மெய்க் கடவுளுக்குப் பயப்படுவதால் வரும் நன்மைகள்
“பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.”—ஏசாயா 48:17.
1. தேவ பயத்தால் என்ன துக்ககரமான காரியங்களைத் தவிர்த்திருக்கலாம்?
ஆதாம் தேவ பயத்தை வளர்த்திருந்தானாகில், அவன்தானே நித்தியமாக மரிப்பதற்கும் அவனுடைய சந்ததியார் ஆயிரக்கணக்கான, வருத்தந்தோய்ந்த வருடங்களை அனுபவிப்பதற்கும் வழிநடத்திய பாவத்திலிருந்து அவனை அது தடுத்திருக்கக்கூடும். பூர்வ இஸ்ரவேல் தேசம் யெகோவாவுக்குப் பயந்து அவரை நேசிக்கும்படியான அவருடைய ஆலோசனைக்குச் செவிகொடுத்திருந்ததென்றால், அந்தத் தேசம் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்படவோ கடவுளுடைய குமாரனை மறுதலித்து, அவருடைய இரத்தம் சிந்தப்படுவதற்குக் குற்றமுள்ளதாகவோ ஆகியிருக்காது. இன்றைய உலகம் தேவனுக்குப் பயந்ததென்றால், அரசியலிலோ வியாபாரத்திலோ ஊழலே இருக்காது; குற்றச்செயல்களும் போருங்கூட இருக்காது.—நீதிமொழிகள் 3:7.
2. நம்மைச் சூழ்ந்திருக்கிற உலகிலுள்ள நிலைமைகள் என்னவாயிருந்தாலும், நாம் ஏன் யெகோவாவுக்கான பயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
2 என்றபோதிலும், நம்மைச் சூழ்ந்திருக்கிற உலகம் எதைச் செய்தாலும், தனிப்பட்ட நபர்களாக, குடும்பங்களாக, யெகோவாவின் ஊழியர்களடங்கிய சபைகளாக நாம்தாமே மெய்த் தேவனுக்குப் பயத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம் நன்மையடையலாம். இஸ்ரவேல் தேசத்துக்கு மோசே கொடுத்த நினைப்பூட்டுதலுக்கு இது இசைவாயிருக்கிறது: “கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, . . . கர்த்தருடைய கற்பனைகளை . . . உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.” (உபாகமம் 10:12, 13) மெய்த் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்பட்டால், நமக்கு வரும் நன்மைகளில் சில யாவை?
ஞானம்—பொன்னைவிட அதிக விலையேறப்பெற்றது
3. (அ) நாம் பெறக்கூடிய முதல் நன்மை என்ன? (ஆ) சங்கீதம் 111:10-ன் உட்பொருள் என்ன?
3 முதல் நன்மையானது மெய் ஞானமாகும். சங்கீதம் 111:10 இவ்வாறு அறிவிக்கிறது: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.” இதன் உட்பொருள் என்ன? பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஆபத்தை விட்டு விலகியிருக்கவும் குறிப்பிட்ட சில இலக்குகளை அடையவும் அறிவை வெற்றிகரமாகப் பயன்படுத்தவும் உள்ள திறனே ஞானமாகும். நல்நிதானிப்பை அது உட்படுத்துகிறது. அத்தகைய ஞானத்தின் தொடக்கமும் ஆதி பங்கும் அஸ்திவாரமும் யெகோவாவுக்கான பயமாகும். ஏன்? ஏனெனில் சகல படைப்பும் அவருடைய கரங்களின் கிரியையாக இருக்கிறது. அது அவரைச் சார்ந்திருக்கிறது. அவர் மனிதகுலத்திற்கு சுய தெரிவைக் கொடுத்தார், ஆனால் அவருடைய வழிகாட்டுதல் இல்லாமல் தங்களுடைய சொந்த நடைகளை வெற்றிகரமாக வழிநடத்துவதற்கான திறனைக் கொடுக்கவில்லை. (யோசுவா 24:15; எரேமியா 10:23) வாழ்க்கையைப் பற்றிய அத்தகைய அடிப்படை உண்மைகளை மதித்துணர்ந்து அவற்றிற்கிணங்க வாழ்ந்தால் மாத்திரமே நாம் நிலையான வெற்றியடையலாம். யெகோவாவைப் பற்றிய அறிவு, கடவுளுடைய சித்தம் கட்டாயம் வெற்றிபெறும் என்பதன்பேரிலும் விசுவாசத்தோடிருப்பதற்குப் பலனளிப்பதற்கான அவருடைய வாக்குறுதியும் திறமையும் நிச்சயம் என்பதன்பேரிலும் நமக்கு அசைக்கமுடியாத திடநம்பிக்கையை அளித்ததென்றால், அப்போது தேவ பயம் ஞானமாகச் செயல்பட நம்மை உந்துவிக்கும்.—நீதிமொழிகள் 3:21-26; எபிரெயர் 11:6.
