பொருளாதாரம் கடினமாயிருக்கும் காலங்களில் விவாகமின்றி இருத்தல்
“நான் 25 வயதாயிருந்தபோது விவாகம் செய்துகொள்ள விரும்பினேன்,” என்று மேற்கு ஆப்பிரிக்காவில் வசிக்கும் சுக்ஸ் என்பவர் கூறினார். “என்னுடைய வருங்கால துணைவியாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்த ஒரு பெண் என் மனதில் இருந்தாள், அவளுக்கும் என்மீது விருப்பம் இருந்தது. பணம் தான் பிரச்சினையாக இருந்தது. என் தந்தையும் மூத்த சகோதரனும் வேலையின்றி இருந்தனர், என் இளைய சகோதரர்களும் சகோதரிகளும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர். குடும்பத்தை ஆதரிப்பதற்கு எல்லாரும் என்பேரில் சார்ந்திருந்தனர். பின்பு, விஷயங்களை மோசமாக்கும்விதத்தில், என் பெற்றோர் நோய்வாய்ப்பட்டனர், இதனால் மருத்துவ செலவுகளைக் கவனிக்க கூடுதலான பணத்தைத் தேடவேண்டியதாயிருந்தது.”
யெகோவாவின் சாட்சியாக இருந்த சுக்ஸ், மனைவியை ஆதரிக்கமுடியாத நிலையில் விவாகம் செய்துகொள்ள விரும்பவில்லை. 1 தீமோத்தேயு 5:8-ல் உள்ள பவுலின் வார்த்தைகளைக் குறித்து அவர் கவனமுள்ளவராய் இருந்தார்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”
“நான் கடினமாக உழைத்தேன், ஆனால் பணம் ஒருபோதும் போதுமானதாயிருந்ததில்லை,” என்று சுக்ஸ் தொடர்ந்து கூறினார். “அதன் காரணமாக எங்களுடைய விவாகத் திட்டங்கள் திரும்பத்திரும்ப தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே சென்றன. வேறு ஒருவர் அப்பெண்ணின் தந்தையை அணுகி அவளை விவாகம் செய்துகொள்ளக் கேட்டதாக நான் அந்தப் பெண்ணிடமிருந்து இறுதியில் ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்டேன். அவளுடைய தந்தை ஒப்புக்கொண்டார். அவளுடைய கடிதம் வந்து சிலநாட்களுக்குப் பிறகு, அக்குடும்பத்தார் நிச்சயதார்த்த வைபவத்தை வைத்தனர்.”
சுக்ஸைப் போன்று அநேக கிறிஸ்தவ ஆண்கள் தங்கள் விவாகத் திட்டங்கள் மோசமான பொருளாதார நிலைமைகள் காரணமாக முறிவடைந்து போவதையோ அல்லது காலதாமதமாவதையோ பார்த்திருக்கின்றனர். அநேக தேசங்களில் உயரிய பணவீக்கம் உள்ளது. உதாரணமாக, ஒரு மத்திய ஆப்பிரிக்க தேசத்தில், ஒரு வருடத்தில் விலைகள் 8,319 சதவீதம் உயர்ந்தன! சில தேசங்களில் வேலைகள் கிடைப்பதற்கு கடினமாய் உள்ளன. வழக்கமாகவே ஊதியங்கள் அதிகக் குறைவாக இருப்பதால், ஒரு மனிதன் தன்னையும் தன் மனைவியையும் பிள்ளைகளையும் காப்பாற்றிக்கொள்வது கடினமாய் இருக்கிறது. நைஜீரியாவில் உள்ள ஒரு இளம் மனிதன் ஒரு தொழிற்சாலையில் முழு-நேர வேலை செய்து ஒரு மாதத்துக்கு 17 டாலர் மட்டுமே வருமானமாக பெற்றதாகக் கூறி வருந்தினார்—இது வேலைக்குச் சென்று வருவதற்கு ஒரு மாதத்துக்குரிய பஸ் கட்டணத்துக்கும் குறைவாகவே இருந்தது!
