இயேசுவின் அற்புதங்களிலிருந்து பாடங்கள்
“மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; . . . இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்ட போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.” இந்தச் சம்பவம் இயேசுவின் முதல் அற்புதத்துக்குச் சூழ்நிலையை ஏற்படுத்தியது.—யோவான் 2:1-3.
இயேசுவின் கவனத்துக்குக் கொண்டுவருமளவுக்கு அப்படிப்பட்ட ஒரு பிரச்சினை முக்கியமில்லாத, அதிக அற்பமான காரியமாக இல்லையா? ஒரு பைபிள் கல்விமான் விளக்குகிறார்: “கீழை நாடுகளில் உபசரிக்கும் தன்மை ஒரு பரிசுத்த கடமை . . . விசேஷமாக ஒரு கலியாண விருந்தில் மெய்யான உபசரிக்கும் தன்மை, மிக ஏராளமான உணவு, பானம் ஆகியவற்றை அளிப்பதைத் தேவைப்படுத்தியது. ஒரு கலியாண விருந்தில் உணவும் பானமும் [தீர்ந்து போனால்,] அக்குடும்பத்தின் நற்பெயரும் இளம் தம்பதிகளின் நற்பெயரும் இந்தச் சங்கடமான நிலையினால் எப்போதும் கெடுக்கப்பட்டிருக்கும்.”
ஆகையால் இயேசு நடவடிக்கை எடுத்தார். ‘யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்ததை’ அவர் கவனித்தார். உணவு உண்பதற்கு முன் சடங்குமுறையாக கழுவுவது யூதர்கள் மத்தியில் பழக்கமாக இருந்தது, அங்கே வந்திருந்தவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு ஏராளமான அளவு தண்ணீர் தேவையாக இருந்தது. “ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள்” என்று விருந்தினருக்குப் பரிமாறியவர்களிடம் இயேசு கட்டளையிட்டார். இயேசு ‘பந்திவிசாரிப்புக்காரராய்’ இருக்கவில்லை, ஆனால் அவர் நேரடியாகவும் அதிகாரத்தோடும் பேசினார். அப்பதிவு சொல்கிறது: ‘பந்திவிசாரிப்புக்காரன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தான்.’—யோவான் 2:6-9; மாற்கு 7:3.
இயேசுவின் முதல் அற்புதத்துக்குச் சாதாரண சம்பவமாகிய ஒரு திருமணம் சூழமைவாக இருந்தது விநோதமாய்த் தோன்றலாம், ஆனால் அச்சம்பவம் இயேசுவைக் குறித்து அதிகத்தை வெளிப்படுத்துகிறது. அவர் ஒரு தனி மனிதனாக இருந்தார், விவாகமின்றி இருப்பதனால் வரும் அனுகூலங்களை, பின்தொடர்ந்து வந்த சந்தர்ப்பங்களில் தம் சீஷர்களோடு கலந்தாலோசித்தார். (மத்தேயு 19:12) என்றபோதிலும், ஒரு கலியாண விருந்துக்கு அவர் வந்திருந்தது, அவர் நிச்சயமாகவே திருமணத்தை எதிர்ப்பவராக இல்லை என்பதை வெளிக்காட்டியது. அவர் சமநிலையோடிருந்தார், திருமண ஏற்பாட்டை ஆதரித்தார்; கடவுளின் பார்வையில் கனத்துக்குரிய ஒன்றாக அதை அவர் கருதினார்.—எபிரெயர் 13:4-ஐ ஒப்பிடுக.
