இயேசுவைப் பற்றிய சந்தேகங்கள் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளனவா?
நாசரேத்து ஊரைச் சேர்ந்த இயேசு உண்மையிலேயே அற்புதங்களை நடப்பித்துக் காண்பித்தாரா? அவருடைய சீஷர்கள் அறிவித்தபடி அவர் உண்மையிலேயே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டாரா? அவர் உண்மையிலேயே வாழ்ந்தாரா? நம்முடைய நவீன சகாப்தத்தில், அநேகர் அப்படிப்பட்ட கேள்விகளுக்கு நிச்சயத்தோடு பதிலளிக்க முடியாதவர்களாய் இருப்பதாகத் தோன்றுகிறது. ஏன்? ஏனென்றால் அவர்கள் இயேசுவைக் குறித்து சந்தேகங்களை மனதில் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர், ஏதோவொன்று உண்மையா அல்லது கூடியகாரியமா என்ற அறியாமையிலிருந்து வரும் நிச்சயமற்ற உணர்ச்சிகளே சந்தேகங்கள். ஆனால் இயேசுவைப் பற்றிய நிச்சயமற்ற உணர்ச்சிகள் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளனவா? நாம் அதைப் பார்ப்போம்.
இயேசுவைப் பற்றிய சந்தேகங்கள் எவ்வாறு விதைக்கப்பட்டன
பிற்பட்ட 19-ஆம் நூற்றாண்டு மற்றும் ஆரம்ப 20-ஆம் நூற்றாண்டில் இருந்த சில ஜெர்மன் இறையியல் பேராசிரியர்கள் இயேசுவை “பண்டைய சர்ச்சின் போலியான நபர்” என்று சித்தரித்தனர். அவர்கள் இயேசுவின் வரலாற்றுப்பூர்வமான வாய்மையை மறுத்துப் பேசியது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் கல்விமான்களின் மத்தியில் வாக்குவாதத்துக்கு வழிநடத்தியது, அது அந்தச் சமயத்தில் இருந்த பொதுமக்களைச் சென்றெட்டியது, இன்றும்கூட அது செல்வாக்கு பெற்றுள்ளது. உதாரணமாக, ஜெர்மனியில் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில், பேட்டி காணப்பட்டவர்களில் 3 சதவீதத்தினர் இயேசு “வாழவே இல்லை” என்றும் “அப்போஸ்தலர்கள் அவரை கற்பனையாக உருவாக்கினர்” என்றும் நம்புவதாகக் கூறினர். ஆம், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இயேசுவைப் பற்றி விதைக்கப்பட்ட சந்தேக விதைகள் இன்றுங்கூட மக்களின் இருதயங்களில் செழிப்பாக இருக்கின்றன.
இயேசு “கற்பனையாக உருவாக்கப்பட்டவர்” என்ற முடிவு ஏன் சரியென மெய்ப்பிக்கப்பட முடியாது? பைபிள் கல்விமான் உல்ஃப்காங் டிரில்லிங் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இயேசு உண்மையிலேயே வாழ்ந்தாரா, அல்லது வேறு வார்த்தைகளில் சொன்னால் அவர் சரித்திரப்பூர்வமான ஆளா அல்லது கட்டுக்கதையா என்ற வாக்குவாதம் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கேள்வி திறம்பட்டவிதத்தில் தீர்க்கப்பட்டது, கருத்தார்ந்தவிதத்தில் சிந்திக்கும் ஆட்கள் அப்பிரச்சினையை கல்வி சம்பந்தமான பிரச்சினையாக இனிமேலும் காணாதவிதத்தில் அது தீர்க்கப்பட்டது.” இருந்தபோதிலும், இயேசு உண்மையில் வாழ்ந்தாரா என்று சிலர் இன்னும் சந்தேகிக்கின்றனர். அதன் காரணமாக, ஒருவர் எவ்வாறு இயேசுவின் வரலாற்று வாய்மையை நிலைநாட்டலாம் என்பதையும் அவரைக் குறித்த மற்ற சந்தேகங்களை நீக்கலாம் என்பதையும் நாம் இப்போது ஆராயலாம்.
