உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 9/15 பக். 25-26
  • குறைவுபடாத தைரியத்தின் ஊற்றுமூலம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குறைவுபடாத தைரியத்தின் ஊற்றுமூலம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கிறிஸ்தவர்களுக்கான ஒரு பாடம்
  • ஒரு மதம் நிலைத்திருக்கும்
    விழித்தெழு!—1996
  • நல்ல தைரியத்தோடிருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • தைரியம் தாரும்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ‘உறுதியோடும் தைரியத்தோடும் இருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 9/15 பக். 25-26

குறைவுபடாத தைரியத்தின் ஊற்றுமூலம்

“நாங்கள் ‘உஸ்’ என்ற சீறும் ஒலியால் திடீரென்று நிறுத்தப்பட்டோம். பின்னர், எங்களுக்கு இடது பக்கத்தில் ஒரு புதரிலிருந்து, தங்கள் சிறகுகளை விரித்தவண்ணம் இரு பறவைகள் எங்களிடமாக வந்தன. எங்களுக்கு முன்பாக, நிலத்தில் ஒரு சிறிய குழியில் இரு முட்டைகள் இருந்தன. அந்தப் பறவைகளின் கூட்டைத் தற்செயலாக நாங்கள் மிதித்துவிடாதபடி அவை எங்களைத் தடுத்திருந்தன. நாங்கள் பழுப்பு நிறப் புள்ளிகளுள்ள அழகிய அந்த முட்டைகளைப் படம்பிடிக்க ஒவ்வொரு முறை நெருங்கிச் செல்ல முயன்றபோதும், அந்தப் பறவைகள் அவற்றின் அச்சுறுத்தும் சாகசத்தை மீண்டும் தொடர்ந்தன. ‘எவ்வளவு தைரியசாலிகள்,’ என்று நாங்கள் நினைத்தோம்.

புள்ளிகளுள்ள டிக்காப்பின் கூட்டை அணுகுகையில் நான்கு பேருடைய அனுபவம் அதுவாகவே இருந்தது. பிளாக்ஸ்மித் ப்ளோவர் என்பது இதைவிட சிறிய ஒரு பறவை. தென் ஆப்பிரிக்க பறவைகள் குறித்த வழிகாட்டி (Everyone’s Guide to South African Birds) என்பதில் பறவையியல் வல்லுநர்களான சிங்லேர் மற்றும் மென்டல்சன் இவ்வாறு விவரிக்கின்றனர்: “குஞ்சுபொரிக்கும் ஜோடிகள் தங்கள் கூட்டையும் குஞ்சுகளையும் பலமாகப் பாதுகாக்கின்றன; யாராவது அணுகினால் மிகவும் எதிர்க்கின்றன. வரம்புமீறி வருபவரின் அளவைப் பார்த்து அவை தளர்ந்துபோகாமல், கடுமையாக சத்தமிட்டுக் கொண்டும், அவர்களை விரட்டுவதற்கான எச்சரிப்பின் முயற்சியாக பயமின்றி மனிதர்களிடமாகக்கூட பாய்ந்திறங்கி பறக்கின்றன.”

தனிப்பட்ட பெரிய யானைகள் ஒரு ப்ளாக்ஸ்மித் ப்ளோவர் கூட்டின் திசைநோக்கி தற்செயலாக நடந்து வந்ததுமே, அந்தப் பறவையின் சாகசம் தொடங்குவதைச் சிலர் கவனித்திருக்கின்றனர். பொதுவாக அந்த யானைகள் சுற்றி வளைந்து செல்வதன்மூலம் இணங்கிவிடுகின்றன.

