தூசியால் உண்டாக்கப்பட்டபோதிலும், தீர்மானத்தோடு முன்னேறுதல்!
“நாம் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தை அவர் நன்கு அறிந்திருக்கிறார்; நாம் தூசியானவர்கள் என்று அவர் நினைவுகூருகிறார்.”—சங்கீதம் 103:14, NW.
1. மனிதர்கள் தூசியால் உண்டாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்வதில், அறிவியல்பூர்வமாக பைபிள் சரியானதாக இருக்கிறதா? விளக்கவும்.
சொல்லர்த்தமான விதத்தில், நாம் தூசியாக இருக்கிறோம். “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7) மனிதனின் சிருஷ்டிப்பைப் பற்றிய இந்த எளிய விளக்கம் அறிவியல்பூர்வ உண்மைக்கு ஒத்திசைவானதாக இருக்கிறது. மனித உடல் உருவாக்கப்பட்டிருக்கிற 90-க்கும் மேற்பட்ட தனிமங்களை ‘பூமியிலுள்ள மண்ணில்’ காணலாம். வயதுவந்த மனித உடல் ஒன்று, 65 சதவீதம் ஆக்சிஜன், 18 சதவீதம் கார்பன், 10 சதவீதம் ஹைட்ரஜன், 3 சதவீதம் நைட்ரஜன், 1.5 சதவீதம் கால்சியம், 1 சதவீதம் பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்து, மீதமுள்ள பகுதி மற்ற தனிமங்களால் உருவாக்கப்பட்டிருப்பதாக வேதியியல் வல்லுநர் ஒருவர் ஒருசமயம் வலியுறுத்தினார். இந்தக் கணக்கீடுகள் முழுமையாக துல்லியமானவையா என்பது முக்கியத்துவமுடையதல்ல. இந்த உண்மை நிலைத்திருக்கிறது: “நாம் தூசியானவர்கள்”!
2. கடவுள் மனிதரைச் சிருஷ்டித்த விதம், உங்களில் என்ன பிரதிபலிப்பை உண்டாக்குகிறது, ஏன்?
2 வெறும் தூசியிலிருந்து மட்டுமே அப்படிப்பட்ட சிக்கலான சிருஷ்டிகளைச் சிருஷ்டிக்க யெகோவாவைத் தவிர வேறு எவரால் முடியும்? கடவுளுடைய வேலைகள் பரிபூரணமாகவும் குறையற்றவையாகவும் இருக்கின்றன; ஆகவே மனிதனை இந்த விதத்தில் சிருஷ்டிக்கவேண்டுமென்று அவர் தேர்ந்தெடுத்தது, நிச்சயமாகவே குறைகூறுவதற்கு எவ்வித காரணமாகவும் இல்லை. உண்மையில், மகத்தான சிருஷ்டிகரால், பூமியிலுள்ள தூசியிலிருந்து மனிதனை பிரமிக்கத்தக்க, சிறந்த முறையில் சிருஷ்டிக்க முடிந்தது என்பது, அவருடைய எல்லையற்ற வல்லமை, திறம், நடைமுறை ஞானம் ஆகியவற்றைப் பற்றிய நம்முடைய போற்றுதலை அதிகரிக்கிறது.—உபாகமம் 32:4, NW, அடிக்குறிப்பு; சங்கீதம் 139:14.
சூழ்நிலைகளில் ஒரு மாற்றம்
3, 4. (அ) மனிதனைத் தூசியிலிருந்து சிருஷ்டித்ததில், கடவுள் என்ன நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை? (ஆ) சங்கீதம் 103:14-ல் தாவீது எதைக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார், இந்த முடிவுக்கு வருவதற்காக அந்தச் சூழமைவு நமக்கு எவ்வாறு உதவுகிறது?
