திரள்கூட்டத்தார் பரிசுத்த சேவை செய்கின்றனர்
“இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்.”—வெளிப்படுத்துதல் 7:15.
1. ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலில் என்ன மைல்கல் 1935-ல் எட்டப்பட்டது?
மே 31, 1935-ல் வாஷிங்டன், டி.சி.-யில் நடந்த யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு ஒன்றில் பிரதிநிதிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று. அங்கே, முதல் முறையாக, வெளிப்படுத்துதல் 7:9-ன் திரளான மக்கள் (அல்லது, திரள்கூட்டத்தார்) தெளிவாக அடையாளம் காட்டப்பட்டனர், அது பைபிளின் மற்ற பகுதிக்கு இசைவாகவும், ஏற்கெனவே நிகழ்ச்சிகள் படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்ததற்கு இசைவாகவும் இருந்தது.
2. கடவுள் தங்களைப் பரலோக வாழ்க்கைக்கு அழைக்கவில்லை என்று பெரும்பான்மையர் உணர்ந்தனர் என்பதை எது காட்டியது?
2 ஏறக்குறைய ஆறு வாரங்களுக்கு முன்பு, யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில் நடந்த கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பின்போது வந்திருந்தவர்களில் 10,681 பேர் (6 நபர்களில் ஒருவர்) அடையாளச் சின்னங்களாகிய அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்குகொள்ளவில்லை, இதில் 3,688 பேர் கடவுளுடைய ராஜ்யத்தின் சுறுசுறுப்பான அறிவிப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஏன் அடையாளச் சின்னங்களில் பங்கெடுக்கவில்லை? ஏனென்றால் பைபிளிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டதன் அடிப்படையில், கடவுள் அவர்களைப் பரலோக வாழ்க்கைக்கு அழைக்கவில்லை, ஆனால் யெகோவாவின் அன்பான ஏற்பாடுகளில் மற்றொரு விதத்தில் அவர்கள் பங்கடையக்கூடும் என்பதை உணர்ந்தனர். ஆகையால் அந்த மாநாட்டில் பேச்சாளர், “இந்தப் பூமியில் என்றென்றுமாக வாழப்போகும் நம்பிக்கையை உடையவர்கள் தயவுசெய்து எழுந்து நிற்கிறீர்களா,” என்று கேட்டபோது என்ன நடந்தது? ஆயிரக்கணக்கானோர் எழுந்து நின்றனர், அதைத் தொடர்ந்து கூட்டத்தார் நீண்டநேரம் ஆரவாரித்தனர்.
3. திரள்கூட்டத்தாரை அடையாளம் காண்பது வெளி ஊழியத்துக்கு ஏன் புதிய ஊக்கத்தைக் கொடுத்தது, சாட்சிகள் இதைக் குறித்து எவ்வாறு உணர்ந்தனர்?
3 அந்த மாநாட்டில் பிரதிநிதிகள் கற்றுக்கொண்டவை அவர்களுடைய ஊழியத்துக்குப் புதிய ஊக்கத்தைக் கொடுத்தன. இப்போது, பழைய ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன், வெறும் சில ஆயிரக்கணக்கான ஆட்கள் மட்டுமல்ல, ஆனால் பெரும் திரள்கூட்டமான ஜனங்கள் யெகோவாவின் ஏற்பாட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவர், அவர்களுடைய உயிர்கள் பாதுகாக்கப்பட்டு பரதீஸிய பூமியில் என்றுமாக வாழும் நோக்கத்தைக் கொண்டிருப்பர் என்பதை அவர்கள் போற்றினர். அங்கு சத்தியத்தை நேசிப்பவர்களுக்கு இருதயத்துக்கு அனலூட்டும் எப்பேர்ப்பட்ட செய்தி அளிக்கப்பட்டது! செய்யப்படுவதற்கு இன்னும் பெரும் வேலை, ஒரு சந்தோஷமான வேலை இருக்கிறது என்று யெகோவாவின் சாட்சிகள் உணர்ந்தனர். பல வருடங்களுக்குப் பிறகு, நிர்வாகக் குழுவின் அங்கத்தினராக ஆன ஜான் பூத் என்பவர் இவ்வாறு நினைவுபடுத்தி சொன்னார்: “அந்த மாநாடு சந்தோஷப்படுவதற்கு எங்களுக்கு அதிகத்தைத் தந்தது.”
