இனி தப்பெண்ணமே இல்லாமல் போகையில்!
இந்தக் கவலையான உலகில், தப்பெண்ணத்தை மேற்கொள்வது ஓர் அணுவை பிளப்பதைக்காட்டிலும் அதிக கஷ்டமானது என்று விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை கூறியதாக அறிவிக்கப்பட்டது. அவ்விதமே, எட்வர்ட் ஆர். மர்ரோ, இவர் இரண்டாம் உலகப் போரின்போது, பிரபலமான பத்திரிகையாளராக ஆனார், பின்னர் ஐ.மா. இன்ஃபர்மேஷன் ஏஜென்ஸியின் இயக்குநராக இருந்தார், அவர் குறிப்பிட்டதாவது, “தப்பெண்ணங்களை எவரும் நீக்க முடியாது—வெறுமனே அவற்றை அவர்களால் அடையாளம் காணத்தான் முடியும்.”
இந்தக் கூற்றுகள் உண்மை என்று தோன்றுகின்றனவா? ஓரவஞ்சனையையும் இன வெறியையும் நீக்குவது இயலாத காரியமா? தப்பெண்ணத்தைப்பற்றி கடவுள் எவ்வாறு உணருகிறார்?
கடவுள் பட்சபாதம் உள்ளவரல்ல
பட்சபாதத்திற்கு எதிராக பைபிள் பேசுகிறது. (நீதிமொழிகள் 24:23; 28:21) அது குறிப்பிடுகிறது, “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.” (யாக்கோபு 3:17) பண்டைய இஸ்ரவேலில் இருந்த நியாயாதிபதிகளிடத்தில் அத்தகைய ஞானம் வலியுறுத்தப்பட்டது. “நியாயவிசாரணையில் நீங்கள் அநியாயம் செய்யக்கூடாது; எளியவனை நீங்கள் பட்சபாதமாய் நடத்தக்கூடாது, வலியவனுக்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கக்கூடாது” என்று அவர்கள் கட்டளையிடப்பட்டனர்.—லேவியராகமம் 19:15, NW.
பட்சபாதத்திற்கும் தப்பெண்ணத்திற்கும் எதிரான பைபிளின் உறுதியான நிலைநிற்கையானது இயேசு கிறிஸ்துவாலும் அவருடைய அப்போஸ்தலர்கள் பேதுரு மற்றும் பவுலாலும் வலியுறுத்தப்பட்டது. “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்தவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்த” அவர்களிடம் இயேசு பட்சபாதம் அற்றவராக இருந்தார். (மத்தேயு 9:36) அவர் கற்பித்ததாவது: “தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.”—யோவான் 7:24.
யெகோவா தேவன் தாமே பட்சபாதம் அற்றவர் என்று பேதுருவும் பவுலும் நமக்குத் திரும்பவும் நம்பிக்கையூட்டுகிறார்கள். பேதுரு குறிப்பிட்டதாவது: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 10:34, 35) அப்போஸ்தலனாகிய பவுல் நம்மிடம் கூறுவதாவது: “தேவனிடத்தில் பட்சபாதமில்லை.”—ரோமர் 2:11.
பைபிளின் செல்வாக்கு
பைபிள், அதனால் வழிநடத்தப்படுவோரின் ஆளுமைகளை மாற்றக்கூடிய வல்லமையை உடையதாய் இருக்கிறது. எபிரெயர் 4:12 சொல்கிறது: ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது.’ தப்பெண்ணமுள்ள ஒரு நபர், யெகோவாவின் உதவியால், தான் சிந்திக்கும் விதத்தையேகூட மாற்றிக்கொள்ளமுடியும் மற்றும் மற்றவர்களிடம் அவர் தொடர்புகொள்கையில் பட்சபாதம் அற்றவராகவும் ஆகமுடியும்.