பொருளாதார கஷ்டங்கள் தங்கள் விவாகத் திட்டங்களைக் குலைத்துப்போடுவதாக விவாகமாகாத அநேக கிறிஸ்தவப் பெண்களும்கூட காண்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்ப அங்கத்தினர்களைக் காப்பாற்றுவதற்கு வேலை செய்யவேண்டியிருக்கிறது. இந்நிலையைப் பார்த்து சில விவாகமாகாத ஆண்கள், இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளின்கீழ் விவாகம் செய்துகொள்ளும் மனிதன் தன் மனைவியை மட்டுமல்லாமல் அவள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்குப் போதுமானதை சம்பாதிக்கவேண்டும் என்பதை உணர்ந்து விவாகம் செய்துகொள்ளத் தயங்குகின்றனர். ஐஒ என்ற ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரி தன்னையும், தன் தாயையும், தன் இளைய சகோதரர்களையும் சகோதரிகளையும் காப்பாற்றுவதற்காகப் போராடுகிறாள். “விவாகம் செய்துகொள்ள வேண்டும் என்று எனக்கு விருப்பம், ஆனால் என்னை விவாகம் செய்ய வருபவர்கள் என்னுடைய அதிக பொருளாதார உத்தரவாதங்களைக் கண்டு ஓடிவிடுகின்றனர்” என்று அவள் வருந்துகிறாள்.
பணசம்பந்தமான கஷ்டங்கள் இருந்தபோதிலும், விவாகம் செய்து பிள்ளைகளைக் கொண்டிருக்கும்படி உறவினர்களாலும் மற்றவர்களாலும் விவாகமாகாத அநேக கிறிஸ்தவர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். சிலசமயங்களில் இந்த அழுத்தம் கேலிசெய்யும் வடிவை எடுத்துக்கொள்கிறது. உதாரணமாக, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பெரியவர் ஒருவருக்கு வாழ்த்துதல் கூறும்போது, அவருடைய அல்லது அவளுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடைய நலனைக் குறித்து விசாரிப்பது வழக்கமாயிருக்கிறது. சில சமயங்களில் அப்படிப்பட்ட வாழ்த்துதல்கள் விவாகமாகாத நபர்களை ஏளனம் செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 45 முதல் 49 வயதாயிருக்கும் ஜான் சொல்கிறார்: “ஜனங்கள் கேலிசெய்து, ‘உங்கள் மனைவி எப்படி இருக்கிறார்கள்?’ என்று கேட்டால், ‘அவர்கள் வருவார்கள்’ என்று நான் பதிலளிப்பேன். உண்மை என்னவெனில், ஒரு மனைவியை வைத்து ஆதரிக்க என்னால் முடியாதிருக்கையில், நான் எப்படி அவளைப் பெறமுடியும்?”
ஜானுக்கும் அவரைப் போன்ற எண்ணற்ற மற்றவர்களுக்கும் உள்ள நிலைமை யொருபா மக்களின் பழமொழியில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது: “முன்யோசனையின்றி விவாகம் செய்துகொள்வது பெருமையடித்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயமல்ல; குடும்பத்தை ஆதரிப்பதுதான் பிரச்சினை.”
உங்களுடைய நிலைமையை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
நாம் அதிகமாக விரும்பும் ஏதோவொன்று கிடைக்காவிட்டால் வேதனையடைவது அதிக சுலபமானது. நீதிமொழிகள் 13:12 சொல்கிறது: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்.” நீங்கள் விவாகம் செய்துகொள்ள அதிகமாக விரும்பி, ஆனால் பணக்கஷ்டத்தினால் செய்யமுடியாத நிலையில் இருந்தால் நீங்கள் ஒருவேளை இவ்வாறு தான் உணருவீர்கள். ‘காமத்தால் தீய்வது’ என்று அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்திருக்கும் நிலைமையில் உள்ளவர்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், இது விசேஷமாக உண்மையாயிருக்கக்கூடும்.—1 கொரிந்தியர் 7:9, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.