அப்பேர்ப்பட்ட தைரியத்தை அந்தப் பறவைகள் எங்கிருந்து பெறுகின்றன? அது அவர்களைச் சிருஷ்டித்தவரிடமிருந்து துவங்குகிறது. இந்தச் சின்னஞ்சிறு சிருஷ்டிகள், தங்களுடைய கூடுகளுக்கோ இளம் குஞ்சுகளுக்கோ பெரிய மிருகங்கள் கேடு விளைவிப்பதைத் தடுப்பதற்காக அவற்றிற்கு இயல்புணர்ச்சி செயல்பாட்டு முறைகளை யெகோவா தேவன் திட்டமைத்து வைத்திருக்கிறார்.

கிறிஸ்தவர்களுக்கான ஒரு பாடம்

கிறிஸ்தவர்கள் வெறும் இயல்புணர்ச்சிக்குரிய தைரியத்திற்கும் அப்பால் செல்ல விரும்பினாலும்கூட, அவர்கள் இதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். கடவுளுடைய கட்டளைகளுக்குப் பயமின்றி கீழ்ப்படிந்த தங்கள் குருவாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்படி அவர்கள் கேட்கப்படுகிறார்கள். (எபிரெயர் 12:1-3) கடவுளைச் சேவிப்பதிலிருந்து பின்வாங்கும் கோழைகளை பைபிள் கண்டனம் செய்கிறது. (எபிரெயர் 10:39; வெளிப்படுத்துதல் 21:8) அதேநேரத்தில், நம்முடைய அபூரணத் தன்மையாலான உருவமைப்பை யெகோவா புரிந்துகொள்கிறார்; சில நேரங்களில் நாம் பாவம் செய்யவோ அவருடைய சித்தத்தை முழுமையாகச் செய்வதற்குத் தேவையான தைரியத்தில் குறைவுபடவோகூடும் என்பதையும் அறிந்திருக்கிறார். (சங்கீதம் 103:12-14) சரியானதைச் செய்வதிலிருந்து பயம் ஒருவரைத் தடுக்குமானால் அவர் என்ன செய்யலாம்?

சோதனைகளை எதிர்த்துப் போராடுவதற்கான பலத்திற்காகவும் தொடர்ந்து கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காகவும் ஒரு கிறிஸ்தவன் ஜெபசிந்தையுடன் கடவுளிடம் திரும்பவேண்டும். யெகோவாவின் உதவியைப் பற்றி நம்பிக்கையளிக்கும் இந்த வாக்குறுதியை பைபிள் கொண்டிருக்கிறது: “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” (ஏசாயா 40:29-31) அபூரண மனிதர் பலர் இந்த வார்த்தைகளின் உண்மையை அனுபவத்தால் அறிந்திருக்கின்றனர்; ‘பலவீனமான ஒரு நிலையிலிருந்து பலமுள்ளவர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.’ (எபிரெயர் 11:34) கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு நல்ல உதாரணம்; அவர் எழுதினார்: “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்.”—2 தீமோத்தேயு 4:17.

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக விரும்பும் புதிதாக அக்கறைகாட்டும் ஆட்கள்கூட அப்படிப்பட்ட பலப்படுத்தும் உதவியை அனுபவிக்க முடியும். ஹென்றி என்ற பெயருடைய தென் ஆப்பிரிக்க மனிதர் ஒருவரைக் கவனியுங்கள்; அவர் சர்ச்சில் பொருளாளராகவும், தன்னுடைய பாதிரியாருக்குப் பக்கத்து வீட்டில் வாழ்பவராகவும் இருந்தார். ஹென்றி சத்தியத்தைத் தேடிக்கொண்டிருந்தார். சர்ச்சில் அவருக்கு ஈடுபாடு இருந்தபோதிலும், அவர் ஒரு நாள், யெகோவாவின் சாட்சிகளுடன் ஒரு இலவச பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார். காலப்போக்கில், ஒரு சாட்சியாவதற்கான விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார்; அந்த இலக்கை அடைவதற்காக தான் என்ன படிகளை எடுக்கவேண்டும் என்றும் கேட்டார். முதலாவதாக அவர் தன்னுடைய சர்ச்சிலிருந்து வெளியேற வேண்டும் என்று விளக்கப்பட்டது. (வெளிப்படுத்துதல் 18:4) பாதிரியார் அயலகத்தாராகவும் நண்பராகவும் இருந்ததால், வெறும் ஒரு விலகல் கடிதத்தை எழுதுவது மட்டும் போதாது என்றும் இந்த விஷயத்தை நேருக்கு நேர் பேசவேண்டும் என்றும் ஹென்றி நினைத்தார். இதை அவர் தைரியமாகச் செய்தார்.

