‘கடவுளுடைய வீட்டை’ போற்றுதல் மனப்பான்மையோடு நோக்குதல்
“கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.”—சங்கீதம் 27:4.
போற்றுதல் மனப்பான்மையுடைய தாவீது ராஜா, யெகோவாவின் ஆலயத்தை இன்பகரமானதாய், அல்லது மனமகிழ்ச்சியூட்டுவதாய் கண்டார். இன்றுள்ள உண்மை வணக்கத்தின் மையங்களைப் பற்றி நீங்கள் அவ்வாறு உணருகிறீர்களா? உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகங்களிலுள்ள 95-க்கும் அதிகமான பெத்தேல் இல்லங்கள், நம் காலத்தில் யெகோவாவின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட கட்டடங்களில் அடங்கும்.
“பெத்தேல் சேவையில் என் பல வருடங்களை நான் நினைத்துப் பார்ப்பது என்னை ஆழ்ந்த நன்றியறிதலாலும் அதிகமான போற்றுதலாலும் நிரப்புகிறது. இது வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது,” என்று ஜெர்மனி இல்லத்தில் 1948-ல் சேவைசெய்ய ஆரம்பித்த ஹெல்கா சொல்கிறார். 1993-ன் ஊழிய ஆண்டில் ‘கர்த்தருடைய மகிமையை பார்த்த,’ உலகமெங்கும் உள்ள சந்தோஷமான 13,828 பெத்தேல் ஊழியர்களில் ஹெல்காவும் ஒருவர். பெத்தேல் என்ற பெயர் தெளிவாக எதை அர்த்தப்படுத்துகிறது? யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொருவரும், பெத்தேலில் ஊழியம் செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி, இந்த ஏற்பாட்டை அவர்கள் எப்படிப் போற்றுதல் மனப்பான்மையோடு காணலாம்?
பக்தியை அவசியப்படுத்தும் ஒரு பெயர்
“பெத்தேல்” ஒரு மிகப் பொருத்தமான பெயர். ஏனென்றால் எபிரெய வார்த்தையாகிய பெத்யேல் (Behth-ʼElʹ) என்றால், “கடவுளுடைய வீடு” என்று அர்த்தம். (ஆதியாகமம் 28:19, NW, அடிக்குறிப்பு) ஆம், பெத்தேல் என்பது கடவுளையும் அவருடைய சித்தத்தையும் முக்கியத்துவமாகக் கருதும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வீட்டைப்போல் இருக்கிறது, அல்லது ‘ஞானத்தினாலே கட்டப்பட்ட வீடு’ போல இருக்கிறது. (நீதிமொழிகள் 24:3) “ஒரு குடும்பத்தில் வாழ்வதுபோன்று அது இருக்கிறது. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தினசரி அலுவல்களை நாங்கள் கொண்டிருக்கிறோம்,” என்று ஹெர்ட்டா போற்றுதலுணர்வோடு சொல்கிறார்கள். இவர்களும் ஹெல்காவைப் போலவே அதே பெத்தேலில் 45 வருடங்களுக்கு மேலாக ஊழியம்செய்து வருகிறார்கள். இந்தப் பெரிய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் தன் நடவடிக்கையையும் தன் இடத்தையும் உடையவராக இருக்கிறார். இது அவரைச் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணரச் செய்கிறது. பெத்தேல் என்ற பெயருக்குப் பொருத்தமாக, நல்ல ஏற்பாடுகளும் ஒழுங்கமைப்பும் ஒவ்வொரு துறையையும் தனிச்சிறப்புள்ளதாக்குகிறது. இது சமாதானத்தை ஆதரிப்பதற்கும், ராஜ்ய செய்தியின் பிரசங்கவேலையை பலன்தரத்தக்கதாக ஆக்குவதற்கும், சபைகள் ‘கடவுளுடைய வீட்டை’ உயர்மதிப்புக்குரியதாகக் கருதுவதற்கும் ஆணித்தரமான காரணத்தைக் கொடுக்கிறது.—1 கொரிந்தியர் 14:33, 40.