சர்ச் ஓவியர்கள் பின்பு இயேசுவை சித்தரித்துக் காட்டியதைப் போல் கடுந்துறவியாக இல்லை. அவர் ஜனங்களோடு சேர்ந்து இருப்பதில் உண்மையில் மகிழ்ச்சியடைந்தார், தோழமை கொள்வதற்கு விருப்பமற்றவராக இல்லை. (லூக்கா 5:29-ஐ ஒப்பிடுக.) இவ்வாறு அவருடைய செயல்கள் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்தன. நீதியாக இருப்பது மகிழ்ச்சியற்று இருப்பதை அர்த்தப்படுத்துவது போல் அவர்கள் அவசியமின்றி அமைதியாகவோ அல்லது கிளர்ச்சியற்றோ இருக்கக்கூடாது என்பதை இயேசு தனிப்பட்ட விதத்தில் நடப்பித்துக் காட்டினார். அதற்கு மாறாக, கிறிஸ்தவர்கள் பின்பு இவ்வாறு கட்டளையிடப்பட்டனர்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.” (பிலிப்பியர் 4:4) இன்று கிறிஸ்தவர்கள் பொழுதுபோக்கை நியாயமான வரம்புக்குள் வைப்பதற்குக் கவனமாக இருக்கின்றனர். கடவுளுடைய சேவையில் அவர்கள் சந்தோஷத்தைக் காண்கின்றனர், ஆனால் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, ஒரு சமூக சூழமைவில் ஒருவரோடொருவர் தோழமையை அனுபவிப்பதற்கு அவ்வப்போது நேரத்தை செலவழிக்கின்றனர்.
இயேசுவின் உணர்ச்சிகளின் மென்மையானத் தன்மையையும் கவனியுங்கள். ஒரு அற்புதத்தை நடப்பிப்பதற்கு அவருக்கு எந்தக் கடமைப் பொறுப்பும் இல்லை. இவ்விஷயத்தைக் குறித்ததில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்க்கதரிசனம் எதுவும் இல்லை. தம் தாயின் கவலையையும், மணம் செய்துகொண்ட தம்பதியின் நிலையையும் கண்டு அவருடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டன என்பது தெளிவாயிருக்கிறது. அவர்களுடைய உணர்ச்சிகளைக் குறித்து அவர் கவலைப்பட்டார், அவர்களை சங்கடமான நிலையிலிருந்து விடுவிக்க விரும்பினார். கிறிஸ்து உங்கள் பேரில்—உங்களுடைய அன்றாடக பிரச்சினைகளிலும்கூட—உண்மையான அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதில் அது உங்கள் நம்பிக்கையை வளர்க்கிறது அல்லவா?—எபிரெயர் 4:14-16-ஐ ஒப்பிடுக.
ஒவ்வொரு ஜாடியும் “இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க”தாய் இருந்தபடியால், இயேசுவின் அற்புதம் பெரும் அளவு திராட்சரசத்தை உட்படுத்தியது—ஒருவேளை 390 லிட்டராக (105 காலன்) இருக்கலாம்! (யோவான் 2:6) ஏன் அவ்வளவு ஏராளமான அளவு தேவைப்பட்டது? இயேசு கடவுள் கண்டனம் செய்கிற குடிவெறியை உந்துவிக்கவில்லை. (எபேசியர் 5:18) மாறாக, அவர் கடவுளைப் போன்று தாராளத்தன்மையை வெளிக்காட்டினார், திராட்சரசம் பொதுவான பானமாக இருந்ததால், தேவைக்கு மேற்பட்டதை மற்ற சமயங்களில் பயன்படுத்தலாம்.—ஒப்பிடுக: மத்தேயு 14:14-20; 15:32-37.
பூர்வ கிறிஸ்தவர்கள் தாராளத்தன்மையைக் காண்பிப்பதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றினர். (அப்போஸ்தலர் 4:34, 35-ஐ ஒப்பிடுக.) அதேபோல் யெகோவாவின் ஜனங்கள் இன்று “கொடுங்கள்” என்று உற்சாகப்படுத்தப்படுகின்றனர். (லூக்கா 6:38) இருப்பினும், இயேசுவின் முதல் அற்புதம் தீர்க்கதரிசன உட்கருத்தை உடையதாயும் இருக்கிறது. ‘கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்து’ ஒன்றை கடவுள் தாராளமாக எதிர்காலத்தில் ஏற்பாடு செய்து, முற்றிலும் பசியை நீக்கப்போகும் சமயத்தை அது குறிப்பிட்டுக் காட்டுகிறது.—ஏசாயா 25:6.
