உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 5/15 பக். 8-9
  • தைரியத்துடன் பேசின ஒரு சிறுமி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தைரியத்துடன் பேசின ஒரு சிறுமி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கருத்தைத் தெரிவிக்க தைரியம்
  • நாகமான் குணமடைதல்
  • நமக்குப் படிப்பினைகள்
  • அவள் உதவிசெய்ய விரும்பினாள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • மாவீரரும் குட்டிப் பெண்ணும்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • பிடிவாதக்காரர் கீழ்ப்படிந்தது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • பலம்படைத்த ஒருவருக்கு ஒரு சிறுமி உதவுகிறாள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 5/15 பக். 8-9

அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்

தைரியத்துடன் பேசின ஒரு சிறுமி

சீரியாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே, பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டில், உறவுகள் முறிந்துவிட்ட நிலையில் இருந்தன. சண்டை மூளுவது அவ்வளவு சர்வசாதாரணமாக இருந்ததால், வன்முறை ஏதுமின்றி மூன்று வருடங்கள் சென்றதானது, வரலாற்று பதிவை ஏற்படுத்தும் ஒரு சங்கதியாக இருந்தது.—1 இராஜாக்கள் 22:1.

விசேஷமாக அக்காலத்தில் அச்சுறுத்தியவை எவையென்றால், நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் அடங்கிய சீரியாவின் கொலை கும்பல்கள். இந்தப் போர்வீரர்கள் இஸ்ரவேலர்களிடத்தில் திடீரென்று தாக்குதல் நடத்தி, சூறையாடுவர், பலரையும்—சிறார்களைக்கூட—பலாத்காரமாக இழுத்துச்சென்று, அடிமைப்படுத்துவர்.

ஒரு திடீர் தாக்குதலின்போது, “ஒரு சிறு பெண்” அவளுடைய பெற்றோரிடமிருந்து இரக்கமின்றி பிரித்து கொண்டுபோகப்பட்டாள். (2 இராஜாக்கள் 5:2) சீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டதும், ஒருவேளை அவள் அச்சமாக உணர்ந்த, முன்பின் தெரியாதவர்களுடன்—சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், மரங்களையும், செடிகளையும், கற்களையும்கூட வணங்கிய மக்களுடன்—வாழ கட்டாயப்படுத்தப்பட்டாள். ஒரே உண்மைக் கடவுளாகிய யெகோவாவை வணங்கிய அவளுடைய குடும்பத்தாரிலிருந்தும் நண்பர்களிலிருந்தும் எவ்வளவு வித்தியாசமானவர்களாக இருந்தனர் அவர்கள்! இருந்தபோதிலும், யெகோவாவின் வணக்கத்தைப் பொருத்தமட்டில், இந்த அந்நிய சூழலில்கூட இந்தப் பெண் குறிப்பிடத்தக்க தைரியத்தை வெளிக்காட்டினாள். அதன் விளைவாக, சீரியாவின் ராஜாவுக்குக்கீழ் சேவை செய்துகொண்டிருந்த ஒரு முக்கிய அதிகாரியின் வாழ்க்கையையே மாற்றினாள். எப்படி என்று நாம் பார்ப்போம்.

கருத்தைத் தெரிவிக்க தைரியம்

பைபிள் பதிவில் அந்தச் சிறுமியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சீரியாவின் ராஜாவாகிய இரண்டாம் பெனாதாத்தின் கீழ் இருந்த நாகமான் ஒரு திடகாத்திரமான படைத்தலைவன், அவருடைய மனைவியினிடத்தில் அவள் ஒரு பணிவிடைப் பெண்ணானாள். (2 இராஜாக்கள் 5:1) நாகமான் உயர்வாக மதிக்கப்பட்டபோதிலும், அவருக்கு அருவருப்பான வியாதியாகிய குஷ்டரோகம் இருந்தது.

ஒருவேளை இந்தச் சிறுமியின் கண்ணியமான குணநலமானது நாகமானின் மனைவியை அவளிடத்தில் தன் உள்ளத்தை ஊற்றிவிட தூண்டியிருக்கும். சிறுமியிடத்தில் அந்தப் பெண்மணி கேட்டிருக்கலாம், ‘குஷ்டரோகிகளுக்கு இஸ்ரவேலில் என்ன செய்யப்படும்?’ இந்த இஸ்ரவேல பணிப்பெண் தைரியமாகக் கூற வெட்கப்படவில்லை: “என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும், அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்.”—2 இராஜாக்கள் 5:3.

இந்தச் சிறுமியின் வார்த்தைகள் பிள்ளைத்தனமான கற்பனை என்று புறக்கணிக்கப்படவில்லை. அவை ராஜாவாகிய பெனாதாத்திடம் முறையிடப்பட்டன, அவர் நாகமானையும் மற்றவர்களையும் 150 கிலோமீட்டர் தூரமிருந்த சமாரியாவுக்குப் பயணமாகி, இந்தத் தீர்க்கதரிசியைத் தேடும்படி அனுப்பி வைத்தார்.—2 இராஜாக்கள் 5:4, 5.

