கிறிஸ்துவின் பிரமாணம்
“நான் . . . கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.”—1 கொரிந்தியர் 9:21.
1, 2. (அ) மனிதவர்க்கத்தின் பல தவறுகள் எவ்வாறு தவிர்க்கப்பட்டிருக்கலாம்? (ஆ) யூத மதத்தின் சரித்திரத்திலிருந்து எதைக் கற்றுக்கொள்ள கிறிஸ்தவமண்டலம் தவறிவிட்டது?
“சரித்திரத்திலிருந்து ஜனங்களும் அரசாங்கங்களும் எதையும் ஒருபோதும் கற்றுக்கொள்ளவுமில்லை, அல்லது அதிலிருந்து ஊகித்துணர்ந்த நியமங்களின்பேரில் செயல்படவுமில்லை.” 19-வது நூற்றாண்டு ஜெர்மன் தத்துவஞானி ஒருவர் இவ்வாறு சொன்னார். நிச்சயமாகவே, மனித சரித்திரத்தின் போக்கு “மடமையின் தொடர்” என்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அது ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் அதிர்ச்சியை உண்டுபண்ணும் பெரும்பிழைகளும் நெருக்கடிகளும் கொண்டதாக இருந்திருக்கிறது. கடந்தகால தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள மனமுள்ளதாக மாத்திரம் மனிதவர்க்கம் இருந்திருந்தால், அவற்றில் பலவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
2 கடந்தகால தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளாதிருக்கும் அதே விதமான மறுப்பு, தேவப்பிரமாணத்தைப் பற்றிய இந்தக் கலந்தாராய்ச்சியில் எடுத்துக்காட்டப்படுகிறது. மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் இடத்தை, அதைப் பார்க்கிலும் மேம்பட்ட ஒன்றைக்கொண்டு—கிறிஸ்துவின் பிரமாணத்தைக்கொண்டு—யெகோவா தேவன் நிரப்பினார். எனினும், இந்தப் பிரமாணத்தைப் போதித்து அதன்படி வாழ்வதாக உரிமை பாராட்டும் கிறிஸ்தவமண்டலத் தலைவர்கள், பரிசேயரின் அந்த மிதமீறிய மடமையிலிருந்து கற்றுக்கொள்ளத் தவறிவிட்டிருக்கின்றனர். ஆகவே, மோசேயின் நியாயப்பிரமாணத்தை அந்த யூத மதம் செய்ததுபோல், கிறிஸ்தவமண்டலம், கிறிஸ்துவின் பிரமாணத்தைப் புரட்டி தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது. அவ்வாறு எப்படி செய்ய முடியும்? முதலாவதாக, கிறிஸ்துவின் இந்தப் பிரமாணத்தைத்தானே நாம் கலந்தாராயலாம்—அது என்ன, யாரை ஆளுகிறது, எவ்வாறு, மற்றும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலிருந்து எது இதை வேறுபடுத்துகிறது என்பவற்றை. பின்பு, கிறிஸ்தவமண்டலம் அதை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது என்பதை நாம் ஆராயலாம். இவ்வாறு, சரித்திரத்திலிருந்து நாம் கற்றறிந்து அதிலிருந்து பயனடைவோமாக!
புது உடன்படிக்கை
3. ஒரு புது உடன்படிக்கையைக் குறித்து யெகோவா என்ன வாக்குக்கொடுத்தார்?
3 ஒரு பரிபூரண நியாயப்பிரமாணத்தை இன்னும் மேம்பட்டதாக்குவதற்கு யெகோவா தேவனாலேயன்றி வேறு எவரால் முடியும்? மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கை பரிபூரணமாக இருந்தது. (சங்கீதம் 19:7) அப்படியிருந்தும், யெகோவா இவ்வாறு வாக்குக்கொடுத்தார்: “இதோ நாட்கள் வரும், . . . அப்பொழுது இஸ்ரவேல் வீட்டாரோடும், யூதா வீட்டாரோடும் புது உடன்படிக்கை செய்வேன். நான் . . . அவர்களோடே [பிதாக்களோடே] செய்த உடன்படிக்கை போன்றதல்ல.” பத்துக் கற்பனைகள்—மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் மையக்கரு—கற்பலகைகளின்மீது எழுதப்பட்டன. ஆனால் இந்தப் புது உடன்படிக்கையைக் குறித்து, யெகோவா இவ்வாறு சொன்னார்: “என் பிரமாணத்தை நான் அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதுவேன்.”—எரேமியா 31:31-34, தி.மொ.
4. (அ) புது உடன்படிக்கையில் எந்த இஸ்ரவேல் உட்பட்டிருக்கிறது? (ஆ) ஆவிக்குரிய இஸ்ரவேலர் மட்டுமல்லாமல் வேறு எவரும் கிறிஸ்துவின் பிரமாணத்தின்கீழ் உள்ளனர்?