சரீரப்பிரகாரமான சுகப்படுத்துதலை உட்படுத்திய அநேக அற்புதங்களை இயேசு நடப்பித்ததைப் பற்றியென்ன? அவற்றிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளலாம்?
ஓய்வுநாளில் நன்மையானதைச் செய்தல்
“எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட.” 38 வருடங்கள் வியாதியாயிருந்த ஒரு மனிதனிடம் இயேசு இந்த வார்த்தைகளைப் பேசினார். சுவிசேஷப் பதிவு தொடருகிறது: “உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்து போனான்.” ஆச்சரியமளிக்கும் விதத்தில், அவனுடைய நிலைமையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறித்து அனைவருமே சந்தோஷப்படவில்லை. “இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி”னார்கள்.—யோவான் 5:1-9, 16.
அனைவரும் ஓய்வெடுப்பதற்கும் மகிழ்ச்சியாயிருப்பதற்குமுரிய நாள் என்று ஓய்வு நாள் திட்டமிடப்பட்டது. (யாத்திராகமம் 20:8-11) ஆனால் இயேசுவின் காலத்துக்குள்ளாக, அது குழப்பமூட்டும் வகையில் சிக்கலான, ஒடுக்குகிற, மனிதர் ஏற்படுத்திய சட்டங்களாக ஆகியிருந்தன. யூத வேதத்தின் நீண்ட ஓய்வுநாள் சட்டப் பிரிவுகளில், “மத சம்பந்தமாக முக்கியத்துவமுள்ளவையாக கருதப்படும் விஷயங்கள் கருத்தார்ந்த விதத்தில் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கின்றன, அவ்விஷயங்களை கூர்ந்த அறிவுடைய ஒருவர் கருத்தார்ந்த விதத்தில் சிந்திப்பார் என்பதை கற்பனை செய்து பார்ப்பது அரிதாய் உள்ளது.” (மேசியாவாகிய இயேசுவின் வாழ்க்கையும் காலங்களும் [ஆங்கிலம்]) ஒரு யூதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒழுங்குபடுத்திய அற்பமான, நியாயமற்ற சட்டங்களுக்கு ரபீக்கள் ஜீவன்-மரணம் போன்ற முக்கியத்துவம் கொடுத்தனர்—இரக்கமற்றத் தன்மையோடு மனித உணர்ச்சிகளை அடிக்கடி அலட்சியம் செய்தனர். ஒரு ஓய்வுநாள் சட்டம் இவ்வாறு கட்டளையிட்டது: “ஒரு கட்டடம் ஒரு மனிதன் மேல் விழுந்து, அவர் அங்கு இருக்கிறாரா இல்லையா, அல்லது அவர் உயிரோடிருக்கிறாரா மரித்துப் போனாரா, அல்லது அவர் ஒரு புறஜாதியானா இஸ்ரவேலனா என்பதைக் குறித்து சந்தேகம் இருந்தால், அவர் மேல் விழுந்திருக்கும் இடிபாடுகளை அவர்கள் நீக்கிவிடலாம். அவர் உயிரோடிருப்பதை கண்டால் அவர் மேலிருக்கும் கூடுதலான இடிபாடுகளை அவர்கள் நீக்கிவிடலாம்; ஆனால் [அவர்] மரித்துப்போயிருந்தால், அவரை விட்டுவிட வேண்டும்.”—டிராக்டேட் யோமா 8:7, தி மிஷ்னா, ஹெர்பர்ட் டான்பியால் மொழிபெயர்க்கப்பட்டது.
