கிலியட் பள்ளி தனது 100-வது வகுப்பினரை அனுப்புகிறது
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி, நவீன காலங்களில் கடவுளுடைய ராஜ்யத்தின் உலகளாவிய பிரசங்கிப்பில் ஒரு முக்கிய பாகத்தை வகித்திருக்கிறது. கிலியட் பள்ளி, 1943-ல் மிஷனரிகளை பயிற்றுவிக்க ஆரம்பித்ததன் காரணமாக, அதன் பட்டதாரிகள் 200-க்கும் மேலான நாடுகளில் சேவித்திருக்கின்றனர். மார்ச் 2, 1996-ல் அதன் 100-வது வகுப்பினர் பட்டமளிப்பைப் பெற்றனர்.
நியூ யார்க்கின் பாட்டர்ஸனிலுள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில் இரண்டு மீட்டருக்கும் அதிகமான பனி பெய்திருந்த பருவத்தின்போது மாணாக்கர்கள் இந்தப் பள்ளியில் ஆஜராயிருந்தனர். அவர்களது பட்டமளிப்பு நாளின்போது பனி பெய்துகொண்டிருந்தது ஆச்சரியமல்லவே. இருந்தபோதிலும் அரங்கம் நிரம்பியிருந்தது, மேலும் நிரம்பிவழிந்த கூட்டத்தாரான மொத்தம் 2,878 நபர்கள், பாட்டர்ஸனிலும் உவால்கில்லிலும் புருக்ளினிலும் நிகழ்ச்சியைக் கேட்டனர்.
ஆளும் குழுவினுடைய போதனா ஆலோசனைக்குழுவின் ஓர் அங்கத்தினரான தியடோர் ஜரெஸ் அக்கிராசனராக இருந்தார். அநேக நாடுகளைச் சேர்ந்தவர்களான அங்கிருந்த விருந்தினர்களை அனலோடு வரவேற்ற பின்பு, எழுந்து நின்று பாட்டு எண் 52-ஐ பாடும்படி எல்லாரையும் அவர் அழைத்தார். யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் புத்தகத்திலிருந்து “நம் பிதாவின் பெயர்” என்ற பாடலை அவர்கள் பாடியபோது அரங்கம் யெகோவாவிற்கான துதியை எதிரொலித்தது. அந்தப் பாட்டு, யெகோவாவைத் துதிப்பதற்காக கல்வியைப் பயன்படுத்துவதைக் குறித்த அக்கிராசனரின் குறிப்புகளோடு இணைந்து, பின்தொடரயிருந்த நிகழ்ச்சிநிரலுக்கு சௌந்தரிய சூழ்நிலையை ஏற்படுத்தியது.
முதிர் வயதுள்ளவர்களிடமிருந்து வேதப்பூர்வ ஆலோசனை
யெகோவாவின் நீண்ட நாளைய ஊழியக்காரர்கள் அநேகர், பட்டம்பெறும் வகுப்பினருக்குக் கொடுத்த சிறுசிறு பேச்சுக்கள் நிகழ்ச்சிநிரலின் முதல் பகுதியில் இடம்பெற்றன. 1940-ல் தன் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தவரும் தலைமை அலுவலக ஊழியருமான ரிச்சர்ட் ஏப்ரஹாம்சன், “மாற்றியமைத்துக் கொள்ள உங்களைத் தொடர்ந்து அனுமதியுங்கள்” என்பதாக வகுப்பினரைத் துரிதப்படுத்தினார். கிலியட்டின் ஐந்து மாத பள்ளிப் படிப்பு உட்பட, மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க வித்தியாசமான காலப்பகுதிகளை கிறிஸ்தவர்களாக வாழ்க்கையில் அவர்கள் ஏற்கெனவே அனுபவித்திருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டினார். ஆகவே அவர்கள் ஏன் மாற்றியமைத்துக்கொள்ள தங்களையே தொடர்ந்து அனுமதிக்க வேண்டும்?