பிரச்சினைகளை சமாளிப்பது சுலபமானதாய் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதைச் சகித்துக்கொண்டு, உங்களுடைய நிலைமையில் மகிழ்ச்சியும்கூட காண்பதற்கு நீங்கள் சில காரியங்களைச் செய்யலாம். எதிர்பார்க்கப்படும் காரியம் காலங்கடத்தப்படும்போது விளையும் ஏமாற்றத்தை மேற்கொள்வதற்கு உங்களுக்கு உதவிட விவாகமாகாத மனிதனாக இருந்த இயேசு கிறிஸ்து ஒரு நடைமுறையான பைபிள் நியமத்தைக் கொடுத்தார். அவர் சொன்னார்: “பெறுவதினும் தருவதே இன்பம்.”—அப்போஸ்தலர் பணி 20:35, கத்.பை.
நீங்கள் உங்கள் குடும்பத்துக்கும் சபையில் இருக்கும் மற்றவர்களுக்கும் நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம் இதை பொருத்தலாம். நீங்கள் ஒருவேளை கிறிஸ்தவ ஊழியத்திலும்கூட உங்கள் கிரியைகளை அதிகரித்துக்கொள்ளலாம். சுயநலமற்ற கொடுத்தலில் நீங்கள் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டால், நீங்கள் ‘சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவர்களாயுமிருந்து தங்கள் இருதயத்தில் தீர்மானிக்கிறவர்களாக’ ஆகிவிடுவதை காண்பீர்கள்.—1 கொரிந்தியர் 7:37.
மணமாகாத நிலையிலிருந்த மற்றொரு மனிதனாகிய அப்போஸ்தலனாகிய பவுல் இந்த உதவியளிக்கும் புத்திமதியை எழுதினார்: “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 5:15, 16) விவாகமாகாத அநேக கிறிஸ்தவர்கள், ஜெபிப்பது, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது, கிறிஸ்தவ கூட்டங்களில் பங்குகொள்வது ஆகியவற்றின் மூலம் யெகோவாவிடம் நெருங்கிச் சேருவதற்கு தங்கள் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் ‘தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்’ பெற்றிருக்கின்றனர். (மத்தேயு 11:28-30) இதை நீங்கள் செய்தீர்களென்றால், பொருளாதாரம் கடினமாயிருக்கும் நிலைமையை நீங்கள் அதிக வெற்றிகரமாக சமாளிக்க உங்களால் முடியும். அது நீங்கள் இன்னும் கூடுதலான ஆவிக்குரியத்தன்மையை வெளிக்காட்டவும்கூட உங்களுக்கு உதவும், நீங்கள் நாளடைவில் விவாகம் செய்துகொண்டால் அது உங்களை ஒரு மேம்பட்ட கணவனாக அல்லது மனைவியாக ஆக்கும்.
யெகோவா தம்மை சேவிப்பவர்கள் அனைவர் மேலும் அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் அவர் நன்றாக அறிந்திருக்கிறார். நம்முடைய அன்பான பரலோகத் தகப்பன் முடிவில் உங்களுக்கு ஆவிக்குரியப் பிரகாரமாகவும் உணர்ச்சிப்பிரகாரமாகவும் எது மிகச் சிறந்தது என்பதையும்கூட அறிந்திருக்கிறார். உங்களுடைய அன்றாடக வாழ்க்கையில் அவருடைய வார்த்தையின் நியமங்களை நீங்கள் பொறுமையோடு பொருத்தினால், அவர் அவருடைய உரியகாலத்தில் விடுதலையைக் கொண்டுவருவார் என்று நிச்சயமாயிருக்கலாம். உங்களுக்கு நித்திய நன்மையைக் கொண்டுவரும்விதத்தில் உங்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வார். பைபிள் இவ்வாறு உறுதியளிக்கிறது: “உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.”—சங்கீதம் 84:11.
