நற்செய்திக்குக் கண்களைத் திறத்தல்
“குருடன் பார்ப்பதில்லை என்பதனால் வானின் நீலம் மங்கலாக இருப்பதில்லை,” என்பதாக டேனிஷ் பழமொழி ஒன்று சொல்கிறது. ஆனால் நம்முடைய சுறுசுறுப்பான தினசரி வாழ்க்கையில், வானம் நீலமாக இருப்பதாகக் காண்கிறோமா? எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குகிறோமா? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் அளிக்கிற நற்செய்தியை நாம் நிஜமாக நம்புகிறோமா?
சொல்லர்த்தமான பார்வையின்மையின் அம்சங்களை கடந்த கட்டுரையில் நாம் கவனித்தோம். அதைவிட அதிக முக்கியத்துவம்வாய்ந்த ஒரு பார்வையைக் குறித்து இப்போது நாம் ஆராய்ந்து பார்ப்போம். அது நம்முடைய நிரந்தர மகிழ்ச்சியையும், நம்முடைய அன்பானவர்களுக்கான எதிர்நோக்குகளையும் உட்படுத்துகிறது.
சந்தேகமின்றி, நாம் ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களை’ எதிர்ப்படுகிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW) வாழ்வதற்காகச் சம்பாதிப்பதற்கு போராடுகையில், மக்கள் உடல்நல கஷ்டங்களையும் குடும்பப் பிரச்சினைகளையும் சகித்து, சமுதாய அநியாயம், அன்பில்லாமை ஆகியவற்றைச் சமாளிக்கையில் என்ன நடக்கிறது? வருத்தகரமாக, சக மனிதர், மதம், அரசாங்கம் ஆகியவற்றின்மீது தங்கள் நம்பிக்கை குறைவதாக அநேகர் காண்கின்றனர். எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை உணர்ந்தவர்களாய், ஒரு பொதுவான முறையில் தங்கள் பிரச்சினைகள் ஒருபோதும் தீர்க்கப்படமாட்டா என்று சிலர் முடிவுசெய்கின்றனர். பிரேஸிலிய செய்தித்தாளான ஷார்னல் டா டார்டாவில் ஷாகப் பினியேரூ கோல்ட்பெர்க் குறிப்பிடுகிறார்: “மக்கள், கொடூரமான உண்மையை எதிர்ப்படுகையில், இழைக்கப்படும் தவறுகளால் அவ்வளவு கோபமடைந்து, அவற்றிற்கு நியாயமாகக் காரணம் காணாமல், ஏமாற்றுவிக்கும் மறைஞானத்தின்மீது சார்ந்திருக்கின்றனர்.” இருந்தாலும், காரியங்கள் தவறாகச் செல்லும்போதும்கூட, நாம் நல்யோசனையைக் கொண்டிருக்க விரும்புகிறோம், அல்லவா?
உங்களுடைய குடும்பத்திற்கு ஒரு வீடு தேவை என்றும், பணம் ஒரு பிரச்சினையாக இல்லை என்றும் சற்று நினைத்துக்கொள்வோம். ஒருவேளை நீங்கள் சுற்றிப் பார்த்து, வெவ்வேறு சுற்றுவட்டாரங்களில் பல்வேறு வீடுகளைப் பார்க்கிறீர்கள். ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் உங்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப முயன்றாலும், நீங்கள் மனதில் நினைத்திருக்கிற வகையான வீடு கிடைக்கவில்லை. இருந்தாலும், உங்களுடைய குடும்பத்தின் திருப்தியும் நலனும் உட்பட்டிருப்பதால், நீங்கள் முயற்சியைக் கைவிடுவதில்லை, இல்லையா? கடைசியாக, உங்கள் கனவுகளுக்கேற்ற வீட்டைக் கண்டுபிடித்ததும் ஏற்படும் மகிழ்ச்சியை இப்போது கற்பனை செய்துபாருங்கள்.
