ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
சத்தியத்துடன் எல்லா வகையினரையும் எட்டுதல்
அப்போஸ்தலன் பவுல், கடவுளுடைய ராஜ்யத்தை ஆர்வத்தோடு அறிவிப்பவராக இருந்தார். ‘நற்செய்தியை’ பிரசங்கிக்கும்படி தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பில் எதிர்ப்பு குறுக்கிட அவர் அனுமதிக்கவில்லை. (1 கொரிந்தியர் 9:16; அப்போஸ்தலர் 13:50-52) தன் முன்மாதிரியைப் பின்பற்றும்படி பவுல் மற்றவர்களை ஊக்குவித்தார்.—1 கொரிந்தியர் 11:1.
பிரசங்கிப்பதற்கு, யெகோவாவின் சாட்சிகள், திடத்தீர்மானமாக முயற்சிகள் எடுப்போராக உலகமெங்கும் அறியப்பட்டிருக்கின்றனர். கடவுள் கட்டளையிட்டிருக்கிற ‘சீஷராக்கும்’ ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு, ‘சாதகமான காலத்திலும்,’ ‘தொந்தரவான காலத்திலும்’ அவர்கள் மற்றவர்களிடம் நிச்சயமாகவே பேசுகிறார்கள். (2 தீமோத்தேயு 4:2, NW; மத்தேயு 28:19, 20) பின்வரும் அனுபவங்கள் தெளிவாகக் காட்டுகிறபடி, எதிர்ப்பை அவர்கள் அனுபவிக்கும் நாடுகளிலுங்கூட, நேர்மையான இருதயமுள்ளவர்கள், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய மிக முக்கியமான செய்தியுடன் சென்றெட்டப்பட்டு வருகிறார்கள்.
◻ யெகோவாவின் சாட்சிகளின் ஊழியம் தடையுத்தரவு போடப்பட்டிருக்கிற மேற்கு பஸிபிக்கிலுள்ள ஒரு தீவில், 12 வயதான ஒரு பையன், பள்ளியில் கெட்ட கூட்டாளிகளால் தான் சூழப்பட்டிருப்பதாகக் கண்டான். அவனுடைய வகுப்பிலுள்ள பலர் வழக்கமாய் சிகரெட்டுகள் புகைத்தனர், இழிபொருள் புத்தகங்களை வாசித்தனர், ஆசிரியர்களைத் தொல்லைப்படுத்தினர், மற்றும் சண்டையிடுவதில் ஈடுபட்டனர். நிலைமை அவ்வளவு மிக மோசமாகியதால் இந்தப் பையன், தன்னை வேறொரு பள்ளிக்கு மாற்ற முடியுமாவெனத் தன் தகப்பனைக் கேட்டான். எனினும், தகப்பன் அந்த எண்ணத்திற்கு எதிராகத் தன் மகனோடு காரணம் காட்டி பேசினார்; ஏனெனில் அருகிலிருந்த மற்ற பள்ளிகளிலும், மாணவர்களின் நடத்தை எவ்வகையிலும் வேறுபட்டிராது என்று அவர் உணர்ந்தார். எனினும் தன் மகனுக்கு அவர் எவ்வாறு உதவிசெய்வது?
