பலவீனத்தையும், துன்மார்க்கத்தையும், மனந்திரும்புதலையும் தீர்மானித்தல்
பாவம் என்பது—யெகோவாவின் நீதியுள்ள தராதரங்களில் குறைவுபடுவது—கிறிஸ்தவர்களால் வெறுக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. (எபிரெயர் 1:9) விசனகரமாக, நாமெல்லாரும் அவ்வப்போது பாவம் செய்துவிடுகிறோம். பிறப்பிலிருந்தே பெறப்பட்ட பலவீனத்தாலும் அபூரணத்தாலும் நாம் அனைவரும் போராடி வருகிறோம். இருந்தபோதிலும், அநேகருடைய விஷயத்தில், நம்முடைய பாவங்களை யெகோவாவிடம் மனம்திறந்து சொல்லிவிட்டு, அவற்றைத் திரும்பவும் செய்யாமலிருப்பதற்கு முழுமூச்சுடன் முயற்சிப்போமானால், அவரை ஒரு சுத்த மனச்சாட்சியோடு அணுகமுடியும். (ரோமர் 7:21-24; 1 யோவான் 1:8, 9; 2:1, 2) கிரயபலியின் அடிப்படையில், நம்முடைய பலவீனங்களின் மத்தியிலும் நம்முடைய பரிசுத்த சேவையை யெகோவா ஏற்றுக்கொள்கிறார். அதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்துகிறோம்.
யாரேனும் ஒருவர் மாம்சப்பிரகாரமான பலவீனத்தினால் பெரிய பாவத்தில் விழுகிறாரென்றால், யாக்கோபு 5:14-16-ல் கீழ்க்கண்டவாறு விவரிக்கப்பட்டிருக்கும் செயற்படு முறைக்கு இசைவாக, அவருக்கு உடனடியாக மேய்ப்பு சந்திப்பு தேவைப்படுகிறது: “உங்களில் ஒருவன் [ஆவிக்குரிய வகையில்] வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக . . . அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.”
ஆகவே, ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவன் படுமோசமான பாவத்தைச் செய்யும்போது, தனிப்பட்ட வகையில் யெகோவாவிடம் மனம்திறந்து சொல்வதைவிட அதிகம் தேவைப்படுகிறது. மூப்பர்கள் ஒருசில காரியங்களைச் செய்யவேண்டி இருக்கிறது. ஏனென்றால் சபையின் தூய்மையோ சமாதானமோ அச்சுறுத்தப்படுகிறது. (மத்தேயு 18:15-17; 1 கொரிந்தியர் 5:9-11; 6:9, 10) அந்தத் தனிநபர் மனந்திரும்புகிறாரா? அந்தப் பாவத்திற்கு வழிநடத்தியது எது? அது பலவீனத்தினால் ஏதோ அசம்பாவிதமாக நடந்துவிட்டதா? அது பழக்கமாக ஆகிவிட்டிருக்கிற பாவமா? என்பவற்றையெல்லாம் மூப்பர்கள் தீர்மானிக்கவேண்டி இருக்கலாம். அவ்வாறு தீர்மானிப்பது எப்போதும் அவ்வளவு சுலபமாக அல்லது திட்டவட்டமாக இருக்காது. இதற்குக் கணிசமான அளவு பகுத்துணர்வு தேவையாய் இருக்கிறது.
அந்தப் பாவம் தப்பான போக்கைத் தொடர்வதனாலும் துன்மார்க்க நடத்தையின் விளைவாகவும் இருக்குமானால் அப்பொழுது என்ன? அப்படியென்றால், மூப்பர்களின் பொறுப்பு தெளிவாக இருக்கிறது. கொரிந்து சபையில் ஏற்பட்ட ஒரு வினைமையான விஷயத்தைக் கையாளுவதற்கான வழிநடத்துதலைக் கொடுக்கையில் அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.” (1 கொரிந்தியர் 5:13) கிறிஸ்தவ சபையில் துன்மார்க்கர்களுக்கு இடமில்லை.
பவவீனத்தையும், துன்மார்க்கத்தையும், மனந்திரும்புதலையும் சீர்தூக்கிப்பார்த்தல்
ஒருவர் மனந்திரும்புகிறார் என்று மூப்பர்கள் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?a இது ஒரு சாதாரணமான கேள்வி அல்ல. உதாரணமாக, தாவீது ராஜாவைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவர் விபசாரம் செய்து, பின்னர் அதன் விளைவாக கொலையும் செய்தார். எனினும், யெகோவா அவரைத் தொடர்ந்து வாழ்ந்திருக்கும்படி விட்டுவைத்தார். (2 சாமுவேல் 11:2-24; 12:1-14) அனனியாவையும் சப்பீராளையும்கூட நினைத்துப் பாருங்கள். அவர்கள் கள்ளத்தனமாக அப்போஸ்தலரை ஏமாற்ற முயற்சித்தனர். உண்மையில் உள்ளதைவிட அதிக தாராளகுணம் உடையவர்களைப்போல் பாசாங்கு செய்தனர். அது அவ்வளவு மோசமானதா? ஆம். கொலையையும் விபசாரத்தையும் போன்ற மோசமான காரியமாக இருந்ததா? இல்லவேயில்லை! எனினும், அனனியாவும் சப்பீராளும் தங்களுடைய உயிரை இழந்தனர்.—அப்போஸ்தலர் 5:1-11.
ஏன் இந்த வித்தியாசமான நியாயத்தீர்ப்புகள்? தாவீது மாம்சப்பிரகாரமான பலவீனத்தினால் பெரிய பாவத்தை செய்தார். அவர் செய்தது அவருக்கு எடுத்து உணர்த்தப்பட்டபோது, மனந்திரும்பினார். ஆகவே யெகோவா அவரை மன்னித்தார். இருந்தபோதிலும், தன்னுடைய குடும்பத்தில் இருந்த பிரச்சினைகளுக்காக அவர் கடுமையாக சிட்சிக்கப்பட்டார். அனனியாவும் சப்பீராளும் கிறிஸ்தவ சபையை ஏமாற்றும் முயற்சியில் மாய்மாலத்தோடு பொய் சொன்னார்கள். இவ்வாறு, ‘தேவனுடைய பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொன்னதனால்’ அவர்கள் பாவம் செய்தனர். அதுதானே துன்மார்க்க இருதயத்திற்கான அத்தாட்சியாக இருந்தது. ஆகவே அவர்கள் மிகக் கடுமையாக நியாயம்தீர்க்கப்பட்டனர்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் யெகோவாவே நியாயத்தீர்ப்பு செய்தார். அவரால் இருதயங்களை ஆராய முடியுமாதலால் அவருடைய நியாயத்தீர்ப்பு சரியாகவே இருந்தது. (நீதிமொழிகள் 17:3) மனித மூப்பர்களால் அவ்வாறு செய்யமுடியாது. ஆகவே பெரிய பாவமொன்று துன்மார்க்கத்தின் அத்தாட்சியாக இருப்பதைவிட அதிகம் பலவீனத்தின் அத்தாட்சிதானா என்று மூப்பர்கள் எவ்வாறு பகுத்துணர முடியும்?
