மனஸ்தாபங்களை நீங்கள் எவ்வாறு தீர்த்துக்கொள்கிறீர்கள்?
ஓர் ஏடாகூடமான வேலை—இதில் தட்டுமாடத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஐந்து பீங்கான் யானைகளில் மூன்றாவது விழுந்தது. உடைந்துபோன யானையை ஒன்றிணைத்து வைக்கவேண்டும். இல்லையென்றால், அந்த முழுத் தொகுதியிலும் ஒத்திசைவு இல்லாமற்போய்விடும். ஆனால் இந்த வேலை சாதுரியத்தோடு செய்யவேண்டிய ஒன்று. உங்களால் செய்ய முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் ஆலோசனையை நாடவேண்டும் அல்லது ஒரு நிபுணர் இந்த வேலையைச் செய்யும்படியாவது கேட்கவேண்டும்.
ஆவிக்குரிய சகோதர சகோதரிகளிடையே உள்ள இணக்கம் சாதாரண அலங்காரப் பொருட்களைவிட மிகவும் அருமையானது. சரியாகவே, சங்கீதக்காரன் பாடினார்: “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1) உடன் கிறிஸ்தவரோடு மனஸ்தாபத்தைத் தீர்த்துக்கொள்வது சிலசமயங்களில் சாதுரியமாக கையாளவேண்டிய விஷயமாக இருக்கலாம். மேலும், சிலர் இதைச் சரியான முறையில் தீர்த்துக்கொள்ள மாட்டார்கள். அடிக்கடி இந்த “ஒன்றிணைப்பானது” அவசியமற்ற வேதனையைத் தருவதாக இருக்கும் அல்லது அவ்வளவு பலமானதாக இருப்பது கிடையாது. வேண்டாத, விரும்பத்தகாத அபிப்பிராயக்குறிகளையே அது விட்டுச்செல்லும்.
சில கிறிஸ்தவர்கள் தங்களால் கையாளப்படக்கூடிய விஷயங்களில் அநாவசியமாக நியமிக்கப்பட்ட மூப்பர்களை உட்படுத்த பார்க்கின்றனர். என்ன செய்வது என்பதன்பேரில் அவர்கள் நிச்சயமாக இல்லாததால் இது அவ்வாறு இருக்கக்கூடும். “தங்கள் மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்வதில் நம்முடைய சகோதரர்களில் அநேகருக்கு பைபிள் ஆலோசனைகளை எவ்வாறு பொருத்துவது என்பது தெரியவில்லை,” என்று பைபிள் ஆலோசனைகளைக் கொடுப்பதில் அனுபவம்வாய்ந்தவராயிருக்கும் ஒரு சகோதரர் சொன்னார். அவர் தொடர்ந்து சொன்னதாவது: “பெரும்பான்மையான சமயங்களில், அவர்கள் காரியங்களைக் கையாளுவதில் இயேசுவின் முறையைப் பின்பற்றுவது கிடையாது.” ஆகவே, ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு தன் சகோதரனோடு மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி இயேசு உண்மையில் என்ன சொன்னார்? இந்த ஆலோசனையை நன்கு அறிந்துவைத்து அதைப் பொருத்தக் கற்றுக்கொள்வது ஏன் அத்தியாவசியமாயிருக்கிறது?
சிறு மனஸ்தாபங்கள்
“ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.”—மத்தேயு 5:23, 24.