3 தூசியாலான சிருஷ்டிகளுக்கு வரையறைகள் உள்ளன. என்றபோதிலும், இவை பாரமானவையாகவோ அதிகப்படியாக கட்டுப்படுத்துபவையாகவோ இருக்கவேண்டுமென்ற நோக்கத்தைக் கடவுள் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. அவை சோர்வை உண்டாக்கவோ மகிழ்ச்சியற்ற நிலையில் விளைவடையவோ ஏற்படுத்தப்படவில்லை. இருந்தாலும், சங்கீதம் 103:14-லுள்ள தாவீதின் வார்த்தைகளுடைய சூழமைவு குறிப்பிடுகிறபடி, மனிதர் உட்படுத்தப்பட்டிருக்கும் வரையறைகள் சோர்வை உண்டாக்கி, மகிழ்ச்சியற்ற நிலையில் விளைவடையலாம். ஏன்? ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாதபோது, தங்களுடைய வருங்கால குடும்பத்திற்கு ஒரு மாறுபட்ட சூழ்நிலையை அவர்கள் கொண்டுவந்தார்கள். தூசியால் உண்டாக்கப்பட்டிருப்பது, அப்போது புதிய அர்த்தங்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தது.a
4 தூசியிலிருந்து உருவாக்கப்பட்ட பரிபூரண மனிதர்கள்கூட கொண்டிருக்கக்கூடிய இயல்பான வரையறைகளைப்பற்றி தாவீது பேசிக்கொண்டில்லாமல், சுதந்தரிக்கப்பட்ட அபூரணத்தால் ஏற்படுத்தப்பட்ட மனித குறைபாடுகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். இல்லாவிட்டால், அவர் யெகோவாவைப் பற்றி இவ்வாறு சொல்லியிருக்கமாட்டார்: “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, . . . அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.” (சங்கீதம் 103:2-4, 10) தூசியால் உருவாக்கப்பட்டிருந்த போதிலும், பரிபூரண மனிதர் உண்மையாக இருந்திருந்தால், மன்னிப்பைத் தேவைப்படுத்தும் வகையில் அவர்கள் ஒருபோதும் தவறுசெய்யாமலும், பாவம் செய்யாமலும் இருந்திருப்பார்கள்; குணப்படுத்துதல்களைத் தேவைப்படுத்தும் கோளாறுகளை உடையவர்களாயும் அவர்கள் இருந்திருக்கமாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உயிர்த்தெழுதலால் மட்டுமே மீட்கப்படக்கூடிய மரணத்தின் குழிக்குள் இறங்க வேண்டிய அவசியமும் ஒருபோதும் அவர்களுக்கு இருந்திருக்காது.
5. தாவீதின் வார்த்தைகளைப் புரிந்துகொள்வது நமக்கு ஏன் கடினமாக இல்லை?
5 அபூரணராக இருப்பதால், தாவீது பேசின காரியங்களை நாம் எல்லாரும் அனுபவித்திருக்கிறோம். அபூரணத்தின் காரணமாக நமக்கிருக்கும் வரம்புகளைக் குறித்து நாம் எப்போதும் உணர்வுள்ளவர்களாக இருக்கிறோம். சில சமயங்களில் அவை யெகோவாவுடன் அல்லது நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களுடனுள்ள நம்முடைய உறவைக் கெடுப்பதாகத் தோன்றுகையில், நாம் கவலைப்படுகிறோம். நம்முடைய அபூரணங்களும் சாத்தானுடைய உலகின் அழுத்தங்களும் அவ்வப்போது நம்மைச் சோர்வடையச் செய்யும்போது வருத்தப்படுகிறோம். சாத்தானுடைய ஆட்சி விரைவில் அதன் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதால், அவனுடைய உலகம் பொதுவாக மக்கள்மீதும், குறிப்பாகக் கிறிஸ்தவர்கள்மீதும் ஒருபோதும் இல்லாத அளவுக்கு அதிக அழுத்தத்தைச் செலுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 12:12.
6. சில கிறிஸ்தவர்கள் ஏன் சோர்வுற்றவர்களாக உணரக்கூடும், இந்த வகையான உணர்ச்சியை சாத்தான் எப்படி சாதகமாகப் பயன்படுத்தக்கூடும்?
