பெற்றோரே, அம்மாதிரியைப் பின்பற்றுங்கள்! தன்னலம் கருதாமல் உங்களுடைய பிள்ளைகளோடிருக்க நேரத்தை ஒதுக்குங்கள். மேலும் அவர்களுக்கு உண்மையான அன்பைக்காட்ட வெட்கப்படாதீர்கள். இயேசுவைப்போல அவர்களை அரவணைத்துக்கொள்ளுங்கள். அவர்களைக் கட்டித்தழுவி முத்தமிடுங்கள். நன்கு பக்குவப்படுத்தப்பட்ட இளம் நபர்களின் பெற்றோர், மற்றப் பெற்றோருக்கு என்ன ஆலோசனை கொடுக்க விரும்புகின்றனர் என்று கேட்கப்பட்டபோது, கிடைத்த அநேக பதில்களில் சில இவையாகும்: ‘பாசத்தைப் பொழியுங்கள்,’ ‘அவர்களோடு சேர்ந்து நேரத்தைச் செலவிடுங்கள்,’ ‘பரஸ்பர மரியாதையை வளர்த்துக்கொள்ளுங்கள்,’ ‘அவர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள்,’ ‘பிரசங்கம் செய்வதற்குப் பதிலாக வழிநடத்துதலைக் கொடுங்கள்’ மேலும் ‘நடைமுறைக்குப் பொருந்தவாறு பேசுங்கள்.’
11. (அ) பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளிடத்தில் விசேஷ கவனம் செலுத்துவதைக் குறித்து எவ்வாறு கருதவேண்டும்? (ஆ) பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளோடு எப்போது அருமையான பேச்சுப் பரிமாற்றங்களை அனுபவிக்கலாம்?
11 அத்தகைய விசேஷ கவனம் செலுத்துவது மகிழ்ச்சியாக இருக்கலாம். வெற்றிகரமான பெற்றோர் ஒருவர் எழுதினார்: “எங்களுடைய இரண்டு பையன்களும் சின்னஞ்சிறு வயதிலிருந்தபோது, அவர்களைப் படுக்கையில் கிடத்த தயார்படுத்துவது, அவர்களுக்கு வாசித்துக் காட்டுவது, அவர்களுக்குப் போர்த்திவிடுவது, அவர்களோடு சேர்ந்து ஜெபிப்பது போன்றவை இன்பமாக இருந்தது.” இவ்வாறு ஒன்றுசேர்ந்து செலவழிக்கப்படும் சமயங்கள், பெற்றோரும் பிள்ளையும் உற்சாகப்படக்கூடிய விதத்திலே பேச்சுப் பரிமாற்றங்கொள்ள வாய்ப்பளிக்கின்றன; இது பெற்றோருக்கும் பிள்ளைக்கும் உற்சாகமூட்டுவதாக இருக்கும். (ரோமர் 1:10, 11-ஐ ஒத்துப்பாருங்கள்.) ஒரு தம்பதி தங்களுடைய மூன்று வயது குழந்தை கடவுளிடம் “வால்லி”யை ஆசீர்வதிக்கும்படி கேட்டதைக் கவனித்தனர். அவன் அடுத்துவந்த இரவுகளிலும் “வால்லிக்”காக ஜெபம் செய்தான். அப்போது துன்புறுத்தலை அனுபவித்துக்கொண்டிருந்த மலாவியிலுள்ள சகோதரர்களுக்காகவே அவன் ஜெபித்தான் என்பதை அறியவந்தவுடன் பெற்றோர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு பெண் சொன்னாள்: ‘நான் நான்கு வயதாயிருக்கும்போதே, என்னுடைய தாய் கழுவிக்கொடுத்த பாத்திரங்களை நாற்காலிமீது நின்றுகொண்டு நான் துடைக்கையில், அவர்கள் வேதவசனங்களை மனப்பாடம் செய்யவும் ராஜ்ய பாட்டுக்களைப் பாடவும் எனக்கு உதவினார்கள்.’ உங்களுடைய இளம் பிள்ளைகளோடு அருமையான பேச்சுப் பரிமாற்றங்களை அனுபவிக்கும் சமயங்களை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா?
12. ஞானமுள்ளவர்களாக, கிறிஸ்தவ பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு எதை அளிப்பார்கள், என்ன முறைகளைப் பயன்படுத்தலாம்?