சந்தேகங்களை நீக்கிவிடக்கூடிய சான்றுகள்
ஒரு வெறுக்கத்தக்க குற்றவாளியாக இயேசுவை இழிவாக கொலைசெய்தது “இயேசுவின் வரலாற்று வாய்மையை எதிர்ப்பவர்களுக்கு எதிராக அதிக நம்பவைக்கும் தர்க்கத்தை” அளிக்கிறது என்று டிரில்லிங் குறிப்பிடுகிறார். ஏன்? ஏனென்றால் அக்கொலை “யூதர்கள் மத்தியிலும் யூதரல்லாதவர்கள் மத்தியிலும் புதிய விசுவாசம் பரவுவதற்கு இடையூறாக இருந்தது, தடையும்கூட செய்தது.” (1 கொரிந்தியர் 1:23-ஐ ஒப்பிடுக.) மேசியாவாகிய இயேசு கொலைசெய்யப்பட்டது யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் அவ்வளவு அவமரியாதையான நிந்தையாக இருந்தபடியால், அது நிச்சயமாகவே அப்போஸ்தலர்களின் கற்பனையால் உருவாக்கப்பட்டதாக இருந்திருக்க முடியாது! கூடுதலாக, இயேசுவின் மரணம் ஒரு சரித்திரப்பூர்வ சம்பவம் என்பது நான்கு சுவிசேஷங்களினால் மட்டுமன்றி, ரோம எழுத்தாளராகிய டசிட்டஸ் என்பவராலும் மற்றும் தல்மூடிலும்கூட உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.a
இயேசுவின் வாழ்க்கையின்போது நடந்த மற்ற சம்பவங்களும்கூட சுவிசேஷங்களின் நம்பத்தக்கத்தன்மைக்கு, அவரைப்பற்றி அவை நமக்குக் கூறுபவைகளுக்கு அகச்சான்றுகளாகக் கருதப்படுகின்றன. உதாரணமாக, அவர் முக்கியத்துவம் இல்லாத ஓர் ஊராகிய நாசரேத்திலிருந்து வந்ததாக இயேசுவைப் பின்பற்றியவர்கள் கதை கட்டியிருப்பார்களா? அவர் நம்பிக்கைக்குரிய தோழனான யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டதை அவர்கள் கற்பனையாக உருவாக்கக்கூடிய சாத்தியம் உள்ளதா? மீதமாயிருந்த சீஷர்கள் இயேசுவை அப்படிப்பட்ட கோழைத்தனமான முறையில் கைவிட்டதைக் குறித்து அவர்கள் ஒரு கற்பனைக் கதையை உருவாக்கியிருப்பார்கள் என்று நினைப்பது உண்மையாய்த் தோன்றுகிறதா? தீங்குண்டாக்கக்கூடிய தன்மையுள்ள இந்த விவரங்களை கற்பனை செய்து உருவாக்கி அவற்றை மிகவும் பரவலாக சீஷர்கள் அறிவித்திருப்பார்கள் என்பது நிச்சயமாகவே முரண்பாடானதாய் உள்ளது! கூடுதலாக, இயேசு உபயோகித்த போதனா கலை ஒரு தனிச்சிறப்புவாய்ந்த பாணியில் அமைந்திருந்தது. யூதர்களுடைய முதல் நூற்றாண்டு இலக்கியத்தில் அவருடைய உவமைகளுக்கு ஒப்பான உவமைகள் இல்லை. மலைப்பிரசங்கம் போன்ற தலைசிறந்த படைப்பை எந்தப் பெயர் அறியப்படாத ஒருவர் “கற்பனையாக” உருவாக்கியிருக்க முடியும்? சுவிசேஷங்கள் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய அறிக்கைகள் என இந்தத் தர்க்கங்கள் அனைத்தும் சுவிசேஷங்களின் நம்பகத்தன்மையை சான்றுகாட்டி உறுதிப்படுத்துகின்றன.