உதாரணத்திற்கு, தர்சு பட்டணத்தானாகிய சவுலின் காரியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பைபிள் பதிவின் பிரகாரம், அவர் வளைந்துகொடுக்காத மத பாரம்பரியங்களைப் பின்பற்றியதன் காரணமாக, ஒரு காலத்தில் கிறிஸ்தவ சபையை வன்மையாக எதிர்த்தார். (அப்போஸ்தலர் 8:1-3) யூத பாரம்பரியத்தினால், எல்லா கிறிஸ்தவர்களும் விசுவாசதுரோகிகள் என்றும், உண்மை வழிபாட்டின் எதிரிகள் என்றும் முழுமையாக அவர் நம்பினார். கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை ஆதரிப்பதற்கு அவருடைய தப்பெண்ணம் அவரை வழிநடத்தியது. பைபிள் சொல்கிறது, அவர் ‘ஆண்டவரின் சீஷரைப் பயமுறுத்துவதும் கொலை செய்வதுமாய்ச் சீறிக்கொண்டேயிருந்தார்.’ (அப்போஸ்தலர் 9:1, திருத்திய மொழிபெயர்ப்பு) அவர் அவ்வாறு செய்துகொண்டிருக்கையில் தான் கடவுளுக்கு பரிசுத்த சேவை செய்வதாக எண்ணினார்.—யோவான் 16:2-ஐ ஒப்பிடுக.
இருப்பினும், தர்சு பட்டணத்தானாகிய சவுலால், தன்னுடைய மிதமிஞ்சிய தப்பெண்ணத்தை ஒழித்துவிட முடிந்தது. அவர்தாமே ஒரு கிறிஸ்தவராகவும் ஆனாரே! பிற்பாடு, பவுலாக, இயேசு கிறிஸ்துவின் ஓர் அப்போஸ்தலனாக அவர் எழுதினார்: “முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்.”—1 தீமோத்தேயு 1:13.
தன்னுடைய சிந்திக்கும் விதத்தில் அத்தகைய மாற்றம் செய்த நபர் பவுல் ஒருவர் மாத்திரம் அல்ல. அவருடைய உடன் சுவிசேஷகனாகிய தீத்துவுக்கு எழுதிய கடிதத்தில், பவுல் கிறிஸ்தவர்களைக் கண்டித்துரைத்ததாவது: “ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.”—தீத்து 3:2, 3.
தப்பெண்ணத்தின் தடைகளை உடைத்தெறிதல்
இன்று, அந்த ஆலோசனையைப் பின்பற்றுவதற்கு உண்மை கிறிஸ்தவர்கள் கடும் முயற்சி எடுக்கிறார்கள். மேலீடான கருத்துகளின் அடிப்படையில் ஜனங்களை எடைபோடுவதைத் தவிர்க்க அவர்கள் விரும்புகிறார்கள். இது மற்றவர்களை ‘தூஷிப்பதிலிருந்து’ அவர்களைத் தடுத்துவிடுகிறது. இவ்வுலகின், தேசியத்துவ, மரபு, இனவேற்றுமை ஆகியவற்றின் எல்லைகளை எல்லாம் கடந்துசெல்லும் சர்வதேச சகோதரத்துவத்தை அவர்கள் அனுபவித்து களிக்கிறார்கள்.
