நீங்கள் தவறை ஒப்புக்கொண்டு உண்மையில் வருத்தந்தெரிவிக்க வேண்டுமா?
‘நான் ஒருபோதும் தவறை ஒப்புக்கொண்டு வருத்தந்தெரிவிப்பதில்லை,’ என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா எழுதினார். ‘நடந்தது நடந்தாய்விட்டது,’ என்று மற்றவர்கள் ஒருவேளை சொல்லலாம்.
சுய மரியாதையை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில், ஒரு தவறை ஒப்புக்கொள்ள ஒருவேளை நாம்தாமே தயங்குவோராக இருக்கலாம். பிரச்சினை அந்த மற்ற நபரில்தானே உள்ளதென்று நாம் ஒருவேளை விவாதிக்கலாம். அல்லது நாம் தவறை ஒப்புக்கொண்டு வருத்தந்தெரிவிக்க நினைக்கலாம், ஆனால், அந்தக் காரியம் முடிவாகக் கவனியாமல் விடப்பட்டதென்று நாம் கருதும் வரையில் காலங்கடத்தக்கூடும்.
அப்படியானால், வருத்தந்தெரிவிப்புகள் முக்கியமானவையா? அவை உண்மையில் எதையாவது நிறைவேற்றக்கூடுமா?
தவறை ஒப்புக்கொண்டு வருத்தந்தெரிவிப்பதை அன்பு கடமைப்படுத்துகிறது
சகோதர அன்பு, இயேசு கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டும் ஒரு குறியாக உள்ளது. அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) ‘சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூரும்படி’ வேதவாக்கியங்கள் கிறிஸ்தவர்களைத் தூண்டுவிக்கின்றன. (1 பேதுரு 1:22) ஊக்கமான அன்பு தவறை ஒப்புக்கொண்டு வருத்தந்தெரிவிக்கும்படி நம்மைக் கடமைப்படுத்துகிறது. ஏன்? ஏனெனில் மனித அபூரணத் தன்மையானது, தவிர்க்கமுடியாத, புண்படுத்தும் உணர்ச்சிகளை உண்டாக்குகிறது; இவற்றைப் போக்காவிடில், அன்பை இவை தடைசெய்கின்றன.
உதாரணமாக, கிறிஸ்தவ சபையிலுள்ள ஒருவருடன் தனிப்பட்ட ஏதோ சச்சரவின் காரணமாக, அவருடன் பேசாதிருப்பதை நாம் தெரிந்துகொண்டிருக்கலாம். நாம்தாமே அவரைப் புண்படுத்தியிருந்தால், அன்புள்ள உறவை நாம் எவ்வாறு திரும்ப நிலைநாட்ட முடியும்? பெரும்பான்மையான சமயங்களில், தவறை ஒப்புக்கொண்டு வருத்தந்தெரிவித்து, பின்பு அன்பான முறையில் பேசுவதற்கு முயற்சி செய்வதன் மூலமேயாகும். நம்முடைய உடன் விசுவாசிகளுக்கு அன்பைக் காட்டுவதற்கு நாம் கடன்பட்டிருக்கிறோம்; மனதைப் புண்படுத்திவிட்டதற்காக நாம் வருந்துகிறோமெனக் கூறுகையில், அந்தக் கடனில் சிறிதைச் செலுத்துகிறோம்.—ரோமர் 13:8.
உதாரணமாக: மாரி கார்மனும் பாக்கியும், நெடுங்கால நண்பர்களாக இருந்துவந்த கிறிஸ்தவ பெண்களான இருவராவர். எனினும், மாரி கார்மன், தீங்கான ஏதோ வீண்பேச்சை நம்பினதனால், பாக்கியுடன் அவளுடைய நட்புறவு குன்றிவிட்டது. விளக்கம் எதுவும் அளிக்காமல், பாக்கியை முற்றிலுமாக விட்டு விலகியிருந்தாள். ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பின், அந்த வீண்பேச்சு உண்மையல்லவென்று மாரி கார்மன் கண்டறிந்தாள். அவளுடைய பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? பாக்கியிடம் சென்று, தான் அவ்வளவு மோசமாக நடந்துகொண்டதற்காக மனத்தாழ்மையுடன் உள்ளாழத்திலிருந்து வருத்தந்தெரிவிக்கும்படி அன்பு அவளைத் தூண்டியியக்கியது. அவர்கள் இருவரும் மிகவும் கண்ணீர்விட்டு அழுதார்கள்; அதுமுதற்கொண்டு, அவர்கள் மாறா உறுதியுள்ள நண்பர்களாக இருந்துவருகிறார்கள்.
