நம் மூதாதையருக்குப் புதியதோர் வாழ்க்கை
மரணத்தில் ஒவ்வொருவரும் ஆவி உலகில் தொடர்ந்திருக்கும் வாழ்க்கைக்காக இயற்கையாகவே கடந்து செல்வதாக கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் போதிக்கிறதா? இல்லை. அது அவ்வாறு போதிப்பதில்லை. மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையைப்பற்றிய மகத்தான நம்பிக்கையைப் பைபிள் அளிக்கிறது. ஆனால் அதைப்பற்றி அநேகர் நினைப்பதைப் போல் அல்ல.
நம்முடைய முதல் மூதாதை ஆதாமைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள். யெகோவா அவனை “பூமியின் மண்ணினாலே” உருவாக்கினார். (ஆதியாகமம் 2:7) பூமியில் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான வாய்ப்பை ஆதாம் உடையவனாக இருந்தான். (ஆதியாகமம் 2:16, 17) ஆயினும், அவன் அன்பான சிருஷ்டிகருக்கு எதிராக கலகம்செய்தான், அதன் விளைவு மரணம்.
மரணத்தில் ஆதாம் எங்கே சென்றான்? கடவுள் அவனுக்குச் சொன்னார்: ‘நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புவாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.’—ஆதியாகமம் 3:19.
யெகோவா ஆதாமை மண்ணிலிருந்து படைப்பதற்கு முன் அவன் எங்கே இருந்தான்? எங்குமே இல்லை. அவன் இருக்கவேயில்லை. ஆகவே யெகோவா ஆதாமிடத்தில், “மண்ணுக்குத் திரும்புவாய்” என்று சொன்னபோது, ஆதாம் மீண்டும் உயிரற்ற மண்ணைப்போல் ஆவதையே அர்த்தப்படுத்தியிருக்கக்கூடும். ஆதாம், மூதாதையர் ஆவி உலகின் ஸ்தாபகராக இருப்பதற்காகக் ‘கடந்து சென்றிருக்க’மாட்டான். அவன் பரலோகத்தில் பேரானந்த வாழ்க்கைக்கோ அல்லது நித்தியகாலம் அவதிப்படும் ஒரு வாதிக்கும் இடத்திற்கோ கடந்து செல்லவில்லை. அவன் செய்த ஒரே மாற்றம், உயிருள்ள நிலையிலிருந்து உயிரற்ற நிலைக்கும், இருக்கின்ற நிலையிலிருந்து இல்லாமை என்னும் நிலைக்கும்தானாகும்.
ஏனைய மனிதவர்க்கத்தைப் பற்றியதென்ன? மரணத்தில் ஆதாமின் சந்ததியாரும் இல்லாமல் போய்விடுகிறார்களா? பைபிள் பதிலளிக்கிறது: “எல்லாம் [மனிதர்களும் மிருகங்களும்] ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.”—பிரசங்கி 3:19, 20.
மரித்தோரின் நிலை
ஆம், மரித்தோர் உயிரற்றவர்கள், கேட்க, பார்க்க, பேச அல்லது யோசிக்க இயலாதவர்கள். உதாரணமாக பைபிள் சொல்கிறது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று.” பைபிள் இதையும் குறிப்பிடுகிறது: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே [பிரேதக்குழி] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”—பிரசங்கி 9:5, 6, 10.
ஆகவே, கடவுளுடைய வார்த்தையின் பிரகாரம், மக்கள் உயிரோடிருக்கையில் மரணத்தைப் பற்றி அறிந்துள்ளனர். ஆயினும், மரணம் நேரும்போதோ அவர்கள் ஒன்றும் அறியார்கள். அவர்கள் தங்கள் சொந்த சடலத்தின் பக்கத்தில் நின்று, அதற்கு என்ன செய்யப்படுகிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. இல்லாமை என்னும் நிலையில் இன்பமோ வேதனையோ மகிழ்ச்சியோ கண்ணீரோ கிடையாது. மரித்தவர்கள் காலம் கடந்து செல்வதையும் அறியார்கள். அவர்களுடைய உணர்வற்ற நிலை எத்தகைய நித்திரையைக்காட்டிலும் ஆழ்ந்தது.