4. (அ) திரள்கூட்டத்தாரைக் கூட்டிச்சேர்ப்பது 1935 முதற்கொண்டு எந்த அளவுக்கு இருந்திருக்கிறது? (ஆ) தங்களுடைய விசுவாசம் உயிருள்ள விசுவாசம் என்பதற்கு திரள்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எந்த விதத்தில் அத்தாட்சி கொடுக்கின்றனர்?
4 அதைப் பின்தொடர்ந்து வந்த ஆண்டுகளில், யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரித்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது அவர்கள்மீது சுமத்தப்பட்ட வன்முறையான துன்புறுத்தல் மத்தியிலும், அவர்களுடைய எண்ணிக்கை பத்தாண்டுக்குள் மும்மடங்காக அதிகரித்தது. 1935-ல் வெளிப்படையாக சாட்சி கொடுத்துக்கொண்டிருந்த 56,153 பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதிகரித்தது, 1994-க்குள் 230-க்கும் மேற்பட்ட தேசங்களில் 49,00,000-க்கும் மேலான ராஜ்ய அறிவிப்பாளர்கள் இருக்கின்றனர். யெகோவா ஒரு பரதீஸிய பூமியில் அளிக்கும் பரிபூரண வாழ்க்கையை பெறப்போகிறவர்களோடு சேர்ந்துகொள்ள இவர்களில் பெரும்பான்மையர் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிறு மந்தையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், அவர்கள் உண்மையிலேயே திரள்கூட்டமாக ஆகியிருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு விசுவாசம் உண்டு என்று சொல்லியும் அதை நடைமுறைப்படுத்திக் காண்பிக்காத ஜனங்கள் அல்ல. (யாக்கோபு 1:22; 2:14-17) அவர்கள் அனைவரும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கின்றனர். அச்சந்தோஷமான கூட்டத்தாரில் நீங்களும் ஒருவரா? ஒரு சுறுசுறுப்பான சாட்சியாக இருப்பது முக்கியமான அடையாளக்குறியாக உள்ளது, ஆனால் அதிகம் உட்பட்டிருக்கிறது.
‘சிங்காசனத்திற்கு முன்பாக நிற்பது’
5. திரள்கூட்டத்தார் ‘சிங்காசனத்திற்கு முன்பாக’ நிற்கின்றனர் என்பது எதைக் குறிப்பிடுகிறது?
5 அப்போஸ்தலனாகிய யோவானுக்குக் கொடுக்கப்பட்ட தரிசனத்தில் அவர்கள் ‘சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதை’ அவர் கண்டார். (வெளிப்படுத்துதல் 7:9) இந்தச் சந்தர்ப்பத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறபடி அவர்கள் கடவுளுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்பது, யெகோவாவின் அரசுரிமைக்கு அவர்கள் முழு அங்கீகாரத்தையும் கொடுக்கின்றனர் என்பதைக் குறிக்கிறது. இது அதிகத்தை உட்படுத்துகிறது. உதாரணமாக: (1) எது நல்லது, எது கெட்டது என்பதை தம்முடைய ஊழியர்களுக்காக தீர்மானிக்கும் யெகோவாவின் உரிமையை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். (ஆதியாகமம் 2:16, 17; ஏசாயா 5:20, 21) (2) யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமாக அவர்களிடம் பேசுகையில் செவிகொடுக்கின்றனர். (உபாகமம் 6:1-3; 2 பேதுரு 1:19-21) (3) கண்காணிப்பு செய்யும்படி யெகோவா ஒப்படைத்திருக்கும் நபர்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் போற்றுகின்றனர். (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:22, 23; 6:1-3; எபிரெயர் 13:17) (4) அபூரணராக இருந்தபோதிலும் தேவராஜ்ய வழிநடத்துதலுக்குப் பிரதிபலிக்க அவர்கள் ஊக்கமாக முயற்சி செய்கின்றனர், மன விருப்பமின்றி செய்யாமல் உடனடியாக இருதயத்திலிருந்து செய்கின்றனர். (நீதிமொழிகள் 3:1; யாக்கோபு 3:17, 18) அவர்கள் யெகோவாவின் பேரில் ஆழ்ந்த மரியாதையும் அன்பையும் காண்பித்து அவருக்குப் பரிசுத்த சேவை செய்வதற்காக சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கின்றனர். இந்தத் திரள்கூட்டத்தாரின் விஷயத்தில், சிங்காசனத்திற்கு முன்பாக அவர்கள் “நிற்பது,” சிங்காசனத்தில் வீற்றிருப்பவரின் அங்கீகாரத்தைக் குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 6:16, 17-ஐ ஒப்பிடுக.) அங்கீகாரம் எதன் பேரில் சார்ந்துள்ளது?