அற்பமான விஷயங்களுக்குச் சட்டங்கள் ஏற்படுத்துவதை இயேசு எவ்வாறு கருதினார்? ஓய்வுநாளில் சுகப்படுத்தியதைக் குறித்து குற்றம் சாட்டியபோது அவர் சொன்னார்: “என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன்.” (யோவான் 5:17) இயேசு தம்மை பணக்காரராக ஆக்கிக்கொள்வதற்குச் சம்பளத்துக்காக வேலை செய்து கொண்டில்லை. மாறாக, அவர் கடவுளுடைய சித்தத்தை செய்து கொண்டிருந்தார். ஓய்வுநாளின்போது லேவியர்கள் தங்கள் பரிசுத்த சேவையை தொடர்ந்து செய்துகொண்டிருக்க அனுமதிக்கப்பட்டது போல, இயேசு மேசியாவாக கடவுளுடைய சட்டத்தை மீறாமல் கடவுள் தமக்குக் கொடுத்திருக்கும் வேலைகளை நியாயமாகவே செய்து முடிக்கக்கூடும்.—மத்தேயு 12:5.
இயேசுவின் ஓய்வுநாளைய சுகப்படுத்துதல்கள் வேதபாரகரையும் பரிசேயரையும் ‘மிஞ்சின நீதிமான்களாக’ வெளிப்படுத்திக் காட்டியது—அவர்களுடைய சிந்தனையில் கண்டிப்பானவர்களாகவும் சமநிலையற்றவர்களாகவும் காண்பித்தது. (பிரசங்கி 7:16) ஒரு வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்பது நிச்சயமாகவே கடவுளுடைய சட்டமாக இல்லை; கடவுள் ஓய்வுநாளை பயனற்ற சட்டரீதியான செய்முறையாக இருக்கும்படி நோக்கங்கொள்ளவில்லை. இயேசு மாற்கு 2:27-ல் சொன்னார்: “மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.” இயேசு மக்களை நேசித்தார், நியாயமற்ற சட்டங்களை அல்ல.
இன்று கிறிஸ்தவர்கள் தங்கள் சிந்தனையில் அளவுக்குமீறி கண்டிப்பானவர்களாகவோ அல்லது சட்டசார்புள்ளவர்களாகவோ இல்லாமல் இருப்பது நல்லது. சபையில் அதிகாரத்தில் இருப்பவர்கள், அளவுக்கு மீறி மற்றவர்கள் மேல் மனிதர்கள் ஏற்படுத்திய சட்டங்களையும் கொள்கைகளையும் பாரமாக சுமத்தாமலிருப்பதிலிருந்து விலகியிருக்க வேண்டும். நல்ல காரியங்களை செய்வதற்கு வாய்ப்புகளைத் தேடவேண்டும் என்றும்கூட இயேசுவின் முன்மாதிரி நம்மை உற்சாகப்படுத்துகிறது. உதாரணமாக, முறைப்படியாக வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும்போது, அல்லது பொதுப்பேச்சு கொடுக்கும்போது மட்டும் பைபிள் சத்தியங்களைப் பகிர்ந்து கொள்வேன் என்று ஒரு கிறிஸ்தவன் ஒருபோதும் விவாதிக்கக்கூடாது. “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் . . . உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு கிறிஸ்தவன் செய்ய வேண்டியதைக் குறித்து சொல்கிறார். (1 பேதுரு 3:15) நல்ல காரியங்களைச் செய்வதற்கு நேரத் தடை எதுவும் இல்லை.
இரக்கத்தில் ஒரு பாடம்
மற்றொரு குறிப்பிடத்தக்க அற்புதம் லூக்கா 7:11-17-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பதிவின்படி, இயேசு “நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.” இந்நாள் வரையாக நவீன அரபு கிராமமாகிய நாயீனுக்கு தென்கிழக்கே கல்லறைகள் காணப்படுகின்றன. “அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது,” சப்தம் நிறைந்த ஒரு காட்சியை எதிர்ப்பட்டார். “மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.” பண்டைய காலங்களிலிருந்து “சவ அடக்கத்தை நடத்தும் விதம் மாறவில்லை” என்று எச். பி. டிரிஸ்ட்ராம் என்பவர் குறிப்பிட்டார். அவர் கூடுதலாக சொன்னார்: “புலம்புவதற்கென்று அமர்த்தப்பட்ட பெண்கள் பாடைக்கு முன்பாக செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்கள் கைகளை முழுவேகத்துடன் வீசிக்கொண்டு, தங்கள் முடியை இழுத்து, துக்கத்தினால் மூர்க்கமான சைகைகளை செய்து, மரித்துப் போனவரின் பெயரை சப்தமாக கூப்பிடுவார்கள்.”—பைபிள் தேசங்களில் கிழக்கத்திய பழக்கவழக்கங்கள் (ஆங்கிலம்).