இயேசுவின் சரித்திரப்பூர்வமான வாய்மைக்கு புறச்சான்றுகளும்கூட இருக்கின்றன. அவர் திட்டவட்டமான, திருத்தமான விவரங்கள் அடங்கிய, சரித்திரப்பூர்வமான பின்னணியில் வாழ்ந்துகொண்டிருந்தார் என நான்கு சுவிசேஷங்களும் சித்தரித்துக் காட்டுகின்றன. பெத்லகேம், கலிலேயா போன்ற இடங்கள்; பொந்தியு பிலாத்து, பரிசேயர்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நபர்களும் தொகுதிகளும்; யூதர்களின் பழக்கவழக்கங்களும் மற்ற தனித்தன்மை வாய்ந்த குணங்களும் வெறுமனே கற்பனை செய்து உருவாக்கப்படவில்லை. அவை முதல் நூற்றாண்டில் இருந்த வாழ்க்கை அமைப்பின் பாகமாக இருந்தன, அவை பைபிள்-அல்லாத ஊற்றுமூலங்கள் மூலமும் புதைபொருள் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு இயேசு ஒரு சரித்திரப்பூர்வமான நபர் என்பதற்கு அகம், புறம் ஆகிய இரண்டுவகையான நம்பவைக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன. என்றபோதிலும், பெரும்பாலான ஜனங்கள் அவர் சம்பந்தப்பட்ட அற்புதங்களைப் பற்றி சந்தேகங்களை மனதில் வைத்திருக்கின்றனர். உண்மையில், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆய்வின்படி, சர்ச்சுக்குச் செல்லும் ஜெர்மானியர்களில் சிறுபான்மையரே இயேசுவின் அற்புதங்களும் அவருடைய உயிர்த்தெழுதலும் “உண்மையில் நடைபெற்றதாக” உறுதியாக நம்புகின்றனர். இயேசுவின் அற்புதங்களும் அவருடைய உயிர்த்தெழுதலும் பற்றிய சந்தேகங்கள் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளனவா?
இயேசுவின் அற்புதங்களை ஏன் சிலர் சந்தேகிக்கின்றனர்
இயேசு வியாதியாயிருந்தவர்களை அற்புதமாக சுகப்படுத்தினார், இறந்தோரை உயிர்த்தெழுப்பினார், பிசாசுகளைத் துரத்தினார் என்று மத்தேயு 9:18-36 அறிக்கை செய்கிறது. பேராசிரியர் ஹூகோ ஸ்டாடிங்கர் என்ற சரித்திர ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இந்த அசாதாரணமான அறிக்கைகள் உயிரூட்டும் கற்பனையால் உருவாக்கப்பட்டவை என்பது நம்பவே முடியாததாய் இருக்கிறது, சரித்திரத்தின் நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் அது கூடாதகாரியமாயிருக்கிறது.” ஏன்? ஏனென்றால் இந்த அற்புதங்களைக் கண்கூடாகக் கண்ட சாட்சிகள் உயிரோடிருந்த சமயத்திலேயே முற்காலத்திய சுவிசேஷங்கள் எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது! யூத எதிரிகள் “இயேசு அசாதாரணமான செயல்களை நடப்பித்துக் காண்பித்தார் என்பதை ஒருபோதும் மறுக்கவேயில்லை,” என்று ஸ்டாடிங்கர் தொடர்ந்து சொல்வதிலிருந்து கூடுதலான சான்று காணப்படுகிறது. மற்ற எல்லா அத்தாட்சிகளையும் புறக்கணித்து விட்டு இந்தப் புற அத்தாட்சியை மட்டுமே நம்முடைய தீர்ப்புக்கு ஆதாரத்தை வைத்து நாம் இயேசுவின் அற்புதங்கள் நிச்சயமாகவே நம்முடைய நம்பிக்கைக்குத் தகுதியானவை எனக் காண்கிறோம்.—2 தீமோத்தேயு 3:16.
