இரட்சிக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒருசமயம் இயேசுவினிடத்தில் ஒரு மனிதர் கேட்டார்: “ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ”? இயேசு எவ்வாறு பதிலளித்தார்? ‘என்னை உங்களுடைய கர்த்தராகவும் இரட்சகராகவும் வெறுமனே ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்’ என்று கூறினாரா? இல்லையே! இயேசு கூறினார்: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—லூக்கா 13:23, 24.
அந்த மனிதரின் கேள்விக்கு விடையளிக்க இயேசு தவறிவிட்டாரா? இல்லை, அந்த மனிதன், இரட்சிக்கப்படுவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று கேட்கவில்லை; எண்ணிக்கை குறைவாக இருக்குமா என்றுதான் கேட்டார். ஆகவே, இந்த மகத்தான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள, ஒருவர் எதிர்பார்ப்பதைவிட வெகுசில ஆட்களே பிரயாசப்படுவார்கள் என்பதை இயேசு வெறுமனே சுட்டிக்காட்டினார்.
‘இப்படி ஒன்றும் எனக்கு சொல்லப்படவில்லையே,’ என்று சில வாசகர்கள் மறுப்பு தெரிவிக்கக்கூடும். இவர்கள் ஒருவேளை யோவான் 3:16-ஐ மேற்கோளாகக் காட்டக்கூடும், அது சொல்கிறது: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” இருப்பினும் நம் பதில்: ‘அப்படியானால், நாம் எதை விசுவாசிக்கவேண்டும்? இயேசு உண்மையில் வாழ்ந்தார் என்றா? நிச்சயமாகவே. அவர் கடவுளின் குமாரன் என்றா? ஐயத்திற்கிடமின்றி! மேலும் இயேசுவை ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் பைபிள் அழைப்பதால், அவர் என்ன போதித்தாரோ அதில் நாம் விசுவாசம் வைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பின்பற்ற வேண்டும் அல்லவா?’—யோவான் 13:13; மத்தேயு 16:16.
இயேசுவைப் பின்பற்றுதல்
ஆ, இங்குதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது! “இரட்சிக்கப்பட்டு” இருக்கிறவர்கள் என்று சொல்லப்பட்ட பல ஆட்களுக்கு, இயேசுவைப் பின்பற்றுவதற்கோ அவருக்குக் கீழ்ப்படிவதற்கோ ஓரளவுக்கு மாத்திரம் எண்ணம் இருப்பதாகத் தோன்றுகிறது. உண்மையில், புராட்டஸ்டண்ட் பாதிரி ஒருவர் எழுதினார்: “நிச்சயமாகவே, இயேசுவிலிருக்கும் நம் விசுவாசம் தொடர வேண்டும். ஆனால், அது முழுமையாக இருக்கவேண்டும், அல்லது கட்டாயமாகத் தொடரப்படவேண்டும் என்ற விவாதத்திற்கு ஆதாரம் பைபிளில் கிடையவே கிடையாது.”
இதற்கு முரணாக, தாங்கள் “இரட்சிக்கப்பட்டு” இருப்பதாக நினைக்கும் சில ஆட்களின் மத்தியில் சர்வசாதாரணமாகக் காணப்படும் ஒழுக்கக்கேடான பழக்கங்களைப் பைபிள் பட்டியலிடுகிறது. அத்தகைய வழிகளில் தொடர்ந்து இருந்தவனைக்குறித்து, அது கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையிட்டது: “அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.” கடவுள் தம்முடைய கிறிஸ்தவ சபையைப் பொல்லாத ஆட்கள் கறைபடுத்த நிச்சயம் விரும்ப மாட்டார்!—1 கொரிந்தியர் 5:11-13.