2 கொரிந்தியர் 13:11-ல் (NW) அப்போஸ்தலனாகிய பவுலினால் பயன்படுத்தப்பட்ட பதம், “மிக நுட்ப கவனிப்பைத் தேவைப்படுத்தும் யெகோவாவின் தராதரங்களை எட்டுவதற்காக, படிப்படியான செய்முறையை, அதாவது, யெகோவா செய்யும் உருவாக்கத்திற்கோ அல்லது புடமிடுதலுக்கோ தொடர்ந்து கீழ்ப்பட்டிருப்பதையும் சீர்செய்யப்படுவதையும் குறிப்பாக உணர்த்துகிறது” என்பதாக பேச்சாளர் விளக்கினார். தங்களது அயல்நாட்டு நியமிப்புகளில், விசுவாசத்தின் பேரில் புதிய சவால்களை பட்டம்பெறும் வகுப்பினர் எதிர்ப்படலாம். அவர்கள் ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம், வித்தியாசமான பண்பாட்டிற்கும் வாழும் சூழ்நிலைக்கும் தக்கவாறு மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம், வெவ்வேறு வகையான பிராந்தியங்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். தங்கள் மிஷனரி ஹோம்களிலும் புதிய சபைகளிலும் வித்தியாசமான ஆளுமைகளையுடைய ஆட்களோடு செயல்தொடர்பும் கொள்வார்கள். இந்த எல்லா சூழ்நிலைகளிலும் மாற்றியமைத்துக்கொள்வதற்கான விருப்பத்துடன் பைபிள் நியமங்களை அவர்கள் கவனமாக பொருத்தினால், அப்போது, அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியபடி “தொடர்ந்து சந்தோஷமாக” இருக்கவும் அவர்களால் முடியும்.
நிகழ்ச்சிநிரலில் பங்கேற்ற ஆளும் குழுவின் ஐந்து அங்கத்தினர்களில் ஒருவரான ஜான் பார், 1 கொரிந்தியர் 4:9-லிருந்து (NW) தன் கருப்பொருளை எடுத்தார். தூதர்களுக்கும் மனிதர்களுக்கும் கிறிஸ்தவர்கள் காட்சிப்பொருளாக இருக்கிறார்கள் என்பதை செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தோருக்கு அவர் நினைப்பூட்டினார். “இதை அறிந்திருப்பது, வாழ்க்கையில் ஒரு கிறிஸ்தவனின் போக்கிற்கு இருக்கும் முக்கியத்துவத்தை அதிகளவில் அதிகரிக்கிறது; முக்கியமாக, தான் சொல்வதன் மூலமும் செய்வதன் மூலமும் கவனித்துக்கொண்டிருக்கும் பார்க்கமுடிந்த மற்றும் பார்க்கமுடியாத அனைவர்மீதும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஒருவர் உணரும்போது இது உண்மையாயிருக்கிறது. இதை, கிலியட்டின் 100-வது வகுப்பைச் சேர்ந்த அன்பான சகோதரர்களும் சகோதரிகளுமான நீங்கள் பூமியின் கடைமுனைகளுக்குச் செல்லும்போது நினைவில் வைத்தால் உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்மையான ஒன்றாக இருக்கும் என்பதாக நான் நம்புகிறேன்” என்று அவர் சொன்னார்.
சத்தியத்தைக் கற்றுக்கொள்ள செம்மறியாடு போன்ற ஜனங்களுக்கு உதவும்போது, ‘மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாகிறது’ என்பதை ஞாபகத்தில் வைக்கும்படி சகோதரர் பார் 48 மாணாக்கர்களையும் துரிதப்படுத்தினார். (லூக்கா 15:10) 1 கொரிந்தியர் 11:10-ஐ குறிப்பிட்டுக் காண்பித்து, தேவராஜ்ய ஏற்பாடுகளைக் குறித்த ஒருவருடைய மனப்பான்மை, நம்மால் பார்க்கமுடிந்த நம் சகோதர சகோதரிகளை மாத்திரமல்லாமல் நம்மால் பார்க்கமுடியாத தூதர்களையும் பாதிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தப் பரந்த நோக்குநிலையை மனதில் கொண்டிருப்பது எவ்வளவு நன்மையளிப்பதாய் இருக்கும்!
