அவபக்தியான பாரம்பரியங்களை எதிர்த்து நில்லுங்கள்!
“ச த்தியம் உங்களை விடுதலையாக்கும்,” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (யோவான் 8:32) ஆம், கிறிஸ்தவ மதம் ஆட்களை விடுதலை செய்கிறது—மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாயிருப்பதிலிருந்து விடுதலை செய்கிறது, பொய்க் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றை நம்பிக்கொண்டிருப்பதிலிருந்து விடுதலை செய்கிறது, இழிவான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாயிருப்பதிலிருந்து விடுதலை செய்கிறது.
என்றபோதிலும், பண்டைய காலங்களில் இருந்தது போல, கிறிஸ்தவர்கள் இன்று தங்கள் முந்தைய பாரம்பரியங்களுக்குத் திரும்புவதற்கு அவ்வப்போது அழுத்தங்களை எதிர்ப்படுகின்றனர். (கலாத்தியர் 4:9, 10) எல்லாப் பிரபலமான பழக்கவழக்கங்களும் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதில்லை. உண்மையில், ஒரு கிறிஸ்தவன் ஆரோக்கியமானதும் பயன்தரத்தக்கதுமான உள்ளூர்ப் பழக்கவழக்கங்களைப் பின்பற்ற தெரிந்தெடுக்கலாம். ஆனால் பழக்கவழக்கங்கள் கடவுளுடைய வார்த்தைக்கு முரணாகச் செல்லும்போது, கிறிஸ்தவர்கள் அதற்கு இணங்கிப் போவதில்லை. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், பிறந்தநாட்கள், கடவுளுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கும் மற்ற பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் யெகோவாவின் சாட்சிகள் பங்குகொள்ள மறுப்பவர்கள் என்பதாக நன்கு அறியப்பட்டிருக்கின்றனர்.
இந்த தைரியமான நிலைநிற்கை, அறிமுகமானவர்கள், அயலார், விசுவாசத்தில் இல்லாத உறவினர் ஆகியோரிடமிருந்து அதிகமான கேலியும் எதிர்ப்பும் ஏற்படுவதில் பெரும்பாலும் விளைவடைந்திருக்கிறது. இது குறிப்பாக சில ஆப்பிரிக்க தேசங்களில் உண்மையாய் இருந்திருக்கிறது, அங்கே சவ அடக்கங்கள், திருமணங்கள், குழந்தைபிறப்பு போன்றவற்றில் பலவிதமான பாரம்பரியங்கள் பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு இணங்கிப் போவதற்கான அழுத்தங்கள் கடினமானவையாய் இருக்கக்கூடும்—அவற்றில் பெரும்பாலும் பயமுறுத்தல்களும் வன்முறையான செயல்களும் உட்பட்டுள்ளன. அங்குள்ள கிறிஸ்தவர்கள் எவ்வாறு உறுதியாக இருக்கலாம்? இணங்கிப்போகாமல் நேருக்கு நேர் பூசலைத் தவிர்ப்பது கூடியகாரியமா? அந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு, சில வேதப்பூர்வமற்ற பாரம்பரியங்களை உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எவ்வாறு கையாண்டிருக்கின்றனர் என்பதை நாம் ஆராயலாம்.
மூடநம்பிக்கையுடைய சவ அடக்க பழக்கவழக்கங்கள்
தென் ஆப்பிரிக்காவில் சவ அடக்கம் மற்றும் பிணம் புதைத்தல் சம்பந்தமாக ஏராளமான பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. துக்கித்துக்கொண்டிருப்போர் பொதுவாக ஒரு முழு இரவை அல்லது அநேக இரவுகளை துக்கம் கொண்டாடும் வீட்டில் பொதுவாக செலவழிக்கின்றனர், அங்கே தீ ஒன்று எப்போதும் எரிந்துகொண்டிருக்கும். துக்கித்துக்கொண்டிருப்போர் சவ அடக்கம் முடியும்வரை சமையல் செய்வதற்கும், தலைமுடி வெட்டுவதற்கும் அல்லது குளிப்பதற்கும்கூட தடைசெய்யப்படுகின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் தங்களை ஒரு விசேஷ மூலிகைக் கலவையால் கழுவிக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஏற்கத்தகுந்தவையா? இல்லை. அவையனைத்தும் ஆத்துமா சாவாமையில் நம்பிக்கையையும் இறந்தோரைப் பற்றிய கடும் திகிலையும் பிரதிபலிக்கின்றன.
“உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்று பிரசங்கி 9:5 சொல்கிறது. இந்தச் சத்தியத்தை அறிந்திருப்பது, ‘இறந்தோரின் ஆவிகளைக்’ குறித்து பயப்படுவதிலிருந்து ஒருவரை விடுதலை செய்கிறது. ஆனால் நல்லெண்ணம்கொண்ட உறவினர் அப்படிப்பட்ட சடங்குகளில் ஒரு கிறிஸ்தவனையோ அல்லது ஒரு கிறிஸ்தவப் பெண்ணையோ பங்குகொள்ளும்படி வற்புறுத்தினால் அவர்கள் என்ன செய்யவேண்டும்?
ஜேன் என்ற பெயரையுடைய ஓர் ஆப்பிரிக்க சாட்சியின் அனுபவத்தை சிந்தித்துப் பாருங்கள், அவர்களுடைய தந்தை இறந்து போனார். சவ அடக்கம் நிகழப்போகும் வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன், அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் இறந்துபோனவரின் ஆவியை அமைதிப்படுத்துவதற்காக இரவு முழுவதும் சவத்தைச் சுற்றி நடனமாட வேண்டும் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. “யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக நான் அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் ஈடுபட முடியாது என்று நான் அவர்களிடம் சொன்னேன்,” என்று ஜேன் கூறுகிறார்கள். “இருந்தபோதிலும், சவ அடக்கம் முடிந்த அடுத்த நாள், இறந்துபோனவரின் ஆவியிலிருந்து அவர்களை இன்னும் கூடுதலாக பாதுகாப்பதற்கென்று துக்கித்துக்கொண்டிருக்கும் குடும்ப அங்கத்தினர்களை அவர்கள் குளிக்க வைக்கப்போவதாக வயதான உறவினர்கள் சொன்னார்கள். நான் மறுபடியும் பங்குகொள்ள மறுத்தேன். அதே சமயத்தில் எங்கள் தாய் ஒரு வீட்டில் தனிமையாக வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்க விரும்பிய எவரும் அந்த நோக்கத்திற்காகத் தயாரித்து வைக்கப்பட்டிருந்த மதுபானத்தை முதலில் அருந்த வேண்டும்.
“இவைகளில் எதிலும் நான் ஈடுபட மறுத்து விட்டேன். அதற்குப் பதிலாக உணவு தயாரிப்பதற்கு நான் வீட்டுக்குச் சென்றேன், உணவை நான் என் தாய் தங்கியிருந்த வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். இது உண்மையிலேயே என் குடும்பத்துக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நான் இயல்பான நிலையில் இல்லை என்று என் உறவினர் நினைத்தனர்.” அதற்கும் மேலாக, அவர்கள் ஜேன்-ஐ இகழ்ச்சியாகப் பேசி அவளுக்குத் தீங்கு உண்டாகும் என்று சொல்லி பின்வருமாறு கூறினர்: “உன்னுடைய மதத்தின் காரணமாக நீ எங்களுடைய பாரம்பரியத்தைத் தள்ளிவிட்டதால், நீ உன்னுடைய தகப்பனின் ஆவியால் கஷ்டத்துக்குள்ளாவாய். உண்மையில், நீ பிள்ளைகளைப் பிறப்பிக்கவும்கூட மாட்டாய்.” இருந்தபோதிலும், ஜேன் பயமுறுத்தி சம்மதிக்க வைக்கப்படுவதற்கு இடங்கொடுக்கவில்லை. அதன் விளைவு? அவர்கள் சொல்கிறார்கள்: “சவ அடக்கம் நடைபெற்ற சமயத்தில் எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். எனக்கு இப்போது ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர்! நான் மறுபடியும் பிள்ளைகளைப் பிறப்பிக்கவேமாட்டேன் என்று பழித்துப் பேசியவர்களை இது வெட்கப்படுத்தியது.”
