பொறாமை என் வாழ்க்கையை ஏறக்குறைய நாசமாக்கிவிட்டது
என் இரண்டாம் கணவராகிய மாற்கை நான் திருமணம் செய்தபோது பொறாமை என்னை மோசமாகப் பாதிக்க ஆரம்பித்தது.a நாங்கள் இருவரும் எங்கள் முந்தைய துணைவர்களுடன் செயல்தொடர்பு கொள்ளவும் அவர்களுடைய பிள்ளைகள் பலரையும் கவனித்துக்கொள்ளவும் வேண்டியிருந்தது. சில சமயங்களில் நிலைமை தாங்கமுடியாததாக இருந்தது. குடும்பச் சச்சரவு ஒன்றை எதிர்ப்படும்போதெல்லாம், மாற்கு எனக்கு ஆதரவாக இருக்காததுபோல தோன்றியது. அவர் இன்னும் தன் முந்தின மனைவியை நேசிப்பதாக நான் உணர ஆரம்பித்தேன். என்னுடைய பொறாமையைக் கட்டுப்படுத்துவதற்கு மாறாக, அது என் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும்படி அனுமதித்தேன். மாற்கின் முந்தின மனைவியைக் காணும்போதெல்லாம் நான் உணர்ச்சிப்பூர்வமாக அச்சுறுத்தப்பட்டவளாக உணர்ந்தேன்.
நான் மாற்கை எப்போதும் கவனித்துக்கொண்டே இருப்பேன்; அவர் எங்கு பார்க்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக அவருடைய கண்களைக்கூட உற்று கவனித்துக்கொண்டிருப்பேன். அவர் யோசித்துப் பார்க்காத காரியங்களைக்கூட அவருடைய பார்வைகள் அர்த்தப்படுத்தியதாக நான் புரிந்துகொண்டேன். அவர் தன் முந்தின மனைவியை இன்னும் நேசிப்பதாகச் சில சமயங்களில் வெளிப்படையாக குற்றஞ்சாட்டினேன். இதன் காரணமாக அவர் ஒரு முறை அவ்வளவு வருத்தமடைந்ததால், ஒரு கிறிஸ்தவ மாநாட்டைவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டார். நான் யெகோவாவுக்கு முன்பாக குற்றவுணர்வு உள்ளவளானேன். நான் என் குடும்பத்தினருக்கு, வாழ்க்கையைத் துயரமுள்ளதாக்கினேன்; ஏனென்றால் மொத்தத்தில் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். நான் செய்துகொண்டிருந்த காரியத்துக்காக என்னை நானே வெறுத்தேன்; ஆனால் எவ்வளவு கடினமாக முயன்றாலும், என்னால் பொறாமையைக் கட்டுப்படுத்த முடிவதாகவே தெரியவில்லை.
எனக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, மாற்கு பழிக்குப்பழி வாங்கத் தொடங்கினார். அவரை நான் குற்றஞ்சாட்டியபோது, அவர் “பொறாமை, நீ ரொம்ப பொறாமைப் படுகிறாய்” என்று என்னை நோக்கி கத்துவார். வேண்டுமென்றே என்னைப் பொறாமைப்பட வைக்க முயற்சிக்கும் வரையாகச் சென்றார். இது என் பொறாமையைச் சரிப்படுத்தும் என்று அவர் நினைத்திருக்கக்கூடும், ஆனால் அது காரியங்களை மோசமாகவே ஆக்கியது. அவர் மற்ற பெண்களைப் பார்க்க ஆரம்பித்தார்; அவர்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்பதைக் குறித்து சொல்லத் தொடங்கினார். இது என்னை இன்னும் தாழ்வாகவும் வேண்டப்படாதவளாகவும் உணர வைத்தது. வேறொரு வேண்டாத உணர்ச்சியாகிய வெறுப்பையும் தலைதூக்கச் செய்யுமளவிற்கு இது சென்றது. அந்தத் தறுவாயில் நான் அவ்வளவு குழப்பமடைந்தவளாய் இருந்ததால், அவரும் அவருடைய குடும்பமும் என்னை விட்டுப் பிரிந்தால் போதும் என்று நினைத்தேன்.