அப்படியென்றால், இயேசுவைப் பின்பற்றுவது எதை அர்த்தப்படுத்துகிறது மற்றும் நாம் அதை எவ்வாறு செய்யலாம்? இயேசு என்ன செய்தார்? அவர் ஒழுக்கங்கெட்டவராகவோ ஒரு விபசாரக்காரராகவோ ஒரு குடிகாரராகவோ ஒரு பொய்யராகவோ இருந்தாரா? தொழிலில் நேர்மையற்றவராக அவர் இருந்தாரா? நிச்சயமாகவே இல்லை! நீங்கள் ஒருவேளை கேட்கலாம், ‘ஆனால், அந்தக் காரியங்களையெல்லாம் என் வாழ்க்கையிலிருந்து நான் களைந்துவிட வேண்டுமா?’ பதிலுக்காக எபேசியர் 4:17-லிருந்து 5:5 வரை ஆழ்ந்து ஆராயுங்கள். நாம் எதை செய்தாலும் பரவாயில்லை, கடவுள் நம்மை ஏற்றுக்கொள்வார் என்று அது சொல்வதில்லை. அதற்கு மாறாக, “ஒழுக்க உணர்வை இழந்துவிட்டவர்களாய்” (NW) இருக்கிற உலகப்பிரகாரமான தேசத்தாரைப் போல் இல்லாமல், “நீங்களோ இவ்விதமாய் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. . . . முந்தின நடக்கைக்குரிய . . . பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, . . . திருடுகிறவன் இனித் திருடாமல், . . . பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. . . . விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே,” என்று அது நம்மை வித்தியாசமானவர்களாக இருக்கச் சொல்கிறது.
இயேசுவின் முன்மாதிரிக்கு இசைவாக வாழ, குறைந்தது முயற்சியைக்கூட செய்யவில்லையென்றால் நாம் அவரைப் பின்பற்றுகிறோமா? கிறிஸ்துவைப் போன்றே நம் வாழ்க்கையைப் பெருமளவில் மாற்றுவதற்கு நாம் உழைக்க வேண்டாமா? அந்த முக்கியமான கேள்வி அரிதாகவே சிந்திக்கப்படுகிறது, அப்படியே சிந்திக்கப்பட்டாலும், அதனை சிந்தித்த ஆட்கள் ஒரு மதத்தின் துண்டுப்பிரதி சொல்வதைப்போன்றே சொல்கிறார்கள்: “நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே—இப்போதே கிறிஸ்துவிடம் வாருங்கள்.”
“நமது கடவுளின் தகுதியற்ற தயவைக் காமவிகாரத்துக்கு ஏற்றவாறு புரட்டி, நம்முடைய ஒரே உரிமைக்காரரும் கர்த்தருமாகிய இயேசுவுக்குப் பொய்யராக நிரூபிக்கும்” பக்தியற்ற ஆட்களைப் பற்றி இயேசுவின் சீஷருள் ஒருவர் எச்சரித்தார். (யூதா 4, NW) உண்மையில், எவ்வாறு நாம் கடவுளுடைய இரக்கத்தை ‘காமவிகாரத்திற்கு ஏற்றவாறு புரட்டக்கூடும்?’ மனித அபூரணத்தின் பாவங்களையெல்லாம் நம்மை விட்டு நீக்க முயற்சிப்பதற்கு மாறாக, தொடர்ந்து செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, வேண்டுமென்றே செய்யும் பாவங்களையெல்லாம் இயேசுவின் பலி நிவர்த்தி செய்துவிடும் என்று நினைத்துக்கொள்வதன் மூலம் இவ்வாறு செய்வோம். நிச்சயமாகவே, அமெரிக்காவின் ஒரு பிரபலமான சுவிசேஷகர் சொன்னதை ஒத்துக்கொள்ள விரும்பமாட்டோம், அவர் சொன்னார், நீங்கள் “மாசு நீக்க, விட்டொழிக்க, உருமாற” தேவையே இல்லை.—வேறுபடுத்திக்காண்க: அப்போஸ்தலர் 17:30; ரோமர் 3:25; யாக்கோபு 5:19, 20.
