சீஷராக்கும் ஊழியத்தில் எவ்வாறு மகிழ்ச்சியைக் கண்டடைவது
ஒருவர் அனுபவிக்கக்கூடிய மிக ஆழ்ந்த மகிழ்ச்சிகளுக்குள் ஒன்றானது, கடவுளோடு உடனுழைப்பாளராக இருப்பதாகும். இன்று, கடவுளுடைய ஊழியமானது, நீதியின் சார்பாக மனச்சாய்வுள்ள மக்களைக் கிறிஸ்தவ சபைக்குள் கூட்டிச் சேர்த்து, கிறிஸ்தவர்களாக இப்போது வாழ்க்கை நடத்தவும், மேலும் புதிய உலகத்திற்குள் தப்பிப்பிழைக்கவும்கூட அவர்களைப் பயிற்றுவிப்பதை உட்படுத்துகிறது.—மீகா 4:1-4; மத்தேயு 28:19, 20; 2 பேதுரு 3:13.
லத்தீன் அமெரிக்காவில், 1980 முதற்கொண்டு பத்து லட்சம் மக்கள், இயேசு கிறிஸ்துவின் சீஷராகியிருப்பதைக் கண்டது யெகோவாவின் சாட்சிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியின் மூலகாரணமாக இருந்திருக்கிறது. பைபிளைப் பலர் மதித்து நம்புகிற இந்தப் பலன்தரும் பிராந்தியத்தில், முழுநேர ஊழியரான சிலர், பல டஜன் கணக்கானோரை, யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும்படி உதவி செய்யக்கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். இவ்வளவு மிகுந்த அனுபவமுடையோராக, சீஷராக்கும் ஊழியத்தின் மகிழ்ச்சியைப்பற்றி ஏதாவது அவர்கள் நமக்குச் சொல்லக்கூடும். அவர்களுடைய குறிப்புரைகளில் சில, நீங்கள் வாழுமிடத்தில் சீஷராக்கும் ஊழியத்தில் மகிழ்ச்சியைக் கண்டடைய உங்களுக்கு உதவிசெய்யலாம்.
‘செம்மறியாடுகளாக’ நிரூபிக்கக்கூடியோரைக் கண்டுகொள்ளுதல்
இயேசு தம்முடைய அப்போஸ்தலரைப் பிரசங்கிக்கும்படி வெளியில் அனுப்பினபோது, ‘எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரிக்கும்படி’ சொன்னார். (மத்தேயு 10:11) ஜனங்களைச் சந்திக்க நீங்கள் செல்கையில், ஆவிக்குரியப்பிரகாரமாய் உதவி தேவைப்படுபவர்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளக்கூடும்? 50 ஆண்டுகளுக்கு மேலாக முழுநேர ஊழியராக இருந்த எட்வர்ட், இவ்வாறு சொல்கிறார்: “அவர்கள் தங்கள் மெய்யார்வமான கேள்விகளாலும், வேதாகமத்திலிருந்து பதில்கள் கொடுக்கப்படுகையில் தாங்கள் அடையும் மனதிருப்தியாலும் அதை வெளிப்படுத்துகின்றனர்.” கூடுதலாக காரல் சொல்கிறார்கள்: “ஒருவர் தன் தனிப்பட்ட பிரச்சினை அல்லது கவலைக்கான காரணம் ஒன்றை என்னிடம் நம்பிக்கையாகத் தெரிவித்தால், அது உண்மையில் உதவிக்கான ஒரு வேண்டுகோளாகும். நான் அதற்கு உதவியாயிருக்கும் தகவலை உவாட்ச் டவர் பிரசுரங்களில் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன். இத்தகைய தனிப்பட்ட அக்கறை, பைபிள் படிப்புக்கு அடிக்கடி வழிநடத்துகிறது.” எனினும், உள்ளார்ந்த அக்கறையுடையோரைக் கண்டுகொள்வது எப்போதுமே எளிதாக இருப்பதில்லை. லூயிஸ் சொல்கிறார்: “மிக அக்கறையுடையோராகக் காணப்பட்ட சிலர் சிறிதேனும் அக்கறையில்லாதவர்களாக இருந்தனர், ஆனால் முதலில் எதிர்ப்போராகக் காணப்பட்ட