பாலின “சுத்தப்படுத்துதல்”
ஒருவருடைய துணை இறந்தபிறகு, சடங்கு முறைப்படி சுத்தப்படுத்துவதை மற்றொரு பழக்கம் உட்படுத்துகிறது. ஒருவருடைய மனைவி இறந்துபோனால், அவளுடைய குடும்பத்தார் அக்கணவனிடமாக கொழுந்தியாளை அல்லது இறந்துபோன மனைவிக்கு நெருங்கிய உறவினராயிருக்கும் மற்றொரு பெண்ணைக் கொண்டு வருவார்கள். அக்கணவன் அவளோடு பாலுறவுகொள்ளும்படி கடமைப்பட்டிருக்கிறான். அதற்குப் பிறகுதான் அவன் தான் விரும்பும் நபரை விவாகம் செய்துகொள்ளலாம். ஒரு பெண்ணின் கணவன் இறந்துபோகையிலும்கூட இதே காரியம் தான் நடைபெறுகிறது. இப்பழக்கம், இறந்துபோன துணைவரின் “ஆவி”யிலிருந்து உயிரோடிருக்கும் துணைவரை சுத்தமாக்குவதாக எண்ணப்பட்டது.
இப்படிப்பட்ட “சுத்தப்படுத்துதலை” மறுப்பவர்கள் எவரும் உறவினரின் கோபத்தை வருவித்துக்கொள்ளும் அபாயத்துக்கு ஆளாகின்றனர். அவனோ அல்லது அவளோ தனிமைப்படுத்தி வைக்கப்படுவர், இகழப்படுவர், சபிக்கும் வார்த்தைகளுக்கு உட்படுத்தப்படுவர். இருந்தபோதிலும், கிறிஸ்தவர்கள் இந்தப் பழக்கத்தைப் பின்பற்ற மறுக்கின்றனர். விவாகமின்றி பாலுறவுகொள்வது நிச்சயமாகவே ஒருவகையான “சுத்தப்படுத்துதல்” அல்ல, கடவுளுடைய பார்வையில் அது அசுத்தப்படுத்துவதாய் இருக்கிறது என்று அவர்கள் அறிவார்கள். (1 கொரிந்தியர் 6:18-20) மேலும் கிறிஸ்தவர்கள் ‘கர்த்தருக்குள் மட்டுமே’ விவாகம்செய்ய வேண்டும்.—1 கொரிந்தியர் 7:39.
ஸாம்பியாவைச் சேர்ந்த வயலட் என்ற பெயருடைய ஒரு கிறிஸ்தவப் பெண் தன் கணவனை இழந்துவிட்டாள். அதற்குப் பிறகு, உறவினர் அவளிடம் ஓர் ஆளைக் கொண்டுவந்து அவனோடு பாலுறவுகொள்ளும்படி வற்புறுத்தினர். வயலட் மறுத்துவிட்டாள், அதனால் அதற்கு தண்டனையாக பொது கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்குத் தடைசெய்யப்பட்டாள். அவள் பிரதான சாலையில் நடந்து செல்லக்கூடாது என்றும்கூட எச்சரிக்கப்பட்டாள், அப்படி நடந்தால் அவளுக்குத் தீங்கு நேரிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவள் உறவினரோ அல்லது உடன் கிராமவாசிகளோ அவளைப் பயமுறுத்தி அவர்கள் விருப்பப்படி நடக்க வைப்பதற்கு அவள் மறுத்து விட்டாள்.
பின்னர் வயலட் உள்ளூர் வழக்கு மன்றத்துக்கு அழைக்கப்பட்டாள். அங்கு அவள் சட்டவிரோதமான பாலுறவில் ஈடுபட தான் மறுப்பதற்கான வேதப்பூர்வமான காரணங்களை நிலைமாறாது விளக்கினாள். அவளுடைய நம்பிக்கைகளுக்கு முரணாக இருக்கும் உள்ளூர்ப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதற்கு அவளை வற்புறுத்த முடியாது என்று கூறி வழக்கு மன்றம் அவள் சார்பாகத் தீர்ப்பு வழங்கியது. அக்கறைக்குரியவிதத்தில், இணங்கிப்போவதற்கு அவள் உறுதியுடன் மறுத்ததானது, கிராமத்தில் இருந்த மற்ற சாட்சிகள் பின்னர் அதே பிரச்சினையை எதிர்ப்பட்டபோது அவர்கள் மீது கொண்டுவரப்பட்ட அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவியாயிருந்தது.