அப்படிப்பட்ட வசதிகள் ஏன் அவசியம்? உதாரணமாக இந்தப் பத்திரிகை ஒரு பெத்தேல் அச்சாலையில் அச்சிடப்பட்டது. இயேசு கிறிஸ்துவால் முன்காட்சியாகக் காணப்பட்ட ராஜ்ய செய்தியின் பிரசங்கமும் ஆவிக்குரிய உணவின் பகிர்ந்தளித்தலும், மனமார வேலைசெய்யும் ஊழியர்களால் ஆதரிக்கப்பட்டு யெகோவாவின் வணக்கத்தார் அனைவராலும் உயர்மதிப்பாகக் கருதப்படும் பெத்தேல் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட ஏற்பாடுகளை அத்தியாவசியமாக்குகிறது.—மத்தேயு 24:14, 45.
இங்குள்ள வேலைநாள் அலுவலைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? ஹெல்காவும் ஹெர்ட்டாவும் வாழும் இடத்தில், 800-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களில் பலர் அன்றாட தயாரிப்பைச் செய்வதற்காக முன்கூட்டியே எழுந்திருந்தாலும், ஒரு ராகமான மணி ஓசை காலை 6:30 மணிக்கு வசிப்பிட கட்டடங்கள் எங்கும் ஒலிக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமைவரை, காலை 7:00 மணிக்குள் சாப்பாட்டு அறைகளில் தின வாக்கிய கலந்தாலோசிப்புக்காக, அல்லது காலை வணக்கத்துக்காகக் குடும்பம் கூடிவருகிறது. ஊட்டச்சத்துமிக்க காலை உணவு பின்தொடர்கிறது. ஒவ்வொரு வேலைநாளும் 8:00 மணிக்கு ஆரம்பிக்கிறது. அது எட்டு மணிநேரங்களுக்குத் தொடர்கிறது. மதிய உணவு வேளைக்காக மட்டும் இடைவேளை இருக்கிறது. (குடும்பம் சனிக்கிழமைகளில் பொதுவாக பாதிநாள் வேலைசெய்கிறது.) சமையலறை, அச்சகம், சலவையகம், அலுவலகங்கள், பழுதுபார்க்கும் இடங்கள், புத்தகக் கட்டுமானத் துறை, அல்லது வேறு எந்தத் துறையானலும்சரி, அங்கு அதிக வேலை இருக்கிறது.
மாலைநேரங்களிலும் வார இறுதிகளிலும், குடும்பத்தின் அங்கத்தினர்கள் உள்ளூர் சபைகளோடு கூட்டங்களிலும் பொது பிரசங்க ஊழியத்திலும் ஈடுபடுகின்றனர். பல பெத்தேல் சகோதரர்கள் இந்தச் சபைகளில் மூப்பர்களாக அல்லது உதவி ஊழியர்களாக இருக்கின்றனர். இந்த ஒத்துழைப்பை உள்ளூர் சாட்சிகள் உண்மையில் போற்றுகின்றனர். இரண்டு குழுவும் ஒரு சரீரம்போல ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் புரிந்துகொள்ளுதலுடனும் ஒத்திசைவோடு ஒன்றுசேர்ந்து உழைக்கின்றனர். (கொலோசெயர் 2:18) ஒவ்வொரு பெத்தேல் ஊழியரும் ‘கடவுளுடைய வீட்டில்’ அவருடைய வேலை, மற்ற செயல்களைவிட முக்கியத்துவமுடையதாகிறது என்பதை அறிந்திருக்கிறார். எனினும், பிரசங்க வேலையில் உற்சாகமும் சபையில் ஆர்வமிக்க ஈடுபாடும், சமநிலையான நோக்குநிலையோடு சேர்ந்து, பெத்தேல் ஊழியரின் ஆவிக்குரிய தன்மையை பலப்படுத்தி, அவரின் சந்தோஷத்தை அதிகரித்து, குடும்பத்தின் மிகவும் பயனுள்ள ஓர் அங்கத்தினராக அவரை ஆக்கும். முழு ஆத்துமாவோடுகூடி பக்தியோடு தொடர்புள்ள ஒரு பெயரை உடைய ‘வீட்டில்’ வேலைசெய்யும்போது, இப்படிப்பட்ட குணங்கள் எவ்வளவு அத்தியாவசியமானவையாக இருக்கின்றன!