பிரேஸில் நாட்டைச்சேர்ந்த, கறுத்த தோல் நிறம் கொண்ட எனரிகேவின் அனுபவத்தை சிந்தித்துபாருங்கள். இன வேற்றுமைக்கு அவர் இலக்கானதால், வெள்ளையர்மீது ஆழமான பகைமையை வளர்த்தார். அவர் விளக்குகிறார்: “வெள்ளைத் தோல் நிறம் கொண்ட சாட்சிகள் இருவர் கடவுளின் பெயரைப்பற்றி கூறுவதற்காக என் வீட்டிற்கு வந்தார்கள். முதலில், கேட்க வேண்டாம் என்று இருந்தேன், ஏனென்றால் நான் வெள்ளைக்காரர்களை நம்புவதில்லை. ஆனால், அவர்களுடைய செய்தி, சத்தியமாகத் தோன்றுகிறது என்று நான் விரைவிலேயே கண்டுணர்ந்தேன். உடனடியாக, பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டேன். நான் கொண்டிருந்த முதல் கேள்வியானது, ‘உங்கள் சர்ச்சில் கறுப்பர்கள் பலர் இருக்கிறார்களா?’ ‘ஆம்’ என்று அவர்கள் விடையளித்தனர். அதன்பிறகு, என்னுடைய பைபிள் கதை புத்தகம்a என்ற புத்தகத்தின் கடைசி படத்தை அவர்கள் எனக்குக் காண்பித்தார்கள், வெவ்வேறு இனத்தைச்சார்ந்த இளம் பிள்ளைகளின் சித்திரம் தீட்டப்பட்டிருந்தது. அதில் கறுப்பர் சிறுவன் ஒருவனும் இருந்தான், இது என்னை உற்சாகப்படுத்தியது. பிறகு நான் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு விஜயம் செய்தேன், அங்கு வெவ்வேறு இன மக்கள் ஒருவரை ஒருவர் மரியாதையோடு நடத்துவதை பார்த்தேன். இது எனக்கு மிக முக்கியமாக இருந்தது.”
இப்போது, யெகோவாவின் சாட்சிகளுள் ஒருவராக, உண்மை கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் உறுப்பினராய் இருப்பதில் எனரிகே ஆனந்தம் கொள்கிறார். இதற்கான புகழ் எந்த மனிதனுக்கும் செல்வதில்லை என்பதை அவர் புரிந்துள்ளார். அவர் சொல்கிறார்: “யெகோவாவும் இயேசுவும் என் சார்பில் செய்த அனைத்திற்காகவும் இன்று நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒரே நோக்கத்தில் ஒன்றுபட்டுள்ள, எல்லா இனங்களையும், நிறங்களையும், பின்னணிகளையும் கொண்ட யெகோவாவினுடைய லட்சக்கணக்கான உண்மைப்பற்றுறுதியுள்ள ஊழியர்களுடன் நான் சேவை செய்கிறேன்.”
வளர்ந்து வருகையில், தப்பெண்ணத்திற்கு இலக்கான மற்றொருவர் டெரியோ. 16-ம் வயதில், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார். அவர் கவனித்ததாவது: “சாட்சிகளின் மத்தியில், இன சம்பந்தமாக தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற உணர்வு இல்லாமல் இருப்பதைக் கண்டேன்.” உண்மையான அன்பின் சூழலால், அவர் நல் அபிப்பிராயம் கொண்டார். சபையில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த ஆட்கள் பொறுப்புள்ள ஸ்தானங்களில் சேவித்ததை அவர் விசேஷமாக கவனித்தார். டெரியோ சபைக்கு வெளியே உள்ள ஆட்களால் எப்போதெல்லாம் சில விதமான தப்பெண்ணத்திற்கும் ஓரவஞ்சனைக்கும் ஆளாகிறாரோ அப்போதெல்லாம் யெகோவா எல்லா தேசங்களின், இனங்களின், மொழிகளின் மக்களை நேசிக்கிறார் என்று நினைவுகூருகிறார்.
எவ்வாறு சமாளிப்பது
நாம் அனைவருமே, கண்ணியத்தோடும் மரியாதையோடும் நடத்தப்பட விரும்புகிறோம். அதனால்தான், தப்பெண்ணத்திற்கு இலக்காவதைப் பொறுத்துக்கொள்வது கடினமான ஒரு சோதனையாக இருக்கிறது. இந்தப் பொல்லாத உலகின் தப்பெண்ண மனப்பான்மைகளுக்கு உள்ளாகும் அனைத்திலிருந்தும் நம்மை கிறிஸ்தவ சபை பாதுகாப்பதில்லை. பிசாசான சாத்தான் இந்த உலகின் காரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்வரை, அநியாயங்கள் இருக்கத்தான் செய்யும். (1 யோவான் 5:19) வெளிப்படுத்துதல் 12:12 நம்மை எச்சரிக்கிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்.” அவனுடைய எண்ணமானது வெறுமனே, அசௌகரியத்தை உண்டாக்கவேண்டும் என்பதல்ல. உயிரிகளைக் கொன்று தின்னும் பிராணிக்கு அவன் ஒப்பிடப்படுகிறான். அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்கு கூறுவதாவது: “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச் சுற்றித்திரிகிறான்.”—1 பேதுரு 5:8.