12 ஞானமுள்ள கிறிஸ்தவ பெற்றோர் ஒழுங்கான படிப்பு திட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். வழக்கமாகச் செய்வதுபோல நீங்கள் கேள்வி-பதில் முறையைக் கையாண்டாலும், விசேஷமாக இளம் பிள்ளைகளுடைய தேவைகளுக்குத் தக்கவாறு படிப்பு சமயங்களை மாற்றியமைப்பதன் மூலம் மகிழ்ச்சியாகப் பேச்சுப் பரிமாற்றங்கொள்ள முடியுமா? பைபிள் காட்சிகளைப் படங்களாக வரைந்துகாட்டுவது, பைபிள் கதைகளைச் சொல்வது, அல்லது பிள்ளையிடம் நீங்கள் தயாரிக்கும்படி சொல்லியிருக்கிற காரியத்தைக் கேட்பது ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். கடவுளுடைய வார்த்தைக்காக உங்களுடைய பிள்ளைகள் ஏங்கிக்கிடக்குமாறு, அதற்கு எவ்வளவு சுவையூட்ட முடியுமோ அவ்வளவு சுவையூட்டுங்கள். (1 பேதுரு 2:1, 3) ஒரு தந்தை சொன்னார்: ‘பிள்ளைகள் குழந்தைகளாயிருந்தபோது, அவர்களோடு சேர்ந்து நாங்களும் தரையிலே தவழ்ந்தோம், பிரசித்திப்பெற்ற பைபிள் கதாப்பாத்திரங்களடங்கிய சரித்திரப்பூர்வமான நிகழ்ச்சிகளை நடித்துக் காட்டினோம். குழந்தைகளுக்கு அது மிகவும் பிடித்தது.’
13. பழகிக்கொள்வதற்கான சமயங்களின் பலன் என்ன, இந்தச் சமயங்களில் எதை நீங்கள் ஒத்திகை செய்துபார்க்கலாம்?
13 பழகிக்கொள்வதற்கான சமயங்களும் அருமையான பேச்சுப் பரிமாற்றங்களில் விளைவடையும். ஏனென்றால் அவை நிஜ-வாழ்க்கை சூழ்நிலைமைகளுக்காக இளம் பிள்ளைகளைத் தயார்செய்கின்றன. நாஸி துன்புறுத்தலின்போது, கடவுளுக்கு உண்மையோடு நிலைத்திருந்த 11 குஸ்ஸரோ பிள்ளைகளில் ஒருத்தி, தன்னுடைய பெற்றோரைக் குறித்து சொன்னாள்: “எப்படி நடக்கவேண்டும், பைபிளை வைத்து நாங்கள் எவ்வாறு எங்களையே தற்காத்துக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் எங்களுக்கு காட்டினார்கள். [1 பேதுரு 3:15, NW] அடிக்கடி நாங்கள் பழகிக்கொள்வதற்கான சமயங்களில், கேள்விகேட்டு பதிலளிக்க பழகிக்கொண்டோம்.” அதேவிதமாக நீங்கள் ஏன் செய்யக்கூடாது? பெற்றோரை வீட்டுக்காரராக நடிக்கவைத்து, ஊழியப் பிரசங்கங்களைப் பழகிக்கொள்ளலாம். அல்லது பழகிக்கொள்வதற்கான நேரம், நிஜ-வாழ்க்கை சோதனைகளைக் கையாளுவதாக இருக்கலாம். (நீதிமொழிகள் 1:10-15) “கடினமான சூழ்நிலைகளை எதிர்ப்பட ஒத்திகை செய்துபார்ப்பது பிள்ளையின் திறமைகளையும் நம்பிக்கையையும் விருத்திசெய்யும். உங்களுடைய பிள்ளையிடம் சிகரெட்டையோ, மதுபானத்தையோ போதைப்பொருளையோ ஒரு நண்பன் அளிப்பதுபோல பழகிப்பார்க்கலாம்” என்று ஒரு நபர் விளக்கினாள். அத்தகைய சூழ்நிலைகளில் உங்களுடைய பிள்ளை எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதைப் பகுத்தறிவதற்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் உதவக்கூடும்.
14. உங்களுடைய பிள்ளைகளோடு அன்பான, கருணைகலந்த கலந்துரையாடல்கள் ஏன் வெகு முக்கியமானது?