மற்றவர்கள், பைபிள் உண்மையில் சொல்வதைக் கேட்டபோது மாறினர்.” லத்தீன் அமெரிக்கர் பலர் பைபிளை மதிப்பதால், அவர் மேலும் சொல்கிறார்: “பைபிள் கற்பிப்பதை நான் அவர்களுக்குக் காட்டின பின்பு அதை அவர்கள் உடனடியாக ஏற்கும்போது, ஆவிக்குரியப்பிரகாரமாய் உதவிசெய்யக்கூடியவர்களை நான் கண்டுகொள்கிறேன்.” ‘தகுதியுள்ள’ இத்தகையோருக்கு ஆவிக்குரியப்பிரகாரம் படிப்படியாக முன்னேறும்படி உதவிசெய்வது, உண்மையான மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் கொண்டுவருகிறது. இதை நீங்கள் எவ்வாறு செய்யலாம்?
பைபிள் படிப்புகளைத் தொடங்குவது
‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையால்’ உண்டுபண்ணப்படுகிற பைபிள் படிப்பு உதவிகளைப் பயன்படுத்துவதே, பைபிள் சத்தியத்தைப் புரிந்துகொள்ள ஜனங்களுக்கு உதவிசெய்வதற்கான சிறந்த வழியாகப் பொதுவாய் உள்ளது. (மத்தேயு 24:45, NW) அத்தகைய பைபிள் படிப்பு உதவிகளின் பயன்மதிப்பின்பேரில் மதித்துணர்வை நீங்கள் எவ்வாறு கட்டியெழுப்பலாம்? எட்வர்ட் சொல்கிறார்: “மக்களின் சூழ்நிலைமைகள், தனிப்பட்ட தன்மைகள், மற்றும் நோக்குநிலைகள் அவ்வளவு அதிகமாய் வேறுபடுவதால், படிப்புகளைத் தொடங்குவதில் நான் இசைவிணக்கமுள்ளவனாக இருக்க முயற்சி செய்கிறேன்.” எல்லாரிடமும் ஒரே முறையை நீங்கள் பயன்படுத்த முடியாது.
சிலரைக் குறித்ததில், பைபிள் படிப்பு பாடபுத்தகம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகத் தனிமுறையான பல கலந்தாலோசிப்புகள் தேவைப்படலாம். இருப்பினும், ஒரு மிஷனரி தம்பதி இவ்வாறு அறிவிக்கின்றனர்: “நாங்கள் பொதுவாய் முதல் சந்திப்பிலேயே படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொல்கிறோம்.” ஒப்புக்கொடுத்தல் நிலை வரையாக 55 ஆட்களுக்கு உதவிசெய்திருக்கிற ஒரு சாட்சி இதைப்போல் சொல்கிறார்கள்: “பைபிள் படிப்புகளைத் தொடங்கும் என் முக்கிய முறையானது, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்திலிருந்து உடனடியாகக் குறிப்புகள் காட்டி பேசுவதாகும்.” எதையும் படிக்கும் எண்ணத்தைச் சிலர் விரும்பாவிடினும், மற்றவர்கள், தங்கள் வாழ்க்கையில் உதவியாயிருக்கும் என்று தாங்கள் நம்புகிற எதையும் படிப்பதற்கு ஆவலாயிருக்கிறார்கள். வீட்டில் இலவச பைபிள் வகுப்புகள் நடத்தும் ஏற்பாடு இவர்களுக்குப் பெரும்பாலும் கவர்ச்சிகரமாகத் தொனிக்கிறது. மிஷனரிகள் சிலர் இந்த ஏற்பாட்டை விவரித்து, பின்பு இவ்வாறு சொல்கின்றனர்: “இதை நாங்கள் எவ்வாறு செய்கிறோமென்று உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். நீங்கள் இதை விரும்பினால், தொடர்ந்து படிக்கலாம். உங்களுக்கு விருப்பமில்லை என்றால், அது உங்களைப் பொறுத்தது.” இந்த முறையில் அழைப்புக் கொடுக்கையில், அதை ஏற்க பயப்படுவோராய் ஆட்கள் உணருகிறதில்லை.