6 ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வது அதிக கடினமாகிக்கொண்டிருப்பதாக நீங்கள் உணருகிறீர்களா? எவ்வளவு நீண்ட காலம் சத்தியத்தில் இருக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக அபூரணராக ஆவதாகத் தோன்றுகிறது என்று சில கிறிஸ்தவர்கள் குறிப்பிடுவது கேட்கப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், அவர்கள் தங்கள் சொந்த அபூரணங்களைக் குறித்தும், தாங்கள் விரும்பக்கூடிய அளவுக்கு யெகோவாவின் பரிபூரண தராதரங்களுக்கு ஒத்திசைவாகச் செல்ல முடியாமல் இருப்பதை குறித்தும் அதிக உணர்வுள்ளவர்களாகி இருக்கிறார்கள் என்பதே மிக சாத்தியமான காரணமாக இருக்கிறது. என்றாலும், உண்மையில் யெகோவாவின் நீதியான தேவைகளைப்பற்றிய அறிவிலும் போற்றுதலிலும் தொடர்ந்து வளருவதன் ஒரு விளைவாக இது பெரும்பாலும் இருக்கிறது. அப்படிப்பட்ட எந்த ஒரு உணர்வும் பிசாசுக்குப் பிரியமானவற்றைச் செய்யும் அளவிற்குச் செல்லும்படியாக நம்மைச் சோர்வடைய ஒருபோதும் அனுமதிக்காமலிருப்பது அத்தியாவசியமாகும். யெகோவாவின் ஊழியர்கள் உண்மை வணக்கத்தைக் கைவிடும்படி செய்ய அவன் நூற்றாண்டுகளினூடே, சோர்வைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த மீண்டும் மீண்டும் முயன்று வந்திருக்கிறான். என்றாலும், கடவுளிடமாக உண்மையான அன்பும், அதோடுகூட பிசாசிற்கான ‘முழு பகையும்’ அவர்களில் பெரும்பாலானோரை அவ்வாறு செய்வதிலிருந்து தடுத்திருக்கிறது.—சங்கீதம் 139:21, 22; நீதிமொழிகள் 27:11.
7. எந்த வகையில் நாம் சில வேளைகளில் யோபைப் போல் இருக்கக்கூடும்?
7 என்றாலும், ஒரு சமயம் இல்லாவிட்டாலும் மற்றொரு சமயத்தில் யெகோவாவின் ஊழியர்கள் சோர்வடைந்தவர்களாக உணரக்கூடும். நம்முடைய சொந்த சாதனைகளில் அதிருப்தியும் ஒரு காரணமாக இருக்கலாம். உடல்சம்பந்தப்பட்ட காரணங்கள் அல்லது குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், அல்லது வேலை சகாக்களுடன் உள்முறிந்த உறவுகள் உட்பட்டிருக்கக்கூடும். உண்மையுள்ள யோபு அவ்வளவு சோர்வடைந்ததால், அவர் கடவுளிடம் இவ்வாறு மன்றாடினார்: “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.” ‘உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாக இருந்த மனிதனாகிய’ யோபையே கடினமான சூழ்நிலைகள் சோர்வுணர்ச்சிக்குரிய எழுச்சிகளைக் கொண்டிருக்கும்படி ஆழ்த்தியிருந்தால், நமக்கும் அதே காரியம் நிகழலாம் என்பதில் ஆச்சரியமில்லை.—யோபு 1:8, 13-19; 2:7-9, 11-13; 14:13.
8 யெகோவா இருதயங்களுக்குள் பார்க்கிறார் என்றும் நல்ல உள்நோக்கங்களைக் கவனிக்காமல் விட்டுவிடுவதில்லை என்றும் அறிவது எவ்வளவு ஆறுதலளிப்பதாய் இருக்கிறது! எல்லா நேர்மையோடும் அவரைப் பிரியப்படுத்த முயலும் எவரையும் அவர் ஒருபோதும் நிராகரிப்பதில்லை. உண்மையில் அவ்வப்போது சோர்வுணர்ச்சி ஏற்படுவது, ஒரு நல்ல அடையாளமாக இருக்கக்கூடும்; யெகோவாவுக்கான நம்முடைய சேவையை நாம் அலட்சியமாகக் கருதவில்லை என்பதை அது குறிப்பிடுவதாக இருக்கும். இந்த நோக்குநிலையிலிருந்து கருதும்போது, ஒருபோதும் தன்னுடைய சோர்வுணர்ச்சிக்கு எதிராக போராடாமல் இருக்கும் ஒருவர், மற்றவர்கள் தங்கள் பலவீனங்களைக் குறித்து ஆவிக்குரிய விதத்தில் உணர்வுள்ளவர்களாய் இருப்பதுபோல இல்லாமல் இருக்கக்கூடும். நினைவில் வையுங்கள்: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.”—1 கொரிந்தியர் 10:12; 1 சாமுவேல் 16:7; 1 இராஜாக்கள் 8:39, 40; 1 நாளாகமம் 28:9.