4, 5. (அ) ஓர் இளம் மனிதனின் பல்கலைக்கழக படிப்பு ஏன் அவரை மெய் ஞானத்தை அடையமுடியாதபடி செய்தது? (ஆ) இந்த மனிதனும் அவருடைய மனைவியும் பிற்பாடு எவ்வாறு மெய் ஞானத்தைப் பெற்றுக்கொண்டனர், இது அவர்களுடைய வாழ்க்கையை எந்த விதத்தில் மாற்றியது?
4 ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். சில வருடங்களுக்கு முன், ஓர் இளம் மனிதன் கனடாவில் உள்ள சஸ்காட்செவான் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். பாடத்திட்டத்தில் உயிரியல் பாடமும் இருந்தது, பரிணாமக் கொள்கை அவருக்குக் கற்றுத் தரப்பட்டது. பட்டம் பெற்றப் பின், அணுவியல் பெளதிகத்தை விசேஷ பாடமாக அவர் எடுத்துப் படித்தார்; டோரன்டோ பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடருவதற்கு படிப்பு உதவித்தொகையைப் பெற்றார். கல்வியைத் தொடருகையில் அணு அமைப்பு முறைகளில் ஒழுங்கிற்கும் வடிவமைப்பிற்குமான அற்புத அத்தாட்சியைப் பார்த்தார். ஆனால் பின்வரும் கேள்விகளுக்குப் பதில்கள் கொடுக்கப்படவில்லை: இதையெல்லாம் வடிவமைத்தவர் யார்? எப்போது? ஏன்? அக்கேள்விகளுக்குப் பதில்கள் இல்லாமல், போரில் அப்போது ஈடுபட்டிருந்த உலகில் அவர் தன் அறிவை ஞானமாகப் பயன்படுத்த முடியுமா? எது அவரை வழிநடத்தும்? நாட்டுப் பற்றா? பொருள் சம்பந்தமான பலன்களைப் பெறுவதன் விருப்பமா? உண்மையில், அவர் மெய் ஞானத்தைப் பெற்றுவிட்டாரா?
5 பட்டம் பெற்று, கொஞ்ச காலத்துக்குள்ளாக, அந்த இளம் மனிதனும் அவருடைய மனைவியும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர். அவர்கள் முன்பு பெற்றுக்கொள்ள முடியாத பதில்களைக் கடவுளுடைய சொந்த வார்த்தையிலிருந்து பெற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். சிருஷ்டிகராகிய யெகோவா தேவனைப் பற்றி அறிந்துகொண்டனர். சிவந்த சமுத்திரத்திடம் நின்ற மோசேயைப் பற்றியும், பாபிலோனில் இருந்த தானியேலைப் பற்றியும் அவருடைய தோழர்களைப் பற்றியும் படிக்கையில், மனிதருக்கு அல்ல, ஆனால் கடவுளுக்குப் பயப்படுவதன் முக்கியத்துவத்தைக் கற்றறிந்தனர். (யாத்திராகமம் 14:10-31; தானியேல் 3:8-30) அப்படிப்பட்ட தேவ பயமும் அதோடுகூட யெகோவாவுக்கான உண்மையான அன்பும் அவர்களை உந்துவிக்க ஆரம்பித்தது. விரைவில் அவர்களுடைய முழு வாழ்க்கைப் போக்கும் மாறியது. உயிரியலில் தான் படித்த கைத்திறனுள்ளவரைப் பற்றி கடைசியில் இந்த இளம் மனிதர் அறிய வந்தார். பெளதிக பாடத்தைப் படிக்கையில், அதில் பிரதிபலிக்கப்பட்டிருந்த ஞானத்தை உடையவரின் நோக்கத்தை அவர் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். தன் உடன் மானிடரை அழிக்கவல்ல கருவிகளை உற்பத்திச் செய்வதற்குத் தன் அறிவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவரும் அவருடைய மனைவியும் கடவுளையும் தங்கள் அயலானையும் நேசிக்க மற்றவர்களுக்கு உதவ விரும்பினர். கடவுளுடைய ராஜ்ய அறிவிப்பாளர்களாக முழுநேர ஊழியத்தில் சேர்ந்துகொண்டனர். பின்னர் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளிக்குச் சென்று, அங்கிருந்து மிஷனரிகளாக அனுப்பப்பட்டனர்.
