உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 11/1 பக். 4-8
  • தேவதூதர்களைப் பற்றிய உண்மை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவதூதர்களைப் பற்றிய உண்மை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சாத்தானின் பங்கை தெளிவற்றதாக ஆக்குவது
  • யாரிடமாக ஜெபங்களை ஏறெடுப்பது?
  • தேவதூதர்கள் எந்த மதப்பிரிவையும் சேராதவரா?
  • “பொய்க்குப் பிதா”
  • அணுகுவது தேவதூதர்களையா பிசாசுகளையா?
  • “ஒளியின் தூதன்”
  • ‘வானத்தின் மத்தியிலே பறக்கும் ஒரு தூதன்’
  • தேவதூதர்கள் நமக்கு ஏதாவது செய்கிறார்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • தேவதூதர்கள்—‘மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • தூதர்கள் உங்களுக்கு எப்படி உதவுவார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • தேவதூதர்கள்—அவர்கள் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறார்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 11/1 பக். 4-8

தேவதூதர்களைப் பற்றிய உண்மை

ஒருவரை அறிந்துகொள்வது என்பது, அந்த நபரின் குடும்பத்தைப் பற்றி ஏதாவது அறிந்திருப்பதைப் பொதுவாக உட்படுத்துகிறது. யெகோவா தேவனைப் பற்றி அறிந்துகொள்ளும் விஷயத்திலும் அதுவே உண்மையாயிருக்கிறது. அவருடைய பெயரை வெறுமனே அறிந்திருப்பதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருக்கிறது. பரலோகத்தில் உள்ள அவருடைய ‘குடும்பத்தைப்’ பற்றியும்கூட நாம் சில விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். (எபேசியர் 3:14, 15-ஐ ஒப்பிடுக.) தேவதூதர்களை கடவுளுடைய “புத்திரர்” என்று பைபிள் அழைக்கிறது. (யோபு 1:6) பைபிளில் அவர்களுடைய முக்கியமான பங்கை சிந்தித்துப் பார்க்கையில், கடவுளுடைய நோக்கத்தில் அவர்களுடைய ஸ்தானத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் அவர்களைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ள விரும்ப வேண்டும்.

புதிய துணைசமுதாயம் ஒன்று உருவாகிக்கொண்டு வருகிறது. அநேகர் தாங்கள் தேவதூதர்களில் நம்பிக்கை வைத்திருப்பதாக மட்டும் சொல்லிக்கொள்வதில்லை; பெரும்பாலான ஜனங்கள் ஏதாவது ஒருவிதத்தில் அவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லிக் கொள்கின்றனர். “உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்போதாவது தேவதூதர்களின் பிரசன்னத்தை தனிப்பட்டவிதமாய் உணர்ந்திருக்கிறீர்களா?” என்று 500 அமெரிக்கர்களைக் கேட்டபோது, அதில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ஆட்கள் ஆம் என்று பதிலளித்தனர். தேவதூதர்களில் நம்பிக்கை வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பார்ப்பதும்கூட ஆச்சரியமாயிருக்கிறது—ஐக்கிய மாகாணங்களில் நடத்திய ஒரு ஆய்வின்படி, முழு 76 சதவீதத்தினர்! ஜனங்கள் தேவதூதர்கள் பேரில் அக்கறையுள்ளவர்களாய் இருக்கின்றனர் என்பது தெளிவாயிருக்கிறது. ஆனால் தேவதூதர்களைப் பற்றிய தற்போதுள்ள சிந்தனை எவ்வாறு பைபிள் சத்தியத்துக்கு இசைவாய் உள்ளது?