குறைந்த வருவாயும் கல்வியறிவுடையவர்களான பலருக்கு உதவி செய்திருக்கிற மற்றொரு சாட்சி இவ்வாறு சொல்கிறார்: “பைபிள் படிப்புகளைத் தொடங்குவதில் துண்டுப்பிரதிகளை முக்கியமாய்ப் பயனுள்ளவையாக நான் கண்டிருக்கிறேன்.” எந்தப் பிரசுரத்தைத் தாங்கள் பயன்படுத்தினாலும், முழுநேர போதகர்கள் பைபிளுக்கே முக்கியத்துவத்தைக் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்றனர். கரோலா இவ்வாறு சொல்கிறார்கள்: “முதல் படிப்பின்போது, முக்கிய குறிப்புகள் முனைப்பாய்த் தோன்றிநிற்கவும், பைபிள் கடினமாய்த் தோன்றாதிருக்கவும் நான் படங்களை மாத்திரமேயும் ஏறக்குறைய ஐந்து வேதவசனங்களையும் பயன்படுத்துகிறேன்.”
அக்கறையை உயிர்ப்புள்ளதாக வைத்துவருதல்
ஆட்கள் முன்னேற்ற உணர்ச்சியில் மகிழ்ச்சி அடைகின்றனர், ஆகவே ஜெனிஃபர் இவ்வாறு சிபாரிசு செய்கிறார்கள்: “படிப்பை எழுச்சிதருவதாகச் செய்யுங்கள். முன்னேறிக்கொண்டிருங்கள்.” வாரம் தவறாமல் ஒழுங்காய்ப் படிப்பை நடத்துவதும், தாங்கள் முன்னேறிக்கொண்டிருப்பதாக உணரும்படி அவர்களுக்கு உதவி செய்கிறது. குறைந்த அளவு பள்ளிப் படிப்புடையவர்களும் முன்னேறும்படி, விளக்கங்களை எளிதாக்கி, முக்கிய குறிப்புகளில் கவனத்தை ஒருமுகப்படுத்தும் முக்கியத்துவத்தை, நாட்டுப்புறங்களில் வளர்க்கப்பட்ட விசேஷ பயனியர் ஒருவர் விளக்குகிறார். அவர் சொல்கிறார்: “என் கிராமத்தில், விதைகள் விதைத்தப் பின்பு நிலத்தில் நாங்கள் தண்ணீர் தெளிக்க வேண்டியிருந்தது. தண்ணீரால் தரையை மூழ்கடித்துவிட்டோமென்றால், முளைவிடுகிற விதைகள் ஊடுருவிச் செல்ல முடியாத கடினமான மேலோடு ஒன்றை நிலம் உண்டாக்கினது, விதைகள் செத்தன. அவ்வாறே, புதிதாய் அக்கறை காட்டுவோரைப் பல குறிப்புகளைக்கொண்டு நீங்கள் திணறடித்தால், அது மீறிய கடினமாகத் தோன்றலாம், அவர்கள் விட்டு விலகிவிடுகின்றனர்.” விவரம் தேடும் மனதையுடைய ஆட்களும்கூட, பகுத்துணர்வில் முன்னேறவேண்டுமானால், ஒரு சமயத்தில் ஒரு விஷயத்தின்பேரில் மனதை ஊன்றவைக்க கற்றுக்கொள்ள வேண்டும். இயேசு தம்முடைய அப்போஸ்தலரிடம் இவ்வாறு சொன்னார்: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.”—யோவான் 16:12.