நாம் ஏதோ தவறு செய்ததாக உணராவிடினும், வருத்தந்தெரிவிப்பது, தவறாக புரிந்துகொண்டதனால் உண்டான பிணக்கைத் தீர்த்து சரிசெய்யலாம். மானுவெல் இவ்வாறு நினைவுபடுத்தி சொல்கிறார்: “பல ஆண்டுகளுக்கு முன்பாக, ஆவிக்குரிய எங்கள் சகோதரிகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, என் மனைவியும் நானும் அவர்களுடைய வீட்டில் தங்கினோம். அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் உதவிசெய்ய எங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்தோம். ஆனால் அவர்கள், ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிவந்தபின்பு, அவர்களுடைய வீட்டு செலவுகளை நாங்கள் சரியாக நிர்வகிக்கவில்லை என்று ஒரு நண்பரிடம் அவர்கள் குறைகூறினார்கள்.
“நாங்கள் அவர்களைப் போய்ப் பார்த்து, எங்கள் வயசு மற்றும் அனுபவக்குறைவின் காரணமாக, அவர்கள் செய்திருக்கக்கூடிய அளவுக்குக் காரியங்களை நாங்கள் ஒருவேளை கவனித்திருக்கமாட்டோம் என்று விளக்கிக் கூறினோம். அவர்கள் உடனடியாகப் பிரதிபலித்து, தான்தானே எங்களுக்குக் கடன்பட்டிருந்தார்கள் என்றும், அவர்களுக்காக நாங்கள் செய்திருந்த எல்லாவற்றிற்காகவும் தான் உண்மையில் நன்றியுள்ளவர்களாக இருந்தார்களென்றும் சொன்னார்கள். பிரச்சினை தீர்க்கப்பட்டது. தவறாகப் புரிந்துகொள்வதால் மனஸ்தாபங்கள் ஏற்படுகையில் மனத்தாழ்மையுடன் மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவத்தை அந்த அனுபவம் எனக்குக் கற்பித்தது.”
இந்தத் தம்பதி, அன்பைக் காண்பித்து, ‘சமாதானத்துக்கடுத்தவைகளை நாடினதால்,’ யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். (ரோமர் 14:19) மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் பற்றி உணர்வுள்ளோராக இருப்பதையும் அன்பு உட்படுத்துகிறது. மற்றவர்களுக்கு “அனுதாபம்” காட்டும்படி பேதுரு நமக்கு அறிவுரை கூறுகிறார். (1 பேதுரு 3:8, தி.மொ.) நமக்கு மற்றவர்கள்பேரில் அனுதாபம் இருந்தால், சிந்தனையற்ற வார்த்தையால் அல்லது செயலால் நாம் அவர்களுக்கு உண்டாக்கின மனவேதனையை உணர்ந்து வருத்தந்தெரிவிக்கும்படி உந்துவிக்கப்படுவோம்.
“மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்”
உண்மையுள்ள கிறிஸ்தவ மூப்பர்களுங்கூட எப்போதாவது உணர்ச்சிவேகப் பேச்சுக்கு உட்படக்கூடும். (அப்போஸ்தலர் 15:37-39-ஐ ஒப்பிடுக.) இந்தச் சந்தர்ப்பங்களில் வருத்தந்தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொள்வது மிகவும் நன்மை பயக்குவதாயிருக்கும். வருத்தந்தெரிவிப்பதைக் கடினமாகக் காண்கிற ஒரு மூப்பருக்கு அல்லது மற்ற கிறிஸ்தவர் எவருக்காயினும் எது உதவிசெய்யும்?
