தனிப்பட்ட படிப்பை நீங்கள் அனுபவித்து மகிழ்கிறீர்களா?
கடவுளுக்கு உண்மையுள்ள எந்தவொரு ஊழியரும் தனிப்பட்ட பைபிள் படிப்புக்கு மிகுதியான நேரத்தை ஒதுக்கிவைக்க சந்தோஷப்படுவார். (சங்கீதம் 1:1, 2) ஆனால், அநேகருக்கு அது தங்கள் நேரத்தையும் பலத்தையும் அதிகமாகத் தேவைப்படுத்துவதால், தாங்கள் விரும்புகிறவண்ணம் தனிப்பட்ட படிப்பிற்கு பெருமளவான நேரத்தையும் சக்தியையும் செலவிடுவது கடினமாக இருக்கிறது.
என்றாலும், கடவுளுடைய சுறுசுறுப்புள்ள ஊழியர்களாக தொடர்ந்து சேவிப்பதற்கு, எல்லாருமே கடவுளுடைய வார்த்தையிலிருக்கும் சத்தியத்தின் புதிதான அல்லது ஆழமான அம்சங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் நாளுக்கு நாள் தங்களுடைய சந்தோஷத்தையும் பலத்தையும் புதுப்பித்துக்கொள்வது அவசியம். பல வருடங்களுக்கு முன்னால் நெகிழவைத்த பைபிள் சத்தியங்கள், இப்போது உங்களை அந்தளவுக்கு நெகிழவைக்காது. ஆகவே, நம்மைநாமே ஆவிக்குரிய விதத்தில் உந்தப்பட்ட நிலையில் வைத்துக்கொள்ளும்படியாக, சத்தியத்தின்பேரில் ஒரு புதுமையான உட்பார்வையைப் பெறுவதற்கு நாம் மனமார்ந்து, விடாது முயலுவது நன்மையானதாகவும் அத்தியாவசியமாகவும் இருக்கிறது.
கடவுளுடைய வார்த்தையின் தனிப்பட்ட படிப்பினால், பூர்வ காலத்தில் வாழ்ந்த விசுவாசமுள்ள மனிதர்கள், ஆவிக்குரிய விதத்தில் எவ்வாறு தங்களைப் பலமுள்ளவர்களாக வைத்துக்கொண்டனர்? நவீன நாளைய யெகோவாவின் ஊழியர்களில் சிலர் எவ்வாறு தங்களுடைய படிப்பை நன்கு அனுபவித்து மகிழ்வதாகவும் பயனளிப்பதாகவும் செய்கின்றனர்? தங்களுடைய முயற்சிகளுக்கு எவ்வாறு அவர்கள் பலனளிக்கப்பட்டு இருக்கின்றனர்?
தனிப்பட்ட படிப்பின் மூலம் அவர்கள் தங்களுடைய பலத்தைப் புதுப்பித்துக்கொண்டனர்
யூதாவின் அரசனாகிய யோசியா, ‘மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைதானே’ வாசிக்கக் கேட்ட பிறகு, விக்கிரகாராதனைக்கு எதிராக இன்னும் அதிக பக்திவைராக்கியத்தோடு நடவடிக்கை எடுத்தார். கடவுளுடைய வார்த்தையின் இந்தப் பகுதியை அவர் சிந்தித்தது அதுதான் முதல் முறை அல்ல என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை; ஆனால், சுத்தமான வணக்கத்திற்கான அவருடைய போராட்டத்தைத் தொடர மூல கையெழுத்துப் பிரதியிலிருந்து நேரடியான செய்தியைக் கேட்டதுதானே அவருக்கு ஏவுதலளித்தது.—2 நாளாகமம் 34:14-19.
