கிலியட் பட்டதாரிகள்—“உண்மையான மிஷனரிகள்!”
“மிஷனரி என்பது எதை உட்படுத்துகிறது?” கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தித்தாளின் தலையங்கத்தில் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. உண்மையான மிஷனரிகள், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தத்தின் கருவிகளாக இருப்பதாக அந்த எழுத்தாளர் வாதிட்டார். என்றபோதிலும், மார்ச் 5, 1995, ஞாயிற்றுக்கிழமை அன்று, யெகோவாவின் சாட்சிகளுடைய ஜெர்ஸி நகர மாநாட்டு மன்றத்தில், முற்றிலும் வேறு வகையான ஒரு பதில் ஆணித்தரமாகக் கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி என்ன? உலகெங்கும் மிஷனரிகளை அனுப்பியுள்ள ஒரு பள்ளியாகிய உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 98-வது வகுப்பின் பட்டமளிப்பு!
ஆரம்ப பாட்டிற்கும் ஜெபத்திற்கும் பின்னர், நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஆல்பர்ட் டி. ஷ்ரோடர், வந்திருந்த 6,430 பேருக்கும் அன்பான வரவேற்பை அளித்தார். தங்களை மிஷனரிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்களிலிருந்து கிலியட் பட்டதாரிகள் ஏன் வித்தியாசப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்பதை சகோதரர் ஷ்ரோடர், தன்னுடைய அறிமுக குறிப்புகளில் தெளிவாக விளக்கினார். அவர் சொன்னார்: “கிலியடுக்கு முக்கிய பாடப்புத்தகம் பைபிளே.” கிலியட் பட்டதாரிகள், சமூக தொண்டர்களாக இருக்கும்படியல்ல, ஆனால் கடவுளுடைய வார்த்தையின் போதனையாளர்களாகும்படி பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள், அயல்நாட்டுப் பிராந்தியங்களிலுள்ள மக்களின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக்கொள்ளும்படி தனிப்பட்டவிதத்தில் தகுதி உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
கிலயட் பட்டதாரிகள் தாங்கள் “உண்மையான” மிஷனரிகளாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்றுபகரும் இன்னும் பல அம்சங்களைப்பற்றி தொடர்ந்து வந்த பேச்சாளர்கள் பேசினர். “மிஷனரிகளாக தொடர்ந்து நல்ல கனிகொடுங்கள்,” என்ற பொருளின்பேரில் சார்ல்ஸ் மாலஹன் அவர்களிடம் பேசினார். கொலோசெயர் 1:9, 10-ல் (NW) உள்ள அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்தி, கிலியடிலிருந்த கடந்த ஐந்து மாதங்கள் ‘கடவுளைப்பற்றிய திருத்தமான அறிவைப்’ பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கிறது என்பதை சகோதரர் மாலஹன் அந்தப் பட்டதாரிகளுக்கு நினைவுபடுத்தினார். அவர்கள் இரு வழிகளில் கனிகொடுப்பதற்கு இது உதவிசெய்யும்: கடவுளுடைய ஆவியின் கனிகளை வெளிக்காட்டுவதன் மூலமும் மற்றவர்களுடன் பைபிள் சத்தியங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும்.
“உங்கள் வாழ்க்கையை ஆபத்திற்குள்ளாக்கும் விட்டுக்கொடுத்தல்களைச் செய்யாதிருங்கள்” என்ற சிந்தனையைத் தூண்டும் பொருளுடன், நிர்வாகக் குழுவைச் சேர்ந்த டானியல் ஸிட்லிக் தொடர்ந்தார். அவர் இயேசுவின் கேள்வியைக் குறிப்பிட்டார்: “மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” (மத்தேயு 16:26) சகோதரர் ஸிட்லிக் குறிப்பிட்டார்: “மக்கள் எளிதும் மென்மையுமான ஒரு வாழ்க்கை முறையை அனுபவிப்பதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்திருக்கின்றனர்.” என்றபோதிலும், சோதனைகளையும் பரீட்சைகளையும் எதிர்ப்படுகையில், உயிருள்ள விசுவாசத்தைக் கொண்டிருப்பவர்களால் இணங்கிப்போக முடியாது. ஒருவர் தன்னுடைய ஜீவனை, அல்லது உயிரைப் பெற்றுக்கொள்ளும்படியாக, ‘கொடுப்பதற்கு’ மனமுள்ளவராக, அதாவது, தியாகம் செய்பவராய் இருக்க வேண்டும் என்று இயேசுவின் வார்த்தைகள் குறிப்பிடுகின்றன. புது மிஷனரிகள், தங்களை முழுமையாக, தங்களுடைய மிகச் சிறந்ததை, யெகோவாவுக்கு அவருடைய சேவையில் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்!