‘வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கின்றனர்’
6. (அ) திரள்கூட்டத்தார் “வெள்ளை அங்கிகளைத் தரித்திருப்பது” எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) திரள்கூட்டத்தார் யெகோவாவுக்கு முன்பு எவ்வாறு நீதியான நிலைநிற்கையைப் பெறுகின்றனர்? (இ) இயேசு சிந்திய இரத்தத்தின் பேரில் விசுவாசத்தைக் காண்பிப்பது எந்த அளவுக்குத் திரள்கூட்டத்தாரின் வாழ்க்கையைப் பாதிக்கிறது?
6 இந்தத் திரள்கூட்டத்தின் அங்கத்தினர்கள் “வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கின்றனர்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் பார்த்த தரிசனத்தின் விவரிப்பு சொல்கிறது. அந்த வெள்ளை அங்கிகள், யெகோவாவுக்கு முன்பாக அவர்களுடைய சுத்தமான நீதியான நிலைநிற்கையை அடையாளப்படுத்துகிறது. அப்படிப்பட்ட நிலைநிற்கையை அவர்கள் எவ்வாறு பெற்றுக்கொண்டனர்? யோவானின் தரிசனத்தில் அவர்கள் “ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக” நின்றுகொண்டிருந்ததை நாம் ஏற்கெனவே கவனித்தோம். “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அவர்கள் இயேசு கிறிஸ்துவை மதித்துணருகின்றனர். (யோவான் 1:29) அத்தரிசனத்தில் கடவுளுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த மூப்பர்களில் ஒருவர் இவ்வாறு விளக்குவதை யோவான் கண்டார்: “இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிறார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:14, 15) அடையாளப்பூர்வமாக, கிறிஸ்துவின் மீட்கும் இரத்தத்தின் பேரில் விசுவாசத்தைக் காண்பிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வெளுத்திருக்கின்றனர். மீட்பின் கிரயத்தைக் குறித்த பைபிள் போதனைக்கு அவர்கள் வெறும் மனதால் மட்டும் இசைவு தெரிவித்து அதை ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கான போற்றுதல் அவர்கள் உள்ளே எப்படிப்பட்ட நபராய் இருக்கின்றனர் என்பதைப் பாதிக்கிறது; இவ்வாறு அவர்கள் “இருதயத்திலே” விசுவாசத்தைக் காண்பிக்கின்றனர். (ரோமர் 10:9, 10) அவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துகின்றனர் என்பதன் பேரில் இது மிகப் பரந்த பாதிப்பையுடையதாய் இருக்கிறது. கிறிஸ்துவின் பலியின் அடிப்படையில் அவர்கள் விசுவாசத்தோடு யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கின்றனர், அந்த ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்துகின்றனர், தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக உண்மையிலேயே வாழ்கின்றனர், இவ்வாறு கடவுளோடு ஒரு அங்கீகரிக்கப்பட்ட உறவை அனுபவிக்கின்றனர். எப்படிப்பட்ட ஒரு சிறந்த சிலாக்கியம்—கவனமாக பாதுகாக்க வேண்டிய ஒன்று!—2 கொரிந்தியர் 5:14, 15.
7, 8. திரள்கூட்டத்தார் தங்கள் வஸ்திரங்களைக் கறைபடுத்தாமல் வைத்துக்கொள்வதற்கு யெகோவாவின் அமைப்பு எவ்வாறு உதவியிருக்கிறது?