நீங்கள் சந்திப்போர், அவர்களைவிட்டு நீங்கள் சென்றபின்பு, கடவுளுடைய வார்த்தையைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்துவது, அக்கறையைக் குன்றாதபடி காத்துவருவதற்கு மற்றொரு வழியாகும். யோலான்டா இவ்வாறு சிபாரிசு செய்கிறார்கள்: “பதிலளிக்காமல் ஒரு கேள்வியை விட்டுவாருங்கள். பைபிளின் ஒரு பாகத்தை வாசிப்பது அல்லது அவர்களைப் பாதிப்பதாயிருக்கிற ஒரு விஷயத்தின்பேரில் ஆராய்ச்சி செய்வது போன்ற, சிறிது வீட்டுப்பாடத்தை அவர்களுக்குக் கொடுங்கள்.”
யெகோவாவின்பேரில் அன்பை வளர்ப்பது
‘வார்த்தையை கேட்போராக மட்டுமல்லாமல் செய்வோராகவும்’ ஆகும்படி உங்கள் மாணாக்கருக்கு நீங்கள் உதவி செய்கையில் உங்கள் மகிழ்ச்சி பெருகும். (யாக்கோபு 1:22, NW) நீங்கள் அதை எவ்வாறு செய்யலாம்? உண்மையான கிறிஸ்தவர்கள் யெகோவாவின்பேரிலுள்ள அன்பால் உள்ளத்தில் தூண்டப்படுகின்றனர். மெக்ஸிகோவிலிருந்து வரும் பேத்ரோ, இவ்வாறு விளக்குகிறார்: “ஆட்கள் தாங்கள் அறியாத ஒரு ஆளை நேசிக்க முடியாது, ஆகவே, படிப்பின் தொடக்கத்திலிருந்தே, பைபிளிலிருந்து கடவுளுடைய பெயரை அவர்களுக்கு நான் கற்பித்து, யெகோவாவின் பண்புகளை அறிவுறுத்துவதற்கான வாய்ப்புகளுக்காகத் தேடுகிறேன்.” உரையாடலில், யெகோவாவின்மீதுள்ள உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதன் மூலம் யெகோவாவின்பேரில் மதித்துணர்வை நீங்கள் கட்டியெழுப்பலாம். எலிசபெத் சொல்கிறதாவது: “யெகோவாவின் நற்குணத்தைக் குறிப்பிட நான் எப்போதும் முயற்சி செய்கிறேன். என் படிப்புகளை நடத்துகையில், அழகிய பூ ஒன்றை, அழகிய பறவை ஒன்றை, அல்லது விளையாட்டு விருப்புள்ள பூனைக்குட்டி ஒன்றைக் கண்டால், அது யெகோவாவின் படைப்பு என்று நான் எப்போதும் குறிப்பிடுகிறேன்.” “நீங்கள் அறிந்துள்ள மெய்ம்மையாக, கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய பூமியைப் பற்றி பேசுங்கள்,” என்று ஜெனிஃபர் ஆலோசனை கூறுகிறார்கள். “புதிய பூமியில் என்ன செய்ய அவர்களுக்கு விருப்பமெனக் கேளுங்கள்.”
