உண்மையான வணக்கம் ஏன் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறது
“ஜனங்களே, நீங்கள் யா-வைத் துதியுங்கள்! இரட்சிப்பும் மகிமையும் வல்லமையும் நம்முடைய கடவுளுக்கே உரியது, ஏனெனில் அவருடைய நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை.”—வெளிப்படுத்துதல் 19:1, 2, NW.
1. எவ்வாறு மகா பாபிலோன் தன் முடிவுக்கு வரும்?
கடவுளுடைய பார்வையில் “மகா பாபிலோன்” விழுந்துவிட்டது, இப்போது அழிவை எதிர்ப்படுகிறது. உலகமெங்கும் பரவியுள்ள இந்த மத வேசி, மரணாக்கினை நிறைவேற்றத்தைத் தன் அரசியல் கள்ளக்காதலர்களின் கைகளில் சீக்கிரத்தில் அனுபவிப்பாள் என்றும் அவளுடைய முடிவு திடீரென்றும் விரைவாகவும் ஏற்படும் என்றும் பைபிள் தீர்க்கதரிசனம் தெரிவிக்கிறது. யோவானுக்குக் கொடுத்த இயேசுவின் வெளிப்படுத்துதலில் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் அடங்கியிருந்தன: “பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும். . . . என்று விளம்பினான்.”—வெளிப்படுத்துதல் 18:2, 21, 24.
2. பாபிலோனின் அழிவுக்கு யெகோவாவின் ஊழியர்கள் எவ்வாறு பிரதிபலிப்பார்கள்?
2 மகா பாபிலோனின் அழிவைக் குறித்து, சாத்தானுடைய உலகத்தின் சில தொகுதியினர் புலம்புவர், ஆனால், பரலோகத்திலோ பூமியிலோ உள்ள கடவுளுடைய ஊழியர்கள் நிச்சயமாகவே புலம்புவதில்லை. கடவுளை நோக்கி அவர்கள் இவ்வாறு மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிப்பார்கள்; “ஜனங்களே, நீங்கள் யா-வைத் துதியுங்கள்! இரட்சிப்பும் மகிமையும் வல்லமையும் நம்முடைய கடவுளுக்கே உரியது, ஏனெனில் அவருடைய நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை. தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த அந்த மகா வேசியின்மீது அவர் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றிவிட்டார், தம்முடைய அடிமைகளின் இரத்தத்தை அவளுடைய கையில் அவர் பழிவாங்கிவிட்டார்.”—வெளிப்படுத்துதல் 18:9, 10; 19:1, 2; NW.
உண்மையான மதம் பிறப்பிக்க வேண்டிய கனி என்ன?
3. என்ன கேள்விகளுக்குப் பதில் தேவை?
3 பொய் மதத்தைத் துடைத்தொழித்து இந்தப் பூமி சுத்தமாக்கப்படவிருப்பதால், என்ன வகையான வணக்கம் மீந்திருக்கும்? சாத்தானின் பொய்மத உலகப் பேரரசின் அழிவை எந்த மதத் தொகுதி தப்பிப் பிழைத்திருக்கும் என்பதை இன்று நாம் எவ்வாறு தீர்மானிக்கலாம்? இந்தத் தொகுதி பிறப்பிக்க வேண்டிய நீதியுள்ள கனி எது? யெகோவாவின் உண்மையான வணக்கத்தை வேறுபடுத்திக் கண்டறிவதற்கு பத்து நியதிகளாவது உள்ளன.—மல்கியா 3:18; மத்தேயு 13:43.
4. உண்மையான வணக்கத்துக்கான முதல் தேவை என்ன, இதைக் குறித்ததில் இயேசு எவ்வாறு முன்மாதிரியை வைத்தார்?
