கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
“நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.”—1 யோவான் 5:3.
1, 2. தம்மை ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் வணங்க விரும்புகிறவர்களுக்கு, கடவுள், தேவைப்படுத்தும் காரியங்களை வைத்திருக்கிறார் என்பது ஏன் ஆச்சரியமாயில்லை?
“என்னுடைய மதம் எனக்கு நல்லதா இருக்குது!” இப்படித்தான் ஜனங்கள் அடிக்கடி நம்மிடம் சொல்கிறார்கள் அல்லவா? ஆனால், உண்மையில் கேள்வியானது, “என்னுடைய மதம் கடவுளுக்குப் பிரியமானதாய் இருக்கிறதா?” என்பதாக இருக்க வேண்டும். ஆம், கடவுள், தம்மை ஏற்கத்தக்க முறையில் வணங்க விரும்புகிறவர்களிடமிருந்து தேவைப்படுத்தும் காரியங்கள் இருக்கின்றன. அது நம்மை ஆச்சரியப்படுத்த வேண்டுமா? உண்மையில் ஆச்சரியப்படுத்த வேண்டியதில்லை. உங்களுக்கு ஒரு அழகான வீடு சொந்தமாக இருக்கிறது, அதை நீங்கள் கொஞ்ச நாளைக்கு முன்புதான் அதிக செலவு செய்து புதுப்பித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். யாரை வேண்டுமானாலும் நீங்கள் அங்கு குடியிருக்க வைப்பீர்களா? நிச்சயமாகவே அப்படி செய்ய மாட்டீர்கள்! குடியிருக்கப்போகும் எவரும் நீங்கள் தேவைப்படுத்துகிற காரியங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
2 அதைப் போலவேதான், இந்தப் பூமிக்குரிய வீட்டை மனித குடும்பத்திற்காக யெகோவா கொடுத்திருக்கிறார். அவருடைய ராஜ்ய ஆட்சியில், விரைவிலேயே பூமியானது “புதுப்பிக்கப்படும்”—ஓர் அழகிய பரதீஸாக மாற்றப்படும். யெகோவா இதை நிறைவேற்றுவார். இது தமக்கு பெரியதோர் கிரயத்தை உட்படுத்தியபோதிலும், இதை சாத்தியமாக்குவதற்காக அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனையே கொடுத்தார். நிச்சயமாகவே, அங்கு வாழப்போகிறவர்களுக்காக கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்களை அவர் வைத்திருக்க வேண்டும்!—சங்கீதம் 115:16; மத்தேயு 6:9, 10; யோவான் 3:16.
3. கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியத்தை சாலொமோன் எவ்வாறு சுருக்கமாக சொன்னார்?
3 கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்கள் எவை என்று நாம் எப்படிக் கண்டுகொள்ள முடியும்? யெகோவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை சுருக்கமாக எழுதுவதற்கு ஞானியாகிய சாலொமோன் ராஜாவை யெகோவா ஏவினார். செல்வம், கட்டிடத் திட்டங்கள், இசை ஆர்வம், காதல் ஆகியவை உட்பட, அவர் நாடிய அநேக காரியங்களைக் குறித்து ஆழ்ந்து சிந்தனை செய்த பிறகு, சாலொமோன் இதை உணர ஆரம்பித்தார்: ‘காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.’—பிரசங்கி 12:13.
“அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல”
4-6. (அ) “பாரமானவை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையின் சொல்லர்த்தமான அர்த்தம் என்ன? (ஆ) கடவுளுடைய கட்டளைகள் பாரமானவை அல்ல என்று நாம் ஏன் சொல்லலாம்?
4 ‘அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்.’ அடிப்படையில் அதைத்தான் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அவர் அதிகமாக நம்மிடம் எதிர்பார்க்கிறாரா? இல்லவே இல்லை. கடவுளுடைய கட்டளைகளைப் பற்றி அல்லது அவர் நம்மிடம் தேவைப்படுத்துகிற காரியங்களைப் பற்றி மிகவும் உறுதியளிக்கிற ஒன்றை அப்போஸ்தலன் யோவான் சொல்லுகிறார். அவர் எழுதினார்: ‘நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.’—1 யோவான் 5:3.
