அதிகாரத்திற்கு என்ன நேரிட்டிருக்கிறது?
சிந்திக்கும் மக்கள் அதிகாரத்திற்கான தேவையைக் காண்கின்றனர். ஏதாவதொரு வகையான அதிகார அமைப்புமுறையின்றி, மனித சமுதாயம் விரைவில் பெருங்குழப்பமான நிலையை அடைந்துவிடும். எனவே, அரசமைப்புச் சட்டத்தைப்பற்றிய பிரசித்திப்பெற்ற ஒரு பிரஞ்சு புத்தகம் குறிப்பிடுகிறது: “எந்தவொரு மனித தொகுதியிலும், இருசாராரான மக்கள் காணப்படவேண்டும்: கட்டளையிடுபவர்களும் கீழ்ப்படிபவர்களும், ஆணை பிறப்பிப்பவர்களும் அதற்கு இசைந்து செல்பவர்களும், தலைவர்களும் அங்கத்தினர்களும், ஆளுநர்களும் ஆளப்படுபவர்களும். . . . அதிகாரம் இருப்பது எந்தவொரு மனித சமுதாயத்திலும் காணப்படலாம்.”a
என்றாலும், இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு, குறிப்பாக 1960-களிலிருந்து அதிகாரத்திடமான மனநிலைகள் மாறியிருக்கின்றன. அந்தக் காலப்பகுதியைப்பற்றி குறிப்பிடுவதாய், பிரஞ்சு என்ஸைக்ளோப்பீடியா யூனிவெர்சாலிஸ் “அதிகார வரிசைக்கு எதிராயும் அதிகாரத்திற்கு எதிராயும் ஏற்பட்ட நெருக்கடி” ஒன்றைப்பற்றி பேசுகிறது. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி, பைபிளின் மாணவர்களுக்கு எவ்விதத்திலும் ஆச்சரியமாக இல்லை. அப்போஸ்தலன் பவுல் முன்னறிவித்தார்: “இவ்வுலகின் கடைசி யுகம் ஒரு கலவரத்தின் காலமாக இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள்! மக்கள் தன்னையும் பணத்தையும் தவிர எதையும் நேசிக்கமாட்டார்கள்; அவர்கள் வீண்பெருமையுள்ளவர்களாகவும், வீம்புள்ளவர்களாகவும், பழிதூற்றுகிறவர்களாகவும் இருப்பார்கள்; பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும் . . . ; அவர்கள் தங்கள் பகைமைகளை விட்டுக்கொடுக்காதவர்களாகவும், . . . கட்டுப்பாடற்றவர்களாகவும் கோபாவேசமுள்ளவர்களாகவும், . . . தற்செருக்கு நிரம்பியவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் கடவுளைவிட தங்கள் இன்பங்களை அதிகமாக நேசிப்பார்கள்.”—2 தீமோத்தேயு 3:1-4, தி ரிவைஸ்ட் இங்கிலிஷ் பைபிள்.
அதிகாரம் நெருக்கடியில்
இந்தத் தீர்க்கதரிசனம் நம்முடைய நாளையும் யுகத்தையும் நன்றாகவே விளக்குகிறது. அதிகாரம் எல்லா நிலைகளிலும்—குடும்பத்தில், பொதுப் பள்ளியில், பல்கலைக்கழகத்தில், வியாபார நிறுவனத்தில், உள்ளூர் மற்றும் தேசிய அரசாங்கத்திலும்—சவால்விடப்படுகிறது. பாலின புரட்சி, அடிப்படை ராப் இசை, மாணவ ஆர்ப்பாட்டங்கள், திடீர் வேலை நிறுத்தங்கள், சட்ட மறுப்புகள், பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகிய யாவும் அதிகாரத்திற்கான மதிப்பில் சீர்குலைவிற்கான அடையாளங்களே.