ஒருவர், யெகோவாவைப் பற்றி தான் கற்பவற்றின்பேரில் மதித்துணர்வோடு ஆழ்ந்து சிந்திக்கையில், அது அவருடைய இருதயத்தில் ஆழமாய்ப் பதிந்து செயல்படும்படி அவரைத் தூண்டுகிறது. ஆனால் அவர் நினைவில் வைத்திருந்தால் தவிர அதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க முடியாது. ஒவ்வொரு படிப்புக்குப் பின்பும், மூன்று அல்லது நான்கு முக்கிய குறிப்புகளின்பேரில் சுருக்கமாக மறுபார்வை செய்வது நினைவில் வைப்பதற்கான ஓர் உதவியாயுள்ளது. புதியவர்கள், அடிப்படையான வேதவசனங்களை அவற்றோடு சேர்ந்த சுருக்கக் குறிப்புடன், தங்கள் பைபிளின் பின்னாக எழுதிவைக்கும்படி, பைபிள் கற்பிப்போர் பலர் செய்விக்கின்றனர். மறுபார்வை செய்வதன் மற்றொரு பயனை, இங்கிலாந்திலிருந்து வந்த மிஷனரி அம்மாள் பின்வருமாறு விளக்குகிறார்கள்: “அந்தத் தகவல் அவர்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருந்ததென நான் அவர்களைக் கேட்கிறேன். இது யெகோவாவின் வழிகளின்பேரிலும் சட்டங்களின்பேரிலும் மதித்துணர்வோடு ஆழ்ந்து சிந்திக்கும்படி அவர்களைச் செய்விக்கிறது.”
கிலியட்டின் மூன்றாவது வகுப்பில் பட்டம் பெற்றவரான உண்மையுள்ள ஒரு சாட்சி சொல்வதாவது: “நாம் ஆர்வமுள்ளோராக இருக்க வேண்டும். நாம் கற்பிப்பதை நாம் நம்புகிறோமென்பதை நம் மாணாக்கர் தெளிவாகக் காண வேண்டும்.” உங்களை மகிழ்ச்சியுடன் ‘ஊழியத்தைச் செய்பவராக்கியிருக்கிற’ விசுவாசத்தை நீங்கள் வெளிப்படுத்தினால் அது தொற்றிப் பரவக்கூடும்.—யாக்கோபு 1:25, NW.
யெகோவாவை வணங்க பலருக்கு உதவிசெய்திருக்கிற ஒரு சாட்சி சொல்வதாவது: “ஆட்கள், தங்கள் ஜெபங்களுக்குக் கிடைத்த பதில்களைக் கண்டுகொள்ள நான் அவர்களுக்கு உதவிசெய்தால், கடவுளிடம் நெருங்கியிருப்போராய் உணருகிறார்களென்று காண்கிறேன். என் சொந்த அனுபவத்திலிருந்து, இதைப் போன்ற உதாரணங்களை எடுத்து சொல்கிறேன்: பயனியர்களாக என் கூட்டாளியும் நானும் புதிய நியமன இடத்திற்கு வந்துசேர்ந்தபோது, எங்களிடம் கொஞ்சம் காய்கறிகளும், ஒரு பொட்டலம் செயற்கை வெண்ணெய்யும் மாத்திரமே இருந்தன, பணம் எதுவும் இல்லை. அந்த உணவை மாலை போஜனத்துக்குச் சாப்பிட்டு முடித்துவிட்டு, ‘நாளைக்கு நமக்கு ஒன்றும் கிடையாது,’ என்றோம். அதைக் குறித்து ஜெபித்துவிட்டு, படுக்கைக்குச் சென்றோம். அடுத்த விடியற்காலமே அவ்விடத்து சாட்சி ஒருவர் வந்து, இவ்வாறு சொல்லி தன்னை அறிமுகப்படுத்தினார்கள், ‘பயனியர்களை அனுப்பும்படி நான் யெகோவாவிடம் ஜெபித்தேன். இப்போது நான் நாளின் பெரும்பாகம் உங்களோடு சேர்ந்து ஊழியத்துக்குச் செல்லலாம், ஆனால் நான் புறம்பே கிராமத்தில் வாழ்வதால், பகலுணவை நான் உங்களுடன் சாப்பிட வேண்டும், ஆகவே இந்த உணவை நம்மெல்லாருக்கும் கொண்டுவந்திருக்கிறேன்.’ அது மிகுந்த அளவான மாட்டிறைச்சியும் காய்கறிகளும் அடங்கியதாக இருந்தது. நாம் அவருடைய ராஜ்யத்தை முதலாவதாகத் தேடினால் யெகோவா நம்மை ஒருபோதும் கைவிடுகிறதில்லை என்று நான் என் மாணாக்கருக்கு எப்போதும் சொல்கிறேன்.”—மத்தேயு 6:33.