யெகோவா “தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்” என்பதைக் காண்பிப்பதற்காக சங்கீதம் 125:1, 2; சகரியா 2:4, 5; மற்றும் சங்கீதம் 71:21 (NW) போன்ற வசனங்களை ஆளும் குழுவின் மற்றொரு அங்கத்தினரும் கிலியட் பள்ளியின் பட்டதாரியுமான ஜெரட் லாஷ் கலந்தாலோசித்தார். யெகோவா எல்லா பக்கத்திலும் அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கிறார். கடவுள் மகா உபத்திரவத்தின்போது மட்டும்தான் அப்படிப்பட்ட பாதுகாப்பை அளிப்பாரா? பேச்சாளர் பதிலளித்தார்: “இல்லை, ஏனெனில் யெகோவா ஏற்கெனவே ‘அக்கினி மதிலாக,’ தம்முடைய ஜனங்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கிறார். போருக்கு பிற்பட்ட வருடமான 1919-ல் ராஜ்யத்தின் நற்செய்தியை சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக உலகம் முழுவதுமாக பிரசங்கிக்கும் விருப்பத்தோடு ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மீதியானோர் ஆவலோடு இருந்தனர். பரலோகத்தில் இருக்கும் அடையாளப்பூர்வ எருசலேமின் பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தனர். முடிவு காலத்தின்போது ஒரு தொகுதியாக இந்தப் பிரதிநிதிகளுக்கு தெய்வீக பாதுகாப்பு அளிப்பதாக யெகோவா உத்தரவாதம் அளிக்கிறார். எவரால் உண்மையில் அவர்களை நிறுத்த முடியும்? எவராலும் முடியாது.” அவர்களுக்கும் தெய்வீக சித்தத்தை நிறைவேற்றுவதில் அவர்களோடு நெருக்கமாக கூட்டுறவுகொள்ளும் அனைவருக்கும் எவ்வளவு நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது!
பள்ளிக் குழுவின் மூத்த அங்கத்தினரான யுலிஸிஸ் க்ளாஸ், ‘யெகோவாவின் உலகளாவிய அமைப்பில் தங்கள் மாடத்தை செதுக்கி முடிக்குமாறு’ வகுப்பினரை உற்சாகப்படுத்தினார். மாடம் என்பது ஒரு நபரின் திறமைகள் அல்லது பண்புக்கு விசேஷமாய் பொருந்தக்கூடிய ஒரு சூழ்நிலைமையையோ ஒரு செயலையோ குறிக்கிறது. “எதிர்கால மிஷனரிகளான நீங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய அமைப்பில் உங்கள் மாடத்தைக் கண்டடைந்திருக்கிறீர்கள். ஆனால், இப்போது மதிப்புள்ளதாய் இருந்தாலும், இது ஒரு மிஷனரியாக உங்கள் வாழ்க்கையின் ஆரம்பமாக மாத்திரமே இருக்கிறது,” என்பதாக அவர் அறிவித்தார். தங்கள் திறமைகளை நன்கு பயன்படுத்துவதிலும் யெகோவாவும் அவரது அமைப்பும் அவர்களுக்கு கொடுத்துவரும் விசேஷ நியமிப்புகளோடு பொருந்துவதிலும் அவர்கள் சிரத்தையாக ஈடுபட வேண்டியிருக்கும்.
