ஆறுதலுக்காக யெகோவாவை நோக்கியிருங்கள்
“பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, . . . உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.”—ரோமர் 15:6.
1. ஒவ்வொரு நாளும், ஆறுதலுக்கான அதிக தேவையை ஏன் கொண்டுவருகிறது?
கடந்துசெல்லும் ஒவ்வொரு நாளும் ஆறுதலுக்கான அதிகரித்துவரும் தேவையை கொண்டுவருகிறது. 1,900 ஆண்டுகளுக்கு முன்பாக பைபிள் எழுத்தாளர் ஒருவர் கவனித்தபடி, “இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.” (ரோமர் 8:22) நம்முடைய நாளில் ‘தவிப்பும்’ ‘வேதனையும்’ எப்போதும் இருந்ததைவிட மிக அதிகளவில் இருந்திருக்கிறது. முதல் உலகப்போர் முதற்கொண்டு, மனிதவர்க்கம் நெருக்கடிக்கு மேலாக நெருக்கடியை அனுபவித்திருக்கிறது; இதை போர்கள், குற்றச்செயல்கள், பெரும்பாலும் பூமியை மனிதன் தவறாக நிர்வகித்ததோடு தொடர்புடைய இயற்கைப் பேரழிவுகள் ஆகியவற்றின் வடிவில் அனுபவித்திருக்கிறது.—வெளிப்படுத்துதல் 11:18.
2. (அ) மனிதவர்க்கத்தின் இன்றைய துயரங்களுக்கு யாரை அதிகமாக குற்றம்சாட்டலாம்? (ஆ) எந்த உண்மை, ஆறுதலுக்கான ஆதாரத்தை நமக்கு கொடுக்கிறது?
2 நம்முடைய நாளில் ஏன் இவ்வளவு துன்பம்? 1914-ல் ராஜ்யத்தின் பிறப்பைத் தொடர்ந்து பரலோகங்களிலிருந்து சாத்தான் வெளியே தள்ளப்படுவதை விவரித்த பிறகு, பைபிள் இவ்வாறு பதிலளிக்கிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, [ஏனென்றால்] பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கி[யிருக்கிறான்].” (வெளிப்படுத்துதல் 12:12) சாத்தானுடைய பொல்லாத ஆட்சியின் முடிவை ஏறக்குறைய நாம் நெருங்கிவிட்டோம் என்பதை அந்தத் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின் தெளிவான அத்தாட்சி அர்த்தப்படுத்துகிறது. சாத்தான் நம்முடைய முதல் பெற்றோரை கலகத்திற்கு வழிநடத்தியதற்கு முன்பிருந்த சமாதானமான நிலைமைக்கு பூமியின் வாழ்க்கை வெகுசீக்கிரத்தில் மாறும் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலூட்டுகிறது!
3. எப்பொழுது ஆறுதலின் தேவை இன்றி மனிதர் இருந்தனர்?
3 தொடக்கத்தில், மனிதனின் சிருஷ்டிகர் முதல் மானிட தம்பதிகளுக்கு ஓர் அழகிய பூங்காவை வீடாக கொடுத்தார். அது ஏதேன் என்றழைக்கப்பட்ட ஒரு பகுதியில் அமைந்திருந்தது; அதன் அர்த்தம் “மகிழ்ச்சி,” அல்லது “இன்பம்” என்பதாகும். (ஆதியாகமம் 2:8, NW அடிக்குறிப்பு) மேலும், ஒருபோதும் சாகாமல் வாழும் எதிர்பார்ப்புடன், ஆதாமும் ஏவாளும் பரிபூரண உடலாரோக்கியத்தை அனுபவித்து மகிழ்ந்தார்கள். அவர்கள் தங்களுடைய திறமைகளை—தோட்ட வேலை, கலை, கட்டுமானம், இசை ஆகியவற்றை—அபிவிருத்தி செய்திருந்திருக்கும் அநேக அம்சங்களைக் குறித்து சற்று சிந்தித்துப்பாருங்கள். பூமியைக் கீழ்ப்படுத்தி அதை ஒரு பரதீஸாக மாற்றும்படி தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையை நிறைவேற்றி முடிக்கும்போது அவர்கள் கற்றறிந்திருக்கும் சிருஷ்டிப்பின் எல்லா கிரியைகளைப் பற்றியும்கூட சிந்தித்துப்பாருங்கள். (ஆதியாகமம் 1:28) உண்மையில், ஆதாம் ஏவாளின் வாழ்க்கை தவிப்பாலும் வேதனையாலும் அல்ல, ஆனால் இன்பத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பப்பட்டிருந்திருக்கும். தெளிவாகவே, அவர்களுக்கு ஆறுதலின் தேவை இருந்திருக்காது.