செயல்முறையில் பயன்படுத்தக்கூடிய உதவியை அளியுங்கள்
கிறிஸ்துவின் சீஷராகும்படி செய்வதில், பைபிள் படிப்பை நடத்துவதைப் பார்க்கிலும் அதிகம் உட்பட்டுள்ளது. பயணக் கண்காணியாகப் பல ஆண்டுகள் சேவித்த மிஷனரி ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “அவர்களுக்கு நேரம் கொடுங்கள். படிப்பை முடித்த பின்பு அங்கிருந்து அவசரப்பட்டு சென்றுவிடாதீர்கள். பொருத்தமானால், சிறிது நேரம் இருந்து பேசுங்கள்.” எலிசபெத் சொல்வதாவது: “உயிர் உட்பட்டிருப்பதால் நான் அவர்களில் அக்கறை எடுக்கிறேன். அவர்கள் என் பிள்ளைகள் என்றாற்போல் பல தடவைகள் அவர்களைப் பற்றி கவலைப்படுகிறேன்.” பின்வரும் இந்த ஆலோசனைகளை மற்ற சாட்சிகள் கொடுத்தனர்: “அவர்கள் நோய்ப்பட்டிருக்கையில் அவர்களைப் போய்ப் பாருங்கள்.” “அவர்கள் வீட்டுக்கு அருகில் நீங்கள் இருக்கையில், உதாரணமாக வெளி ஊழியத்தின்போது அவ்வாறிருக்கையில், மற்ற சாட்சிகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த அவர்களிடம் சுருக்கச் சந்திப்பு செய்யுங்கள்.” ஈவா சொல்வதாவது: “அந்த நபரின் பின்சூழமைவையும் வாழ்க்கையில் சந்தர்ப்ப நிலைமையையும் புரிந்துகொள்வதற்கு கவனமாய்ச் செவிகொடுத்து கேளுங்கள். இவை, ஆட்கள் சத்தியத்துக்குச் செயல்படும் முறையைப் பாதித்து அவர்களுடைய முன்னேற்றத்துக்கு இடையூறு செய்யக்கூடும். தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச அவர்களுக்கு நம்பிக்கை இருக்கும்படி, அவர்களுடைய நண்பராக இருங்கள்.” காரல் மேலும் சொல்வதாவது: “ஒருவருடைய வாழ்க்கையில் சத்தியம் கொண்டுவரும் மாற்றங்கள் சில சமயங்களில் குடும்பத்தையும் நண்பர்களையும் இழப்பதில் விளைவடையலாம், ஆதலால் அந்த நபரில் உண்மையான அக்கறை காட்டுவது முக்கியம். பொதுவாக, நாம் வாழும் இடத்தை மாணாக்கர் அறிந்திருந்து, எந்தச் சமயத்திலும் நம்மிடம் வருவதற்கு நம்பிக்கையுடையவராக இருந்தாராகில் நல்லது.” சபையைத் தன் புதிய குடும்பமாகக் கருதும்படி அவருக்கு உதவி செய்யுங்கள்.—மத்தேயு 10:35; மாற்கு 10:29, 30.
“செயல்முறையில் பயனுள்ள உதவியைக் கொடுப்பதற்கு விழிப்புள்ளவர்களாக இருங்கள். கூட்டங்களில் அவர்களுடன் உட்கார்ந்து, அவர்களுடைய பிள்ளைகளைக் கவனிப்பதற்கு உதவி செய்யுங்கள்,” என்று யோலான்டா சொல்கிறார்கள். தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பது, சுத்தத்துக்குரிய தராதரங்களை முன்னேற்றுவிப்பது, கூட்டங்களில் குறிப்புகள் சொல்வதற்குத் தயாரிப்பது, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சுகள் கொடுப்பது எவ்வாறு என்று புதியவர்களுக்குக் காட்டுவது ஆகிய இவை யாவும் சீஷராக்கும் ஊழியத்தின் பாகமாக இருக்கின்றன. மற்றொரு சகோதரி மேலும் சொல்வதாவது: “புதியவர்களை ஊழியத்துக்காகப் பயிற்றுவிப்பது முக்கியமானது. இந்தப் பயிற்றுவிப்பு அம்சம் கவனியாமல் விடப்படுகையில், பிரசங்க ஊழியத்தைக் குறித்து சிலர் பயமுள்ளவர்களாகத் தொடர்ந்திருந்து, யெகோவாவைச் சேவிப்பதில் சந்தோஷத்தை இழந்து, நிலைத்திருக்கத் தவறுகின்றனர்.” ஆகையால், வீடுவீடாகச் செய்யும் ஊழியத்திலும், மறுசந்திப்புகள் செய்வதிலும், பைபிள் படிப்புகள் தொடங்குவதிலும் கவனமான பயிற்றுவிப்பை அளியுங்கள். உங்கள் உதவியாலும் வழிநடத்துதலாலும் உங்கள் மாணாக்கர் முன்னேற்றம் செய்வதை நீங்கள் காண்கையில் உங்கள் சந்தோஷம் மிகுதியாயிருக்கும்.
நிலைத்திருப்பதற்கு அவர்களைப் பலப்படுத்துங்கள்
“மாணாக்கர் முழுக்காட்டப்பட்டுவிட்டால் படிப்பதை விட்டுவிடும் ஒரு மனப்போக்கு உள்ளது,” என்று சீஷராக்குவதில் அனுபவமுள்ள சகோதரி எச்சரிக்கிறார்கள். புதிதாக முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர் ஆவிக்குரியப்பிரகாரம் முதிர்ச்சியடையாதவராக இருக்கிறார் என்பதை, கற்பிப்பவரும் மாணாக்கரும் நினைவில் வைக்க வேண்டும். அவருடைய விசுவாசத்திலும், கடவுளுடைய சட்டத்தின்பேரில் அவருடைய மதித்துணர்விலும், யெகோவாவின்பேரிலுள்ள அவருடைய அன்பிலும் அவர் இன்னும் அதிகமாய் வளர வேண்டியதாக இருக்கிறது. அவர் தொடர்ந்து முன்னேற்றம் செய்துகொண்டிருப்பதற்கு, தனிப்பட்ட நல்ல படிப்பு பழக்கங்களை வளர்க்கும்படி அவரை ஊக்கப்படுத்துவது முக்கியமானது.—1 தீமோத்தேயு 4:15.
படிப்படியாக முன்னேறி, சகோதரக் கூட்டத்தின் ஈகை பண்புடைய ஓர் உறுப்பினராகும்படி புதியவருக்கு உதவி தேவைப்படலாம். சகோதரருடன் நெருங்கிப் பழகுகையில் அவர்களுடைய அபூரணங்களைச் சமாளித்து நடந்துகொள்வதில் அவருக்கு வழிநடத்துதல் தேவைப்படலாம். (மத்தேயு 18:15-35) தானே ஆராய்ச்சி செய்யக்கூடியவராய்த் திறம்பட்ட கற்பிப்பவராகும்படி அவருக்கு உதவி தேவைப்படலாம். மிஷனரி ஒருவர் இவ்வாறு சொல்கிறார்கள்: “மாணாக்கர் ஒருவர் முழுக்காட்டப்பட்ட பின்பு, தன் கற்பிக்கும் திறமையை முன்னேற்றுவிக்க விரும்பினார்கள். ஆகவே, ‘அடுத்த வாரம் நான் ஒரு புதிய படிப்பை நடத்த வேண்டும், ஆனால் நான் படித்த தொடக்க அதிகாரங்களின்பேரில் என் நினைவை நான் புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம். விளக்கங்களையும் வேதவசனங்களையும் படவிளக்கங்களையும் நான் கவனத்தில் ஏற்று, படிப்பு நடத்துகையில் அவற்றைப் பயன்படுத்தக்கூடும்படி, இந்த அதிகாரங்களை ஒரு சமயத்துக்கு ஒன்றாக நீங்கள் தயவுசெய்து என்னுடன் மறுபடியும் படிக்க முடியுமா?’ என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அந்த அம்மாள் மிகச் சிறந்த கற்பிப்பவராக ஆகிவிட்டார்கள். ஒரு மாநாட்டில் அவர்களுடைய மாணாக்கரில் நான்கு பேர் முழுக்காட்டப்பட்டனர்.”