இளைஞருக்குரிய ஒரு புத்தகம் வீட்டிலிருப்பது தகப்பனுக்கு ஞாபகம் வந்தது. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான ஓர் உறவினர் அதை இனாமாகக் கொடுத்திருந்தார். ஆகையால் அந்தப் புத்தகத்திற்காக அவர் தேடினார்; அதைக் கண்டுபிடித்தபோது தன் மகனிடம் அதைக் கொடுத்தார். இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற பெயரை அது கொண்டிருந்தது.a “சகாக்களின் செல்வாக்கு வலிமையை நான் எவ்வாறு எதிர்த்துச் சமாளிக்கலாம்?” என்ற அதிகாரம் முக்கியமாய் உதவியாயிருப்பதாக அந்தப் பையன் கண்டான். சுயமரியாதையைக் காத்துவருவதன் முக்கியத்துவத்தை அது அவனுக்குக் கற்பித்ததுமட்டுமல்லாமல், ஞானமற்ற ஒரு போக்கைப் பின்பற்றும்படி மற்றவர்கள் தன்னை வற்புறுத்த முயற்சி செய்கையில், முடியாது என்று சாதுரியமாய் மறுத்துச் சொல்வது எவ்வாறு என்பதையும் அது அவனுக்குக் கற்பித்தது. அந்தப் புத்தகத்தில் கண்ட வேதப்பூர்வமான நியமங்களைப் பொருத்தி பயன்படுத்துவதன் மூலம், சகாக்களின் செல்வாக்கு வலிமையை வெற்றிகரமாய்ச் சமாளிப்பது எவ்வாறு என்பதை அந்த இளைஞன் தெரிந்துகொண்டான்.
இவற்றையும் மற்ற உடன்பாடான மாற்றங்களையும் தன் மகனில் கவனித்து, அந்தப் புத்தகத்தை வாசிக்கும்படி தகப்பன் தீர்மானித்தார். அந்தப் புத்தகத்தில் கண்ட செயல்முறைக்குப் பொருத்தமான அறிவுரையால் மனம் கவரப்பட்டவராய், வீட்டு பைபிள் படிப்புக்காக அந்தத் தகப்பன், யெகோவாவின் சாட்சிகளைக் கேட்டார். பின்னால் குடும்பத்தின் மற்ற உறுப்பினரும், படிப்பில் அவரோடு சேர்ந்துகொண்டனர். இதன் பலன்? அந்தப் பையனும், அவனுடைய இளைய சகோதரனும், அவனுடைய தகப்பனும், அந்தப் பையனுடைய தாத்தா பாட்டிகளில் இருவரும் இப்போது யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள்.
◻ அதே நாட்டில், யெகோவாவின் சாட்சிகளில் இருவர், பைபிள் நியமங்களுக்குத் தாங்கள் உறுதியுடன் கீழ்ப்படிந்ததன் காரணமாக சிறைப்படுத்தப்பட்டனர். எனினும், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி தைரியமாய் யாவரறிய பேசுவதற்குத் தங்கள் நிலைமை தங்களைத் தயங்கும்படி செய்ய அவர்கள் இடமளிக்கவில்லை. சிறைச்சாலையின் அதிகாரி ஒருவரை அவர்கள் அணுகி, கர்த்தருடைய இராப்போஜனத்தை அங்கு ஆசரிப்பதற்கு அனுமதி பெற்றனர். 14 கைதிகள் பைபிளில் தங்கள் அக்கறையை வெளிப்படுத்தி, இந்த முக்கியமான நிகழ்ச்சியில் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்துகொண்டபோது, அவர்கள் எவ்வளவு அதிகமாய் மகிழ்ச்சியடைந்தார்கள்! தங்களுடைய விடுதலைக்குப் பின், அவர்களில் சிலர், தொடர்ந்து பைபிள் படித்து யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொண்டு வந்தனர்.
25-க்கு மேற்பட்ட நாடுகளில், தடையுத்தரவுகளின் அல்லது பல்வேறு வகைகளான எதிர்ப்பு அல்லது துன்புறுத்தலின் காரணமாக, யெகோவாவின் சாட்சிகள் துன்பம் அனுபவிக்கிறார்கள். எனினும், அப்போஸ்தலரைப்போல், அவர்கள் தொடர்ந்து, “இடைவிடாமல் உபதேசஞ்செய்து கிறிஸ்துவாகிய இயேசுவை நற்செய்தியாகப் பிரசங்கித்து” வருகிறார்கள்.—அப்போஸ்தலர் 5:42, திருத்திய மொழிபெயர்ப்பு.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்தது.