விஷயங்களின் பயனுள்ள அம்சத்தைப் பாருங்கள்
விவாகமாகாமல் இருப்பதில் திட்டவட்டமான நன்மைகள் இருக்கின்றன என்பதையும்கூட மனதில் வையுங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “தன் கன்னிமையை விவாகத்தில் கொடுப்பவன் நல்லதை செய்கிறான். ஆனால் அதை விவாகத்தில் கொடாதவனோ, அதைவிட நன்றாய் செய்கிறான்.”—1 கொரிந்தியர் 7:38, NW.
விவாகம் செய்துகொள்வதைக் காட்டிலும் விவாகமின்றி இருப்பது ஏன் “அதைவிட நன்றாய்” செய்வதாய் இருக்கிறது? பவுல் விளக்கினார்: “விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.”—1 கொரிந்தியர் 7:32-34.
வேறு வார்த்தைகளில் சொன்னால், விவாகமான கிறிஸ்தவர்கள் தங்கள் துணைவரின் தேவைகள், விருப்பங்கள், வெறுப்புகள் ஆகியவற்றைக் குறித்து சரியாகவே கவலையுள்ளவர்களாய் இருக்கின்றனர். ஆனால் விவாகமாகாத கிறிஸ்தவர்கள் யெகோவாவின் சேவையில் கவனத்தை அதிகமாக ஒருமுகப்படுத்தலாம். விவாகமாகியிருப்பவர்களோடு ஒப்பிடுகையில், விவாகமாகாத கிறிஸ்தவர்கள் “கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்க” ஒரு மேலான நிலையில் இருக்கின்றனர்.—1 கொரிந்தியர் 7:35.
விவாகமாகாத கிறிஸ்தவனுக்குக் கவனச்சிதறல்கள் இல்லை என்று பவுல் சொல்லவில்லை. பொருளாதார பிரச்சினைகளால் நீங்கள் பாரமடைந்திருப்பீர்களென்றால், உங்களுடைய ஊழியத்திலிருந்து உங்களைத் திசைதிருப்புவதற்காக அநேக காரியங்கள் அச்சுறுத்துவதாக நீங்கள் உணரலாம். இருப்பினும், கடவுளைச் சேவிப்பதற்குள்ள தனிப்பட்ட சுயாதீனம், விவாகமாகியிருப்பவர்களைக் காட்டிலும் விவாகமாகாத ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பொதுவாக அதிகமாக இருக்கிறது.
விவாகமின்றி இருத்தலை மேலான வாழ்க்கைப்போக்காக சிபாரிசு செய்தபோதிலும், விவாகம் செய்துகொள்வது தவறு என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லவில்லை. அவர் எழுதினார்: “நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல.” இருப்பினும் அவர் எச்சரித்தார்: “அப்படிப்பட்டவர்கள் [விவாகமாகிறவர்கள்] சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்.”—1 கொரிந்தியர் 7:28.
அவர் அதன் மூலம் எதை அர்த்தப்படுத்தினார்? விவாகம் சில கவலைகளைக் கொண்டுவருகிறது. பொருளாதாரம் கடினமாயிருக்கும் காலங்களில் இப்படிப்பட்ட உபத்திரவம், ஒரு தகப்பன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு உணவளித்து காப்பாற்றுவதைக் குறித்த கவலையை உட்படுத்தலாம். வியாதியும்கூட கூடுதலான பணம் மற்றும் உணர்ச்சி சம்பந்தமான பாரங்களைக் குடும்பத்துக்குக் கொண்டுவரலாம்.
எனவே உங்களுடைய நிலைமை நீங்கள் விரும்புவதைப்போன்று இல்லாவிட்டாலும்கூட, நீங்கள் விவாகம்செய்து பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதைக்காட்டிலும் மேலான நிலையில் இப்போது இருக்கக்கூடும். நீங்கள் இப்போது எதிர்ப்படும் கஷ்டங்கள் தற்காலிகமானவை; கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையில் அவை ஒழிந்துபோகும்—அவற்றில் சில அதற்கு முன்பேயும்கூட அழிந்துபோகும்.—சங்கீதம் 145:16-ஐ ஒப்பிடுக.
நீங்கள் உங்கள் ஊழியத்தை விரிவாக்கக்கூடுமா?