தானியேல் தீர்க்கதரிசி எரேமியா புத்தகத்திலிருந்து மாத்திரம் ‘எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீருவதற்கு எடுக்கும் வருஷங்களின் தொகையையும் அதன் நிச்சயத்தையும்’ அறிந்துகொள்ளாமல், ‘புத்தகங்களிலிருந்தும்’ அறிந்துகொண்டார். அநேகமாக லேவியராகமம் (26:34, 35), ஏசாயா (44:26-28), ஓசியா (14:4-7), ஆமோஸ் (9:13-15) போன்ற புத்தகங்களை இவை உள்ளடக்கின. பைபிள் புத்தகங்களை ஊக்கமாகப் படித்து உறுதிப்படுத்திக்கொண்டதுதானே, கடவுள் பற்றுள்ள இந்த மனிதனை, ஊக்கமான ஜெபத்தில் கடவுளை நாடும்படி செய்தது. எருசலேம் நகரம் சம்பந்தமாகவும் அவருடைய மக்கள் சம்பந்தமாகவும் மனப்பூர்வமாக அவர் மன்றாடியது, கூடுதலான தரிசனத்தின் மூலமும் மறு உறுதியளிப்பின் மூலமும் பதிலளிக்கப்பட்டது.—தானியேல், 9-ம் அதிகாரம்.
அடிப்படையாக, ‘கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்த’ யோசியாவும் கடவுளுடைய பார்வையில் “மிகவும் பிரியமானவ”ராயிருந்த தானியேலும் இன்று நம்மிலிருந்து வித்தியாசப்பட்டவர்களல்ல. (2 இராஜாக்கள் 22:2; தானியேல் 9:23) அன்று கிடைக்கப்பெற்ற வேதாகமங்களை மிகுந்த ஆவலோடு படிக்கத் தனிப்பட முயற்சி எடுத்ததானது, ஆவிக்குரிய தன்மையில் விருத்தியாவதற்கு அவர்களை வழிநடத்தி, கடவுளுடன் பலமான உறவுகளை அனுபவித்து மகிழ உதவியது. யெப்தா, ஆசாப் வீட்டைச்சேர்ந்த சங்கீதக்காரன், நெகேமியா, ஸ்தேவான் போன்ற வேறு அநேக யெகோவாவின் ஊழியர்கள் விஷயத்திலும் அதையே சொல்லலாம். அவர்களுடைய காலத்தில் கிடைக்கப்பெற்ற பைபிள் பகுதிக்கு, கவனம்செலுத்தி தனிப்பட படித்தனர் என்பதற்கு இவர்கள் யாவரும் சான்றுபகர்ந்தனர்.—நியாயாதிபதிகள் 11:14-27; சங்கீதம் 79, 80; நெகேமியா 1:8-10; 8:9-12; 13:29-31; அப்போஸ்தலர் 6:15–7:53.
ஊழியம் உந்துதலாக இருக்கக்கடவது
இன்று, யெகோவாவை வருஷக்கணக்காக சேவித்துவரும் பெரும்பான்மையான ஊழியர்களிடம் தனிப்பட்ட பைபிள் படிப்பிற்கு ஓர் அட்டவணை இருக்கிறது. விழிப்புடனிருந்து, தங்களுடைய கிறிஸ்தவ பொறுப்புக்களை முழுமையாகப் பூர்த்திசெய்வதற்கு இது அத்தியாவசியமாயிருப்பதாக அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். அவ்வாறிருந்தும், தங்களுடைய நேரத்தையும் சக்தியையும், படிப்பிற்கும் தவிர்க்கமுடியாத வேறு காரியங்களுக்கும் இடையே சமநிலைப்படுத்துவதானது எப்போதும் சுலபமானதாக இல்லை என்று அவர்களில் அநேகர் ஒப்புக்கொள்கின்றனர்.
என்றாலும், உலகளாவிய ராஜ்ய பிரசங்கிப்பு வேலை முன்னேற்றமடைந்திருக்கிற இந்தக் கட்டத்தில், கிறிஸ்தவ ஊழியத்தில் உள்ள தேவைகளை சமாளிப்பதற்கு ஊக்கமான தனிப்பட்ட படிப்பின் மூலம் ஆவிக்குரிய விதத்தில் விழிப்பாயிருப்பது அத்தியாவசியமாயிருக்கிறது. கடவுளுடைய வார்த்தையிலிருந்து கிடைக்கும் புதிதான, ஆழமான உட்பார்வைமிக்க காரியங்களால் கிளர்ச்சியடைபவர்களால், பசியுள்ள இருதயங்களைத் தொடக்கூடிய சவாலை எதிர்ப்பட முடியும். ஒருவர் ஆவிக்குரிய மீன் பிடிக்கும் வேலை வாயிலாக பெருவாரியான மீன்கள் அகப்படும் இடத்தில் அனுப்பப்பட்டாலும் அல்லது பொதுவில் அசட்டை மனப்பான்மை இருக்கக்கூடிய பலமுறை ஊழியஞ்செய்யப்பட்ட பிராந்தியங்களில் ஒருவர் தொடர்ந்து சேவை செய்துவந்தாலும் இது உண்மையாயிருக்கிறது.
கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக உட்கொள்ளுங்கள்
மற்றவர்கள் செய்வது, உங்களுடைய படிப்பு பழக்கத்தை எவ்வாறு மேலுமாக அனுபவித்து மகிழலாம் என்பதன்பேரிலோ அல்லது படிப்பு சமயத்தை எவ்வாறு நீங்களும் உங்களுடைய குடும்பமும் அதிக பயனுள்ள விதத்தில் உபயோகிக்கலாம் என்பதன்பேரிலோ உங்களுக்கு புதிய யோசனைகளை அளிக்கலாம். கடவுளுடைய ஊழியர் தவிர்க்க விரும்பாத காரியங்களில் ஒன்று, கடவுளுடைய வார்த்தையைத்தானே ஒழுங்காக வாசிப்பதாகும். அநேகர் ஒவ்வொரு வாரமும் பைபிளிலிருந்து குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு அதிகாரங்கள் வாசிப்பதை இலக்காக வைத்திருக்கின்றனர். ஒரே வருஷத்தில் முழு பைபிளையும் வாசித்து முடிக்க உங்களுக்கு விருப்பமா? அப்படியானால், ஒருவேளை ஒவ்வொரு நாளும் அரை மணிநேரம் செலவழிப்பதன் மூலம் அதை வாசிப்பதற்கு அதிக நேரத்தை செலவழிப்பதில் மகிழ்ச்சியாயிருப்பீர்கள்.
ஒருமுறைக்கும் அதிகமாக பைபிளை முழுமையாக வாசித்து முடித்துவிட்டீர்களா? அடுத்த முறை ஏன் ஒரு புதிய இலக்கை வைக்கக்கூடாது? ஒரு கிறிஸ்தவ பெண், மாற்றமிருக்கவேண்டும் என்பதற்காக, பைபிள் புத்தகங்களை அவை எழுதப்பட்டிருக்கும் கிரமத்தில் வாசித்து முடித்தார். இந்தப் பெண், முன்பு கவனியாது விட்டுவிட்டிருந்த காலக்கிரம பின்னணியைச் சார்ந்த அநேக விவரணங்களைக் கண்டாராய்ந்தார். இன்னொரு கிறிஸ்தவ பெண் கடந்த ஐந்து வருஷங்களில், ஐந்து முறைகள் பைபிளை முதலிலிருந்து முடிவுவரையாக வாசித்து முடித்தார்; ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கோணத்திலிருந்து வாசித்தார். முதல் முறை, வெறுமனே முற்றிலுமாக வாசிக்கவே செய்தார். இரண்டாம் முறை வாசிக்கையில், ஒவ்வொரு அதிகாரத்தினுடைய சாராம்சத்தையும் ஒரு நோட்டில் ஓரிரண்டு வரிகளில் சுருக்கமாக எழுதிவைத்தார். மூன்றாம் வருஷத்திலிருந்து, பெரிய அளவு துணைக்குறிப்புகளடங்கிய பதிப்பை வாசிக்கத் துவங்கினார்; முதலாவது, பக்கவோரத்தில் தெரிந்தெடுத்த துணைவசனங்களை எடுத்துப்பார்த்தார்; அடுத்து, அடிக்குறிப்புகளுக்கும் பின் இணைப்பிலுள்ள விஷயங்களுக்கும் கூர்ந்த கவனம் செலுத்தினார். ஐந்தாம் முறை, பைபிள் நிலப்படங்களை உபயோகித்து புவியியல் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதலை அபிவிருத்தி செய்தார். அவர் சொல்கிறார்: “எனக்கு, பைபிள் வாசிப்பானது உணவை அருந்துவதுபோல அனுபவிக்கத்தக்கதாக ஆனது.”
பைபிளை ஊக்கமாக படிக்கும் மாணாக்கர்கள் சிலர் தனிப்பட்ட படிப்புக்கென்றே தனியொரு பைபிள் வைத்திருப்பதை பயனுள்ளதாக கண்டிருக்கின்றனர்; அதன் பக்கவோரங்களில் பிடித்தமான குறிப்புகள், சிந்தனையைத் தூண்டும் உதாரணங்கள், அல்லது பின்னர் எடுத்துப்பார்ப்பதற்காக வேறு பிரசுரங்களுடைய பக்க எண்களைச் சுருக்கமாக குறித்துவைத்துக்கொள்கின்றனர். முழுநேர ஊழியர் ஒருவர் ஒவ்வொரு மாதக் கடைசியிலும் தன்னுடைய தனிப்பட்ட படிப்பிற்கான பைபிளில், அம்மாதம் கற்றுக்கொண்ட புதிய குறிப்புகளை எழுதிவைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். “இத்தகைய அருமையான மணிநேரங்களுக்காக எதிர்பார்த்திருப்பது, அம்மாதத்திற்கான மற்ற இலக்குகளை சீக்கிரத்தில் அடைய எனக்கு உதவுகிறது,” என்று அவர் சொல்கிறார்.
சில புத்திசாலித்தனமான ஆலோசனைகள்
உங்களுடைய அட்டவணையானது தினந்தோறும், வாரந்தோறும் கட்டாயமாக செய்யவேண்டிய காரியங்களால் நிறைந்திருப்பதால், உங்களுடைய குறுகிய சமயத்தை சிறந்த விதத்தில் பயன்படுத்துவதற்கு சில உதவிக்குறிப்புகள் அவசியப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா? எதை வாசிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை உங்களோடு எடுத்துச்சென்று, ஓய்வுநேரங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டிலோ நீங்கள் சாதாரணமாக படிக்கக்கூடிய இடத்திலோ புத்தகங்களையும் இதர படிப்பு உபகரணங்களையும் முடிந்தவரை ஓரளவு சுலபமாக எட்டும் விதத்தில் அடுக்கிவையுங்கள். படிப்பு இடத்தை வசதியாக வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால் தூங்கிவிடுமளவுக்கு மிகவும் செளகரியமாக வைக்காதீர்கள். உங்களுக்கு பேச்சு நியமிப்பு இருக்கிறதா? முடிந்தவரை முன்கூட்டியே பொருளை மேல்வாரியாக வாசித்துவிடுங்கள்; பின்னர் நீங்கள் ஓய்வெடுக்கும்போதோ வேறு இதர வேலைகளைச் செய்யும்போதோ யோசனைகளை வரவிடுங்கள்.
ஒருவருக்கொருவர் பயனடையுமளவுக்கு நேரத்தை நன்கு பயன்படுத்துவதற்கு மற்றவர்கள் உங்களோடு சேர்ந்து ஒத்துழைக்கலாம். எடுத்துக்காட்டாக, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களை, ஒருவரை உங்களுக்காக சப்தமாக வாசிக்கவிட்டு, நீங்கள் சில வேலைகளை செய்துகொண்டிருக்கலாம்; அல்லது உங்களுக்காக கரிசனையோடு வாசிப்பவருக்கு டீ தயாரித்து தரலாம். குடும்பமாக எல்லாருமே சேர்ந்து தனிப்பட்ட படிப்பிற்காக ஏன் ஓர் அமைதியான சமயத்திற்காக ஒத்துக்கொள்ளக்கூடாது? “சமீபத்தில் எதை வாசித்து அனுபவித்தீர்கள்?” இப்படிக் கேட்டு சம்பாஷணையை துவங்குவதன் மூலம், சிலசமயங்களில் உங்கள் நண்பர்கள் கற்றுவைத்திருக்கும் விஷயங்களை வாங்க முடியும்.
உங்களுடைய படிப்பு நிகழ்ச்சியில் சில புதிய ஆலோசனைகளை அறிமுகப்படுத்த விரும்புகிறீர்களா? பிறரிடம் பைபிளைப்பற்றி பேசுவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவதை அநேகர் இலக்காக வைத்திருப்பதுபோல, படிப்பதற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதற்கு இலக்கு வைக்கலாம். ஒரு முழுநேர (பயனியர்) பிரஸ்தாபி படிப்பதற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ஒருசில மணிநேரங்கள் ஒதுக்குவதை இலக்காக வைக்கிறார்; தன்னுடைய இலக்கு அட்டவணையில் அத்தனை மணிநேரம் நெருங்குவதை பார்க்கையில் அவர் சந்தோஷப்படுகிறார். மற்ற ஆட்கள் டெலிவிஷன் காணும் நேரத்தை மிச்சப்படுத்தி, படிப்பதற்கு நேரமெடுத்துக்கொள்கின்றனர். அநேகர் ஆவியின் கனிகள், பைபிள் புத்தகங்களின் பின்னணி, அல்லது போதனா கலை ஆகிய படிப்புப் பொருட்களைத் தெரிந்தெடுத்து சிறிது காலத்திற்கு அவற்றின்மீது நாட்டம் செலுத்துகின்றனர். சிலர், இஸ்ரவேல அரசர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும், அல்லது அப்போஸ்தலருடைய நடபடிகளுக்கும் பவுல் எழுதிய நிருபங்களுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் காலக்கிரம அட்டவணைகளைத் தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.