“பொறாமையோ எலும்புருக்கி” என்று பைபிள் சொல்கையில் அது சரியாக அவ்வாறே இருக்கிறது. (நீதிமொழிகள் 14:30) இப்போது என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட ஆரம்பித்தது. எனக்கு வயிற்றுப் புண்கள் வர ஆரம்பித்தன; அவை குணமாக அதிக காலம் எடுத்தன. மாற்கு செய்த ஒவ்வொரு காரியத்தைக் குறித்தும் நான் சந்தேகமுள்ளவளாக இருப்பதன்மூலம் என் வாழ்க்கையைத் தொடர்ந்து துயர்மிகுந்ததாக ஆக்கிக்கொண்டிருந்தேன். அவருடைய பாக்கெட்டுகளிலெல்லாம் தேடி, ஏதாவது தொலைபேசி எண்களைக் கண்டுபிடித்தால், அவற்றிற்கு ஃபோன் செய்து யார் பதிலளிக்கிறார்கள் என்று பார்ப்பேன். உள்ளுக்குள் நான் மிகவும் வெட்கமாக உணர்ந்தேன்; யெகோவாவுக்கு முன் நாணத்தால் அழுதுகொண்டிருப்பேன். இருந்தாலும், என்னால் இதை நிறுத்த முடியவில்லை. எனக்கு நானே மிக மோசமான எதிரியாக இருந்தேன்.
இனிமேலும் என்னால் ஜெபம் செய்ய முடியாத அளவுக்கு என்னுடைய ஆவிக்குரிய தன்மையும் பாதிக்கப்பட்டது. நான் யெகோவாவை நேசித்தேன்; நான் சரியானதைச் செய்யவே உண்மையில் விரும்பினேன். கணவன்மார் மற்றும் மனைவிமாரைக் குறித்த எல்லா வேதவசனங்களும் எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அவற்றைப் பொருத்தி பிரயோகிக்க முடியவில்லை. எனக்கு அருமையான பிள்ளைகள் இருந்தபோதிலும், என் வாழ்க்கையில் முதல் முறையாக, இனிமேலும் வாழ விரும்பாதவளாக உணர்ந்தேன்.
கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்கள் மிகுந்த உற்சாகம் அளிப்பவர்களாக இருந்து, தங்களால் முடிந்தவரை எனக்கு உதவி செய்தார்கள். ஆனால் எனக்குள்ள பொறாமையைப் பற்றி அவர்கள் பேச ஆரம்பித்தால், எனக்கு அப்படிப்பட்ட ஒரு பிரச்சினை இருப்பதை ஏற்க விரும்பாதவளாக, சங்கடமான உணர்வின் காரணமாக அதை மறுத்துவிடுவேன்.
முடிவில், அறுவைசிகிச்சை ஒன்றிற்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்கு என் உடல்நிலை மோசமானது. என் வாழ்க்கை, அது இருந்துவந்த முறையில் தொடர்ந்து இருக்க முடியாது என்று அங்கு இருக்கும்போது நான் உணர்ந்தேன். அவ்வளவு உணர்ச்சிப்பூர்வ ஈடுபாடு இல்லாமல் எங்கள் நிலைமையை சோதித்துப்பார்ப்பதற்காக மாற்கும் நானும் மூன்று மாதம் பிரிந்திருக்கலாம் என்று தீர்மானித்தோம். இந்தச் சமயத்தின்போது அருமையான காரியம் ஒன்று நடந்தது. விழித்தெழு! பத்திரிகையில் “குடிவெறியர்களின் வயதுவந்த பிள்ளைகளுக்கு உதவி” என்ற தலைப்பையுடைய கட்டுரை வெளிவந்தது.”b
என் தாயார் குடிப்பழக்கமுள்ளவராக இருந்தார். நான் உடல்சம்பந்தமாக துர்ப்பிரயோகம் செய்யப்படவில்லை என்றாலும், என் பெற்றோர், அவர்கள் ஒருவரிடமொருவராகவோ என்னிடமாகவோ பாசத்தை ஒருபோதும் காண்பிக்கவில்லை. என் தாய் எப்போதாவது என்னைத் தூக்கி வைத்துக்கொண்டதாகவோ என்னை நேசிப்பதாக என்னிடம் சொன்னதாகவோ எனக்கு ஞாபகமே இல்லை. ஆகவே, அன்பு செய்வது எப்படி என்றோ, அதைவிட முக்கியமாக, அன்பு காட்டப்படுவது எப்படி இருக்கும் என்றோ உண்மையில் அறியாமலேயே நான் வளர்ந்துவந்தேன்.