அவர்களும் தூசியினால் உண்டாக்கப்பட்டனர்
9, 10. (அ) கிறிஸ்தவர்கள் யாருடைய விசுவாசத்தைப் பின்பற்றவேண்டும்? (ஆ) மோசே தன்னுடைய நியமிப்பிற்கு எவ்வாறு பிரதிபலித்தார்?
9 கிறிஸ்தவர்களுக்கு முன் யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருந்து, பலமான விசுவாசத்தைக் காண்பித்த பலரை எபிரெயர் 11-ம் அதிகாரம் பட்டியலிடுகிறது. முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களும் நவீன நாளைச் சேர்ந்தவர்களும் அதைப்போன்றே செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் விலைமதிக்க முடியாதவை. (எபிரெயர் 13:7-ஐ ஒப்பிடவும்.) எடுத்துக்காட்டாக, மோசேயுடைய விசுவாசத்தைவிட வேறு யாருடையதை கிறிஸ்தவர்கள் சிறந்தவிதத்தில் பின்பற்ற முடியும்? அவருடைய காலத்தில் மிக வல்லமைவாய்ந்த உலக ஆட்சியாளராக இருந்த, எகிப்தின் பார்வோனுக்கு நியாயத்தீர்ப்பின் செய்திகளை அறிவிக்கும்படி அவர் கட்டளையிடப்பட்டார். இன்றும் பொய் மதத்திற்கும் கிறிஸ்துவின் ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்திற்கு விரோதமாக இருக்கும் மற்ற அமைப்புகளுக்கும் எதிராக அதே போன்ற நியாயத்தீர்ப்பின் செய்திகளை யெகோவாவின் சாட்சிகள் அறிவிக்கவேண்டும்.—வெளிப்படுத்துதல் 16:1-15.
10 மோசே காண்பித்தபடியே, இந்தக் கட்டளையை நிறைவேற்றுவது ஒரு எளிதான காரியமல்ல. “பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம்,” என்று அவர் கேட்டார். தகுதியின்மைக்குரிய அவருடைய உணர்ச்சிகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும். சக இஸ்ரவேலர் எவ்வாறு பிரதிபலிப்பார்கள் என்பதைக் குறித்தும் அவர் கவலைப்பட்டார்: “அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்,” என்றார். அவர் அதிகாரம் பெற்றிருப்பதை எவ்வாறு நிரூபிக்க முடியும் என்று யெகோவா அப்போது விளக்கினார்; ஆனால் மோசேக்கு இன்னொரு பிரச்சினை இருந்தது. அவர் சொன்னார்: ‘ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாய் உள்ளவன்.’—யாத்திராகமம் 3:11; 4:1, 10.
11. தேவாட்சிக்குரிய கடமைகளிடமாக நாம் எவ்வாறு மோசேயைப்போல் பிரதிபலிக்கக்கூடும், ஆனால் விசுவாசத்தைக் காட்டுவதன்மூலம் நாம் எதைக்குறித்து நம்பிக்கையாக இருக்கலாம்?
11 அவ்வப்போது, நாமும் மோசேயைப்போல் உணரக்கூடும். தேவாட்சிக்குரிய நம் கடமைகளை நாம் ஏற்றுக்கொள்கிறபோதிலும், அவற்றை நாம் எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்று நாம் ஆச்சரியப்படக்கூடும். ‘மக்களை அணுகி, அதிலும் சிலர் சமூக, பொருளாதார, அல்லது கல்வி ரீதியில் உயர்ந்த அந்தஸ்தை உடையவர்களாக இருப்பவர்களை அணுகி, அவர்களைக் கடவுளுடைய வழிகளில் பயிற்றுவிக்க நினைப்பதற்கு நான் யார்? நான் கிறிஸ்தவ கூட்டங்களில் குறிப்பு சொல்லும்போதோ தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மேடையில் பேச்சுக்களை அளிக்கும்போதோ என்னுடைய ஆவிக்குரிய சகோதரர்கள் எவ்வாறு பிரதிபலிப்பார்கள்? அவர்கள் என்னுடைய குறைகளைக் காணமாட்டார்களா?’ ஆனால், யெகோவா மோசேயோடு இருந்தார் என்பதையும் மோசே விசுவாசத்தைக் காண்பித்ததால் அவருடைய வேலைக்கு அவரை ஏற்றவராக்கினார் என்பதையும் நினைவில் வையுங்கள். (யாத்திராகமம் 3:12; 4:2-5, 11, 12) நாம் மோசேயின் விசுவாசத்தைப் பின்பற்றினால், யெகோவா நம்மோடு இருப்பார்; மேலும் நம்முடைய வேலைக்கு ஏற்றபடி நம்மைத் தயாராக்குவார்.
12. பாவங்கள் அல்லது தவறிழைத்தல்கள் காரணமாக சோர்வை எதிர்ப்படுகையில் தாவீதின் விசுவாசம் நம்மை எவ்வாறு உற்சாகப்படுத்தலாம்?
12 பாவங்கள் அல்லது தவறிழைத்தல்கள் காரணமாக ஏமாற்றமடைந்தவராக அல்லது சோர்வுற்றவராக உணரக்கூடிய எவரும் பின்வருமாறு தாவீது சொன்னதை நிச்சயமாகவே யோசித்துப் பார்க்கலாம்: “என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.” யெகோவாவிடம் மன்றாடிக்கொண்டு, தாவீது இவ்வாறும் சொன்னார்: “என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.” என்றாலும், சோர்வு யெகோவாவைச் சேவிப்பதற்கான தன் விருப்பத்தை எடுத்துப்போடும்படி அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. “உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.” தெளிவாகவே, தாவீது “தூசியாக” இருந்தார்; ஆனால் யெகோவா அவரைவிட்டு விலகவில்லை; ஏனென்றால் “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை” யெகோவா புறக்கணிப்பதில்லை என்ற வாக்குறுதியில் தாவீது விசுவாசம் வைத்தார்.—சங்கீதம் 38:1-9; 51:3, 9, 11, 17.
13, 14. (அ) நாம் ஏன் மனிதரைப் பின்பற்றுகிறவர்களாகிவிடக் கூடாது? (ஆ) பவுல் மற்றும் பேதுருவின் உதாரணங்கள் எவ்வாறு அவர்களும் தூசியால் உண்டாக்கப்பட்டவர்கள் என்பதைக் காண்பிக்கின்றன?
13 என்றபோதிலும், ‘நமக்குமுன் வைக்கப்பட்டிருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவதற்கு’ இந்த ‘மேகம்போன்ற திரளான சாட்சிகளை’ உற்சாகமாக நோக்கவேண்டுமென்றாலும், நாம் அவர்களைப் பின்பற்றுபவர்களாகும்படி சொல்லப்படவில்லை என்பதைக் கவனியுங்கள். அபூரண மனிதர்களை அல்ல—முதல் நூற்றாண்டைச் சேர்ந்த உண்மையுள்ள அப்போஸ்தலரையும்கூட அல்ல—ஆனால் ‘நம்முடைய விசுவாசத்தின் பிரதான காரணரும் பரிபூரணருமான இயேசுவின்’ அடிச்சுவடுகளைப் பின்பற்றும்படி சொல்லப்படுகிறோம்.—எபிரெயர் 12:1, 2; 1 பேதுரு 2:21.
14 கிறிஸ்தவ சபையின் தூண்களான அப்போஸ்தலர்கள் பவுலும் பேதுருவும், பல முறைகள் இடறலடைந்தனர். “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்,” என்று பவுல் எழுதினார். “நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” (ரோமர் 7:19, 24) பேதுரு ஒரு கணம், மட்டுக்குமீறிய தன்னம்பிக்கை உடையவராய் இயேசுவிடம் இவ்வாறு சொன்னார்: “உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன்,” என்றார். பேதுரு தம்மை மூன்றுமுறை மறுதலிப்பார் என்று சொல்லி அவரை இயேசு எச்சரித்தபோது, பேதுரு துணிச்சலுடன் தன் எஜமானை மறுத்துரைத்து இவ்வாறு பெருமைபாராட்டினார்: “நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன்.” இருந்தாலும், அவர் இயேசுவை மறுதலித்தார்; அவரை மனங்கசந்து அழும்படிச் செய்த ஒரு தவறாக அது இருந்தது. ஆம், பவுலும் பேதுருவும் தூசியால் உண்டாக்கப்பட்டவர்கள்.—மத்தேயு 26:33-35.
