ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
தேவனுடைய வார்த்தை வல்லமையுள்ளது
‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது.’ (எபிரெயர் 4:12) பொய் மதத்தால் வஞ்சிக்கப்பட்டிருந்த ஆட்கள் பைபிள் சத்தியங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகையில், இந்த வார்த்தைகள் பல தடவைகள் உண்மையென நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. டொமினிக்கன் குடியரசிலிருந்து வரும் பின்வரும் அனுபவத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, பைபிளின் வல்லமை மக்களின் வாழ்க்கையை மாற்றி நம்பிக்கையை கொடுக்கமுடியும்.
சமீபத்தில் தன்னுடைய இரண்டு சிறு பிள்ளைகளையும் மரணத்தில் இழந்துவிட்டிருந்த பிரபலமான ஒரு கத்தோலிக்க பெண்மணியை யெகோவாவின் சாட்சிகள் சந்தித்தனர். அவள் மிகுந்த துக்கத்தோடிருந்தாள், ஒவ்வொரு நாளும் தன் அவல நிலையைக் குறித்து புலம்பிக்கொண்டிருந்தாள். சாட்சிகள் யோவான் 5:28, 29-ல் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை அவளுக்குக் காண்பித்தார்கள். சாட்சிகளோடு கொண்டிருந்த கூடுதலான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அவள் உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் ஆறுதலைக் கண்டடைந்தது மட்டுமல்லாமல், தன்னுடைய கத்தோலிக்க மதத் தலைவர்கள் தன்னை வஞ்சித்துக்கொண்டிருந்ததையும் உணர்ந்தாள்.
வெகு சீக்கிரத்தில் அவள் கத்தோலிக்க சர்ச்சிலிருந்து விலகிக்கொண்டு யெகோவாவின் சாட்சிகளோடு ஒழுங்கான பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டாள். என்றபோதிலும், அவளுடைய கணவன் அவளுடைய கருத்துக்களை ஒத்துக்கொள்ளவில்லை. அவரும்கூட மிகவும் பிரபலமான ஒரு கத்தோலிக்கராக இருந்தபடியால், அவளுடைய போக்கிலிருந்து அவளை மாற்றி கத்தோலிக்க சமயத்துக்குள் மறுபடியும் அவளைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் நன்கு அறியப்பட்ட அரசியல் மற்றும் மதப்பற்றுள்ள நண்பர்கள் தன்னுடைய மனைவியைச் சந்திக்க ஏற்பாடுசெய்தார். பின்னால் மணவிலக்கு செய்வதாக மிரட்டி, ஒரு கட்டத்தில், அவர்கள் மணவிலக்கு செய்துகொள்ளப்போவதாக தன் உறவினர்களுக்கும் சக சர்ச் உறுப்பினர்களுக்கும்கூட தெரிவித்தார்.
ஆனால் அவருடைய சூழ்ச்சி பயனளிக்கவில்லை. மறுபட்சத்தில், அவள் தன்னுடைய பைபிள் படிப்புகளைத் தொடர இன்னும் அதிக தீர்மானமுள்ளவளானாள். அவளுடைய ஆவிக்குரிய வளர்ச்சியினாலும் நேர்த்தியான கிறிஸ்தவ குணாதிசயங்களை அவள் விருத்திசெய்துகொண்டிருந்ததாலும் கணவன் மணவிலக்கை நாடுவதற்குப் பதிலாக அவளோடிருக்க தீர்மானித்தார். ஒருநாள் அவள் படித்துக்கொண்டிருந்த பைபிள் இலக்கியங்களை ஆராய்ந்து பார்க்கவும்கூட ஒப்புக்கொண்டார்—ஆனால் ஒரு நிபந்தனையின்பேரில். அவர் தன்னுடைய சொந்த கத்தோலிக்க பைபிள் மொழிபெயர்ப்பை உபயோகித்து ஆராய விரும்பினார்.
அவருக்கு ஆச்சரியமுண்டாக, யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட இலக்கியத்தின் உதவியோடு, நேரடியாக தன்னுடைய சொந்த பைபிளிலிருந்தே அவர் புதிய காரியங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். தன்னுடைய மனைவி சரியான போக்கைத் தெரிந்துகொண்டிருப்பதை அவர் உணர்ந்தார், விரைவில் அவளுடைய முன்மாதிரியைப் பின்பற்ற அவர் தயாரானார். ஆம், தன்னுடைய சொந்த வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வதற்கான தேவையைக் கண்டார். தன்னுடைய புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது அவருக்குக் கடினமான ஒரு சவாலாக இருந்தது. “மரணம் விற்பனைக்கு—புகைபிடிப்பதை நிறுத்த பத்து வழிகள்” என்ற அட்டைப்பட தலைப்பைக்கொண்ட ஜூலை 8, 1989 ஆங்கில விழித்தெழு! (தமிழில், செப்டம்பர் 8, 1990) பிரதியை வாசித்தபிறகு, வேதத்துக்கு எதிரான இந்தப் பழக்கத்தை விட்டுவிட தீர்மானித்தார். வழக்கமாக ஜேப்பியில் சிகரெட் பாக்கெட்டு வைக்கும் இடத்தில் அந்த விழித்தெழு!-வை அவர் எடுத்துச்செல்ல ஆரம்பித்தார். புகைபிடிப்பதற்கான தூண்டுதல் ஏற்பட்ட ஒவ்வொரு சமயமும் புகைபிடித்தலின் பேரிலுள்ள கட்டுரைகளை வாசித்தார். இந்த முறை பலன் தந்தது! கட்டுரைகளைப் பல தடவைகள் வாசித்தப் பிறகு, அவரால் புகைபிடிப்பதை நிறுத்த முடிந்தது.
இன்று கணவனும் மனைவியும் இருவருமே யெகோவாவை முழுக்காட்டப்பட்ட ஊழியர்களாக சேவிக்கிறார்கள். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அதிகமான தன்னுடைய நேரத்தை ஒதுக்கி, சூழ்நிலைமைகள் அனுமதிக்கையில், அவர் ஒரு முழு நேர ஊழியராக சேவிக்கிறார். யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையில் அவர் ஓர் உதவி ஊழியராக சேவைசெய்கிறார். அவரும் அவருடைய மனைவியும் உயிர்த்தெழுதலை எதிர்நோக்கியவர்களாக இருக்கிறார்கள். அப்பொழுது புதிய ஓர் உலகில் உயிரோடு தங்களுடைய பிள்ளைகளை வரவேற்க முடியும். ஆம், தேவனுடைய வார்த்தையாகிய பைபிள் ஜீவனும் வல்லமையும் உள்ளது!