இயேசு அவ்வார்த்தைகளைப் பேசுகையில், யூதர்கள் எருசலேமில் ஆலயப் பலிபீடத்தில் வழக்கமாக பலிகளை அளித்துவந்தனர், அல்லது காணிக்கைகளை செலுத்தினர். யூதன் ஒருவன் உடன் இஸ்ரவேலனைப் புண்படுத்தினானென்றால், அந்தக் குற்றவாளி சர்வாங்க தகனபலியையோ பாவநிவாரணபலியையோ அளிக்கலாம். இயேசு சொன்ன அந்த எடுத்துக்காட்டை மிகவும் இக்கட்டான தருணத்தில் உபயோகிக்கலாம். அந்த நபர் பலிபீடத்தினிடத்தில் தன் காணிக்கையைக் கடவுளுக்கு செலுத்தவிருக்கும்போது தன்பேரில் தன் சகோதரனுக்குக் குறை உண்டென்று நினைவுகூருகிறான். ஆம், அத்தகைய மத சம்பந்தமான கடனை செலுத்துவதைவிட தன் சகோதரனோடு ஒப்புரவாவது முதன்மையானது என்பதை அந்த இஸ்ரவேலன் உணரவேண்டியது அவசியமாயிருந்தது.
அத்தகைய பலிகள் மோசேயுடைய நியாயப்பிரமாணத்தின் பிரகாரம் கட்டாயம் செய்யவேண்டியதாக இருந்தாலும், அவை தம்மில்தாமே கடவுளுடைய பார்வையில் பெருமதிப்புவாய்ந்தவையாக இல்லை. சாமுவேல் தீர்க்கதரிசி உண்மையற்ற சவுல் ராஜாவிடம், “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்,” என்று சொன்னார்.—1 சாமுவேல் 15:22.
இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் இந்த முதன்மை வரிசையை திரும்ப எடுத்துக் கூறி, தங்களுடைய பலிகளை செலுத்துவதற்கு முன்பாக அவர்களுக்கிருக்கும் மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டினார். இன்று, கிறிஸ்தவர்களிடமிருந்து கேட்கப்படும் பலிகள் ஆவிக்குரிய வகையானதாக இருக்கின்றன; “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலி” ஆகும். (எபிரெயர் 13:15) ஆனாலும், அந்த நியமம் இன்னும் பொருந்துகிறது. அதேபோல, ஒருவன் தன் சகோதரனைப் பகைத்து, கடவுளை அன்புகூருவதாக சொன்னால் அது வீணென்று யோவான் அப்போஸ்தலன் காட்டுகிறார்.—1 யோவான் 4:20, 21.
அக்கறைதரும் விதமாக, தன்பேரில் தன் சகோதரனுக்குக் குறை உண்டென்று நினைவுகூருபவனே முதல் படியை எடுக்கவேண்டும். இவ்வாறு அவன் காட்டும் மனத்தாழ்மை ஒருவேளை நல்ல நன்மைகளைப் பிறப்பிக்கும். ஒருவேளை, தனது சொந்த தப்பிதங்களை ஒத்துக்கொண்டு தன்னிடம் வரும் ஒருவனோடு, குற்றமிழைக்கப்பட்டவன் ஒத்துழைக்க மறுக்கமாட்டான். ஏதாவதொன்றைத் தவறான முறையில் எடுத்தால், முழுமையாக திரும்பக் கொடுக்கவேண்டும் என்றும் அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி வழங்கவேண்டும் என்றும் மோசேயின் நியாயப்பிரமாணம் வரையறுத்தது. (லேவியராகமம் 6:5) அவ்வாறே சமாதானமான, இணக்கமான உறவுகளுக்குத் திரும்பவருவதானது, அந்தக் குற்றவாளி, கேட்கப்படுவதற்கும் அப்பால் செய்ய ஆசையைக் காட்டினால் மிகவும் சுலபமாகிவிடும்; சரியாக சொன்னால், அவன் உண்டுபண்ணியிருக்கக்கூடிய எந்தவொரு சேதத்தையும் பழுதுபார்க்கவேண்டும்.