இப்படியாக சந்தடிமிகுந்த குழப்பத்தின் மத்தியில் துக்கித்துக் கொண்டிருந்த ஒரு விதவை நடந்து வந்தாள், அவளுடைய முகத்தோற்றம் அதிக வேதனையை வெளிக்காட்டியிருக்க வேண்டும். கணவனை ஏற்கெனவே இழந்திருந்ததால், ஆசிரியர் ஹெர்பர்ட் லாக்யரின் வார்த்தைகளின்படி, அவள் தன் மகனை “தன் வயதான காலத்தில் ஆதரவாகவும், தன் தனிமைக்கு ஆதரவாகவும்—வீட்டுக்கு ஆதரவாகவும் தூணாகவும் கருதினாள். தன் ஒரே மகனை இழந்ததில் கடைசியாக மீந்திருந்த ஆதரவும் நீக்கப்பட்டு விட்டது.” (பைபிளின் எல்லா அற்புதங்களும்) இயேசுவின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? லூக்காவின் சொல்திறமிக்க வார்த்தைகளின்படி, “கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொ[ன்னார்.]” “மனதுருகி” என்ற சொல் “குடல்கள்” என்று சொல்லர்த்தங்கொள்ளும் ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. “உள்ளே அதிக ஆழமாக உணர்ச்சிப்பூர்வமாக தூண்டப்படுவது” என்பது அதன் அர்த்தம். (வைன்ஸ் டிக்ஷ்னரி ஆஃப் ஓல்டு அண்ட் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ்) ஆம், இயேசுவின் உணர்ச்சிகள் ஆழமாக கிளறப்பட்டன.
இயேசுவின் சொந்த தாயே இப்போது விதவையாக இருந்திருக்கலாம், எனவே தனக்கு தகப்பனாக இருக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்ட யோசேப்பின் இழப்பால் ஏற்பட்ட துக்கத்தின் வேதனையை அவர் ஒருவேளை அறிந்திருக்கலாம். (யோவான் 19:25-27-ஐ ஒப்பிடுக.) இயேசுவை அந்த விதவை கெஞ்சிக்கேட்க வேண்டியில்லை. மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின்படி, செத்த உடலை தொடுவது ஒருவரை அசுத்தமாக்கும் என்றாலும்கூட அவர் தாமாகவே “கிட்டவந்து, பாடையைத் தொட்டார்.” (எண்ணாகமம் 19:11) அவருடைய அற்புதமான வல்லமைகளின் மூலமாக, இயேசு அந்த அசுத்தத்தின் ஊற்றுமூலத்தையே நீக்கிவிடக்கூடும்! “அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.”
இரக்கத்தைக் காண்பிப்பதில் என்னே ஒரு உணர்ச்சியைத் தூண்டும் பாடம்! இந்தக் “கடைசிநாட்களில்” காண்பிக்கப்படும் அன்பற்ற, இரக்கமற்ற மனநிலைகளை கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடாது. (2 தீமோத்தேயு 3:1-5) அதற்கு மாறாக, 1 பேதுரு 3:8 இவ்வாறு பலமாக உந்துவிக்கிறது: ‘நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களுமாய் இருங்கள்.’ நமக்கு அறிமுகமானவர் மரணத்தையோ அல்லது ஒரு கடும் வியாதியையோ அனுபவித்தால், நாம் உயிர்த்தெழுதலை நடப்பித்துக்காட்ட முடியாது அல்லது வியாதியாயிருப்பவரை சுகப்படுத்த முடியாது. ஆனால் நடைமுறையான உதவியும் ஆறுதலும் அளிக்கலாம், ஒருவேளே நாம் அவ்விடத்தில் இருப்பதன் மூலமும் அவர்களோடு சேர்ந்து அழுவதன் மூலமும் அவ்வாறு செய்யலாம்.—ரோமர் 12:15.