7 ஒருவர் தன்னை அடையாளம் காட்டும் வஸ்திரங்களைக் கறைபடுத்தக்கூடிய அல்லது அசுத்தப்படுத்தக்கூடிய மனநிலைகளையும் நடத்தையையும் பற்றி யெகோவாவின் அமைப்பு அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது, அவர்களுடைய நிரந்தரமான நலனின் பேரில் அன்பான அக்கறையோடு அதைச் செய்திருக்கிறது. ஏனென்றால் வெளித்தோற்றத்துக்கு அப்படியிருப்பதாக காட்சியளித்தாலும், அந்த நபர் வெளிப்படுத்துதல் 7:9, 10-ல் உள்ள தீர்க்கதரிசன விவரிப்புக்கு உண்மையில் பொருந்தமாட்டார். (1 பேதுரு 1:15, 16) மற்றவர்களுக்குப் பிரசங்கித்துவிட்டு பின்பு ஊழியத்தில் ஈடுபடாத சமயத்தில் விபச்சாரம் அல்லது வேசித்தனம் போன்ற நடத்தையில் ஈடுபட்டால் அது முற்றிலும் தவறானதாய் இருக்கும் என்று முன்பு பிரசுரிக்கப்பட்டவற்றை உறுதிசெய்யும் வகையில் 1941-லும் அதற்குப் பிறகும் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில காவற்கோபுர பத்திரிகை திரும்பத் திரும்ப எடுத்துக் காட்டியது. (1 தெசலோனிக்கேயர் 4:3; எபிரெயர் 13:4) யெகோவாவின் கிறிஸ்தவ திருமண தராதரங்கள் எல்லா தேசங்களுக்கும் பொருந்தும் என்று 1947-ல் அழுத்திக் காண்பிக்கப்பட்டது; உள்ளூர் பழக்கவழக்கங்கள் எதை அங்கீகரித்தாலும் சரி, தொடர்ந்து பலதார மணத்தை அப்பியாசிப்பவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கமுடியாது.—மத்தேயு 19:4-6; தீத்து 1:5, 6.
8 புகையிலையைத் தவறாக பயன்படுத்துதல் போன்ற அசுத்தப்படுத்தும் பழக்கவழக்கங்களை உலகமுழுவதிலும் உள்ள எல்லா யெகோவாவின் சாட்சிகளும் எங்கேயிருந்தாலும் சரி அதை அவர்கள் முழுவதுமாக தவிர்க்க வேண்டும்—இராஜ்ய மன்றத்திலோ அல்லது வெளி ஊழியத்திலோ இருக்கும் போது மட்டுமல்ல, ஆனால் வேலை செய்யுமிடத்திலும் அல்லது பிறர் பார்வையிலிருந்து விலகியிருக்கும்போதும்கூட தவிர்க்க வேண்டும் என்று 1973-ல் அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. (2 கொரிந்தியர் 7:1) இளைஞர் கடவுளுக்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கையைக் காத்துக்கொள்வதற்கு இரட்டை வாழ்க்கை வாழ்வதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று 1987-ல் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளின் மாவட்ட மாநாடுகளில் அவர்களுக்குப் பலமான புத்திமதி கொடுக்கப்பட்டது. (சங்கீதம் 26:1, 4) உலகத்தின் ஆவியின் பல்வேறு அம்சங்களுக்கு எதிராய் காவற்கோபுரம் திரும்பத் திரும்ப எச்சரித்திருக்கிறது, ஏனென்றால் “பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தி” ஒருவர் ‘உலகத்தால் கறைபடாதபடிக்கு தன்னைக் காத்துக்கொள்வது’ ஆகும்.—யாக்கோபு 1:27.
9. மிகுந்த உபத்திரவத்திற்குப் பின்பு யார் கடவுளின் சிங்காசனத்திற்கு முன்பு உண்மையில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இருப்பர்?
9 ஆவிக்குரியப் பிரகாரமாகவும் ஒழுக்கப் பிரகாரமாகவும் சுத்தமாக நிலைத்திருக்கும்படியான வாழ்க்கையை நடத்துவதற்கு உந்துவிக்கும் விசுவாசத்தை உடையோரே வரப்போகும் மிகுந்த உபத்திரவத்திற்குப் பின்பு “சிங்காசனத்திற்கு முன்பாக” கடவுளின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களாக இன்னும் நின்றுகொண்டிருப்பர். இந்த ஜனங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் வெறும் ஆரம்பத்தை மட்டும் கொண்டிராமல் அதில் உண்மைத்தன்மையோடு நிலைத்து நிற்கின்றனர்.—எபேசியர் 4:24.
“தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து”
10. திரள்கூட்டத்தாரின் கைகளில் குருத்தோலைகளை யோவான் கண்டது என்ன முக்கியத்துவமுடையதாய் உள்ளது?
10 அப்போஸ்தலனாகிய யோவான் கவனித்தபடி, திரள்கூட்டத்தாரின் முனைப்பான அம்சங்களில் ஒன்று, அவர்கள் ‘தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தனர்.’ அது என்ன முக்கியத்துவமுடையது? கோடைக்கால அறுவடையைப் பின்தொடர்ந்து வந்த யூத நாட்காட்டியில் யூதர்களின் அதிக சந்தோஷமான கூடாரப் பண்டிகையை அந்தக் குருத்தோலைகள் யோவானுக்கு நினைப்பூட்டின என்பதில் சந்தேகமேயில்லை. நியாயப்பிரமாண சட்டத்துக்கு இசைவாக, பண்டிகையின் போது தங்குவதற்கு குருத்தோலைகளும் மற்ற மரங்களின் கிளைகளும் கூடாரங்களைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டன. (லேவியராகமம் 23:39-40; நெகேமியா 8:14-18) ஹல்லெல் பாடப்பட்டபோது ஆலயத்தில் இருந்த வணக்கத்தார் அவற்றை அசைத்தனர். (சங்கீதம் 113-118) இயேசு எருசலேமுக்குள் பவனி வந்தபோது வணக்கத்தார் கூட்டம் ஒன்று மகிழ்ச்சியோடு குருத்தோலைகளை அசைத்து: “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” என்று ஆரவாரித்த சமயத்தை, திரள்கூட்டத்தார் குருத்தோலைகளை அசைப்பது யோவானுக்குச் சந்தேகமின்றி நினைப்பூட்டியிருக்க வேண்டும். (யோவான் 12:12, 13) ஆகையால் யெகோவாவின் ராஜ்யத்தையும் அவருடைய அபிஷேகம்செய்யப்பட்ட ராஜாவையும் திரள்கூட்டத்தார் சந்தோஷத்துடன் ஆர்ப்பரிக்கின்றனர் என்பதைக் குருத்தோலைகளை அசைப்பது குறிப்பிடுகிறது.
11. யெகோவாவை சேவிப்பதில் கடவுளின் ஊழியர் ஏன் உண்மையிலேயே மகிழ்ச்சி காண்கின்றனர்?
11 இப்போதும்கூட திரள்கூட்டத்தார் யெகோவாவை சேவிக்கையில் அப்படிப்பட்ட சந்தோஷமுள்ள ஆவியைக் காண்பிக்கின்றனர். அவர்கள் இன்னல்களை எதிர்ப்படுவதில்லையென்றோ அல்லது கவலை அல்லது வேதனையை அனுபவிப்பதில்லையென்றோ இது அர்த்தப்படுத்துவது கிடையாது. ஆனால் யெகோவாவை சேவிப்பதிலும் பிரியப்படுத்துவதிலுமிருந்து வரும் திருப்தி அவற்றைச் சரியீடு செய்து விடுகிறது. ஒரு மிஷனரி தன் கணவனோடு 45 வருடங்கள் குவாதமாலாவில் சேவை செய்ததைப் பற்றி பின்வருமாறு சொன்னார்கள்: அவர்களைச் சுற்றியிருந்த பழங்கால நிலைமைகள், கடினமான வேலை, இந்திய கிராமங்களுக்கு ராஜ்ய செய்தியைக் கொண்டு செல்கையில் இடர்பாடுகள் நிறைந்த பிரயாணம் ஆகியவை வாழ்க்கையின் பாகமாக இருந்தன. அவர்கள் இவ்வாறு சொல்லி முடித்தார்கள்: “எங்கள் வாழ்க்கையிலேயே நாங்கள் மிக்க மகிழ்ச்சியாய் இருந்த நேரம் அது.” வயோதிபம், வியாதி ஆகியவற்றின் பாதிப்புகளை அனுபவித்துக்கொண்டிருந்த போதிலும் அவர்கள் கடைசியாக எழுதி வைத்திருந்த நாட்குறிப்பேடு ஒன்றில் பின்வரும் வார்த்தைகள் இருந்தன: “அது ஒரு நல்ல வாழ்க்கை, அதிக பலன்தரத்தக்கதாய் இருந்தது.” உலகமுழுவதும், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் ஊழியத்தைக் குறித்து இதேவிதமாக உணருகின்றனர்.