14 உங்களுடைய பிள்ளையோடு பேச்சுப் பரிமாற்றங்கள்கொள்ளும்போது, பின்வரும் இந்த வார்த்தைகளை எழுதிய எழுத்தாளருடைய அதே கருணைகலந்த விதத்தில் அவனைக் கவர்ந்திழுக்கப்பாருங்கள்: “என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.” (நீதிமொழிகள் 3:1, 2) உங்கள் பிள்ளையிடம், தான் கீழ்ப்படிந்தால், சமாதானமும் நீடித்த நாட்களும், உண்மையில் சொல்லவேண்டுமானால், கடவுளுடைய சமாதானமான புதிய உலகில் நித்திய ஜீவனும் கிடைக்கும் என்று அன்போடு நீங்கள் விளக்கிச் சொன்னால், அது அவனுடைய மனதை தொடக்கூடும் அல்லவா? கடவுளுடைய வார்த்தையிலிருந்து காரணகாரிய முறையில் பேசும்போது, உங்கள் இளம் பிள்ளையின் ஆளுமையைச் சீர்தூக்கிப்பாருங்கள். இதை ஜெபசிந்தையோடு செய்தால், யெகோவா உங்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிப்பார். அப்படிப்பட்ட அன்பான, கருணைகலந்த பைபிள் சார்ந்த கலந்துரையாடல்கள் அநேகமாகச் சிறந்த பலன்களையும் நீடித்த பயன்களையும் கொண்டுவரும்.—நீதிமொழிகள் 22:6.
15. பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதற்கு பெற்றோர் எவ்வாறு தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவலாம்?
15 திட்டமிட்ட படிப்பு சமயத்தின்போது அப்படிப்பட்ட பேச்சுப் பரிமாற்றம் இல்லையென்றாலும், மற்றக் காரியங்கள் உங்கள் கவனத்தைச் சிதறடிக்க விடாதீர்கள். உங்கள் பிள்ளை எதைச் சொல்கிறது என்பதை மாத்திரம் கவனித்து கேட்காமல், அந்தக் கருத்தை அது எப்படிச் சொல்கிறது என்பதையும் பாருங்கள். “உங்கள் பிள்ளையைப் பாருங்கள். உங்களுடைய முழுக் கவனத்தையும் அதற்குச் செலுத்துங்கள். வெறுமனே கேட்காமல், சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள். அத்தகைய கூடுதலான முயற்சியெடுக்க பிரயாசப்படும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும்,” என்று ஒரு நிபுணர் கூறினார். இன்று பிள்ளைகள், பள்ளியிலும் மற்ற இடங்களிலும் மோசமான பிரச்னைகளை அடிக்கடி எதிர்ப்படுகின்றனர். பெற்றோராக உங்களுடைய பிள்ளையின் மனதிலிருப்பதை வெளிக்கொணரப் பாருங்கள். கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து காரியங்களைப் பார்க்க உதவுங்கள். குறிப்பிட்ட ஒரு பிரச்னையை எவ்வாறு தீர்த்துவைப்பது என்று உங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியவில்லையென்றால், வேதவசனங்களையும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ மூலம் அளிக்கப்பட்டிருக்கும் பிரசுரங்களையும் ஆராய்ச்சி செய்யுங்கள். (மத்தேயு 24:45, NW) எப்படியாவது, பிரச்னையைத் தீர்க்க தேவைப்பட்ட முழுமையான விசேஷ கவனத்தைப் பிள்ளையிடம் செலுத்துங்கள்.
ஒன்றுசேர்ந்திருக்கும் உங்கள் நேரத்தை அருமையாகக் கருதுங்கள்
16, 17. (அ) இன்று வாலிபருக்கு ஏன் விசேஷ கவனிப்பும் போதனையும் தேவைப்படுகிறது? (ஆ) பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரால் சிட்சிக்கப்படும்போது எதைத் தெரிந்திருப்பது அவசியம்?
16 நாம் “கடைசிநாட்களில்” வாழ்வதாலும், இந்த நாட்கள் “கொடிய காலங்க”ளாக இருப்பதாலும் இன்று வாலிபருக்கு விசேஷ கவனம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3-14) பெற்றோர் பிள்ளைகள் ஆகிய இருசாராருக்கும் “தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத்” தரக்கூடிய உண்மையான ஞானமளிக்கும் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. (பிரசங்கி 7:12) பைபிளை அடிப்படையாகக் கொண்ட அறிவைச் சரியாகப் பொருத்துவதைத் தெய்வீக ஞானம் உள்ளடக்குவதால், பிள்ளைகளுக்குக் கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஒழுங்கான போதனை தேவைப்படுகிறது. ஆகையால், உங்களுடைய பிள்ளைகளோடு சேர்ந்து வேதவசனங்களைப் படியுங்கள். அவர்களுக்கு யெகோவாவைப் பற்றி சொல்லிக்கொடுங்கள், அவருடைய தராதரங்களைக் கவனத்தோடு விளக்கிக் காட்டுங்கள், அவருடைய மகத்தான வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றத்தை, பூரிப்போடு எதிர்பார்த்திருக்கச் செய்யுங்கள். அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து வீட்டிலும் அவர்களோடு உலாவச் செல்கையிலும் ஆம், எப்பொழுதெல்லாம் பேசலாமென்று நினைக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உரையாடுங்கள்.—உபாகமம் 6:4-7.