நம்பிக்கை செயலைத் தூண்டும்
“இயேசுவில் விசுவாசிப்பது” ஒரு ஒற்றைச் செயல் என்றும், கீழ்ப்படிய தூண்டும் அளவுக்கு நம்முடைய விசுவாசம் வலிமையாக இருக்க தேவையில்லை என்றும் பலரிடம் கூறப்படுகிறது. ஆனால் இதை பைபிள் ஒத்துக்கொள்வதில்லை. கிறிஸ்தவ மார்க்கத்தைத் தொடங்கும் ஆட்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இயேசு சொல்லவில்லை. அதற்கு மாறாக, அவர் கூறினார்: “முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மத்தேயு 10:22) பைபிள் நம்முடைய கிறிஸ்தவ மார்க்கத்தை இறுதியில் இரட்சிப்பு என்னும் பரிசு கிடைக்கும் ஒரு ஓட்டப்பந்தயத்திற்கு ஒப்பிடுகிறது. அது நம்மை உந்துவிக்கிறது: “நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.”—1 கொரிந்தியர் 9:24.
இவ்வாறாக, “இயேசுவை ஏற்றுக்கொள்வது” இயேசுவின் மிக உயர்ந்த பலியினால் அளிக்கப்படும் ஆசீர்வாதங்களை வெறுமனே ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் இன்னும் அதிகத்தை உட்படுத்துகிறது. கீழ்ப்படிதலை தேவைப்படுத்துகிறது. நியாயத்தீர்ப்பு “தேவனுடைய வீட்டிலே” துவங்கும் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார். அவர் மேலும் கூறுவதாவது: ‘முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?’ (1 பேதுரு 4:17) ஆகவே, வெறுமனே கேட்பது, நம்புவது இவற்றைக்காட்டிலும் நாம் அதிகத்தை செய்யவேண்டும். ‘[நம்மை நாமே] வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும்’ நாம் இருக்கவேண்டும் என்று பைபிள் சொல்கிறது.—யாக்கோபு 1:22.
இயேசுவே சொன்ன செய்திகள்
பைபிளிலுள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்தில், யோவானின் மூலம் ஆரம்பகால ஏழு சபைகளுக்குக் கடத்தப்பட்ட இயேசுவின் செய்திகள் அடங்கியுள்ளன. (வெளிப்படுத்துதல் 1:1, 4) தம்மை, இந்தச் சபைகளிலுள்ள மக்கள் ஏற்கெனவே “ஏற்றுக்கொண்டுவிட்டதால்,” அதுவே போதுமானது என்று இயேசு சொன்னாரா? இல்லை. அவர்களுடைய கிரியைகளையும் பிரயாசத்தையும் பொறுமையையும் அவர் புகழ்ந்தார். அவர்களின் அன்பையும் விசுவாசத்தையும் ஊழியத்தையும் குறித்து பேசினார். ஆனால், பிசாசினால் அவர்கள் சோதனைக்குள்ளாவார்கள் என்றும், அவர்கள் ‘ஒவ்வொருவரும் [தங்களுடைய] கிரியைகளின்படியே’ பலனளிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.—வெளிப்படுத்துதல் 2:2, 10, 19, 23.
இவ்வாறாக, ஒரு மத கூட்டத்தில் இயேசுவை “ஏற்றுக்கொண்ட” உடனேயே அவர்களுடைய இரட்சிப்பு என்பது “முடிவாகிவிட்ட செயல்” என்று மக்களிடம் சொல்லப்பட்டபோது பெரும்பாலானவர்கள் புரிந்துகொண்டதைக் காட்டிலும் மிக அதிக ஈடுபாட்டை இயேசு விவரித்தார். இயேசு கூறினார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு [“தொடர்ந்து,” NW] என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.”—மத்தேயு 16:24, 25.