4 இந்தப் புது உடன்படிக்கைக்குள் யார் ஏற்கப்படுவர்? இந்த உடன்படிக்கையின் மத்தியஸ்தரை ஏற்காமல் தள்ளிவிட்ட, சொல்லர்த்தமான ‘இஸ்ரவேல் வீட்டார்’ நிச்சயமாகவே ஏற்கப்படமாட்டார். (எபிரெயர் 9:15) இல்லை, இந்தப் புது “இஸ்ரவேல்,” ஆவிக்குரிய இஸ்ரவேலரான ஒரு ஜனமாக, ‘தேவனுடைய இஸ்ரவேலராக’ இருப்பர். (கலாத்தியர் 6:16; ரோமர் 2:28, 29) ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் இந்தச் சிறிய தொகுதியோடு, பின்னால், சகல தேசங்களிலிருந்து வருவோரும், தாங்களும் யெகோவாவை வணங்க நாடுவோருமான ‘ஒரு திரள் கூட்டத்தார்’ சேர்ந்துகொள்வர். (வெளிப்படுத்துதல் 7:9, 10; சகரியா 8:23) இந்தத் திரள் கூட்டத்தார், புது உடன்படிக்கையில் பங்காளிகளாக இராதபோதிலும், இவர்களும் பிரமாணத்தால் கட்டுப்படுத்தப்படுவர். (ஒப்பிடுக: லேவியராகமம் 24:22; எண்ணாகமம் 15:15.) ‘ஒரே மேய்ப்பனின்’ கீழ் ‘ஒரே மந்தையாக’ எல்லாரும், அப்போஸ்தலன் பவுல் எழுதினபடி, ‘கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானோராக’ இருப்பர். (யோவான் 10:16; 1 கொரிந்தியர் 9:21) இந்தப் புது உடன்படிக்கையை ‘மேலான உடன்படிக்கை’ என்று பவுல் அழைத்தார். ஏன்? ஒரு காரியமாக, இது, வரப்போகிற காரியங்களின் நிழல்களின்மீது அல்லாமல் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தங்களின்பேரில் ஆதாரங்கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறது.—எபிரெயர் 8:6; 9:11-14.
5. புது உடன்படிக்கையின் நோக்கம் என்ன, அது ஏன் நிறைவேறப்பெறும்?
5 இந்த உடன்படிக்கையின் நோக்கம் என்ன? மனிதவர்க்கம் முழுவதையும் ஆசீர்வதிப்பதற்கு, அரசர்களும் ஆசாரியர்களுமான ஒரு ஜனத்தைப் பிறப்பிப்பதாகும். (யாத்திராகமம் 19:6; 1 பேதுரு 2:9; வெளிப்படுத்துதல் 5:10) மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கை இந்த ஜனத்தை முழுமையான கருத்தில் ஒருபோதும் பிறப்பிக்கவில்லை. ஏனெனில் மொத்தத்தில், இஸ்ரவேல் ஜனம் கலகஞ்செய்து தங்கள் வாய்ப்பை இழந்துவிட்டனர். (ரோமர் 11:17-21-ஐ ஒப்பிடுக.) எனினும், இந்தப் புது உடன்படிக்கை நிச்சயமாகவே வெற்றியடையும், ஏனெனில் இது மிக வேறுபட்ட வகையான பிரமாணத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. எந்த வழிகளில் வேறுபடுகிறது?
சுயாதீனத்துக்குரிய பிரமாணம்
6, 7. எவ்வாறு கிறிஸ்துவின் பிரமாணம், மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பார்க்கிலும் மிக அதிகப்படியான சுயாதீனத்தை அளிக்கிறது?
6 கிறிஸ்துவின் பிரமாணம் சுயாதீனத்தோடு மறுபடியும் மறுபடியுமாகச் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. (யோவான் 8:31, 32) அது, ‘சுயாதீன ஜனத்தின் பிரமாணம்’ என்பதாகவும், ‘சுயாதீனத்துக்குரியதான பரிபூரணப்பிரமாணம்’ என்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. (யாக்கோபு 1:25; 2:12; NW) நிச்சயமாகவே, மனிதர்களுக்குள் இருக்கும் எல்லா சுயாதீனமும் சம்பந்தப்பட்ட சுயாதீனமேயாகும். இருப்பினும், இந்தப் பிரமாணம், அதற்கு முந்தியதான, மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பார்க்கிலும் மிக அதிகப்படியான சுயாதீனத்தை அளிக்கிறது. எவ்வாறு?
7 ஓர் உதாரணமாக, கிறிஸ்துவின் பிரமாணத்திற்குக் கீழ் ஒருவரும் பிறக்கவில்லை. குலம், பிறப்பிடம் போன்ற இத்தகைய காரணங்கள் சம்பந்தப்படுகிறதில்லை. உண்மையான கிறிஸ்தவர்களாகிறவர்கள், இந்தப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதன் நுகத்தை ஏற்பதற்கு, தங்கள் இருதயத்தில் தாங்களே சுயாதீனமாய்த் தெரிந்துகொள்கிறார்கள். இவ்வாறு செய்வதில், அது தயவான நுகமாயும், இலேசான சுமையாயும் இருப்பதாகக் காண்கின்றனர். (மத்தேயு 11:28-30) கவனித்துப் பார்ப்போமானால், மோசேயின் நியாயப்பிரமாணம், மனிதன் பாவமுள்ளவன், அவனை மீட்பதற்கு மீட்பின் கிரய பலி ஒன்று மிக அவசரமாய்த் தேவைப்படுகிறதென அவனுக்குப் போதிப்பதற்கும் திட்டமிடப்பட்டது. (கலாத்தியர் 3:19) கிறிஸ்துவின் பிரமாணமோவெனில், மேசியா வந்து, தம்முடைய உயிரை மீட்பின் கிரயமாகச் செலுத்தி, பாவத்தின் பயங்கர ஒடுக்குதலிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கப்பட நமக்கு வழியைத் திறந்துவிட்டார் என்று போதிக்கிறது! (ரோமர் 5:20, 21) இதிலிருந்து பயனடைய, அந்தப் பலியில் நாம் ‘விசுவாசம் காட்ட வேண்டும்.’—யோவான் 3:16.