உண்மையில், பாவம் அனைத்தும் துன்மார்க்கம் ஆகும், ஆனால் பாவம்செய்யும் அனைவருமே துன்மார்க்கர்கள் அல்லர். ஒரே மாதிரியான பாவங்கள் ஒரு ஆளிடத்தில் உள்ள பலவீனத்தின் அத்தாட்சியாக இருக்கலாம், ஆனால் வேறொரு ஆளிடத்தில் உள்ள துன்மார்க்கத்தின் அத்தாட்சியாக இருக்கலாம். மெய்யாகவே, பாவம் செய்வது பாவம் செய்தவரின் பாகத்தில் இருக்கும் ஓரளவு பலவீனம், துன்மார்க்கம் ஆகிய இரண்டையுமே உள்ளடக்கியிருக்கிறது. தீர்மானிப்பதற்கான ஒரு அம்சமானது, பாவம் செய்த அவர் தான் செய்ததைப்பற்றி எவ்வாறு உணருகிறார், மேலும் அதைப்பற்றி அவர் என்ன செய்யலாமென்றிருக்கிறார் என்பதாகும். மனந்திரும்பும் மனநிலையை அவர் காண்பிக்கிறாரா? இதைப் புரிந்துகொள்ள மூப்பர்களுக்குப் பகுத்துணர்வு தேவைப்படுகிறது. அந்தப் பகுத்துணர்வை அவர்கள் எவ்வாறு பெறமுடியும்? “நான் சொல்லுகிறவற்றைத் தொடர்ந்து தியானித்துக்கொள்; கர்த்தர் எல்லா காரியங்களிலும் உனக்குப் பகுத்துணர்வை தந்தருளுவார்,” என்று அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு உறுதியளித்தார். (2 தீமோத்தேயு 2:7, NW) பவுலும் மற்ற பைபிள் எழுத்தாளர்களும் ஏவப்பட்டெழுதிய வார்த்தைகளை, மூப்பர்கள் மனத்தாழ்மையுடன் “தொடர்ந்து தியானித்துக்கொண்டு” இருந்தால், சபையில் பாவம் செய்கிறவர்களை தகுந்தமுறையில் நோக்குவதற்குத் தேவையான பகுத்துணர்வைப் பெறுவர். அப்படியானால், அவர்களுடைய தீர்மானங்கள், தங்களுடைய சொந்த எண்ணத்தையல்ல, ஆனால் யெகோவாவின் எண்ணத்தை வெளிப்படுத்தும்.—நீதிமொழிகள் 11:2; மத்தேயு 18:18.
இது எப்படி செய்யப்படுகிறது? துன்மார்க்கர்களை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது என்று ஆராய்ந்து பார்த்து, அந்த விவரிப்பு, கையாளப்படுகிற தனிநபருக்குப் பொருந்துகிறதா என்று பார்ப்பது ஒரு வழியாக இருக்கிறது.
பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதலும் மனந்திரும்புதலும்
துன்மார்க்க போக்கைத் தொடர்வதைத் தெரிந்துகொண்ட முதல் மானிடர் ஆதாமும் ஏவாளும் ஆவர். பரிபூரணர்களாக இருந்து, யெகோவாவின் சட்டங்களைப் பற்றிய முழு அறிவு உள்ளவர்களாக இருந்தபோதிலும், தெய்வீக அரசுரிமையை எதிர்த்தனர். அவர்கள் செய்த காரியத்தை யெகோவா அவர்களுடைய கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, அவர்களுடைய பிரதிபலிப்புகள் குறிப்பிடத்தக்கவையாய் இருந்தன—ஆதாம் ஏவாள்மீது பழியைப்போட, ஏவாளும் அந்தப் பாம்பின்மீது பழியைப் போட்டாள்! (ஆதியாகமம் 3:12, 13) இதை தாவீது காண்பித்த உள்ளார்ந்த மனத்தாழ்மையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அவருடைய பெரும்பாவத்தை உணருகையில், அவர் தன்னுடைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்,” என்று சொல்லி மன்னிப்புக்காக கெஞ்சினார்.—2 சாமுவேல் 12:13; சங்கீதம் 51:4, 9, 10.
பெரிய பாவத்தை, முக்கியமாக வயது வந்த ஒருவருடைய பாகத்தில், உட்படுத்திய வழக்குகளைக் கையாளுகையில், மூப்பர்கள் இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளையும் கவனத்தில் கொள்வது நல்லது. பாவம் செய்த ஒருவர்—தான் செய்த பாவம் உணர்த்தப்படுகையில் தாவீதைப்போல—உடனடியாக குற்றத்தை ஏற்றுக்கொண்டு, மனந்திரும்பும் வகையில் உதவிக்காகவும் மன்னிப்புக்காகவும் யெகோவாவை எதிர்நோக்கி இருக்கிறாரா? அல்லது ஒருவேளை வேறொருவர்மீது பழியைப்போட்டு, தான் செய்ததைக் குறைக்க வகைதேடுகிறாரா? பாவம் செய்கிற நபர் தான் செய்த காரியங்களுக்குத் தன்னை வழிநடத்தியது எது என்பதைப்பற்றி விளக்க விரும்பலாம் என்பதும், மூப்பர்கள் அந்த நபருக்கு எப்படி உதவிசெய்யலாம் என்று தீர்மானிக்கும்போது, கடந்த காலத்திலோ தற்காலத்திலோ ஏற்பட்ட ஏதாவது சூழ்நிலைகளை ஆராயவேண்டி இருக்கலாம் என்பதும் உண்மையே. (ஓசியா 4:14-ஐ ஒப்பிடுங்கள்.) ஆனால் பாவம் செய்தது தானே என்றும், யெகோவாவின் முன்னிலையில் அதற்குப் பொறுப்பாளியும் தானே என்றும் அவர் ஒப்புக்கொள்ளவேண்டும். “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்,” என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.—சங்கீதம் 34:18.
தவறு செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருத்தல்
சங்கீதப் புத்தகம் துன்மார்க்கர்களைப்பற்றி பல இடங்களில் கூறுகிறது. அத்தகைய வசனங்கள் ஒரு நபர் அடிப்படையாகவே துன்மார்க்கனா அல்லது பலவீனனா என்பதைப் பகுத்துணர மூப்பர்களுக்கு அதிகம் உதவிசெய்யக்கூடும். உதாரணமாக, தாவீது ராஜா ஏவப்பட்டெழுதிய ஜெபத்தைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்: “தங்கள் இருதயத்தில் பொல்லாப்பை வைத்திருந்து, ஆனால் தங்கள் தோழர்களிடம் சமாதான வார்த்தைகளைப் பேசும் துன்மார்க்கரோடும் அக்கிரமச் செய்கையைப் பழக்கமாகக் கொண்டிருப்பவர்களோடும் என்னை ஒழித்துவிடாதேயும்.” (சங்கீதம் 28:3, NW) துன்மார்க்கர்கள் ‘அக்கிரமச் செய்கையைப் பழக்கமாகக் கொண்டிருப்பவர்களுக்கு,’ இணையாக வைத்துப் பேசப்படுவதைக் கவனியுங்கள். மாம்சப்பிரகாரமான பலவீனத்தின் காரணமாக பாவம் செய்கிற ஒரு நபர் தன் தவறை உணர்ந்தவுடன் நிறுத்திவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொல்லாப்பு தனது வாழ்க்கையின் பாகமாக ஆகுமளவுக்கு ஒருவர் பொல்லாப்பு ‘செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்’ என்றால், இது துன்மார்க்க இருதயத்தின் அத்தாட்சியாக இருக்கலாம்.
துன்மார்க்கத்தின் மற்றொரு குணாதிசயத்தை தாவீது அந்த வசனத்தில் குறிப்பிட்டார். அனனியாவையும் சப்பீராளையும் போல, துன்மார்க்கர் வாயிலே இனிக்க இனிக்க பேசுகிறார் ஆனால் அவருடைய இருதயத்திலோ பொல்லாப்புகளே இருக்கின்றன. இயேசுவின் நாளைய பரிசேயர்களைப்போல, அவர் ஒரு மாய்மாலக்காரனாக இருக்கலாம். அவர்கள் ‘மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறார்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறார்கள்.’ (மத்தேயு 23:28; லூக்கா 11:39) யெகோவா மாய்மாலத்தை வெறுக்கிறார். (நீதிமொழிகள் 6:16-19) ஒருவர் நீதி விசாரணைக் குழுவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதும் தன்னுடைய வினைமையான பாவங்களை மாய்மாலமாக மறுக்க முயற்சித்தால் அல்லது முழு விஷயத்தையும் மனம்திறந்து சொல்ல மறுத்து, ஏற்கெனவே மற்றவர்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறதோ அவற்றை மட்டும் வேண்டாவெறுப்போடு ஒத்துக்கொள்வதும்கூட துன்மார்க்க இருதயத்தின் அத்தாட்சியாக இருக்கக்கூடும்.
பெருமையோடு யெகோவாவை அசட்டைபண்ணுதல்
துன்மார்க்கனுக்கே உரித்தான மற்ற அம்சங்கள் சங்கீதம் 10-ல் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அதில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; . . . கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.” (சங்கீதம் 10:2, 3) பெருமையுள்ளவரும் யெகோவாவை அசட்டைபண்ணுபவருமான ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவனை நாம் எப்படி நோக்கவேண்டும்? நிச்சயமாகவே, இவை துன்மார்க்க மனப்பான்மைகளாக இருக்கின்றன. பலவீனத்தின் காரணமாக பாவம் செய்யும் ஒருவர் தன்னுடைய பாவத்தை உணர்ந்துகொண்டாரானால் அல்லது அவருடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டால், மனந்திரும்பி தனது போக்கை மாற்றிக்கொள்ள கடுமையாக முயற்சிப்பார். (2 கொரிந்தியர் 7:10, 11) அதற்கு மாறாக, ஒருவர் அடிப்படையாகவே யெகோவாவை அசட்டைசெய்கிறதனால் பாவம் செய்தால், அவர் மீண்டும் மீண்டும் தனது பாவத்தின் போக்கிற்கு செல்வதிலிருந்து அவரைத் தடுப்பது எது? சாந்தத்தோடு புத்திசொல்லப்பட்ட பிறகும் அவர் பெருமையுள்ளவராக இருப்பாரேயாகில், உண்மை மனதுடன் மெய்யாகவே மனந்திரும்புவதற்குத் தேவையான மனத்தாழ்மை அவருக்கு எப்படி இருக்கும்?
அதே சங்கீதத்தில் ஒருசில வசனங்களுக்குப் பிறகு தாவீது சொல்லும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்?” (சங்கீதம் 10:13) கிறிஸ்தவ சபையின் பின்னணியில், சரியானதற்கும் தவறானதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை துன்மார்க்கர் அறிந்திருக்கிறார். ஆனாலும் தவறானதைச் செய்துவிட்டு தன்னால் தப்பித்துக்கொள்ள முடியும் என்று அவர் நினைத்தால் அவர் அதற்கு சிறிதும் தயங்குகிறதில்லை. தன்னைப்பற்றிய உண்மைகளெல்லாம் வெட்டவெளியாகிவிடுமே என்று அவர் பயப்படாதிருக்கும்வரை, தன் பாவமுள்ள மனப்போக்கின்மீது ஒரு கட்டுப்பாடும் செலுத்தாமல் விட்டுவிடுகிறார். அவருடைய குட்டு வெளிப்பட்டுவிட்டால், தாவீதைப் போலில்லாமல், தண்டனையிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்வதற்குத் திட்டம்போடுவார். அத்தகைய மனிதர் யெகோவாவை மிகவும் அசட்டைபண்ணுகிறார். “அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. . . . பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.”—சங்கீதம் 36:1, 4.
மற்றவர்களுக்கு கேடுசெய்தல்
சாதாரணமாக, பாவத்தினால் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, விபசாரம் செய்யும் ஒருவர் கடவுளுக்கு எதிராக பாவம் செய்கிறார்; தன் மனைவியையும் பிள்ளைகளையும் பாதிப்புக்குள்ளாக்குகிறார்; தன்னோடு விபசாரத்தில் ஈடுபட்டவர் மணமானவராக இருந்தால், அவருடைய குடும்பத்தினரையும் அவர் துன்பத்திற்கு ஆளாக்குகிறார்; சபையின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகிறார். இவை எல்லாவற்றையும்பற்றி அவர் எவ்வாறு கருதுகிறார்? மெய்யான மனந்திரும்புதலோடு இருதயப்பூர்வமான துக்கத்தைக் காண்பிக்கின்றாரா? அல்லது சங்கீதம் 94-ல் விவரிக்கப்பட்ட ஆவியை வெளிக்காட்டுகிறாரா? அது சொல்லுகிறது: “அக்கிரமக்காரர் யாவரும் பெருமைபாராட்டுகிறார்கள். கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.”—சங்கீதம் 94:4-7.
ஒரு சபையில் கையாளப்படும் பாவங்களில் கொலையும் மரணத்தை விளைவித்தலும் உட்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனினும் மூப்பர்கள் தவறை விசாரணை செய்கையில், இதில் வெளிப்படுத்தப்படும் மனநிலை—சுயநலத்திற்காக மற்றவர்களைத் துன்பத்திற்கு உள்ளாக்கவும்கூட தயாராயிருக்கும் மனநிலை—தெளிவாகத் தெரியலாம். இதுவும் ஒரு துன்மார்க்கனின் அடையாளக் குறியாகிய, இறுமாப்பே. (நீதிமொழிகள் 21:4) இது தன்னுடைய சகோதரனுக்காக தன்னையே மனமுவந்து தியாகம் செய்ய விரும்பும் ஒரு உண்மைக் கிறிஸ்தவன் காண்பிப்பதற்கு நேர்மாறான மனநிலையாக இருக்கிறது.—யோவான் 15:12, 13.
தெய்வீக நியமங்களை பொருத்திப்பிரயோகித்தல்
இந்த ஒருசில ஆலோசனைகள் சட்டங்களை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கொடுக்கப்பட்டவையல்ல. இருப்பினும், யெகோவா உண்மையிலேயே துன்மார்க்கம் என்று கருதுகிற சில அம்சங்களைப் பற்றிய கருத்தை அவை தெரிவிக்கின்றன. செய்த தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கப்படுகிறதா? பாவம் செய்தவர் இதற்குமுன் இதே விஷயத்தின்பேரில் கொடுத்த ஆலோசனையை துணிகரமாக அசட்டை செய்துவிட்டிருக்கிறாரா? வினைமையான தவறை செய்வது ஆழமாக வேரூன்றியிருக்கும் பழக்கமாக இருக்கிறதா? தவறு செய்தவர் தெளிவாகத் தெரியும்வகையில் யெகோவாவின் சட்டத்திற்கு அசட்டை மனப்பான்மையைக் காண்பிக்கிறாரா? திட்டம்போட்டு, அதேசமயம் மற்றவர்களையும் கெடுத்து தன்வசப்படுத்தி தன்னுடைய தவறை மறைப்பதற்கு முயற்சித்தாரா? (யூதா 4) தவறு வெளிச்சத்திற்கு வரும்போது அத்தகைய முயற்சிகள் தீவிரமடையத்தான் செய்கின்றனவா? யெகோவாவின் பெயருக்கும், மற்றவர்களுக்கும் அவர் இழைத்த பாதிப்பைப்பற்றி முழு அசட்டை மனப்பான்மையைக் காண்பிக்கிறாரா? அவருடைய மனநிலை என்னவாக இருக்கிறது? அன்பான வேதப்பூர்வமான அறிவுரைகள் கொடுத்தப்பின்னும் அவர் பெருமையுள்ளவராயும் அல்லது இறுமாப்புள்ளவராயும் இருக்கிறாரா? தவறைத் திரும்ப செய்யாதிருப்பதற்கான இருதயப்பூர்வமான விருப்பம் இல்லாதிருக்கிறாரா? அத்தகைய அம்சங்கள் மனந்திரும்பாதிருப்பதைத் தெட்டத்தெளிவாக குறித்துக் காட்டுகின்றன. மூப்பர்கள் அத்தகைய அம்சங்களைப் புரிந்துகொண்டார்களானால், செய்த பாவங்கள் ஏதோ மாம்சப்பிரகாரமான பலவீனத்தைவிட துன்மார்க்கத்தின் அத்தாட்சியையே கொடுப்பதாக அவர்கள் முடிவுக்குவரலாம்.