ஒரு புதிய வீட்டைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் நேரத்தைச் செலவிடுவதுபோலவே, உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நீங்கள் ஏன் பைபிளை ஆராய்ந்து பார்க்கக் கூடாது? ஒரு வீட்டைக் குறித்து தீர்மானம் செய்யும்போது, எப்படிக் காரியங்களைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டுமோ, அதுபோலவே நாம் கடவுளுடைய வார்த்தையிலிருந்து படிப்பவற்றைக் குறித்து ஆழ்ந்து சிந்திப்பது அவசியம். மேலும் ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பதைவிட அதிக பயனுள்ளதாக இருப்பது என்னவென்றால், யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய சத்தியத்தைக் காண்பதும் ஏற்றுக்கொள்வதுமாகும். இயேசு சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் [பற்றிய அறிவை உட்கிரகித்துக் கொள்வதே, NW] நித்திய ஜீவன்.”—யோவான் 17:3.
ஆனால், பைபிள் செய்தியானது இவ்வளவு மதிப்புள்ளதென்றால், ஏன் அவ்வளவு அதிகமானோர் அதன் நற்செய்திக்குக் குருடராகவே இருக்கின்றனர்? அநேகருக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடியதுமான ஒரு காரணம் என்னவென்றால், ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19) அதன் விளைவாக, “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு” பிசாசாகிய சாத்தான் “அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (2 கொரிந்தியர் 4:4) நாம் நம்முடைய கண்களால் பார்த்தாலும், கண்ணுக்குள் நுழையும் வெளிச்சத்தை விளக்கி அர்த்தம் கொடுப்பது மூளையே. எனவே, குருடாயிருப்பது என்பது “பகுத்துணர அல்லது தீர்ப்பு செய்ய முடியாமல் அல்லது அதற்கு மனமில்லாமல் இருப்பது” என்றும் வரையறுக்கப்படுகிறது. இது பின்வரும் ஒரு பிரபல பழமொழியை நினைவிற்குக் கொண்டுவருகிறது: “பார்க்க வேண்டாமென்று இருக்கிறவர்களேயல்லாமல் மிகக் குருடானவர்கள் வேறு எவருமில்லை.”
பார்வையற்ற ஒரு மனிதனால் தன் முன் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாது; ஆகவே அவன் காயப்படும் அபாயத்தில் இருக்கக்கூடும். அநேகருடைய சொல்லர்த்தமான பார்வையின்மையை இப்போது குணப்படுத்த முடியாது; இருந்தாலும் ஆவிக்குரியவிதத்தில் குருடராய் தொடர்ந்து இருக்கும் கட்டாயத்தில் எவரும் இல்லை.
ஆவிக்குரிய பார்வையின்மையை மேற்கொள்ளுதல்
சுகாதார வசதிக்குறைவுகள் பார்வையைக் குறைக்க முடிவதுபோலவே, ஒரு சீர்கெடுகிற சூழலும் ஒழுக்க சம்பந்தமான பார்வையின்மைக்குக் காரணமாக இருக்கமுடியும். மேலுமாக, மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளுக்கும் பாரம்பரியங்களுக்கும் எதிராக இயேசு கிறிஸ்து எச்சரித்தார். அப்போதிருந்த மதத் தலைவர்கள் தங்கள் மந்தையைத் தவறாக வழிநடத்தினார்கள் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்: “அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே.”—மத்தேயு 15:14.
குருடரான தலைவர்களால் ஏமாற்றப்படுவதற்குப் பதிலாக, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்திக்குத் தங்கள் கண்களைத் திறப்பவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி உள்ளவர்கள்! இயேசு அறிவித்தார்: “காணாதவர்கள் காணும்படியாக . . . நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன்.” (யோவான் 9:39) என்றாலும், ஆவிக்குரிய விதத்தில் குருடராய் இருப்பவர்கள் எவ்வாறு பார்ப்பவர்களாக முடியும்? இப்போது, சொல்லர்த்தமான பார்வையின்மையைப் பற்றிய நம்முடைய கலந்தாலோசிப்பை நாம் தொடருவோம்.