8. கிறிஸ்துவின் பிரமாணம் எதை உட்படுத்துகிறது, ஆனால் அதன்படி வாழ்வது ஏன் நூற்றுக்கணக்கான சட்டப்பூர்வ விதிகளை மனப்பாடம் செய்வதைத் தேவைப்படுத்துகிறதில்லை?
8 ‘விசுவாசம் காட்டுதலானது,’ கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி வாழ்வதை உட்படுத்துகிறது. அதில் கிறிஸ்துவின் கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிவது அடங்கியுள்ளது. இது, நூற்றுக்கணக்கான பிரமாணங்களையும் விதிகளையும் மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ள வேண்டுமென அர்த்தமாகிறதா? இல்லை. பழைய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய மோசே, மோசேயின் நியாயப்பிரமாணத்தை எழுதி வைத்தார், ஆனால், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு, ஒரு பிரமாணத்தையும் ஒருபோதும் எழுதிவைக்கவில்லை. அதற்குப் பதிலாக, இந்தப் பிரமாணத்தின்படி வாழ்ந்தார். தம்முடைய பரிபூரண வாழ்க்கை போக்கின்மூலம், எல்லாரும் பின்பற்றுவதற்கான ஒரு மாதிரியை அவர் வைத்தார். (1 பேதுரு 2:21) அதனிமித்தமே பூர்வ கிறிஸ்தவர்களின் வணக்கம், ‘மார்க்கம்’ என அழைக்கப்பட்டிருக்கலாம். (அப்போஸ்தலர் 9:2; 19:9, 23; 22:4; 24:22) அவர்களுக்கு, கிறிஸ்துவின் பிரமாணம், கிறிஸ்துவின் வாழ்க்கையில் முன்மாதிரியாக விளக்கிக் காட்டப்பட்டது. இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவது, இந்தப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதைக் குறித்தது. தீர்க்கதரிசனமுரைத்தபடி, அவர்மீதிருந்த அவர்களுடைய உள்ளார்ந்த அன்பு, இந்தப் பிரமாணம் அவர்களுடைய இருதயங்களில் நிச்சயமாகவே எழுதப்பட்டிருந்ததென்பதைக் குறித்தது. (எரேமியா 31:33; 1 பேதுரு 4:8) அன்பினிமித்தமாகக் கீழ்ப்படிகிற ஒருவன், ஒடுக்கப்படுபவனாக ஒருபோதும் உணருகிறதில்லை—கிறிஸ்துவின் பிரமாணம் “சுயாதீன ஜனங்களின் பிரமாணம்” என்று அழைக்கப்படக்கூடியதற்கு இது மற்றொரு காரணம்.
9. எது கிறிஸ்துவின் பிரமாணத்தினுடைய உள்ளியல்பாகவே இருக்கிறது, எவ்வகையில் இந்தப் பிரமாணம் ஒரு புதிய கட்டளையை உட்படுத்துகிறது?
9 மோசேயின் நியாயப்பிரமாணத்தில் அன்பு முக்கியமானதாக இருந்ததென்றால், கிறிஸ்தவ பிரமாணத்தில் அன்பு, அதன் முழு உள்ளியல்பாகவே இருக்கிறது. இவ்வாறு கிறிஸ்துவின் பிரமாணம் ஒரு புதிய கட்டளையை உட்படுத்துகிறது—கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் சுய தியாக அன்புடையோராக இருக்க வேண்டும். இயேசு அன்புகூர்ந்ததுபோல் அவர்கள் அன்புகூர வேண்டும்; அவர் தம்முடைய சிநேகிதருக்காகத் தம் உயிரை மனமுவந்து அளித்தார். (யோவான் 13:34, 35; 15:13) ஆகையால், கிறிஸ்துவின் பிரமாணம், மோசேயின் நியாயப்பிரமாணம் இருந்ததைப் பார்க்கிலும், தேவாட்சியின் மேலுமதிக மேன்மையான வெளிப்பாடாக உள்ளதென்று சொல்லலாம். இந்தப் பத்திரிகை முன்பு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறபடி: “தேவாட்சி, கடவுளால் ஆளப்படும் ஆட்சி; கடவுள் அன்பாகவே இருக்கிறார்; ஆகையால் தேவாட்சியானது அன்பினாலாகிய ஆட்சி.”
இயேசுவும் பரிசேயரும்
10. இயேசுவின் போதகம் எவ்வாறு பரிசேயரின் போதகத்திற்கு மாறுபட்டது?
10 அப்படியானால், இயேசு, தம்முடைய நாளிலிருந்த யூத மதத் தலைவர்களுக்கு முரண்பட்டது சற்றேனும் ஆச்சரியமாயில்லை. ‘சுயாதீனத்துக்குரியதான பரிபூரணப்பிரமாணம்’ ஆனது, அந்த வேதபாரகரும் பரிசேயருமானோரின் மனதில் ஒருபோதும் எட்டவில்லை. மனிதனால் உண்டாக்கப்பட்ட கட்டுப்பாட்டு விதிகளின்மூலமாக, ஜனங்களை அடக்கியாளுவதற்கு அவர்கள் முயன்றனர். அவர்களுடைய போதகம் ஒடுக்கி, கண்டனம் செய்து, எதிர்மறையான போக்குடையதாகிவிட்டது. அதற்கு நேர்மாறாக, இயேசுவின் போதகமோவெனில், முற்றிலும் கட்டியெழுப்புவதாயும் நன்மைபயக்குவதாயும் இருந்தது! நடைமுறைக்கு உகந்தவாறு, ஜனங்களின் உண்மையான தேவைகளுக்கும் அக்கறைகளுக்கும் ஏற்றவற்றை அவர் பேசினார். அவர், எளிய முறையிலும் உண்மையான இரக்க உணர்ச்சியுடனும், அன்றாட வாழ்க்கையிலிருந்து உதாரணங்களைப் பயன்படுத்தியும், கடவுளுடைய வார்த்தையை அதிகாரத்துவமாக எடுத்துக்காண்பித்தும் போதித்தார். இவ்வாறு, “ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்துப் பிரமித்தார்கள்.” (மத்தேயு 7:29, தி.மொ.) ஆம், இயேசுவின் போதகம் அவர்களுடைய இருதயத்தை எட்டினது!
11. மோசேயின் நியாயப்பிரமாணம் நியாயத்தன்மையுடனும் இரக்கத்துடனும் பொருத்திப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்பதை இயேசு எவ்வாறு செயற்படுத்திக் காட்டினார்?
11 மோசேயின் நியாயப்பிரமாணத்தோடு மேலுமதிக கட்டுப்பாட்டு விதிகளைச் சேர்க்காமல், மாறாக, இயேசு, அந்த நியாயப்பிரமாணத்தை யூதர்கள் எவ்வாறு—நியாயத்தன்மையுடனும் இரக்கத்துடனும்—பொருத்திப் பயன்படுத்தியிருக்க வேண்டுமென்பதை விளக்கிக் காட்டினார். உதாரணமாக, இரத்த ஊறலால் அல்லல்பட்டுக் கொண்டிருந்த ஒரு ஸ்திரீ இயேசுவை அணுகின சந்தர்ப்பத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, அவள் தொடும் எவரும் அசுத்தமானோராவர். ஆகையால், ஜனக்கூட்டத்துடன் அவள் நிச்சயமாகவே கலந்துகொள்ளக்கூடாது! (லேவியராகமம் 15:25-27) ஆனால் தான் சுகமடையவேண்டுமென்ற ஒரு வெறியோடு அவள் இருந்ததால், ஜனக்கூட்டத்தினூடே நுழைந்து, இயேசுவின் மேலங்கியைத் தொட்டாள். அந்த இரத்த ஊறல் உடனடியாக நின்றுவிட்டது. நியாயப்பிரமாணத்தை அவள் மீறினதற்காக இயேசு அவளைக் கடிந்துகொண்டாரா? இல்லை; மாறாக, அவளுடைய உதவியற்ற நிலைமையை அவர் புரிந்துகொண்டு, நியாயப்பிரமாணத்தின் மிகப் பெரிய போதனையின்படி—அன்பை—செயற்படுத்திக் காட்டினார். அனுதாபத்துடன் அவளை நோக்கி: “மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு,” என்று அவர் சொன்னார்.—மாற்கு 5:25-34.
கிறிஸ்துவின் பிரமாணம் விட்டுக்கொடுப்பதாக இருக்கிறதா?
12. (அ) கிறிஸ்துவின் பிரமாணம் விட்டுக்கொடுப்பதாக இருக்கிறதென்று நாம் ஏன் கருதிக்கொள்ளக்கூடாது? (ஆ) மிகுதியான பிரமாணங்களை உண்டாக்குவது, அவற்றை மீறுவதற்கான பல வழிவகைகளை உண்டாக்குவதற்கு வழிநடத்துகிறதென்று எது காட்டுகிறது?