4, 5. (அ) ஏன் ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படிதலுக்கான பரீட்சையில் தோல்வியடைந்தார்கள்? (ஆ) ஆறுதலுக்கான தேவை எப்படி மனிதவர்க்கத்திற்கு ஏற்பட்டது?
4 என்றபோதிலும், ஆதாமிடமும் ஏவாளிடமும் தேவைப்பட்ட காரியம் என்னவென்றால், தங்களுடைய தயவான பரலோக பிதாவுக்கான ஆழ்ந்த அன்பையும் போற்றுதலையும் வளர்க்க வேண்டியதே. இப்படிப்பட்ட அன்பு எல்லா சூழ்நிலைமைகளிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருக்க அவர்களைத் தூண்டியிருக்கும். (யோவான் 14:31-ஐ ஒப்பிடுக.) வருத்தகரமாக, நம்முடைய ஆதி பெற்றோர்கள் இருவருமே தங்களுடைய உரிமையுள்ள பேரரசராகிய யெகோவாவுக்கு கீழ்ப்படியத் தவறிவிட்டார்கள். மாறாக, இழிவான தூதனாகிய பிசாசாகிய சாத்தானுடைய பொல்லாத ஆட்சியின்கீழ் வரும்படி தங்களை அனுமதித்தார்கள். விலக்கப்பட்ட கனியை சாப்பிடுவதன் மூலம் பாவம் செய்யும்படி ஏவாளைத் தூண்டியது சாத்தானே. அதன் பின்பு, “அதை நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்” என்று கடவுள் தெளிவாக எச்சரித்திருந்த அந்த மரத்தின் கனியை ஆதாம்கூட சாப்பிட்டபோது அவனும் பாவம் செய்தான்.—ஆதியாகமம் 2:17.
5 இப்படியாக, பாவமுள்ள அந்தத் தம்பதியினர் மரிக்க ஆரம்பித்தார்கள். மரண தண்டனையைக் கொடுத்தபோது, ஆதாமிடம் கடவுள் இதையும் சொன்னார்: “பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.” (ஆதியாகமம் 3:17, 18) இவ்விதமாக, பண்படுத்தப்படாத பூமியை ஒரு பரதீஸாக மாற்றும் எதிர்பார்ப்பை ஆதாமும் ஏவாளும் இழந்தார்கள். ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்டதால், சபிக்கப்பட்ட நிலத்திலிருந்து உணவைப் பெறுவதற்காக தங்களுடைய சக்திகளை ஒன்றுதிரட்டி உழைக்க வேண்டியதாயிருந்தது. இந்தப் பாவமுள்ள, இறந்துபோகும் தன்மையைச் சுதந்தரித்திருக்கும் அவர்களுடைய சந்ததியாருக்கு பேரளவாக ஆறுதல் தேவைப்பட்டது.—ரோமர் 5:12.
ஆறுதலளிக்கும் ஒரு வாக்குறுதி நிறைவேற்றமடைகிறது
6. மனிதவர்க்கம் பாவத்துக்குள் வீழ்ந்த பிறகு, என்ன ஆறுதலளிக்கும் வாக்குறுதியை கடவுள் கொடுத்தார்? (ஆ) ஆறுதல் சம்பந்தமாக என்ன தீர்க்கதரிசனத்தை லாமேக் சொன்னார்?
6 மனித கலகத்தை தூண்டியவனுக்கு தண்டனை தீர்ப்பை வழங்குகையில், யெகோவா தம்மை ‘ஆறுதலை அளிக்கும் தேவனாக’ நிரூபித்தார். (ரோமர் 15:6) கடைசியாக, ஆதாமுடைய கலகத்தினால் வந்த பேரழிவுக்குரிய விளைவுகளிலிருந்து ஆதாமின் சந்ததியாரை விடுதலை செய்யும் ஒரு ‘வித்துவை’ அனுப்புவதாக வாக்குறுதி கொடுப்பதன்மூலம் அதை நிரூபித்தார். (ஆதியாகமம் 3:15) காலப்போக்கில், இந்த மீட்பை பற்றிய முற்காட்சிகளையும் கடவுள் கொடுத்தார். உதாரணமாக, ஆதாமின் குமாரனாகிய சேத்தின் வழிவந்த ஆதாமுடைய தூரத்து வம்சாவளி லாமேக்கை எடுத்துக்கொள்ளுங்கள்; அவன் தன்னுடைய குமாரன் செய்யப்போவதைக் குறித்து தீர்க்கதரிசனம் சொல்லும்படி கடவுள் அவனிடம் இவ்வாறு ஏவினார்: “கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்.” (ஆதியாகமம் 5:29) இந்த வாக்குறுதிக்கு இசைவாக, அந்தச் சிறுவன் நோவா என்று பெயரிடப்பட்டான், அந்தப் பெயரின் அர்த்தம் “ஓய்வு,” அல்லது “ஆறுதல்” என்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.
7, 8. (அ) மனிதனைப் படைத்ததைக் குறித்து யெகோவா மனஸ்தாபப்படும்படி என்ன சூழ்நிலைமை வழிநடத்தியது, அதற்கு பிரதிபலனாக என்ன செய்யப்போவதாக கடவுள் நோக்கம் கொண்டார்? (ஆ) நோவா எப்படி அவருடைய பெயரின் பொருளுக்கேற்ப வாழ்ந்தார்?
7 இதற்கிடையே, பரலோக தூதர்களில் ஒருசிலரை சாத்தான் தன்னுடைய சிஷ்யர்களாக இழுத்துக்கொண்டிருந்தான். இவர்கள் மானிட உருவெடுத்து, ஆதாமுடைய கவர்ச்சியான பெண் சந்ததியாரை மனைவியாக எடுத்துக்கொண்டார்கள். இயற்கைக்கு மாறான இப்படிப்பட்ட சேர்க்கைகள் மனித சமுதாயத்தை மேலுமாக கறைபடுத்தி, நெஃபிலிம் என்ற கடவுள் பக்தியற்ற ஒரு இனத்தைப் பிறப்பித்தன. “வீழ்த்துபவர்களாகிய” இந்த நெஃபிலிம்கள் வன்முறையால் இந்தப் பூமியை நிரப்பினார்கள். (ஆதியாகமம் 6:1, 2, 4, 11; யூதா 6) ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்று . . . கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.’—ஆதியாகமம் 6:5, 6.
8 ஒரு பூகோள ஜலப்பிரளயத்தின் மூலம் அந்தப் பொல்லாத உலகத்தை அழிப்பதற்கு யெகோவா நோக்கங்கொண்டார், ஆனால் முதலாவதாக உயிர்களைப் பாதுகாப்பதற்கு நோவா ஒரு பேழையை கட்டும்படி செய்தார். இதனால், மனித இனமும் விலங்கினங்களும் காப்பாற்றப்பட்டன. நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் அந்தப் பேழையிலிருந்து வெளியேறி சுத்தமாக்கப்பட்ட ஒரு பூமிக்கு வந்தபிறகு எப்பேர்ப்பட்ட விடுதலையை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்! நிலத்தின் மீதிருந்த சாபம் நீக்கப்பட்டு, விவசாய வேலைகள் அவ்வளவு சுலபமாக்கப்பட்டதைக் காண்பது எவ்வளவாய் ஆறுதலளிக்கிறது! நிஜமாகவே, லாமேக்கினுடைய தீர்க்கதரிசனம் உண்மை ஆனது, நோவா தன்னுடைய பெயரின் பொருளுக்கேற்ப வாழ்ந்தார். (ஆதியாகமம் 8:21) கடவுளுடைய உண்மையுள்ள ஊழியனாக, மனிதவர்க்கத்திற்கு ஓரளவு ‘ஆறுதலை’ கொண்டுவருவதில் நோவா ஒரு கருவியாய் இருந்தார். இருந்தபோதிலும், சாத்தான் மற்றும் அவனுடைய பேய் தூதர்களின் பொல்லாத செல்வாக்கு ஜலப்பிரளயத்துடன் முடிவடையவில்லை, பாவம், வியாதி, மற்றும் மரண சுமையின்கீழ் மனிதவர்க்கம் தொடர்ந்து தவித்துக்கொண்டிருக்கிறது.
நோவாவைவிட மிகப் பெரிய ஒருவர்
9. மனந்திரும்புகிற மனிதர்களுக்கு இயேசு கிறிஸ்து எவ்விதமாக சகாயராகவும் ஆறுதலளிப்பவராகவும் நிரூபித்திருக்கிறார்?