கண்பார்வை குறைந்தவர்களுக்கு இப்போது பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன. இது எப்போதுமே இவ்வாறு இருக்கவில்லை. வாலான்டன் ஆவி என்பவர், 1784-ல் பார்வையற்றவர்களுக்காக ஒரு விசேஷித்த பள்ளியை நிறுவுவதற்கு முன்னர், குருடருக்கு உதவும்படியாக உண்மையில் எந்தத் திட்டவட்டமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. பின்னர், லூயி பிரெய்ல் தன்னுடைய பெயரைத் தாங்கும் ஒரு முறையைக் கண்டுபிடித்தார்; பார்வை குறைவுபட்டவர்களுக்கு வாசிக்க உதவும்படி அவர் அவ்வாறு செய்தார்.
ஆவிக்குரியவிதத்தில் குருடராய் இருப்பவர்களைப் பற்றியதென்ன? சமீப வருடங்களில், பூமியின் தொலைதூரமான பாகங்களிலும்கூட நற்செய்தியை அறிவிப்பதற்காகக் கடும் முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. (மத்தேயு 24:14) அடையாள அர்த்தத்திலும் உடல் சம்பந்தமாகவும் குருடராக இருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்ட யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
ஒரு பிரேஸிலிய பெண் எழுதினாள்: “என்னுடைய உடல் ஊனத்தின் மத்தியிலும், என்னால்—ஆவிக்குரியவிதத்தில்—பார்க்கமுடிகிறது என்று சொல்ல விரும்புகிறேன். என்னே ஓர் மகத்தான கடவுள்! ‘யெகோவா தம்முடைய கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குவார்’ என்றறிவதில் நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம்.” (சங்கீதம் 145:16) உடல்ரீதியில் குருடராக இருக்கும் ஷார்ஷா, இவ்வாறு நினைவுகூருகிறார்: “என்னுடைய வாழ்க்கை நன்றாகவே இரண்டு தெளிவான பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்: சாட்சிகளைச் சந்தித்ததற்கு முன்னும் பின்னும். . . . அவர்கள் மூலமாக, நான் உலகை தெளிவாகவும் ஒளிமயமாகவும் காண ஆரம்பித்தேன். சபையிலுள்ள ஒவ்வொருவரோடும் நான் மிகச் சிறந்த தொடர்பை அனுபவிக்கிறேன்.” களிப்பூட்டும்வண்ணமாகவே, பூமியில் எவரும்—சொல்லர்த்தமாகவோ ஆவிக்குரிய விதமாகவோ—குருடராக இருக்கமாட்டார்கள் என்று பைபிள் உறுதியளிக்கிறது. அது எவ்வாறு சம்பவிக்கும்? “குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்,” என்பது எவ்வாறு பூகோள அளவில் உண்மையாக நிரூபிக்கப்படும்?—சங்கீதம் 146:8.
ஒரே நிரந்தர குணப்படுத்துதல்—கடவுளுடைய ராஜ்யம்
அதிகரிக்கும் மருத்துவ செயலாற்றும் முறைகள் இருந்தபோதிலும், பேரெண்ணிக்கையான நோய்கள் தொடர்ந்து பார்வையின்மை, வலி, மரணம் ஆகியவற்றை உருவாக்குகின்றன. அப்படியானால், பார்வையையும் வாழ்க்கையின் சந்தோஷத்தையும் எடுத்துப்போடும் ஊட்டச்சத்துக் குறைவு, குறைவுபட்ட சுகாதார சூழ்நிலைகள், வேதனை ஆகியவற்றை நீக்க என்ன தேவைப்படுகிறது? குருடரையும் மற்றவர்களையும் இயேசு குணப்படுத்தியது, எதிர்காலத்திற்கான ஒரு சிறியளவான மாதிரியாக இருந்தது. மகிழ்ச்சிக்குரியவிதத்தில், அவருடைய போதிக்கும் வேலையும் குணப்படுத்தும் வேலையும், கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தின்கீழ் பூமியெங்கும் பரப்பப்படும் ஆசீர்வாதங்களை முன்னிழலாகக் குறித்துக்காட்டின.