“இயேசு வியாதியாயிருந்த ஜனங்களை சுகப்படுத்தினார் என்று பெரும்பாலான ஜெர்மானியர்கள் நம்பி”னாலும்கூட, இந்த சுகமளிப்புகளுக்குப் பின்னாலிருந்த வல்லமையைக் குறித்து அநேகர் சந்தேகங்களை உடையவர்களாயிருக்கின்றனர். உதாரணமாக, இயேசு செய்துகாட்டிய சுகமளிப்புகள், மனவேதனையால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஆட்களின் மீது பாதிப்பை ஏற்படுத்தி, மன ஆற்றலால் தூண்டப்பட்டு தன்வயப்படுத்தும் வல்லமையின் விளைவாக இருந்தன என்று நன்கு-அறியப்பட்டிருந்த ஜெர்மன் இறையியல் பேராசிரியர் வெளிப்படையாக அறிவித்தார். இது ஒரு சரியான விளக்கமா?
பின்வரும் உதாரணங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள். இயேசு சூம்பின கையையுடைய ஒரு மனுஷனை சுகப்படுத்தியதாக மாற்கு 3:3-5 அறிக்கை செய்கிறது. ஆனால் சூம்பின கை மனவேதனையினால் ஏற்பட்ட விளைவா? நிச்சயமாகவே இல்லை. இதன் காரணமாக, இந்தச் சுகமளிப்பு மன ஆற்றலால் தூண்டப்பட்டு தன்வயப்படுத்தும் வல்லமையால் செய்யப்பட்டது என்று சொல்லமுடியாது. ஆகையால் அற்புதங்களை நடப்பித்துக் காண்பிப்பதற்கு இயேசுவுக்கு உதவியது எது? பேராசிரியர் ஸ்டாடிங்கர் ஒப்புக்கொள்கிறார்: “முழுவதும் செல்லுபடியாகும் சட்டங்கள் இல்லையென்றால், ஒருவர் கடவுளை முழுவதுமாக மறுக்கவில்லையென்றால், அப்போது மனிதனைக் காட்டிலும் அதிக வல்லமையுள்ள கடவுள் அசாதாரணமான காரியங்களைச் செய்யமுடியும் என்பதை ஒருவர் அப்படியே பொருத்தமற்றதென தள்ளிவிட முடியாது.” ஆம், உண்மையிலேயே ‘தேவனுடைய வல்லமையின்’ உதவியைக்கொண்டு இயேசு வியாதியாயிருந்த அநேகரை சொல்லர்த்தமாக சுகப்படுத்தினார். ஆகையால் அவருடைய அற்புதங்களின் உண்மைத்தன்மையைக் குறித்து சந்தேகிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.—லூக்கா 9:43; மத்தேயு 12:28.
எல்லா அற்புதங்களைக் காட்டிலும் மிகப்பெரிய அற்புதமாகிய இயேசுவின் உயிர்த்தெழுதல் நடைபெற்றது என்றால், சுவிசேஷங்களில் இருக்கும் மற்ற எல்லா அற்புதங்களும் “நிகழக்கூடியவை” என்று தி அமெரிக்கன் பீப்பிள்ஸ் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. இயேசு உண்மையிலேயே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டாரா?
இயேசு உயிர்த்தெழுந்ததைப் பற்றிய சந்தேகங்கள் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளனவா?
இயேசுவின் உயிர்த்தெழுதல் உண்மையில் நடைபெற்றது என்பதை ஆதரிக்கும் ஒரு பலமான சூழ்நிலைப் பொருத்தங்காட்டும் சான்றை முதலில் சிந்தித்துப் பாருங்கள்—காலியாக இருந்த அவருடைய கல்லறை. இயேசுவின் கல்லறை காலியாக இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை அவருடைய காலத்தில் வாழ்ந்தவர்களாலும், அவருடைய எதிரிகளாலுங்கூட மறுக்கப்படாததாக இருந்தது. (மத்தேயு 28:11-15) ஏமாற்றியிருந்தால் அது எளிதில் அம்பலமாகிவிட்டிருக்கும்! மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆராய்ச்சி நூல் சரியாகவே இந்த முடிவுக்கு வருகிறது: “‘அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்’ என்ற பைபிள் கூற்றைத் தவிர காலியாக இருந்த கல்லறைக்கு வேறு எந்த ஒப்புக்கொள்ளத்தக்க விளக்கமும் எந்தச் சமயத்திலும் கொடுக்கப்படவேயில்லை. (மத். 28:6).”
இயேசுவின் சொந்த சீஷர்கள் மட்டுமே அவர் உயிர்த்தெழுப்பப்பட்ட மேசியா என்று எல்லா இடங்களிலும் அறிவித்தனர் என்று சொல்லி சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது உண்மை. ஆனால் அவர்களுடைய செய்தியின் நம்பத்தக்கத்தன்மை சரித்திரப்பூர்வமான உண்மையில், விசேஷமாக இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில், ஆதாரம் கொண்டிருக்கவில்லையா? நிச்சயமாகவே. அப்போஸ்தலனாகிய பவுல் இந்தத் தொடர்பைக் குறித்து அறிந்திருந்தார். அவர் எழுதினார்: “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக் குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.”—1 கொரிந்தியர் 15:14, 15; ஒப்பிடுக: யோவான் 19:35; 21:24; எபிரெயர் 2:3.
இயேசு மரித்த பிறகு காட்சியளித்ததைக் குறித்து சாட்சி கொடுத்த மக்கள் முதல் நூற்றாண்டில் இருந்தனர், அவர்கள் நன்கு அறியப்பட்டும் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டவர்களுமாய் இருந்தனர். அவர்களுள் 12 அப்போஸ்தலர்களும் பவுலும், அவர்களோடுகூட 500-க்கும் மேற்பட்ட மற்ற கண்கூடாகக்கண்ட சாட்சிகளும் இருந்தனர்.b (1 கொரிந்தியர் 15:6) உண்மையற்றவனாய் ஆகிவிட்ட அப்போஸ்தலனாகிய யூதாஸுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட மத்தியா எப்படி தகுதிகளைப் பூர்த்திசெய்தார் என்பதற்கான காரணத்தையுங்கூட மனதில் வையுங்கள். இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றியும், அவர் சம்பந்தமாக அதற்கு முன்பு நடந்த சம்பவங்களைப் பற்றியும் மத்தியா சாட்சி கொடுக்கமுடிந்தது என்று அப்போஸ்தலர் 1:21-23 அறிக்கை செய்கிறது. இயேசுவின் வாழ்க்கையும் உயிர்த்தெழுதலும் மெய்யான சம்பவமாக இருந்ததற்குப் பதிலாக கற்பனைக் கதையாக இருந்திருந்தால், அவரை நியமனம் செய்வதற்கு அப்படிப்பட்ட தேவை நிச்சயமாகவே முழுவதும் பொருத்தமற்றதாய் இருந்திருக்கும்.
இயேசுவின் வாழ்க்கை, அற்புதங்கள், மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறித்து முதல் நூற்றாண்டில் இருந்த கண்கூடாகக்கண்ட சாட்சிகள் அநேகர் சாட்சிசொல்ல முடிந்ததால், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தடங்கல்கள் மத்தியிலும் கிறிஸ்தவ மதம் ரோமப் பேரரசு முழுவதும் விரைவாகப் பரவியது. அவரைப் பின்பற்றியவர்கள் அவருடைய உயிர்த்தெழுதலைப் பற்றியும், அதிலிருந்து தோன்றும் அடிப்படையான சத்தியத்தைப் பற்றியும் எல்லா இடங்களிலும் அறிவிப்பதற்காக பெருங்கஷ்டம், துன்புறுத்தல், மரணத்தையும்கூட சகித்துக்கொள்ள மனமுள்ளவர்களாய் இருந்தனர். எந்த அடிப்படையான சத்தியம்? அவருடைய உயிர்த்தெழுதல் கடவுளுடைய வல்லமையினால் மட்டுமே நடந்தேறியது என்ற சத்தியம். யெகோவா தேவன் ஏன் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பியிருந்தார்? அந்தக் கேள்விக்கான பதில் சரித்திரப்பூர்வமான இயேசு யார் என்பதைக் காண்பிக்கிறது.
பெந்தெகொஸ்தே நாள் அன்று, அப்போஸ்தலனாகிய பேதுரு எருசலேமில் வியப்படைந்திருந்த யூதர்களிடம் வெளிப்படையாக அறிவித்தார்: “இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்.” (அப்போஸ்தலர் 2:32-36) ஆம், யெகோவா தேவன் நாசரேத்து ஊரைச் சேர்ந்த இயேசுவை ‘ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்.’ கடவுளுடைய நோக்கத்தின் இந்த பாகத்தில் அவருடைய பங்கைக் குறித்த சந்தேகங்கள் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளனவா?
இயேசுவின் தற்போதைய பங்கைக் குறித்து ஏன் சந்தேகிக்க வேண்டும்?
இயேசுவின் பங்கு மற்றும் அடையாளத்தைப் பற்றிய எல்லா சந்தேகங்களையும் எவ்வாறு மறைந்துபோகும்படி செய்யலாம்? அவர் தெளிவாகவே ஒரு மெய்யான தீர்க்கதரிசியாக இருந்தார் என்ற உண்மையின் மூலம். இன்று நாம் காணும் போர்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், குற்றச்செயல், அன்பில்லாமை ஆகியவற்றை அவர் முன்னறிவித்தார். கூடுதலாக அவர் முன்னறிவித்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:3-14) இயேசுவே உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்து என்றும் ‘சத்துருக்கள் மத்தியில்’ காணக்கூடாதவிதத்தில் ஆட்சிசெய்து கொண்டிருக்கிறார் என்றும், விரைவில் அவர் கடவுளுடைய புதிய உலகைக் கொண்டு வருவார் என்றும் இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்கள் காண்பிக்கின்றன.—சங்கீதம் 110:1, 2; தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:1-5.
முன்னொருபோதுமிராத அளவுக்கு இப்போது மீமானிட ஞானத்தையுடைய இரட்சகர் ஒருவர் மனிதவர்க்கத்துக்கு அவசரமாகத் தேவைப்படுகிறார். மனிதவர்க்கத்தை பாதுகாப்பதற்கென்று சரியாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பவர் இயேசுவே என்பதை நாம் ஏன் சந்தேகிக்க வேண்டும்? இயேசுவின் கவர்ச்சியூட்டும் அற்புதங்களையும் உயிர்த்தெழுதலையும் கண்கூடாகக் கண்ட சாட்சியாக இருந்த யோவான் பின்வருமாறு அறிவித்தார்: “பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.” (1 யோவான் 4:14; ஒப்பிடுக: யோவான் 4:42.) இயேசு உயிரோடிருந்தது, அவருடைய அற்புதங்கள், மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறித்து சந்தேகிப்பதற்கு நியாயமான காரணங்கள் நம்மிடம் இல்லாதது போல, யெகோவா தேவன் அவரை சட்டப்பூர்வமான ராஜாவாக தம்முடைய வலதுபாரிசத்தில் சிங்காசனத்தில் அமர்த்தியிருக்கிறார் என்பதை சந்தேகிப்பதற்கும்கூட நம்மிடம் காரணம் இல்லை. நாசரேத்து ஊரைச் சேர்ந்த இயேசுவே கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாகவும் ‘உலகத்தின் ரட்சகராகவும்’ இருக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை.—மத்தேயு 6:10.
[அடிக்குறிப்புகள்]
a தல்மூடில் இயேசுவைப் பற்றிய சர்ச்சைக்குரிய குறிப்புரைகள் உண்மையானவை என்று சில குறிப்பிட்ட கல்விமான்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. மறுபட்சத்தில், ஃபிளேவியஸ் ஜோஸிஃபஸ் குறிப்பிட்ட ஒரு விஷயம், டசிட்டஸ், சுட்டோனியஸ், பிளைனி இளையவன், ஆகியோர் இயேசுவைப் பற்றி கூறிய குறிப்புகள் இயேசு சரித்திரப்பூர்வமான நபர் என்பதற்கு அத்தாட்சியாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
b உயிர்த்தெழுப்பப்பட்டிருந்த இயேசு ஒரு சமயம் தம் சீஷர்களோடு மீன் சாப்பிட்டார், அப்படியென்றால் இன்று சிலர் உரிமைபாராட்டிக்கொள்வது போல் அவர் காட்சியளித்தது வெறும் ஒரு தரிசனம் அல்ல என்பதை அது நிரூபிக்கிறது.—லூக்கா 24:36-43.