எல்லாருமே அவ்வாறு செய்யமுடியாவிட்டாலும்கூட, சிலர் பணக்கஷ்டங்களின் மத்தியிலும் முழு-நேர ஊழியத்தில் சேர்ந்துகொள்ள முடிந்திருக்கிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த சுக்ஸ் என்பவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு ஸ்டேஷனரி பொருட்களை வாங்கி விற்பனை செய்தார். அவருடைய விவாகத் திட்டங்கள் தோல்வியடைந்த அதே சமயத்திலேயே, உவாட்ச்டவர் சொஸைட்டியின் உள்ளூர் கிளைக்காரியாலயத்தில் சிறிது காலத்துக்கு கட்டட வேலை செய்யும்படி ஓர் அழைப்பு கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். அவருடைய மூத்த சகோதரர் பணத்தைக் குறித்துக் கவலைப்பட்டு அவர் அங்கு செல்வதற்கு தடைசெய்தார். ஆனால் சுக்ஸோ, ஸ்டேஷனரி கடை ஸ்தாபிப்பதற்கு யெகோவா தனக்கு உதவி செய்ததால், ராஜ்ய அக்கறைகளை முதலாவது வைத்து கடவுளுடைய காப்பாற்றும் வல்லமையின் பேரில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று காரணம் காட்டினார். (மத்தேயு 6:25-34) அது தவிர, அது வெறும் மூன்று-மாத காலப்பகுதிக்கே என்று அவர் எண்ணினார்.
சுக்ஸ் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த வியாபாரத்தை தன் சகோதரனிடம் ஒப்படைத்தார். ஆறு வருடங்களுக்குப் பிறகு, சுக்ஸ் முழு-நேர சேவையில் இன்னும் தொடர்ந்து இருக்கிறார், கிறிஸ்தவ சபையில் மூப்பராக இருக்கிறார், விவாகம் செய்துகொள்வதற்கு பண விஷயத்தில் தயாராக இருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் சம்பவங்கள் நிகழ்ந்த விதத்தைக் குறித்து அவர் வருத்தப்படுகிறாரா? சுக்ஸ் சொல்கிறார்: “நான் விரும்பிய சமயத்தில் என்னால் விவாகம் செய்துகொள்ளமுடியாமல் போனபோது நான் ஏமாற்றமடைந்தேன், ஆனால் விஷயங்கள் உண்மையில் என்னுடைய நன்மைக்கே நடந்தன. நான் என் சேவையில் அநேக சந்தோஷங்களையும் சிலாக்கியங்களையும் அனுபவித்திருக்கிறேன், அந்தச் சமயத்திலேயே விவாகம்செய்து ஒரு குடும்பத்தைக் கொண்டிருந்திருந்தால் நான் அவற்றை அனுபவித்திருக்கவே மாட்டேன்.”
எதிர்காலத்திற்கான பாதுகாப்பு
கடினமான காலங்களில் விவாகத்தினால் வரும் பாதுகாப்பை, எதிர்காலத்தில் வரும் பணக்கஷ்டங்களுக்கு ஒரு பாதுகாப்பாக அநேகர் நாடுகின்றனர். சில தேசங்கள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டு முதியோருக்கு சிறிதளவு உதவியையே கொடுக்கின்றன அல்லது எந்த உதவியுமே கொடுப்பதில்லை. ஆகையால் பெற்றோர் தங்கள் குடும்பங்களின்மீது பொதுவாக சார்ந்திருக்கின்றனர், விசேஷமாக தங்களை வயதான காலத்தில் காப்பாற்ற வேண்டும் என்று தங்கள் பிள்ளைகள்மீது சார்ந்திருக்கின்றனர். அதன் காரணமாக விவாகமாகாத ஆண்களும் பெண்களும் அவர்களுடைய நிதிநிலை நிச்சயமற்றதாய் இருந்தாலும்கூட விவாகம்செய்துகொண்டு பிள்ளைகளைக் கொண்டிருக்கும்படியான அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
ஆனால் விவாகமும் குழந்தைகளைப் பெறுதலும் பாதுகாப்பை உத்தரவாதமளிப்பதில்லை. சில உலகப்பிரகாரமான பிள்ளைகள் தங்கள் வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ள மனமில்லாதவர்களாயிருக்கின்றனர், வேறு சிலர் கவனித்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர், இன்னும் சிலர் தங்களுடைய பெற்றோர் இறப்பதற்கு முன்பே இறந்துவிடுகின்றனர். கிறிஸ்தவர்கள், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்ற கடவுளுடைய வாக்கை கவனத்தில் வைத்தவர்களாய், பாதுகாப்புக்காக முக்கியமாய் அவரை நோக்கியிருக்கின்றனர்.—எபிரெயர் 13:5.