‘இரவும் பகலும் பரிசுத்தச் சேவை’
12. பகல் நேரமாய் இருந்தாலும் சரி அல்லது இரவு நேரமாய் இருந்தாலும் சரி, இங்கே பூமியில் யெகோவா எதைக் கவனிக்கிறார்?
12 இந்தச் சந்தோஷமுள்ள வணக்கத்தார் யெகோவாவுக்கு ‘இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே பரிசுத்த சேவை’ செய்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:15, NW) பூகோளத்தைச் சுற்றி இலட்சக்கணக்கானோர் இந்தப் பரிசுத்த சேவையில் பங்குகொள்கின்றனர். சில தேசங்களில் இரவு நேரமாயிருந்து மக்கள் அங்கே உறங்கிக்கொண்டிருக்கையில், மற்ற தேசங்களில் சூரியன் உதித்து யெகோவாவின் சாட்சிகள் சுறுசுறுப்பாக சாட்சிகொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இரவும் பகலும் பூகோளம் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கையில் அவர்கள் யெகோவாவுக்குத் துதி பாடுகிறார்கள். (சங்கீதம் 86:9) ஆனால் வெளிப்படுத்துதல் 7:15-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் இரவு-பகல் சேவை இன்னும் அதிக தனிப்பட்டதாய் உள்ளது.
13. “இரவும் பகலும்” சேவிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை வேதாகமம் எப்படி குறிப்பிடுகிறது?
13 திரள்கூட்டத்தில் அடங்கியிருக்கும் தனிப்பட்ட நபர்கள் இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்கின்றனர். அவர்கள் செய்யும் எல்லா காரியங்களும் பரிசுத்த சேவையாக கருதப்படுகின்றன என்பதை இது அர்த்தப்படுத்துமா? அவர்கள் எதைச் செய்துகொண்டிருந்தாலும், யெகோவாவுக்கு மகிமையைக் கொண்டுவரும் விதத்தில் செய்யக் கற்றுக்கொள்கின்றனர் என்பது உண்மையே. (1 கொரிந்தியர் 10:31; கொலோசெயர் 3:23) இருப்பினும், “பரிசுத்த சேவை” என்பது ஒருவர் கடவுளை வணங்குவதில் நேரடியாக உட்பட்டிருப்பவற்றுக்கு மட்டுமே பொருந்தும். “இரவும் பகலும்” ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பது என்பது ஒழுங்காக செய்வது அல்லது விடாது செய்வது, அதோடுகூட ஊக்கமான முயற்சி ஆகியவற்றைக் குறிப்பாக சொல்கிறது.—ஒப்பிடுக யோசுவா 1:8; லூக்கா 2:37; அப்போஸ்தலர் 20:31; 2 தெசலோனிக்கேயர் 3:8.
14. எது நம்முடைய தனிப்பட்ட வெளி ஊழியத்தை “இரவும் பகலும்” செய்யப்படும் சேவையைப் பற்றிய விவரிப்புக்குப் பொருந்தும்படி செய்யும்?
14 யெகோவாவின் மிகப் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தில் அவர்கள் சேவிக்கையில், திரள்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளி ஊழியத்தில் ஒழுங்காகவும் நிலையாகவும் பங்குகொள்ள முயற்சி செய்கின்றனர். அநேகர் ஒவ்வொரு வாரமும் வெளி ஊழியத்தில் கொஞ்சமாவது பங்குகொள்ள வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கின்றனர். மற்றவர்கள் ஒழுங்கான பயனியர்களாகவோ அல்லது துணைப் பயனியர்களாகவோ தங்களை ஊக்கமாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இவர்கள் தெருக்களிலும் கடைகளிலும் அதிகாலையிலேயே சுறுசுறுப்பாக சாட்சி கொடுக்கின்றனர். அக்கறை காண்பிக்கும் ஆட்களின் வசதிக்கேற்ப சில சாட்சிகள் பைபிள் படிப்புகளை இரவு நேரங்களில் நடத்துகின்றனர். அவர்கள் கடையில் பொருட்களை வாங்கும்போதும், பிரயாணம் செய்யும்போதும், மதிய உணவு நேரத்தின்போதும், தொலைபேசி மூலமும் சாட்சி கொடுக்கின்றனர்.