15. நாம் தூசியால் உண்டாக்கப்பட்டிருக்கிற உண்மையின் மத்தியிலும், முன்னேறிக்கொண்டுச் செல்வதற்கு நமக்கு என்ன உந்துவிப்பு இருக்கிறது?
15 என்றபோதிலும், தங்களுடைய குறைபாடுகள் மத்தியிலும், மோசே, தாவீது, பவுல், பேதுரு, இன்னும் அவர்களைப் போன்ற மற்றவர்களும் வெற்றிகரமாகச் செயல்பட்டனர். ஏன்? ஏனென்றால் அவர்கள் யெகோவாவில் பலமான விசுவாசத்தைக் காண்பித்து, அவரை முழுமையாக நம்பி, தடங்கல்கள் மத்தியிலும் அவரை நெருங்கப் பற்றிக்கொண்டிருந்தனர். ‘இயல்புக்கு மீறிய வல்லமையை’ அளிக்கும்படி அவர்கள் அவரில் சார்ந்திருந்தனர். அவரும் அதை அளித்தார்; திரும்பமுடியாத அளவுக்கு விழுந்துவிட அவர்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. நாம் விசுவாசத்தைக் காண்பித்துக்கொண்டே இருந்தால், நமக்கு நியாயத்தீர்ப்பளிக்கப்படும்போது, அது பின்வரும் வார்த்தைகளுக்கு ஒத்திசைவாக இருக்கும் என்று நாம் நிச்சயமாக இருக்கலாம்: “உங்கள் கிரியையையும், தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” நாம் தூசியால் உண்டாக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையின் மத்தியிலும், முன்னேறிக்கொண்டு செல்வதற்கு என்னே ஒரு உந்துவிப்பை அது நமக்கு அளிக்கிறது!—2 கொரிந்தியர் 4:7; எபிரெயர் 6:10.
தூசியால் உண்டாக்கப்பட்டிருப்பது நமக்குத் தனிப்பட்டவர்களாக எதை அர்த்தப்படுத்துகிறது?
16, 17. நியாயத்தீர்ப்பு செய்கையில், கலாத்தியர் 6:4-ல் விளக்கப்பட்டுள்ள நியமத்தை யெகோவா எவ்வாறு பொருத்துகிறார்?
16 பிள்ளைகளை அல்லது மாணவர்களை, அவர்களோடு உடன்பிறந்தவர்களுடனோ வகுப்புத் தோழர்களுடனோ செய்யப்படும் ஒப்பிடுதல்களின் அடிப்படையில் அல்லாமல், அவர்களுடைய தனிப்பட்ட திறமைகளுக்கேற்ப அவர்களை மதிப்பிடுவதிலிருக்கும் ஞானத்தை அநேக பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் அனுபவம் கற்றுக்கொடுத்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் பின்பற்றும்படியாகச் சொல்லப்பட்டுள்ள ஒரு பைபிள் நியமத்திற்கு இது ஒத்திசைவானதாக இருக்கிறது: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.”—கலாத்தியர் 6:4.