17 எல்லா செடிகளும் ஒரே சூழ்நிலைமைகளில் தழைக்காது என்பதை விவசாயிகள் அறிந்திருக்கிறார்கள். செடிகளுக்குத் விசேஷ கவனம் தேவை. அதேபோல, ஒவ்வொரு பிள்ளையும் வித்தியாசப்பட்டதாயிருப்பதால், ஒவ்வொன்றிற்கும் விசேஷ கவனமும் போதனையும் சிட்சையும் தேவைப்படுகிறது. உதாரணமாக, ஒரு பிள்ளை தவறான வழியில் செல்வதை நிறுத்த பெற்றோர் ஒருவர் முறைத்துப் பார்த்தாரேயென்றால் அதுவே அதற்கு போதுமானதாயிருக்கும். அதேசமயத்தில் வேறொரு பிள்ளைக்கு, இன்னும் பலமான சிட்சை தேவைப்படும். ஆனால், ஒருசில வார்த்தைகளோ செயல்களோ ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதையே உங்கள் பிள்ளைகள் தெரிந்திருப்பது அவசியம். சிட்சை கொடுப்பதில் எந்த வித்தியாசமும் இல்லாமலிருக்க, பெற்றோர் இருவரும் ஒத்துழைக்கவேண்டும். (எபேசியர் 6:4) கிறிஸ்தவ பெற்றோர் வேதவசனங்களுக்கிசைய தெளிவான வழிநடத்துதலைக் கொடுப்பது மிகவும் முக்கியமானதாயிருக்கிறது.
18, 19. கிறிஸ்தவ பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள்மீது என்ன உத்தரவாதத்தை உடையவர்களாயிருக்கிறார்கள், அந்த வேலை சரிவர செய்யப்படுகையில், பெரும்பாலும் எதில் விளைவடையும்?
18 விவசாயி நடுகிற வேலையையும் பண்படுத்துகிற வேலையையும் சரியான சமயத்தில் செய்யவேண்டும். பயிரை நடுவதற்கு காலங்கடத்தினாலோ கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலோ, அதிலிருந்து சிறுகவே அறுப்பான், அல்லது அறுவடையே செய்யமாட்டான். உங்களுடைய இளம் பிள்ளைகளும் வளர்ந்துவரும் “செடி”களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு, வரக்கூடிய மாதத்திலோ வரக்கூடிய வருஷத்திலோ விசேஷ கவனிப்புத் தேவைப்படாமல், இப்போதே தேவைப்படுகிறது. கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக ஆவிக்குரிய வளர்ச்சியை முன்னேற்றுவிக்கவும் ஆவிக்குரிய விதத்தில் வாடிவதங்கச் செய்து, அழித்துப்போடக்கூடிய உலகப்பிரகாரமான சிந்தனைகளைக் களைந்தெறிவதற்குமான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாதீர்கள். உங்கள் பிள்ளைகளோடு செலவழிப்பதற்குச் சிலாக்கியமாகக் கிடைத்திருக்கும் மணிநேரங்களையும் நாட்களையும் அருமையாகக் கருதுங்கள்; ஏனென்றால் இந்தக் காலங்கள் வேகமாக கடந்துவிடும். யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களாக உங்களுடைய பிள்ளைகளில் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான தெய்வீக குணாதிசயங்களை வளர்க்க கடினமாக உழையுங்கள். (கலாத்தியர் 5:22, 23; கொலோசெயர் 3:12-14) இது வேறொருவர் செய்யவேண்டிய வேலை கிடையாது; நீங்களே செய்யவேண்டும். கடவுள் உங்களுக்கு இதில் உதவிசெய்வார்.