துன்மார்க்க எண்ணங்களைக் கொண்டிருப்பதாகத் தோன்றும் ஒரு ஆளைக் கையாளும்போதும்கூட, நீதியைச் செய்யமுயற்சி செய்யும்படி அவருக்கு அறிவுரை கொடுப்பதை மூப்பர்கள் நிறுத்திவிடுவதில்லை. (எபிரெயர் 3:12) துன்மார்க்கர்கள் மனந்திரும்பி மாற்றங்களை செய்துகொள்ளலாம். அப்படியில்லையென்றால், பின்னர் ஏன், “துன்மார்க்கன் தன் வழியையும் அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்,” என்று சொல்லி யெகோவா இஸ்ரவேலரை ஊக்குவித்தார்? (ஏசாயா 55:7) ஒருவேளை, நீதி விசாரணையின்போது, மூப்பர்கள் அவருடைய இருதய நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் புரிந்துகொள்ளலாம். இந்த மாற்றம் மனந்திரும்பும் தோற்றம் மற்றும் மனநிலை ஆகியவற்றில் வெளிப்படுத்தப்படலாம்.
ஒரு தனிநபரை சபைநீக்கம் செய்யும்போதும்கூட, மூப்பர்கள், மேய்ப்பர்களாக, அவரை மனந்திரும்பி யெகோவாவின் கிருபைக்குள் திரும்பிவர முயற்சிக்கும்படி ஊக்குவிப்பார்கள். கொரிந்துவில் உள்ள அந்தத் ‘துன்மார்க்கரை’ நினைத்துப்பாருங்கள். தெளிவாகவே அவர் தன் வழிகளை மாற்றிக்கொண்டார். ஆகவே அவரை சபையில் மீண்டும் ஏற்றுக்கொள்வதற்காக பவுல் பின்னர் சிபாரிசு செய்தார். (2 கொரிந்தியர் 2:7, 8) மனாசே ராஜாவைப்பற்றியும் யோசித்துப் பாருங்கள். அவர் உண்மையிலேயே ஒரு மோசமான துன்மார்க்கராக இருந்தார். ஆனால் இறுதியில் மனந்திரும்பினார்; யெகோவாவும் அவருடைய மனந்திரும்புதலை ஏற்றுக்கொண்டார்.—2 இராஜாக்கள் 21:10-16; 2 நாளாகமம் 33:9, 13, 19.
மன்னிக்கப்படாத பாவம்—பரிசுத்த ஆவிக்கு எதிரான பாவம்—ஒன்று உண்டு என்பது உண்மையே. (எபிரெயர் 10:26, 27) அந்தப் பாவத்தை யார் செய்தார்கள் என்பதை யெகோவா மட்டுமே தீர்மானிக்கிறார். அதைத் தீர்மானிக்க மனிதர்களுக்கு அதிகாரம் கிடையாது. சபையைத் தூய்மையாய் வைத்திருப்பதும், மனந்திரும்பும் பாவிகள் திரும்புவதற்கு உதவிசெய்வதுமே மூப்பர்களின் பொறுப்பாக இருக்கிறது. அவர்கள் பகுத்துணர்வோடும் மனத்தாழ்மையோடும் இதை செய்து, தங்களுடைய தீர்மானங்கள் யெகோவாவின் ஞானத்தைப் பிரதிபலிக்கும்படி செய்தால், அவர்களுடைய மேய்ப்பு வேலையின் இந்தப் பாகத்தை யெகோவா ஆசீர்வதிப்பார்.
[அடிக்குறிப்புகள்]
a கூடுதல் விவரங்களுக்கு, செப்டம்பர் 1, 1981 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 24-6-ஐயும் வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 2, பக்கங்கள் 772-4-ஐயும் பார்க்கவும்.
[பக்கம் 29-ன் படம்]
அனனியாவும் சப்பீராளும் பரிசுத்த ஆவியினிடத்தில் மாய்மாலத்துடன் பொய்சொல்லி, இருதயத்தில் இருந்த துன்மார்க்கத்தை வெளிக்காட்டினர்