வாலிபரே, உங்களுக்கு பலமான விசுவாசம் வேண்டுமா? ஒரு பிரசுரத்தை தெரிந்தெடுத்து, அடுத்த பள்ளி விடுமுறையில் ஏன் முழுமையாக அதைப் படித்துமுடிக்கக்கூடாது? முழுக்காட்டப்பட்ட மேனிலைப் பள்ளி மாணவி ஒருத்தி, உவாட்ச் டவர் சொஸையிட்டி பிரசுரித்த கடவுளுக்காக மனிதவர்க்கம் தேடுதல் (Mankind’s Search for God) என்ற புத்தகத்தைத் தெரிந்தெடுத்து வாசித்தாள். ஒவ்வொரு அதிகாரத்திலும் கற்றுக்கொண்டதை ஒரு நோட்டில் சுருக்கமாக குறிப்பெடுத்துக்கொண்டாள். அது சவால் நிறைந்ததாக இருந்தது, அவள் நினைத்ததைவிட மிகுதியான நேரமெடுத்தது. ஆனாலும், முழு புத்தகத்தையும் படித்துமுடித்த பிறகு, பைபிள் தகவலின் உண்மைத்தன்மையைக் கண்டு அவள் பெரிதும் கவரப்பட்டாள்.
கற்றுக்கொள்ள எப்போதும் ஆவலுள்ளவர்களாயிருங்கள்
நவீன நாளைய உண்மையுள்ள யெகோவாவின் ஊழியர்களில் மிகப் பெரும்பான்மையர், ஏற்கெனவே “கர்த்தருடைய வேலையில் அதிகத்தை செய்ய” வேண்டியவர்களாயுள்ளனர். (1 கொரிந்தியர் 15:58, NW) மறுபார்வை செய்த அட்டவணையும் உண்மையான பிரயாசைகளும் இருந்தாலுங்கூட, வாராவாரம் நீங்கள் கடைப்பிடித்துவரும் வேலைக்கிரமமானது அவ்வளவொன்றும் மாறாது. ஆனாலும், சத்தியத்தை ஆழமாக புரிந்துகொள்வதற்கும் வெளிப்படுத்தப்பட்டு வரும் யெகோவாவின் நோக்கங்களை முழுமையாக அறிந்து செயல்படுவதற்கும், உங்களுடைய பங்கில் ஆர்வங்குன்றாமலிருப்பது வித்தியாசத்தை உண்டுபண்ணும்.
படிப்பு முறையில் முன்னேற்றம் செய்திருப்பவர்களின் பயன்களைக் கேட்பது, மிகவும் உற்சாகமாக இருக்கிறது. சத்தியத்தைப்பற்றிய ஆழமான புரிந்துகொள்ளுதலைப் பெறுவதன்பேரில் ஒரு நம்பிக்கையான மனப்பான்மையை இழப்பதாக உணர்ந்த ஒரு கிறிஸ்தவ மனிதன், தனிப்பட்ட படிப்பிற்காகத் தன்னுடைய ஓய்வுநேரங்களை அதிகமாக செலவழிக்கக்கூடிய விதத்தில் தன் வாழ்க்கையை ஒழுங்கமைத்துக்கொண்டார். “முன்பு நான் கண்டுணராத மகிழ்ச்சியை அது எனக்கு கொண்டுவந்திருக்கிறது. பைபிளைக் கடவுள்தாமே எழுதியிருக்கிறார் என்பதன்பேரில் எப்போதும் அதிகரிக்கும் விசுவாசத்தோடு, என்னுடைய நம்பிக்கையைக் குறித்து உண்மையான உள்ளார்வத்துடன் பிறரிடம் என்னால் பேசமுடிகிறது. நான் நன்கு போஷிக்கப்பட்டவனாகவும் ஆவிக்குரிய விதத்தில் திடகாத்திரமானவனாகவும் நாளின் முடிவில் மனநிறைவுள்ளவனாகவும் உணருகிறேன்,” என்று அவர் சொல்கிறார்.
