எவ்வாறு நாம் கடவுளிடத்தில் ஜெபிக்க வேண்டும்?
ஒரு சீஷன் ஜெபத்தின்பேரில் போதனையைக் கேட்கையில், அதனைக் கொடுக்க இயேசு மறுக்கவில்லை. லூக்காஸ் 11:2-4-ன் பிரகாரம் அவர் பதிலளித்தார்: “நீங்கள் செபிக்கும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: ‘தந்தாய், உமது பெயர் பரிசுத்தம் எனப் போற்றப்படுக, உமது அரசு வருக; எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும், எங்கள் பாவங்களை மன்னித்தருளும், ஏனெனில், எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர் அனைவரையும் நாங்களும் மன்னிக்கிறோம். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.’” (தமிழ் கத்தோலிக்க பைபிள்) இது பொதுவாக கர்த்தருடைய ஜெபம் என்று அறியப்படுகிறது. அது திரளான விஷயத்தைத் தெரிவிக்கிறது.
முதலாவதாக, அந்த முதல் வார்த்தையே நமது ஜெபத்தை யாரிடத்தில்—நம் பிதாவினிடத்தில்—ஏறெடுக்கவேண்டும் என்று நமக்குச் சொல்கிறது. கவனியுங்கள், என்னவாக இருப்பினும் மற்றொரு நபரிடத்தில், சொரூபத்தினிடத்தில், “புனிதர்” இடத்தில் அல்லது தம்மிடத்தில்கூட ஜெபிப்பதற்கு இயேசு இடமளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், கடவுள் அறிவித்துள்ளார்: “என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.” (ஏசாயா 42:8) எனவே, எவ்வளவுதான் உண்மையுள்ளவராக அந்த வணக்கத்தார் இருந்தாலும், நம் பரலோக தகப்பனைத் தவிர எதற்காவது அல்லது எவருக்காவது ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் அவரால் கேட்கப்படமாட்டாது. பைபிளில் யெகோவா மாத்திரம் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்று அழைக்கப்படுகிறார்.—சங்கீதம் 65:2.
“புனிதர்கள்” வெறுமனே கடவுளிடத்தில் பரிந்துரைப்பவர்களாய் செயல்படுவதாகச் சிலர் சொல்லலாம். ஆனால் இயேசுதாமே போதித்தார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். நீங்கள் என் நாமத்தினாலே எதைக்கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.” (யோவான் 14:6, 13) இவ்வாறாக, புனிதர் என அழைக்கப்படும் எவரும் பரிந்துரைப்பவர் என்னும் ஸ்தானத்தில் சேவிப்பார் என்ற கருத்தையே இயேசு நீக்கிவிட்டார். கிறிஸ்துவைப்பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் என்ன சொன்னார் என்பதையும் கவனியுங்கள்: “கிறிஸ்து இயேசு நமக்காக உயிர் நீத்தார், ஏன், உயிர்ப்பிக்கவும் பெற்றார். இந்தக் கிறிஸ்துவே கடவுளின் வலப்பக்கத்தில் இருந்து நமக்காகப் பரிந்து பேசுகிறார்.” ‘தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்போதும் உயிரோடிருக்கிறவர்.’—உரோமையர் 8:34, கத்.பை.; எபிரெயர் 7:25.
பரிசுத்தம் என போற்றப்படவேண்டிய பெயர்
இயேசுவினுடைய ஜெபத்தின் அடுத்த வார்த்தைகளாவன: “உமது பெயர் பரிசுத்தம் எனப் போற்றப்படுக.” கடவுளுடைய பெயரே ஒருவருக்குத் தெரியாதிருந்தால் மற்றும் அதை உபயோகிக்காதிருந்தால் எவ்வாறு ஒருவர் பரிசுத்தம் என போற்ற முடியும், அதாவது புனிதப்படுத்தவோ தனியே பிரிக்கவோ முடியும்? “பழைய ஏற்பாட்டில்” 6,000 தடவைக்கும் மேலாக யெகோவா என்னும் தமது தனிப்பட்ட பெயரால் கடவுள் அடையாளம் காட்டப்படுகிறார்.
கத்தோலிக்க டூயே வர்ஷனில் யாத்திராகமம் 6:3-ன் பேரிலான அடிக்குறிப்பு கடவுளுடைய பெயரைப் பற்றி சொல்கிறது: “சில நவீனகாலத்தவர்கள் யெகோவா என்ற பெயரை உருவாக்கியுள்ளனர் . . . , எபிரெய மூலவாக்கியத்தில் இருந்த [கடவுளுடைய] பெயரின் உண்மையான உச்சரிப்பு நீண்டகாலமாகவே உபயோகத்தில் இல்லாததால், இப்போது அது தெரியாமல் இருக்கிறது.” ஆகவே கத்தோலிக்க நியூ ஜெரூசலம் பைபிள் யாவே என்னும் பெயரை உபயோகிக்கிறது. இந்த உச்சரிப்பை சில அறிஞர்கள் விரும்பினாலும், தெய்வீக பெயரை “ஜெஹோவா” என்று ஆங்கிலத்தில் உச்சரிக்கும் முறையே நியாயமானதாகவும் நீண்டகாலமாக நிலைநாட்டப்பட்டதாகவும் இருக்கிறது. தெய்வீக பெயரை உச்சரிப்பதில் மற்ற மொழிகள் தங்களுக்கே உரிய உச்சரிப்புகளைக் கொண்டுள்ளன. முக்கியமான காரியம் எதுவென்றால், அந்தப் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்காகவே அதை நாம் உபயோகிக்க வேண்டும். ஜெபத்தில் யெகோவா என்னும் பெயரை உபயோகிக்க உங்களுடைய சர்ச் உங்களுக்குக் கற்பித்திருக்கிறதா?
ஜெபிப்பதற்குப் பொருத்தமான தலைப்புகள்
அடுத்தபடியாக, “உமது அரசு வருக” என்று ஜெபிக்கும்படி தமது சீஷர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்தார். சுவிசேஷகனாகிய மத்தேயு இவ்வார்த்தைகளைச் சேர்க்கிறார்: “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) கடவுளுடைய ராஜ்யம் என்பது இயேசு கிறிஸ்துவின் கைகளில் இருக்கும் ஓர் அரசாங்கம். (ஏசாயா 9:6, 7) பைபிள் தீர்க்கதரிசனத்தின் பிரகாரம், அது விரைவிலேயே மனித அரசாங்கங்களை எல்லாம் மாற்றீடுசெய்துவிட்டு, உலகளாவிய சமாதான சகாப்தம் ஒன்றைக் கொண்டுவரும். (சங்கீதம் 72:1-7; தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:3-5) ஆகவே உண்மை கிறிஸ்தவர்கள் ராஜ்யம் வருதலை தங்களுடைய ஜெபத்தில் மறுபடியும் மறுபடியுமாக சொல்லக்கூடிய ஒரு தலைப்பாக ஆக்குகிறார்கள். அவ்வாறு செய்ய உங்களுடைய சர்ச் உங்களுக்குக் கற்பித்திருக்கிறதா?
ஆர்வத்தைத்தூண்டும் விதத்தில், நம்மைக் கவலையுறச்செய்யும் தனிப்பட்ட விஷயங்கள் ஒருவேளை நமது ஜெபத்தில் உட்பட்டிருக்கலாம் என்பதைக்கூட இயேசு காண்பித்தார். அவர் கூறியதாவது: “எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும், எங்கள் பாவங்களை மன்னித்தருளும், ஏனெனில், எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர் அனைவரையும் நாங்களும் மன்னிக்கிறோம். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.” (லூக்காஸ் 11:3, 4, கத்.பை.) அன்றாட விஷயங்களின்பேரில் கடவுளுடைய சித்தத்தை நாடவேண்டும் என்பதையும், நம்மைக் கவலையுறச்செய்யும் அல்லது நம் மன அமைதியைக் குலைக்கும் எந்தக் காரியத்தைப் பற்றியும் நாம் யெகோவாவை அணுகலாம் என்பதையும் இயேசுவினுடைய வார்த்தைகள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன. இவ்விதம் ஒழுங்காக கடவுளிடத்தில் விண்ணப்பிப்பது, அவரில் நாம் சார்ந்திருப்பதை மதித்துணர நமக்கு உதவுகிறது. இவ்வாறாக நம் வாழ்க்கையில் அவரது செல்வாக்கை அதிகம் உணருகிறவர்களாக ஆவோம். அதேபோல் நமது தவறுதல்களுக்காக நம்மை மன்னிக்கும்படி கடவுளிடத்தில் தினமும் கேட்பது பயனுள்ளதாய் இருக்கிறது. அதனால் நம் பலவீனங்களைக் குறித்து அதிகம் அறிந்தவர்களாகவும், மற்றவர்களின் குறைபாடுகளை அதிகமாக சகிக்கிறவர்களாகவும் ஆவோம். விசேஷமாக இவ்வுலகின் கீழ்நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஒழுக்கநெறிகளைக் கருத்தில் கொள்கையில், சோதனையிலிருந்து விடுவிப்பதற்காக ஜெபிக்கும்படி இயேசு நம்மை அறிவுறுத்தியதுகூட மிகப் பொருத்தமாக இருக்கிறது. அந்த ஜெபத்திற்கு இசைவாக, நம்மைத் தவறான செயலுக்குக் கொண்டுசெல்லக்கூடிய சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் தவிர்ப்பதற்கு நாம் ஜாக்கிரதையாக இருக்கிறோம்.
அப்படியென்றால், கடவுளைப் பிரியப்படுத்தும் ஜெபங்களை ஏறெடுப்பதைப்பற்றி கர்த்தருடைய ஜெபம் நமக்கு அதிகத்தைச் சொல்கிறதா என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால், நாம் இந்த ஜெபத்தை ஏற்று, வெறுமனே தொடர்ந்து ஓதவேண்டும் என்று இயேசு அர்த்தப்படுத்தினாரா?