மனத்தாழ்மையே முக்கிய அம்சமாக இருக்கிறது. அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்.” (1 பேதுரு 5:5) பெரும்பான்மையான சச்சரவுகளில் இரு சார்பினரும் குற்றப்பொறுப்பில் பங்குடையோராக இருப்பது உண்மை என்றபோதிலும், மனத்தாழ்மையுள்ள கிறிஸ்தவர் தன் சொந்தத் தவறுகளுக்குக் கவனம் செலுத்தி, அவற்றை ஒப்புக்கொள்ள மனமுள்ளவராக இருக்கிறார்.—நீதிமொழிகள் 6:1-5.
வருத்தந்தெரிவிக்கப்படுபவர் அதை மனத்தாழ்மையான முறையில் ஏற்க வேண்டும். உதாரணமாக, பேச்சுத்தொடர்புகொள்ள வேண்டிய இரண்டு பேர், வெவ்வேறுபட்ட இரண்டு மலைகளின் உச்சிகளில் நிற்கிறார்களென வைத்துக்கொள்வோம். அவர்களை பிரித்து வைக்கும் பெரும் பிளவினூடே உரையாடுவது இயலாததாக இருக்கும். எனினும், அவர்களில் ஒருவர் கீழுள்ள பள்ளத்தாக்கில் இறங்கி, அந்த மற்றவரும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றினால், அவர்கள் எளிதில் உரையாடலாம். அவ்வாறே, இரண்டு கிறிஸ்தவர்கள், தங்களுக்கிடையில் ஒரு வேறுபாட்டைத் தீர்க்க வேண்டியதாக இருந்தால், அவர்கள் ஒவ்வொருவரும் மனத்தாழ்மையுடன் அடையாளப்பூர்வமான பள்ளத்தாக்கில் சந்தித்து, பொருத்தமான வருத்தந்தெரிவிப்புகளைச் செய்வார்களாக.—1 பேதுரு 5:6.
தவறை ஒப்புக்கொண்டு வருத்தந்தெரிவிப்பது மண வாழ்க்கையில் அதிகத்தைக் குறிக்கிறது
அபூரணரான இருவரின் மண வாழ்க்கையில், தவறை ஒப்புக்கொண்டு வருத்தந்தெரிவிப்பதற்குப் பல சந்தர்ப்பங்கள் நிச்சயமாக உண்டாகின்றன. கணவரும் மனைவியுமான இருவரும் அனுதாபம் உடையோராக இருந்தால், அவர்கள் சிந்திக்காமல் புண்படுத்தும் முறையில் பேசிவிட்டால் அல்லது செயல்பட்டுவிட்டால், அனுதாப உணர்ச்சியானது, வருத்தந்தெரிவித்துக்கொள்ளும்படி அவர்களை உந்துவிக்கும். நீதிமொழிகள் 12:18 (தி.மொ.) இவ்வாறு குறிப்பிடுகிறது: “யோசனையின்றிப் பேசிப் பட்டயம்போற் குத்துவோருண்டு, ஞானமுள்ளோரின் நாவு காயமாற்றும்.” ‘யோசனையற்ற பட்டயக் குத்துகளை’ நீக்க முடியாது, ஆனால், உள்ளப்பூர்வமான வருத்தந்தெரிவிப்பதால் அவற்றை காயமாற்ற முடியும். நிச்சயமாகவே, இது தொடர்ந்த விழிப்புணர்வையும் முயற்சியையும் தேவைப்படுத்துகிறது.
சூசன்,a தன் மணவாழ்க்கையைப் பற்றி பேசி, இவ்வாறு சொல்கிறார்கள்: “ஜாக்குக்கும்* எனக்கும் கலியாணமாகி 24 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் ஒருவரையொருவர் பற்றி புதிய காரியங்களை நாங்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். சிறிது காலத்திற்கு முன்பாக, நாங்கள் பிரிந்து சில வாரங்கள் தனியே வாழ்ந்தோம் என்பது வருந்தத்தக்க விஷயம். இருந்தாலும், மூப்பர்கள் கொடுத்த வேதப்பூர்வ அறிவுரைக்கு நாங்கள் செவிகொடுத்து, மறுபடியும் ஒன்றாகச் சேர்ந்தோம். எங்களுக்கு மிக வேறுபட்ட ஆளுமைகள் இருப்பதனிமித்தம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதை இப்பொழுது உணருகிறோம். இது ஏற்படுகையில், நாங்கள் விரைவில் வருத்தந்தெரிவித்து, ஒருவர் மற்றொருவரின் நோக்குநிலையைப் புரிந்துகொள்ள உண்மையில் பெருமுயற்சி செய்கிறோம். எங்கள் மணவாழ்க்கை ரொம்ப முன்னேற்றமடைந்திருக்கிறதென்று சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்.” கூடுதலாக ஜாக் சொல்வதாவது: “நாங்கள் மன அமைதி குலைவோராகும் சந்தர்ப்பங்கள் எவையெனக் கண்டுகொள்ளவும் கற்றிருக்கிறோம். அப்படிப்பட்ட சமயங்களில் நாங்கள் ஒருவரையொருவர் அதிக உணர்ச்சிக் கனிவோடு நடத்துகிறோம்.”—நீதிமொழிகள் 16:23.
நீங்கள் தவறுசெய்யவில்லையென்று நினைத்தாலும் வருத்தந்தெரிவிக்க வேண்டுமா? ஆழமான உணர்ச்சிகள் உட்பட்டிருக்கையில், யார் தவறுசெய்திருக்கிறார் என்பதைப் பற்றி நியாயமாய்ச் சொல்வது கடினம். ஆனால் மணவாழ்க்கையில் சமாதானம் இருப்பதே முக்கியமான காரியம். இஸ்ரவேலப் பெண்ணாகிய அபிகாயிலைக் கவனித்துப் பாருங்கள், அவளுடைய கணவன், தாவீதை அவமரியாதையாக நடத்தினான். அவளுடைய கணவனின் மூடத்தனத்திற்காக அவளைக் குற்றஞ்சாட்ட முடியாதென்றபோதிலும், அவள் வருத்தந்தெரிவித்து மன்னிப்பு கேட்டாள். “உமது அடியாளின் பாதகத்தை மன்னியும்,” என்று வருந்திக் கேட்டாள். தாவீது அவளை அன்பாதரவுடன் நடத்துபவராய்ப் பதிலளித்து, அவள் நடவடிக்கை எடுத்திராவிடில், குற்றமற்ற இரத்தத்தைத் தான் சிந்தியிருப்பாரென்று மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார்.—1 சாமுவேல் 25:24-28, 32-35.
அவ்வாறு, வருத்தந்தெரிவித்து மன்னிப்பு கேட்பதற்கு நாமே முதலாவதானவராக மனமுடையோராய் இருப்பது, வெற்றிகரமான மணவாழ்க்கைக்குத் தேவைப்படுகிறதென்று, 45 ஆண்டுகள் மணவாழ்க்கை நடத்தின ஜூன் என்ற பெயருடைய ஓர் கிறிஸ்தவ அம்மாள் உணருகிறார்கள். அவர்கள் சொல்வதாவது: “தனித்தவளாக என் உணர்ச்சிகளைப் பார்க்கிலும் எங்கள் மணவாழ்க்கை அதிக முக்கியமானது என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆகையால் நான் தவறை ஒப்புக்கொண்டு வருத்தந்தெரிவிக்கையில், மணவாழ்க்கைக்கு உதவியளிப்பதாக உணருகிறேன்.” ஜிம் என்ற பெயருடைய முதிர்வயதான ஒரு மனிதர் இவ்வாறு சொல்கிறார்: “மிகச் சிறிய காரியங்களுக்குங்கூட என் மனைவியிடம் நான் வருத்தந்தெரிவிக்கிறேன். கவலைக்கிடமான அறுவை சிகிச்சை அவளுக்கு செய்யப்பட்டது முதற்கொண்டே சட்டென்று அவள் வருத்தமடைகிறாள். ஆகையால் நான் தவறாமல் என் மார்போடு அவளை அணைத்து, ‘மன்னுச்சக்கமா, உன்ன மனசங்கடப்படுத்தனும்னு நான் நினைக்கல,’ என்று சொல்கிறேன். தண்ணீர் ஊற்றப்பட்ட ஒரு செடியைப்போல், உடனடியாக அவள் ஊக்கமூட்டப்படுகிறாள்.”