6. யெகோவாவுக்கான பயத்தின்பேரில் சார்ந்திருக்கும் ஞானமிருந்தால், என்ன குறுகிய நோக்குடைய நாட்டங்களை நாம் தவிர்ப்போம், அதற்கு மாறாக என்ன செய்துகொண்டிருப்போம்?
6 நிச்சயமாகவே, எல்லாருமே மிஷனரிகளாக இருக்க முடியாது. ஆனால் யெகோவாவுக்கான பயத்தின்பேரில் சார்ந்திருக்கும் ஞானத்தை நாம் எல்லாருமே அனுபவிக்கலாம். அந்த ஞானத்தை வளர்த்துக் கொண்டோமென்றால், வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி வெறுமனே ஊகிக்கும் மனிதர்களின் தத்துவங்களை ஊக்கமாகப் படிப்பதில் ஆழ்ந்திருக்க மாட்டோம். நமக்கு நித்திய ஜீவனை அளிக்கவல்ல ஜீவனுக்கு ஊற்றுமூலராக இருக்கும் யெகோவா தேவனால் ஏவப்பட்ட பைபிளைப் படிப்பதில் கருத்தூன்றியவர்களாக இருப்போம். (சங்கீதம் 36:9; கொலோசெயர் 2:8) அழிவின் விளிம்பில் தடுமாறிக் கொண்டிருக்கும் பொருளாதார ஒழுங்குமுறையின் அடிமைகளாக ஆகிவிடுவதற்குப் பதிலாக, உண்ணவும் உடுக்கவும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கும்படி யெகோவா கூறும் புத்திமதிக்குச் செவிகொடுத்து, கடவுளோடு நமக்குள்ள உறவை வாழ்க்கையின் அதிமுக்கியமான காரியமாக வைத்துக்கொள்வோம். (1 தீமோத்தேயு 6:8-12) இவ்வுலகத்தில் ஓர் நல்ல நிலைக்கு வந்துவிடுவதில்தான் நம் எதிர்காலம் சார்ந்திருப்பது போன்று நாம் நடந்துகொள்வதற்கு பதிலாக, இவ்வுலகமும் அதன் இச்சையும் கடந்து போகிறது, தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறான் என்று யெகோவாவுடைய வார்த்தை சொல்லுகையில் அதை நம்புவோம்.—1 யோவான் 2:17.
7. (அ) மதிப்பீடுகளைக் குறித்து சமநிலையான கருத்தைக் கொண்டிருக்க நீதிமொழிகள் 16:16 எவ்வாறு நமக்கு உதவுகிறது? (ஆ) கடவுளுடைய சித்தத்தைச் செய்வதை நம்முடைய வாழ்க்கையின் மையக் காரியமாக்குவதன் மூலம் என்ன பலன்கள் வருகின்றன?
7 நீதிமொழிகள் 16:16 இப்படி உண்மையாகச் சொல்வதன் மூலம் நம்மை உற்சாகப்படுத்துகிறது: “பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது [யெகோவாவுக்கான பயத்தோடு தொடங்கும் ஞானம்] எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!” அத்தகைய ஞானமும் புத்தியும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதை வாழ்க்கையின் மையக் காரியமாக்க நம்மை உந்துவிக்கும். மனித சரித்திரத்தின் இந்தக் காலப்பகுதிக்குக் கடவுள் தம்முடைய சாட்சிகளிடம் ஒப்படைத்திருக்கும் அந்த வேலை என்ன? அவருடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதும் நேர்மை இதயமுள்ளோரை இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக்குவதே ஆகும். (மத்தேயு 24:14; 28:19, 20) மெய்யான மனநிறைவையும் மிகுந்த சந்தோஷத்தையும் பலனாகத் தரும் வேலையாக இது இருக்கிறது. அப்படியானால், நல்ல காரணத்தோடு பைபிள் கூறுகிறது: ‘ஞானத்தைக் கண்டடைகிற மனுஷன் பாக்கியவான்.’—நீதிமொழிகள் 3:13.