பெத்தேல் ஊழியத்தில் வெற்றிகாணுதல்
யெகோவாவின் சாட்சிகளில் பலரைப் பெத்தேல் ஊழியத்தில் வெற்றிகாணும்படி செய்திருக்கிறது எது? பிரான்ஸில் உள்ள பல வருட அனுபவங்களையுடைய பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் பின்வருமாறு கருத்துக்கூறுகிறார்கள்: “யெகோவாமேல் அன்பு. அவர் எங்கே எங்களை பயன்படுத்தினாலும், அங்கே விடாப்பிடியாய்த் தொடர்ந்து அவரைச் சேவிக்க வேண்டும் என்கிற திடத்தீர்மானம்; மனத்தாழ்மை, அடங்கிநடத்தல், எங்களுக்கு சொஸையிட்டி கொடுக்கும் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிதல்.” (டெனிஸ்) “ரோமர் 12:10-ல் பவுல் சொன்ன, ‘கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்,’ என்ற நியமத்தை மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிந்தேன். நம்முடைய சொந்த அபிப்பிராயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது, ஆனால் மாறாக, மற்றவர்களின் அபிப்பிராயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற முக்கியத்துவத்தை இந்த வசனம் நமக்குக் காண்பிக்கிறது. அதாவது, முதன்மை ஸ்தானத்தை தேடியலையக்கூடாது.” (ஷான்-ஷாக்) “காரியங்களை மாம்சப்பிரகாரமான, மனித நோக்குநிலையில் பார்க்க ஆரம்பித்தால் பெத்தேல் ஊழியத்தைப் பற்றிய நம்முடைய மதிப்பு அழிந்துபோகும்,” என்று பார்பாரா சொல்கிறார்கள். “ஏனென்றால் இது யெகோவா தம்முடைய அமைப்பை வழிநடத்துகிறார் என்ற உண்மையை மறக்கும்படி எங்களைச் செய்யக்கூடும். மற்றவர்களின் அபூரணங்களால் நாம் இடறலடைந்தால் அப்படிப்பட்ட மதிப்புணர்வு இழக்கப்படக்கூடும்.”
பெத்தேலில் உள்ள ஒவ்வொருவரும் அபூரணர். எனவே கூட்டுறவு அதிகக் கவனமான சிந்தனையைத் தேவைப்படுத்துகிறது. இளைஞர் அல்லது புதிதாக வந்திருக்கிறவர்கள் தங்களுடைய உடன் வயதினரோடு மட்டும் கூட்டுறவை வைத்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. குற்றம்சாட்டுகிறவர்கள் அல்லது சாதகமற்ற வகையில் சிந்திக்கும் குணமுடையவர்கள் கட்டியெழுப்பும் கூட்டுறவை பெத்தேலில் அல்லது சபையில் உண்டுபண்ணுவதில்லை. மறுபட்சத்தில், யாக்கோபு 3:17-ல் சொல்லப்பட்ட ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ பிரதிபலித்தல் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. இது “முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.” நீடிய பொறுமை மற்றும் தயவு ஆகியவற்றோடு சேர்ந்து அப்படிப்பட்ட குணங்கள், ‘கடவுளுடைய வீட்டில்’ காணப்படத்தக்கதாக இருக்கின்றன. இவை அங்கு வேலைசெய்பவர்களை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்க அனுமதிக்கின்றன. விஜயம் செய்யும் சாட்சியல்லாதவர்களும்கூட, ஊழியர்களின் நன்நடத்தைக்காகவும், சிநேகப்பான்மைக்காகவும், சந்தோஷமான ஆவிக்காகவும் பாராட்டுதலைத் தெரிவிக்கின்றனர்.
