ஊழலற்ற ஓர் உலகைப் பற்றிய வாக்குறுதி
சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல் ஊடுருவியிருக்கிறது. அது அரசாங்கம், அறிவியல், விளையாட்டுகள், மதம் அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும், ஊழல் கட்டுப்படுத்த முடியாததாக தோன்றுகிறது.
நாட்டுக்கு நாடு ஊழல் மோசடிகளைப் பற்றிய சோர்வூட்டும் செய்திகள் தலைப்புச் செய்திகளாக காணப்படுகின்றன. மக்களின் நலனுக்காகப் பணியாற்றும் பொறுப்பை ஏற்றிருக்கும் அநேகர் லஞ்சத்தையும் இரகசியமாக கமிஷனையும் பெற்றுக்கொண்டு தங்களுடைய சொந்த நலன்களைச் சேவிப்பவர்களாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அலுவலகங்களில் பணிபுரிவோரின் குற்றச்செயல் மிகவும் பரவலாக உள்ளது. உயர்ந்த சமுதாய அல்லது பொருளாதார அந்தஸ்திலுள்ள அதிகமதிகமான ஆட்கள் தங்களுடைய வழக்கமான அலுவல்களின் சம்பந்தமாக வினைமையான நீதிநெறி மற்றும் குற்ற இயல்புள்ள மீறுதல்களுக்காக குற்றமுள்ளவர்களாக இருக்கின்றனர்.
ஐரோப்பிய பத்திரிகை ஒன்று விவரிக்கும் அந்த “மேலிடத்து ஊழல்” குறித்து கவலை அதிகரித்துள்ளது. “இது பெருந்தொகைக்குப் பொருட்களை வாங்குவதற்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்பாக லஞ்சத்தையும் கமிஷனையும் கேட்கும் மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மிகப் பல சமயங்களில் மாநிலத் தலைவர்களின் பழக்கமாகும்.” ஒரு தேசத்தில் “இரண்டு ஆண்டுகால போலீஸ் புலன் விசாரணையும் ஏறக்குறைய தினந்தோறும் கைது செய்யப்படுதலும்கூட திருத்த முடியாத ஊழல் பேர்வழிகளை இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை,” என்பதாக தி இகானமிஸ்ட் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை குறிப்பிடுகிறது.
இப்படிப்பட்ட ஊழல் பரவலாக இருப்பதன் காரணமாக, தாங்கள் நம்பக்கூடிய எவருமே இல்லை என்பதாக அநேகர் இன்று நினைக்கின்றனர். பின்வருமாறு சொன்ன பைபிள் எழுத்தாளரான தாவீதின் கருத்துக்களை அவர்கள் எதிரொலிக்கின்றனர்: “எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.”—சங்கீதம் 14:3.
பரவலாக உள்ள ஊழலை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? அநேகர் இன்று வெறுமனே அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள். ஆனால் நீங்கள் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்தாலும்கூட, அது இன்னும் உங்களுக்கு வருத்தத்தை உண்டுபண்ணுகிறது. எவ்வாறு?
ஊழல் உங்களைப் பாதிக்கிறது
உயர்மட்ட ஊழலும் சிறிய அளவிலான ஊழலும், இரண்டுமே வாழ்க்கைச் செலவை அதிகரித்து, உற்பத்திப் பொருட்களின் தரத்தைக் குறைத்து, வெகு சில வேலைவாய்ப்புகளிலும் குறைந்த ஊதியங்களிலும் முடிவடைகின்றன. உதாரணமாக, கொள்ளை, வழிப்பறி, திருட்டு ஆகியவற்றுக்கு சேர்ந்து ஆகும் செலவுகளைவிட பணத்தைக் கையாடல் செய்தல், மோசடிகள் போன்ற குற்றச்செயல்களுக்கு குறைந்தபட்சம் பத்து மடங்கு அதிகமாக செலவாகின்றன என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. “ஐக்கிய மாகாணங்களில் பெரிய நிறுவனங்களின் குற்றச்செயல்களினால் ஏற்படும் நஷ்டம் ஆண்டொன்றுக்கு 20,000,00,00,000 டாலர்கள் என்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது—திட்டமிட்டு செய்யப்படும் குற்றச்செயல்களினால் ஏற்படும் நஷ்டத்தைவிட மூன்று மடங்கு அதிகமாகும்,” என்பதாக தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா (1992) குறிப்பிடுகிறது. இதன் பாதிப்புகள் ஒருவேளை உடனடியாக கண்டுணரப்படாவிட்டாலும், “இப்படிப்பட்ட குற்றச்செயல்கள் தொழிலாளர்கள், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பின்மீது பேரளவான விளைவை ஏற்படுத்துகின்றன,” என்பதாக இந்தப் புத்தகம் விளக்குகிறது.
ஊழலின் கசப்பான கனிகள் சாலொமோன் அரசனின் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றன: “இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.”—பிரசங்கி 4:1.
அப்படியென்றால் நாம் ஊழலை சகித்துக்கொண்டிருக்க வேண்டியதுதானா? அது தவிர்க்க முடியாத ஒன்றா? ஊழலற்ற ஓர் உலகம் சாத்தியமற்ற ஒரு கனவா? சந்தோஷகரமாகவே, இல்லை என்பதே அதற்குரிய பதில்! அநீதியும் அக்கிரமமும் சீக்கிரத்தில் ஒழிக்கப்பட்டுவிடும் என்பதாக பைபிள் நமக்குக் கற்பிக்கிறது.
பைபிள் நமக்கு என்ன சொல்கிறது
வல்லமையுள்ள ஒரு தூதன் கடவுளுக்கு எதிராக கலகம் செய்து முதல் மனித தம்பதியை தன்னோடு சேர்ந்துகொள்ளத் தூண்டியபோது ஊழல் ஆரம்பமானது என்பதாக பைபிள் நமக்குச் சொல்கிறது. (ஆதியாகமம் 3:1-6) பாவமுள்ள அவர்களுடைய போக்கினால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக, ஆதாமும் ஏவாளும் யெகோவா தேவனுக்கு எதிராக பாவம் செய்த நாள் முதற்கொண்டே, அவர்கள் ஊழலின் மோசமான விளைவுகளினால் துன்புற ஆரம்பித்தனர். அவர்களுடைய உடல் படிப்படியாக சீரழிய ஆரம்பித்து, தவிர்க்க முடியாத மரணத்துக்கு வழிநடத்தியது. (ஆதியாகமம் 3:16-19) அப்போது முதற்கொண்டு, வரலாறு லஞ்சம், ஏமாற்றுதல், மோசடி ஆகியவற்றின் உதாரணங்களால் நிறைந்திருக்கிறது. என்றபோதிலும், குற்றஞ்செய்யும் பெரும்பாலானவர்கள் தகுதியான தண்டனையைப் பெறாமல் நழுவிவிடுவதாக தோன்றுகிறது.
சாதாரண குற்றவாளிகளைப்போல் இல்லாமல், ஊழல் பேர்வழிகளான உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வெகு அபூர்வமாகவே சிறைக்குச் செல்பவர்களாக அல்லது தவறான வழியில் ஈட்டப்பட்ட ஆதாயத்தை ஈடுசெய்பவர்களாக இருக்கின்றனர். லஞ்சங்கள், கமிஷன்கள் மற்றும் கைக்கூலி இரகசியமாக கொடுக்கப்படுவதால், உயர்மட்ட ஊழலை அம்பலப்படுத்துவது அநேகமாக கடினமாய் இருக்கிறது. ஆனால் ஊழலற்ற ஓர் உலகம் சாத்தியமற்ற ஒரு கனவு என்பதை இது அர்த்தப்படுத்துவது கிடையாது.
ஊழலிலிருந்து விடுதலை மனிதனின் படைப்பாளராகிய யெகோவா தேவனிடமிருந்து வரும். தெய்வீக தலையிடுதலே ஒரே பரிகாரமாகும். ஏன்? ஏனென்றால் மனிதவர்க்கத்தின் காணக்கூடாத சத்துருவாகிய பிசாசாகிய சாத்தான், தொடர்ந்து மனிதவர்க்கத்தைத் தவறாக வழிநடத்திவருகிறான். நாம் 1 யோவான் 5:19-ல் வாசிக்கிறபடி, ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ பெரும்பாலும் தண்டனை பெறாமல் செய்யப்படும் ஊழலின் அதிகரிப்பை வேறு எது விளக்கமுடியும்?
எந்த அளவு மனித முயற்சியினாலும் சாத்தானையும் அவனுடைய பேய்களையும் தோற்கடித்துவிட முடியாது. தெய்வீக தலையிடுதல் மாத்திரமே கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை” உறுதியளிக்க முடியும். (ரோமர் 8:20) சாத்தான் இனிமேலும் மனிதவர்க்கத்தை ஏமாற்ற முடியாமல் போகும்படி விரைவில் தடை செய்யப்படுவான் என்று யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (வெளிப்படுத்துதல் 20:3) இதற்கிடையில், கடவுளுடைய ஊழலற்ற ஓர் புதிய உலகில் நாம் வாழ விரும்பினால், நாம் இந்த உலகின் நேர்மையற்ற வழிகளை நிராகரித்துவிட வேண்டும்.
மக்கள் மாறமுடியும்
இயேசு கிறிஸ்துவின் நாட்களில், தங்களுடைய அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்து தங்கள் உடன்மானிடரை ஒடுக்கியவர்கள் இருந்தார்கள். உதாரணமாக, வரி வசூலிப்பவர்கள் தங்களுடைய நேர்மையற்ற பழக்கங்களுக்குப் பேர்போனவர்களாக இருந்தனர். கடவுளுடைய பின்வரும் வெளிப்படையான கட்டளையின் மத்தியிலும் இது இவ்வாறு இருந்தது: “பரிதானம் [“லஞ்சம்,” NW] வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.” (யாத்திராகமம் 23:8) வரி வசூலிப்பவர்களுக்குத் தலைவனாயிருந்த சகேயு பொய்யாக குற்றஞ்சாட்டுவதன் மூலம் பலவந்தமாக பணம் பறித்ததாய் ஒப்புக்கொண்டார். ஆனால் விரிவான அளவில் சமுதாய சீர்திருத்தத்தை முன்னேற்றுவிப்பதற்குப் பதிலாக, இயேசு தனிப்பட்டவர்களை மனந்திரும்பி தங்கள் ஊழலான வழிகளை விட்டுவிடும்படியாக கேட்டுக்கொண்டார். இதன் விளைவாக, மத்தேயு, சகேயு போன்ற ஊழல் பேர்வழிகளென்று பெயர் எடுத்திருந்தவர்கள் தங்கள் முந்தைய வாழ்க்கை பாணியை விட்டொழித்தனர்.—மத்தேயு 4:17; 9:9-13; லூக்கா 19:1-10.
நேர்மையற்ற பழக்கங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் இன்று அதேவிதமாகவே “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்”வதன் மூலம் ஊழலை நிராகரித்துவிட முடியும். (எபேசியர் 4:24) நேர்மையாக வரிகளைச் செலுத்துவது அல்லது கேள்விக்குரிய நடவடிக்கைகளில் பங்குகொள்வதை நிறுத்திவிடுவது சுலபமாக இல்லாமல் இருக்கலாம். இருந்தபோதிலும், நன்மைகள் கடுமையான எந்த முயற்சிக்கும்கூட தகுதியாகவே இருக்கின்றன.
இந்த ஊழல் நிறைந்த உலகினால் இனிமேலும் கட்டுப்படுத்தப்படாதவர்களாய், மற்றவர்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் உள்ளான சமாதானத்தை அனுபவித்துக் களிக்கின்றனர். தவறுசெய்கையில் பிடிக்கப்படும் பயம் அங்கு இல்லை. மாறாக, அவர்கள் நல்ல ஒரு மனச்சாட்சியை அனுபவித்துக் களிக்கின்றனர். அவர்கள் தானியேல் தீர்க்கதரிசியின் பைபிள் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றனர். தானியேலைக் குற்றப்படுத்தும்படி உயர் அதிகாரிகள் இடைவிடாது வகைதேடிக்கொண்டிருந்தார்கள் என்று பைபிள் பதிவு சொல்கிறது. “ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.”—தானியேல் 6:4.
யெகோவாவின் வாக்குறுதி
“பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை,” என்பதாக யெகோவா வாக்களிக்கிறார்.—பிரசங்கி 8:12, 13.
ஊழல் இனிமேலும் மகிழ்ச்சியற்றத் தன்மையைக் கெண்டுவராதிருக்கையில் என்னே நிம்மதி! ஊழலற்ற ஓர் உலகில் என்றென்றும் வாழ்வது என்னே ஓர் ஆசீர்வாதம்! இது கூடாத காரியமல்ல. பைபிள், “பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி”யதைப் பற்றி பேசுகிறது. (தீத்து 1:3) நீங்கள் ஊழலை வெறுத்து நீதியை நேசிக்கிறீர்களென்றால், ஊழலற்ற ஓர் உலகைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதி நிறைவேறுவதை நீங்கள் காண்பது சாத்தியமாகும்.
[பக்கம் 4-ன் படம்]
ஊழல், அரசாங்க மற்றும் வணிக வட்டாரங்களில் தலைவிரித்தாடுகிறது
[பக்கம் 5-ன் படம்]
ஊழல், அரசாங்க அதிகாரிகளோடு கொள்ளும் செயல்தொடர்புகளில் பெரும்பாலும் பாதிப்புண்டாக்குகிறது