கெட்ட காரியங்களுக்கு எதிராகப் பாதுகாப்பு
8. (அ) கடவுளுக்குப் பயப்படுவதிலிருந்து வரும் இரண்டாம் நன்மையைக் குறிப்பிடுங்கள். (ஆ) எந்தக் கெட்ட காரியத்திலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம்? (இ) தேவ பயம் எவ்வாறு ஒரு வல்லமைவாய்ந்த உந்துவிக்கும் சக்தியாக ஆகிறது?
8 கடவுளுக்குப் பயப்படுவதிலிருந்து கிடைக்கும் இரண்டாவது நன்மை என்னவென்றால், கெட்ட காரியங்களைச் செய்யாதபடி பாதுகாக்கப்படுகிறோம். கடவுளிடம் ஆழ்ந்த மரியாதையுள்ள ஆட்கள், நல்லது எது, கெட்டது எது என்று தாங்களாகவே தீர்மானிப்பதில்லை. கடவுள் நல்லதென்று சொல்வதைக் கெட்டதாகவோ கடவுள் கெட்டவை என்று சொல்பவற்றை நல்லவை என்றோ அவர்கள் கருதுவது கிடையாது. (சங்கீதம் 37:1, 27; ஏசாயா 5:20, 21) மேலும், தேவ பயத்தால் உந்துவிக்கப்பட்ட நபர், எது நல்லது எது கெட்டது என்று யெகோவா சொல்வதை அறிந்திருப்பதோடு மாத்திரம் இருந்துவிடுவது கிடையாது. அப்படிப்பட்ட நபர் யெகோவா நேசிப்பதை நேசிக்கிறார், யெகோவா வெறுப்பதை வெறுக்கிறார். அதன் விளைவு, அவர் கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாகச் செயல்படுகிறார். எனவே, நீதிமொழிகள் 16:6-ல் குறிப்பிட்டுள்ளபடி, “கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.” ஒரு நபர் தன் சொந்த பலத்தினால் செய்ய முடியாததை அடைய அப்படிப்பட்ட தேவ பயம் வல்லமைவாய்ந்த உந்துவிக்கும் சக்தியாக ஆகிறது.
9. கடவுளைப் பிரியப்படுத்தாமல் போய்விடக்கூடாது என்ற பலமான விருப்பம் எவ்வாறு மெக்ஸிகோவிலிருந்த ஒரு பெண்ணின் தீர்மானத்தைச் செல்வாக்குச் செலுத்தியது, என்ன விளைபயனோடு?
9 தேவ பயம் ஒரு நபரில் அப்போதுதான் வளர ஆரம்பித்திருக்கிறது என்றாலும்கூட, தன் வாழ்க்கையின் மீதமுள்ள காலமெல்லாம் வருந்தத்தக்க ஏதோவொன்றை செய்வதைத் தவிர்க்க அது அவரைப் பலப்படுத்தலாம். உதாரணமாக, மெக்ஸிகோவிலிருந்த ஒரு கருவுற்ற பெண் கருக்கலைப்பைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரிடம் கேட்டார். சாட்சியானவர் அநேக வசனங்களை அந்தப் பெண்ணுக்கு வாசித்தப் பின்பு, இவ்வாறு காரணம் காட்டி சொன்னார்: “படைப்பாளருக்கு உயிர் அதிக முக்கியமானது, இன்னும் பிறவாதவர்களின் உயிரும்கூட.” (யாத்திராகமம் 21:22, 23; சங்கீதம் 139:13-16) அவருடைய குழந்தை குறைபாடுடன் பிறக்கக்கூடும் என்று மருத்துவ பரிசோதனை குறிப்பிட்டிருந்தது. ஆனால் இப்போது கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தப் பின்பு, தன் குழந்தையைப் பெற்றெடுக்க அந்தப் பெண் தீர்மானித்தார். அவருடைய மருத்துவர் அவரை மறுபடியும் பார்க்க மறுத்து விட்டார், அவருடைய கணவனும் அவரை விட்டுவிட்டுப் போய்விடுவதாகப் பயமுறுத்தியபோதிலும் அவர் உறுதியாக இருந்தார். உரிய காலத்தில், குறைபாடில்லாத, ஆரோக்கியமான, அழகான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றார். நன்றியுணர்ச்சியினால் உந்தப்பட்டு, சாட்சிகளைத் தேடிக் கண்டுபிடித்தார், அவர்கள் கடவுளுடைய வார்த்தையை அவரோடு படிக்க ஆரம்பித்தார்கள். ஒரு வருடத்துக்குள்ளாக, அவரும் அவருடைய கணவரும் முழுக்காட்டப்பட்டனர். சில வருடங்களுக்குப் பின், ஒரு மாவட்ட மாநாட்டில், அவரிடம் முதலில் பேசிய சாட்சியைச் சந்தித்து, தங்களுடைய அழகான, நான்கு வயது மகளை அறிமுகம் செய்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடவுளுக்குச் சரியான மரியாதையும் அவரைப் பிரியப்படுத்தாமல் போய்விடக்கூடாது என்ற ஒரு பலமான விருப்பமும் ஒரு நபரின் வாழ்க்கையில் சக்திவாய்ந்த செல்வாக்குகளை நிச்சயமாகச் செலுத்தக்கூடும்.