நாகமான் குணமடைதல்

நாகமானும் அவருடைய ஆட்களும், பெனாதாத்திடமிருந்து அறிமுக நிருபத்துடனும், பெருமளவு பரிசு பொருட்களுடனும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமினிடத்திற்குப் போனார்கள். ஆச்சரியத்திற்கு இடமின்றி, கன்றை வணங்கிய ராஜாவாகிய யோராம், கடவுளுடைய தீர்க்கதரிசியின்மேல் அந்தப் பணிப்பெண் வெளிக்காட்டியதைப் போன்ற விசுவாசத்தைக் காட்டவில்லை. அதற்கு மாறாக, நாகமான் அவனிடம் சண்டையைக் கிளப்பவே வந்திருப்பதாக நினைத்தான். யோராமின் கலக்கத்தைக் கேள்விப்பட்ட தீர்க்கதரிசி எலிசா, நாகமானை தன் வீட்டுக்கு அனுப்பும்படி ராஜாவை வேண்டி ஒரு செய்தியை உடனடியாக அனுப்பிவைத்தார்.—2 இராஜாக்கள் 5:6-8.

தீர்க்கதரிசியாகிய எலிசாவின் வீட்டை நாகமான் அடைந்தபோது, அவரிடத்தில் ஒரு ஆளை அனுப்பினார், அவன் கூறினான்: “நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்.” (2 இராஜாக்கள் 5:9, 10) நாகமானுக்கு கடுங்கோபம் வந்தது. ஒரு அற்புதகரமான மற்றும் பகட்டான குணப்படுத்துதலை எதிர்பார்த்து, அவர் கேட்டார்: “நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ”? எலிசாவின் வீட்டைவிட்டு நாகமான் கோபத்தோடே திரும்பினார். ஆனால், நாகமானின் வேலைக்காரர்கள் நயம்பட கூறியபோது, இறுதியில் அவர் சம்மதித்தார். யோர்தான் நதியிலே ஏழுதரம் குளித்தப்பின், “அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல் மாறி, அவன் சுத்தமானான்.”—2 இராஜாக்கள் 5:11-14.

எலிசாவினிடத்திற்குத் திரும்பி வந்து, “இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிரப் பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்” என்று நாகமான் கூறினார். “கர்த்தருக்கே அல்லாமல் அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை” என்ற உறுதியை நாகமான் எடுத்தார்.—2 இராஜாக்கள் 5:15-17.

நமக்குப் படிப்பினைகள்

இளம் பணிப்பெண் தைரியமாகக் கருத்தைத் தெரிவித்திராவிடின், நாகமான் அந்தத் தீர்க்கதரிசியினிடத்திற்குச் சென்றிருக்கமாட்டார். அதேபோன்று, இன்று பல இளம் பிள்ளைகள் நடந்துகொள்கிறார்கள். பள்ளியில், கடவுளைச் சேவிப்பதில் ஆர்வமில்லாத மாணாக்கரால் அவர்கள் சூழப்பட்டிருக்கலாம். இருப்பினும், அவர்கள் என்ன நம்புகிறார்களோ அதைத் தைரியமாகத் தெரிவிக்கிறார்கள். அவர்களில் சிலர், குறிப்பிடத்தக்கவிதத்தில் இளம் பிராயத்திலேயே அவ்வாறு செய்ய தொடங்கிவிடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவிலுள்ள ஐந்து வயது சிறுமி அலெக்சாண்ராவைக் கவனியுங்கள். அவள் பள்ளியில் சேர்ந்ததும், அவளுடைய அம்மா ஆசிரியையிடம் யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளை விளக்குவதற்காக ஒரு சந்திப்புத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அலெக்சாண்ராவின் அம்மாவுக்கு ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. “உங்களுடைய நம்பிக்கைகளில் பலவும், அதேசமயத்தில் பள்ளிக்கூடத்தில் அலெக்சாண்ரா என்ன செய்வாள் என்ன செய்யமாட்டாள் என்பனவும் எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று அந்த ஆசிரியைக் கூறினார். பள்ளிக்கூடத்தில் சாட்சி பிள்ளைகள் வேறு யாரும் இல்லாததால், அலெக்சாண்ராவின் அம்மா வியப்படைந்தார். “அலெக்சாண்ரா அனைத்தையும் எங்களுக்குத் தெரிவித்துவிட்டாள்” என்று அந்த ஆசிரியை விளக்கம் கொடுத்தார். ஆம், இந்தச் சிறுமி, ஏற்கெனவே தன் ஆசிரியையுடன் ஒரு சாதுரியமான கலந்தாலோசிப்பைக் கொண்டிருந்தாள்.

இத்தகைய இளம் பிள்ளைகள் தைரியமாகப் பேசுகிறார்கள். இவ்வாறாக அவர்கள் சங்கீதம் 148:12, 13-க்கு இசைவாக செயல்படுகிறார்கள்: “வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, . . . அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்