இயேசு நடப்பித்துக்காட்டிய இந்த வியப்புக்குரிய உயிர்த்தெழுதல் எதிர்காலத்தைக் குறித்தும்கூட—‘பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு எழுந்துவரும்’ காலத்தைக்குறித்தும்கூட—சொல்கிறது! (யோவான் 5:28, 29) பூமிமுழுவதும் அன்பானவரை மரணத்தில் இழந்தவர்கள், இறந்துபோன தாய்மார்கள், தந்தைகள், பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் பிரேதக்குழியிலிருந்து திரும்பி வருகையில் இயேசுவின் இரக்கத்தைத் தனிப்பட்ட விதத்தில் அனுபவிப்பர்!
அற்புதங்களிலிருந்து பாடங்கள்
இயேசுவின் அற்புதங்கள், வல்லமையான கிளர்ச்சியூட்டும் வெளிக்காட்டுதல்களாய் இருந்ததைவிட அதிகத்தைக் குறித்தன என்பது தெளிவாக இருக்கிறது. அவை கடவுளை மகிமைப்படுத்தின, ‘தேவனை மகிமைப்படுத்தும்படி’ ஊக்கப்படுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு அவை ஒரு மாதிரியை வைத்தன. (ரோமர் 15:5) அவர்கள் நன்மையானதை செய்யவும், தாராளத்தன்மையைக் காண்பிக்கவும், இரக்கத்தை வெளிக்காட்டவும் உற்சாகப்படுத்தப்பட்டனர். அதிமுக்கியமாக, கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின்போது நடக்கவிருக்கும் வல்லமையான செயல்களுக்கு அவை முற்காட்சியாக இருந்தன.
இயேசு பூமியிலிருக்கையில் ஒரு சிறிய பகுதிக்குள் மட்டுமே தம் வல்லமைவாய்ந்த செயல்களை நடப்பித்துக் காண்பித்தார். (மத்தேயு 15:24) மகிமைப்படுத்தப்பட்ட ராஜாவாக அவருடைய ஆட்சியின் எல்லை பூமிமுழுவதும் விஸ்தரிக்கப்படும்! (சங்கீதம் 72:8) இயேசு பூமியிலிருக்கையில், அவருடைய அற்புதமான சுகப்படுத்துதல்களையும் உயிர்த்தெழுதலையும் பெற்றுக்கொண்டோர் இறுதியில் மரித்துப் போயினர். அவருடைய பரலோக ஆட்சியின்கீழ், பாவமும் மரணமும் முழுவதுமாக நீக்கப்பட்டு, அது நித்திய ஜீவனுக்கான வழியைத் திறந்து வைக்கும். (ரோமர் 6:23; வெளிப்படுத்துதல் 21:3, 4) ஆம், இயேசுவின் அற்புதங்கள் ஒரு மகிமையான எதிர்காலம் வருவதைக் குறிப்பிடுகின்றன. இலட்சக்கணக்கானோர் மெய்யான நம்பிக்கையை அதன் பாகமாக ஆவதற்கு யெகோவாவின் சாட்சிகள் அவர்களுக்கு உதவி செய்திருக்கின்றனர். அந்த நேரம் வரும் வரை, சீக்கிரத்தில் நடைபெறவிருப்பவற்றைப் பற்றிய எப்பேர்ப்பட்ட மகத்தான முன்னனுபவத்தை இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் அளித்திருக்கின்றன!
[பக்கம் 7-ன் படம்]
இயேசு தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றுகிறார்