10. தேவ பயம் என்ன வகையான கெட்ட காரியங்களிலிருந்து விடுபட ஜனங்களைப் பாதுகாக்கலாம்?
10 தேவ பயம் நம்மை பல்வேறு வகைப்பட்ட கெட்ட செயல்களிலிருந்து பாதுகாக்கும். (2 கொரிந்தியர் 7:1) சரியாக வளர்க்கப்பட்டால், தானும் யெகோவாவும் மாத்திரமே அறிந்திருக்கும் இரகசிய பாவங்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவர அது ஒருவருக்கு உதவக்கூடும். மதுபானப்பொருள் துர்ப்பழக்கத்திற்கோ போதைப்பொருள் துர்ப்பழக்கத்திற்கோ அடிமைப்படுவதிலிருந்து விடுபட அவருக்கு உதவும். தென் ஆப்பிரிக்காவில் போதைப்பொருள் துர்ப்பழக்கத்திலிருந்த ஒருவர் இவ்வாறு விளக்குகிறார்: “கடவுளைப் பற்றிய அறிவை நான் எடுத்துக்கொண்டபோது, அவரைப் புண்படுத்தி விடுவேனோ அல்லது பிரியப்படுத்தாமல் போய்விடுவேனோ என்ற பயமும் எனக்கு உருவானது. அவர் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார் என்பதை அறிந்திருந்தேன், அவருடைய பார்வையில் அங்கீகரிக்கப்பட்டவனாக இருக்க வாஞ்சையுள்ளவனாக இருந்தேன். என்னிடமிருந்த போதைப்பொருட்களைக் கழிவறையில் போட்டு அழித்து விடும்படி அது என்னை உந்துவித்தது.” தேவ பயம் இதைப் போன்ற வழிகளில் இன்னும் ஆயிரக்கணக்கானோருக்கு உதவியிருக்கிறது.—நீதிமொழிகள் 5:21; 15:3.
மனுஷனுக்குப் பயப்படும் பயத்திற்கு எதிராகப் பாதுகாப்பு
11. யெகோவாவுக்கான ஆரோக்கிய பயம் நம்மை எந்தச் சாதாரண கண்ணியிலிருந்து பாதுகாக்கும்?
11 தேவனைப் பற்றிய ஆரோக்கியமான பயம் மனுஷனுக்குப் பயப்படும் பயமில்லாதபடி நம்மைப் பாதுகாக்கிறது. பெரும்பான்மையான ஆட்கள் மனுஷனுக்குப் பயப்படும் பயத்தினால் ஓரளவு பீடிக்கப்பட்டிருக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலருங்கூட கெத்செமனே தோட்டத்தில் போர்ச்சேவகர்கள் பிடித்தபோது, அவரை விட்டுவிட்டு ஓடினார்கள். பின்னர், பிரதான ஆசாரியனுடைய அரமனையில் பேதுரு நிலைதடுமாறி பயப்பிடியில் சிக்குண்டவராக, தான் இயேசுவின் சீஷனல்ல என்றும் அவரைத் தனக்குத் தெரியாது என்றும் மறுதலித்தார். (மாற்கு 14:48-50, 66-72; யோவான் 18:15-27) ஆனாலும் அப்போஸ்தலர் ஆவிக்குரிய சமநிலையை மீண்டும் பெற உதவப்பட்டார்கள். இதற்கு மாறாக, யோயாக்கீம் ராஜாவின் நாட்களில், செமாயாவின் குமாரன் உரியா பயத்தால் மிகவும் ஆட்கொள்ளப்பட்டவராக யெகோவாவின் தீர்க்கதரிசியாயிருந்து செய்துவந்த தனது சேவையை விட்டுவிட்டு, அந்நாட்டிலிருந்து ஓடிப்போனார்; அப்படியிருந்தும், அவர் பிடித்துக் கொலைசெய்யப்பட்டார்.—எரேமியா 26:20-23.