ஆனி, 70 வயதுக்கு மேற்பட்டவர், ஜெர்மனியில் 1956-லிருந்து பெத்தேல் குடும்பத்தினரின் ஓர் அங்கத்தினராக இருக்கிறார். அந்தச் சகோதரி தான் சேவிக்க எப்போதும் தயாராக இருக்கும் தன்மையை எப்படிக் காத்துக்கொள்கிறார்கள் என்பதை இவ்வாறு விளக்குகிறார்கள்: “என்னுடைய ஆவிக்குரிய நலனுக்காக, சொஸையிட்டியின் பிரசுரங்களைப் படிப்பதில் பின்தங்காது இருப்பதற்கு, கூட்டங்களுக்கு ஒழுங்காகப் போவதற்கு, பிரசங்கித்தலில் ஒழுங்காக பங்கெடுப்பதற்கு அதிகமான முயற்சியை எடுக்கிறேன். ஒவ்வொரு காலையும் உடற்பயிற்சி செய்வதன்மூலமும் பல தடவைகள் லிஃப்ட் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன்மூலமும் முக்கியமாக ஊழியத்தில் முடிந்த இடங்களிலெல்லாம் நடந்துபோவதன்மூலமும் என் உடல் ஆரோக்கியத்தை நான் காத்துக்கொள்ளவும் முயற்சிசெய்கிறேன்.”
பெத்தேல் வாழ்க்கையில் உள்ள பலர் ஆனி சொல்வதை ஒத்துக்கொள்வார்கள். அவர்கள் என்றுமே கற்றுக்கொள்வதை நிறுத்துவதில்லை, என்றுமே வேலைசெய்வதை நிறுத்துவதில்லை. உடல்நலம், அவர்கள் போதுமான தூக்கம்பெற்று, கொஞ்சம் உடற்பயிற்சி செய்து, சாப்பிடுதல் மற்றும் குடித்தல் விஷயத்தில் சமநிலையைக் காத்துக்கொள்ளுவதை தேவைப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தனிப்பட்ட ஜெபம் மற்றும் பைபிள் படிப்பை விட்டுவிடுவதில்லை.
பெத்தேலில் பரிசுத்த சேவையை உயர்வாக மதித்தல்
“நீங்க எங்க வேலை பார்க்கிறீங்க?” என்பது பொதுவாக பெத்தேல் அங்கத்தினர்களிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி. வேலை நியமிப்புகள் வித்தியாசமானவை. ஆனால் ஒவ்வொன்றும் எல்லாராலும் உயர்மதிப்புடையதாக கருதப்படவேண்டும். ஏன்? ஏனென்றால் அப்படிப்பட்ட ஒவ்வொரு நியமிப்பும் பரிசுத்த சேவையின் பாகமாக இருக்கிறது. உதாரணமாக, ஆவிக்குரிய உணவை அச்சடிக்கும் ஓர் இயந்திரத்தை இயக்குவது, துணிகளை துவைப்பது, குடும்பத்துக்காக சமையல்செய்வது, சுத்தம்செய்வது, அல்லது அலுவலக வேலை செய்வது எதுவானாலும்சரி அப்படித்தான். முன்சொல்லப்பட்டுள்ளதுபோல, கிறிஸ்தவர்கள் பட்சபாதமாக வேறுபாடுகளை உண்டாக்குவதில்லை. ஆலயத்தில், அதன் வளாகத்தில் மேலும் சாப்பாட்டு அறைகளில் நடத்தப்பட்ட அவசியமான அலுவல்கள் யாவையும் ஆசாரியர்களும் லேவியர்களும் செய்தனர். அவையெல்லாம் யெகோவாவுக்குச் செய்யப்படும் பரிசுத்த சேவையாகக் கருதப்பட்டன என்பதை நினைவில் வையுங்கள். அவை, விலங்குகளைக் கொன்று, பலிக்காக ஆயத்தப்படுத்துவது, எண்ணெய் விளக்குகளில் எண்ணெய் நிரப்புவது, சுத்தம்செய்வதும் காவல்காரர்களாக வேலைகளைச் செய்வதையும்கூட உட்படுத்தியிருந்தன. அதைப்போலவே, பெத்தேலில் உள்ள ஒவ்வொரு நியமிப்பும், “கர்த்தருடைய கிரியையிலே” திருப்திதரும், பிரயோஜனமான செயலாகும். எனவே அது ஒரு விசேஷித்த சிலாக்கியம்.—1 கொரிந்தியர் 15:58.