பிரஞ்சு ஆட்சியியல் நிறுவனத்தாலும் பாரிஸ் நாளிதழாகிய லா மாண்ட் என்பதாலும் பாரிஸில் ஒழுங்கமைக்கப்பட்ட கருத்தரங்கு ஒன்றில், பேராசிரியர் இவ் மேனி குறிப்பிட்டார்: “சட்டப்பூர்வ தகுதியால் ஆதரிக்கப்பட்டால் மட்டுமே அதிகாரம் நிலைத்திருக்க முடியும்.” அதிகாரத்தில் இருப்பவர்களுடைய சட்டப்பூர்வ தகுதியை அநேகர் சந்தேகிப்பதே இன்றைய அதிகாரத்திற்கான நெருக்கடிக்கு ஒரு காரணம். அதாவது, அதிகாரத்தில் இருப்பதற்கான அவர்களுடைய உரிமையைச் சந்தேகித்தனர். 1980-களின் துவக்கத்தில், ஐக்கிய மாகாணங்களில் உள்ள மக்கள்தொகையினரில் 9 சதவீதமானோர், ஆஸ்திரேலியாவில் 10 சதவீதமானோர், பிரிட்டனில் 24 சதவீதமானோர், பிரான்ஸில் 26 சதவீதமானோர், மற்றும் இந்தியாவில் 41 சதவீதமானோர் தங்களுடைய அரசாங்கத்தைச் சட்டப்பூர்வ தகுதியற்றதாகக் கருதினர் என்று ஒரு சுற்றாய்வு வெளிப்படுத்தியது.
சட்டப்பூர்வ தகுதியுள்ள அதிகாரத்திற்கான மனிதனின் தேடுதல்
பைபிளின்படி மனிதன் ஆரம்பத்தில் கடவுளுடைய நேரடியான அதிகாரத்தின்கீழ் இருந்தான். (ஆதியாகமம் 1:27, 28; 2:16, 17) என்றாலும், மிக ஆரம்பத்திலேயே, மனிதர் தங்கள் சிருஷ்டிகரிடமிருந்து ஒழுக்கசம்பந்தமான சுதந்திரத்தைக் கோரினர். (ஆதியாகமம் 3:1-6) தேவாட்சி, அல்லது கடவுள்-ஆட்சியை மறுத்துவிட்டதால், அவர்கள் அதிகாரத்திற்கான மற்ற ஒழுங்குமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. (பிரசங்கி 8:9) சிலர் தங்கள் அதிகாரத்தை பலத்தின்மூலம் உறுதிப்படுத்தினர். அவர்களுக்கு, வல்லமையே உரிமையாக இருந்தது. தங்களுடைய விருப்பத்தைச் செயல்படுத்துவதற்குப் பலமுள்ளவர்களாக இருந்தால், அதுவே போதுமானது. என்றாலும், ஆளுவதற்கான தங்களுடைய உரிமையை சட்டப்பூர்வ தகுதியுள்ளதாக்குவதற்கான தேவையை அநேகர் உணர்ந்தனர்.
ஆரம்ப காலங்களிலிருந்தே பல ஆட்சியாளர்கள் தங்களைக் கடவுட்கள் என்றோ கடவுளிடமிருந்து வல்லமையைப் பெற்றிருந்தார்கள் என்றோ சொல்வதன்மூலம் இதைச் செய்தார்கள். இது மெசபட்டேமியாவின் தொடக்க ஆட்சியாளர்களாலும் பண்டைய எகிப்தின் பார்வோன்களாலும் உரிமைபாராட்டப்பட்ட “பரிசுத்த அரசத்துவம்” என்ற கற்பனைக் கருத்தாக இருக்கிறது.
மகா அலெக்ஸாண்டரும், அவரைத் தொடர்ந்துவந்த கிரேக்க அரசர்களும், ரோம பேரரசர்களில் பலரும், கடவுட்களாக இருப்பதாக உரிமைபாராட்டி, வணங்கப்படவேண்டும் என்றும்கூட வற்புறுத்திக் கேட்டனர். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களுக்குக் கீழிருந்த ஒழுங்குமுறைகள், “ஆட்சியாளர் கருத்துவேறுபாட்டுக் குழுக்கள்,” (ruler cults) எனப்பட்டன; அவற்றின் நோக்கம் என்னவென்றால், அந்த ஆட்சியாளனுடைய அதிகாரத்தை, கைப்பற்றப்பட்ட பலதரப்பட்ட மக்கள் மீது வலுப்படுத்துவதாகும். ஆட்சியாளனை வணங்கத் தவறுவது அரசுக்கு எதிரான ஒரு செயலாகக் கண்டனம் செய்யப்பட்டது. ரோமின் மரபுரிமை பண்பு (The Legacy of Rome) என்பதில் பேராசிரியர் எர்னஸ்ட் பார்க்கர் எழுதினார்: “[ரோம] பேரரசர் தெய்வத்தன்மையுள்ளவராக ஆக்கப்பட்டிருப்பதும், அவருடைய தெய்வீகத்தன்மையினால் அவர் பெறுகிற பற்றுறுதியும், தெளிவாகவே அந்தப் போரரசின் அஸ்திவாரமாக அல்லது எப்படியும் பிணைப்பாக இருக்கின்றன.”
“கிறிஸ்தவம்,” (பொ.ச. 306-337-ல் ஆட்சிசெய்த) பேரரசர் கான்ஸ்டன்டீனால் சட்டப்பூர்வமாக்கப்பட்ட பின்னும் (பொ.ச. 379-395-ல் ஆட்சிசெய்த) பேரரசர் தியடோஷியஸ் I-ஆல் ரோம பேரரசின் ஆட்சி-மதமாக்கப்பட்ட பின்னும்கூட, இது உண்மையாக இருந்தது; சில “கிறிஸ்தவ” பேரரசர்கள் பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டு வரையாகக்கூட கடவுட்களாக வணங்கப்பட்டனர்.
“இரு வல்லமைகள்,” “இரு வாள்கள்”
போப்பாதிக்கம் மிகவும் வல்லமையுள்ளதானபோது, சர்ச்சுக்கும் அரசுக்கும் இடையேயுள்ள பிரச்னைகள் கடுமையாயின. எனவே, பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில், “இரு வல்லமைகள்” என்ற தத்துவத்தை போப் கெலாஸியுஸ் I ஏற்படுத்தினார். அதாவது: போப்புகளின் பரிசுத்த அதிகாரமும் அரசர்களின் அரச வல்லமையும் ஒரே சமயத்தில் இயங்குவதாக இருக்கும், அதில் அரசர்கள் போப்புகளுக்குக் கீழ்ப்பட்டிருப்பார்கள். இந்தக் கோட்பாடு “இரு வாள்கள்” என்ற கோட்பாடாக பின்னர் உருவெடுத்தது. அதாவது: “ஆவிக்குரிய வாளை போப்புகள் தாங்களே கையாண்டார்கள்; உலகப்பிரகாரமான வாளைக் கையாளுவதை ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தனர், ஆனாலும் அவர்கள் அந்த உலகப்பிரகாரமான வாளை போப்பதிகார கட்டளைகளுக்கு இசைவாகவே பயன்படுத்தவேண்டும்.” (தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா) இந்தக் கோட்பாட்டின்படி, இடைக்காலத்தில், பேரரசர்கள் மற்றும் அரசர்களுடைய அதிகாரத்தை சட்டப்பூர்வ தகுதியுடையதாக்குவதற்கு உரிமையுடையதாய் இருப்பதாக கத்தோலிக்க சர்ச் உரிமைபாராட்டியது. இவ்வாறு “பரிசுத்த அரசத்துவம்” பற்றிய பண்டைய கற்பனையை ஆதரித்துப் பேணுவதாய் இருந்தது.
என்றாலும், அரசியல்சார்ந்த ஆட்சியாளர்களை போப்பாதிக்கத்திற்குக் கீழ்ப்பட்டிருப்பதிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் பின்னர் உருவான மன்னர்களின் தெய்வீக உரிமை எனப்படுவதுடன் இதைக் குழப்பிக்கொள்ளக்கூடாது. அரசர்கள் ஆளுவதற்கான அதிகாரத்தை நேரடியாக கடவுளிடமிருந்து பெறுகின்றனர், ரோமிலுள்ள போப்பின் வழியாக அல்ல என்று இந்தத் தெய்வீக உரிமை கொள்கை வலியுறுத்துகிறது. நியூ காத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “போப் உலகளாவ ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகாரமான வல்லமையையும்கூட அரசுகளின் தலைவர்கள்மீது செலுத்திக்கொண்டிருந்த ஒரு சமயத்தில், தெய்வீக உரிமை என்ற கருத்து, தேசிய-அரசுகளின் அரசர்கள், தங்கள் அதிகாரம் போப்புடையதற்கு சமமாக தெய்வீகமானது என்று நியாயப்படுத்தும் நிலையில் அவர்களை வைத்தது.”b
மக்கள் இறைமை என்னும் கற்பனைக் கருத்து
காலம் கடந்தபோது, மனிதர் அதிகாரத்தின் வேறு வகையான கருத்துக்களை எழுப்பினர். ஒன்று மக்களின் இறைமை. இந்தக் கருத்து கிரேக்கில் ஆரம்பித்ததாக அநேகர் நம்புகின்றனர். என்றபோதிலும், பண்டைய கிரேக்க மக்களாட்சி ஒருசில நகர அரசுகளில் மட்டுமே அப்பியாசிக்கப்பட்டது; இவற்றிலும்கூட ஆண் குடிமக்கள் மட்டுமே வாக்களித்தனர். பெண்களும், அடிமைகளும், குடியிருக்கும் அயல்நாட்டவரும்—அந்த மக்கள் தொகையில் பாதியிலிருந்து ஐந்தில் நான்கு பங்குவரையாக இருப்பதாக கணக்கிடப்பட்டோர்—விட்டுவிடப்பட்டார்கள். அரிதாகவே மக்கள் இறைமையாக (popular sovereignty) இருந்தது!
மக்களின் இறைமை என்ற கருத்தை முன்னேற்றுவித்தது யார்? ஆச்சரியத்திற்குரியவிதமாக, அது இடைக்காலத்தில் ரோமன் கத்தோலிக்க இறையியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. 13-ம் நூற்றாண்டில், தாமஸ் அக்வினாஸ், இறைமை கடவுளிடம் துவங்கினாலும் மனிதரிடம் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்று நம்பினார். இந்தக் கருத்து பிரபலமானதாக ஆனது. நியூ காத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது: “அதிகாரத்தின் ஊற்றுமூலமாக மக்கள் இருக்கிறார்கள் என்ற இந்தக் கருத்து 17-ம் நூற்றாண்டிலிருந்த பெரும்பாலான கத்தோலிக்க இறையியலாளர்களால் ஆதரிக்கப்பட்டது.”
போப், பிஷப், அல்லது பாதிரியைத் தெரிந்தெடுப்பதில் மக்களுக்கு எந்தப் பாகமும் இல்லாத ஒரு சர்ச்சின் இறையியலாளர்கள் ஏன் மக்களுடைய இறைமையின் கருத்தை முன்னேற்றுவிப்பார்கள்? ஏனென்றால் சில ஐரோப்பிய மன்னர்கள் போப்பாதிக்கத்தின்கீழ் அதிகமாக அமைதிகுலைந்தவர்களாக இருந்தார்கள். மக்கள் இறைமை என்ற கொள்கை, அவசியமாகப்பட்டால், ஒரு பேரரசரை அல்லது முடிமன்னரை அகற்றுவதற்கான வல்லமையை போப்பிற்கு அளித்தது. சரித்திராசிரியர்களான உவில் மற்றும் ஏரியல் டுயூரன்ட் எழுதினர்: “மக்கள் இறைமையின் பாதுகாவலர்களில் பல ஜெஸூட்டுகள் உட்பட்டிருந்தனர்; அவர்கள் போப்பாதிக்கத்திற்கு எதிராக அரச அதிகாரத்தைப் பலம்குன்றச்செய்யும் ஒரு ஏதுவாக இந்தக் கருத்தைக் கண்டனர். மக்களிடமிருந்து பெறப்பட்டு, அதன் காரணமாக மக்களுக்குக் கீழ்ப்பட்டதாக மன்னர்களின் அதிகாரம் இருக்குமானால், அது தெளிவாகவே போப்புகளின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்று கார்டினல் பெலார்மன் வாதாடினார் . . . உலகப்பிரகாரமான அதிகாரத்திற்கு ஊற்றுமூலமாக இருப்பதால், மக்கள், நியாயமாகவே—ஆனால் ஒழுங்கான செயல்முறையின் மூலமாக—ஒரு அநியாயமான மன்னரை அகற்றிவிடுவார்கள் என்று லூயிஸ் மோலினா என்ற ஸ்பானிய ஜெஸூட் முடிவுசெய்தார்.”
“ஒழுங்கான செயல்முறை” நிச்சயமாகவே போப்பால் ஏற்பாடு செய்யப்படும். இதை உறுதிப்படுத்துவதாய், பிரஞ்சு கத்தோலிக்க எஸ்ட்வர் யுனிவர்ஸல் ட லேக்லிஸ் கட்டாலிக் பின்வருமாறு குறிப்பிடும் பையாக்ரஃபி யுனிவர்ஸல் என்பதை மேற்கோள் காட்டுகிறது: “இளவரசர்கள் தங்கள் அதிகாரத்தை மக்களின் தெரிவிலிருந்து பெறுகின்றனர் என்பதையும், மக்கள் போப்பின் செல்வாக்கின்கீழ் மட்டுமே இந்த உரிமையை செலுத்த முடியும் என்பதையும் பொதுவான கத்தோலிக்க கொள்கையாக போதிக்கிறார் . . . பெலார்மன்.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.) இவ்வாறாக மக்கள் இறைமை என்பது ஆட்சியாளர்களைத் தெரிவுசெய்வதில் செல்வாக்குச் செலுத்துவதற்கும், தேவைப்பட்டால், அவர்களை அகற்றுவதற்கும் போப்பால் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாக ஆனது. மிக சமீப காலங்களில், கத்தோலிக்க அதிகார வரிசையானது அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய மக்களாட்சிகளில் கத்தோலிக்க வாக்காளர்கள்மீது செல்வாக்குச் செலுத்துவதற்கு அது அனுமதித்திருக்கிறது.
நவீன மக்களாட்சிகளில் அரசாங்கத்தின் சட்டப்பூர்வ தகுதி, “ஆளப்படுகிறவர்களின் ஒப்புதல்” என்றழைக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கூடுமானவரை இது “பெரும்பான்மையரின் ஒப்புதல்.” வாக்காளர்களின் அக்கறையின்மை மற்றும் அரசியல் தந்திரங்கள் காரணமாக, இந்தப் “பெரும்பான்மை” என்பது அடிக்கடி நிஜத்தில், மக்கள்தொகையின் ஒரு சிறுபான்மையாகவே இருக்கிறது. இன்று, “ஆளப்படுகிறவர்களின் ஒப்புதல்” என்பது “ஆளப்படுகிறவர்கள் எதிர்ப்பின்றி உடன்படுவதை, அல்லது குறைகூறாது ஏற்றுக்கொள்வதையே” பெரும்பாலும் அர்த்தப்படுத்துகிறது.
தேசிய இறைமை என்னும் கற்பனைக் கருத்து
ஆரம்ப போப்புகளால் முன்னேற்றுவிக்கப்பட்ட பரிசுத்த அரசத்துவம் என்ற கற்பனைக் கருத்து, போப்பாதிக்கம் மன்னர்களின் தெய்வீக உரிமைக்குள் மாற்றச்சென்றபோது அதன்மீது எதிரான விளைவுகளை ஏற்படுத்தின. அதேவிதமாகவே மக்கள் இறைமை கோட்பாடு கத்தோலிக்க சர்ச்சின்மேல் திரும்பித் தாக்கியது. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளின்போது, ஆங்கிலேயரான தாமஸ் ஹாப்ஸ் மற்றும் ஜான் லாக், பிரஞ்சு மனிதராகிய ஷான் ஷாக் ருஸோ போன்ற உலகப்பிரகாரமான தத்துவ அறிஞர்கள் மக்கள் இறைமை பற்றிய கருத்துக்களைப் பிரதிபலித்தனர். ஆளுகிறவர்களுக்கும் ஆளப்படுகிறவர்களுக்கும் இடையே உள்ள ஒரு “சமூக ஒப்பந்தம்” பற்றிய இந்தக் கோட்பாட்டின் வேறுபட்ட விளக்கங்களை உருவாக்கினர். அவர்களுடைய தத்துவங்கள் இறையியலின் அடிப்படையில் இல்லாமல் ‘இயற்கை சட்டத்தின்’ அடிப்படையில் இருந்தன; கத்தோலிக்க சர்ச்சையும் போப்பாதிக்கத்தையும் கடுமையாக பாதித்த கருத்துக்களுடன் இந்தத் தத்துவம் நிறைவுபெற்றது.
ருஸோவின் மரணத்திற்குச் சற்றுப்பின்னர், பிரஞ்சு புரட்சி எழும்பியது. இந்தப் புரட்சி சட்டப்பூர்வ தகுதியைப்பற்றிய ஒருசில கருத்துக்களை அழித்துவிட்டது, ஆனால் புதிய ஒன்றை, தேசிய இறைமை (national sovereignty) பற்றிய கருத்தை உருவாக்கியது. தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது: “பிரஞ்சுக்காரர்கள் மன்னர்களின் தெய்வீக உரிமையை, உயர்குடிமக்களின் ஆட்சி அதிகாரத்தை, ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் சிலாக்கியங்களை ஏற்க மறுத்தனர்.” ஆனால் “அந்தப் புரட்சி புதிய கண்டுபிடிப்பாகிய, தேசிய-அரசை முதிர்ச்சிக்குக் கொண்டுவந்திருந்தது,” என்று பிரிட்டானிக்கா சொல்கிறது. புரட்சிக்காரருக்கு இந்தப் புதிய “கண்டுபிடிப்பு” தேவைப்பட்டது. ஏன்?
ருஸோ வலியுறுத்திய ஒழுங்குமுறையின்கீழ், எல்லா குடிமக்களும் ஆட்சியாளர்களைத் தெரிந்தெடுப்பதில் சமமான பங்கைக் கொண்டிருப்பர். இது எல்லாரும் வாக்களிப்புரிமையைக் கொண்டிருப்பதன் அடிப்படையிலான மக்களாட்சியில் விளைவடைந்திருக்கும்; இது பிரஞ்சு புரட்சியின் தலைவர்கள் ஆதரிக்காத ஒன்றாக இருந்தது. பேராசிரியர் டியுவர்ஷே விளக்குகிறார்: “விரும்பப்படாததாக கருதப்பட்ட, இந்த விளைவை தவிர்ப்பதற்காகவே, 1789-லிருந்து 1791 வரை, அரசமைப்புச் சட்டப் பேரவையின் நடுத்தர வகுப்பினர் தேசிய இறைமை பற்றிய கொள்கையைக் கண்டுபிடித்தனர். அவர்கள் மக்களை ‘தேசத்துடன்’ அடையாளங்காட்டினர்; அதை அதன் ஆக்கக்கூறுகளிலிருந்து தனியாக பிரித்து நிஜமான தனி உரு ஒன்றாகக் கருதினர். தேசம் மட்டுமே, அதன் பிரதிநிதிகளின் மூலமாக, ஆட்சியுரிமை செலுத்த தகுதிபெற்றது . . . தோற்றத்தில் மக்களாட்சிக்குரியதாய் இருந்து, உண்மையில் மக்களாட்சிக்குரியதாகவே இல்லாதது தேசிய இறைமை கோட்பாடு; ஏனென்றால், அது நடைமுறையில் எந்த வகையான அரசாங்கத்தையும், குறிப்பாக ஏகாதிபத்தியத்தை நியாயப்படுத்த பயன்படுத்தப்படலாம்.” (தடித்த எழுத்துக்கள் அவருடையது.)
மனித முயற்சிகள் ஒரு தோல்வி
தேசிய-அரசை அதிகாரத்தின் ஒரு சட்டப்பூர்வ தகுதியுள்ள ஊற்றுமூலமாக ஏற்பது தேசப்பற்றுக்கு வழிநடத்தியது. தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது: “தேசப்பற்று பெரும்பாலும் மிகப் பழமையானதாக எண்ணப்படுகிறது; அரசியல் நடவடிக்கையின் ஒரு நிரந்தர அம்சமாக அது சிலவேளைகளில் தவறாகக் கருதப்படுகிறது. உண்மையில், அமெரிக்க மற்றும் பிரஞ்சு புரட்சிகள் அதன் முதல் வல்லமையான வெளிக்காட்டுதல்களாகக் கருதப்படக்கூடும்.” அந்தப் புரட்சிகள் முதற்கொண்டு, அமெரிக்காக்கள், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியாவில் தேசப்பற்று பரவியிருக்கிறது. கொடிய போர்கள் தேசப்பற்று என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றன.
பிரிட்டிஷ் சரித்திராசிரியர் ஆர்னல்ட் டாயின்பி எழுதினார்: “குலமரபுப்பற்று என்னும் பழைய புட்டிகளிலுள்ள புதிய திராட்சரசமாகிய மக்களாட்சியில் ஒரு புளிப்பு காடியாக தேசப்பற்றின் உணர்வு இருக்கிறது. . . . மக்களாட்சி மற்றும் குலமரபுக் கோட்பாட்டிற்கு இடையிலுள்ள இந்த விநோதமான இணக்கம், நம்முடைய நவீன மேற்கத்திய உலகின் நடைமுறை அரசியலில் மக்களாட்சியைவிடவும் அதிக வல்லமையானதாக இருந்திருக்கிறது.” தேசப்பற்று ஒரு சமாதான உலகை உருவாக்கவில்லை. டாயின்பி சொன்னார்: “மதத்தின் போர்கள், மிகக் குறுகிய கால இடைப்பட்ட ஓய்விற்குப்பின் தேசப்பற்றின் போர்களால் தொடரப்பட்டிருக்கின்றன; நம்முடைய நவீன மேற்கத்திய உலகில், மத வெறியும் தேசப்பற்று வெறியும் வெளிப்படையாகவே ஒரேவிதமான கோபாவேசவெறியாக இருக்கின்றன.”