என்றாலும், சமாதான உறவுகளுக்குத் திரும்பவருவதற்கான முயற்சிகள் எப்போதும் வெற்றிபெறாது. எளிதில் உடன்பட வைக்கமுடியாத ஒரு நபரோடு மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்வது கடினமானதாயிருக்கும் என்று நீதிமொழிகள் புத்தகம் நமக்கு நினைப்பூட்டுகிறது. நீதிமொழிகள் 18:19 சொல்கிறது: “அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போலிருக்கும்.” மற்றொரு மொழிபெயர்ப்பு வாசிக்கிறது: “சகோதரனுக்கு துரோகம் செய்திடின் அவனை வசப்படுத்துவது அரண்நகரிலும் அரிது, அவ்வகை விரோதம் கோட்டைத் தாழ்ப்பாள்களே போலும்.” (தி.மொ.) என்றாலும், முடிவில், கடவுளைப் பிரியப்படுத்த விரும்பும் உடன் விசுவாசிகளுடைய விஷயத்தில் உண்மையான, மனத்தாழ்மையான முயற்சிகள் பெரும்பாலும் வெற்றிபெறும். ஆனால் வினைமையான குற்றம் சாட்டப்படுகையில், மத்தேயு 18-ம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் ஆலோசனையைப் பொருத்துவது அவசியம்.
வினைமையான மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்வது
“உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய். அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு [புறஜாதியான்போலவும், தி.மொ.] ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.”—மத்தேயு 18:15-17.
ஒரு யூதன் (அல்லது பின்னர், ஒரு கிறிஸ்தவன்) யெகோவாவுடைய உடன் வணக்கத்தார் ஒருவரோடு வினைமையான கஷ்டங்களை எதிர்ப்பட்டால் அப்போது என்ன? தனக்கு விரோதமாக குற்றம் உண்டென்று நினைக்கிற நபரே முதல் படியை எடுக்கவேண்டும். அந்தக் குற்றவாளியோடு அவன் தனிமையில் காரியங்களைக் கலந்து பேசவேண்டும். தன் சார்பாக ஆதரவு பெற முயற்சி செய்யாமலிருந்தால், தன் சகோதரனை அவன் பெருமளவு ஆதாயப்படுத்துவது நிச்சயம். விசேஷமாக விரைவில் தீர்த்துக்கொள்ளக்கூடிய மனத்தாங்கலே இருந்ததென்றால் அவ்வாறு நடக்கும். நேரடியாக உட்பட்டிருக்கும் ஆட்களுக்கு மட்டும் விஷயம் தெரிந்திருந்தால், எல்லாவற்றையும் வெகு சுலபமாக தீர்த்துவிட முடியும்.
ஆனால், முதல் படி மாத்திரம் போதாது. அத்தகைய சூழ்நிலைமையைக் கையாள இயேசு சொன்னதாவது: “இரண்டொருவரை . . . கூட்டிக்கொண்டு போ.” இவர்கள் கண்கண்ட சாட்சிகளாகவே இருப்பார்கள். ஒருவேளை இவ்விரு நபர்களில் ஒருவர் மற்றொருவரை குறித்து பழித்தூற்றுவதை அவர்கள் கேள்விப்பட்டிருக்கலாம், அல்லது கூட்டிக்கொண்டு சென்ற ஆட்கள், இந்த இரு சாராரும் இப்போது ஒத்துக்கொள்ளாத ஓர் எழுத்துமூல ஒப்பந்தத்திற்கான சாட்சிகளாக இருக்கலாம். மறுபட்சத்தில், பிரச்சினையின் காரணத்தை நிலைநாட்ட, கூடச்சென்றவர்கள் எழுத்துமூல அல்லது வாய்மொழியான சான்றுகள் போன்ற எந்தவொரு காரணியையும் விளக்கிக் காட்டுவதற்கான சாட்சிகளாக ஆகலாம். இங்குங்கூட முடிந்தவரை வெகுசிலரே—“இரண்டொருவர்”—இந்தக் காரியத்தை அறிந்திருக்கவேண்டும். அந்தக் காரியமானது மனத்தாங்கலாகவே இருந்தால் நிலைமை மோசமாவதிலிருந்து இது தடைசெய்யும்.
குற்றமிழைக்கப்பட்டவர் என்ன உள்ளெண்ணங்களோடிருக்க வேண்டும்? தன் உடன் கிறிஸ்தவனைத் தாழ்த்தி, அவனைக்குறித்து அவன்தானே அவமானப்பட வைப்பதற்கு முயற்சி செய்யவேண்டுமா? இயேசுவின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு, கிறிஸ்தவர்கள் தங்கள் சகோதரர்களை எளிதில் பாதகமாக முடிவுகட்டக்கூடாது. தவறுசெய்தவர் தன் குற்றத்தை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டு, காரியங்களை சரிசெய்ய முயன்றால், குற்றமிழைக்கப்பட்டவன் ‘தன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டவனாக’ இருப்பான்.—மத்தேயு 18:15.
இந்தக் காரியத்தைத் தீர்த்துக்கொள்ள முடியவில்லையென்றால், அதை சபைக்கு தெரிவிக்கவேண்டும். முதலில், இது யூத மூப்பர்களையே குறித்தது. ஆனால் பின்னர், கிறிஸ்தவ சபை மூப்பர்களைக் குறித்தது. மனந்திரும்பாத குற்றவாளியை சபையிலிருந்து விலக்கவேண்டியதாயிருக்கலாம். அவனை ‘புறஜாதியான்போலவும் ஆயக்காரன்போலவும்’ கருதுவது அதையே அர்த்தப்படுத்தியது; இந்த நபர்களிடமிருந்தே யூதர்கள் விலகியிருந்தனர். இந்த முக்கியமான நடவடிக்கையை எந்தவொரு கிறிஸ்தவனும் தனிப்பட எடுக்க முடியாது. சபையைப் பிரதிநிதித்துவம் செய்யும் நியமிக்கப்பட்ட மூப்பர்கள் மாத்திரமே இத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு அதிகாரமுடையவர்களாக இருக்கின்றனர்.—1 கொரிந்தியர் 5:13-ஐ ஒத்துப்பாருங்கள்.
மனந்திரும்பாத குற்றவாளியை சபை நீக்கம் செய்வதற்கான சாத்தியமானது, மத்தேயு 18:15-17 சிறு மனஸ்தாபங்களுக்கு பொருந்தாது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இயேசு வினைமையான குற்றங்களைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார், என்றாலும் சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களுக்கிடையே மட்டும் தீர்த்துக்கொள்ளக்கூடிய குற்றங்களாக இருக்கலாம். உதாரணமாக, குற்றமானது பழித்தூற்றுதலாக இருக்கலாம். அதற்கு ஆட்பட்ட நபரின் நற்பெயரைப் பெரிதும் பாதிப்பதாயிருக்கலாம். அல்லது பண விவகாரங்களாக இருக்கலாம், ஏனெனில் ஒரு பெரிய கடனைக் கொண்டிருந்த இரக்கமற்ற அடிமை மன்னிக்கப்பட்டதைப் பற்றிய இயேசுவின் உவமையை அடுத்துவரும் வசனங்கள் உள்ளடக்குகின்றன. (மத்தேயு 18:23-35) குறித்த காலப்பகுதிக்குள் திரும்பக் கொடுக்கப்படாத கடனானது இரு நபர்களிடையே சுலபமாக தீர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு தற்காலிகமான பிரச்சினையாகவே இருக்கலாம். ஆனால், கொடுக்கவேண்டிய பணத்தைக் கடன் வாங்கியவன் கொடுக்க மறுப்பதில் பிடிவாதமாக இருந்தானென்றால் அது திருட்டாக, ஒரு வினைமையான பாவமாக ஆகிவிடும்.
மற்ற பாவங்கள், இரு கிறிஸ்தவர்களிடையே வெறுமனே தீர்த்துக்கொள்ள முடியாது. மோசேயின் நியாயப்பிரமாணத்தில், வினைமையான பாவங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். (லேவியராகமம் 5:1, NW; நீதிமொழிகள் 29:24) அதேவிதமாக, சபையின் சுத்தத்தை உட்படுத்தும் பெரும்பாவங்கள் கிறிஸ்தவ மூப்பர்களிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.
என்றாலும், கிறிஸ்தவர்களிடையே ஏற்படும் பல்வேறு பூசல்களை இம்முறையில் கையாளவேண்டியதில்லை.
உங்களால் வெறுமனே மன்னித்துவிட முடியுமா?
வினைமையான மனஸ்தாபங்களை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பதைப்பற்றி இயேசு விளக்கியவுடன், அவர் இன்னொரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தார். நாம் வாசிப்பதாவது: “அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 18:21, 22) வேறொரு சந்தர்ப்பத்தில் இயேசு, “ஒருநாளில் ஏழுதரம்” மன்னிக்கும்படி தம் சீஷர்களிடம் சொன்னார். (லூக்கா 17:3, 4) அப்படியானால், தெளிவாகவே, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் ஒருவரையொருவர் தாராளமாக மன்னிப்பதன் மூலம் மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்ளும்படி அழைக்கப்படுகின்றனர்.
இதுவே கணிசமான முயற்சியைக் கேட்கக்கூடிய பகுதியாகும். “சில சகோதரர்களுக்கு எப்படி மன்னிப்பதென்றே தெரியாது,” என்று ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்ட அந்த நபர் கூறினார். அவர் தொடர்ந்து சொன்னார்: “முதன்முதலாக, கிறிஸ்தவ சபையின் சமாதானத்தைக் காக்க அவர்கள் மன்னிப்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று யாராவது விளக்கிச் சொன்னால் அவர்கள் ஆச்சரியப்படுவதாக தெரிகிறது.”
பவுல் அப்போஸ்தலன் எழுதினார்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:13) ஆகையால் நம்மை புண்படுத்தின சகோதரனிடம் செல்வதற்கு முன்பாக, பின்வரும் கேள்விகளை சிந்தனைசெய்வது நல்லது: அந்தக் குற்றத்தைப் பற்றி அவரிடம் பேசுவது பயனுள்ளதா? கிறிஸ்தவத்தின் மெய்யான ஆவியில், போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன் என்று நினைத்து என்னால் உண்மையில் இருக்கமுடியாதா? நான் அவருடைய இடத்தில் இருந்தேனென்றால், மன்னிக்கப்பட விரும்பமாட்டேனா? மன்னிக்க வேண்டாம் என்று நான் தெரிந்துகொண்டால், கடவுள் என்னுடைய ஜெபங்களைக் கேட்டு, என்னை மன்னிக்க நான் எதிர்பார்க்க முடியுமா? (மத்தேயு 6:12, 14, 15) அத்தகைய கேள்விகள் மன்னிக்கும் சுபாவமுள்ளவர்களாக இருக்க நமக்கு நன்றாகவே உதவக்கூடும்.
கிறிஸ்தவர்களாக, யெகோவாவின் மக்களுடைய சபையில் சமாதானத்தைக் காத்துவருவது நம்முடைய முக்கியமான உத்தரவாதங்களில் ஒன்றாயிருக்கிறது. ஆகவே, இயேசுவின் ஆலோசனைகளை நாம் நடைமுறையில் அப்பியாசிப்போமாக. இது தாராளமாக மன்னிக்க நமக்கு உதவும். அத்தகைய மன்னிக்கும் சுபாவம் இயேசுவுடைய சீஷர்களின் அடையாளக் குறியாயிருக்கும் சகோதர அன்பு விருத்தியடைய உதவியளிக்கும்.—யோவான் 13:34, 35.
[பக்கம் 23-ன் படம்]
இயேசுவின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் கிறிஸ்தவர்கள் தங்களுடைய மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்