9 இறுதியாக, மனித சரித்திரத்தின் ஏறக்குறைய 4,000 ஆண்டுகளின் முடிவில், வாக்குப்பண்ணப்பட்ட அந்த வித்துவானவர் தோன்றினார். யெகோவா தேவன் மனிதவர்க்கத்தினருக்கான மிகுந்த அன்பினால் தூண்டப்பட்டு, பாவமுள்ள மனிதகுலத்திற்காக தம்முடைய ஒரேபேறான குமாரன் கிரயபலியாய் மரிக்கும்படி அவரை பூமிக்கு அனுப்பினார். (யோவான் 3:16) தம்முடைய பலிக்குரிய மரணத்தில் விசுவாசம் வைத்து மனந்திரும்புகிற பாவிகளுக்கு இயேசு கிறிஸ்து மகத்தான விடுதலையைக் கொண்டுவருகிறார். தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து அவருடைய குமாரனின் முழுக்காட்டப்பட்ட சீஷர்களாக ஆகும் அனைவரும் நீடித்த புத்துணர்ச்சியையும் ஆறுதலையும் அனுபவிக்கிறார்கள். (மத்தேயு 11:28-30; 16:24) அவர்களுடைய அபூரணத்தன்மையின் மத்தியிலும், ஓர் சுத்தமான மனச்சாட்சியுடன் கடவுளை சேவிப்பதில் ஆழ்ந்த சந்தோஷத்தை காண்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து இயேசுவின்மீது விசுவாசம் வைத்தால் நித்திய ஜீவன் பரிசாக கொடுக்கப்படும் என்பது அவர்களுக்கு எவ்வளவாய் ஆறுதலளிக்கிறது! (யோவான் 3:36; எபிரெயர் 5:9) பலவீனத்தின் காரணமாக வினைமையான ஒரு பாவத்தை செய்துவிட்டால், அவர்களுக்கு உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து என்ற ஒரு சகாயர் அல்லது ஆறுதலளிப்பவர் இருக்கிறார். (1 யோவான் 2:1, 2) இப்படிப்பட்ட பாவத்தை அறிக்கை செய்வதன் மூலமும் பாவத்தைப் பழக்கமாய் செய்பவர்களாய் இருப்பதை தவிர்ப்பதற்கு வேதப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதன் மூலமும், ‘அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதற்கு தேவன் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்’ என்பதை அறிந்தவர்களாய் விடுதலையைப் பெறுகிறார்கள்.—1 யோவான் 1:9; 3:6; நீதிமொழிகள் 28:13.
10. இயேசு பூமியிலிருந்தபோது நடப்பித்த அற்புதங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
10 இயேசு பூமியிலிருக்கையில், பேய் பிடித்தவர்களை விடுவிப்பதன் மூலமும், எல்லா வகையான வியாதியைக் குணப்படுத்துவதன் மூலமும், இறந்த அன்பானவர்களை மீண்டும் உயிருக்கு கொண்டுவருவதன் மூலமும் புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார். இப்படிப்பட்ட அற்புதங்கள் தற்காலிக நன்மையைத்தான் கொண்டுவந்தன என்பது உண்மைதான், ஏனெனில் இவ்விதமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பின்பு வயதாகி இறந்துபோனார்கள். இருப்பினும், இயேசு எல்லா மனிதவர்க்கத்தினர்மீதும் பொழியப்போகும் நிரந்தரமான எதிர்கால ஆசீர்வாதங்களை இதன்மூலம் சுட்டிக்காண்பித்தார். இப்பொழுது வல்லமை வாய்ந்த ஒரு பரலோக அரசராக, வெறுமனே பேய்களைத் துரத்துவதைவிட மிக அதிகத்தை வெகுசீக்கிரத்தில் அவர் செய்வார். அவர்களுடைய தலைவனாகிய சாத்தானோடுகூட, அவர்களை செயலற்ற ஒரு நிலைமையாகிய அபிஸுக்குள் தள்ளுவார். பின்பு கிறிஸ்துவினுடைய மகிமையான ஆயிர வருட ஆட்சி ஆரம்பமாகும்.—லூக்கா 8:30, 31; வெளிப்படுத்துதல் 20:1, 2, 6.
11. ‘ஓய்வுநாளுக்கு ஆண்டவர்’ என்பதாக இயேசு ஏன் தன்னை அழைத்தார்?
11 இயேசு, தான் ‘ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்’ என்பதாக சொன்னார், அவர் செய்த அநேக சுகப்படுத்துதல்களும் ஓய்வுநாளில் செய்யப்பட்டன. (மத்தேயு 12:8-13; லூக்கா 13:14-17; யோவான் 5:15, 16; 9:14) ஏன் இப்படி செய்தார்? ஓய்வுநாள் என்பது இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டத்தின் பாகமாய் இருந்தது, இவ்விதமாக ‘வரப்போகிற காரியங்களின் நிழலாய்’ சேவித்தது. (எபிரெயர் 10:1) வாரத்தில் வேலைசெய்யும் அந்த ஆறு நாட்கள், சாத்தானுடைய ஒடுக்குகிற ஆட்சிக்கு கடந்த 6,000 ஆண்டுகளாக மனிதன் அடிமைப்பட்டிருந்ததை நமக்கு நினைப்பூட்டுகிறது. வாரத்தின் கடைசியில் வரும் அந்த ஓய்வுநாள், பெரிய நோவாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது மனிதவர்க்கம் அனுபவிக்கப்போகும் நிம்மதியான ஓய்வை மனதுக்குக் கொண்டுவருகிறது.—2 பேதுரு 3:8-ஐ ஒப்பிடுக.