நம்மைநாமே வெறுக்க வேண்டுமா? இயேசுவை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமா? அதற்கு முயற்சி தேவை. அது நம் வாழ்க்கையை மாற்றும். ஆயினும், நம்மில் சிலர் ‘ஜீவனையும் இழக்க’ அதாவது அவருக்காக மரிக்கவும் வேண்டும் என்று இயேசு உண்மையில் கூறினாரா? ஆம், இத்தகைய விசுவாசம், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளும் மகிமையான காரியங்களின் அறிவிலிருந்து மாத்திரமே உதயமாகும். மத வெறியர்களால் ஸ்தேவான் என்று கல்லெறியப்பட்டாரோ அன்றே இது ஊர்ஜிதம் ஆனது, அவர்களால் ‘அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க கூடாமல் போயிற்று.’ (அப்போஸ்தலர் 6:8-12: 7:57-60) அத்தகைய விசுவாசம் நம்முடைய நாளில் நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பைபிளினால் பயிற்றுவிக்கப்பட்ட தங்களுடைய மனசாட்சியை மீறுவதற்கு பதிலாக நாஸி சித்திரவதை முகாம்களில் மரித்தார்கள்.a
கிறிஸ்தவ வைராக்கியம்
ஒருவேளை சில சர்ச்சுகளில் அல்லது மத சம்பந்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதுபோன்று இல்லாமல், நாம் விழுந்துவிடக் கூடும் என்று பைபிள் சொல்வதால் நமது கிறிஸ்தவ விசுவாசத்தை உறுதியாகப் பற்றியிருக்க வேண்டும். அது “செம்மையான வழியை” விட்டுவிட்ட கிறிஸ்தவர்களைப்பற்றி சொல்கிறது. (2 பேதுரு 2:1, 15) ஆகவே, ‘பயத்தோடும் நடுக்கத்தோடும் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுவதற்கான’ தேவை நமக்கு இருக்கிறது.—பிலிப்பியர் 2:12; 2 பேதுரு 2:20.
இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் போதிக்கையில் நேரடியாகக் கேட்ட மக்களாகிய முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இந்தக் காரியத்தை இவ்விதமாகத்தான் புரிந்துகொண்டார்களா? ஆம். அவர்கள் எதையோ செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்தனர். இயேசு கூறினார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
இயேசு இதைச் சொல்லி இரண்டு மாதங்களுக்குப் பின், ஒரே நாளில் 3,000 பேர் முழுக்காட்டப்பட்டார்கள். விசுவாசிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென்று 5,000-க்கு உயர்ந்தது. விசுவாசித்தவர்கள் மற்றவர்களுக்குப் போதித்தார்கள். துன்புறுத்துதல் அவர்களை சிதறடித்தபோது, அது அவர்களுடைய செய்தியைப் பரப்புவதற்கே ஏதுவானது. வெறும் சில தலைவர்கள் மாத்திரம் அல்ல, ஆனால் “சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்,” என்று பைபிள் சொல்கிறது. எனவேதான் நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது,” என்று அப்போஸ்தலன் பவுலால் சுமார் 30 வருடங்களுக்குப்பிறகு எழுத முடிந்தது.—அப்போஸ்தலர் 2:41; 4:4; 8:4; கொலோசெயர் 1:23.
சில தொலைக்காட்சி சுவிசேஷகர்கள் போல, ‘இயேசுவை இப்போதே ஏற்றுக்கொள்ளுங்கள், நித்தியத்திற்குமாக நீங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பீர்கள்,’ என்று சொல்வதன் மூலம் பவுல் ஆட்களை மதம் மாற்றவில்லை. அல்லது “ஒரு வாலிப பையனாக, . . . நான் ஏற்கெனவே இரட்சிக்கப்பட்டேன்,” என்று எழுதிய ஒரு அமெரிக்க பாதிரியார் வைத்திருந்த நம்பிக்கையைப் போல் அவர் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. புறதேசத்தாருக்குக் கிறிஸ்தவ செய்தியைக் கொண்டுசெல்வதற்காகப் பவுலை இயேசுதாமே தேர்ந்தெடுத்தார், அதற்குப் பின் 20 வருடங்களுக்கு மேலானப்பிறகு, கடினமாக உழைக்கும் இந்த அப்போஸ்தலன் எழுதினார்: “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே [“எவ்வகையிலும்,” NW] ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.”—1 கொரிந்தியர் 9:27; அப்போஸ்தலர் 9:5, 6, 15.