12. (அ) மனுஷனுக்குப் பயப்படும் பயத்திற்கு எதிரான எந்தப் பாதுகாப்பை நீதிமொழிகள் 29:25 குறிப்பிட்டுக் காட்டுகிறது? (ஆ) கடவுள்பேரில் நம்பிக்கை எவ்வாறு வளர்க்கப்படுகிறது?
12 மனுஷனுக்குப் பயப்படும் பயத்தை மேற்கொள்ள ஒரு நபருக்கு எது உதவலாம்? “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்,” என்று எச்சரித்துவிட்டு, நீதிமொழிகள் 29:25 மேலுமாகச் சொல்கிறது: ‘கர்த்தரை நம்புகிறவன் உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.’ யெகோவாவை நம்புவதே அதற்கான பதிலாகும். அத்தகைய நம்பிக்கை அறிவையும் அனுபவத்தையும் சார்ந்திருக்கிறது. அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம், யெகோவாவின் வழிகளுடைய நீதி விளங்குவதை நாம் காண்கிறோம். அவர்பேரில் சார்ந்திருக்கும் தன்மை, அவருடைய வாக்குறுதிகளின் நிச்சயத்தன்மை (உயிர்த்தெழுதலைப் பற்றியதும் உட்பட), அவருடைய அன்பு, சர்வவல்லமையுள்ள சக்தி ஆகியவற்றை வெளிக்காட்டும் சம்பவங்களோடு நாம் பரிச்சயமாகிறோம். பிறகு, அந்த அறிவின்படி நடந்தால், யெகோவா சொல்லும் காரியங்களைச் செய்து அவர் எச்சரிப்பு விடுக்கும் காரியங்களை உறுதியாக நிராகரித்தோமென்றால், அவருடைய அன்புள்ள கவனிப்பையும் அவர்பேரில் சார்ந்திருக்கும் தன்மையையும் நேரடியாக அனுபவிக்கத் தொடங்குவோம். தம்முடைய சித்தத்தைச் செய்ய அவருடைய சக்தி செயல்படுவதற்கான அத்தாட்சியைத் தனிப்பட்ட ரீதியில் காண்போம். அவர் மீதான நம்முடைய நம்பிக்கையோடுகூட, அவருக்கான நம்முடைய அன்பும் அவரைப் பிரியப்படுத்தாமலிருப்பதைத் தவிர்க்க நமக்கிருக்கும் ஊக்கமான ஆசையும் வளர்கின்றன. அத்தகைய நம்பிக்கை ஸ்திரமான அஸ்திவாரத்தின்பேரில் கட்டப்பட்டிருக்கிறது. மனுஷனுக்குப் பயப்படும் பயமில்லாதபடி அரணாக அது சேவிக்கிறது.
13. உலகப்பிரகாரமான வேலை செய்யுமிடத்திலும் வீட்டிலும் பள்ளியிலும் எவ்வாறு தேவ பயம் நமக்கு உதவலாம்?
13 நேர்மையற்ற வியாபார பழக்கங்களில் ஈடுபடுவதன் காரணமாக வேலை போய்விடும் என்று எஜமானர் பயமுறுத்தினால் தேவ பயம் கலந்த யெகோவாவின்பேரில் உள்ள நம்முடைய நம்பிக்கையானது நேர்மையானதைச் செய்வதில் உறுதியாயிருக்கச் செய்யும். (ஒப்பிடுக: மீகா 6:11, 12.) அத்தகைய தேவ பயம் விசுவாசத்தில் இல்லாத குடும்ப அங்கத்தினர்களிடமிருந்து வரும் எதிர்ப்பின் மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், மெய் வணக்கத்தில் தரித்திருக்கும்படி செய்கிறது. பள்ளிக்குச் செல்லும் இளைஞர் தங்களை யெகோவாவின் சாட்சிகளாக அடையாளப்படுத்துவதற்கு வேண்டிய தைரியத்தையளித்து, பைபிள் தராதரங்களை இலேசாக எடுத்துக்கொள்ளும் வகுப்புத் தோழர்களிடமிருந்து வரும் பரிகாசத்தைச் சமாளிக்கவும் அவர்களைப் பலப்படுத்துகிறது. இதனால், ஒரு பருவவயது சாட்சி சொன்னாள்: “அவர்கள் நினைப்பதை உண்மையில் ஒரு பொருட்டாக எண்ணவேண்டியதில்லை. யெகோவா என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம்.”