‘கடவுளுடைய வீட்டை’ போற்றுதல் மனப்பான்மையோடு பார்ப்பதைத் தடைசெய்யும் ஒரு குணத்தை சுருக்கமாகச் சிந்திக்கலாம். பெத்தேலிலும் வெளியிலும் இருக்கும் கிறிஸ்தவர்கள் பகை, பொறாமைக்கு எதிராகத் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். அவை “எலும்புருக்கி.” (நீதிமொழிகள் 14:30) பெத்தேல் ஊழியர்களின் ஊழிய சிலாக்கியங்களைப் பற்றி பகைமை கொள்பவர்களாக இருப்பதற்கு யாருக்கும் காரணம் கிடையாது. மேலுமாக, ஒரு பெத்தேல் குடும்பத்துக்குள் பொறாமை கொள்வதற்கு எந்தவித இடமுமில்லை. இது மாம்சத்தின் கிரியைகளில் ஒன்றாக இருக்கிறது. மனத்தாழ்மையோடு காத்திருங்கள்—மற்றவர்கள் பெரிய சிலாக்கியங்களைப் பெறும்போது, ஒருவர் கவனியாமல் விடப்பட்டதுபோல் ஒருவேளை உணர்ந்தால், அதுவே நல்ல புத்திமதியாக இருக்கிறது. மேலும் என்னவென்றால், மிக வித்தியாசப்படும் பொருளாதார பின்னணிகளில் உள்ள நபர்கள் பெத்தேலில் நெருக்கமாக வாழ்கின்றனர். ‘ஒருவர் மற்றொருவருடையதோடு’ தன்னுடைய சூழ்நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தால் எவ்வளவு துயர்தருவதாய் இருக்கும்! “உண்ணவும் உடுக்கவும்” இருந்தால் போதுமென்று இருத்தல், ‘கடவுளுடைய வீட்டில்’ தங்களுடைய ஊழியத்தைப் பல பத்தாண்டுகளாகத் தொடர்வதற்கு உதவிசெய்திருக்கிறது.—கலாத்தியர் 5:20, 26; 6:4; 1 தீமோத்தேயு 6:8.
பெத்தேலில் சம்பளம் கொடுக்கப்படாமல் செய்யப்படும் வேலைகள்மூலம்—கடவுள் மற்றும் அயலார் பேரிலுள்ள அன்பினால் தன்னலம் கருதாது செய்யப்படும் வேலையின்மூலம்—யெகோவாவின் சாட்சிகளும் மற்ற லட்சக்கணக்கானவர்களும் அதிகமாகப் பலனடைகின்றனர். பெத்தேல் இல்லங்கள், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் அச்சகங்கள், மற்ற தேவராஜ்ய வசதிகளும் மனமுவந்தளிக்கப்படுகிற நன்கொடைகளால் நிதியுதவி செய்யப்படுகின்றன. (2 கொரிந்தியர் 9:7) இஸ்ரவேலின் தாவீது ராஜா, பிரபுக்கள், தலைவர்கள் ஆகியோர் போல சொஸையிட்டிக்கு ஒத்துழைப்பு மற்றும் நிதி ஆதரவை அளிப்பதன்மூலம், நாம் நம்முடைய உயர்மதிப்பையும் போற்றுதலையும் ‘கடவுளுடைய வீட்டிற்கு’ காண்பிக்க முடியும். (1 நாளாகமம் 29:3-7) பெத்தேலில், ‘கர்த்தருடைய மகிமையைப் பார்ப்பது’ எப்படி என்பதை இப்போது நாம் கவனிக்கலாம்.