4 எல்லாவற்றிலும் முதலும் முக்கியமுமானது, இயேசு எதற்காக மரித்தாரோ அந்த அரசாட்சியை—அவருடைய பிதாவின் அரசாட்சியை—உண்மையானக் கிறிஸ்தவர்கள் உறுதியாக ஆதரிப்போராக இருக்க வேண்டும் என்பதே. எந்த அரசியல், மரபுக்குழு, இனம், அல்லது சமுதாய காரணத்துக்காகவும் இயேசு தம்முடைய உயிரைக் கொடுக்கவில்லை. எல்லா யூத அரசியல் அல்லது புரட்சி பேரார்வங்களுக்கும் மேலாக தம்முடைய பிதாவின் ராஜ்யத்தையே அவர் முதலாவதாக வைத்தார். உலகப்பிரகாரமான அதிகாரத்தை ஏற்கும்படி அளிக்க முன்வந்த சாத்தானுக்கு அவர் பின்வரும் வார்த்தைகளில் பதிலளித்தார்: “அப்பாலே போ, சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவையே நீ வணங்க வேண்டும், அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த சேவை செய்ய வேண்டும்,’ என்று எழுதியிருக்கிறதே.” பூமி முழுவதன்மீதும் யெகோவாவே உண்மையான பேரரசர் என்பதை எபிரெய வேத எழுத்துக்களிலிருந்து அவர் அறிந்திருந்தார். இந்த உலகத்தின் அரசியல் ஒழுங்குமுறைகளைப் பார்க்கிலும் யெகோவாவின் ஆட்சியையே சந்தேகமில்லாமல் தனிப்பட ஆதரிக்கிற மதத் தொகுதி எது?—மத்தேயு 4:10, NW; சங்கீதம் 83:17.
5. (அ) உண்மையான வணக்கத்தார் கடவுளுடைய பெயரை எவ்வாறு கருத வேண்டும்? (ஆ) யெகோவாவின் சாட்சிகள் அந்தப் பெயரை மேன்மைப்படுத்துகிறார்கள் என்று எது காட்டுகிறது?
5 இரண்டாவது தேவையாக, உண்மையான வணக்கம், கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்தி பரிசுத்தப்படுத்த வேண்டும். யெகோவா (சில மொழிபெயர்ப்புகளில் யாவே என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) என்ற தம் பெயரை சர்வவல்லவர் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு வெளிப்படுத்தினார், மேலும் இது எபிரெய வேத எழுத்துக்களில் ஆயிரக்கணக்கான தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பேயும், சில சமயங்களில் அவர்கள் அதற்கு மதிப்பு கொடாவிடினும், ஆதாம், ஏவாள், இன்னும் மற்றவர்கள் அந்தப் பெயரை அறிந்திருந்தனர். (ஆதியாகமம் 4:1; 9:26; 22:14; யாத்திராகமம் 6:2) கிறிஸ்தவமண்டலத்தின் மற்றும் யூத ஜனத்தின் மொழிபெயர்ப்பாளர்கள் பொதுவாய், கடவுளின் இந்தப் பெயரை தங்கள் பைபிள்களில் இராதபடி விட்டுவிட்ட போதிலும், யெகோவாவின் சாட்சிகள், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பில் (ஆங்கிலம்) அந்தப் பெயருக்கு அதற்குரிய இடத்தையும் நன்மதிப்பையும் கொடுத்திருக்கின்றனர். பூர்வ கிறிஸ்தவர்கள் செய்ததைப் போலவே அவர்கள் அந்தப் பெயரை மேன்மைப்படுத்துகிறார்கள். யாக்கோபு இவ்வாறு சாட்சி பகர்ந்தார்: “தம்முடைய பெயருக்கான ஒரு ஜனத்தை அவர்களிலிருந்து வெளியெடுக்கும்படி, கடவுள் எவ்வாறு முதல் தடவையாக தம்முடைய கவனத்தைப் புறஜாதியாரிடம் திருப்பினார் என்று சிமியோன் முழுமையாக விரித்துரைத்தார். இதோடு தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் ஒத்திருக்கின்றன, . . . இந்த மனிதரில் மீந்திருப்போர், என் பெயரால் அழைக்கப்படுகிற ஜனங்களாகிய, சகல ஜாதியாரின் ஜனங்களோடுகூட, யெகோவாவை ஊக்கமாய்த் தேடும்படிக்கு என்று, இவற்றைச் செய்கிற யெகோவா சொல்கிறார்.”—அப்போஸ்தலர் 15:14-17, NW; ஆமோஸ் 9:11, 12.