14. யெகோவாவின் ஊழியர்களுடைய உயிர் அச்சுறுத்தப்பட்டாலுங்கூட, அவர்களால் எவ்வாறு அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவர முடிகிறது?
14 அதே திடநம்பிக்கைத்தானே தங்களுடைய உயிர் அச்சுறுத்தப்பட்டாலுங்கூட யெகோவாவின் வழிகளை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்க மெய்க் கிறிஸ்தவர்களைப் பலப்படுத்துகிறது. உலகத்திலிருந்து துன்புறுத்தலை எதிர்பார்க்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். அப்போஸ்தலர் மிலாறால் அடிக்கப்பட்டனர், இயேசு கிறிஸ்துதாமே பொல்லாத மனிதர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்பதை அறிந்திருக்கின்றனர். (மாற்கு 14:65; 15:15-39; அப்போஸ்தலர் 5:40; ஒப்பிடுக: தானியேல் 3:16-18.) யெகோவாவின் ஊழியர்களோ சகித்திருப்பதற்கு வேண்டிய பலத்தை அவர் தருவார் என்றும் கடவுளுடைய உதவியால் தங்களால் வெற்றிகரமாக அதிலிருந்து வெளிவர முடியும் என்றும் தேவைப்பட்டால், விசுவாசமுள்ளவர்களைத் தம்முடைய புதிய உலகில் உயிருடன் எழுப்புவதன் மூலமுங்கூட யெகோவா பலனளிப்பார் என்றும் முழு நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றனர். தேவ பயங்கலந்த கடவுளுக்கான அவர்களுடைய அன்பு அவரைப் பிரியப்படுத்தாமல் போகச் செய்யும் எந்தக் காரியத்தையும் தவிர்ப்பதற்கு வல்லமைவாய்ந்த விதத்தில் உந்துவிக்கிறது.
15. நாசி சித்திரவதை முகாம்களில், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்ள எது உதவியது?
15 இந்த உந்துவிப்பு, 1930-களின்போதும் 1940-களின்போதும் நாசி சித்திரவதை முகாம்களில் நடந்த அட்டூழியங்களை எதிர்த்து நிற்க யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவியது. லூக்கா 12:4, 5-ல் உள்ள இயேசுவின் ஆலோசனையை அவர்கள் மனதில் ஏற்றுக்கொண்டார்கள்: “என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” ஆகவே, ஸாக்ஸன்ஹாஸன் சித்திரவதை முகாமிலிருந்த சாட்சியாகிய குஸ்டாவ் ஆஷ்னெர் பின்னர் எழுதினார்: ‘SS ஆட்கள் ஆகஸ்ட் டிக்மான் என்பவரைச் சுட்டப்பிறகு, நம்பிக்கையை விட்டுக்கொடுத்து, ஓர் ஆவணத்தில் கையொப்பமிடவில்லையென்றால் மீந்திருந்த எங்களையும் சுட்டுக்கொல்வதாகப் பயமுறுத்தினர். நாங்கள் யாருமே கையெழுத்துப் போடவில்லை. அவர்களுடைய தோட்டாக்களைவிட யெகோவாவுக்குப் பிரியமில்லாததைச் செய்வதன்பேரில் எங்களுக்கு அதிக பயம் இருந்தது.’ மனுஷனுக்குப் பயப்படும் பயம் விட்டுக்கொடுப்பதற்கு வழிநடத்துகிறது, தேவ பயமோ சரியானதைச் செய்வதில் ஒருவரை உறுதியாயிருக்கச் செய்கிறது.
