வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
சகோதரர்கள், கடவுளுடைய ராஜ்யம் பூமிக்கு வரவேண்டும் என்பதைக் குறித்து பேசுவதையோ அல்லது அதற்காக ஜெபம் செய்வதையோ நாம் சில சமயங்களில் கேட்கிறோம். இது சரியான ஒரு சொற்றொடரா?
தெளிவாக சொல்லவேண்டுமென்றால், காரியங்களை சொல்வதற்கு இது வேதப்பூர்வமான முறையல்ல. கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்திற்குரியது. இதன் காரணமாக, அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுத முடிந்தது: “கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக, ஆமென்.”—2 தீமோத்தேயு 4:18; மத்தேயு 13:44; 1 கொரிந்தியர் 15:50.
பரலோகத்தில் அந்த ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டது, அது மறுபடியும் நிலைநாட்டப்பட்ட பூமிக்குரிய பரதீஸிற்கோ அல்லது வேறெந்த இடத்திற்கோ எப்போதுமே இடமாற்றம் செய்யப்படாது. இயேசு கிறிஸ்துவே அந்த ராஜ்யத்தின் ராஜா. ராஜாவாக, இயேசு தூதர்களின்மீது அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். ஆகவே, பரலோகத்தில் கடவுளுடைய வலதுபாரிசத்தில் இருப்பதே அவருடைய ஆட்சியதிகாரத்திற்கான சரியான இடமாகும். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் பரலோகத்தில் அவருடன் சேர்ந்துகொள்வர்.—எபேசியர் 1:19-21; வெளிப்படுத்துதல் 5:9, 10; 20:6.
அப்படியென்றால், கீழ்க்கண்டவாறு சொல்லும் கர்த்தரின் ஜெபத்தின் ஒரு பாகமான “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்பதில் காணப்படும் விண்ணப்பங்களைக் கடவுளிடம் இனிமேலும் நாம் சொல்லக்கூடாது என்று இது அர்த்தப்படுத்துகிறதா? (மத்தேயு 6:10) அதற்கு மாறாக, அந்த ஜெபம் சரியானது, இன்னும் அர்த்தம் நிறைந்ததாய் உள்ளது.
கடவுளுடைய ராஜ்யம் பூமியைக் குறித்ததில் ஒரு தீர்வான முறையில் எதிர்காலத்தில் செயல்படும், கர்த்தரின் ஜெபத்திலுள்ள வார்த்தைகளுக்கு ஒப்பான பதங்களை நாம் பயன்படுத்தி ஜெபம் செய்யும்போது இதைத்தான் நம் மனதில் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, ராஜ்யம் எல்லா தேசங்களையும் அழிப்பதற்காக “வந்து” இந்தப் பூமியின்மீது ஆட்சியதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதாக தானியேல் 2:44 முன்னறிவிக்கிறது. புதிய எருசலேம் பரலோகத்திலிருந்து கீழே இறங்கி வருவதாக வெளிப்படுத்துதல் 21:2 சொல்கிறது. புதிய எருசலேம், கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கப்போகும் 1,44,000 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களால் ஆனது. அவர்கள் கிறிஸ்துவுடன் ராஜ்யத்தில் உடன் சுதந்தரர்களாகவும் இருக்கிறார்கள். வெளிப்படுத்துதல் 21:2, பூமியினிடமாக அவர்கள் தங்கள் கவனத்தைத் திருப்புவதை விவரிக்கிறது, இது உண்மையுள்ள மனிதவர்க்கத்திற்கு மிகப் பெரிய ஆசீர்வாதங்களில் விளைவடையும்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
இவையும் மற்ற அருமையான தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும் வரைக்கும், “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு இணங்க யெகோவா தேவனிடம் ஜெபம் செய்வது தொடர்ந்து சரியானதாக இருக்கும். ஆனால் ராஜ்யம் கிரகமாகிய பூமிக்கு சொல்லர்த்தமான அர்த்தத்தில் வராது என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். ராஜ்ய அரசாங்கம் பூமியிலல்ல ஆனால் பரலோகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Earth: Based on NASA photo