அடுத்ததாக, ஊழிய இலாகா ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த உவில்லியம் வான் டி உவால், “அப்போஸ்தலன் பவுல்—பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரி,” என்ற பொருளின்பேரில் பேசினார். சகோதரர் வான் டி உவால் இவ்வாறு விளக்கினார்: “முதல் நூற்றாண்டில் மிஷனரி வேலையை பவுல் முன்நின்று செய்தார்.” எனவே, பொருத்தமாகவே, இன்று மிஷனரிகளுக்கு அப்போஸ்தலன் பவுல் நல்ல முன்மாதிரியாக இருந்த நான்கு அம்சங்கள் சிறப்பித்துக் காட்டப்பட்டன: (1) மக்களுக்காக பவுல் கொண்டிருந்த உண்மையான அக்கறையும் அன்பும், (2) ஊழியத்தில் அவருடைய திறமை, (3) தன்னை முன்னேற்றுவிப்பதை அடக்கத்துடன் மறுத்தல், (4) யெகோவாவின்மீது அவர் கொண்டிருந்த சந்தேகமற்ற நம்பிக்கை.
“உங்களுடைய புதிய நியமிப்பில் யெகோவா உங்களை ஆராய்ந்து பார்க்கட்டும்,” என்பதே நிர்வாகக் குழுவைச் சேர்ந்த லைமன் ஏ. ஸ்விங்கிள் கலந்தாலோசித்த பொருளாகும். சகோதரர் ஸ்விங்கிள், அன்றைய தினவசனமாகிய சங்கீதம் 139:16-ஐ பயன்படுத்தி, புதிய மிஷனரிகளாக அவர்கள் தங்கள் நியமிப்புகளில் பிரச்சினைகளை எதிர்ப்படுவார்கள் என்றும், யெகோவா அவற்றின் பரிகாரங்களை அறிவார் என்றும் ஒத்துக்கொண்டார். “உங்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது அவருடைய உதவியை நாடுங்கள், அவரிடம் பேசுங்கள். அவருடைய சித்தம் என்னவென்பதைக் கண்டறிய முயலுங்கள்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
பின்னர், நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஜான் இ. பார், ‘உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது’ என்ற பொருளின்பேரில் பேசினார். (2 தெசலோனிக்கேயர் 1:3) லூக்கா 17:1-ல், இயேசு இவ்வாறு சொன்னதாக வாசிக்கிறோம்: “இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம்.” உடன் மிஷனரிகளின் ஆளுமைகளினால் சிலர் இடறலடைந்திருக்கிறார்கள். ஆனால் மன்னிப்பதற்குத் தேவையான விசுவாசத்தைக் கொண்டிருக்கும்படி சகோதரர் பார் மிஷனரிகளை உற்சாகப்படுத்தினார். உண்மையில், இந்த சூழமைவில்தான் இயேசுவின் சீஷர்கள், “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்,” என்று மன்றாடினர். (லூக்கா 17:2-5) அமைப்பிற்குரிய பல்வேறு சரிப்படுத்துதல்களாலும் மிஷனரிகளின் விசுவாசம் சோதிக்கப்படக்கூடும். “இவற்றை ஏற்றுக்கொள்வதற்கான விசுவாசம் நமக்கு இருக்கிறதா, அல்லது அவை மலைபோன்ற தடைகளாகிவிடுமா?” என்று சகோதரர் பார் கேட்டார்.
அடுத்ததாக கிலியட் போதனையாளர்கள் இருவரிடமிருந்து கொஞ்சம் அறிவுரைகள் கிடைத்தன. நல்நம்பிக்கையுள்ள ஒரு மனநிலையைக் கொண்டிருக்கும்படி பட்டதாரிகளை ஜாக் ரெட்ஃபோர்ட் ஊக்குவித்தார். உடன் மிஷனரிகள் ஏதோ கேலி செய்ததன் காரணமாக தன்னுடைய நியமிப்பை விட்டுச்சென்ற ஒரு மிஷனரியைப் பற்றி அவர் கூறினார். ஆனால், அநாவசியமாக கோபித்துக்கொள்வதைக் குறித்து வேதவசனங்கள் நம்மை எச்சரிக்கின்றன. (பிரசங்கி 7:9) “சரியான மனநிலையைக் கொண்டிருங்கள்,” என்று அவர் அறிவுறுத்தினார். “உங்களைச் சுற்றி இருப்பவர்களின் தவறுகளையும் அபூரணங்களையும் மன்னியுங்கள்.”
பின்பு, கிலியடின் பதிவாளராகிய யூ. வி. கிளாஸ் கேட்டார்: “‘காலமும் எதிர்பாராத சம்பவமும்’ நேரிடும்போது சமாளிக்க தயாராக இருக்கிறீர்களா?” (பிரசங்கி 9:11, NW) “நம்முடைய வாழ்க்கை பாணி எப்போதுமே மாற்றங்களுக்கு உட்படக்கூடியது; சில மாற்றங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியவையாய் இருக்கலாம்,” என்று சகோதரர் கிளாஸ் குறிப்பிட்டார். ஒருசில மிஷனரிகள் தங்கள் நியமிப்புகளை விட்டுச்செல்லும்படி வற்புறுத்தும் விதத்தில், உடல்நலக்குறைவு, நோய், குடும்பப் பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்பாராதவிதத்தில் எதிர்ப்பட்டிருக்கின்றனர். “அந்த எதிர்பாராத சம்பவம் என்னவாக இருந்தாலும் சரி, யெகோவா அதை அறிந்திருக்கிறார் என்றும் அக்கறை கொண்டிருக்கிறார் என்றும் நமக்குத் தெரியும்,” என்று சகோதரர் கிளாஸ் கூறினார். “அவரில் நம்முடைய நம்பிக்கையை வைத்தோமானால், நாம் வெற்றி பெறுவோம் என்று அறிந்திருக்கிறோம்!”
“மிஷனரி சேவைக்கென்று தனியாக வைக்கப்பட்டிருத்தல்” என்ற தலைப்பையுடைய பேச்சு, காலை நிகழ்ச்சிக்குரிய பேச்சுத் தொடரின் உச்சக்கட்டமாக இருந்தது. “மிஷனரி என்பது எதை உட்படுத்துகிறது?” என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கேள்வியைப் பற்றி நிர்வாகக் குழுவைச் சேர்ந்த தீயடோர் ஜரெஸ் பேசினார். அதற்கு பதிலளிக்க, பவுல் மற்றும் பர்னபாவின் மிஷனரி வேலையைப் பற்றி, அப்போஸ்தலர் 13, 14 அதிகாரங்களைக் கலந்தாலோசித்தார். தெளிவாகவே, அந்த வேலையானது, சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அல்ல, ஆனால் ‘நற்செய்தியை அறிவிப்பதிலேயே’ கவனத்தைச் செலுத்தியது. (அப்போஸ்தலர் 13:32, NW) சகோதரர் ஜரெஸ் கேட்டார்: “ஒரு உண்மையான மிஷனரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பவுலும் பர்னபாவும் எடுத்துக்காட்டாக இருந்தார்கள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா?” மெக்ஸிக்கோவைச் சேர்ந்த, அனுபவம்வாய்ந்த மிஷனரியாகிய ராபர்ட் ட்ரேசி, ஒரு பிரசங்கிப்பாளராக, உள்ளங்கனியவைக்கும் தன் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி அதன்பின் அழைக்கப்பட்டார்.
சகோதரர் ஷ்ரோடர், 48 பட்டதாரிகளுக்கும் டிப்ளமா பட்டங்களை அளித்தபோது காலை நிகழ்ச்சி உச்சக்கட்டத்திற்கு வந்தது. அந்த மிஷனரிகள் போகும்படி நியமிக்கப்பட்ட 21 நாடுகளின் பெயர்களைக் கேட்டு, வந்திருந்தோர் கிளர்ச்சி அடைந்தனர்: ஈக்வடார், ஈக்குவிடோரியல் கினீ, எஸ்டோனியா, கினீபெசாவோ, கோட் டீவார், கோஸ்டா ரிகா, செனிகல், தைவான், நிகரகுவா, பராகுவே, பார்படாஸ், பெரு, பெனின், பொலிவியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, மாரிஷியஸ், மொஸாம்பிக், லாட்வியா, லீவர்ட் தீவுகள், வெனிசுவேலா, ஹாண்டுராஸ்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, வந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்றுகூடி, ஊழிய இலாகாவைச் சேர்ந்த ராபர்ட் பி. ஜான்ஸனால் நடத்தப்பட்ட உற்சாகமான ஒரு காவற்கோபுர படிப்பை அனுபவித்தனர். 98-வது வகுப்பின் அங்கத்தினர் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். இதைத் தொடர்ந்து கிலியட் பணியாளர்களால் நடத்தப்பட்ட மகிழ்ச்சிகரமான தொடர் பேட்டிகள் இருந்தன. வெளி ஊழியத்தில் தங்களுடைய அனுபவங்களையும் தங்கள் மிஷனரி நியமிப்புகளைப்பற்றிய உணர்ச்சிகளையும் பட்டதாரிகள் பகிர்ந்து கொண்டபோது வந்திருந்தவர்கள் அதிக உற்சாகத்தைப் பெற்றனர்.
ஆறரை வருடங்களாக, நியூ யார்க்கின் உவால்கில்லிலுள்ள உவாட்ச்டவர் சொஸைட்டிக்கு உடைமையான இடங்களில் கிலியட் அமைக்கப்பட்டிருந்தது. என்றாலும், ஏப்ரல் 1995-ல், அந்தப் பள்ளி, நியூ யார்க்கின் பாட்டர்ஸனிலுள்ள புதிய உவாட்ச்டவர் கல்வி மையத்திற்கு மாற்றப்பட்டது. உவால்கில்லிலுள்ள பெத்தேல் குடும்பம் இந்த மாற்றத்தைக் குறித்து எப்படி உணர்ந்தது? இந்தப் பட்டமளிப்பு நிகழ்ச்சியின்போது உவால்கில்லிலிருந்து அநேகர் பேட்டி காணப்பட்டனர். கிலியட் மாணவர்கள் அவர்கள் மனங்களில் ஒரு நிரந்தரமான பதிவை விட்டுச்சென்றிருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய உருக்கமான குறிப்புகள் தெளிவாகக் காண்பித்தன. தெளிவாகவே, மனமுவந்து செயல்படும் இந்த ஆண்களும் பெண்களும் உண்மையான மிஷனரிகள்—மனத்தாழ்மையுள்ளவர்கள், சுயதியாகம் செய்பவர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்வதைக் குறித்து ஆழ்ந்த அக்கறையுள்ளவர்கள்.
பட்டமளிப்பு நிறைவுபெற்றபோது, கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக கிலியட் பள்ளி செய்திருப்பதை—உண்மையான மிஷனரிகளை உருவாக்குவதை—தொடர்ந்து வெற்றிகரமாகச் செய்யும் என்று வந்திருந்தவர்கள் எல்லாரும் உறுதியாக நம்பினார்கள்!
[பக்கம் 18-ன் பெட்டி]
வகுப்புப் புள்ளிவிவரங்கள்:
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 8
போகும்படி நியமிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 21
மாணவர்களின் எண்ணிக்கை: 48
சராசரி வயது: 32.72
சத்தியத்தில் சராசரி வருடங்கள்: 15.48
முழுநேர ஊழியத்தில் சராசரி வருடங்கள்: 10.91
[பக்கம் 18-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் பட்டம் பெறும் 98-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன. (1) எஸ்லிங்கர், ஏ.; மான், டி.; ரிவரா, ஜி.; பார்வெரோ, எம்.; வாஸ், எம்.; தூர்கா, கே.; ஸில்வெரக்ஸ் ஹெச்.; ஆல்வரடோ, டி. (2) டோத், பி.; ஸெகாரா, எஸ்.; ஹார்ட், ஆர்.; ரொராக், ஐ.; எஸ்காபார், பி.; ஐஸ்ட்ரப், ஜே.; ஸ்லை, எல்.; ரிவரா, இ. (3) ஆர்சர்ட், டி.; ஸ்னேத், எஸ்.; மார்ஸியல், பி.; கோல்யனன், டி.; உவாடல், எஸ்.; ப்ளாக்பர்ன், எல்.; எஸ்காபார், எம்.; ஆர்சர்ட், கே. (4) ஹார்ட், எம்.; டோத், எஸ்.; கோல்யனன், ஜே.; பெரிமான், ஹெச்.; மான், டி.; ப்ளாக்பர்ன், ஜே.; பார்க், டி.; வாஸ், எஃப். (5)ஸெகாரா, எஸ்.; ஸ்லை, எல்.; லெஸ்லி, எல்.; பெரிமான், பி.; பார்வெரோ, டபிள்யூ.; ஆல்வரடோ, ஜே.; லெஸ்லி, டி.; பார்க், டி. (6) ஸில்வெரக்ஸ், கே.; எஸ்லிங்கர், ஆர்.; உவாடல், ஜே.; ஸ்னேத், கே.; தூர்கா, ஏ.; ரொராக், எஃப்.; ஐஸ்ட்ரப், சி.; மார்ஸியல், டி.