உயிரைக் காத்துக்கொள்ளுவது
16. ஒவ்வொரு பத்தாண்டும் கடந்துபோகையிலும் ஜலப்பிரளயம் வரையாகச் சரியான போக்கைக் காத்துக்கொள்ள நோவாவுக்கு எது உதவியது, இதனால் அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் கிடைத்த விளைபயன் என்ன?
16 நோவா பிரளயத்துக்கு முன்னான உலகின் இறுதி நாட்களில் வாழ்ந்துவந்தார். அப்போதிருந்த துன்மார்க்க உலகை மனிதப் பொல்லாப்பினிமித்தம் யெகோவா அழித்துப்போட தீர்மானித்திருந்தார். என்றபோதிலும், அதற்கிடையே, நோவா வன்முறையும் பெருத்த ஒழுக்கக்கேடும் கடவுளுடைய சித்தத்தினிடமான அலட்சிய மனப்பான்மையும் நிறைந்திருந்த உலகில் வாழ்ந்தார். நோவா நீதியைப் பிரசங்கித்தபோதிலும், “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்.” (மத்தேயு 24:39) எனினும் கடவுள் அவருக்கு வைத்திருந்த வேலையைவிட்டு நோவா விலகவில்லை. அவர் ‘அப்படியே செய்தார்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர் செய்து முடித்தார்.’ (ஆதியாகமம் 6:22) வருடாவருடம் ஜலப்பிரளயம் வரையாக சரியான போக்கைக் காத்துக்கொள்ள நோவாவுக்கு எது உதவியது? எபிரெயர் 11:7 பதிலளிக்கிறது: “விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தி [“தேவ பயம்,” NW]” காட்டினார். இதன் விளைவாக, அவரும் அவருடைய மனைவியும் அவருடைய குமாரர்களும் அவர்களுடைய மனைவிகளும் ஜலப்பிரளயத்தினூடே காக்கப்பட்டார்கள்.
17. (அ) மற்றவர்கள் எதைச் செய்தாலும், நாம் என்ன செய்யவேண்டும்? (ஆ) யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் ஏன் உண்மையில் சந்தோஷமான ஆட்களாக இருக்கின்றனர்?
17 அநேக விதத்தில் நோவாவின் நாளுக்கு ஒப்பான காலப்பகுதியில் நாம் வாழ்ந்து வருகிறோம். (லூக்கா 17:26, 27) மறுபடியும் ஓர் எச்சரிப்பு ஒலிக்கப்படுகிறது. வெளிப்படுத்துதல் 14:6, 7, வானத்தின் மத்தியில் பறக்கும் ஒரு தூதன் சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த ஜனங்களை, “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்” என்று துரிதப்படுத்துகிறார். உங்களைச் சுற்றியுள்ள உலகம் எதைச் செய்தாலும், அவ்வார்த்தைகளுக்குச் செவிசாய்த்து, பிறருக்கு அந்த அழைப்பை விடுங்கள். நோவாவைப்போல, விசுவாசத்தில் செயல்பட்டு தேவ பயத்தைக் காட்டுங்கள். அவ்வாறு செய்வது உங்களுடைய உயிரும் மற்றநேகருடைய உயிர்களும் காப்பாற்றப்படுவதற்கு வழிநடத்தக்கூடும். மெய்த் தேவனுக்குப் பயப்படுகிறவர்களால் அனுபவித்து மகிழப்படும் நன்மைகளை ஆழ்ந்து யோசிக்கையில், இவ்வாறு பாடிய ஏவப்பட்ட சங்கீதக்காரனோடு நம்மால் ஒப்புக்கொள்ளவே முடியும்: “கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”—சங்கீதம் 112:1.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ மெய்த் தேவனுக்குப் பயப்படுவதால் கிடைக்கும் சில முக்கியமான நன்மைகள் என்ன?
◻ தேவ பயத்தில் வேர்கொண்டிருக்கிற ஞானம் எவ்வாறு நம்மைப் பாதுகாக்கும்?
◻ தேவ பயம் ஏன் நம்மைத் தீமையைவிட்டு விலகியிருக்கும்படி செய்கிறது?
◻ மனுஷனுக்குப் பயப்படும் பயத்திற்கு எதிராகத் தேவ பயம் எவ்வாறு நம்மைப் பாதுகாக்கிறது?
◻ தேவ பயம் நம்முடைய பிற்கால வாழ்க்கை எதிர்பார்ப்புகளோடு என்ன தொடர்புடையதாக இருக்கிறது?
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
“கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” —சங்கீதம் 112:1