12 பரிசேயர்கள், வாய்மொழியான தங்கள் எல்லா பாரம்பரியங்களையும் கொண்டு, ஜனங்களுடைய நடத்தையை கண்டிப்பான எல்லைக்குள்ளாவது வைத்துவந்திருக்கையில், கிறிஸ்துவின் பிரமாணம் ‘சுயாதீனப்பிரமாணமாக’ இருப்பதால், அது விட்டுக்கொடுப்பதாக இருக்கிறதென்ற முடிவுக்கு நாம் வரவேண்டுமா? இல்லை. எவ்வளவு அதிகமாகப் பிரமாணங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு அதிகமாக அவற்றை மீறி நடப்பதற்கான வழிவகைகளை ஜனங்கள் அவற்றில் அடிக்கடி காண்கின்றனர் என்று இன்றைய சட்டப்பூர்வ ஒழுங்குமுறைகள் காட்டுகின்றன.a இயேசுவின் நாளில், பரிசேயரின் ஏராளமான விதிமுறைகள், அவற்றை மீறுவதற்கான வழிவகைகளைத் தேடும்படியும், அன்பு சற்றேனும் இல்லாமல், கடமைக்காகச் செயல்களை நடப்பிக்கும்படியும், உட்புற ஊழலை மூடிமறைப்பதற்கு, தன்னேர்மையான ஒரு வெளித்தோற்றத்தை வளர்ப்பதையும் ஊக்குவித்தன.—மத்தேயு 23:23, 24.
13. ஏன் கிறிஸ்துவின் பிரமாணம், எழுதப்பட்ட மற்ற எந்தப் பிரமாணங்களின் தொகுப்பைப் பார்க்கிலும் உயர்வான நடத்தை தராதரத்தில் விளைவடைகிறது?
13 மாறாக, கிறிஸ்துவின் பிரமாணம், அத்தகைய மனப்பான்மைகளை வளர்ப்பதில்லை. உண்மையில், யெகோவாவின்மீதுள்ள அன்பில் ஆதாரங்கொண்ட ஒரு பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதும், மற்றவர்களிடமாக கிறிஸ்து காட்டின சுய தியாக அன்பைப் பின்பற்றி, அதற்குக் கீழ்ப்படிவதும், விதிமுறைக்குரிய சட்டப்பூர்வ ஒரு பிரமாணத் தொகுப்பைப் பின்பற்றுவதைப் பார்க்கிலும் மிக அதிக உயர்வான நடத்தை தராதரத்தில் பலன் தருகிறது. மீறுவதற்கான வழிவகைகளை அன்பு தேடுகிறதில்லை; ஒரு பிரமாணத் தொகுப்பு வெளிப்படையாகத் தடைசெய்திராத, தீங்கான காரியங்களைச் செய்வதிலிருந்து அது நம்மை காத்துவைக்கிறது. (மத்தேயு 5:27, 28-ஐக் காண்க.) இவ்வாறாக, கிறிஸ்துவின் பிரமாணம், விதிமுறை சார்ந்த எந்தப் பிரமாணமும் நம்மைச் செய்விக்க முடியாத வகைகளில், மற்றவர்களுக்காகக் காரியங்களைச் செய்யும்படி—தயாளம், உபசரணை, மற்றும் அன்பு காட்டும்படி—நம்மைத் தூண்டியியக்கும்.—அப்போஸ்தலர் 20:35; 2 கொரிந்தியர் 9:7; எபிரெயர் 13:16.
14. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையினர், கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி வாழ்ந்ததன் பயன் என்னவாக இருந்தது?
14 பூர்வ கிறிஸ்தவ சபையின் உறுப்பினர்கள், எந்த அளவுக்குக் கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி வாழ்ந்தார்களோ அந்த அளவாக அனல்கொண்ட அன்பின் சூழ்நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்; அந்நாளின் ஜெபாலயங்களில் மிகுதியாய் நிலவியிருந்த விடாக்கண்டிப்பான, நியாயந்தீர்க்கும் பாங்கான, மற்றும் பாசாங்குத்தனமான மனப்பான்மைகளிலிருந்து பெரும்பாலும் விடுதலையானவர்களாக இருந்தனர். இந்தப் புதிய சபைகளின் உறுப்பினர், ‘சுயாதீன ஜனங்களின் பிரமாணத்தின்படி’ தாங்கள் வாழ்ந்தனரென்று, மெய்யாகவே உணர்ந்திருக்க வேண்டும்!
15. கிறிஸ்தவ சபையைத் தூய்மைக்கேடு செய்வதற்கு சாத்தான் எடுத்த முன்முயற்சிகள் சில யாவை?
15 எனினும், சாத்தான், இஸ்ரவேல் ஜனத்தைக் கெடுத்ததுபோல், அந்தக் கிறிஸ்தவ சபையை உள்ளிருந்தே தூய்மைக்கேடு செய்வதற்கு ஆவலுள்ளவனாக இருந்தான். ‘மாறுபாடானவைகளைப் போதித்து,’ கடவுளுடைய மந்தையை ஒடுக்கவிருந்த ஓநாய்களைப்போன்ற ஆட்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தார். (அப்போஸ்தலர் 20:29, 30) கிறிஸ்துவினுடைய பிரமாணத்தின், சம்பந்தப்பட்ட சுயாதீனத்திற்குப் பதிலாக, கிறிஸ்துவில் நிறைவேற்றம் அடைந்துவிட்டிருந்த மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு அடிமைப்படுவதை பரிமாற்றம் செய்துகொள்ள நாடின யூதக் கோட்பாட்டாளர்களுடன் அவர் போராட வேண்டியிருந்தது. (மத்தேயு 5:17; அப்போஸ்தலர் 15:1; ரோமர் 10:4) அப்போஸ்தலரில் கடைசியாக மீந்திருந்தவர் இறந்த பின்பு, அத்தகைய விசுவாசதுரோகத்திற்கு எதிராக அதற்குமேலும் தடை இருக்கவில்லை. ஆகையால் தூய்மைக்கேடு கட்டற்று பெருகியது.—2 தெசலோனிக்கேயர் 2:6, 7.