நிகழ்ச்சிநிரலினுடைய இந்தப் பகுதியின் முடிவு பேச்சு, பொலிவியாவில் 17 வருடங்கள் சேவை செய்த கிலியட் குழுவின் ஓர் அங்கத்தினரான வாலஸ் லிவரன்ஸினால் கொடுக்கப்பட்டது. “கடவுளை பரீட்சைக்கு உட்படுத்துவீர்களா?” என்பதாக மாணாக்கர் தொகுதியிடம் அவர் கேட்டார். அவர்கள் அதை எவ்வாறு செய்ய வேண்டும்? இஸ்ரவேல் தேசத்தினர் தவறான முறையில் கடவுளை பரீட்சைக்கு உட்படுத்தினர். (உபாகமம் 6:16) “சந்தேகமின்றி, குறை சொல்வதன் மூலமாகவோ அல்லது முணுமுணுப்பதன் மூலமாகவோ அல்லது ஒருவேளை காரியங்களைக் கையாளும் கடவுளின் முறையில் விசுவாசமற்ற தன்மையை காண்பிப்பதன் மூலமாகவோ கடவுளை பரீட்சைக்கு உட்படுத்துவது தவறானது,” என்பதாக பேச்சாளர் குறிப்பிட்டார். “புதிதான உங்கள் நியமிப்பை ஆரம்பிக்கும்போது அப்படிப்பட்ட மனச்சாய்வை தவிர்த்திடுங்கள்,” என்பதாக அவர் துரிதப்படுத்தினார். அப்படியானால், கடவுளை பரீட்சைக்கு உட்படுத்தும் சரியான முறை எது? “அவர் வார்த்தையை நம்பி, அவர் சொல்வதன் பிரகாரமே செய்து, பின்பு விளைவை அவரது கரங்களில் விட்டுவிடுவதன் மூலமாகவே அவ்வாறு செய்ய முடியும்,” என்பதாக சகோதரர் லிவரன்ஸ் விளக்கினார். மல்கியா 3:10-ல் (NW) நாம் பார்க்கும்பிரகாரம், “தயவுசெய்து, என்னைப் பரீட்சித்து பாருங்கள்,” என்பதாக யெகோவா தம் ஜனங்களை அழைக்கிறார். ஆலயத்தின் பண்டசாலைக்குள் தசமபாகங்களை உண்மையோடு கொண்டுவந்தால் அவர்களை ஆசீர்வதிக்கப்போவதாக அவர் வாக்களித்தார். “உங்களுடைய மிஷனரி நியமிப்பையும் அதே விதத்தில் ஏன் கருதக்கூடாது?” என்று பேச்சாளர் கேட்டார். “அதில் நீங்கள் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பதாக யெகோவா விரும்புகிறார், ஆகவே அவரை பரீட்சைக்கு உட்படுத்துங்கள். உங்கள் நியமிப்பைப் பற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் எந்த மாற்றங்களை செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதைச் செய்யுங்கள். சகித்திருங்கள். அவர் உங்களை ஆசீர்வதிக்கிறாரா என்று பாருங்கள்” என்பதாக பேச்சாளர் சொன்னார். யெகோவாவைச் சேவிக்கும் அனைவருக்கும் என்னே ஒரு சிறந்த ஆலோசனை!
பாட்டிற்கு பிறகு நிகழ்ச்சிநிரல் பேச்சுகளிலிருந்து மகிழ்ச்சிகரமான தொடர் பேட்டிகளுக்கு மாறியது.
வெளி ஊழியத்திலிருந்து நடைமுறையான கருத்துக்கள்
கிலியட் குழுவின் ஒரு புதிய அங்கத்தினரான மார்க் நூமர், பள்ளியில் கலந்து கொண்ட காலப்பகுதியின்போது வெளி ஊழியத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை விவரிக்குமாறு மாணாக்கர்களை கேட்டுக்கொண்டார். இவை, ஊழியத்தில் முன்முயற்சியோடு செயல்படுவதன் மதிப்பை முக்கியப்படுத்திக் காண்பித்து, வந்திருந்தவர்கள் பயன்படுத்த முடிந்த நடைமுறையான கருத்துக்களை அவர்களுக்கு கொடுத்தது.
அவர்களது பள்ளி காலப் பகுதியின்போது, இந்தக் கிலியட் வகுப்பின் மாணாக்கர்கள் 42 நாடுகளைச் சேர்ந்த கிளை அலுவலக ஆலோசனைக் குழுவின் அங்கத்தினர்களோடு கூட்டுறவு கொள்ள முடிந்ததால் விசேஷமாக பயனடைந்தனர். அவர்களும் விசேஷ பயிற்சிக்காக பாட்டர்ஸன் கல்வி மையத்திற்கு வந்திருந்தனர். அவர்களில் அநேகர் பல வருடங்களுக்கு முன்பு கிலியட்டில் பட்டதாரிகளாக ஆனவர்கள். நிகழ்ச்சிநிரலின்போது, 3-வது, 5-வது, 51-வது மற்றும் 92-வது வகுப்புகளின் பிரதிநிதிகளோடும் ஜெர்மனியிலுள்ள கிலியட் விரிவாக்கப் பள்ளியின் பிரதிநிதிகளோடும்கூட பேட்டிகள் நடத்தப்பட்டன. அவர்களது குறிப்புகள் எவ்வளவு பயனளிப்பவையாய் இருந்தன!
தங்கள் நியமிப்புகளில் யெகோவாவைத் துதிப்போர் சொற்ப எண்ணிக்கையிலிருந்து பத்தாயிரங்களுக்கு அதிகரித்திருப்பதை பார்த்திருக்கும்போது மிஷனரிகள் எவ்வாறு உணர்ந்திருக்கின்றனர் என்பதை அவர்கள் சொன்னார்கள். ஆண்டிஸ் மலைகளிலும் அமேசான் ஆற்றின் நதிமூலத்தின் அருகே உள்ள கிராமங்களிலும் அங்காங்கே சிதறியிருக்கும் வீடுகளுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்வதில் தங்களுக்கிருந்த பங்கை அவர்கள் சொன்னார்கள். படிப்பறிவில்லாத ஜனங்களுக்கு சாட்சி கொடுத்ததைப் பற்றி அவர்கள் கலந்தாலோசித்தனர். புதிய பாஷைகளைக் கற்றுக்கொள்வதில் தங்களுக்கிருந்த சொந்த போராட்டத்தைப் பற்றியும் சீன மொழிபோன்ற ஒரு மொழியில் எவ்வளவு சீக்கிரத்தில் சாட்சி கொடுப்பதையும் பேச்சு கொடுப்பதையும் பட்டதாரிகள் நியாயமாக எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றியும் அவர்கள் சொன்னார்கள். ஸ்பானிய மற்றும் சீன மொழிகளில் மாதிரி பிரசங்கங்களை நடித்தும் காட்டினர். பாஷையை மாத்திரம் அல்லாமல் ஜனங்களுடைய சிந்தனைகளையும் கற்றுக்கொள்ளும்போது மிஷனரிகள் மிகவும் திறனுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் வலியுறுத்தினர். வறுமையான நாடுகளில் உள்ள பொதுவான கடுமைமிக்க வாழ்க்கை நிலையைப் பற்றி அவர்கள் சொல்லி, இவ்வாறு குறிப்பிட்டனர்: “இந்த நிலைமை தன்னலத்திற்காக ஜனங்கள் பயன்படுத்தப்படுவதன் காரணமாகவே ஏற்பட்டிருக்கிறது என்பதை மிஷனரிகள் அடையாளங்கண்டுகொள்ள வேண்டும். இயேசு உணர்ந்த விதமாகவே—மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் இருந்த ஜனங்களைப் பார்த்து மனதுருகின விதமாகவே—ஒரு மிஷனரி உணரும்போது அவர் சிறந்ததைச் செய்கிறார்.”
பாட்டிற்கு பிறகு ஆளும் குழுவின் அங்கத்தினரான ஏ. டி. ஷ்ரோடரின் பேச்சுடன் நிகழ்ச்சிநிரல் தொடர்ந்தது. 1943-ல் கிலியட் பள்ளி ஆரம்பிக்கப்பட்டபோது ஆரம்ப போதனையாளர்களில் ஒருவராக இருக்கும் சிலாக்கியத்தை அவர் பெற்றிருந்தார். நிகழ்ச்சிநிரலுக்கு பொருத்தமான இறுதிக்கட்டமாக, “கர்த்தராகிய பேரரசரான யெகோவாவை துதித்தல்” என்ற பொருளை கலந்தாலோசித்தார். 24-வது சங்கீதத்தின் பேரிலான சகோதரர் ஷ்ரோடரின் ஆட்கொள்ளச் செய்யும் கலந்தாலோசிப்பு, கர்த்தராகிய பேரரசர் என்பதாக யெகோவாவைத் துதிப்பது எவ்வளவு பெரிய ஒரு சிலாக்கியம் என்பதைச் சொல்வதன் மூலம் வந்திருந்தோர் அனைவரையும் கவர்ந்தது.
டிப்ளமோக்களை அளித்த பின்பும், முடிவான பாட்டிற்கு பின்பும், ஆளும் குழுவைச் சேர்ந்த கார்ல் க்ளைன் இருதயப்பூர்வமான ஜெபத்தோடு முடிவு செய்தார். என்னே ஒரு நடைமுறையான, ஆவிக்குரிய புத்துணர்ச்சியூட்டும் நிகழ்ச்சிநிரலாக அது இருந்தது!