நாம் மிகவும் நேசிக்கிற ஒருவர் மனதைப் புண்படுத்திவிட்டோமென்றால், உடனடியாக வருத்தந்தெரிவிப்பது மிக அதிக பயன்தரத்தக்கதாயுள்ளது. மிலேக்ராஸ் இதை மனமார ஒப்புக்கொள்பவராய், இவ்வாறு சொல்கிறார்கள்: “தன்னம்பிக்கை குறைவால் நான் வருந்துகிறேன், என் கணவர் வெடுக்கென்று சொல்லும் வசைச் சொல் என்னை நிலைகுலையச் செய்கிறது. ஆனால் அவர் வருத்தந்தெரிவிக்கையில், நான் உடனடியாக சாந்தமானவளாக உணருகிறேன்.” பொருத்தமாகவே, வேதவாக்கியங்கள் இவ்வாறு நமக்குச் சொல்கின்றன: “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஔஷதமுமாகும்.”—நீதிமொழிகள் 16:24.
வருத்தந்தெரிவிக்கும் இந்தக் கலையைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்
தேவைப்படுகையில் வருத்தந்தெரிவிப்பதை நாம் பழக்கமாக்கிக்கொண்டால், ஆட்கள் பெரும்பாலும் ஆதரவான முறையில் பிரதிபலிப்பதை நாம் காண்போம். ஒருவேளை அவர்கள்தாமேயும் வருத்தந்தெரிவிப்பவராக இருக்கலாம். எவரையாவது மன அமைதி கெடும்படி செய்துவிட்டதாக நாம் உணருகையில், எந்தக் குற்றத்தையும் ஒப்புக்கொள்வதைத் தவிர்ப்பதற்கு மிகுதியான நேரத்தையும் முயற்சியையும் செலவிடுவதைப் பார்க்கிலும், தவறை ஒப்புக்கொண்டு வருத்தந்தெரிவிப்பதை ஏன் ஒரு பழக்கமாக்கிக்கொள்ளக்கூடாது? வருத்தந்தெரிவிப்பது பலவீனத்தின் அடையாளமாய் இருப்பதாக இந்த உலகம் உணரலாம், ஆனால் உண்மையில் அது கிறிஸ்தவ முதிர்ச்சிக்கு அத்தாட்சியை அளிப்பதாக இருக்கிறது. தவறில் ஏதோ சிறிதை ஒப்புக்கொண்டு, எனினும் தங்கள் பொறுப்பை கூடியவரை குறைப்போரைப்போல் இருக்க நாம் விரும்ப மாட்டோம். உதாரணமாக, வருந்துகிறோம் என்று உள்ளப்பூர்வமாய்க் கருதாமல், வெறுமனே எப்போதாவது சொல்கிறோமா? நாம் பிந்தி வந்துசேர்ந்து, மிகுதியாக வருத்தந்தெரிவிப்புகள் செய்தால், காலந்தவறாமல் வரப் பிரயாசப்படும்படி நாம் தீர்மானிக்கிறோமா?
அப்படியானால், நாம் உண்மையில் தவறை ஒப்புக்கொண்டு வருத்தந்தெரிவிக்க வேண்டுமா? ஆம், தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வது நம்மீது விழுந்த கடமையாக உள்ளது, மற்றவர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். ஒரு வருத்தந்தெரிவிப்பு, அபூரணத்தால் உண்டாக்கிய மனவேதனையைக் குறைப்பதற்கு உதவிசெய்யலாம், மேலும் உள்முறிந்த உறவுகளைக் காயமாற்றி சரிசெய்யலாம். நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வருத்தந்தெரிவிப்பும், மனத்தாழ்மையில் ஒரு பாடமாக இருந்து, மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மேலுமதிக உணர்வுள்ளோராகும்படி நம்மைப் பயிற்றுவிக்கிறது. இதன் பலனாக, உடன் விசுவாசிகளும், மணத் துணைவர்களும், மற்றவர்களும், தங்கள் பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் தகுதியுள்ளோராக நம்மைக் கருதுவர். நமக்கு மனச் சமாதானம் இருக்கும், யெகோவா தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
[அடிக்குறிப்பு]
a அவர்களுடைய உண்மையான பெயர்கள் அல்ல.
[பக்கம் 23-ன் படங்கள்]
உள்ளப்பூர்வமான வருத்தந்தெரிவிப்புகள் கிறிஸ்தவ அன்பைப் பெருகச்செய்கின்றன