6. (அ) உண்மையான வணக்கத்துக்கு மூன்றாவது தேவை என்ன? (ஆ) எவ்வாறு இயேசுவும் தானியேலும் ராஜ்ய ஆட்சியை அறிவுறுத்தினர்? (லூக்கா 17:20, 21)
6 உண்மையான வணக்கத்துக்குரிய மூன்றாவது தேவையானது, ஆட்சி சம்பந்தப்பட்ட மனிதவர்க்கத்தின் பிரச்சினைகளுக்கு, சட்டப்படியானதும் திறமையாக இயங்கக்கூடியதுமான ஒரே பரிகாரமாக கடவுளுடைய ராஜ்யத்தை அது உயர்த்த வேண்டும். கடவுளுடைய ஆளுகை பூமியின்மீது அதிகாரத்தை ஏற்கும்படி, அந்த ராஜ்யம் வருவதற்காக ஜெபிக்கும்படியாக இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குத் தெளிவாகக் கற்பித்தார். கடைசி நாட்களைக் குறித்து இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கும்படி தானியேல் தேவாவியால் ஏவப்பட்டார்: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். . . . அது அந்த [உலகப்பிரகாரமான, அரசியல்] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” இந்த இருபதாம் நூற்றாண்டில், தங்கள் செயல் போக்கின் மூலம் அந்த ராஜ்யத்திற்கு முழு ஆதரவை அளிப்போராக யார் தங்களைக் காட்டியிருக்கின்றனர்—மகா பாபிலோனின் மதத்தினரா அல்லது யெகோவாவின் சாட்சிகளா?—தானியேல் 2:44; மத்தேயு 6:10; 24:14.
7. உண்மையான வணக்கத்தார் பைபிளை எவ்வாறு கருதுகின்றனர்?
7 கடவுளுடைய உண்மையான ஊழியர், பைபிளை கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாக உறுதியாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்பது கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நான்காவது தேவையாகும். ஆகையால் அவர்கள் நுட்ப குறைகாண்பதில் தங்களை உட்படுத்த மாட்டார்கள். நுட்ப குறைகாண்பதானது, பைபிளை, எல்லா பிழைகளையும் கொண்ட வெறும் மனித இலக்கிய வேலைப்பாடென மதிப்பு குறைப்பதற்கு முயற்சி செய்கிறது. பவுல் தீமோத்தேயுவுக்குப் பின்வருமாறு எழுதினபடியே, பைபிள் தேவாவியால் ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தை என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”a ஆகையால், யெகோவாவின் சாட்சிகள், பைபிளைத் தங்கள் வழிகாட்டியாகவும், தங்கள் அன்றாட வாழ்க்கைக்கான கையேடாகவும், எதிர்காலத்துக்கான தங்கள் நம்பிக்கையின் ஊற்றாகவும் ஏற்கின்றனர்.—2 தீமோத்தேயு 3:16, 17.
அன்புக்குரிய மதம், பகைக்குரியதல்ல
8. உண்மையான வணக்கத்துக்கு ஐந்தாவது தேவை என்ன?
8 இயேசு தம்மை உண்மையுடன் பின்பற்றினோரை எவ்வாறு வேறுபடுத்திக் காட்டினார்? அவருடைய பதிலானது, உண்மையான வணக்கத்தின் இன்றியமையாத ஐந்தாவது அடையாளத்துக்கு நம்மைக் கொண்டுவருகிறது. இயேசு இவ்வாறு சொன்னார்: ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.’ (யோவான் 13:34, 35) இயேசு எவ்வாறு தம்முடைய அன்பைக் காண்பித்தார்? தம்முடைய உயிரை கிரய பலியாக கொடுப்பதன் மூலமே. (மத்தேயு 20:28; யோவான் 3:16) மெய் கிறிஸ்தவர்களுக்கு உண்மையான அன்பு ஏன் ஓர் இன்றியமையாத பண்பாயிருக்கிறது? யோவான் விளக்கினார்: “பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்புகூரக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; . . . அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.”—1 யோவான் 4:7, 8.
9. யார் உண்மையான அன்பைக் காட்டியிருக்கின்றனர், எவ்வாறு?
9 வகுப்பின, தேசிய, அல்லது மரபின பகைக்கெதிரிலுங்கூட இந்த வகையான அன்பை, நம்முடைய காலங்களில் யார் காட்டியிருக்கிறார்கள்? தங்கள் அன்பு நீடித்திருக்கும்படி, மரணம் வரையிலுங்கூட, தங்கள் உச்சக்கட்ட பரீட்சையில் தேறினவர்கள் யார்? 1994-ல் ருவாண்டாவில் நடந்த இன அழிவு நடவடிக்கைக்கு மறுப்புக்கிடமின்றி ஓரளவு பொறுப்புடைய கத்தோலிக்க குருமாரும் கன்னியாஸ்திரீகளும் என்று நாம் சொல்லலாமா? ‘மரபின சுத்திகரிப்பிலும்,’ பால்க்கன்ஸில் உள்ளூர் போரில் கிறிஸ்தவத்துக்கு மாறான செயல்களிலும் ஈடுபட்ட செர்பியாவின் ஆர்த்தடாக்ஸினரா அல்லது க்ரோயேஷீயாவின் கத்தோலிக்கரா? அல்லது கடந்த சில பத்தாண்டுகளின்போது வட அயர்லாந்தில் தப்பெண்ணத்தையும் பகையையும் மேலும் பெருகச் செய்த கத்தோலிக்க அல்லது புராட்டஸ்டண்ட் மதகுருக்களா? நிச்சயமாகவே, அத்தகைய சண்டை சச்சரவுகள் எதிலும் யெகோவாவின் சாட்சிகள் பங்குகொண்டதாகக் குற்றம் சாட்ட முடியாது. அவர்கள் தங்கள் கிறிஸ்தவ அன்புக்கு மாறாக நடப்பதைப் பார்க்கிலும், சிறைச்சாலைகளிலும் சித்திரவதை முகாம்களிலும், மரணம் வரையாகவுங்கூட துன்பம் அனுபவித்திருக்கிறார்கள்.—யோவான் 15:17.
10. உண்மையானக் கிறிஸ்தவர்கள் ஏன் நடுநிலை வகிக்கிறார்கள்?
10 இந்த உலகத்தின் அரசியல் விவகாரங்களைக் குறித்ததில் நடுநிலை வகிப்பது, கடவுள் ஏற்கத்தக்க வணக்கத்தின் ஆறாவது தேவை. கிறிஸ்தவர்கள் ஏன் அரசியலில் நடுநிலை வகிப்போராக இருக்க வேண்டும்? இந்த நிலையை வகிப்பதற்கு திடமான காரணத்தை, பவுலும், யாக்கோபும், யோவானும் நமக்குத் தருகிறார்கள். ‘சாத்தான் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளாக’ இருக்கிறான் என்றும், பிரிவினையுள்ள அரசியல்கள் உட்பட, தன்னால் கூடிய எல்லா வழிவகைகளையும் கொண்டு அவிசுவாசிகளின் மனதை அவன் குருடாக்கிக் கொண்டிருக்கிறான் என்றும் அப்போஸ்தலன் பவுல் எழுதினார். “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை,” என்று சீஷனாகிய யாக்கோபு கூறினார். மேலும், ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என்று அப்போஸ்தலன் யோவான் சொன்னார். ஆகையால் உண்மையான கிறிஸ்தவன், சாத்தானின் கேடடைந்த உலக அரசியலிலும் அதிகாரத்திலும் உட்படுவதன்மூலம் கடவுளிடமான தன் பக்தியை விட்டுக்கொடுத்து கெடுத்துக்கொள்ள முடியாது.—2 கொரிந்தியர் 4:4, NW; யாக்கோபு 4:4; 1 யோவான் 5:19.