மனிக்கா என்ற பெயருடைய ஓர் ஆப்பிரிக்க சாட்சி தன் கணவன் மரித்த பிறகு இதே போன்ற அழுத்தத்தைத் தாங்கி நின்றாள். அவளுடைய கணவனின் குடும்பத்தார் அவளுக்கு மற்றொரு கணவனைக் கொடுப்பதற்கு வற்புறுத்தினர். மனிக்கா சொல்கிறாள்: “நான் மறுத்துவிட்டேன், 1 கொரிந்தியர் 7:39-ல் உள்ள கட்டளைக்குக் கீழ்ப்படியத் தீர்மானமாயிருந்தேன்.” ஆனால் அந்த அழுத்தத்தின் கடுமையோ தணியவில்லை. “அவர்கள் என்னைப் பயமுறுத்தினார்கள்,” என்று மனிக்கா சொல்கிறாள். “அவர்கள் சொன்னார்கள்: ‘இந்த மனிதனை நீ விவாகம் செய்துகொள்ள மறுத்தால், நீ மறுபடியும் விவாகம் செய்துகொள்ளவே மாட்டாய்.’ என் உடன் கிறிஸ்தவர்களில் சிலர் இரகசியமாக சடங்குமுறையில் இந்தவிதத்தில் சுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்றும்கூட கூறினார்கள்.” இருந்தபோதிலும் மனிக்கா உறுதியாக இருந்தாள். “நான் இரண்டு வருடங்கள் விவாகம் செய்துகொள்ளாமல் இருந்தேன், அதற்குப் பிறகு நான் திரும்பவும் கிறிஸ்தவ முறையில் விவாகம் செய்துகொண்டேன்,” என்று அவள் சொல்கிறாள். மனிக்கா இப்போது ஓர் ஒழுங்கான பயனியராக சேவித்து வருகிறாள்.
கருச்சிதைவுறுதல்களும் செத்துப்பிறத்தல்களும்
தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் கிறிஸ்தவர்கள் கருச்சிதைவுறுதல்கள் மற்றும் செத்துப்பிறத்தல்கள் ஆகியவற்றோடு சம்பந்தமான பழக்கவழக்கங்களையும்கூட கையாள வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட வருந்தத்தக்க சம்பவங்கள் மனித அபூரணத்தின் விளைவாக ஏற்படுகின்றன—தெய்வீக தண்டனையினால் அல்ல. (ரோமர் 3:23) ஆனால் ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவுறுதல் ஏற்பட்டால், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு அவளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சில ஆப்பிரிக்கப் பாரம்பரியங்கள் வற்புறுத்துகின்றன.
சமீபத்தில் கருச்சிதைவுறுதல் ஏற்பட்ட ஒரு பெண்ணுடைய வீட்டுக்கு ஒரு சாட்சி நடந்து வருவதைக் கண்டு அவள் ஆச்சரியமடைந்தாள். அவர் அருகே சென்றபோது, அவள் சப்தமாக அவரிடம் பின்வருமாறு கூறினாள்: “இங்கே வராதீர்கள்! எங்களுடைய பழக்கவழக்கத்தின்படி, சமீபத்தில் கருச்சிதைவுறுதல் ஏற்பட்ட பெண்ணை எவரும் சந்திக்கக்கூடாது.” இருப்பினும், யெகோவாவின் சாட்சிகள் எல்லா வகையான ஆட்களுக்கும் பைபிள் செய்தியை எடுத்துச் செல்கின்றனர் என்றும் கருச்சிதைவுறுதல்கள் சம்பந்தமாக உள்ளூர்ப் பழக்கவழக்கங்களை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை என்றும் அந்தச் சாட்சி அவளிடம் கூறினார். பிறகு அவர் அவளுக்கு ஏசாயா 65:20, 23-ஐ வாசித்துக்காட்டி, கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் கருச்சிதைவுறுதல்களும் செத்துப்பிறத்தல்களும் ஏற்படாது என்று விளக்கினார். அதன் காரணமாக அந்தப்பெண் ஒரு வீட்டு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டாள்.