கிறிஸ்துவின் பிரமாணத்தை கிறிஸ்தவமண்டலம் தூய்மைக்கேடு செய்கிறது
16, 17. (அ) கிறிஸ்தவமண்டலத்தில் தூய்மைக்கேடு என்ன வகைகளை ஏற்றது? (ஆ) பாலியல் பற்றிய மாறுபாடான கருத்தைக் கத்தோலிக்க சர்ச்சின் பிரமாணங்கள் எவ்வாறு முன்னேற்றுவித்தன?
16 யூதமதத்தில் ஏற்பட்டதைப்போல், கிறிஸ்தவமண்டலத்திலும் தூய்மைக்கேடு, ஒன்றுக்கும் மேற்பட்ட வகையில் ஏற்பட்டது. இதுவும் பொய்க் கோட்பாடுகளுக்கும் கட்டுப்பாடற்ற ஒழுக்கநெறிகளுக்கும் ஆளாகியது. புற செல்வாக்குகளுக்கு எதிராகத் தன் மந்தையைப் பாதுகாக்கும்படியான அதன் முயற்சிகள், தூய்மையான வணக்கத்தில் மீந்திருந்தவற்றை அரித்துத்தின்பவையாக அடிக்கடி நிரூபித்தன. விடாக்கண்டிப்பானவையும் வேதப்பூர்வமற்றவையுமான பிரமாணங்கள் விரைவில் பெருகின.
17 எண்ணிக்கையில் ஏராளமான சர்ச்சுக்குரிய பிரமாணங்களை உண்டாக்குவதில் கத்தோலிக்க சர்ச் முதன்மையாக இருந்திருக்கிறது. பாலியல் சம்பந்தப்பட்ட காரியங்களின்பேரில் முக்கியமாய் இந்தப் பிரமாணங்கள் செய்திகளைத் திரித்து கூறுபவையாக இருந்தன. செக்ஷுவாலிட்டி அண்ட் கேத்தாலிஸிஸம் என்ற புத்தகத்தின்படி, இன்பத்தின் எல்லா வகைகளையும் பற்றி சந்தேகங்கொண்ட, ஸ்டோய்ஸிஸம் என்ற கிரேக்கத் தத்துவஞானத்தை சர்ச் ஏற்றது. இயல்பான திருமண உறவுகள் உட்பட, பாலியல் இன்பம் எல்லாம் பாவமுள்ளதென சர்ச் போதிக்கலாயிற்று. (நீதிமொழிகள் 5:18, 19-ஐ வேறுபடுத்திக் காண்க.) பாலுறவு, மக்களைப் பிறப்பிப்பதற்கு மாத்திரமே, வேறு எதற்குமல்ல என்று வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு, எந்த வகையான கருத்தடையையும் மிக வினைமையான பாவமாக, சர்ச் பிரமாணம் கண்டனம் செய்தது. சில சமயங்களில் அதற்குத் தண்டனையாகப் பல ஆண்டுகள் நோன்பிருக்கவும் தேவைப்படுத்தியது. மேலும், மணம் செய்யக்கூடாதென குருத்துவத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்தக் கட்டளை, பிள்ளைகளைத் தவறாகப் பயன்படுத்துவது உட்பட, மிகுந்த கள்ளத்தனமான பாலுறவு பெருகுவதற்கு வழிவகுத்திருக்கிறது.—1 தீமோத்தேயு 4:1-3.
18. சர்ச் பிரமாணங்கள் மிகுதியாகப் பெருகினதன் விளைவு என்னவாயிற்று?
18 சர்ச் பிரமாணங்கள் பெருகினபோது, அவை புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டன. இவை, பைபிளுக்குரிய இடத்தை ஏற்று அதை மறைத்துப்போடத் தொடங்கின. (மத்தேயு 15:3, 9-ஐ ஒப்பிடுக.) யூத மதத்தைப்போல் கத்தோலிக்க மதமும், மத சம்பந்தமில்லாத பிரசுரங்களை நம்பாமல், அதில் பெரும்பான்மையானதை பயமுறுத்தலாயிருப்பதாகக் கருதினது. இந்தக் கருத்தானது, அந்தக் காரியத்தின்பேரில் பைபிளின் நியாயமான எச்சரிக்கைக்கு மிக மீறியதாய்ச் சென்றுவிட்டது. (பிரசங்கி 12:12; கொலோசெயர் 2:8) பொ.ச. நான்காம் நூற்றாண்டின் ஒரு சர்ச் எழுத்தாளர் ஜரோம், இவ்வாறு உணர்ச்சியுடன் கூறினார்: “கர்த்தாவே, இனி எப்போதாவது உலகப்பிரகாரமான புத்தகங்களை உடையவனாக நான் இருந்தால் அல்லது அவற்றை வாசித்தால், உம்மை மறுதலித்தவனாவேன்.” காலப்போக்கில், புத்தகங்களில்—மதத்தோடு சம்பந்தமில்லாத விஷயங்கள் அடங்கியவற்றிலுங்கூட—முன் தணிக்கைச் செய்யும் நடவடிக்கையைச் சர்ச் ஏற்றது. இவ்வாறு, பூமி சூரியனைச் சுற்றி வட்டமிடுகிறது என்று 17-வது நூற்றாண்டு வானவியல் நிபுணர் கலிலியோ எழுதினதற்காக அவர் கண்டிக்கப்பட்டார். எல்லா விஷயங்களிலும்—வானவியல் சம்பந்தப்பட்டதிலும்கூட—சர்ச்சினுடையதே இறுதியான முடிவாக இருக்க வேண்டும் என்று சர்ச் வற்புறுத்தினதானது, முடிவில் பைபிளில் விசுவாசம் வைப்பதைக் கெடுத்துப்போடுவதில் விளைவடையும்.
