மத சுயாதீனம் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
கோடிக்கணக்கானோர் அதற்காக போராடினர். அதற்காக சிலர் தங்கள் உயிரையும் நீத்தனர். உண்மையிலேயே, மனிதகுலத்தின் மிகவும் விலைமதிப்பான உடைமைகளில் இதுவும் ஒன்று. அது என்ன? சுதந்திரம்! தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சுதந்திரத்தை வரையறுக்கிறது: “தெரிவுகளைச் செய்வதற்கும், அவற்றை செயல்படுத்துவதற்கும் உண்டான திறமை.” அது மேலும் கூறுகிறது: “அநீதியான, தேவையற்ற, அல்லது நியாயமற்ற வரம்புகளை மக்கள்மீது சமுதாயம் திணிக்காதிருக்கும் பட்சத்தில், சட்டத்தின் நோக்குநிலையில் அவர்கள் சுதந்திரமாக உள்ளனர். சமுதாயம் அவர்களுடைய உரிமைகளையும்கூட—அதாவது, அடிப்படை உரிமைகளையும், செயல்படுவதற்கான திறன்களையும், சலுகைகளையும்—பாதுகாக்க வேண்டும்.”
இந்தக் கருத்து கேட்பதற்கு சுலபமாக உள்ளது. இருப்பினும், அதைச் செயல்படுத்தும்போதுதான், மக்கள் ஒத்துக்கொள்ளும் வகையில் சுதந்திரத்திற்கு எல்லைகளை மிகச் சரியாக எங்கே வகுப்பது என்பது கிட்டத்தட்ட இயலாத ஒன்றாக தோன்றுகிறது. உதாரணத்திற்கு, ஓர் அரசாங்கம், அதன் குடிமக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக சட்டங்களை இயற்றியே ஆகவேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், சிக்க வைப்பவையும் இதே சட்டங்களே; அவற்றிலிருந்து குடிமக்களை விடுவித்தே ஆகவேண்டும் என்று வேறுசிலர் வாதிடுகிறார்களே! தெளிவாகவே, சுதந்திரம் என்பது வெவ்வேறு ஆட்களுக்கு வெவ்வேறுவிதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது.
மத சுயாதீனத்தைப் பற்றியது என்ன?
மிகக் காரசாரமாக விவாதிக்கப்படும் ஒருவகை சுயாதீனம், அநேகமாக மத சுயாதீனமே. அது இவ்வாறாக வரையறுக்கப்படுகிறது: “ஒன்றில் நம்பிக்கை வைப்பதற்கும் ஒருவர் தெரிவு செய்யும் விசுவாசத்தை அப்பியாசிப்பதற்கும் உள்ள உரிமை.” ஐக்கிய நாட்டு சங்கத்தின் அனைத்துலக மனித உரிமைகள் (United Nations Universal Declaration of Human Rights) அறிக்கையின் பிரகாரம், “சிந்தனை, மனசாட்சி மற்றும் மதம் ஆகியவற்றிற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.” இதில் ஒரு நபர் “தனது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான” உரிமையையும், அதோடுகூட “அவரது மதத்தை அல்லது நம்பிக்கையைப் போதிப்பதிலும், கடைப்பிடிப்பதிலும், வழிபடுவதிலும், பின்பற்றுவதிலும் வெளிக்காட்டும்” சுதந்திரமும் அடங்கியுள்ளது.—சட்டப்பிரிவுக் கூறு 18.
நிச்சயமாகவே, தன் குடிமக்களில் உண்மையான அக்கறையோடு இருக்கும் எந்த ஒரு நாடும், இப்படிப்பட்ட ஒரு சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்போம். கவலைதரும்விதத்தில், இது எல்லா சமயங்களிலும் கிடைப்பதில்லை. “மதம், அநேக மக்களின் மிக ஆழமான உணர்வுகளைத் தொடுகிறது. சில அரசாங்கங்கள் ஒரு மதத்தோடு மாத்திரம் நெருக்கமான பிணைப்பை வைத்துக்கொண்டு, மற்ற மதத்தினரை அவற்றின் அரசியல் அதிகாரத்திற்கு ஆபத்தானவர்களாக கருதுகின்றன. ஓர் அரசாங்கம் ஒருவேளை மதத்தை ஆபத்தானதாகவும்கூட கருதலாம், ஏனென்றால் நாட்டிற்கு கீழ்ப்படிவதற்கும் மேலாக கடவுள் பக்தியையே மதங்கள் முன்வைக்கின்றன” என்பதாக தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது.