இரட்சிப்பு என்பது கடவுளிடமிருந்து வரும் இலவச பரிசு. சம்பாதித்து பெற முடியாது. இருப்பினும், அது நம் பங்கில் முயற்சியைத் தேவைப்படுத்துகிறது. ஒருவேளை யாராவது ஒருவர் உங்களுக்கு மிகவும் விலையுயர்ந்த பரிசை அளிக்கும்போது, அதை நீங்கள் எடுத்துக்கொள்ளாமல், உங்களுடன் எடுத்துச்செல்லாமல் இருப்பதன் மூலம் அதற்கு போதுமான போற்றுதலை காட்டத்தவறினால், நீங்கள் காட்டிய போற்றுதலற்ற தன்மையானது வேறு யாருக்காவது அதைக் கொடுத்துவிடும்படி பரிசளிப்பவரைத் தூண்டும். அப்படியென்றால், இயேசு கிறிஸ்துவின் ஜீவ இரத்தம் எவ்வளவு விலையுயர்ந்தது? இது ஒரு இலவச பரிசு, ஆனால் இதற்கு நாம் ஆழமான போற்றுதலை மெய்ப்பித்துக்காட்ட வேண்டும்.
உண்மை கிறிஸ்தவர்கள் கடவுள் முன் ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறதனால், அவர்கள் இரட்சிக்கப்பட்ட நிலைமையில் இருக்கிறார்கள். ஒரு தொகுதியினராக அவர்களுடைய இரட்சிப்பு நிச்சயமானது. அவர்கள் தனிப்பட்டவர்களாகக் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். இருந்தபோதிலும், நாம் தவறிவிடக்கூடும், ஏனெனில் இயேசு கூறினார்: “ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்.”—யோவான் 15:6.
‘தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது’
முந்தைய கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அந்தச் சம்பாஷணை, கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. இன்றும்கூட ஜானி, இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவின் மூலம் மாத்திரம் வரும் என்பதை நம்புகிறார், ஆனால் அதை அடைய நாம் முற்படவேண்டும் என்பதையும் உணருகிறார். அவர், மனிதவர்க்கத்தின் நம்பிக்கைக்கு உண்மையான ஊற்றுமூலத்தை பைபிள் மாத்திரம் சுட்டிக்காட்டுகிறது என்பதையும் அந்த அருமையான புத்தகத்தை நாம் படிக்க வேண்டும் என்பதையும் அதனால் நாம் தூண்டப்பட வேண்டும் என்பதையும் அது நம்மை அன்பு, விசுவாசம், கீழ்ப்படிதல், சகித்திருத்தல் ஆகிய கிரியைகளுக்கும் உந்துவிக்க விட்டுவிட வேண்டும் என்பதை மெய்யென்று உணர்ந்த நிலையில் இருக்கிறார். அதே காரியங்களை நம்பும்படி தன் பிள்ளைகளை அவர் வளர்த்தார், இப்போது அவருடைய பிள்ளைகள்தாமே தங்களுடைய பிள்ளைகளை அதே வழியில் வளர்ப்பதைக் காண்பதில் அவர் மகிழ்ச்சிகொள்கிறார். ஒவ்வொருவரும் அதே மாதிரியான விசுவாசத்தைக் கொண்டிருக்க அவர் விரும்புகிறார், அதை மற்றவர்களின் இருதயங்களிலும் மனங்களிலும் ஊன்றச்செய்ய தன்னால் இயன்றதையெல்லாம் செய்கிறார்.
‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது,’ என்று எழுத அப்போஸ்தலன் பவுல் ஏவப்பட்டார். (எபிரெயர் 4:12) அதனால் வாழ்க்கையை மாற்ற முடியும். இருதயப்பூர்வமான அன்பின், விசுவாசத்தின் மற்றும் கீழ்ப்படிதலின் கிரியைகள் உங்களை உந்துவிக்கக்கூடும். ஆனால், நீங்கள் பைபிள் சொல்வதை வெறுமனே மனதளவில் “ஏற்றுக்கொள்”வதைக்காட்டிலும் அதிகத்தை செய்ய வேண்டும். அதைப் படியுங்கள், அதனால் உங்கள் இருதயம் உந்துவிக்கப்பட விட்டுவிடுங்கள். அதன் ஞானம் உங்களை வழிநடத்தட்டும். சுமார் 50,00,000 ஆர்வமுள்ள யெகோவாவின் சாட்சிகள், 230-க்கும் மேற்பட்ட தேசங்களில் இலவச வீட்டு பைபிள் படிப்பை அளிக்கிறார்கள். அத்தகைய ஒரு படிப்பிலிருந்து நீங்கள் எதைக் கற்றுக்கொள்ளலாம் என்று பார்ப்பதற்கு, இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள். நீங்கள் பெறும் விசுவாசமும் ஆவிக்குரிய பலமும் உங்களை மகிழ்விக்குமே!
[அடிக்குறிப்பு]
a டாக்டர் கிறிஸ்டீன் இ. கிங் தன்னுடைய தி நாஸி ஸ்டேட் அண்ட் தி நியூ ரிலிஜன்ஸ்: ஃபைவ் கேஸ் ஸ்டடீஸ் இன் நான்-கன்ஃபார்மிட்டி என்னும் புத்தகத்தில் அறிவித்ததாவது: “ஜெர்மன் [யெகோவாவின்] சாட்சிகளில் இரண்டுபேரில் ஒருவர் என சிறையில் அடைக்கப்பட்டனர், நான்கு பேரில் ஒருவர் என உயிரை இழந்தனர்.”
[பக்கம் 7-ன் பெட்டி]
ஏன் ‘விசுவாசத்திற்காகக் தைரியமாய்ப் போராட வேண்டும்’?
பைபிள் புத்தகமாகிய யூதா, ‘இயேசுகிறிஸ்துவுக்காகக் காக்கப்பட்டவர்களாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு’ (NW) உரைக்கப்பட்டது. அது, அவர்கள் ‘இயேசுவை ஏற்றுக்கொண்டனர்,’ அதனால் அவர்களுடைய இரட்சிப்பு நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்று சொல்கிறதா? இல்லை, அத்தகைய கிறிஸ்தவர்களிடம் ‘விசுவாசத்திற்காகத் தைரியமாய்ப் போராட வேண்டும்’ என்று யூதா கூறினார். அவ்வாறு செய்வதற்கு மூன்று காரணங்களை அவர் கொடுத்தார். முதலாவதாக, கடவுள் ‘ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்தார்’ ஆனால் பிற்பட்டு அவர்களில் பலர் வழுவிப் போனார்கள். இரண்டாவதாக, தேவதூதர்கள்கூட கலகம் செய்து பேய்களாக மாறினார்கள். மூன்றாவதாக, கடவுள் சோதோமையும் கொமோராவையும் அழித்தார், ஏனென்றால் அந்தப் பட்டணங்களில் பாலியல் ஒழுக்கக்கேடு பயங்கரமாக அப்பியாசிக்கப்பட்டது. யூதா இந்தப் பைபிள் சம்பவங்களை “திருஷ்டாந்தமாக” அளிக்கிறார். ஆம், விசுவாசிகளும் ‘இயேசுகிறிஸ்துவுக்காகக் காக்கப்பட்டவர்களும்கூட’ உண்மையான விசுவாசத்திலிருந்து வழுவிப்போகாதபடி கவனமாக இருக்க வேண்டும்.—யூதா 1-7.