சாத்தானின் பங்கை தெளிவற்றதாக ஆக்குவது

தேவதூதர்களைப் பற்றி பேசுகையில், பொல்லாத தேவதூதர்களை நாம் அசட்டை செய்யக்கூடாது. அவர்கள் கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்த பரலோக சிருஷ்டிகள் என்று பைபிள் சொல்கிறது. இவர்களில் பிரதானமானவன் சாத்தான். எப்போதும் சோதனைகளைக் கொடுப்பதன் மூலம் மானிடர்கள் தங்கள் “ஆவிக்குரிய தசைகளை” பலப்படுத்திக் கொள்வதற்கு உதவும் “கடவுளுடைய ஒரு அம்சமே” சாத்தான் என்று உங்களுடைய தேவதூதர்களை கேளுங்கள் என்றழைக்கப்பட்ட பிரபலமான ஒரு ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. சாத்தான் “அன்பான எண்ணங்களைக்” கொண்டிருந்தபோதிலும், அவன் பல நூற்றாண்டுகளாக தீமையான காரியத்தோடு தவறாக அடையாளங் காட்டப்படுகிறான் என்று நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சாத்தானும் இயேசுவும் “மிக நுட்பமாக ஒருவரையொருவர் நிறைவுசெய்பவர்களாக இல்லாவிட்டாலும்கூட, அவர்கள் ஒரே இலக்குகளைப் பகிர்ந்துகொள்கின்றனர், ஒரே முழு நபரைப் பூரணமாக்குவதற்கு மிகவும் தேவையான பாகங்கள்,” என்று அவர்கள் கூடுதலாக சொல்கின்றனர். இவையெல்லாம் திகைப்புண்டாக்கும் கருத்துக்கள், ஆனால் பைபிள் என்ன சொல்கிறது?

சாத்தான் “கடவுளின் ஒரு அம்சம் அல்ல,” ஆனால் கடவுளின் ஒரு விரோதி என்று பைபிள் அதைத் தெளிவாக்குகிறது. (லூக்கா 10:18, 19; ரோமர் 16:20) அவன் யெகோவாவின் உன்னத அரசதிகாரத்துக்கு எதிர்த்து நிற்கிறான், மானிடர்களிடமாக அவன் கொண்டிருக்கும் எண்ணங்கள் நிச்சயமாகவே “அன்பானதாக” இருப்பதில்லை. பூமியின் மீதுள்ள கடவுளுடைய ஊழியர்கள் மீது அவன் தன் கோபாவேசத்தை இரக்கமற்றவிதத்தில் வெளிப்படுத்திக் காண்பிக்கிறான். அவன் அவர்களைக் கடவுளுக்கு முன்பாக இரவும் பகலும் குற்றஞ்சாட்டுகிறான்!a (வெளிப்படுத்துதல் 12:10, 12, 15-17) என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் சாத்தான் அவர்களைக் கறைபடுத்துவதற்கு தன் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறான். நீதிமானாயிருந்த யோபுவை அவன் இரக்கமின்றி துன்புறுத்தியது, மானிடர்களின் துன்பத்திடமாக அவன் கொண்டிருந்த உணர்ச்சியற்ற மனநிலையை வெளிப்படுத்திக் காண்பித்தது.—யோபு 1:13-19; 2:7, 8.

சாத்தானும் இயேசுவும் நிச்சயமாகவே ஒரே இலக்குகளைப் பகிர்ந்து கொள்வதில்லை, அவர்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் நேர் எதிரிடையான விரோதிகளாக இருக்கின்றனர். ஏன், மிகப்பெரிய அளவில், குழந்தைகளைக் கொலை செய்யும்படி ஏரோதுவை உந்துவித்தது சாத்தான் என்பதில் சந்தேகமில்லை—இவையனைத்தும் இளம் பிள்ளையாகிய இயேசுவைக் கொலை செய்வதற்கு எடுத்த முயற்சிகளே! (மத்தேயு 2:16-18) இயேசுவின் மரணம் வரை சாத்தானின் இரக்கமற்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. (லூக்கா 4:1-13; யோவான் 13:27) இவ்வாறு, ஒரே முழு நபரைப் பூரணமாக்குவதற்கு மிகவும் தேவையான பாகங்களாக இருப்பதற்கு மாறாக, இயேசுவும் சாத்தானும் முற்றிலும் வேறுபட்டவர்களாய் இருக்கின்றனர். அவர்களுடைய விரோதம் தவிர்க்கமுடியாத ஒன்று என்று பைபிள் தீர்க்கதரிசனம் காண்பிக்கிறது. (ஆதியாகமம் 3:15) பொருத்தமாகவே, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுதாமே சாத்தானை கடவுளுடைய உரிய காலத்தில் அழித்துப் போடுவார்.—வெளிப்படுத்துதல் 1:18; 20:1, 10.

யாரிடமாக ஜெபங்களை ஏறெடுப்பது?

தேவதூதர்களின் இயக்கத்தை ஆதரிக்கும் சிலர், தேவதூதர்களோடு தொடர்பு கொள்வதற்கு தியானம் செய்வதையும் மற்ற முறைகளையும் சிபாரிசு செய்கின்றனர். “விண்ணுலகக் குடும்பத்தில் உள்ள எந்த அங்கத்தினரோடும் தொடர்பு கொள்வதற்கான உண்மைமனதோடுகூடிய வேண்டுகோள் அசட்டை செய்யப்படாது” என்று ஒரு புத்தகம் சொல்லுகிறது. “கேளுங்கள், அப்போது உங்களுக்கு பதிலளிக்கப்படும்.” மிகாவேல், காபிரியேல், யுரியல், ரஃபேல் போன்ற தேவதூதர்களோடு தொடர்பு கொள்வதற்கு அந்தப் புத்தகம் சிபாரிசு செய்கிறது.b

என்றபோதிலும், இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் தேவதூதர்களிடம் அல்ல, கடவுளிடம் ஜெபிக்கும்படி கற்பித்தார். (மத்தேயு 6:9, 10) அதே போல் பவுல் எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலிப்பியர் 4:6) ஆகையால், கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஜெபங்களில் யெகோவாவைத் தவிர வேறு எவரையும் அணுகுவதில்லை, அதை அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்கின்றனர்.c—யோவான் 14:6, 13, 14.

தேவதூதர்கள் எந்த மதப்பிரிவையும் சேராதவரா?

தேவதூதர் கண்காணிப்பு நிலையக்கோவை மீது தலைமை தாங்கி வழிநடத்தும் ஐலின் இலியாஸ் ஃபிரிமேன் என்பவரின்படி, “தேவதூதர்கள் எல்லா மதங்களையும் எல்லா தத்துவங்களையும் எல்லா கொள்கைகளையும் கடந்து அப்பால் செல்கின்றனர். உண்மையில் நமக்குத் தெரிந்தவரை தேவதூதர்களுக்கு மதமே கிடையாது.”

இருந்தபோதிலும், உண்மைத்தன்மையுள்ள தேவதூதர்களுக்கு மதம் ஒன்று உள்ளது என்பதை பைபிள் தெளிவாக காண்பிக்கிறது; அவர்கள் மெய்க் கடவுளாகிய யெகோவாவை வணங்குகின்றனர், அவர் மற்ற கடவுட்களிடமிருந்து எந்தப் போட்டியையும் பொறுத்துக்கொள்ள மாட்டார். (உபாகமம் 5:6, 7; வெளிப்படுத்துதல் 7:11) இவ்வாறு, இப்படிப்பட்ட ஒரு தூதன் அப்போஸ்தலனாகிய யோவானிடம், கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களின் ‘உடன் ஊழியக்காரன்’ என்று தன்னையே விவரித்துக்கொண்டார். (வெளிப்படுத்துதல் 19:10) உண்மைத்தன்மையுள்ள தேவதூதர்கள் வேறு எந்த வணக்கமுறையையும் கடைப்பிடிப்பதைப் பற்றி நாம் பைபிளில் எந்த இடத்திலும் வாசிப்பதில்லை. அவர்கள் யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியைக் கொடுக்கின்றனர்.—யாத்திராகமம் 20:4, 5.

“பொய்க்குப் பிதா”

தேவதூதர்களை சந்தித்ததாக சொல்லப்படும் அநேக சந்திப்புகள் மரித்தோரோடு தொடர்புகொள்வதை உட்படுத்துகிறது. “என்னுடைய மாமா என்னிடம் வருவதற்கும் அவர் இறுதியில் தான் சந்தோஷமாக இருந்ததை நான் அறியும்படி செய்வதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்திருப்பதாக நான் உணர்ந்தேன்” என்று, முன்னறிகுறியைப் பெற்றுக்கொண்ட பிறகு எலிஸ் என்ற பெயருடைய பெண் சொல்கிறாள். அதே போல் மரித்துப்போயிருந்த ஒரு அன்பான நண்பரைக் குறித்து டெரி ஞாபகத்தில் வைத்திருக்கிறாள். “சவ அடக்கம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு நான் கனவு என்று நினைத்துக்கொண்டிருந்த ஒன்றில் அவர் என்னிடத்தில் வந்தார். அவர் பிரிந்துசெல்வதைக் குறித்து நான் வருத்தப்படக்கூடாது என்று அவர் சொன்னார், ஏனென்றால் அவர் சந்தோஷத்தோடும் சமாதானத்தோடும் இருந்ததாக சொன்னார்,” என்று அவள் சொல்கிறாள்.

ஆனால் மரித்தவர்கள் “ஒன்றும் அறியார்கள்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (பிரசங்கி 9:5) ஒரு நபர் மரிக்கையில், “அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” என்றும்கூட அது சொல்கிறது. (சங்கீதம் 146:4) இருப்பினும், சாத்தான் ‘பொய்க்குப் பிதாவாயிருக்கிறான்.’ (யோவான் 8:44) மரணத்திற்குப் பின் மனித ஆத்துமா தப்பிப்பிழைக்கிறது என்ற பொய்யை முதலாவதாக ஆரம்பித்து வைத்தவன் அவனே. (எசேக்கியேல் 18:4-ஐ ஒப்பிடுக.) சாத்தானின் நோக்கத்துக்கு இசைவாய் இருக்கும் இதை இன்று அநேக ஜனங்கள் நம்புகின்றனர், ஏனென்றால் இது உயிர்த்தெழுதலின் பேரில் விசுவாசம் வைப்பதற்கான தேவையே இல்லாமல் செய்துவிடுகிறது—கிறிஸ்தவ மதத்தின் ஒரு அடிப்படையான கொள்கை. (யோவான் 5:28, 29) ஆகையால் மரித்தோரைக் குறித்து விவரம் கேட்பது அல்லது அவர்களிடமிருந்து செய்திகளைப் பெற்றுக்கொள்வது போல் தோன்றச்செய்வது போன்றவை தேவதூதர்கள் இயக்கத்தின் மற்றொரு அம்சமாக உள்ளது, அதைக் கடவுள் அங்கீகரிப்பதில்லை.

அணுகுவது தேவதூதர்களையா பிசாசுகளையா?

தற்போதைய தேவதூதர்களின் இயக்கத்தில் பெரும்பாலானவை மாயமந்திரம் சார்ந்தவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளது. மார்சியா என்பவருடைய அனுபவத்தைச் சிந்தித்துப் பாருங்கள். “செப்டம்பரிலிருந்து டிசம்பர் 1986 வரை ‘இயற்கைக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்து’ நான் செய்திகளைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். நான் பொய்த்தோற்றங்களையும், உண்மையென நம்ப முடியாத ‘கடந்த வாழ்க்கையைப்’ பற்றிய கனவுகளையும் பார்த்தேன். இறந்து போயிருந்த நண்பர்களோடு தொடர்பு கொண்டேன், மேலும் ஆவியுலகத் தொடர்புடைய அனுபவங்கள் பலவற்றைக் கொண்டிருந்தேன், அதில் அப்போதுதான் நான் சந்தித்திருந்த ஆட்களைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொண்டேன். நான் இயல்பாகவே எழுதும் திறமை அருளப்பெற்றிருந்தேன், உடற்சார்பில்லாத ஆட்களிடமிருந்து செய்திகளை அனுப்பியிருக்கிறேன். பூமியில் வாழ்ந்தபோது நான் சந்திக்காத ஆட்கள் சிலர் என் மூலமாக மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்புவார்கள்” என்று அவள் சொல்கிறாள்.

தேவதூதர்களோடு “பேச்சுத்தொடர்பு கொள்வதற்கு குறிசொல்லுதலை பயன்படுத்துவது சாதாரண காரியமாயிருக்கிறது. ஒரு புத்தகம் நேரடியாக அதன் வாசகர்களை மந்திரக் கற்கள், குறி சொல்பவர்கள் உபயோகிக்கும் கார்டுகள், இ ஜிங், நாணயங்கள், ரேகை சாஸ்திரம், ஜோதிடம் ஆகியவற்றை பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்துகிறது. “நீங்கள் விரும்பிய விளைவைப் பெற உங்களை வழிநடத்துவதற்கு உங்களுடைய உள்ளார்ந்த ஆளை அனுமதியுங்கள், அங்கு ஒரு தேவதூதன் உங்களை சந்திப்பார் என்று நிச்சயமாயிருங்கள்,” என்று நூலாசிரியர்கள் எழுதுகின்றனர்.

இருப்பினும், பைபிளின்படி, ‘உங்களை அங்கு சந்திப்பது’ எதுவாக இருந்தாலும் அது நிச்சயமாகவே ஒரு தேவதூதன் அல்ல. ஏன்? ஏனென்றால் குறிசொல்லுதல் கடவுளுக்கும் பரலோகத்திலும் பூமியிலும் உள்ள மெய் வணக்கத்தாருக்கும் நேர் எதிர்மாறானதாய் உள்ளது, அவர்களுக்கு அதோடு எந்தவித சம்பந்தமுமில்லை. இஸ்ரவேலில் குறிசொல்லுதல் கொலைக்குற்றமாகும்! “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்,” என்று நியாயப்பிரமாணம் கூறியது.—உபாகமம் 13:1-5; 18:10-12.

“ஒளியின் தூதன்”

சாத்தான் குறிசொல்லுதலை நன்மையானது போன்றும் ஏன் தேவதூதருக்குரியதாய் இருப்பது போன்றும்கூட தோன்றச்செய்யக்கூடும் என்பது நம்மை ஆச்சரியப்படுத்தக்கூடாது. சாத்தானும் “ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே” என்று பைபிள் சொல்கிறது. (2 கொரிந்தியர் 11:14) அவன் வியத்தகு நிகழ்ச்சிகளையும்கூட பொய்யாக கட்டியுருவாக்கி, பிறகு அவற்றை உண்மையாக நடக்கும்படி செய்விக்கக்கூடும், அந்த முன்னறிகுறி கடவுளிடமிருந்து வருகிறது என்று பார்வையாளர்கள் நினைக்கும்படி அவன் ஏமாற்றலாம். (ஒப்பிடுக: மத்தேயு 7:21-23; 2 தெசலோனிக்கேயர் 2:9-12.) ஆனால் சாத்தானுடைய எல்லா கிரியைகளும்—அவை எவ்வளவு நன்மையானவையாக அல்லது எவ்வளவு கொடியவையாக தோற்றமளித்தாலும்கூட—இரண்டு நோக்கங்களில் ஒன்றை சேவிக்கின்றன: ஜனங்களை யெகோவாவுக்கு விரோதமாக திருப்புவது அல்லது ‘கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி பிரகாசமாயிராதபடிக்கு’ அவர்களுடைய மனதை வெறுமனே குருடாக்குவது. (2 கொரிந்தியர் 4:3, 4) இரண்டாவதாக கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஏமாற்றுமுறை பெரும்பாலும் அதிக திறம்பட்ட ஒன்றாய் உள்ளது.

முதல் நூற்றாண்டில் இருந்த ஒரு வேலைக்காரப் பெண்ணைப் பற்றிய பைபிள் பதிவை சிந்தித்துப் பாருங்கள். அவள் குறிசொல்லுவதன் மூலம் அவளுடைய எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கினாள். அவள் அநேக நாட்கள் சீஷர்களைப் பின்தொடர்ந்து சென்று இவ்வாறு சொன்னாள்: “இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்.” அவளுடைய வார்த்தைகள் உண்மையாய் இருந்தன. இருப்பினும், அவள் பிசாசு பிடித்தவள் என்று பதிவு நமக்கு சொல்கிறது, ஒரு தேவதூதனால் அல்ல, ஆனால் “குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்” கொண்டிருந்தாள். இறுதியில் “பவுல் சினங்கொண்டு, திரும்பிப் பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப் போயிற்று.”—அப்போஸ்தலர் 16:16-18.

பவுல் ஏன் இந்த ஆவியைத் துரத்தினார்? குறி-சொல்லுகிற ஆவியுடைய பெண்ணின் எஜமான்களுக்கு அது எப்படியோ மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கியது. இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையைக்கொண்டு அந்த வேலைக்காரப் பெண், விவசாயிகள் எப்போது விதைப்பது, பெண்கள் எப்போது திருமணம் செய்துகொள்வது, சுரங்கத் தொழிலாளிகளுக்கு தங்கத்தை எங்கே கண்டுபிடிப்பது என்று சொல்வது போன்றவற்றை சொல்லியிருக்கலாம். ஏன், இந்த ஆவி சில சத்திய வார்த்தைகளைப் பேசவும்கூட ஏவியது, அது வெளிப்படையாக சீஷர்களைப் புகழ்ந்து பேசியது!

இருப்பினும், அது ‘குறி சொல்ல ஏவுகிற ஆவியையுடைய பிசாசாய்’ இருந்தது. அது பிசாசாக இருப்பதால், யெகோவாவைப் பற்றியும் இரட்சிப்புக்கான அவருடைய ஏற்பாட்டைப் பற்றியும் அறிவிப்புகளை செய்வதற்கு அதற்கு அதிகாரம் இல்லை. அதன் முகப்புகழ்ச்சியான பேச்சு, ஒருவேளை வேலைக்காரப் பெண்ணின் குறிசொல்லுதல் பேரில் நம்பிக்கை அளிக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கலாம், அது கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுபவர்களிடத்திலிருந்து பார்வையாளர்களின் கவனத்தைத் திருப்பியது. நல்ல காரணத்தோடு பவுல் கொரிந்தியர்களை எச்சரித்தார்: “நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே.” (1 கொரிந்தியர் 10:21) குறிசொல்லுதல் சம்பந்தப்பட்ட எல்லா புத்தகங்களையும் முதல்-நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அழித்துப்போட்டது ஆச்சரியப்படுவதற்கில்லை.—அப்போஸ்தலர் 19:19.

‘வானத்தின் மத்தியிலே பறக்கும் ஒரு தூதன்’

நாம் பார்த்தபடி, தற்போதுள்ள தேவதூதர் இயக்கத்தின் பெரும்பாலான காரியங்கள் கடவுளுடைய எதிராளியான பிசாசாகிய சாத்தானோடு நெருக்கமாக இணைக்கப்பட்டிருப்பதை பைபிள் வெளிப்படையாகக் காண்பிக்கிறது. மனித விவகாரங்களில் பரிசுத்த தேவதூதர்கள் உட்பட்டிருப்பதில்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? அதற்கு மாறாக, அவர்கள் இப்போது பூமியில் ஒரு வல்லமைவாய்ந்த வேலையை செய்துவருகின்றனர். அது என்ன வேலை? அந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு, நாம் பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலைப் பார்க்க வேண்டும். பைபிளின் வேறு எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் இந்தப் புத்தகத்தில் தேவதூதர்களைப் பற்றி கூடுதலான தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிப்படுத்துதல் 14:6, 7-ல் அப்போஸ்தலனாகிய யோவான் பெற்றுக்கொண்ட ஒரு தீர்க்கதரிசன காட்சியைப் பற்றி நாம் வாசிக்கிறோம்: “பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்.”

இன்று தேவதூதர்களின் மிக முக்கியமான வேலையைப் பற்றி இந்த வேதவசனம் சிறப்பித்துக் காண்பிக்கிறது. அவர்கள் முதலாவதாக செய்யப்பட வேண்டிய வேலையில் உட்பட்டிருக்கின்றனர்—அதாவது, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் வேலை. இந்த வேலையைப் பற்றிதான் இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு வாக்களித்தார்: “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” (மத்தேயு 28:18-20) இயேசு எவ்வாறு தம்மைப் பின்பற்றுகிறவர்களோடுகூட இருக்கிறார்? இந்த பிரம்மாண்டமான வேலையை நிறைவேற்றி முடிப்பதற்கு தேவதூதர்களின் உதவியை அவர்களுக்குக் கொடுப்பது ஒரு வழியாகும்.

ஒவ்வொரு வருடமும் யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் 100 கோடிக்கும் மேற்பட்ட மணிநேரங்களை செலவழிக்கின்றனர். இந்த வேலையைச் செய்கையில் அவர்கள் தேவதூதர்களின் வழிநடத்துதல் இருப்பதன் அத்தாட்சியைக் காண்கின்றனர். கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி புரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு யாராவது உதவ வேண்டும் என்று அப்போதுதான் ஜெபித்துக்கொண்டிருந்த நபர்களை அவர்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அடிக்கடி சந்திக்க நேரிட்டிருக்கிறது. தேவதூதர்களின் வழிநடத்துதலும் அதோடுகூட சாட்சிகளின் சொந்த முன்முயற்சியும், ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கானோர் யெகோவாவைப் பற்றிய அறிவை எடுத்துக்கொள்வதில் விளைவடைந்திருக்கிறது!

வானத்தின் மத்தியிலே பறந்துகொண்டிருக்கும் தேவதூதனுக்கு நீங்கள் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா? யெகோவாவின் சாட்சிகள் உங்களை சந்திக்கையில், இந்த தேவதூதனுடைய செய்தியை நீங்கள் ஏன் அவர்களோடு இன்னும் முழுமையாக கலந்தாலோசிக்கக்கூடாது?

[அடிக்குறிப்புகள்]

a “சாத்தான்” மற்றும் “பிசாசு” என்ற சொற்கள் “எதிரி” மற்றும் “பழிதூற்றுபவன்” என்ற அர்த்தங்களைக் கொடுக்கின்றன.

b மிகாவேலும் காபிரியேலும் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர், ஆனால் ரஃபேல் மற்றும் யுரியல் ஆகியோரின் பெயர்கள் ஏற்கப்படாத புத்தகங்களில் காணப்படுகின்றன, அவை பைபிள் ஏடுகளின் பாகமாய் இல்லை.

c ஜெபம் இயேசுவுக்கு அல்ல, ஆனால் இயேசுவின் மூலம் ஏறெடுக்கப்படுகிறது என்பதை கவனியுங்கள். ஜெபம் இயேசுவின் பெயரில் ஏறெடுக்கப்படுகிறது, ஏனென்றால் அவர் சிந்திய இரத்தம் கடவுளை அணுகுவதற்கான வழியைத் திறந்து வைத்தது.—எபேசியர் 2:13-19; 3:12.

[பக்கம் 8-ன் பெட்டி]

தேவதூதர்கள் என்பவர்கள் யார்?

அநேகர் நம்புவதற்கு நேர் எதிர்மாறானதாய், தேவதூதர்கள் என்பவர்கள் மரித்துப் போன ஆட்களை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் ஆத்துமாக்கள் அல்ல. மரித்தவர்கள் “ஒன்றும் அறியார்கள்” என்று பைபிள் தெளிவாக குறிப்பிடுகிறது. (பிரசங்கி 9:5) அப்படியென்றால் தேவதூதர்கள் எங்கிருந்து வந்தனர்? பூமியை அஸ்திபாரப்படுத்துவதற்கு முன்பு அவர்கள் கடவுளால் ஒவ்வொருவராக சிருஷ்டிக்கப்பட்டனர் என்று பைபிள் குறிப்பிடுகிறது. (யோபு 38:4-7) கடவுளுடைய பரலோக குடும்பத்தின் அளவு கோடிக்கணக்கில் இருக்கலாம், ஒருவேளை கோடானகோடி பேர் அல்லது அதற்கும் மேற்பட்டு இருக்கலாம்! சில தேவதூதர்கள் சாத்தான் செய்த கலகத்தில் அவனோடு சேர்ந்து கொண்டனர்.—தானியேல் 7:10; வெளிப்படுத்துதல் 5:11; 12:7-9.

யெகோவா ஒழுங்குக்கு தேவனாய் இருப்பதால், அவருடைய தேவதூதர்கள் அடங்கிய மிகப்பெரிய குடும்பம் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.—1 கொரிந்தியர் 14:33.

• அதிகாரத்திலும் வல்லமையிலும் முதன்மையாய் இருக்கும் தூதன், பிரதான தூதன், இயேசு கிறிஸ்து, மிகாவேல் என்றும்கூட அழைக்கப்படுகிறார். (1 தெசலோனிக்கேயர் 4:16; யூதா 9) அவருடைய அதிகாரத்தின் கீழ் இருப்பவர்கள் சேராபீன்கள், கேரூபீன்கள், தேவதூதர்கள்.

• சேராபீன்கள் கடவுளுடைய சிங்காசனத்தண்டையில் அவருக்கு சேவை செய்கின்றனர். கடவுளுடைய பரிசுத்தத்தன்மையை அறிவித்துக்கொண்டும் அவர்களுடைய ஜனங்களை சுத்தமாக வைத்துக்கொண்டிருப்பதும் அவர்களுடைய வேலையில் உட்பட்டிருக்கிறது.—ஏசாயா 6:1-3, 6, 7.

• கேரூபீன்களும்கூட யெகோவாவின் முன்னிலையில் காணப்படுகின்றனர். கடவுளுடைய சிங்காசனத்தைப் பாதுகாப்பவர்களாக அவர்கள் யெகோவாவின் மகத்துவத்தை ஆதரிக்கின்றனர்.—சங்கீதம் 80:1; 99:1; எசேக்கியேல் 10:1, 2.

• தேவதூதர்கள் (“செய்தி எடுத்துச் செல்பவர்கள்” என்று பொருள்படுகிறது) யெகோவாவுக்குப் பிரதிநிதிகளாய் இருக்கின்றனர். அவர்கள் தெய்வீக சித்தத்தை நிறைவேற்றி முடிக்கின்றனர், கடவுளுடைய ஜனங்களை விடுவிப்பதை அது உட்படுத்தினாலும் அல்லது துன்மார்க்கரை அழிப்பதை அது உட்படுத்தினாலும் அவர்கள் அதைச் செய்கின்றனர்.—ஆதியாகமம் 19:1-26.

[பக்கம் 7-ன் படங்கள்]

வானத்தின் மத்தியிலே பறந்து கொண்டிருக்கும் தேவதூதனுக்கு நீங்கள் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்