12. என்ன ஆறுதலளிக்கும் அனுபவங்களை நாம் எதிர்நோக்கி இருக்கலாம்?
12 கிறிஸ்துவுடைய ஆட்சியின் பூமிக்குரிய பிரஜைகள், கடைசியாக, சாத்தானுடைய பொல்லாத செல்வாக்கிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டவர்களாக தங்களைக் காணும்போது எப்பேர்ப்பட்ட விடுதலையை உணருவார்கள்! தங்களுடைய சரீர, உணர்ச்சி, மற்றும் மன சம்பந்தமான நோய்கள் சுகப்படுத்தப்படுவதை அனுபவிக்கும்போது இன்னும் கூடுதலான ஆறுதல் வரும். (ஏசாயா 65:17) அதன் பின்பு, இறந்த நிலையிலிருந்த தங்களுடைய அன்பானவர்களை வரவேற்க ஆரம்பிக்கையில் அவர்களுக்கு உண்டாகும் மிகுந்த சந்தோஷத்தை சற்று கற்பனை செய்துபாருங்கள்! இந்த முறைகளில் தேவன் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” (வெளிப்படுத்துதல் 21:4) இயேசுவினுடைய கிரயபலியின் நன்மைகள் படிப்படியாக பொருத்தப்படுகையில், கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ்ப்படிதலுள்ள பிரஜைகள் ஆதாமுடைய பாவத்தின் அனைத்து கெட்ட விளைவுகளிலிருந்தும் முற்றிலும் விடுவிக்கப்பட்டவர்களாய் பரிபூரணத்திற்கு வளருவார்கள். (வெளிப்படுத்துதல் 22:1-5) பின்பு சாத்தான் “கொஞ்சக்காலம்” விடுதலை செய்யப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:3, 7) யெகோவாவின் உரிமையுள்ள அரசாட்சியை உண்மையோடு ஆதரிக்கும் அனைவரும் நித்திய ஜீவனைப் பரிசாக பெறுவார்கள். ‘சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து [முற்றிலும்] விடுதலையாக்கப்படும்’ சமயத்தில் அனுபவிக்கும் சொல்லமுடியாத சந்தோஷத்தையும் நிம்மதியையும் கற்பனை செய்துபாருங்கள்! இவ்வாறு கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் ‘தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை அனுபவித்து மகிழும்.’—ரோமர் 8:20.
13. கடவுள் அளிக்கும் ஆறுதல் உண்மை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஏன் தேவை?
13 இதற்கிடையில், சாத்தானுடைய பொல்லாத ஒழுங்குமுறையில் வாழ்கிற அனைவருக்கும் பொதுவாக ஏற்படுகிற தவிப்புக்கும் வேதனைக்கும் நாம் தொடர்ந்து ஆளாகிறோம். சரீர வியாதியும் உணர்ச்சிப்பூர்வமான கோளாறுகளும் அதிகரித்துவருவது, உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் உட்பட, எல்லா வகையான மக்களையும் பாதிக்கிறது. (பிலிப்பியர் 2:25-27; 1 தெசலோனிக்கேயர் 5:14) அதோடுகூட, ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் ஆட்சியாளராக கடவுளுக்கு கீழ்ப்படிவதற்காக’ சாத்தான் நம்மீது குவிக்கிற நேர்மையற்ற பரிகாசத்தையும் துன்புறுத்துதலையும் கிறிஸ்தவர்களாக நாம் அடிக்கடி அனுபவிக்கிறோம். (அப்போஸ்தலர் 5:29, NW) எனவே, சாத்தானுடைய உலகத்தின் முடிவு வரையாக கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நாம் சகித்திருக்க வேண்டுமென்றால், கடவுள் கொடுக்கும் ஆறுதலும் உதவியும் பலமும் நமக்கு தேவை.
ஆறுதலை எங்கே கண்டடைவது
14. (அ) இயேசு தம்முடைய மரணத்திற்கு முந்திய இரவு என்ன வாக்குறுதியைக் கொடுத்தார்? (ஆ) கடவுளுடைய பரிசுத்த ஆவியின் ஆறுதலிலிருந்து நாம் முழுமையாக பயனடைய வேண்டுமானால் என்ன அவசியப்படுகிறது?
14 இயேசு தம்முடைய மரணத்திற்கு முந்தின இரவில், தான் விரைவில் அவர்களை விட்டுப்பிரிந்து தம்முடைய பிதாவிடம் திரும்பிப் போவதைக் குறித்து தம் உண்மையுள்ள அப்போஸ்தலரிடம் தெளிவுபடுத்தினார். இது அவர்களை கலக்கமடையும்படி செய்து, வேதனைப்பட வைத்தது. (யோவான் 13:33, 36; 14:27-31) அவர்களுக்குத் தொடர்ந்து ஆறுதல் தேவைப்படுவதை உணர்ந்தவராய், இயேசு அவர்களிடம் இந்த வாக்குறுதியை அளித்தார்: “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்கு . . . வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” (யோவான் 14:16) இயேசு இங்கே கடவுளுடைய பரிசுத்த ஆவியைக் குறிப்பிட்டார், அது அவருடைய உயிர்த்தெழுதலுக்கு 50 நாட்களுக்குப் பிறகு அவருடைய சீஷர்களின்மீது ஊற்றப்பட்டது.a மற்ற சந்தர்ப்பங்களில், கடவுளுடைய ஆவியானது அவர்களுக்கு வந்த சோதனைகளின்போது ஆறுதலளித்து, கடவுளுடைய சித்தத்தை தொடர்ந்து செய்வதற்கான பலத்தைக் கொடுத்தது. (அப்போஸ்தலர் 4:31) என்றபோதிலும், இப்படிப்பட்ட உதவி தானாகவே கிடைக்கும் ஒன்றாக கருதப்படக்கூடாது. அதிலிருந்து முழுமையாக நன்மையடைவதற்கு, கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக கொடுக்கிற ஆறுதல்படுத்தும் உதவிக்காக ஒவ்வொரு கிறிஸ்தவனும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.—லூக்கா 11:13.
15. யெகோவா நமக்கு ஆறுதலளிக்கும் வழிகளில் சில யாவை?
15 கடவுள் ஆறுதலளிக்கும் மற்றொரு விதம் அவருடைய வார்த்தையாகிய பைபிளின் மூலமாகும். பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) இது, பைபிளிலும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களிலும் எழுதப்பட்டுள்ள காரியங்களை நாம் ஒழுங்காக படித்து அதன்பேரில் தியானிப்பதன் அவசியத்தைக் காட்டுகிறது. நாம் கிறிஸ்தவ கூட்டங்களில் ஒழுங்காக ஆஜராகிறவர்களாகவும் இருக்கவேண்டும்; அங்கு ஆறுதலளிக்கும் விஷயங்கள் கடவுளுடைய வார்த்தையிலிருந்து பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இப்படி கூடிவருவதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்துவதற்காகும்.—எபிரெயர் 10:25.
16. கடவுளுடைய ஆறுதலளிக்கும் ஏற்பாடுகள் என்ன செய்யும்படி நம்மை தூண்டவேண்டும்?
16 ரோமருக்கான பவுலுடைய கடிதம் கடவுளுடைய ஆறுதலளிக்கும் ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்வதிலிருந்து நாம் பெறும் நல்ல பலன்களைத் தொடர்ந்து காட்டுகிறது. “நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக,” என்பதாக பவுல் எழுதினார். (ரோமர் 15:5, 6) ஆம், கடவுளுடைய ஆறுதலளிக்கும் ஏற்பாடுகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம், அதிகமாய் நம்முடைய தைரியமான தலைவராகிய இயேசு கிறிஸ்துவை போலவே நாம் ஆவோம். நம்முடைய ஊழிய வேலையில், நம்முடைய கூட்டங்களில், உடன் விசுவாசிகளோடு கொள்ளும் தனிப்பட்ட உரையாடல்களில், நம்முடைய ஜெபங்களில் கடவுளை மகிமைப்படுத்துவதற்கு நம்முடைய வாயை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இது நம்மை உந்துவிக்கும்.
கடுமையான சோதனை காலங்களில்
17. யெகோவா எவ்வாறு தம்முடைய குமாரனுக்கு ஆறுதல் செய்தார், என்ன விளைவுடன்?
17 இயேசு, மிகுந்த வேதனையூட்டும் தம்முடைய மரணத்திற்கு முந்தின இரவில் ‘மிகவும் கலங்கியவராகவும்’ ‘ஆழ்ந்த துக்கமடைந்தவராகவும்’ ஆனார். (மத்தேயு 26:37, 38, NW) ஆகையால், தம்முடைய சீஷர்களிடமிருந்து இன்னும் சற்றுதூரம் சென்று, உதவிக்காக தம்முடைய பிதாவிடம் ஜெபித்தார். ‘அவர் தம்முடைய பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்.’ (எபிரெயர் 5:7) “வானத்திலிருந்து ஒரு தூதன் [இயேசுவுக்கு] தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்” என்பதாக பைபிள் அறிவிக்கிறது. (லூக்கா 22:43) இயேசு தம்மை எதிர்த்தவர்களை எதிர்ப்படுவதற்கு தைரியத்தோடும் ஆண்மையோடும் சென்ற முறையானது, தம்முடைய குமாரனை ஆறுதல்படுத்துவதற்கு கடவுள் கையாண்ட விதம் மிகவும் பலன்தரத்தக்கதாய் இருந்தது என்பதற்கு அத்தாட்சியளிக்கிறது.—யோவான் 18:3-8, 33-38.
18. (அ) அப்போஸ்தலன் பவுலுடைய வாழ்க்கையில் எந்தக் காலப்பகுதி சோதனைமிக்கதாக இருந்தது? (ஆ) கடினமாக உழைக்கும், பரிவிரக்கமுள்ள மூப்பர்களுக்கு நாம் எப்படி ஆறுதலாய் இருக்கலாம்?
18 அப்போஸ்தலனாகிய பவுலும் கடுமையான சோதனை காலங்களை அனுபவித்தார். உதாரணமாக, எபேசுவில் அவருடைய ஊழியம் ‘மிகுந்த கண்ணீராலும், யூதருடைய தீமையான யோசனைகளாலும் [அவருக்கு] நேரிட்ட சோதனைகளாலும்’ தனிப்படுத்திக் காட்டப்பட்டது. (அப்போஸ்தலர் 20:17-20) முடிவாக, அவருடைய பிரசங்க வேலையின் நிமித்தமாக தியானாள் தேவதையின் ஆதரவாளர்கள் அந்தப் பட்டணத்தை வன்முறை கிளர்ச்சியால் தொல்லைபடுத்திய பின்பு பவுல் எபேசுவை விட்டுப்போனார். (அப்போஸ்தலர் 19:23-29; 20:1) வடக்கேயுள்ள துரோவா பட்டணத்தை நோக்கி பவுல் செல்கையில், அவருடைய மனதில் ஏதோவொன்று மிகவும் பாரமாக அழுத்தியது. எபேசுவில் ஏற்பட்ட வன்முறை கிளர்ச்சிக்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு, மனதை சஞ்சலப்படுத்தும் ஒரு அறிக்கையை அவர் பெற்றிருந்தார். கொரிந்துவில் ஆரம்ப நிலையிலிருந்த சபை, பிரிவினையால் தொல்லைபடுத்தப்பட்டது, அது வேசித்தனத்தைப் பொறுத்துக்கொண்டிருந்தது. ஆகவே எபேசுவிலிருந்து, அந்தச் சூழ்நிலைமையை சரிசெய்யும் நம்பிக்கையில் பலமான கடிந்துகொள்ளுதலுடன் பவுல் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இது அவருக்கு ஒரு சுலபமான காரியமாக இருக்கவில்லை. “மிகுந்த வியாகுலமும் மனஇடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்,” என்பதாக பின்பு இரண்டாவது கடிதம் ஒன்றில் வெளிப்படுத்தினார். (2 கொரிந்தியர் 2:4) பவுலைப்போல, பரிவிரக்கமுள்ள மூப்பர்கள் திருத்துகிற அறிவுரை கொடுப்பதையும் கடிந்துகொள்வதையும் எளிதாக காண்பதில்லை, இதற்கு ஓரளவு காரணம் என்னவென்றால் அவர்கள் தங்களுடைய சொந்த பலவீனங்களைக் குறித்தே அதிக கவனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். (கலாத்தியர் 6:1) அப்படியானால், அன்பான, பைபிள் அடிப்படையிலான அறிவுரைக்கு உடனடியாக பிரதிபலிப்பதன் மூலம் நம் மத்தியில் வழிநடத்திச் செல்கிறவர்களுக்கு நாம் ஆறுதலாய் இருப்போமாக.—எபிரெயர் 13:17.
19. ஏன் துரோவாவிலிருந்து மக்கெதோனியாவுக்கு பவுல் பிரயாணப்பட்டார், எவ்விதமாக அவர் கடைசியில் நிம்மதி அடைந்தார்?
19 எபேசுவில் இருக்கையில், கொரிந்துவிலிருந்த சகோதரர்களுக்கு பவுல் கடிதம் எழுதினார்; அது மட்டுமல்லாமல் அந்தக் கடிதத்திற்கான அவர்களுடைய பிரதிபலிப்பைக் குறித்து தனக்கு திரும்பி வந்து அறிக்கை செய்யும்படி தீத்துவை நியமித்து, அவர்களுக்கு உதவிசெய்ய இவரையும் அனுப்பினார். தீத்துவை துரோவாவில் சந்திப்பதாக பவுல் எதிர்பார்த்தார். அங்கு சீஷர்களாக்குவதற்கான அருமையான வாய்ப்புகளால் பவுல் ஆசீர்வதிக்கப்பட்டார். ஆனால் இது அவருடைய கவலையை நீக்கத் தவறியது, ஏனென்றால் தீத்து இன்னும் வந்துசேரவில்லை. (2 கொரிந்தியர் 2:12, 13) ஆகவே, தீத்துவை மக்கெதோனியாவில் சந்திக்கும் எதிர்பார்ப்போடு அங்கு பயணப்பட்டார். பவுலுடைய கவலைதோய்ந்த நிலை அவருடைய ஊழியத்திற்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பினால் இன்னும் மோசமாகியது. “நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது,” அவர் விளக்குகிறார், “எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.” (2 கொரிந்தியர் 7:5, 6) பவுலுடைய கடிதத்திற்கு கொரிந்தியர்களுடைய சாதகமான பிரதிபலிப்பைப் பற்றி பவுலிடம் சொல்லுவதற்கு தீத்து கடைசியாக வந்துசேர்ந்தபோது எப்பேர்ப்பட்ட நிம்மதி!
20. (அ) பவுலுடைய விஷயத்தில் செய்ததுபோல, யெகோவா ஆறுதலளிக்கும் மற்றொரு முக்கியமான வழி என்ன? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன கலந்தாலோசிக்கப்படும்?
20 பவுலுடைய அனுபவம் கடவுளுடைய இன்றைய ஊழியர்களுக்கு ஆறுதலளிக்கிறது, ‘சிறுமைப்படும்படி’ அல்லது ‘மனச்சோர்வடையும்படி’ (பிலிப்ஸ் மொழிபெயர்ப்பு) செய்த சோதனைகளையும் அவர்களில் அநேகர் எதிர்ப்படுகின்றனர். ஆம், ஆறுதலளிக்கும் தேவன் நம்முடைய தனிப்பட்ட தேவைகளை அறிந்திருக்கிறார்; கொரிந்தியர்களுடைய மனந்திரும்பும் மனப்பான்மையைப் பற்றி தீத்து கொடுத்த அறிக்கையின் மூலம் பவுல் ஆறுதலடைந்தது போலவே, ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருக்கும்படி அவர் நம்மை பயன்படுத்த முடியும். (2 கொரிந்தியர் 7:11-13) நம்முடைய அடுத்த கட்டுரையில், கொரிந்தியர்களுக்கான பவுலுடைய கனிவான பிரதிபலிப்பையும் இன்று கடவுளுடைய ஆறுதலை பலன்தரத்தக்க விதமாக பகிர்ந்துகொள்கிறவர்களாக இருப்பதற்கு அது நமக்கு எவ்வாறு உதவிசெய்ய முடியும் என்பதையும் நாம் சிந்திப்போம்.
[அடிக்குறிப்பு]
a முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின்மீது செயல்பட்ட கடவுளுடைய ஆவியின் முக்கிய கிரியைகளில் ஒன்று, கடவுளுடைய புத்திர சுவீகாரம் பெற்ற ஆவிக்குரிய குமாரர்களாகவும் இயேசுவின் சகோதரர்களாகவும் அவர்களை அபிஷேகம் செய்வதாக இருந்தது. (2 கொரிந்தியர் 1:21, 22) இது, கிறிஸ்துவினுடைய சீஷர்களாகிய 1,44,000 பேருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. (வெளிப்படுத்துதல் 14:1, 3) இன்று பெருந்திரளான கிறிஸ்தவர்களுக்கு ஒரு பரதீஸான பூமியில் நித்திய ஜீவனோடு வாழும் நம்பிக்கை அன்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அபிஷேகம் செய்யப்படாதபோதிலும், அவர்களும்கூட கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியையும் ஆறுதலையும் பெறுகிறார்கள்.
உங்களால் பதிலளிக்க முடியுமா?
◻ மனிதவர்க்கத்திற்கு எவ்வாறு ஆறுதல் தேவைப்படும் நிலை வந்தது?
◻ எவ்வாறு நோவாவைவிட இயேசு பெரியவராக நிரூபித்திருக்கிறார்?
◻ இயேசு ஏன் தம்மை ‘ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்’ என்பதாக அழைத்தார்?
◻ கடவுள் இன்று எவ்வாறு ஆறுதல் அளிக்கிறார்?
[பக்கம் 10-ன் வரைப்படம்/படம்]
கொரிந்தியரைப் பற்றிய தீத்துவின் அறிக்கையின் மூலம் பவுல் அதிக ஆறுதலடைந்தார்
மக்கெதோனியா
கிரீஸ்
பிலிப்பு
கொரிந்து
துரோவா
ஆசியா
எபேசு