பைபிள் இதையும்கூட நமக்குச் சொல்கிறது: “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.” (யாக்கோபு 4:7) தப்பெண்ணத்தைச் சமாளிப்பதற்கு உள்ள மிகச் சிறந்த ஓர் உதவியானது, தாவீது ராஜா செய்ததைப்போல் பாதுகாப்புக்காக யெகோவாவை நோக்கியிருப்பதாகும்: “என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.” (சங்கீதம் 71:4) நாம் சங்கீதக்காரனைப் போல ஜெபிக்கவும்கூட செய்யலாம்: “தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.”—சங்கீதம் 56:1.
அத்தகைய ஜெபங்களுக்கு கடவுள் எவ்வாறு பிரதிபலிப்பார்? பைபிள் பதிலளிக்கிறது: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.” (சங்கீதம் 72:12, 13) ஏற்றக்காலத்தில் யெகோவா, அநியாயத்திற்கு இலக்கான அனைவரின் துயரைத் தீர்ப்பார் என்று அறிந்துகொள்வது எவ்வளவு இன்பமாயிருக்கிறது!
‘அவர்கள் எந்தத் தீங்கும் செய்யமாட்டார்கள்’
இந்த உலகின் அரசாங்கங்கள், அவற்றின் சட்டங்களாலும் திட்டங்களாலும் தப்பெண்ணத்தை எதிர்த்து தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கலாம். அவை சமத்துவத்தையும் பட்சபாதமின்மையையும் ஒருவேளை தொடர்ந்து வாக்களிக்கலாம். ஆனால், அவற்றால், வெற்றிகாண முடியாது. (சங்கீதம் 146:3) கடவுளால் மாத்திரமே செய்யமுடியும்; தப்பெண்ணத்தோடு நடத்தப்படும் முறைகள் அனைத்தையும் அவர் நீக்கிவிடுவார். மனிதவர்க்கத்தை ஐக்கியப்பட்ட ஒரே குடும்பமாக அவர் மாற்றுவார். “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்” இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவை தப்பிப்பிழைத்து, சமாதானத்தோடு வாழ்வதை அனுபவிப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 10.
இனம் மற்றும் சமுதாய தப்பெண்ணத்தினால் உண்டான அனைத்து தீங்கையும் யெகோவா அழித்திடுவார். கற்பனைசெய்து பாருங்கள், எவருமே நியாயமற்றமுறையில் நடத்தப்படமாட்டார்கள்! “அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.” (மீகா 4:4) ஏசாயா 11:9, (NW) கூறுகிறது: “அவர்கள் எந்தத் தீங்கும் செய்யமாட்டார்கள்.”
ஒருவேளை இப்போது, தப்பெண்ணத்திற்கு இலக்கானவராக நீங்கள் இருப்பீர்களென்றால், எதிர்காலத்தைப்பற்றிய இந்த மகத்தான நம்பிக்கை, யெகோவாவுடன் உங்களுக்கிருக்கும் உறவை பலப்படுத்தும். இது, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் அநீதியைச் சகிப்பதற்கு உங்களுக்கு உதவும். தப்பெண்ணத்தை நீங்கள் சமாளித்துக்கொண்டு முன்னோக்கி பார்த்துக் கொண்டிருக்கையில், பின்வரும் பைபிளின் ஞானமான ஆலோசனையைப் பின்பற்றுங்கள்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.”—சங்கீதம் 31:24.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo