ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
“கடவுளுடைய வார்த்தை விருத்தியடைந்துகொண்டே இருந்தது”
கிறிஸ்தவ சபை, அது அமைக்கப்பட்ட பின்பு, சில மணிநேரங்களுக்குள், 120 உறுப்பினரிலிருந்து 3,000-த்துக்கு மேற்பட்ட உறுப்பினரைக் கொண்டதாகப் பெருகிவிட்டது. (அப்போஸ்தலர் 1:15; 2:41) “கடவுளுடைய வார்த்தை விருத்தியடைந்துகொண்டே இருந்தது, எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கை மிக அதிகமாய்த் தொடர்ந்து பெருகிக்கொண்டிருந்தது,” என்று பைபிள் விவரிக்கிறது. (அப்போஸ்தலர் 6:7, NW) புதிதாக அமைக்கப்பட்ட அந்த சபை, சில ஆண்டுகள் செல்வதற்குள், ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் கிறிஸ்தவர்களையுடைய சர்வகண்ட அமைப்பாகிவிட்டது.
இன்றைய கிறிஸ்தவ சபையும் அவ்வாறே விரைவான பெருக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, மெக்ஸிகோவில், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளுக்குள்தானே 1,30,000-த்திலிருந்து 4,43,640-க்கும் மேலாகப் பெருகிவிட்டது! 1995-ல், யெகோவாவின் சாட்சிகள் ஆசரித்த கிறிஸ்துவின் மரண நினைவு நாள் ஆசரிப்புக்கு, மெக்ஸிகோவில் 59 ஆட்களில் ஒருவர் என்ற வீத எண்ணிக்கையில் வந்திருந்தனர். இருப்பினும், பின்வரும் அனுபவம் காட்டுகிறபடி, அந்த நாட்டில் ஆவிக்குரிய அறுவடை முடிவடையவில்லை.—மத்தேயு 9:37, 38.
சியாபாஸ் மாகாணத்திலுள்ள ஒரு பட்டணத்தில், யெகோவாவின் சாட்சிகள் ஏறக்குறைய 20 ஆண்டுகள் அந்தப் பகுதியில் நற்செய்தியைப் பிரசங்கித்த பின்னும், ஒருவரும்கூட அவர்களுடன் வீட்டு பைபிள் படிப்பை ஏற்கவில்லை. வன்முறை செயல்களில் பெயர்பெற்றிருந்த ஒரு மனிதனால் அந்தப் பட்டணத்து ஆட்கள் பலர் பயமுறுத்தப்பட்டிருந்தனரென்பது தெளிவாயிருந்தது. யெகோவாவின் சாட்சிகளோடு தாங்கள் பைபிள் படிப்பதை அவன் கண்டுபிடித்துவிட்டால் எதிர்ச்செயலாக அவன் செய்யக்கூடியதைக் குறித்து அவர்கள் பயந்தார்கள்.
அந்தப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்த தைரியமுள்ள இரண்டு சாட்சிகள், சந்தேகப்பட்ட அந்த மனிதனை நேரில் சென்று காண்பதன் மூலம் அந்தப் பிரச்சினையைக் கையாளும்படி தீர்மானித்தனர். அவனுடைய வீட்டுக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது, அவனுடைய மனைவி கதவைத் திறந்து அவர்களுடைய செய்திக்குக் கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்டாள். பரதீஸான பூமியில் வாழ்வதைப்பற்றி பைபிள் சொல்வதில் அவள் முக்கியமாய் அக்கறை கொண்டாள். ஆனால், தான் பைபிளைப் படித்தால் தன் கணவன், காரியங்களைத் தனக்கு மிகக் கடினமாக்குவாரென ஒப்புக்கொண்டாள். பைபிள் சொல்வதை அவள் கவனமாய் ஆராய்ந்தால் தவிர, கடவுளைச் சேவித்து, பூமியில் என்றென்றும் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வது எவ்வாறென்பதை அவள் ஒருபோதும் கற்றுக்கொள்ள முடியாதென சாட்சிகள் விளக்கிக் கூறினார்கள். அவள் பைபிள் படிப்பை ஏற்றாள்.
எதிர்பார்த்தபடி, அவளுடைய தீர்மானத்தைக் குறித்து அவள் கணவன் பிரியப்படவில்லை. தன் ஊர்தியை மற்ற காரியங்களுக்கு அவள் பயன்படுத்துவதை அவர் அனுமதித்தபோதிலும், கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்ல அதைப் பயன்படுத்தக்கூடாதென தடை செய்தார். அவருடைய எதிர்ப்பின் மத்தியிலும், அருகில், அதாவது பத்து கிலோமீட்டர் தூரத்திலிருந்த, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துக்கு அவள் தவறாமல் நடந்து சென்றாள். சீக்கிரத்தில் அந்தப் பட்டணத்திலிருந்த மற்றவர்கள் அவளுடைய தைரியத்தையும் தீர்மானத்தையும் கவனித்தனர். யெகோவாவின் சாட்சிகள் தங்கள் வீடுகளுக்குச் சந்திப்பு செய்தபோது ஜனங்கள் செவிகொடுக்கத் தொடங்கினர். சிலர் அந்தப் பெண்ணோடு கூட்டங்களுக்கும் செல்லத் தொடங்கினர். சிறிது காலத்துக்குப் பின், அந்தப் பட்டணத்தில் சாட்சிகள் 20 பைபிள் படிப்புகளை நடத்திக் கொண்டிருந்தனர்!
இந்தப் பெண்ணின் ஒரு சிநேகிதியும், தன் கணவனின் எதிர்ப்பின் மத்தியிலும் பைபிளைப் படிப்பதற்குத் தீர்மானித்தாள். ஆச்சரியத்துக்கேதுவாக, முதலில் படித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கணவர், அவ்வாறு படிக்கும்படி அவளை ஊக்கமூட்டினார். அவள் தன் கணவனிடம் பேசின பின்பு, எதிர்ப்பு நின்றுவிட்டது. ஆகவே 20 ஆண்டுகளுக்குப் பின்னால் பைபிள் சத்தியத்தின் விதை கடைசியாகத் தளிர்த்து வளரத் தொடங்கி, இந்த இரண்டு பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் பைபிள் படித்துக்கொண்டும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வந்துகொண்டும் இருக்கின்றனர். இந்த இருவரும் இப்பொழுது நற்செய்தியைப் பிரசங்கிக்கின்றனர்.