11. (அ) போரை கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருதுகின்றனர்? (ஆ) இந்த நிலைக்கு என்ன வேதப்பூர்வ ஆதாரம் உள்ளது? (2 கொரிந்தியர் 10:3-5)
11 முன் குறிப்பிடப்பட்ட இரண்டு தேவைகளையும் கருதுகையில், ஏழாவதான ஒன்று தெளிவாகிறது, அதாவது, போர்களில் உண்மையான கிறிஸ்தவ வணக்கத்தார் பங்குகொள்ளக் கூடாது என்பதே. உண்மையான மதமானது, அன்பில் ஆதாரம் கொண்ட உலகமெங்குமுள்ள ஒரு சகோதரத்துவமாக இருப்பதால், ‘உலகத்திலுள்ள அந்த முழு சகோதர கூட்டத்தை’ எதுவும் பிரிக்கவோ நிலைகுலைவிக்கவோ முடியாது. பகையை அல்ல, அன்பையே இயேசு கற்பித்தார்; போரை அல்ல, சமாதானத்தையே கற்பித்தார். (1 பேதுரு 5:9, NW; மத்தேயு 26:51, 52) ஆபேலைக் கொலைசெய்யும்படி காயீனைத் தூண்டிய அதே ‘பொல்லாங்கனாகிய’ சாத்தான், மனிதவர்க்கத்துக்குள் பகையைத் தொடர்ந்து விதைத்துக்கொண்டும், அரசியல், மத, மற்றும் மரபின பிரிவினைகளின் அடிப்படையில் சண்டை சச்சரவுகளையும் இரத்தஞ்சிந்துதலையும் தூண்டிவிட்டுக்கொண்டும் இருக்கிறான். உண்மையான கிறிஸ்தவர்கள், என்ன அனுபவிக்க வேண்டியிருப்பினும், ‘இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதில்லை,’ அடையாளக் கருத்தில், அவர்கள் ஏற்கெனவே ‘தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்து’ விட்டார்கள். கடவுளுடைய ஆவியின் சமாதானமான கனியை அவர்கள் பிறப்பிக்கிறார்கள்.—1 யோவான் 3:10-12; ஏசாயா 2:2-4; கலாத்தியர் 5:22, 23.
தூய்மையான நடத்தையையும் போதகங்களையும் கடவுள் ஆசீர்வதிக்கிறார்
12. (அ) எட்டாவது தேவை என்ன, ஆனால் என்ன மதப் பிரிவினைகளை நீங்கள் குறிப்பிடலாம்? (ஆ) இந்த எட்டாவது தேவையை பவுல் எவ்வாறு முக்கியப்படுத்திக் காட்டினார்?