அடிக்கடி என் தாய், என் தந்தையின் காதல் விவகாரங்களைக் குறித்தும் அவரை நம்பமுடியாமல் இருந்ததைக் குறித்தும் என்னிடம் சொன்னார். ஆகவே பொதுவில் ஆண்களை நம்பாதவளாக நான் வளர்ந்து வந்தேன் என்று நினைக்கிறேன். என்னுடைய வளர்ப்பு முறை காரணமாக, நான் எப்போதுமே மற்றவர்களைவிட, விசேஷமாக மற்ற பெண்களைவிட தாழ்வானவளாக உணர்ந்தேன். விழித்தெழு!-விலுள்ள அந்தக் கட்டுரையை வாசித்தது, இந்தக் காரியங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது. முதல் முறையாக, என்னுடைய பொறாமை பிரச்சினையின் அடிப்படை காரணங்களை நான் புரிந்துகொண்டேன்.
அந்த விழித்தெழு! கட்டுரையை என் கணவராகிய மாற்கிடம் காண்பித்தேன்; என்னைக் கூடுதலாகப் புரிந்துகொள்வதற்கு அது அவருக்கும் உதவியது. பிரிந்துவிடுவதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு பைபிள் கொடுக்கும் புத்திமதியை சீக்கிரத்தில் அவராலும் என்னாலும் பின்பற்ற முடிந்தது. நாங்கள் ஒப்புரவானோம். (1 கொரிந்தியர் 7:10, 11) இப்போது எங்கள் திருமணம் முன்பு ஒருபோதும் இல்லாத அளவு நன்றாக இருக்கிறது. நாங்கள் பெரும்பாலான காரியங்களை, குறிப்பாக கிறிஸ்தவ நடவடிக்கைகள் உட்பட்டிருக்கையில், சேர்ந்து செய்கிறோம். மாற்கு அதிகமான ஒற்றுணர்வைக் காண்பிக்கிறார். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவர் எவ்வளவாக என்னை நேசிக்கிறார் என்று சொல்கிறார், நானும் இப்போது அதை உண்மையில் நம்புகிறேன்.
மாற்கின் முந்தின மனைவியைச் சந்திக்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியவரும்போதெல்லாம், பலத்துக்காக யெகோவாவிடம் ஜெபிக்கிறேன்; முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ முறையில் நடந்துகொள்ள உதவும்படி அவரிடம் கேட்கிறேன். அது பலனளிக்கிறது. அவளிடமாக உள்ள என் வெறுப்புணர்ச்சிகளும்கூட குறைந்து வருகின்றன. நான் இனிமேலும் எதிர்மறையான எண்ணங்களில் மூழ்கியிருக்க அல்லது என்னுடைய கற்பனைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல அனுமதிப்பதில்லை.
பொறாமையின் தவறான உணர்வுகள் இன்னும் எனக்கு வருவதுண்டு. கடவுளுடைய புதிய உலகத்தில் பரிபூரண வாழ்க்கை மட்டுமே அதை என்னிலிருந்து முழுமையாக நீக்கிப்போடும். அதற்கிடையில், பொறாமை என்னைக் கட்டுப்படுத்த அனுமதிப்பதற்குப் பதிலாக நான் பொறாமையைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டேன். ஆம், பொறாமை என் வாழ்க்கையை ஏறக்குறைய நாசமாக்கிவிட்டது; ஆனால் யெகோவா மற்றும் அவருடைய அமைப்பின் காரணமாக, நான் இப்போது அதிக மகிழ்ச்சியுள்ள ஒரு நபராக இருக்கிறேன், என் உடல் ஆரோக்கியமும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. மீண்டுமாக நான் என் கடவுளாகிய யெகோவாவிடம் ஒரு பலமான உறவைக் கொண்டிருக்கிறேன்.—அளிக்கப்பட்டது.
[அடிக்குறிப்புகள்]
a பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.
b ஆங்கில விழித்தெழு! மே 22, 1992, பக்கங்கள் 8-12-ஐ காண்க.