சீஷராக்குவதற்கு எடுக்கும் முயற்சிகள் ஏன் தகுந்தவை
“சீஷராக்குவதானது மேலும் அதிகம் பேர் யெகோவாவைத் துதிப்போராவதைக் குறிக்கிறது. சத்தியத்தை ஏற்போருக்கு அது ஜீவனைக் குறிக்கிறது,” என்று பாமலா சொல்கிறார்கள். “மற்றவர்களுக்குச் சத்தியத்தைக் கற்பிப்பது எனக்கு மிகவும் விருப்பம்—அது அவ்வளவு அருமையானது! மாணாக்கர் சிறிது சிறிதாய் வளர்ந்து, தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வதையும், யெகோவாவின் ஆவி இல்லாமல் வெல்ல முடியாதவையாகத் தோன்றும் இடையூறுகளை அதன் உதவியோடு வென்று மேற்கொள்வதையும் ஒருவர் காண்கிறார். யெகோவாவை நேசிப்பவராகியிருக்கிற பலர், என் மிக அருமையான நண்பர்களாகியிருக்கின்றனர்.”
ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு மிஷனரி சொல்கிறார்கள், “சீஷராகும்படி நான் உதவிசெய்திருப்போரைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கையில், நான் நம்ப முடியாதபடி, அவ்வளவு மிகக் கோழைகளான ஆட்கள், கடவுளுடைய ஊழியர்களாக மிகப் பெரும் முன்னேற்றத்தைச் செய்திருப்பதை நான் காண்கிறேன். வெல்ல முடியாத இடையூறுகளை, சந்தேகமில்லாமல் யெகோவாவின் உதவியால், மேற்கொள்ளும் ஆட்களை நான் காண்கிறேன். ஒரு காலத்தில் பிரிவுற்றிருந்த குடும்பங்கள் இப்போது ஒன்றுபட்டிருப்பதை—பொறுப்புள்ள பெற்றோருடன் மகிழ்ச்சியுள்ள பிள்ளைகளை—நான் காண்கிறேன். யெகோவாவைத் துதித்து, பயனுள்ள வாழ்க்கையை அனுபவித்துக் களிக்கும் ஆட்களை நான் காண்கிறேன். சீஷராக்குவதன் சந்தோஷம் இதுவே.”
ஆம், சீஷராக்கும் ஊழியத்தில் யெகோவா தேவனோடு உடனுழைப்பாளராக இருப்பது, ஒப்பற்ற சந்தோஷத்தின் ஊற்றுமூலமாக இருக்கிறது. மிஷனரிகளின் மற்றும் பயனியர்களின் அனுபவங்கள் இதை நிரூபித்திருக்கின்றன. கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை நீங்கள் பொருத்திப் பயன்படுத்தி, முழு ஆத்துமாவுடன் அதில் உழைத்தால் நீங்களும் அதே சந்தோஷத்தையும் மனதிருப்தியையும் கண்டடையலாம். யெகோவாவின் ஆசீர்வாதத்துடன், உங்கள் சந்தோஷம் பூரணப்பட்டிருக்கும்.—நீதிமொழிகள் 10:22; 1 கொரிந்தியர் 15:58.