5 “பாரமானவை” என்பதாக இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, சொல்லர்த்தமாக ‘கனமானது’ என்பதை அர்த்தப்படுத்துகிறது. அது, பூர்த்தி செய்யப்படுவதற்கு அல்லது நிறைவேற்றப்படுவதற்கு கடினமாக இருக்கும் ஒன்றைக் குறிக்கக்கூடும். மத்தேயு 23:4-ல், வேதபாரகர்களும் பரிசேயர்களும் ஜனங்கள்மீது சுமத்திய ‘பாரமான சுமைகளை,’ மனிதனால் உண்டுபண்ணப்பட்ட சட்டங்கள் மற்றும் பாரம்பரியங்களை விவரிப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வயதான யோவான் என்ன முடிவுக்கு வருகிறார் என்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? கடவுளுடைய கட்டளைகள் கடும் பாரமானவையும் அல்ல, நாம் கடைப்பிடிக்க முடியாதளவிற்கு கடினமானவையும் அல்ல. (உபாகமம் 30:11-ஐ ஒப்பிடுக.) அதற்கு மாறாக, நாம் கடவுளை நேசிக்கும்போது, அவர் தேவைப்படுத்துகிறவற்றை பூர்த்திசெய்வது நம்மை மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆக்குகிறது. யெகோவாவுக்கான நம்முடைய அன்பை வெளிப்படுத்திக் காண்பிப்பதற்கு அருமையான ஒரு வாய்ப்பை அது கொடுக்கிறது.
6 கடவுளுக்கான நம்முடைய அன்பை காண்பிப்பதற்கு, அவர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நாம் திட்டவட்டமாக அறியவேண்டும். கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்களில் ஐந்து காரியங்களை நாம் இப்பொழுது சிந்திக்கலாம். அந்தக் காரியங்களை நாம் சிந்திக்கையில், யோவான் எழுதியதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்: ‘தேவனுடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.’
கடவுளைப் பற்றிய அறிவை பெறுதல்
7. நம்முடைய இரட்சிப்பு எதன்மீது சார்ந்திருக்கிறது?
7 தேவைப்படுத்துகிற முதல் காரியம், கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுதல். யோவான் 17-ம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை சிந்தித்துப்பாருங்கள். சூழமைவு, இயேசுவினுடைய மனித வாழ்வின் கடைசி இரவு. இயேசு பிரிந்துசெல்வதற்காக தம்முடைய அப்போஸ்தலர்களை ஆயத்தப்படுத்துவதில் அதிக நேரத்தை அந்த மாலைப்பொழுதில் செலவழித்திருந்தார். இயேசு அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி, அவர்களுடைய நித்திய எதிர்காலத்தைப் பற்றி அக்கறையுள்ளவராக இருந்தார். தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து, அவர்களுக்காக அவர் ஜெபம் செய்தார். 3-ம் வசனத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே [“அறிவைப் பெற்றுவருவதே,” NW] நித்தியஜீவன்.” ஆம், அவர்களுடைய இரட்சிப்பு, கடவுள், கிறிஸ்து ஆகிய இருவரையும் பற்றிய ‘அறிவைப் பெற்றுவருவதன் பேரில்’ சார்ந்திருந்தது. அது நமக்கும்கூட பொருந்துகிறது. இரட்சிப்பைப் பெறுவதற்கு, நாம் அப்படிப்பட்ட அறிவைப் பெறவேண்டும்.
8. கடவுளைப் பற்றிய ‘அறிவைப் பெறுவது’ எதை அர்த்தப்படுத்துகிறது?
8 கடவுளைப் பற்றிய ‘அறிவைப் பெறுவது’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? ‘அறிவைப் பெற்றுவருவது’ என்பதற்கு இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை “அறியவருவதை, உணர்ந்துகொள்வதை” அல்லது “முழுமையாகப் புரிந்துகொள்வதைக்” குறிக்கிறது. ‘அறிவைப் பெற்றுவருவது’ (NW) என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பது, தொடர்ந்து நடைபெறும் செயலைக் குறிக்கிறது என்பதையும் கவனியுங்கள். கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுவது என்பது, இவ்விதமாக அவரைப் பற்றி அறியவருவதை, ஏதோ மேலோட்டமாக அல்ல ஆனால் மிக நெருங்கிய விதமாக அறியவருவதை, அவருடன் புரிந்துகொள்ளுகிற முறையிலான ஒரு நட்புறவை வளர்த்துக்கொள்வதைக் குறிக்கிறது. கடவுளுடன் வைத்துக்கொள்ளும் ஒரு தொடர்ச்சியான உறவு, அவரைப் பற்றி தொடர்ந்து அதிகமதிகமான அறிவைக் கொண்டுவருகிறது. இந்தச் செயல்முறை என்றென்றும் தொடரலாம், ஏனெனில் யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்வதற்கு இருக்கும் அனைத்தையும் நாம் ஒருபோதும் கற்றுக்கொள்ள மாட்டோம்.—ரோமர் 11:33.
9. படைப்பின் புத்தகத்திலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 நாம் கடவுளைப் பற்றிய அறிவை எவ்வாறு பெறுகிறோம்? நமக்கு உதவியளிக்கும் இரண்டு புத்தகங்கள் இருக்கின்றன. ஒன்று படைப்பின் புத்தகம். யெகோவா படைத்திருக்கிற—உயிருள்ள மற்றும் உயிரற்ற ஆகிய இரண்டு—காரியங்கள் அவர் எப்படிப்பட்ட நபர் என்பதைப் பற்றி ஓரளவான உட்பார்வையை நமக்கு கொடுக்கின்றன. (ரோமர் 1:20) ஒருசில உதாரணங்களைக் கவனியுங்கள். கம்பீரமான நீர்வீழ்ச்சியின் பேரிரைச்சல், ஒரு புயலின்போது ஏற்படும் பலத்த அலை ஓசை, தெளிவான ஓர் இரவு நேரத்தில் நட்சத்திரக் கூட்டம் நிறைந்த வானத்தின் காட்சி—இப்படிப்பட்ட காரியங்கள், யெகோவா ‘மகா பெலமுள்ள’ ஒரு கடவுள் என்பதை நமக்கு போதிக்கவில்லையா? (ஏசாயா 40:26) நாய்க்குட்டி ஒன்று அதன் வாலை கடிக்க முயற்சிப்பதையோ பூனைக்குட்டி ஒன்று ஒரு நூற்கண்டுடன் விளையாடிக்கொண்டிருப்பதையோ கவனிக்கையில் ஒரு பிள்ளை அதைப் பார்த்து சிரிப்பது போன்றவை ‘மகிழ்ச்சியுள்ள கடவுளாகிய’ யெகோவா நகைச்சுவை உணர்வுடையவர் என்பதை தெரியப்படுத்தவில்லையா? (1 தீமோத்தேயு 1:11, NW) ருசியான உணவின் சுவை, புல்வெளியிலுள்ள பூக்களின் இனிய நறுமணம், மென்மையான ஒரு பட்டாம்பூச்சியின் தெளிவான வர்ணங்கள், வசந்தத்தில் இன்னிசைபாடும் பறவைகளின் ஓசை, அன்பான ஒருவரின் கனிவான தழுவல்—இப்படிப்பட்ட காரியங்களிலிருந்து, நம்முடைய சிருஷ்டிகர், நாம் வாழ்க்கையை அனுபவிக்கும்படி விரும்புகிற ஓர் அன்பின் கடவுள் என்பதை நாம் பகுத்தறிகிறோம் அல்லவா?—1 யோவான் 4:8.
10, 11. (அ) யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் என்ன காரியங்களை படைப்பின் புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியாது? (ஆ) என்ன கேள்விகளுக்கான பதில்கள் பைபிளில் மட்டுமே காணப்படுகின்றன?
10 இருந்தபோதிலும், படைப்பின் புத்தகத்திலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் கற்றுக்கொள்ளும் காரியத்திற்கு ஓர் எல்லை உண்டு. இதை இவ்வாறு விளக்கலாம்: கடவுளுடைய பெயர் என்ன? ஏன் பூமியைப் படைத்து அதில் மனிதனை வைத்தார்? கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார்? எதிர்காலம் நமக்கு எதை வைத்திருக்கிறது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதில்களுக்காக, கடவுளைப் பற்றிய அறிவை வழங்குகிற மற்றொரு புத்தகத்திற்கு—பைபிளுக்கு—நாம் செல்ல வேண்டும். அதன் பக்கங்களில், யெகோவா, வேறெந்த ஊற்றுமூலத்திலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாத தகவல்களாகிய தம்முடைய பெயர், தம்முடைய ஆளுமை, தம்முடைய நோக்கங்கள் ஆகியவை உட்பட, தம்மைப் பற்றிய காரியங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார்.—யாத்திராகமம் 34:6, 7; சங்கீதம் 83:17; ஆமோஸ் 3:7.
11 நாம் அறிந்துகொள்ள வேண்டிய மற்ற நபர்களைப் பற்றிய இன்றியமையாத அறிவையும் யெகோவா நமக்கு வேதாகமத்தில் கொடுக்கிறார். உதாரணமாக, இயேசு கிறிஸ்து யார், யெகோவாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவர் என்ன பங்கை வகிக்கிறார்? (அப்போஸ்தலர் 4:12) பிசாசாகிய சாத்தான் யார்? அவன் எந்த வழிகளில் ஜனங்களை தவறாக வழிநடத்துகிறான்? அவனால் தவறாக வழிநடத்தப்படுவதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்? (1 பேதுரு 5:8) இந்தக் கேள்விகளுக்கான ஜீவனைக்காக்கும் பதில்கள் பைபிளில் மட்டுமே காணப்படுகின்றன.
12. யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியுமான அறிவைப் பெற்றுக்கொள்வது பாரமான ஒன்றல்ல என்பதை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?
12 கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் இப்படிப்பட்ட அறிவைப் பெறுவது பாரமான ஒன்றா? நிச்சயமாகவே இல்லை! கடவுளுடைய பெயர் யெகோவா என்பதையும் அவருடைய ராஜ்யம் இந்தப் பூமியில் பரதீஸை திரும்ப நிலைநாட்டும் என்பதையும் நம்முடைய பாவங்களுக்கான கிரயபலியாக தம்முடைய மிகவும் பிரியமான குமாரனையே கொடுத்தார் என்பதையும், அதோடுகூட அருமையான மற்ற சத்தியங்களையும் நீங்கள் முதலாவதாக கற்றுக்கொண்டபோது எவ்வாறு உணர்ந்தீர்கள் என்பதை உங்களால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடிகிறதா? அறியாமை என்ற முக்காட்டை நீக்கி, முதன் முதலில் காரியங்களைத் தெளிவாகப் பார்ப்பது போல அது இருந்ததல்லவா? கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுவது பாரமான ஒன்றல்ல. அது மகிழ்ச்சியான ஒன்று!—சங்கீதம் 1:1-3; 119:97.
கடவுளுடைய தராதரங்களைப் பூர்த்திசெய்தல்
13, 14. (அ) நாம் கடவுளைப் பற்றிய அறிவைப் பெற்றுவருகையில், நம்முடைய வாழ்க்கையில் என்ன மாற்றங்களை செய்யவேண்டும்? (ஆ) என்ன அசுத்தமான பழக்கங்களிலிருந்து நாம் விலகியிருக்கும்படி கடவுள் தேவைப்படுத்துகிறார்?
13 நாம் கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுகையில், நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதை நாம் உணர ஆரம்பிக்கிறோம். இது, கடவுள் தேவைப்படுத்தும் இரண்டாவது காரியத்திற்கு நம்மை கொண்டுவருகிறது. நாம் சரியான நடத்தைக்கான கடவுளுடைய தராதரங்களைப் பூர்த்திசெய்து அவருடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். சத்தியம் என்றால் என்ன? நாம் என்ன செய்கிறோம் என்பதும் நாம் என்ன நம்புகிறோம் என்பதும் கடவுளுக்கு உண்மையிலேயே முக்கியத்துவமுடையதாய் இருக்கிறதா? இன்று அநேக ஜனங்கள் உண்மையில் அவ்விதமாக நினைப்பதில்லை. திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதை ஒரு பாவமாக கருதக்கூடாது என்பதாக 1995-ல் சர்ச் ஆஃப் இங்லண்ட் பிரசுரித்த ஓர் அறிக்கை சொன்னது. ஆங்கிலத்தில் “‘living in sin’ (திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது) என்ற இந்தச் சொற்றொடர் வெட்கக்கேடானதாக இருக்கிறது, அது பயனளிப்பதாய் இல்லை,” என்பதாக சர்ச் பிஷப் ஒருவர் குறிப்பிட்டார்.
14 அப்படியானால், திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது (‘living in sin’) இனிமேலும் ஒரு பாவமாக இல்லையா? இப்படிப்பட்ட நடத்தையைக் குறித்து தாம் எவ்வாறு உணருகிறார் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்காத வார்த்தைகளில் யெகோவா சொல்லுகிறார். அவருடைய வார்த்தையாகிய பைபிள் குறிப்பிடுகிறது: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) எந்தவித கட்டுப்பாடுமில்லாத பாதிரியாருடைய நோக்குநிலையிலும் சர்ச்சுக்குப் போகிறவர்களுடைய நோக்குநிலையிலும் திருமணத்திற்கு முன்பு பாலுறவுகொள்வது ஒரு பாவமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் கடவுளுடைய பார்வையில் அது ஒரு வினைமையான பாவம்! அதைப்போலவே விபச்சாரம், முறைதகா புணர்ச்சி, ஓரினப்புணர்ச்சி ஆகியவையும் வினைமையான பாவங்கள். (லேவியராகமம் 18:6; 1 கொரிந்தியர் 6:9, 10) கடவுள், தாம் அசுத்தமாக கருதுகிற இப்படிப்பட்ட பழக்கங்களிலிருந்து நாம் விலகியிருக்கும்படி தேவைப்படுத்துகிறார்.
15. நாம் மற்றவர்களை நடத்தும் முறை, நாம் நம்புவது ஆகிய இரண்டிலும் கடவுள் தேவைப்படுத்தும் காரியங்கள் எவ்வாறு உட்பட்டிருக்கின்றன?
15 என்றபோதிலும், பாவமுள்ளதாக கடவுள் கருதுகிற பழக்கங்களிலிருந்து விலகியிருப்பது மட்டும் போதுமானதல்ல. மற்றவர்களை நாம் நடத்துகிற முறையிலும்கூட கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்கள் உட்படுகின்றன. குடும்பத்தில், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் உள்ளவர்களாக இருக்கும்படி அவர் எதிர்பார்க்கிறார். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் பொருள் சம்பந்தமான, ஆவிக்குரிய, உணர்ச்சிப்பூர்வமான தேவைகளையும் கவனிக்கும்படி கடவுள் தேவைப்படுத்துகிறார். பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும்படி சொல்லுகிறார். (நீதிமொழிகள் 22:6; கொலோசெயர் 3:18-21) நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றியென்ன? பொய் வணக்கத்திலிருந்து வருகிற அல்லது பைபிளிலுள்ள தெளிவான சத்தியங்களுக்கு முரணாக இருக்கிற நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் தவிர்க்கும்படி யெகோவா தேவன் விரும்புகிறார்.—உபாகமம் 18:9-13; 2 கொரிந்தியர் 6:14-17.
16. சரியான நடத்தைக்கான கடவுளுடைய தராதரங்களைக் கைக்கொள்வதும் அவருடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்வவதும் ஏன் பாரமான ஒன்றல்ல என்பதை விளக்குங்கள்.
16 சரியான நடத்தைக்கான கடவுளுடைய தராதரங்களை கைக்கொள்வதும் அவருடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்வதும் நமக்கு பாரமான ஒன்றா? பின்வரும் அதன் நன்மைகளை நாம் சிந்தித்துப் பார்க்கையில் பாரமானதாக இல்லை: திருமணத்தில் உண்மையற்றத்தன்மையின் காரணமாக பிளவுறுகிற திருமணங்களுக்குப் பதிலாக, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நேசித்து நம்புகிற திருமணங்கள்; பிள்ளைகள் நேசிக்கப்படாதவர்களாக, அசட்டை செய்யப்படுகிறவர்களாக, விரும்பப்படாதவர்களாக உள்ள குடும்பங்களுக்குப் பதிலாக, பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களால் நேசிக்கப்படுகிறவர்களாக, விரும்பப்படுகிறவர்களாக உள்ள வீடுகள்; குற்றவுணர்ச்சி, எய்ட்ஸினால் அல்லது பாலுறவினால் கடத்தப்படுகிற வேறுவித வியாதியினால் சீரழிந்த உடம்பு ஆகியவற்றிற்குப் பதிலாக, சுத்தமான மனச்சாட்சி, நல்ல உடலாரோக்கியம். நிச்சயமாகவே, யெகோவா தேவைப்படுத்துகிற காரியங்கள், வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ்வதற்கு நமக்குத் தேவைப்படுகிற எதையாவது நம்மிடமிருந்து பறித்துக்கொள்வதில்லை!—உபாகமம் 10:12, 13.
உயிருக்கும் இரத்தத்திற்கும் மரியாதை காண்பியுங்கள்
17. உயிரையும் இரத்தத்தையும் யெகோவா எவ்வாறு நோக்குகிறார்?
17 கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக உங்களுடைய வாழ்க்கையை நடத்துகையில், உண்மையிலேயே உயிர் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை மதித்துணர ஆரம்பிக்கிறீர்கள். கடவுள் தேவைப்படுத்துகிற மூன்றாவது காரியத்தை நாம் இப்பொழுது ஆராயலாம். நாம் உயிருக்கும் இரத்தத்திற்கும் மரியாதை காண்பிக்க வேண்டும். உயிர், யெகோவாவுக்கு பரிசுத்தமானது. அது அவ்விதமாகவே கருதப்பட வேண்டும், ஏனென்றால் அவரே உயிரின் ஊற்றுமூலர். (சங்கீதம் 36:9) ஏன், தாயின் வயிற்றுக்குள் இருக்கிற பிறவாத பிள்ளையின் உயிரும்கூட யெகோவாவுக்கு மதிப்புவாய்ந்ததே! (யாத்திராகமம் 21:22, 23) இரத்தம், உயிரை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆகவே, இரத்தமும்கூட கடவுளுடைய பார்வையில் பரிசுத்தமானது. (லேவியராகமம் 17:14) அப்படியானால், உயிரையும் இரத்தத்தையும் கடவுள் நோக்குவதுபோல நாமும் நோக்கும்படி கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது ஆச்சரியமாக இருக்க வேண்டியதில்லை.
18. உயிரையும் இரத்தத்தையும் குறித்ததில் யெகோவாவுடைய நோக்குநிலை நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறது?
18 உயிருக்கும் இரத்தத்திற்கும் மரியாதை காண்பிப்பது எதை தேவைப்படுத்துகிறது? கிறிஸ்தவர்களாக, வெறுமனே கிளர்ச்சிக்காக தேவையில்லாத ஆபத்துக்களை நம்முடைய உயிருக்கு வரவழைத்துக்கொள்ளக் கூடாது. நாம் பாதுகாப்பு உணர்வுள்ளவர்களாக (safety conscious) இருக்கிறோம், ஆகவே நம்முடைய கார்களும் வீடுகளும் பாதுகாப்பாக இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்கிறோம். (உபாகமம் 22:8) நாம் புகையிலை பயன்படுத்துவதில்லை, வெற்றிலை பாக்கு மெல்லுவதில்லை, அல்லது இன்பத்துக்காக அடிமைப்படுத்துகிற அல்லது மனதை பேதலிக்கச்செய்கிற போதைப் பொருட்களை உட்கொள்வதில்லை. (2 கொரிந்தியர் 7:1) “இரத்தத்திற்கு விலகியிரு”ங்கள் என்று கடவுள் சொல்லும்போது நாம் அவருக்கு செவிகொடுப்பதால், நம்முடைய உடம்புக்குள் இரத்தமேற்றப்படுவதை நாம் அனுமதிப்பதில்லை. (அப்போஸ்தலர் 15:28, 29) நாம் உயிரை நேசிக்கிறபோதிலும், கடவுளுடைய சட்டத்தை மீறி, அதனால் நித்திய ஜீவனுக்கான நம்முடைய எதிர்பார்ப்பை ஆபத்திற்குள்ளாக்குவதன் மூலம் நம்முடைய தற்போதைய வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ள மாட்டோம்!—மத்தேயு 16:25.
19. உயிருக்கும் இரத்தத்திற்கும் மரியாதை காண்பிப்பதிலிருந்து நாம் எவ்வாறு பயனடைகிறோம் என்பதை விளக்குங்கள்.
19 உயிரையும் இரத்தத்தையும் புனிதமாக கருதுவது நமக்கு பாரமான ஒன்றா? நிச்சயமாகவே இல்லை! இதைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். புகையிலையைப் புகைப்பதனால் ஏற்படுகிற நுரையீரல் புற்றுநோய் இல்லாமலிருப்பது பாரமான ஒன்றா? மனதுக்கும் சரீரத்திற்கும் தீங்குவிளைவிக்கும் போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுவதிலிருந்து விலகியிருப்பது பாரமான ஒன்றா? இரத்தம் ஏற்றிக்கொள்வதனால் வருகிற எய்ட்ஸ், ஈரல் அழற்சி, அல்லது வேறு விதமான வியாதியிலிருந்து விலகியிருப்பது பாரமான ஒன்றா? தெளிவாகவே, தீமை விளைவிக்கும் இத்தகைய பழக்கங்களை நாம் தவிர்ப்பது நம்முடைய மிகச் சிறந்த நன்மைக்கேதுவானதே.—ஏசாயா 48:17.
20. உயிரைக் குறித்ததில் யெகோவாவின் நோக்குநிலையைக் கொண்டிருந்ததிலிருந்து எவ்வாறு ஒரு குடும்பம் பயனடைந்தது?
20 இந்த அனுபவத்தை சிந்தித்துப்பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் மூன்றரை மாத கர்ப்பிணியாக இருந்த ஒரு சாட்சிக்கு ஒரு நாள் மாலையில் இரத்தப்போக்கு ஏற்பட ஆரம்பித்தது, இதனால் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள். ஒரு மருத்துவர் அவளைப் பரிசோதித்தப் பின்பு, அவள் கர்ப்பத்தைக் கலைக்க வேண்டியிருக்கிறது என்பதாக நர்ஸ்களில் ஒருவரிடம் சொல்வது தற்செயலாக அந்த சாட்சியின் காதில் விழுந்தது. பிறவாத குழந்தையின் உயிரை யெகோவா எவ்வாறு நோக்குகிறார் என்பதை அறிந்திருந்ததால், அபார்ஷன் செய்ய அவள் உறுதியாக மறுத்துவிட்டாள்; டாக்டரிடம் அவள் சொன்னதாவது: “அது உயிருடனிருந்தால் அதை அப்படியே விட்டுவிடுங்கள்!” சிலசமயங்களில் தொடர்ந்து அவளுக்கு சிறிது இரத்தப்போக்கு இருந்தது; ஆனால் பல மாதங்களுக்குப் பின்பு, ஆரோக்கியமான ஓர் ஆண் குழந்தையை உரிய காலத்திற்கு முன்பே பெற்றெடுத்தாள்; அவனுக்கு இப்பொழுது 17 வயதாகிறது. அவள் விளக்கினாள்: “இவையனைத்தையும் நாங்கள் எங்களுடைய மகனுக்கு சொன்னோம், அவனைக் கொன்று குப்பையில் போடாததற்கு அவன் சந்தோஷப்படுவதாக சொன்னான். அவன் இன்று உயிரோடிருப்பதற்கே நாங்கள் யெகோவாவை சேவிப்பதுதான் காரணம் என்பதை அவன் அறிந்திருக்கிறான்.” நிச்சயமாகவே, உயிரைக் குறித்ததில் கடவுளுடைய நோக்குநிலையைக் கொண்டிருந்தது இந்தக் குடும்பத்திற்கு பாரமானதாக இல்லை!
யெகோவாவின் ஒழுங்கமைக்கப்பட்ட மக்களுடன் சேவிப்பது
21, 22. (அ) யெகோவா, நாம் யாருடன் சேர்ந்து அவரை சேவிக்கும்படி எதிர்பார்க்கிறார்? (ஆ) கடவுளுடைய ஒழுங்கமைக்கப்பட்ட மக்களை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளலாம்?
21 கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக நம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதில் நாம் தனிமையாக இல்லை. இந்தப் பூமியில் யெகோவா ஒரு ஜனத்தை உடையவராயிருக்கிறார், அவர்களுடன் சேர்ந்து அவரை சேவிக்கும்படி அவர் எதிர்பார்க்கிறார். இது நம்மை நான்காவது தேவைக்குக் கொண்டுவருகிறது. நாம் யெகோவாவை அவருடைய ஆவியால் வழிநடத்தப்படுகிற அமைப்புடன் சேர்ந்து சேவைசெய்ய வேண்டும்.
22 இருந்தபோதிலும், எவ்வாறு கடவுளுடைய ஒழுங்கமைக்கப்பட்ட மக்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்? வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள தராதரங்களின்படி, அவர்கள் தங்கள் மத்தியில் உண்மையான அன்பை உடையவர்களாய் இருக்கிறார்கள், பைபிளுக்கான ஆழ்ந்த மரியாதையைக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கடவுளுடைய பெயரைக் கனப்படுத்துகிறார்கள், அவருடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கம் செய்கிறார்கள், அவர்கள் இந்தப் பொல்லாத உலகத்தின் பாகமானவர்களாக இல்லை. (மத்தேயு 6:9; 24:14; யோவான் 13:34, 35; 17:16, 17) உண்மை கிறிஸ்தவத்தின் இந்த அனைத்து அடையாளங்களையும் பெற்றிருக்கிற ஒரே ஒரு மத அமைப்புதான் இந்தப் பூமியில் இருக்கிறது—யெகோவாவின் சாட்சிகள்!
23, 24. யெகோவாவை அவருடைய ஒழுங்கமைக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து சேவிப்பது பாரமான ஒன்றல்ல என்பதை நாம் எவ்வாறு விளக்கலாம்?
23 கடவுளுடைய ஒழுங்கமைக்கப்பட்ட மக்களுடன் சேவிப்பது பாரமான ஒன்றா? நிச்சயமாகவே இல்லை! அதற்கு மாறாக, கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அடங்கிய உலகளாவிய ஒரு குடும்பத்தின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருப்பது மதிப்புமிக்க ஒரு சிலாக்கியமாய் இருக்கிறது. (1 பேதுரு 2:17) ஒரு கப்பல் சேதத்திலிருந்து தப்பிப்பிழைத்த பிறகு, தண்ணீரில் மூழ்கிவிடாதபடி மிதப்பதற்குப் போராடிக்கொண்டிருக்கிற ஒரு நிலையில் நீங்கள் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இனிமேலும் உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்று நீங்கள் உணரும்போது, உயிர்காப்பு படகிலிருந்து ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார். ஆம், தப்பிப்பிழைத்த மற்றவர்களும் இருக்கிறார்கள்! அந்த உயிர்காப்பு படகில் நீங்களும் மற்றவர்களும் மாறிமாறி துடுப்புப்போட்டு கரைக்கு வரும்போது, வழிநெடுகே உங்களைப் போலவே போராடிக்கொண்டிருக்கும் மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு கரைக்கு வந்துசேருகிறீர்கள்.
24 நாம் அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம் அல்லவா? ஆபத்தான “தண்ணீராகிய” இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பாகிய “உயிர்காப்பு படகுக்குள்” நாம் இழுக்கப்பட்டிருக்கிறோம். அதற்குள் இருந்துகொண்டு, நீதியுள்ள ஒரு புதிய உலகமாகிய “கரையை” நோக்கி நாம் செல்கையில் தோளோடு தோள்சேர்ந்து சேவிக்கிறோம். அந்த வழியில் செல்கையில் வாழ்க்கையின் அழுத்தங்கள் நாம் சோர்ந்துவிடும்படி நம்மை செய்தால், உண்மை கிறிஸ்தவ தோழர்களுடைய உதவிக்காகவும் ஆறுதலுக்காகவும் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!—நீதிமொழிகள் 17:17.
25. (அ) இன்னும் இந்தப் பொல்லாத உலகம் என்ற “தண்ணீரில்” இருப்பவர்களிடமாக நமக்கு இருக்கும் கடமை என்ன? (ஆ) பின்வரும் கட்டுரையில் கடவுள் தேவைப்படுத்தும் என்ன காரியம் சிந்திக்கப்படும்?
25 இன்னும் அந்தத் “தண்ணீரில்” இருக்கிற மற்றவர்களை—நேர்மை இருதயமுள்ள மக்களை—பற்றியென்ன? யெகோவாவின் அமைப்புக்குள் வர அவர்களுக்கு உதவிசெய்வதற்கான கடமை நமக்கு இருக்கிறது, அல்லவா? (1 தீமோத்தேயு 2:3, 4) கடவுள் தேவைப்படுத்துகிற காரியத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கு அவர்களுக்கு உதவி தேவை. இது நம்மை கடவுள் தேவைப்படுத்துகிற ஐந்தாவது காரியத்திற்கு கொண்டுவருகிறது. நாம் கடவுளுடைய ராஜ்யத்தின் உண்மைப் பற்றுறுதியுள்ள அறிவிப்பாளர்களாக இருக்க வேண்டும். இது எதை உட்படுத்துகிறது என்பது அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?
◻ கடவுளுடைய கட்டளைகள் ஏன் பாரமானவை அல்ல?
◻ கடவுளைப் பற்றிய அறிவை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்கிறோம்?
◻ சரியான நடத்தைக்கான கடவுளுடைய தராதரங்களைக் கைக்கொள்வதும் அவருடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்வதும் ஏன் பாரமானதல்ல?
◻ உயிரையும் இரத்தத்தையும் குறித்ததில் கடவுளுடைய நோக்குநிலை நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறது?
◻ கடவுள், நாம் யாருடன் சேர்ந்து அவரை சேவிக்கும்படி விரும்புகிறார், அவர்களை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளலாம்?
[பக்கம் 18-ன் படங்கள்]
படைப்பின் புத்தகத்திலிருந்தும் பைபிளிலிருந்தும் நாம் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்கிறோம்
[படத்திற்கான நன்றி]
முதலை: Australian International Public Relations உதவியுடன்; கரடி: டெல்-அவிவ், ரமட்-கன் என்ற இடத்திலுள்ள உயிரினப் பூங்கா-உலவிடம்