பட்டமளிப்புக்கு பின்பான நாட்களில், 100-வது வகுப்பின் 48 அங்கத்தினர்கள் தங்கள் மிஷனரி நியமிப்பிற்காக 17 நாடுகளுக்கு பயணம் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் தங்கள் ஊழியத்தை அப்போதுதானே ஆரம்பிக்கவில்லை. முழுநேர கிறிஸ்தவ ஊழியத்தில் கணிசமான பதிவு ஏற்கெனவே அவர்களுக்கு இருந்தது. அவர்கள் கிலியட்டில் பெயர்களை பதிவு செய்தபோது, சராசரியாக, 33 வயதுள்ளவர்களாகவும் முழுநேர ஊழியத்திற்கு 12-க்கும் அதிகமான வருடங்களை அர்ப்பணித்தவர்களாகவும் இருந்தனர். அவர்களில் சிலர் உவாட்ச் டவர் சொஸைட்டியின் உலகளாவிய பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்களாக இருந்தனர். மற்றவர்கள் பயணக் கண்காணிகளாக சேவித்து வந்தனர். மாணாக்கர்களில் பெரும் எண்ணிக்கையானோர் ஏற்கெனவே ஏதோ ஒரு விதமான அயல்நாட்டு ஊழியத்தில் பங்கேற்றிருந்தனர்; ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, கடல்தீவுகள் ஆகிய இடங்களிலும் தங்கள் நாடுகளிலுள்ள அயல்நாட்டு மொழி பேசும் ஜனங்களிடையேயும் ஊழியம் செய்திருந்தனர். ஆனால் இப்போது ‘உலகத்தில் எங்களுடைய சேவைக்கான தேவையிருக்கும் எந்தப் பகுதியிலும் நாங்கள் சேவை செய்வோம்’ என்பதாக சொல்வதில் மகிழ்ச்சியடையும் மற்ற அநேக மிஷனரிகளுடன் அவர்கள் சேர்ந்துகொள்கிறார்கள். யெகோவாவை மகிமைப்படுத்துவதில் தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்துவதே அவர்களது இருதயப்பூர்வமான விருப்பமாகும்.
[பக்கம் 27-ன் பெட்டி]
வகுப்புப் புள்ளிவிவரங்கள்:
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 8
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 17
மாணவர்களின் எண்ணிக்கை: 48
சராசரி வயது: 33.75
சத்தியத்தில் சராசரி வருடங்கள்: 17.31
முழுநேர ஊழியத்தில் சராசரி வருடங்கள்: 12.06
[பக்கம் 26-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 100-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) ஷர்லி, எம்.; க்ருன்ட்ஸ்ட்ரோம், எம்.; ஜேனார்டீனி, டி.; ஜைமோ, ஜே.; ஷாட், டபுள்யூ.; ஃபேர், பி.; புயூகனன், சி.; ராபின்ஸன், டி. (2) பைன், சி.; க்ரயுஸ், பி.; ராசிகாட், டி.; ஹான்சன், ஏ.; பிட்ஸ், டி.; பெர்க், ஜே.; கார்ஸியா, என்.; ஃப்லெமிங், கே. (3) வினெரி, எல்.; வினெரி, எல்.; ஹார்ப்ஸ், சி.; ஜைமோ, சி.; பெர்க், டி.; மேன், சி.; பெர்யாஸ், வி.; ப்ஃபைஃபர், சி. (4) ரான்டல், எல்.; ஜேனார்டீனி, எஸ்.; க்ரயுஸ், ஹெச்.; ஃப்லெமிங், ஆர்.; டாபாடி, எஸ்.; ஷர்லி, டி.; ஸ்டீவன்ஸன், ஜி.; புயூகனன், பி. (5) ராபின்ஸன், டி.; கார்ஸியா, ஜே.; ஹார்ப்ஸ், பி.; ராசிகாட், டி.; டாபாடி, எஃப்.; ஃபேர், எம்.; ஸ்டீவன்ஸன், ஜி.; ஷாட், டி. (6) பிட்ஸ், எல்.; ப்ஃபைஃபர், ஏ.; பெர்யாஸ், எம்.; பைன், ஜே.; மேன், எல்.; ரான்டல், பி.; க்ருன்ட்ஸ்ட்ரோம், ஜே.; ஹான்சன், ஜி.