ஜெபத்தின் பேரில் மேலும் அறிவுரை
இயேசு ஜெபத்தின் பேரில் மேலும் போதனைகளை வழங்கினார். மத்தேயு 6:5, 6-ல், நாம் வாசிக்கிறோம்: “நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; . . . நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.” எவரையாவது கவரும் விதத்தில் ஜெபத்தை பகட்டாகவும் ஆடம்பரமாகவும் செய்யக்கூடாது என்பதை இந்த வார்த்தைகள் நமக்குக் கற்பிக்கின்றன. பைபிள் தூண்டுவதைப்போல், தனிமையில் உங்கள் இருதயத்தை யெகோவாவினிடத்தில் ஊற்றுகிறீர்களா?—சங்கீதம் 62:8.
இயேசு இந்த எச்சரிக்கையைக் கொடுத்தார்: “நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.” (மத்தேயு 6:7) தெளிவாகவே, ஜெபங்களை மனப்பாடம் செய்வதையோ ஏதோ புத்தகத்திலிருந்து வாசிப்பதையோ இயேசு அங்கீகரிக்கவில்லை. ஜெபமாலையை உபயோகிப்பதையும் அவரது வார்த்தைகள் நிராகரிக்கின்றன.
கத்தோலிக்க வழிபாட்டுப் புத்தகம் ஒன்று இவ்வாறு ஒத்துக்கொள்கிறது: “நாம் அவரை நோக்கி நன்றியோடும் அல்லது தேவையில் இருக்கையில், துயரமான தருணங்களில், அல்லது நாம் ஒழுங்காக தினமும் ஆராதனையில் நாடும்போது, சொந்தமாக தானாகவே வரும் எண்ணங்களே நமது சிறந்த ஜெபமாக இருக்கலாம்.” இயேசுவின் சொந்த ஜெபங்கள் தானாகவே வந்தவை, மனப்பாடம் செய்யப்பட்டவை அல்ல. உதாரணத்திற்கு, யோவான் 17-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் ஜெபத்தை வாசியுங்கள். மாதிரி ஜெபத்தை அது பின்பற்றுகிறது, யெகோவாவின் பெயர் பரிசுத்தமாவதைக் காண்பதில் இயேசுவுக்கு இருந்த ஆவலை வலியுறுத்துகிறது. இயேசுவின் ஜெபம் சுயமாக வந்ததாகவும், ஆழ்ந்த இதயப்பூர்வமானதாகவும் இருந்தது.
கடவுள் கேட்கும் ஜெபங்கள்
ஒருவேளை உங்களுக்கு, மனப்பாடம் செய்யப்பட்ட ஜெபங்களை “புனிதர்கள்” இடத்தில் அல்லது சிலைகள் இடத்தில், அல்லது ஜெபமாலை போன்ற மத சம்பந்தமான பொருட்களை உபயோகித்து செய்யும்படி கற்பிக்கப்பட்டிருந்தால், இயேசு காட்டிய விதத்தில் ஜெபிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் அச்சம் தருவதைப்போல் தோன்றலாம். இருப்பினும், கடவுளை—அவருடைய பெயர், அவருடைய நோக்கங்கள், அவருடைய ஆளுமை போன்றவற்றை—அறிந்துகொள்வதே இதற்கானத் தீர்வாகும். ஒரு முழுமையான பைபிள் படிப்பின் மூலம் நீங்கள் இதைச் சாதிக்க முடியும். (யோவான் 17:3) இவ்விஷயத்தில் உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் தயாராகவும் மனப்பூர்வமாகவும் இருக்கிறார்கள். ஏன், உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கானோருக்கு ‘கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பார்க்க’ அவர்கள் உதவிசெய்திருக்கிறார்களே! (சங்கீதம் 34:8) நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கடவுளை அறிகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவரை ஜெபத்தில் துதிக்க தூண்டப்படுவீர்கள். பயபக்தியான ஜெபத்தில் யெகோவாவிடமாக நீங்கள் எவ்வளவு அதிகம் நெருங்கி செல்கிறீர்களோ, அவ்வளவு அதிகம் அவரிடத்தில் உங்களுக்குள்ள உறவும் நெருக்கம் அடையும்.
ஆகவே கடவுளுடைய உண்மை வணக்கத்தார் அனைவரும் ‘இடைவிடாமல் ஜெபம்பண்ணும்படி’ துரிதப்படுத்தப்படுகிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:17) உங்களுடைய ஜெபங்கள் உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கும் பைபிளுக்கும் இசைவாக இருக்கின்றனவா என்று நிச்சயமாயிருங்கள். இவ்விதத்தில் உங்களுடைய ஜெபங்களின் பேரில் கடவுளுடைய அங்கீகாரம் இருக்கும் என்று நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம்.
[பக்கம் 7-ன் படம்]
எவ்வளவுக்கு எவ்வளவு யெகோவாவைப்பற்றி கற்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவரிடத்தில் இருதயத்திலிருந்து ஜெபிப்பதற்கு நாம் தூண்டப்படுவோம்