12 கிறிஸ்தவ ஒற்றுமை உண்மையான வணக்கத்தின் எட்டாவது தேவை. எனினும், கிறிஸ்தவமண்டலத்தின் பிரிவினையுள்ள மதங்கள் இதை அடைவதற்கு உதவிசெய்திருக்கவில்லை. மத மூலப் பெரும் பிரிவுகள் என்றழைக்கப்படுபவை பல, பல்வேறு பிரிவுகளாகத் தகர்ந்துவிட்டிருக்கின்றன, குழப்பமே அதன் பலனாக உள்ளது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களிலுள்ள பாப்டிஸ்ட் மதத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அது வட பாப்டிஸ்ட்டுகள் (ஐ.மா.-விலுள்ள அமெரிக்கன் பாப்டிஸ்ட் சர்ச்சுகள்) தெற்கு பாப்டிஸ்ட்டுகள் (தெற்கு பாப்டிஸ்ட் கன்வென்ஷன்) என்று பிரிவுற்றிருப்பதையும் உட்பிளவுகளின் விளைவாக உண்டாயிருக்கிற டஜன்கணக்கான மற்ற பாப்டிஸ்ட் தொகுதிகளையும் கவனியுங்கள். (உவர்ல்ட் கிறிஸ்டியன் என்ஸைக்ளோப்பீடியா, பக்கம் 714) கோட்பாட்டின் அல்லது சர்ச் அரசாங்கத்தின் வேறுபாடுகளிலிருந்து பல பிரிவுகள் (உதாரணமாக, பிரஸ்பிட்டேரியன், இப்பிஸ்கப்பலியன், காங்க்ரிகேஷனல்) தோன்றியிருக்கின்றன. கிறிஸ்தவமண்டலத்தின் பிரிவுகள் அதற்குப் பறம்பேயுள்ள மதங்களுக்கு—புத்த மதமோ, இஸ்லாமோ, இந்து மதமோ எதுவாயினும் அதற்கு—இணையொத்தவையாக உள்ளன. அப்போஸ்தலன் பவுல் பூர்வ கிறிஸ்தவர்களுக்கு என்ன அறிவுரை கொடுத்தார்? “சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.”—1 கொரிந்தியர் 1:10; 2 கொரிந்தியர் 13:11.
13, 14. (அ) ‘பரிசுத்தராயிருப்பது’ என்பதால் குறிக்கப்படுவது என்ன? (ஆ) எவ்வாறு உண்மையான வணக்கம் சுத்தமாக வைக்கப்படுகிறது?
13 கடவுளின் அங்கீகாரத்தைப் பெற்ற மதத்துக்கு ஒன்பதாவது தேவை என்ன? லேவியராகமம் 11:45-ல் பைபிள் நியமம் ஒன்று கூறப்பட்டுள்ளது: “நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.” அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு எழுதினபோது இந்தத் தேவையைத் திரும்பக் கூறினார்: ‘உங்களை அழைத்த பரிசுத்தருக்கு ஒத்தபடி நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராகுங்கள்.’—1 பேதுரு 1:15, திருத்திய மொழிபெயர்ப்பு.
14 பரிசுத்தராயிருக்கத் தேவைப்படும் இதில் எது குறிப்பாக உணர்த்தப்படுகிறது? யெகோவாவின் வணக்கத்தார், ஆவிக்குரியப்பிரகாரமும் ஒழுக்கப்பிரகாரமும் சுத்தமாயிருக்க வேண்டும் என்பதாகும். (2 பேதுரு 3:14) மனந்திரும்பாத, வேண்டுமென்றே குற்றம் செய்யும் பாவிகளுக்கு அங்கு இடமில்லை. கிறிஸ்து அளித்த மீட்பின் கிரய பலிக்கு, இவர்கள் தங்கள் நடத்தையால் அவமதிப்பைக் காட்டுகின்றனர். (எபிரெயர் 6:4-6) கிறிஸ்தவ சபை மாசற்றதாகவும் பரிசுத்தமாகவும் வைக்கப்பட வேண்டுமென்று யெகோவா கட்டளையிடுகிறார். எவ்வாறு அது நிறைவேற்றப்படுகிறது? சபையைக் கறைபடுத்துவோரை சபைநீக்கம் செய்யும் நீதிவிசாரணை நடவடிக்கையால் ஓரளவில் நிறைவேற்றப்படுகிறது.—1 கொரிந்தியர் 5:9-13.
15, 16. என்ன மாற்றங்களைக் கிறிஸ்தவர்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் செய்திருக்கின்றனர்?