பாதிரியார் அதிர்ச்சியுற்று, பின்னர் தலைமை பாதிரியாரையும் சர்ச்சின் மற்ற அங்கத்தினரையும் கூட்டிக்கொண்டு ஹென்றியைச் சந்திக்கச் சென்றார். கடவுளுடைய பரிசுத்த ஆவி இல்லை என்று அவர்களால் எண்ணப்படும் ஒரு மதத்தின் அங்கத்தினராவதற்காக அவர் ஏன் சர்ச்சை விட்டுச் செல்லவேண்டும் என்று அவர்கள் அறிய விரும்பினார்கள். “முதலில், எனக்கு அவர்களிடம் பதில் சொல்ல பயமாக இருந்தது, ஏனென்றால் அவர்கள் எப்போதும் என்மீது பெரிய செல்வாக்கு செலுத்தி இருந்தார்கள். ஆனால் நான் யெகோவாவிடம் உதவிக்காக ஜெபித்தேன்; இந்த விதத்தில் நியாயவாதம் செய்ய அவர் எனக்கு உதவி செய்தார்: ‘எல்லா சர்வதேச மதங்களிலும், கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதைப் பயன்படுத்தும் ஒரே மதம் எது? யெகோவாவின் சாட்சிகள் அல்லவா? கடவுள் அவர்களைத் தம்முடைய பெயரைத் தாங்கியிருப்பதற்கு அனுமதித்துவிட்டு, அவருடைய பரிசுத்த ஆவியை அவர்களுக்குக் கொடுக்காமலும் இருப்பாரா?’” என்று ஹென்றி விளக்கினார். அப்படிப்பட்ட நியாயவாதத்தை சர்ச் அதிகாரிகளால் மறுத்துரைக்க முடியவில்லை. கடவுள் கொடுக்கிற அறிவுக்காகவும் பலத்துக்காகவும் நன்றியுள்ளவராய், ஹென்றி இப்போது யெகோவாவின் சாட்சிகளோடு வீட்டுக்கு வீடு ஊழியத்தில் தைரியமாக பங்குகொள்கிறார்.

ஆம், ஒரு உண்மை கிறிஸ்தவராக இருப்பது தைரியத்தைத் தேவைப்படுத்துகிறது. இந்த உலகத்தின் முடிவு நெருங்குகையில், விசுவாச பரீட்சைகள் அதிகரிக்கும். கடவுளுடைய ஊழியர்களின் உத்தமத்தைத் தகர்க்க முயலுவதன்மூலம், நித்திய ஜீவனுக்கான அவர்களுடைய அருமையான நம்பிக்கையைக் கெடுக்க சாத்தான் விரும்புகிறான். (வெளிப்படுத்துதல் 2:10-ஐ ஒப்பிடவும்.) ஆனால் நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது. பயத்தின் காரணமாக தற்காலிகமாக நாம் பின்வாங்கினாலும், நாம் திரும்புவதற்கு யெகோவாவால் உதவிசெய்ய முடியும். அவருடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்யும்படி, பலத்திற்காக அவரை நோக்கியிருங்கள். பயமற்ற பறவைகளைச் சிருஷ்டித்தவரே குறைவுபடாத தைரியத்தின் ஊற்றுமூலமாக இருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். உண்மையில், உண்மைக் கிறிஸ்தவர்கள் “தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.”—எபிரெயர் 13:6.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்