உலகளாவிய விதத்தில் குணப்படுத்துதல் அருகாமையில் இருக்கிறது.a இந்தத் தெய்வீக குணப்படுத்துதல் திட்டம் அப்போஸ்தலன் யோவானால் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது: “பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைவதற்கு ஏதுவானவைகள்.”—வெளிப்படுத்துதல் 22:1, 2.
இன்றைய பொல்லாத ஒழுங்குமுறை முடிவடைந்த பின்னர், கடவுளுடைய ராஜ்யத்தின் குணப்படுத்தும் ஏற்பாடுகள் படிப்படியாக மனிதகுலத்தைப் பரிபூரணத்திற்குக் கொண்டுவரும் என்பதை ‘ஜீவத்தண்ணீர்’ மற்றும் ‘ஜீவவிருட்சங்கள்’ போன்ற பதங்கள் விளக்குகின்றன. உண்மையில், இயேசுவின் கிரய பலியின் பலன்கள் (பாவங்கள் முழுமையாக மன்னிக்கப்படுவது உட்பட), இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பிதாவையும் பற்றிய அறிவோடுசேர்ந்து, பரிபூரண ஆரோக்கியத்தையும் நித்திய ஜீவனையும் கொண்டுவரும்.—யோவான் 3:16.
கடவுளுடைய புதிய உலகில் மகிழ்ச்சி
அப்படியானால், குற்றச்செயல், தூய்மைக்கேடு, அல்லது வறுமை இல்லாத பூமியைக் கற்பனை செய்து பாருங்கள். திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸில் உங்கள் குடும்பம் சமாதானமாக வாழ்வதை நினைத்துப் பாருங்கள். (ஏசாயா 32:17, 18) நிறங்களின் வேறுபாட்டை பரிபூரண மனதுடனும் சிந்தனைகளுடனும் கவனிப்பது என்னே ஓர் களிப்பூட்டுவதாக இருக்கும்!
“வெளிச்சம், நிறம், வடிவங்கள் ஆகியவற்றைக் குறித்ததில், தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் சூழலில் வாழ்வதே மனிதனின் இயல்பான தன்மையாக இருக்கிறது. சலிப்பூட்டும் சூழல் என்று ஒன்று இயற்கையில் இல்லை,” என்பதாக ஃபேபர் பிரன் சொல்கிறார். “நிறம் என்பது இந்த உலகின் இயற்கையான ஆனந்தங்களில் ஒன்று. அது இயற்கையின் சட்டமாக இருக்கிறது; விதிவிலக்கு அல்ல; மேலும் அனுபவிக்கக்கூடிய வாழ்க்கையின் பெரும்பகுதி அதன்மீது சார்ந்திருக்கிறது.”
பார்வையாகிய பரிசு எவ்வளவு அருமையானது! ஒருகாலத்தில் குருடாக இருந்த கண்கள்—சொல்லர்த்தமாகவோ ஆவிக்குரிய விதமாகவோ—பார்க்கும்போது என்னே ஓர் சந்தோஷமாக இருக்கும்!
ஆம், வரப்போகும் திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸில், பார்வையின்மையும் மற்ற ஊனங்களும் இனிமேலும் மகிழ்ச்சியின்மையை உண்டுபண்ணமாட்டா! இனிமேலும் எவரும் தவறாக வழிநடத்தப்படமாட்டார்கள். உண்மையான அன்பு நிலவுவதால், எல்லாரும் ஆவிக்குரியவிதத்தில் அறிவொளியூட்டப்பட்டிருப்பார்கள். அதுவும், இன்னும் அதிகமும், அருகாமையிலுள்ள எதிர்காலத்திற்குரியவையாய் இருக்கின்றன; ஆனால், ‘அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்படும்!’ என்ற தம்முடைய தீர்க்கதரிசன வாக்குறுதியை நிறைவேற்றுபவரால் ஏற்கப்பட்டவர்களாக ஆவதற்கு இதுவே சமயம்.—ஏசாயா 35:5.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தில், 18-ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அத்தாட்சிகளை தயவுசெய்து கவனியுங்கள்.
[பக்கம் 7-ன் படம்]
அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்படும்!