19. எவ்வாறு துறவிமடங்கள் கடுமையான ஆட்சியாதிக்கக் கொள்கையை முன்னேற்றுவித்தன?
19 சர்ச்சின் விதிமுறைகளை உண்டாக்குவது துறவிமடங்களில் தழைத்தோங்கியது. அங்கு துறவிகள், தன்னலந் துறந்து வாழும்படி, இந்த உலகத்திலிருந்து தங்களை ஒதுக்கி வைத்துக்கொண்டனர். கத்தோலிக்கத் துறவிமடங்களில் பெரும்பான்மையானவை, ‘செ. பெனிடிக்ட்டின் விதியைக்’ கடைப்பிடித்தன. துறவிமடத் தலைவர் (ஆங்கிலத்தில் அபட் [abbot] “பிதா” என்பதற்கான அரமேயிக் சொல்லிலிருந்து வருவிக்கப்பட்ட ஒரு பதம்) முழுமையான அதிகாரத்துடன் ஆண்டார். (மத்தேயு 23:9-ஐ ஒப்பிடுக.) ஒரு துறவி, தன் பெற்றோரிடமிருந்து ஒரு பொருளைப் பெற்றால், அதை அந்தத் துறவி பெற வேண்டுமா அல்லது வேறு எவராவது பெற வேண்டுமா என்பதை அந்த மடத் தலைவரே தீர்மானிப்பார். கொச்சையான பேச்சுக்களைக் கண்டனம் செய்வதோடு, ஒரு விதி “எந்தவொரு சீஷனும் அத்தகைய காரியங்களைப் பேசக்கூடாது” என்று சொல்லி, எல்லா இன்ப சிற்றுரையாடலையும் வேடிக்கைப் பேச்சுகளையும் தடைசெய்தது.
20. புராட்டஸ்டன்ட் மதமும் வேதப்பூர்வமற்ற ஆட்சியாதிக்க கொள்கையை ஆதரித்ததென்று எது காட்டுகிறது?
20 கத்தோலிக்க மதத்தின் வேதப்பூர்வமற்ற மிதமீறிய காரியங்களைச் சீர்திருத்தம் செய்ய நாடின புராட்டஸ்டன்ட் மதம், விரைவில் அதைப்போன்றே, கிறிஸ்துவின் பிரமாணத்தில் ஆதாரமில்லாத ஆட்சியாதிக்க விதிமுறைகளை உண்டாக்குவதில் கைதேர்ந்ததாயிற்று. உதாரணமாக, பிரசித்திப்பெற்ற சீர்திருத்தவாதியான ஜாண் கால்வின், “சீர்திருத்தம் செய்யப்பட்ட சர்ச்சின் சட்டமியற்றுநர்” என்று குறிப்பிடப்படலானார். ‘மூப்பர்களால்’ வலியுறுத்திச் செயற்படுத்தப்பட்ட ஏராளமான கடும் விதிமுறைகளைக்கொண்டு அவர் ஜெனீவாவில் சர்ச்சை ஆண்டார். “ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் கண்காணிப்பது” இந்த மூப்பர்களின் “பொறுப்பு” என்று கால்வின் குறிப்பிட்டார். (2 கொரிந்தியர் 1:24-ஐ வேறுபடுத்திக் காண்க.) பயணிகள் விடுதிகளையும் சர்ச் கட்டுப்படுத்தியாண்டு, எந்த உரையாடல் விஷயங்கள் அனுமதிக்கப்படக்கூடியவை என்பதைக் கட்டளையிட்டது. விளையாட்டுத்தனமான பாட்டுகள் பாடுவது நடனமாடுவது போன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் இருந்தன.b
கிறிஸ்தவமண்டலத்தின் தவறுகளிலிருந்து பாடம் கற்றல்
21. “எழுதப்பட்டதற்கு மிஞ்சி” செல்லும் கிறிஸ்தவமண்டலத்தின் போக்கினுடைய பொதுவான விளைவுகள் என்னவாக இருந்திருக்கின்றன?