“பரிசுத்த அரசத்துவம்,” “மன்னர்களின் தெய்வீக உரிமை,” “மக்கள் இறைமை,” “தேசிய இறைமை,” ஆகிய கற்பனைக் கருத்துக்களின்மூலம், ஆட்சியாளர்கள் தங்களுடைய உடன் மனிதர்கள்மீது தங்கள் அதிகாரத்தை சட்டப்பூர்வ தகுதியுடையதாக்க முயன்றிருக்கின்றனர். என்றாலும், மனித ஆட்சியாளர்களின் பதிவை ஆராய்ந்த பிறகு, ஒரு கிறிஸ்தவன் சாலொமோனால் வெளிப்படுத்தப்பட்ட இந்தக் கருத்தைப் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கமுடியாது: “தனக்கே கேடுண்டாக மனிதன் மனிதனை ஆளுகைசெய்திருக்கிறான்.”—பிரசங்கி 8:9, NW.
அரசியல் தேசத்தை வணங்குவதற்கு மாறாக, கிறிஸ்தவர்கள் கடவுளை வணங்கி, அவரை எல்லா அதிகாரத்திற்கும் சட்டப்பூர்வ தகுதியுள்ள ஊற்றுமூலராக ஏற்றுக்கொள்கின்றனர். பின்வருமாறு சொன்ன சங்கீதக்காரனோடு அவர்களும் ஒத்துக்கொள்கின்றனர்: “யாவே, மாட்சிமையும், வல்லமையும், மேன்மையும், நீண்ட நாட்களும் மகிமையும், வானத்திலும் பூமியிலுமுள்ள யாவும் உம்முடையவை. பேரரசுரிமை உம்முடையதே, யாவே; நீர் உயர்ந்தவராய், எல்லாருக்கும் மேலாக உச்ச உயர் அதிகாரமுள்ளவராய் இருக்கிறீர்.” (1 நாளாகமம் 29:11, தி நியூ ஜெரூசலம் பைபிள்) இருந்தாலும், கடவுளுக்குரிய நன்மதிப்பின் காரணமாக, அவர்கள் உலகப்பிரகாரமாக மற்றும் ஆவிக்குரிய அம்சங்களில் அதிகாரத்திற்கு சரியான மரியாதை காட்டுகிறார்கள். அவர்கள் இதை சந்தோஷமாக எப்படி மற்றும் ஏன் செய்ய முடியும் என்பது பின்தொடரும் இரண்டு கட்டுரைகளில் ஆராயப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a மாரிஸ் டியுவர்ஷே என்பவரின் ட்ரவா கான்ஸ்டிடியுஸியானல் ஏ அன்ஸ்டிடியுஸியான் பாலிடிக்.
b தி காத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிட்டது: “இந்த ‘மன்னர்களின் தெய்வீக உரிமை’ (எல்லா அதிகாரமும், மன்னருடையதாக இருந்தாலும் சரி அல்லது குடியரசுடையதாக இருந்தாலும் சரி, கடவுளிடமிருந்து வருகிறது என்ற கொள்கையிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டது), ஒருபோதும் கத்தோலிக்க சர்ச்சால் ஆதரிக்கப்படவில்லை. இங்கிலாந்தின் ஹென்றி VIII, ஜேம்ஸ் I போன்ற முடிமன்னர்கள், ஆவிக்குரிய மற்றும் அரசாட்சிக்குரிய அதிகாரத்திற்கு முழுமையாக உரிமைபாராட்டியதன்மூலம், சீர்திருத்தத்தின்போது அது கத்தோலிக்க சமயத்திற்கு அதிகப்படியான எதிர்ப்புணர்ச்சியை காண்பிக்கும் நிலையை அடைந்தது.”
[பக்கம் 15-ன் படம்]
பேரரசர்களையும் அரசர்களையும் முடிசூட்டும் அதிகாரத்தைக் கொண்டிருந்ததாக கத்தோலிக்க சர்ச் உரிமைபாராட்டியது
[படத்திற்கான நன்றி]
Consecration of Charlemagne: Bibliothèque Nationale, Paris