இத்தகைய காரணங்களால், சில அரசாங்கங்கள் மதத்தை அப்பியாசிப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. சில அரசாங்கங்கள் எந்தவொரு மதத்தையும் அப்பியாசிக்கக்கூடாது என தடைசெய்கின்றன. இன்னும் மற்ற அரசாங்கங்கள், வழிபாட்டிற்கான சுதந்திரத்தை ஆதரிப்பதாக வாயளவில் சொல்லிக்கொண்டு, மத நடவடிக்கைகள் அனைத்தையும் இரும்பு கரத்தால் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
உதாரணத்திற்கு, மெக்ஸிகோவில் பல ஆண்டுகளாக இருந்த நிலைமையைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். அரசமைப்பு சட்டத்தொகுப்பு மத சுயாதீனத்தை அளித்தப்போதிலும், அது நிபந்தனைகளைப் போட்டது: “பொது வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படும் சர்ச்சுகளெல்லாம் கூட்டாட்சி அரசாங்கத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் நாட்டின் உடைமைகளாகும்; எவற்றை இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தலாம் என்பதைப்பற்றி இதுதான் முடிவுசெய்யும்.” இந்த நிபந்தனைக்கு முடிவுகட்டுவதற்காக அரசமைப்பு சட்டத்தொகுப்பு 1991-ல் திருத்தி அமைக்கப்பட்டது. என்றபோதிலும், இந்த மத சுயாதீனத்திற்கு பல்வேறு நாடுகளில் பல்வேறு விதங்களில் விளக்கங்கள் தரப்படுகின்றன என்பதை இந்த உதாரணம் எடுத்துக்காட்டுகிறது.
மற்றொருவகையான மத சுயாதீனம்
நீங்கள் வாழும் நாட்டில் மத சுயாதீனம் இருக்கிறதா? அப்படியென்றால், அது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது? நீங்கள் தெரிவுசெய்த விதத்தில் உங்களால் கடவுளை வழிபட முடிகிறதா, அல்லது தேசிய மதத்தின் ஒரு அங்கத்தினராக நீங்கள் மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறீர்களா? மத சம்பந்தமான பிரசுரங்களை வாசிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் உங்களுக்கு அனுமதி தரப்படுகிறதா அல்லது அத்தகைய பிரசுரங்கள் அரசாங்கத்தால் தடைசெய்யப்படுகின்றனவா? நீங்கள் உங்களுடைய விசுவாசத்தைப்பற்றி மற்றவர்களிடம் பேசலாமா அல்லது இது அவர்களுடைய மத உரிமைகளை மீறியதாக கருதப்படுமா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகள் நீங்கள் வாழும் இடத்தை பொருத்து இருக்கும். என்றபோதிலும், ஆர்வத்தைத்தூண்டும் விதத்தில், எந்தவிதத்திலும், இடத்தை மையமாக கொண்டிராத, ஒருவகை மத சுயாதீனம் இருக்கிறது. எருசலேமில் பொ.ச. 32-ல் இயேசு தம்மை பின்பற்றினவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:31, 32.
இந்தக் கூற்றின் மூலம் இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்கள், ரோம ஆட்சிப்பிடியிலிருந்து தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று மிக ஆவலோடு இருந்தார்கள். ஆனால், இயேசு அரசியல் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை அளிக்கும் ஒரு சுதந்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டில்லை. அதற்குமாறாக, அதைவிட உயர்வான ஒரு சுதந்திரத்தைப் பற்றி தம்முடைய சீஷர்களுக்கு அவர் வாக்களித்துக்கொண்டிருந்தார்; பின்வரும் கட்டுரையில் நாம் அதைக் காணலாம்.
ஐக்கிய மாகாணங்களில் மத சுயாதீனம் ஓர் அடிப்படையான உரிமையாகக் கருதப்பட்டப்போதிலும், 1940-களில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக கலகக்கார கும்பல் ஏவிவிட்ட வன்முறை நாடெங்கிலும் தலைவிரித்தாடியது