21 இந்த எல்லா விதிமுறைகளும் பிரமாணங்களும் கிறிஸ்தவமண்டலத்தைத் தூய்மைக்கேட்டிலிருந்து பாதுகாக்க செயல்பட்டிருக்கின்றனவா? முற்றிலும் மாறானதையே செய்திருக்கின்றன! இன்று, கிறிஸ்தவமண்டலம், மீறிய கண்டிப்பானவற்றிலிருந்து கண்டிப்பற்றவை வரையாக உள்ள நூற்றுக்கணக்கான பிரிவுகளாகப் பிளவுற்றிருக்கிறது. அவை எல்லாம், மனித சிந்தனை, மந்தையை ஆட்கொள்ளவும், தேவப்பிரமாணத்தில் இடையே புகவும் அனுமதித்து, ஒரு வகையிலோ மற்றொரு வகையிலோ, “எழுதப்பட்டதற்கு மிஞ்சி” சென்றுவிட்டிருக்கின்றன.—1 கொரிந்தியர் 4:6.
22. கிறிஸ்தவமண்டலத்தின் மீறுதல் கிறிஸ்துவின் பிரமாணத்தினுடைய முடிவை ஏன் குறிக்கவில்லை?
22 எனினும், கிறிஸ்துவின் பிரமாணத்தைப் பற்றிய சரித்திரம் துயர்தரும் முறையில் முடியவில்லை. தேவப்பிரமாணத்தை வெறும் மனிதர்கள் அழித்துப்போட யெகோவா தேவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். உண்மையான கிறிஸ்தவர்களுக்குள், கிறிஸ்தவப் பிரமாணம் மிக அதிக வல்லமை வாய்ந்ததாகச் செயல்படுகிறது, அதன்படி வாழ்வதற்குரிய பெரும் சிலாக்கியத்தை இவர்கள் உடையோராக இருக்கின்றனர். யூத மதமும் கிறிஸ்தவமண்டலமும் தேவப்பிரமாணத்திற்குச் செய்திருப்பதை ஆராய்ந்த பின்பு, நாம் இவ்வாறு பொருத்தமாய்க் கேட்கலாம்: ‘தேவப்பிரமாணத்தின் நோக்கத்துக்கே இரகசியமாக கெடுதியைச் செய்யும் மனித சிந்தனையையும் விதிகளையும் கொண்டு, கடவுளுடைய வார்த்தையின் தூய்மையைக் கெடுக்கிற கண்ணியைத் தவிர்த்து, கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி நாம் எவ்வாறு வாழலாம்? கிறிஸ்துவின் பிரமாணம் இன்று என்ன சமநிலையான நோக்கை நம்மில் அறிவுறுத்த வேண்டும்?’ பின்தொடரும் கட்டுரை இந்தக் கேள்விகளைக் கையாளும்.
[அடிக்குறிப்புகள்]
a இன்று இருந்துவரும் யூதமத முறைமைக்கு பரிசேயரே பெரும்பாலும் பொறுப்புடையோராக இருந்தனர். ஆகையால் யூதமதம், ஓய்வுநாளுக்குரிய அதன் கூட்டப்பட்ட பல கட்டுப்பாடுகளில், அவற்றை மீறுவதற்கான வழிவகைகளை இன்னும் தேடிக்கொண்டிருப்பது ஆச்சரியமாயில்லை. உதாரணமாக, ஓய்வுநாளில் ஒரு யூத ஆர்த்தடாக்ஸ் யூத மருத்துவமனைக்குச் செல்பவர், அங்குள்ள உயர்த்தியின் பட்டனை அமுக்கும் பாவ “வேலையைப்” பயணிகள் செய்வதைத் தவிர்க்கக்கூடும்படி, ஒவ்வொரு மாடித்தளத்திலும் அது தானாக நிற்பதைக் காண்பர். யூத மருத்துவர் சிலர், மருந்து சீட்டுகளை, சில நாட்களுக்குள் அழிந்து மறையும் மையில் எழுதுகின்றனர். ஏன்? எழுதுவதை “வேலை” என மிஷ்னா வகைப்படுத்துகிறது, ஆனால் “எழுதுவதை” நிலையான ஒரு தடத்தை விட்டுச்செல்வதாக விளக்குகிறது.
b கால்வினுடைய இறைமையியல் கருத்துக்கள் சிலவற்றை விவாதித்த செர்வெட்டஸ், முரண் கோட்பாட்டாளரென கழுமரத்தில் எரிக்கப்பட்டார்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ எது கிறிஸ்துவின் பிரமாணத்தினுடைய முழு உள்ளியல்பாகவே இருக்கிறது?
◻ இயேசுவின் போதகமுறை எவ்வாறு பரிசேயரின் போதகமுறையிலிருந்து மாறுபட்டது?
◻ கிறிஸ்தவமண்டலத்தைத் தூய்மைக்கேடு செய்வதற்கு, விடாக்கண்டிப்பான விதிமுறைகளை உண்டாக்கும் போக்கை சாத்தான் எவ்வாறு பயன்படுத்தினான்?
◻ கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி வாழ்வதன் நன்மையான பலன்கள் சில யாவை?
[பக்கம் 16-ன் படம்]
மோசேயின் நியாயப்பிரமாணத்தை இயேசு, நியாயத்தன்மையுடனும் இரக்கத்துடனும் பொருத்திப் பயன்படுத்தினார்