பல்வேறு சபைகளை விஜயம் செய்யும் யெகோவாவின் சாட்சிகளைச்சேர்ந்த பயணக் கண்காணி ஒருவர், இதர பயன்களை இவ்விதமாக விளக்கினார்: “தனிப்பட்ட படிப்பில் ஊக்கமாக இருப்பவர்கள், சாதாரணமாக பேசுவதில் உற்சாகமுள்ளவர்களாகவும் உயிர்ப்புள்ளவர்களாகவும் இருக்கின்றனர். பிறரோடு மிகவும் சுமூகமாக போகின்றனர், மற்றவர்கள் எதிர்மறையான குறிப்புகள் சொன்னாலும், சீக்கிரத்தில் அவர்கள் பாதிக்கப்படுவது கிடையாது. வெளி ஊழியத்திலிருக்கையில், சந்திக்கக்கூடிய ஆட்களுக்கேற்றவாறு தங்களை மாற்றியமைத்துக்கொண்டு, அவர்களின் தேவைகளைக் குறித்து விழிப்புள்ளவர்களாயிருக்கின்றனர்.”
சிலர் தங்களுடைய தனிப்பட்ட படிப்பு முறையை பகுப்பாய்வு செய்யும்போது நினைவில் வைக்க விரும்பும் ஒரு குறிப்பையும் அவர் சொல்கிறார். “வேதாகம கலந்தாலோசிப்புக் கூட்டங்களில், அநேகர் தங்கள் குறிப்புகளை அச்சுத்தாளிலிருந்து அப்படியே வாசிக்க முற்படுகின்றனர். அவர்கள் ஏற்கெனவே கற்றறிந்த விஷயங்களோடு அல்லது தங்களுடைய சொந்த வாழ்க்கையோடு, சிந்திக்கப்படும் பொருள் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை தியானித்துப்பார்த்தால் அதிகம் பயனடைவார்கள்.” இந்த விஷயத்தில், நீங்கள் முன்னேற்றம் செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?
தானியேல் தீர்க்கதரிசி 90-க்கும் மிக அதிகமான வருஷங்கள் வாழ்ந்த பிறகும், யெகோவாவின் வழிகளைக் குறித்து தனக்குப் போதுமான அளவு தெரியும் என்று உணரவில்லை. தன்னுடைய அந்திம காலத்திலே, அவர் தனக்கு முழுமையாக விளங்காத ஒரு விஷயத்தைக் குறித்து, “என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும்” என்று விசாரித்தார். (தானியேல் 12:8) கடவுளுடைய சத்தியத்தைப்பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற இந்த நிலையான ஆவலானது, நிகழ்ச்சி-நிரம்பிய வாழ்நாள் முழுவதும் அவருடைய மேம்பட்ட உத்தமத்திற்கான அடிப்படையாயிருந்தது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.—தானியேல் 7:8, 16, 19, 20.
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக உறுதியாய் தரித்திருப்பதில் அவருடைய ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் அதே சரிநிகரான பொறுப்பு இருக்கிறது. ஆவிக்குரிய விதத்தில் பலமாக வைத்துக்கொள்ள கற்பதற்கு எப்போதும் ஆவலுள்ளவர்களாயிருங்கள். உங்களுடைய வாராந்தர, மாதாந்தர, அல்லது வருடாந்தர தனிப்பட்ட படிப்பு அட்டவணையில், ஒன்று, இரண்டு புதிய அம்சங்களைச் சேர்த்துக்கொள்ள முற்படுங்கள். நீங்கள் எடுக்கிற எந்தவொரு சொற்பமான பிரயாசையையும் கடவுள் எவ்வாறு ஆசீர்வதிப்பார் என்பதைக் கண்டுணருங்கள். ஆம், தனிப்பட்ட பைபிள் படிப்பையும் அதன் பயன்களையும் அனுபவித்து மகிழுங்கள்.—சங்கீதம் 107:43.