செத்துப்பிறக்கும் குழந்தைகளைப் புதைக்கும் சமயத்தில்கூட மூடநம்பிக்கையுள்ள பழக்கவழக்கங்கள் நிகழக்கூடும். ஜோசப் என்ற பெயருடைய ஒரு சாட்சி அப்படிப்பட்ட ஒரு சவ அடக்கத்துக்கு ஆஜரானபோது, அங்கு வந்திருந்த அனைவரும் தங்கள் கைகளை சில மூலிகைகளில் கழுவி, தங்கள் மார்புகளில் மருந்தை தேய்த்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. இது அக்குழந்தையின் “ஆவி” திரும்பவும் வந்து அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தடுத்ததாக சொல்லப்பட்டது. மரித்தோர் உயிரோடிருப்பவர்களுக்குத் தீங்கு விளைவிக்க முடியாது என்ற பைபிள் போதனையை அறிந்திருந்த ஜோசப் மரியாதையோடு மறுத்துவிட்டார். இருப்பினும், சிலர் அந்த மருந்தை தடவிக்கொள்ளும்படி அவரை வற்புறுத்த முயற்சி செய்தனர். ஜோசப் மறுபடியும் மறுத்துவிட்டார். இந்தக் கிறிஸ்தவர் பயமின்றி எடுத்த நிலைநிற்கையைக் கண்டு, அங்கு வந்திருந்த மற்றவர்களும்கூட அதே போல் அந்த மூலிகைகளை மறுத்துவிட்டனர்.
நேருக்கு நேர் எதிர்ப்படும் நிலையைத் தவிருங்கள், ஆனால் உறுதியாக இருங்கள்
உயிரோடிருப்பவர்களைக் கண்டு பயப்படுவதும், நம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற பயமும் இணங்கிப்போவதற்கு பலமான அழுத்தங்களைக் கொடுக்கலாம். நீதிமொழிகள் 29:25 சொல்கிறது: “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்.” அந்த வசனத்தின் அடுத்த பாகம் உண்மை என்பதை மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன: “கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.”
இருப்பினும், நேருக்கு நேர் எதிர்ப்படும் நிலையை பெரும்பாலும் தவிர்க்கலாம். உதாரணமாக, உறவினர் ஒருவரின் சவ அடக்கத்திற்கு ஒரு கிறிஸ்தவர் அழைக்கப்பட்டிருந்தால், அவர் தான் இணங்கிப்போகக்கூடிய ஆபத்தில் இருக்கும் சூழ்நிலையில் தன்னைக் காணும்வரை காத்திருக்கக்கூடாது. “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப் போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.”—நீதிமொழிகள் 27:12.
என்ன பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்படும் என்பதை சாதுரியமாகக் கேட்பது ஞானமானதாய் இருக்கும். இவை மறுக்கத்தக்கவையாய் இருந்தால், ஒரு கிறிஸ்தவர் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவர் ஏன் இதில் பங்குகொள்ளமுடியாது என்பதை விளக்கலாம், அதை “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” செய்யலாம். (1 பேதுரு 3:15, NW) ஒரு கிறிஸ்தவர் தன் பைபிள்-அடிப்படையிலான நிலைநிற்கையை மரியாதையுடன் முன்கூட்டியே விளக்கினார் என்றால், அவருடைய நம்பிக்கைகளை மதிப்பதற்கு அவருடைய உறவினர் பொதுவாக அதிக விருப்பமுள்ளவர்களாயிருப்பர், பயமுறுத்தல்களையும் மிரட்டல்களையும் பயன்படுத்த சாத்தியம் குறைவாக இருக்கும்.
உறவினரின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தாலும்சரி, கடவுளை-அவமதிக்கும் பாரம்பரியங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு கிறிஸ்தவர் இணங்கிப்போக முடியாது—அவர் மீது எந்தவிதமான பயமுறுத்தல்களும் திட்டுகளும் குவிக்கப்பட்டாலும்கூட. நாம் மூடநம்பிக்கையான பயத்திலிருந்து விடுதலை அடைந்திருக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் ஊக்குவித்தார்: “நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.”—கலாத்தியர் 5:1.
[பக்கம் 29-ன் படம்]
இப்போது தான் இறந்திருக்கும் ஒரு நபர் நடுவராக செயல்பட்டு, வெகு நாட்களுக்கு முன்பு இறந்துபோயிருக்கும் உறவினருக்கு செய்திகளை அனுப்பக்கூடும் என்று அநேகர் நம்புகின்றனர்.