யெகோவாவை முழு-நேரமாக சேவிப்பதற்கு விவாகம் செய்துகொள்வதைத் தாமதப்படுத்தியவர்கள் கைவிடப்பட்டதில்லை. கிறிஸ்டியானா என்ற பெண்ணுக்கு வயது 32, அவர்கள் விவாகம் செய்துகொள்ளவில்லை. அவர்கள் கடந்த ஒன்பது வருடங்களாக நைஜீரியாவில் ஒழுங்கான பயனியராக சேவித்திருக்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள்: “தம் ஊழியர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை என்று உறுதியளிக்கும் யெகோவாவில் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன், அவருடைய வாக்குறுதியே என் உறுதியான நம்பிக்கை. யெகோவா என்னை ஆவிக்குரியப்பிரகாரமாகவும் பொருள்சம்பந்தமாகவும் கவனித்துக்கொள்கிறார். அவர் தாராள மனப்பான்மையுள்ள தகப்பனாக நிரூபித்திருக்கிறார். உதாரணமாக, சாட்சிகளுக்குத் தேவை அதிகமாயிருக்கும் ஒரு பிராந்தியத்தில் நான் பயனியர் செய்ய சென்றேன். வசதிகள் குறைவாக இருந்தபோதிலும், நான் அதைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். நச்சுக் காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, நான் முன்பிருந்த சபையில் உள்ள சகோதரர்கள் என்னைச் சந்தித்து கவனித்துக்கொண்டார்கள்.
“நான் முழு-நேர சேவையில் பெரும் திருப்தியடைகிறேன். இப்பிரபஞ்சத்தின் படைப்பாளரோடும் உலகமுழுவதிலுமுள்ள சகோதரர்களோடும் சகோதரிகளோடும் சேர்ந்து வேலைசெய்வதை நான் ஒரு மகத்தான சிலாக்கியமாகக் கருதுகிறேன். அநேக இளைஞர்கள் தங்களைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் காரியங்களின் காரணமாக ஏமாற்றமடைந்தும் நம்பிக்கையின்றியும் இருப்பதை காண்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாயிருக்கிறது; நான் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கிறேன். யெகோவாவோடு நெருங்கியிருப்பதே இன்று நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு என்பதை நான் அறிந்திருக்கிறேன்.”
நீங்கள் விவாகம் செய்துகொள்ள அதிக ஆவலாயிருந்தும் பொருளாதார கஷ்டத்தின் காரணமாக செய்துகொள்ள முடியவில்லையென்றால், தைரியம் கொள்ளுங்கள். நீங்கள் தனிமையாக இல்லை. இதைப் போன்ற சோதனைகளை யெகோவாவின் உதவியோடு சகித்துக்கொண்டிருக்கும் அநேகர் உள்ளனர். மற்றவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்வதில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலமும் உங்களுடைய ஆவிக்குரியத்தன்மையை மேம்படுத்திக்கொள்வதன் மூலமும் உங்களுடைய சூழ்நிலைமையை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். கடவுளிடம் நெருங்கி சேருங்கள்; அவர் உங்களுக்கு உதவி செய்வார், ஏனென்றால் அவர் உண்மையிலேயே உங்கள்மீது அக்கறையுள்ளவராய் இருக்கிறார்.—1 பேதுரு 5:7.