‘கடவுளுடைய வீட்டில்’ ஆசீர்வாதங்கள்
அசெம்பிளிக்கு போயிருக்கையில் யெகோவாவைச் சேவிக்கும் சந்தோஷமான வணக்கத்தார்களால் சூழப்பட்டு இருப்பதால், ஒருவிதமான ஆழமான திருப்தியடைந்த உணர்வை நீங்கள் அடைகிறீர்களா? இப்போது கற்பனை செய்துபாருங்கள், ஒரு பெத்தேல் ஊழியர், சகோதரத் தொகுதியின் மத்தியில் யெகோவாவைச் சேவிக்கும் சிலாக்கியத்தை ஒவ்வொரு நாளும் பெறுகிறார்! (சங்கீதம் 26:12) ஆவிக்குரிய வளர்ச்சிக்கான என்னே சிறந்த எதிர்பார்ப்புகளை அது கொடுக்கிறது! ஒரு சகோதரர் தன் ஆளுமையை உருவமைப்பதற்கு அதிகத்தை பெத்தேலில் ஒரு வருடத்துக்குள் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். அதைச் செய்ய அவருக்கு வேறு இடத்தில் மூன்று வருடம் எடுத்தது. ஏன்? வேறு எங்கும் அவர் முதிர்ச்சியான அத்தனை கிறிஸ்தவ ஆளுமைகளின் விசுவாசத்தைக் கவனித்துப் பின்பற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை.—நீதிமொழிகள் 13:20.
பெத்தேலில் ஒரு நபர், அடையாளப்பூர்வமாக சொல்லப்போனால், அனுபவமிக்க ஆலோசனைக்காரர்களால் சூழப்பட்டிருக்கிறார். கூடுதலாக, காலை வணக்கத்தின்போதும் பெத்தேல் குடும்ப காவற்கோபுர படிப்பின்போதும் திங்கட்கிழமை மாலைகளில் கொடுக்கப்படும் பேச்சுக்களுக்கு செவிகொடுக்கும்போதும் நன்கு தயாரிக்கப்பட்ட குறிப்புகள் கொடுக்கப்படுவதைக் கேட்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். புதியவர்கள் பெத்தேல் நுழைவுப் பள்ளியில் அறிவுரைகளைப் பெறுகின்றனர்; முழு பைபிளையும் முதல் 12 மாதங்களுக்குள் வாசிக்கும்படி நியமிக்கப்படுகிறார்கள்.
மற்ற நாடுகளிலிருந்து வரும் அறிக்கைகளும் அனுபவங்களும் கூடுதலான உற்சாகத்தைக் கொடுக்கின்றன. மேலுமாக, நிர்வாகக் குழுவைச் சேர்ந்த அங்கத்தினர் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் கிளை அலுவலகங்களுக்கு விஜயம் செய்கின்றனர். “அவர்களுக்கு அதிகம் செய்யவேண்டியது இருந்தாலும், ஒரு சிநேகப்பான்மையான வார்த்தைக்கு அல்லது ஒரு புன்முறுவலுக்கு நேரத்தை அந்தச் சகோதரர்கள் எப்போதும் காண்கின்றனர்,” என்று ஹெல்கா பிரதிபலிக்கிறாள். அப்படிப்பட்ட உண்மைமாறா மனிதர்களின் புத்துயிரூட்டும் அடக்கமான நடத்தையை நேரடியாகக் காண்பது எவ்வளவு உற்சாகமூட்டுவதாக இருக்கிறது!