15 கிறிஸ்தவ சத்தியத்தை அறிவதற்கு முன்பு, பலர் ஒழுக்கக்கேடான, சிற்றின்பத்தோய்வான, தன்னலமே கருதும் வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஆனால் கிறிஸ்துவைப் பற்றிய வார்த்தை அவர்களை மாற்றினது, தங்கள் பாவங்களுக்காக அவர்கள் மன்னிப்பைப் பெற்றனர். பவுல் பின்வருமாறு எழுதினபோது இதை மனதில் பதியுமாறு கூறினார்: ‘அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் . . . கழுவப்பட்டீர்கள்.’—1 கொரிந்தியர் 6:9-11.
16 வேத வார்த்தைகளுக்கு மாறான தங்கள் நடத்தையை விட்டு மனஸ்தாபப்பட்டு திரும்பி, கிறிஸ்துவையும் அவருடைய போதகங்களையும் உண்மையாகப் பின்பற்றுபவராகிறவர்களை, யெகோவா அங்கீகரிக்கிறார் என்பது தெளிவாயிருக்கிறது. அவர்கள் தங்களைப்போல் தங்கள் அயலாரை உண்மையில் நேசித்து, கேட்க மனமுள்ளோர் யாவருக்கும் ஜீவ செய்தியை அளிக்கும் ஊழியத்தில் விடாது நிலைத்திருப்பது போன்ற பல வழிகளில் அதைக் காட்டுகின்றனர்.—2 தீமோத்தேயு 4:5.
“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”
17. உண்மையான வணக்கத்துக்குரிய பத்தாவது தேவை என்ன? உதாரணங்களைக் கொடுங்கள்.
17 தம்மை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்வோருக்கு பத்தாவதான ஒரு தேவையை யெகோவா வைத்திருக்கிறார்—தூய்மையான போதகம். (யோவான் 4:23, 24) இயேசு தம்மைப் பின்பற்றினோரிடம் இவ்வாறு கூறினார்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) அழியாத ஆத்துமா, நரக அக்கினி, உத்தரிக்கும் ஸ்தலம் போன்ற கடவுளுக்கு-அவமதிப்புண்டாக்கும் கோட்பாடுகளிலிருந்து பைபிளின் சத்தியம் நம்மை விடுதலையாக்குகிறது. (பிரசங்கி 9:5, 6, 10; எசேக்கியேல் 18:4, 20) “மகா பரிசுத்த திரித்துவம்” ஆகிய கிறிஸ்தவமண்டலத்தின் இந்தப் பாபிலோனிய இரகசியத்திலிருந்து அது நம்மை விடுதலையாக்குகிறது. (உபாகமம் 4:35; 6:4, தி.மொ.; 1 கொரிந்தியர் 15:27, 28) பைபிள் சத்தியத்துக்குக் கீழ்ப்படிவது, அன்பும், அக்கறையும், தயவும், இரக்கமுமுள்ள ஆட்களாவதில் பலன் தருகிறது. டோமால்டி டொர்குமாடாவைப் போன்ற பழிவாங்கும் எண்ணமுள்ள கொடுங்கோன்மை விசாரணைக்காரரையோ, சிலுவைப்போர்களைத் தூண்டியியக்கிய வெறுக்கத்தக்க போர் நாடுவோரையோ, உண்மையானக் கிறிஸ்தவம் ஒருபோதும் ஆதரித்து இடமளிக்கவில்லை. எனினும் சரித்திரம் முழுவதிலும், நிம்ரோதின் காலத்திலிருந்து இப்போது வரையாகவாவது, மகா பாபிலோன் இந்த வகையான கனியையே விளைவித்திருக்கிறது.—ஆதியாகமம் 10:8, 9.
தனி வேறுபாடுடைய ஒரு பெயர்
18. (அ) உண்மையான வணக்கத்துக்குரிய இந்தப் பத்து தேவைகளையும் பூர்த்தி செய்வோர் யார், எவ்வாறு? (ஆ) நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள ஆசீர்வாதத்தைச் சுதந்தரிப்பதற்கு தனிப்பட்டவராய் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்?
18 உண்மையான வணக்கத்தின் இந்தப் பத்து தேவைகளையும் உண்மையில் நிறைவேற்றுவோர் யார்? தங்களைப் பற்றிய பதிவில் உத்தமத்தைக் காப்போராயும் சமாதானமாயிருப்போராயும் மற்றவர்களால் அறியப்பட்டும் ஒப்புக்கொள்ளப்பட்டும் இருப்போர் யார்? யெகோவாவின் சாட்சிகள் ‘இந்த உலகத்தின் பாகமாக இராதது’ பூகோளம் முழுவதிலும் கவனிக்கப்பட்டிருக்கிறது. (யோவான் 15:19, NW; 17:14, 16; 18:36) இயேசு கிறிஸ்துதாமே தம்முடைய பிதாவுக்கு உண்மையுள்ள சாட்சியாக இருந்ததுபோல், யெகோவாவின் பெயரை ஏற்றிருப்பதற்கும் அவருடைய சாட்சிகளாக இருப்பதற்கும் அவருடைய ஜனங்கள் சிலாக்கியம் அளிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பரிசுத்த பெயர் குறித்துநிற்பதன்படி வாழவேண்டிய நம்முடைய பொறுப்பைப் பற்றி உணர்வுள்ளோராக அதை நாம் ஏற்றிருக்கிறோம். மேலும், அவருடைய சாட்சிகளாக, எத்தகைய மகிமையான எதிர்பார்ப்பு நமக்கு முன்பாக உள்ளது! கீழ்ப்படிதலுள்ள, ஒன்றுபட்ட மனித குடும்பத்தின் பாகமாக இருந்து, இங்கே பூமியில் திரும்பக் கொண்டுவரப்பட்ட பரதீஸில் சர்வலோக பேரரசரை வணங்கும் எதிர்பார்ப்பு. “அவருடைய நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை” ஆதலால், அத்தகைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, உண்மையான வணக்கத்துடன் தொடர்ந்து தெளிவாக நம்மை அடையாளம் காட்டிக்கொண்டு, யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை நாம் பெருமிதத்துடன் ஏற்றிருப்போமாக!—வெளிப்படுத்துதல் 19:1, NW; ஏசாயா 43:10-12, தி.மொ.; எசேக்கியேல் 3:11.
[அடிக்குறிப்பு]
a பைபிள் மொழிபெயர்ப்புகள்தாமே கடவுளால் ஏவப்பட்டவையல்ல. மொழிபெயர்ப்புகள், தங்கள் இயல்பில், பைபிள் எழுதப்பட்ட மூல மொழிகளைப் புரிந்துகொள்வதில் வேறுபாடுகளைப் பிரதிபலிக்கலாம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ மகா பாபிலோனின் அழிவை யெகோவாவின் ஊழியர்கள் எவ்வாறு கருதுகின்றனர்?
◻ உண்மையான வணக்கத்துக்குரிய முக்கிய தேவைகள் யாவை?
◻ சத்தியம் உங்களை எவ்வாறு விடுதலையாக்குகிறது?
◻ யெகோவாவின் சாட்சிகளாக என்ன தனிப்பட்ட மதிப்பு நமக்கு உள்ளது?
[பக்கம் 17-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டும் கற்பித்துக்கொண்டும் இருக்கின்றனர்
[பக்கம் 18-ன் படம்]
உலக அரசியலையும் போர்களையும் குறித்ததில், மெய்க் கிறிஸ்தவர்கள் நடுநிலை வகிப்போராக எப்போதும் இருந்திருக்கின்றனர்
[படத்திற்கான நன்றி]
Airplane: Courtesy of the Ministry of Defense, London