கடவுளுடைய ஊழியனாகிய பண்டைய காலத்து யோபு, மக்கள் மரணத்திற்குப்பின் ஜீவித்து கொண்டிருப்பதில்லை என்பதை அறிந்திருந்தார். கடவுளுடைய தலையீடு இல்லாமல், மீண்டும் உயிரோடு வருவதற்கான நம்பிக்கை இல்லை என்பதையுங்கூட அறிந்திருந்தார். யோபு கூறினார்: “மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? மனுஷன் படுத்துக்கிடக்கிறான், . . . எழுந்திருக்கிறதும் இல்லை.” (யோபு 14:10, 12) யோபு தான் மரித்தப் பின், ஆவி உலகில் தன்னுடைய மூதாதையர்களுடன் சேர்ந்துகொள்ள நிச்சயமாகவே எதிர்பார்க்கவில்லை.
உயிர்த்தெழுதல் நம்பிக்கை
உயிருடனிருப்பவர்கள் மரணத்தில் இல்லாமல் போவதால், யோபு தொடர்ந்து கேட்ட தீர்வுக்குரிய கேள்வியானது: “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” யோபு தானே இந்தப் பதிலை அளித்தார்: “எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் [பிரேதக்குழியில் இருக்கும் சமயம்] நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும் [யெகோவாவே], அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.”—யோபு 14:14, 15.
மறு வார்த்தையில் சொன்னால், யோபு, இல்லாமை என்னும் நிலையைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தாலும் கடவுள் அவரை மறக்கமாட்டார். காலம் வரும், அப்பொழுது யெகோவா தேவன் உயிர்த்தெழுதல் மூலம் தன்னை மீண்டும் ஜீவிக்க “கூப்பிடு”வார் என்று யோபு விசுவாசித்தார்.
கடவுளுடைய குமாரன் இயேசு கிறிஸ்து, யோபுவின் உயிர்த்தெழுதல் நம்பிக்கை மெய்மையானது என்பதை காண்பித்தார். மரித்தவர்களை எழுப்ப முடியும் என்பதை இயேசு நிரூபித்தார். எவ்வாறு? அதை செய்து காட்டுவதன் மூலம்! யோபுவை உயிர்த்தெழுப்ப அவர் அங்கில்லை. ஆனால் இயேசு பூமியில் இருக்கையில் நாயீன் ஊரைச்சேர்ந்த விதவையின் மகனை உயிர்த்தெழுப்பினார். யவீரு என்னும் பெயருள்ள மனிதனின் 12-வயது மகளை உயிரோடு எழுப்பினார். நான்கு நாட்களாக மரித்திருந்த தம்முடைய நண்பன் லாசருவை உயிர்த்தெழுப்பினார்.—லூக்கா 7:11-15; 8:41, 42, 49-56; யோவான் 11:38-44.
இத்தகைய அற்புதங்களை செய்ததோடுகூட, இயேசு எதிர்காலத்தில் மாபெரும் உயிர்த்தெழுதலைப் பற்றி பேசினார். அவர் சொன்னார்: ‘பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு புறப்படும் காலம் வரும்.’ (யோவான் 5:28, 29) பின்னர் இளம் மனிதன் ஒருவரை உயிர்த்தெழுப்ப யெகோவா உபயோகித்த அப்போஸ்தலன் பவுலுங்கூட, எதிர்கால உயிர்த்தெழுதலில் நம்பிக்கையைத் தெரியப்படுத்தினார். அவர் சொன்னார்: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று தேவனிடத்தில் நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.’—அப்போஸ்தலர் 20:7-12; 24:15.
எதிர்கால உயிர்த்தெழுதலைப்பற்றிய இந்த வேதாகம மேற்கோள்கள், ஆவி உலகில் நித்திய வாழ்க்கைக்கு உரியதல்ல. அவை, இலட்சக்கணக்கான மரித்தோர் மாம்ச உடல்களோடு, இதே பூமியில் உயிருக்குத் திரும்பும் ஒரு காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. உயிர்த்தெழுப்பப்பட்ட இவர்கள், பூமியில் தங்களுடைய முந்தைய வாழ்க்கையைப் பற்றிய நினைவற்ற மக்களாக இரார்கள். அவர்கள் மீண்டும் குழந்தைகளாகப் பிறக்கப்போவதில்லை. மாறாக, மரிக்கும்போது இருந்த அதே ஆட்களாக, அதே நினைவுகளுடனும் ஆளுமையுடனும் இருப்பார்கள். தங்களைத் தாங்களேயும் மற்றவர்களாலும் அடையாளம் கண்டுக்கொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்த ஆட்கள் தங்களுடைய நண்பர்களிடமும் குடும்பங்களிடமும் மீண்டும் சேர்ந்து கொள்ளும்போது அது என்னே ஒரு மகிழ்ச்சியாக இருக்கும்! நம்முடைய மூதாதையர்களை சந்திப்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கும்!
பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுதல்
சிலர் பரலோகத்துக்குச் செல்வார்கள் என்று இயேசு சொல்லவில்லையா? ஆம், அவர் சொன்னார். அவர் கொல்லப்படுவதற்கு முன், அந்த மாலையில் சொன்னார்: ‘என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.’ (யோவான் 14:2, 3) இயேசு தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலரிடம் பேசிக்கொண்டிருந்தார், ஆனால் அவருடைய வார்த்தைகள் எல்லா நல்ல ஆட்களும் பரலோகத்திற்குச் செல்வார்கள் என்று அர்த்தப்படுத்துவதில்லை.
பரலோகத்திற்காக உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் வெறுமனே போற்றுதலுக்குரிய வாழ்க்கையை வாழ்வதைக்காட்டிலும் மற்ற தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும் என இயேசு காட்டினார். ஒரு தேவையானது யெகோவாவைப் பற்றியும் அவரின் நோக்கங்களைப் பற்றியும் திருத்தமான அறிவைப் பெற்றிருப்பதாகும். (யோவான் 17:3) இயேசு கிறிஸ்துவின் கிரயபலியில் விசுவாசத்தைக் காட்டுதல், கடவுளுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவை மற்ற தேவைகளாகும். (யோவான் 3.16; 1 யோவான் 5:3) இன்னும் ஒரு தேவையானது முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாக கடவுளுடைய பரிசுத்த ஆவியினால் பிறப்பிக்கப்பட்டு, ‘மறுபடியும் பிறத்தல்’ வேண்டும். (யோவான் 1:12, 13; 3:3-6) பரலோக வாழ்க்கைக்கான மேலும் ஒரு தேவையானது, இயேசுவைப் போன்றே சகித்திருக்க வேண்டும், மரணம்வரைகூட கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும்.—லூக்கா 22:29; வெளிப்படுத்துதல் 2:10.
அத்தகைய மேன்மையான தேவைகளுக்குக் காரணம் இருக்கிறது. பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் செய்வதற்கு ஒரு முக்கியமான வேலையைக் கொண்டுள்ளனர். மனித அரசாங்கங்கள் பூமியில் காரியங்களை என்றுமே வெற்றிகரமாக கையாள முடியாது என்பதை யெகோவா அறிந்திருந்தார். எனவே மனிதவர்க்கத்தின் மேல் ஆட்சி செய்ய ஒரு பரலோக அரசாங்கத்தை அல்லது ராஜ்யத்தை ஏற்பாடு செய்தார். (மத்தேயு 6:9, 10) அந்த ராஜ்யத்தின் அரசராக இயேசு இருப்பார். (தானியேல் 7:13, 14) பூமியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டு, பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்ட சிலர் அவருடன் ஆளுகை செய்வார்கள். உயிர்த்தெழுப்பப்பட்ட இவர்கள் ‘நம் தேவனுக்குமுன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக இருந்து, பூமி[யை] அரசாளுவார்கள்,’ என்பதாகப் பைபிள் முன்னுரைத்தது.—வெளிப்படுத்துதல் 5:10.
பரலோக உயிர்த்தெழுதலுக்குரிய தேவைகளைப் பெரும் எண்ணிக்கையான ஆட்கள் பூர்த்தி செய்வார்களா? இல்லை. இதற்கு இவர்கள்தாமே காரணமாக இல்லாதபோதிலும், மரணத்தில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையோர் இதற்குத் தகுதியடையவில்லை. அநேகர் யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய சத்தியத்தை அறிந்துகொள்வதற்கான அதிக வாய்ப்பில்லாதவர்களாக அல்லது முற்றிலும் வாய்ப்பில்லாதவர்களாக இருந்தனர். இயேசு கிறிஸ்துவையோ கடவுளுடைய ராஜ்யத்தையோ பற்றிய அறிவேதுமின்றி வாழ்ந்தார்கள், மாண்டார்கள்.
பரலோகத்திற்கு செல்ல இருப்பவர்களை இயேசு “சிறுமந்தை” என்று அழைத்தார். (லூக்கா 12:32) கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ஆட்சி செய்ய ‘பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டோரின்’ எண்ணிக்கை 1,44,000 பேர் என்பது பிற்பாடு வெளிப்படுத்தப்பட்டது. (வெளிப்படுத்துதல் 14:1-3; 20:6) இந்த 1,44,000 பேர், இயேசு சொன்ன ‘அநேக வாசஸ்தலங்களை’ நிரப்புவதற்கு போதுமான பெரும் எண்ணிக்கையே, ஆயினும் ஆதாமிடமிருந்து வந்த கோடிக்கணக்கான மக்களோடு ஒப்பிடுகையில் இது சிறிய எண்ணிக்கையே.—யோவான் 14:2.
பூமிக்குரிய உயிர்த்தெழுதலுக்கு முன்பான சம்பவங்கள்
நாம் இவ்வளவு நேரம் கலந்தாலோசித்ததை மறுபார்வை செய்வோமாக. பைபிளின்படி, யெகோவா தேவன் உயிர்த்தெழுப்பும் வரை மரிப்பவர்கள் மரணத்தில் உயிரற்றவர்களாக இருக்கிறார்கள். சிலர் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள், அங்கு இயேசு கிறிஸ்துவோடு ராஜ்ய அரசாங்கத்தில் ஆளுகை செய்வார்கள். அந்த ராஜ்யத்தின் பிரஜைகளாக ஆவதற்கு, அநேக ஆட்கள் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.
பூமிக்குரிய உயிர்த்தெழுதல் மூலம், யெகோவா தம்முடைய பூமிக்கான நோக்கத்தின் ஒரு பாகத்தை நிறைவேற்றுகிறார். இதை யெகோவா “குடியிருப்புக்காக” படைத்தார். (ஏசாயா 45:18) மனிதவர்க்கத்திற்கு நிரந்தரமான வீடாக இது ஆகியிருக்க வேண்டும். எனவே, சங்கீதக்காரன் பாடினார்: “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.”—சங்கீதம் 115:16.
பூமியில் ஜீவனுக்கான உயிர்த்தெழுதல் துவங்கும் முன், பெரும் மாற்றங்கள் நடைபெற வேண்டும். பூமியானது போர், தூய்மைக்கேடு, குற்றச்செயல், வன்முறை ஆகியவற்றால் நிறைந்திருக்க வேண்டும் என்பது கடவுளின் நோக்கமல்ல என்பதை அநேகமாக நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். கடவுளுக்கும் அவருடைய நீதியான சட்டங்களுக்கும் மதிப்பைக் கொண்டிராத ஆட்களால் இத்தகைய பிரச்சினைகள் உண்டாக்கப்படுகின்றன. ஆகவே கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதற்கான பெரும் நடவடிக்கையாக, கடவுளுடைய ராஜ்யம் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கும்.’ (வெளிப்படுத்துதல் 11:18) அந்த ராஜ்யம் நீதிமான்களை பூமியில் என்றென்றும் வாழவிட்டு, கெட்ட ஆட்கள் அனைவரையும் அழித்துவிடும்.—சங்கீதம் 37:9, 29.
பூமியில் பரதீஸ்
தூய்மையாக்கப்பட்ட பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் ஆட்கள் சாந்தகுணமுள்ளவர்களாகவும், கரிசனையுள்ளவர்களாகவும் எது சரியோ அதையே செய்பவர்களாகவும் இருப்பார்கள். (ஒப்பிடுக: மத்தேயு 5:5.) கடவுளுடைய ராஜ்யத்தின் அன்பான மேற்பார்வையின்கீழ், பாதுகாப்புடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வார்கள். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது,” என்பதாக நிகழவிருக்கும் நிலைமைகளின் மகத்தான முன்காட்சியை பைபிள் கொடுக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:4.
ஆம், பூமி பரதீஸாக மாற்றப்படும். (லூக்கா 23:43) அது எதைக் குறிக்கும் என்பதை சிந்தியுங்கள்! ஆஸ்பத்திரிகளும் நர்ஸிங் ஹோம்களும் இருக்காது. இப்பொழுது வயோதிபத்தின் விளைவுகளால் வேதனையுறுவோர், பரதீஸில் மீண்டும் பலமாகவும் ஆரோக்கியமாகவும் ஆவார்கள். (யோபு 33:25; ஏசாயா 35:5, 6) சவ அடக்க நிலையங்கள், கல்லறைகள், கல்லறைக்கற்கள் இனிமேல் இருப்பதில்லை. தம்முடைய ராஜ்யத்தின் மூலம் யெகோவா என்றென்றும் “மரணத்தை ஜெயமாக விழுங்குவார்.” (ஏசாயா 25:8) அத்தகைய ஆசீர்வாதங்கள் நிச்சயமாகவே நமக்கும் நம் மூதாதையர்களுக்கும் புதியதோர் வாழ்க்கையாகும்.
[பக்கம் 7-ன் படம்]
பூமியில் உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் ராஜ்யத்தின் பிரஜைகளாக இருப்பார்கள்.