கடவுளுடைய அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பதையும், அவருடைய பரிசுத்த ஆவி எப்படி விருப்பமுள்ள இருதயங்களையும் கைகளையும் செயல்படும்படி தூண்டுவிக்கிறது என்பதையும் பெத்தேலில்தான் விசேஷமாக ஒருவர் தெளிவாகக் காணமுடியும். “பெத்தேலில் ஒருவர், ‘கிரியையின் மையத்துக்கு’ மிக அருகில் இருப்பதாக உணர முடியும்,” என்று ஒரு சகோதரர் விளக்குகிறார். இவர் பிரான்ஸ் பெத்தேலில் 1949-லிருந்து சேவைசெய்து வருகிறார். அவர் இவ்வாறு தொடர்கிறார்: “என்னைப் பொறுத்தவரை, யெகோவாவின் சேவையில் அதிகமான காலத்தையும் பலத்தையும் செலவிடுவதற்கும் மிக அதிக எண்ணிக்கையான சகோதரர்களுக்குச் சேவைசெய்வதற்கும் என்னை அனுமதிக்கும் ஒருவகையான முழுநேர ஊழியமே பெத்தேல் என நான் உண்மையில் சொல்லமுடியும்.” கடவுளின் சித்தத்தைச் செய்வதாகிய அது, நம் வாழ்க்கையின் உண்மையான நோக்கம்தானல்லவா? பெத்தேலில் ஒருவர், “நாள் முழுவதும் துதிக்க” முடியும். என்னே ஓர் ஆசீர்வாதம்!—சங்கீதம் 44:8, NW.
நாம் கண்டதுபோலவே, பெத்தேல் வீட்டில் வேலைசெய்யும் ஒருவர் யெகோவாவின் மகிமையைப் பார்க்க முடியும், அநேக வித்தியாசமான ஆசீர்வாதங்களையும் கண்டடையமுடியும். (எபிரெயர் 6:10) ‘கடவுளுடைய வீட்டில்’ ஊழியம்செய்வது உங்களுக்கு பிரயோஜனமானதாக இருக்கக்கூடுமா? யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் நல்ல ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான ஆரோக்கியத்தை அனுபவிக்கும், குறைந்தது 19 வயதாவதுள்ள தீமோத்தேயுவைப் போன்று “சகோதரராலே நற்சாட்சி பெற்ற,” நபர்கள் பெத்தேலில் சேவை செய்ய விண்ணப்பிக்கலாம். (அப்போஸ்தலர் 16:2) முன்பு சொல்லப்பட்டவர்கள்போல பலர், பெத்தேல் சேவையை அவர்களுடைய வாழ்க்கைத் தொழிலாக மாற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு சங்கீதக்காரனின் ஆழ்ந்த ஏக்கம்—‘அவருடைய ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பது’—நிஜமாகி இருக்கிறது.
பெத்தேலில் உள்ள சகோதர சகோதரிகள் தங்களுடைய வேலைகளை விருப்பத்தோடும் சந்தோஷத்தோடும் செய்துவருகின்றனர். யெகோவாவின் சாட்சிகள், இவர்கள் காண்பிக்கும் சுயதியாகத்துக்காக மிகுந்த மதிப்புடையவர்களாக இருக்கின்றனர். நாம் அனைவரும் யெகோவாவை பெத்தேலிலோ வேறு எங்கோ சேவித்தாலும், தாவீது ராஜா ‘கடவுளுடைய வீட்டை’ போற்றுதல் மனப்பான்மையோடு, அல்லது மனமகிழ்ச்சியோடு, கண்டதுபோல, நாமும் காணும்படி உணர்வதற்கு நல்ல காரணத்தை கொண்டிருக்கிறோம்.
[பக்கம் 31-ன் படம்]
இந்தக் கிறிஸ்தவர்கள் ஜெர்மனியிலுள்ள பெத்தேலில் பல பத்தாண்டுகளாக பரிசுத்த சேவையில் மகிழ்ச்சியைக் கண்டுவருகின்றனர்