15. வெளி ஊழியம் மட்டுமல்லாமல், வேறு எதுவும் நம்முடைய பரிசுத்த சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது?
15 சபைக் கூட்டங்களில் பங்குகொள்வதும்கூட நம்முடைய பரிசுத்த சேவையின் பாகமாக உள்ளது; கிறிஸ்தவ மாநாட்டுக்காக மன்றங்களைக் கட்டுவது, கவனித்துக்கொள்வது ஆகியவற்றில் உட்பட்டிருக்கும் வேலையும்கூட பாகமாக உள்ளது. கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு ஆவிக்குரியப் பிரகாரமாகவும் பொருள் சம்பந்தமாகவும் உதவி செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், யெகோவாவின் சேவையில் தொடர்ந்து சுறுசுறுப்பாயிருத்தல் ஆகியவை அதில் சேர்க்கப்பட்டுள்ளன. நம்முடைய மருத்துவமனை தொடர்பு குழுக்களின் வேலையும் இதில் உட்பட்டிருக்கிறது. பெத்தேல் சேவை அதன் பல்வேறு வடிவங்களிலும் அதோடுகூட நம் மாநாடுகளில் வாலண்டியர் சேவை, இவையனைத்தும் பரிசுத்த சேவையாய் இருக்கின்றன. யெகோவாவோடு நாம் கொண்டுள்ள உறவைச் சுற்றி நம்முடைய வாழ்க்கை இயங்கும்போது, அவை பரிசுத்த சேவையால் நிரப்பப்பட்டிருக்கின்றன. வேதாகமம் சொல்லுகிறபடி, யெகோவாவின் ஜனங்கள் ‘இரவும் பகலும் பரிசுத்த சேவை’ செய்கின்றனர், அவ்வாறு செய்வதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைகின்றனர்.—அப்போஸ்தலர் 20:35; 1 தீமோத்தேயு 1:11.
“சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து”
16. திரள்கூட்டத்தார் ‘சகல ஜனங்களிலுமிருந்து’ வருகின்றனர் என்பது எவ்வாறு உண்மையாக நிரூபிக்கப்படுகிறது?
16 திரள்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எல்லா தேசங்களிலுமிருந்தும் வந்து கொண்டிருக்கின்றனர். கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல, இயேசு கிறிஸ்துவின் மூலம் செய்யப்பட்ட மீட்பின் ஏற்பாடு அவர்கள் அனைவருக்கும் பயனளிக்க போதுமானதாய் இருக்கிறது. திரள்கூட்டத்தார் முதலாவது வேதப்பூர்வமாக 1935-ல் அடையாளம் காட்டப்பட்டபோது, யெகோவாவின் சாட்சிகள் 115 தேசங்களில் சுறுசுறுப்பாயிருந்தனர். 1990-களுக்குள், செம்மறியாட்டைப் போன்ற ஜனங்களைத் தேடும் வேலை அதைப் போன்று இருமடங்குக்கும் அதிகமான தேசங்களுக்கு விரிவடைந்திருந்தது.—மாற்கு 13:10.
17. எல்லா ‘கோத்திரங்கள், ஜனங்கள், பாஷைக்காரர்’ ஆகியோரை திரள்கூட்டத்தோடு சேர்த்துக்கொள்ள என்ன உதவி செய்யப்பட்டு வருகிறது?
17 திரள்கூட்டத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களாக ஆகப்போகிறவர்களைக் கண்டுபிடிப்பதில், யெகோவாவின் சாட்சிகள் தேசியத் தொகுதிகளுக்கு மட்டுமல்லாமல், அத்தேசங்களுக்குள் இருக்கும் ஜாதிகள், ஜனங்கள், பாஷைக்காரர் ஆகியோருக்கும்கூட கவனம் செலுத்தியிருக்கின்றனர். இப்படிப்பட்ட மக்களைச் சென்றெட்டுவதற்காக, சாட்சிகள் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் பைபிள் பிரசுரங்களைப் பிரசுரிக்கின்றனர். தகுதியுள்ள மொழிபெயர்ப்பாளர் குழுக்களைப் பயிற்றுவிப்பது, காத்துவருவது, இந்த மொழிகள் எல்லாவற்றையும் கையாளுவதற்குத் தேவையான கம்ப்யூட்டர் சாதனங்களை ஏற்பாடு செய்வது, அதோடுகூட அச்சடிக்கும் வேலை செய்வது ஆகியவற்றை இது உட்படுத்துகிறது. கடந்த ஐந்து வருடங்களின் போது, 9,80,00,000 மக்களால் பேசப்படும் 36 மொழிகள் பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கூடுதலாக, சாட்சிகள் இந்த ஜனங்களைத் தனிப்பட்ட விதமாக சந்தித்து அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கு உதவி செய்கின்றனர்.—மத்தேயு 28: 19, 20.
“மிகுந்த உபத்திரவத்திலிருந்து”
18. (அ) மிகுந்த உபத்திரவம் ஏற்படும் போது யார் பாதுகாக்கப்படுவர்? (ஆ) அப்போது என்ன மகிழ்ச்சியான அறிவிப்புகள் செய்யப்படும்?
18 வெளிப்படுத்துதல் 7:1-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் தூதர்கள் அழிவுண்டாக்கும் காற்றுகளைத் தங்கள் பிடியிலிருந்து விடுவிக்கும்போது, யெகோவாவின் அன்பான பாதுகாப்பை ‘நமது தேவனுடைய ஊழியக்காரராகிய’ அபிஷேகம்செய்யப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், மெய் வணக்கத்தில் அவர்களோடு சேர்ந்துகொண்டிருக்கும் திரள்கூட்டத்தாரும் அனுபவிப்பர். அப்போஸ்தலனாகிய யோவானுக்குச் சொல்லப்பட்டபடி, திரள்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தப்பிப்பிழைப்பவர்களாக ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து வெளியே வருவார்கள்.’ அப்போது அவர்கள் நன்றியும் துதியும் செலுத்தி மகா சத்தமிட்டு இவ்வாறு அறிவிப்பார்கள்: “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக”! பரலோகத்தில் இருக்கும் எல்லா கடவுளுடைய ஊழியர்களும் திரள்கூட்டத்தாரோடு சேர்ந்துகொண்டு இவ்வாறு அறிவிப்பர்: “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென்.”—வெளிப்படுத்துதல் 7:10-14.
19. தப்பிப்பிழைப்பவர்கள் என்ன சந்தோஷமான வேலையில் பங்குகொள்ள ஆவலாயிருப்பர்?
19 அது எப்படிப்பட்ட மகிழ்ச்சியான நேரமாக இருக்கும்! அப்போது உயிரோடிருப்பவர்கள் அனைவரும் ஒரே மெய்க் கடவுளின் ஊழியர்களாக இருப்பர்! இவையனைத்திலும் மிகப் பெரிய சந்தோஷம் யெகோவாவைச் சேவிப்பதில் இருக்கும். அப்போது செய்வதற்கு வேலை அதிகம் இருக்கும்—சந்தோஷமான வேலை! பூமி பரதீஸாக மாற்றியமைக்கப்படும். இலட்சக்கணக்கான மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவர், அதற்குப் பிறகு யெகோவாவின் வழிகள் அவர்களுக்குப் போதிக்கப்படும். அதில் பங்குகொள்வது எப்படிப்பட்ட சந்தோஷமான சிலாக்கியமாக இருக்கும்!
உங்களுடைய குறிப்பு என்ன?
◻ 1935-ல் நடந்த நிகழ்ச்சிகள் யெகோவாவின் சாட்சிகளின் வெளி ஊழியத்தின் பேரில் என்ன பாதிப்பைக் கொண்டிருந்தன?
◻ திரள்கூட்டத்தார் ‘சிங்காசனத்திற்கு முன்பு நிற்பதாக’ காண்பிக்கப்பட்டிருப்பது எதைக் குறிப்பிடுகிறது?
◻ ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தின் பேரில் காண்பிக்கப்படும் போற்றுதல் நாம் வாழும் விதத்தை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
◻ அவர்கள் குருத்தோலைகளை அசைப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
◻ திரள்கூட்டத்தார் எவ்வாறு இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்கின்றனர்?
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
அவர்களுடைய பரிசுத்த சேவை ஒழுங்கு, கடுமையான உழைப்பு, ஊக்கமான முயற்சி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது