பாரபட்சமற்ற நம் கடவுளின் மாதிரியைப் பின்பற்றுகிறீர்களா?
பாரபட்சமில்லாமை—இதை எங்கே காணலாம்? முற்றிலும் பாரபட்சமற்றவராக, தப்பெண்ணம், பட்சபாதம், மற்றும் வேறுபாடு காட்டாதவராக ஒருவர் இருக்கிறார். அவரே, மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவன். எனினும், மனிதரைக் குறித்து, 19-ம் நூற்றாண்டு ஆங்கில எழுத்தாளரான சார்ல்ஸ் லாம்ப், வெளிப்படையாக இவ்வாறு எழுதினார்: “சுருங்கச் சொன்னால்,—விருப்புகளாலும் வெறுப்புகளாலுமாகிய தப்பெண்ணங்கள் நிறைந்தவனாக நான் இருக்கிறேன்.”
பாரபட்சமில்லாமைக்கு வருகையில், மனித உறவுகள் விசனகரமாய், பாரபட்சமில்லாமையில் மிகவும் குறைவுபடுகின்றன. ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்,’ என்று ஞானியாகிய இஸ்ரவேலின் அரசன் சாலொமோன், பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகக் குறிப்பிட்டார். (பிரசங்கி 8:9) இனப் பகைமை, தேசிய போர்கள் மற்றும் குடும்பமரபுச் சண்டைகள் தொடர்ந்து பெருகிக்கொண்டிருக்கின்றன. ஆகையால், பட்சபாதமற்ற ஒரு சமுதாயத்தை மனிதர் தாங்களாக உருவாக்க முடியுமென்று நம்புவது மெய்ம்மையாக உள்ளதா?
நம்முடைய மனப்பான்மைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், ஆழமாக ஊன்றியுள்ள தப்பெண்ணங்கள் எவற்றையும் நம்மிலிருந்து அகற்றுவதற்கும் மனமார்ந்த முயற்சி தேவைப்படுகிறது. (எபேசியர் 4:22-24) நம்முடைய சமுதாய மற்றும் கல்வி சூழமைவில் உருவாக்கப்பட்டவையும் நம்முடைய குடும்பம், இனம் மற்றும் தேசிய சூழமைவுகளில் உறுதியாய் ஊன்றப்பட்டவையுமான மனப்பான்மைகளை, நாம் அறியாமலே நம்மில் கொண்டுள்ளோராக இருக்கலாம். இவை சிறிதே சாயும் மனப்பான்மைகளாகத் தோன்றினாலும், பெரும்பாலும் ஆழமாய் ஊன்றியவையாக, பாரபட்சமாய் நடப்பதற்கு வழிநடத்துகின்றன. ஸ்காட்லாந்திய சட்ட அறிஞரும் பதிப்பாசிரியருமான லார்ட் ஃபிரான்ஸிஸ் ஜெஃப்ரே இவ்வாறு ஒப்புக்கொள்ளவும் செய்தார்: “ஒருவன் தன் தப்பெண்ணங்களின் அளவையும் ஊன்றுறுதியையும் பற்றி அவ்வளவு நீடித்த காலம் உணராதிருப்பதுபோல் வேறு எதுவும் இல்லை.”
பாரபட்சமாக இருக்கும் மனச்சாய்வை எதிர்த்துப் போராட மனமார்ந்த முயற்சி தேவைப்படுகிறது என்று ஒப்புக்கொள்ளும் ஒருவராக லீனா இருக்கிறார்கள்.a ஒருவரின் உள்ளத்தில் தப்பெண்ண உணர்ச்சிகளை அடக்கி வைப்பதில் “வளர்ப்பு முறை பலத்த செல்வாக்குடையதாக இருப்பதால், பேரளவான முயற்சியைத் தேவைப்படுத்துகிறது,” என்று அவர்கள் சொல்கிறார்கள். இடைவிடாத நினைப்பூட்டுதல்கள் தேவையாக இருக்கின்றன என்றும் லீனா ஒப்புக்கொள்ளுகிறார்கள்.
யெகோவாவின் பாரபட்சமற்ற பதிவு
பாரபட்சமில்லாமைக்கு யெகோவா பரிபூரண முன்மாதிரியானவராக இருக்கிறார். மனிதருடன் செயல்தொடர்பு கொள்கையில் தம்முடைய பாரபட்சமற்ற தன்மையை அவர் எவ்வாறு வெளிப்படுத்தினாரென்பதை, பைபிளின் தொடக்க பக்கங்களிலிருந்தே நாம் வாசிக்கிறோம். இந்த மிகச் சிறந்த முன்மாதிரிகளிலிருந்தும் நினைப்பூட்டுதல்களிலிருந்தும் நாம் மிகுதியானவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.
காரியங்களைக் கையாண்டு நடத்தியதில் யெகோவா பட்சபாதமில்லாமையைக் காட்டினார், ஆகவே, யூத அப்போஸ்தலன் பேதுரு, பொ.ச. 36-ல் கொர்நேலியுவுக்கும் மற்ற புறஜாதியாருக்கும் நற்செய்தியை அறிவித்தார். அந்தச் சமயத்தில் பேதுரு இவ்வாறு சொன்னார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல . . . எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
மனித குடும்பத்துடன் தம்முடைய எல்லா செயல் தொடர்புகளிலும், யெகோவா தம்முடைய பாரபட்சமற்ற தன்மையை நிலையாக காட்டியிருக்கிறார்; கிறிஸ்து இயேசு தம்முடைய பிதாவைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:45) பாரபட்சமற்றவராக யெகோவாவை மேலும் உயர்வாகப் புகழ்ந்து, பேதுரு இவ்வாறு சாட்சி பகர்ந்தார்: “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமையுள்ளவராயிருக்கிறார்.”—2 பேதுரு 3:9.
நோவாவின் நாளில், ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகி, அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததேயாக’ இருந்தபோது, அந்த மனிதவர்க்க உலகம் அழிக்கப்படும்படி யெகோவா தீர்ப்பு செய்தார். (ஆதியாகமம் 6:5-7, 11, 12) எனினும், கடவுளுடைய கட்டளையின்பேரில் நோவா, தன் சமகாலத்தவர் தெளிவாகக் காணுமாறு ஒரு பேழையைக் கட்டினார். அவரும் அவருடைய குமாரரும் பேழையைக் கட்டுகையில், நோவா ‘நீதியைப் பிரசங்கித்தவராகவும்’ இருந்தார். (2 பேதுரு 2:5) அந்தச் சந்ததியாரின் பொல்லாத இருதயச் சாய்வை அறிந்திருந்தும், யெகோவா பாரபட்சமற்றவராக ஒரு தெளிவான செய்தியை அவர்களுக்கு அனுப்பினார். பேழையைக் கட்டிக்கொண்டும் பிரசங்கித்துக்கொண்டும் இருக்கும்படி நோவாவைச் செய்வித்ததன்மூலம், அவர்களுடைய மனங்களும் இருதயங்களும் கவனம் செலுத்துவதற்கு அவர் வாய்ப்பளித்தார். அவர்கள் ஆதரவாகச் செயல்படுவதற்கு எல்லா வாய்ப்பும் இருந்தது. ஆனால், அதற்கு மாறாக, “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்.”—மத்தேயு 24:39.
யெகோவாவின் எத்தகைய சிறந்த பாரபட்சமற்ற முன்மாதிரி! இந்தக் கொடிய கடைசி நாட்களில், இவ்வாறே பாரபட்சமில்லாமல், ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி கடவுளுடைய ஊழியரை இது உந்துவிக்கிறது. மேலும், யெகோவாவின் பழிவாங்கும் நாளை அறிவிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. எல்லாரும் காண வெளிப்படையாக, பாரபட்சமில்லாமல் யெகோவாவின் செய்தியை எல்லாரும் கேட்குமாறு அவர்கள் அறிவிக்கிறார்கள்.—ஏசாயா 61:1, 2.
கோத்திர பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுத்த யெகோவாவின் வாக்குகள், அவர் பாரபட்சமற்ற கடவுள் என்பதைத் தெளிவாகக் காட்டின. ‘அவர் மூலமாய் பூமியின் சகல தேசத்தாரும் தங்களை நிச்சயமாய் ஆசீர்வதித்துக்கொள்ளப் போகிற’ அந்த நியமிக்கப்பட்டவர், அவர்களுடைய குறிப்பிட்ட வம்ச பரம்பரையில் தோன்றுவார். (ஆதியாகமம் 22:18, NW; 26:5; 28:14) கிறிஸ்து இயேசுவே அந்த நியமிக்கப்பட்டவராக நிரூபித்தார். இயேசுவினுடைய மரணத்தின் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, இரட்சிப்பின் வழியை கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தினர் யாவருக்கும் யெகோவா அருளினார். ஆம், கிறிஸ்துவினுடைய மீட்பு கிரய பலியின் நன்மைகள் பாரபட்சமில்லாமல் கிடைப்பவையாக உள்ளன.
மோசேயின் நாட்களில், செலோப்பியாத்தின் குமாரத்திகள் சம்பந்தமாக, யெகோவாவின் பாரபட்சமற்ற பண்பு மிக அதிக அக்கறையைக் கவரும் வகையில் வெளிப்பட்டது. இந்த ஐந்து பெண்களும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் தங்கள் தகப்பனுடைய சுதந்தரத்தின் சம்பந்தமாக ஓர் இரண்டக நிலையை எதிர்ப்பட்டார்கள். இது ஏனென்றால், இஸ்ரவேலில் நில சுதந்தரம், ஒருவனுடைய குமாரருக்கே பரம்பரையாகக் கடத்தப்படுவது வழக்கமாயிருந்தது. எனினும் சுதந்தரத்தைப் பெறுவதற்கு ஒரு குமாரன் இல்லாதவராக செலோப்பியாத் இறந்துவிட்டார். ஆகையால், செலோப்பியாத்தின் ஐந்து குமாரத்திகளும், பாரபட்சமில்லாமல் கையாளப்படுவதற்கு தங்கள் வேண்டுகோளை மோசேக்கு முன்பாகக் கொண்டுவந்து, இவ்வாறு சொன்னார்கள்: “எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும்.” அவர்களுடைய முறையீடுகளுக்கு யெகோவா செவிகொடுத்து, இவ்வாறு மோசேக்குக் கட்டளையிட்டார்: “ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்.”—எண்ணாகமம் 27:1-11.
பாரபட்சமில்லாத எத்தகைய அன்புள்ள முன்மாதிரி! அந்தக் குமாரத்திகள் மணம் செய்கையில் அந்தக் கோத்திர சுதந்தரம் மற்றொரு கோத்திரத்துக்கு மாறி சென்றுவிடாதபடி இருப்பதை உறுதிப்படுத்த, “தங்கள் பிதாவின் கோத்திர வம்சத்தாரில்மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்” என்று கட்டளையிடப்பட்டார்கள்.—எண்ணாகமம் 36:5-12.
யெகோவா பாரபட்சமற்றவராக இருப்பதைப் பற்றியதில் மேலுமான உட்பார்வை, நியாயாதிபதியும் தீர்க்கதரிசியுமாயிருந்த சாமுவேலின் நாட்களில் காணப்பட்டிருக்கிறது. பெத்லகேம் ஊராரான ஈசாயின் குடும்பத்தில் தோன்றிய, யூதா கோத்திரத்தில் பிறந்த ஒரு புதிய அரசனை அபிஷேகஞ்செய்யும்படி யெகோவா அவருக்குக் கட்டளையிட்டார். ஆனால் ஈசாயிக்கு எட்டு குமாரர்கள் இருந்தார்கள். அரசராக யாரை அபிஷேகஞ்செய்வது? எலியாபின் உயர்ந்த உடலமைப்பு சாமுவேல் மனதைக் கவர்ந்தது. எனினும், வெளித் தோற்றங்களால் யெகோவா கவரப்படுவதில்லை. சாமுவேலிடம் அவர்: “நீ இவன் முகத்தோற்றத்தையும் இவன் சரீரவளர்த்தியையும் பார்க்கவேண்டாம்; . . . மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் பார்ப்பது முகம், யெகோவா பார்ப்பதோ அகம்,” என்று சொன்னார். ஈசாயின் குமாரர் எல்லாரிலும் இளைஞனான தாவீது தெரிந்தெடுக்கப்பட்டான்.—1 சாமுவேல் 16:1, 6-13, தி.மொ.
யெகோவாவின் பாரபட்சமற்ற பண்பிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
கிறிஸ்தவ மூப்பர்கள், யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றி, உடன் விசுவாசியின் ஆவிக்குரிய பண்புகளைக் காண்பது நல்லது. நம்முடைய சொந்த உணர்ச்சிகள் நம் தீர்ப்பைப் பாதிக்கும்படி அனுமதித்து, ஒரு நபரை நம்முடைய சொந்த தராதரங்களைக்கொண்டு நியாயந்தீர்ப்பது எளிது. ஒரு மூப்பர் இவ்வாறு சொன்னார்: “அறியுமுன்பே ஏற்படும் என் சொந்த அபிப்பிராயத்தின்பேரில் சார்ந்தல்ல, யெகோவாவுக்குப் பிரியமான முறையில் மற்றவர்களைக் கையாளும்படி நான் முயற்சி செய்கிறேன்.” யெகோவாவின் ஊழியர் எல்லாரும் அவருடைய வார்த்தையைத் தங்கள் தராதரமாகப் பயன்படுத்துவது எவ்வளவாய் நன்மை பயக்குவதாக இருக்கிறது!
இன அல்லது தேசிய தப்பெண்ண உணர்ச்சிகள் நீடித்திருப்பதை எதிர்த்துப்போராடும்படி, முன் குறிப்பிடப்பட்ட பைபிள் பூர்வ முன்மாதிரிகள் நமக்கு உதவிசெய்கின்றன. யெகோவாவின் பாரபட்சமற்ற தன்மையைப் பின்பற்றுவதால், தப்பெண்ணம், வேறுபாடு காட்டுதல் மற்றும் பட்சபாதத்திலிருந்து கிறிஸ்தவ சபையை நாம் பாதுகாக்கிறோம்.
“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்று அப்போஸ்தலன் பேதுரு கற்றார். (அப்போஸ்தலர் 10:34) பாரபட்சமில்லாமையின் சத்துருவாக பட்சபாதம் உள்ளது, மற்றும் அன்புக்கும் ஒற்றுமைக்குமுரிய நியமங்களை மீறுகிறது. ஏழைகளையும், பலவீனரையும், தாழ்ந்தவர்களையும் இயேசு கவர்ந்தழைத்து, அவர்களுடைய சுமையை இலகுவாக்கினார். (மத்தேயு 11:28-30) ஜனங்கள்மீது அகந்தையோடு அதிகாரம் செலுத்தி, கட்டளைகளாலான கனத்த சுமையை அவர்கள்மீது சுமத்திவந்த மதத் தலைவர்களுக்கு நேர்மாறாக அவர் தனிப்பட்டிருந்தார். (லூக்கா 11:45, 46) இதைச் செய்வதும், செல்வந்தருக்கும் மேம்பட்டோருக்கும் பட்சபாதம் காட்டுவதும், நிச்சயமாகவே, கிறிஸ்துவின் போதகங்களோடு ஒத்தில்லை.—யாக்கோபு 2:1-4, 9.
இன்று, கிறிஸ்தவ மூப்பர்கள் கிறிஸ்துவின் தலைமைவகிப்புக்குத் தங்களைக் கீழ்ப்படுத்தி, யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஜனங்கள் எல்லாருக்கும் பாரபட்சமற்ற தன்மையைக் காட்டுகிறார்கள். ‘தங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை அவர்கள் மேய்த்து’ வருகையில், பொருளாதார அந்தஸ்து, ஆளுமை வேறுபாடுகள், அல்லது குடும்ப இணைப்புகளினிமித்தமாக பட்சபாதம் காண்பிப்பதை அவர்கள் தவிர்க்கிறார்கள். (1 பேதுரு 5:2) பாரபட்சமற்ற கடவுளின் மாதிரியைப் பின்பற்றி, பட்சபாத செயல்களுக்கு எதிரான அவருடைய எச்சரிக்கைக்குச் செவிகொடுப்பதன்மூலம், சபையில் பாரபட்சமற்ற மனப்பான்மையை, கிறிஸ்தவ மூப்பர்கள் முன்னேற்றுவிக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபை ஒரு சர்வதேச சகோதரத்துவமாக உள்ளது. இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலின்கீழ், தப்பெண்ணத்திலிருந்து விலகிய, பாரபட்சமற்ற ஒரு சமுதாயம் இருக்கக்கூடியதன் மெய்ம்மைக்கு இது உயிருள்ள அத்தாட்சியாக இருக்கிறது. சாட்சிகள், “மெய்யான நீதியிலும் பக்தியிலும் கடவுளுக்கிசையச் [“கடவுளுடைய சித்தத்திற்கிசைய,” NW] சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்”கொண்டிருக்கிறார்கள். (எபேசியர் 4:24, தி.மொ.) ஆம், பாரபட்சமற்ற கடவுளாகிய யெகோவாவின் பரிபூரண முன்மாதிரியிலிருந்து அவர்கள் கற்று வருகிறார்கள். எல்லா பாரபட்சத்திலிருந்தும் முற்றிலுமாய் விடுதலைபெற்ற புதிய உலகத்தில் நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பை உடையோராக அவர்கள் இருக்கிறார்கள்.—2 பேதுரு 3:13.
[பக்கம் 26-ன் படம்]
கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல என்று அப்போஸ்தலன் பேதுரு கற்றார்
[அடிக்குறிப்பு]
a உண்மைப் பெயரல்ல.