17 இந்த நியமத்திற்கு ஒத்திசைவாக, யெகோவா தம்முடைய மக்களை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தொகுதியாகக் கையாண்டாலும், அவர்களைத் தனிப்பட்டவர்களாக நியாயந்தீர்க்கிறார். ரோமர் 14:12 சொல்லுகிறது: “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.” யெகோவா தம்முடைய ஊழியர்கள் ஒவ்வொருவரின் மரபணுசார்ந்த உருவமைப்பையும் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களுடைய உடல்சார்ந்த, மனஞ்சார்ந்த உருவமைப்பையும், அவர்களுடைய திறமைகளையும், அவர்களுடைய சுதந்தரிக்கப்பட்ட பலங்களையும் பலவீனங்களையும், அவர்கள் கொண்டிருக்கும் சாத்தியங்களையும், கிறிஸ்தவ கனிகளைப் பிறப்பிக்கும் விதத்தில் இந்த சாத்தியங்களை அவர்கள் எந்த அளவுக்குப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ஞானமற்ற விதத்தில் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடுவதன் காரணமாக சோர்வாக உணரும் கிறிஸ்தவர்களுக்கு, ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் இரண்டு சிறிய காசுகளைப் போட்ட விதவையைப்பற்றிய இயேசுவின் குறிப்புகளும் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப்பற்றிய அவருடைய உவமையும் உற்சாகமளிக்கும் உதாரணங்களாக இருக்கின்றன.—மாற்கு 4:20; 12:42-44.
18. (அ) தூசியாக இருப்பது என்பது தனிப்பட்டவராக எதை நமக்கு அர்த்தப்படுத்துகிறது என்பதை நாம் ஏன் கண்டறியவேண்டும்? (ஆ) ஒரு நேர்மையான சுய-பரிசோதனை நம்மை ஏன் மனமுறிவடையச் செய்யக்கூடாது?
18 நம்முடைய முழு ஆற்றலையும் பயன்படுத்தி சேவிக்கும்படியாக, தூசியாக இருப்பது என்பது தனிப்பட்டவராக நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை நாம் கண்டறிவது அத்தியாவசியமாக இருக்கிறது. (நீதிமொழிகள் 10:4; 12:24; 18:9; ரோமர் 12:1) நம்முடைய தனிப்பட்ட குறைபாடுகளையும் பலவீனங்களையும் நன்கு அறிந்து வைத்திருந்தால் மட்டுமே, முன்னேற்றத்திற்குரிய தேவைக்கும் சாத்தியங்களுக்கும் நாம் விழிப்புணர்வுள்ளவர்களாய் இருக்கமுடியும். ஒரு சுய-பரிசோதனையைச் செய்கையில், நம் முன்னேற்றத்திற்காக உதவிசெய்வதில் பரிசுத்த ஆவியின் வல்லமையை ஒருபோதும் கவனிக்கத் தவறிவிடக் கூடாது. அதன் மூலமாக பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டது, பைபிள் எழுதப்பட்டது; மேலும் ஒரு மரிக்கும் உலகின் மத்தியில், ஒரு சமாதானமான புதிய உலக சமுதாயம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆகவே, பரிசுத்த ஆவிக்காக கேட்பவர்களுக்கு, தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்குத் தேவையான ஞானத்தையும் பலத்தையும் கொடுப்பதற்கு கடவுளுடைய பரிசுத்த ஆவி நிச்சயமாகவே வல்லமையுள்ளதாய் இருக்கிறது.—மீகா 3:8; ரோமர் 15:13; எபேசியர் 3:16.
19. நாம் தூசியால் உண்டாக்கப்பட்டிருப்பது எதற்கு ஒரு சாக்குப்போக்கல்ல?
19 நாம் தூசியாக இருக்கிறோம் என்பதை யெகோவா நினைவுகூருகிறார் என்றறிவது எவ்வளவு ஆறுதலளிப்பதாய் இருக்கிறது! என்றாலும், ஊக்கம் குறைந்தவர்களாகச் செயல்படுவதற்கு அல்லது ஒருவேளை தவறுசெய்வதற்குக்கூட இது ஒரு நியாயமான காரணம் என்று நாம் ஒருபோதும் சிந்தித்துவிடக்கூடாது. அவ்வாறு இல்லவே இல்லை! நாம் தூசியென்று யெகோவா நினைவுகூருவது, அவர் காட்டும் தகுதியற்ற தயவின் ஒரு வெளிக்காட்டாக இருக்கிறது. ஆனால், ‘நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களைப்போல்’ இருக்க நாம் விரும்புவதில்லை. (யூதா 4) நாம் தூசியால் உண்டாக்கப்பட்டிருப்பது, தேவபக்தியற்றவர்களாக இருப்பதற்கு எவ்வித சாக்குப்போக்கும் அல்ல. ஒரு கிறிஸ்தவன், ‘தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாமல்’ இருப்பதற்காக, தன் சரீரத்தை ஒடுக்கி, அடிமையைப்போல் கீழ்ப்படுத்தி, தவறான மனச்சாய்வுகளுக்கு எதிராக போராட முயலுகிறான்.—எபேசியர் 4:30; 1 கொரிந்தியர் 9:27.
20. (அ) என்ன இரண்டு அம்சங்களில், நாம் ‘கர்த்தருக்குள் செய்வதற்கு அதிகத்தை’ உடையவர்களாய் இருக்கிறோம்? (ஆ) நாம் ஏன் நம்பிக்கைக்குக் காரணத்தைக் கொண்டிருக்கிறோம்?
20 இப்போது, சாத்தானின் உலக ஒழுங்குமுறையின் முடிவான வருடங்களின்போது—ராஜ்ய பிரசங்க வேலையைப் பொறுத்தவரையிலும், கடவுளுடைய ஆவியின் கனிகளை அதிக முழுமையாக வளர்த்துக்கொள்வதைப் பொறுத்தவரையிலும்—குறைவான விசையுடன் செயல்படுவதற்கு இது நேரம் அல்ல. இரு அம்சங்களிலுமே ‘செய்வதற்கு அதிகத்தை’ உடையவர்களாக இருக்கிறோம். நம்முடைய ‘பிரயாசம் விருதாவாய் இராது’ என்று அறிந்திருப்பதால், முன்னேறிச் செல்வதற்கு இதுவே சமயமாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 15:58) யெகோவா நம்மை ஆதரித்துக்காப்பார்; ஏனென்றால் அவரைக்குறித்து தாவீது சொன்னார்: “நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22) அபூரண மனித சிருஷ்டிகள் எக்காலத்திலும் செய்யும்படி நியமிக்கப்பட்ட மிக மகத்தான வேலையில் தனிப்பட்டவர்களாகப் பங்கெடுக்க யெகோவா நம்மை அனுமதித்திருக்கிறார் என்றறிவது—அதுவும் நாம் தூசியால் உண்டாக்கப்பட்டிருந்தபோதிலும் என்றறிவது—என்னே ஒரு சந்தோஷத்திற்குரியது!
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் விளக்கவுரையான ஹெர்டர்ஸ் பிபெல்காமென்டார், சங்கீதம் 103:14-ஐப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவர் நிலத்தின் தூசியிலிருந்து மனிதரை உண்டாக்கினார் என்பதை நன்றாக அறிந்திருக்கிறார்; மேலும் தொடக்க பாவத்திலிருந்து அவர்கள்மேல் பாரமாக அழுத்தும் பலவீனங்களையும் அவர்களுடைய வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் அவர் அறிந்திருக்கிறார்.”—தடித்த சாய்வெழுத்துக்கள் எங்களுடையவை.
உங்களால் விளக்கமுடியுமா?
◻ மனிதர்கள் தூசியால் உண்டாக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகையில் ஆதியாகமம் 2:7-ம் சங்கீதம் 103:14-ம் எவ்வாறு வேறுபடுகின்றன?
◻ எபிரெயர் 11-ம் அதிகாரம், இன்று கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு உற்சாகத்தின் ஒரு ஊற்றுமூலமாக இருக்கிறது?
◻ கலாத்தியர் 6:4-ல் கொடுக்கப்பட்டுள்ள நியமத்தைப் பொருத்துவது ஏன் நமக்கு ஞானமானதாக இருக்கும்?
◻ எபிரெயர் 6:10-ம் 1 கொரிந்தியர் 15:58-ம் சோர்வடைவதைத் தடுப்பதற்கு நமக்கு எவ்வாறு உதவிசெய்யலாம்?
8. அவ்வப்போது சோர்வுணர்ச்சி ஏற்படுவது ஏன் ஒரு நல்ல அடையாளமாக இருக்கலாம்?
[பக்கம் 10-ன் படங்கள்]
கிறிஸ்தவர்கள் தங்கள் உடன் வணக்கத்தாரின் விசுவாசத்தைப் பின்பற்றுகின்றனர், ஆனால் அவர்கள் தங்கள் விசுவாசத்தைப் பூரணப்படுத்துகிற இயேசுவைப் பின்பற்றுகின்றனர்