[பக்கம் 8-ன் பெட்டி]
எது சரி?
பைபிள் சொல்கிறது: “மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான்.” அது இதையும் சொல்கிறது: ‘மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான்.’ எது சரி? நாம் நீதிமான்களாகத் தீர்க்கப்படுவது விசுவாசத்தினாலா அல்லது கிரியைகளினாலா?—ரோமர் 3:28; யாக்கோபு 2:24.
பைபிளிலிருந்து கிடைக்கும் இணக்கமான பதில், இரண்டுமே சரிதான்.
கடவுள் மோசேயின் மூலம் கொடுத்த நியாயப்பிரமாணம், பல நூற்றாண்டுகளாக யூத வணக்கத்தார், குறிப்பிட்ட பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தவேண்டும், பண்டிகை நாட்களை அனுசரிக்க வேண்டும், உணவுத்திட்டம் மற்றும் மற்ற கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என்பவற்றைத் தேவைப்படுத்தியது. இறுதியான பலியை இயேசு கிறிஸ்து கொடுத்துவிட்டபிறகு, அத்தகைய ‘நியாயப்பிரமாணத்தின் கிரியைகள்’ அல்லது வெறுமனே ‘கிரியைகள்’ இனியும் தேவையில்லை.—ரோமர் 10:4.
ஆனால், நியாயப்பிரமாணத்தின்கீழ் செய்யப்பட்டுவந்த இந்தக் கிரியைகளை, இயேசுவின் உயரிய பலி மாற்றீடு செய்துவிட்டது என்னும் உண்மை, நாம் பைபிளின் போதனைகளைப் புறக்கணிக்கலாம் என்று அர்த்தப்படுத்துவதில்லை. அது சொல்கிறது: ‘கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு நம் மனச்சாட்சியை [பழைய] செத்தகிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்?’—எபிரெயர் 9:14.
நாம் எவ்வாறு ‘ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்யலாம்?’ மாம்ச கிரியைகளை எதிர்த்து போராடவும், உலகின் ஒழுக்கக்கேட்டை தடுக்கவும் அதனுடைய கண்ணிகளைத் தவிர்க்கவும் பைபிள் நமக்குச் சொல்கிறது. அது கூறுகிறது: ‘விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடி,’ “நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தை” தள்ளிவிட்டு, “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” ‘இளைப்புள்ளவர்களாய் நம் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல்’ இருப்பதற்கும் பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது.—1 தீமோத்தேயு 6:12; எபிரெயர் 12:1-3; கலாத்தியர் 5:19-21.
இந்தக் காரியங்களைச் செய்வதன் மூலம் நாம் இரட்சிப்பை சம்பாதிக்க முடியாது, ஏனென்றால் இத்தகைய பிரமிப்பூட்டும் ஆசீர்வாதங்களுக்குத் தகுதியடையுமளவுக்கு எந்த மனிதரும் என்றுமே போதுமான அளவுக்குச் செயல் நடப்பிக்க முடியாது. கடவுளுக்கும் கிறிஸ்துவுக்குமான நமது அன்பை மெய்ப்பித்துக்காட்ட நாம் தவறினாலும், நாம் என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் விரும்புகிற, பைபிள் சொல்லும் காரியங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனாலும் நாம் இந்த மகத்தான பரிசுக்குத் தகுதியானவர்கள் அல்ல. நம்முடைய விசுவாசத்தை மெய்ப்பித்துக்காட்டும் கிரியைகள் இல்லாமல் போனால், நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்று உரிமை பாராட்டுவதில் அதிகமாகக் குறைவுபடுவோம், ஏனென்றால், பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகிறது: “விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.”—யாக்கோபு 2:17.
[பக்கம் 7-ன் படம்]
பைபிளை படியுங்கள், அதனால் உந்துவிக்கப்படுங்கள்