19 உங்களுடைய பிள்ளைகளுக்கு ஒரு செழுமையான ஆவிக்குரிய சொத்தை அளியுங்கள். அவர்களோடு சேர்ந்து கடவுளுடைய வார்த்தையைப் படியுங்கள். ஒன்றுசேர்ந்து ஆரோக்கியமான பொழுதுபோக்கை அனுபவித்து மகிழுங்கள். கிறிஸ்தவ கூட்டங்களுக்கு உங்கள் இளம் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு செல்லுங்கள், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் உங்களோடுகூட அவர்கள் வரட்டும். யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறவைக்கும் ஆளுமையை உங்களுடைய அருமையான பிள்ளைகளில் படிப்படியாக உருவாக்குங்கள். பிற்காலத்தில், அது பெரும்பாலும் உங்களுக்குப் பெரும் இன்பத்தைக் கொண்டுவரும். ஆம், “நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.”—நீதிமொழிகள் 23:24, 25.
முழுநிறைவான பலன்
20. பருவவயதிலுள்ள பிள்ளைகளுக்கு வெற்றிகரமான பெற்றோராயிருப்பதற்கு திறவுகோல் எது?
20 பிள்ளைகளை வளர்ப்பது ஒரு சிக்கலான, நீண்டகால பொறுப்பாயிருக்கிறது. ‘பந்தியைச் சுற்றியுள்ள இந்த ஒலிவமரக் கன்றுகளை’ ராஜ்ய கனிதரும் தெய்வ பயமுள்ள ஆட்களாக வளர்ப்பது, ஒரு 20 ஆண்டுகால திட்டமாக அழைக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 128:3; யோவான் 15:8) இந்தத் திட்டம் பிள்ளைகள் பருவவயதை அடைகையில் சாதாரணமாகக் கடினமாகிறது; அந்தப் பருவத்தில்தான் பெரும்பாலும் அவர்கள்மீது அழுத்தங்கள் அதிகரிப்பதால் பெற்றோர் கூடுதலான பிரயாசையில் இறங்குவதை உசிதமானதாக காண்கின்றனர். ஆனாலும் வெற்றிக்கான திறவுகோல் மாறுவதே கிடையாது; அதாவது, செவிகொடுத்துக் கவனிப்பதும் அன்பாயிருப்பதும் புரிந்துகொள்ளும் மனப்பான்மையோடு இருப்பதுமாகும். உங்களுடைய பிள்ளைகளுக்கு விசேஷ கவனிப்பு உண்மையிலேயே அவசியமாயிருக்கிறது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவர்களுடைய நலனின்பேரில் உண்மையான கனிவுடன்கூடிய அக்கறையைக் காட்டுவதன் மூலம் அப்படிப்பட்ட கவனத்தைக் காட்டலாம். அவர்களுக்கு உதவ, உண்மையில் தேவைப்படும் நேரத்தை செலவழித்து, அன்பையும் அக்கறையையும் காட்டுவதன்மூலம் உங்களை மனமுவந்து அளிக்கவேண்டும்.
21. பிள்ளைகளிடம் விசேஷ கவனம் செலுத்துவதனால் வரும் பலன் என்ன?
21 யெகோவா உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கும் அந்த அருமையான ஈவைக் கவனித்துக்கொள்வதற்கான முயற்சிகளினால் வரும் பலனானது, எந்தவொரு விவசாயியும் அறுக்கும் அமோக விளைச்சலைக் காட்டிலும் வெகு மனநிறைவளிக்கக்கூடியதாக இருக்கிறது. (சங்கீதம் 127:4-6) ஆக, பெற்றோரே, உங்கள் பிள்ளைகள்மீது தொடர்ந்து விசேஷ கவனம் செலுத்தி வாருங்கள். அவர்களுடைய நன்மைக்காகவும் பரலோகப் பிதாவாகிய யெகோவாவுடைய மகிமைக்காகவும் அவ்வாறு செய்வீர்களாக.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ நாற்று வளர்ப்பையும் பிள்ளை வளர்ப்பையும் எவ்வாறு ஒப்பிடலாம்?
◻ சிசுப்பருவம் முதல் ஒரு குழந்தை தினசரி எப்படிப்பட்ட கவனிப்பைப் பெறவேண்டும்?
◻ என்ன விசேஷ கவனம் பிள்ளைகளுக்குத் தேவைப்படுகிறது, அதை எவ்வாறு அளிக்கலாம்?
◻ உங்கள் பிள்ளைகளிடம் ஏன் விசேஷ கவனம் செலுத்தவேண்டும்?