இனி துன்பமே இல்லாமல் போகையில்
துன்பம் என்பது மனித குடும்பத்துக்காக கடவுள் கொண்டிருந்த ஆதி நோக்கத்தின் பாகமாக இருக்கவில்லை. அதை அவர் திட்டமிடவுமில்லை, அது அவருக்கு விருப்பமுமில்லை. ‘அப்படியானல் அது எவ்விதமாக ஆரம்பமானது, இப்பொழுது வரையாக அது தொடர்ந்திருக்கும்படியாக கடவுள் ஏன் அனுமதித்திருக்கிறார்?’ என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம்.—யாக்கோபு 1:13-ஐ ஒப்பிடுக.
இதற்குப் பதில், மனித வரலாற்றின் மிகப் பழமையான பதிவாகிய பைபிளில், குறிப்பாக ஆதியாகம புத்தகத்தில் காணப்படுகிறது. நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கெதிரான கலகத்தில் பிசாசாகிய சாத்தானைப் பின்பற்றினார்கள் என்று அது சொல்கிறது. அவர்களுடைய செயல்கள் சர்வலோகத்தின் சட்டம், ஒழுங்கின் அஸ்திவாரத்தையே தாக்கிய முக்கியமான விவாதங்களை எழுப்பின. எது நல்லது, எது கெட்டது என்பதைத் தாங்களாகவே தீர்மானித்துக்கொள்வதற்கான உரிமையை அவர்கள் கேட்டபோது, அவர்கள் கடவுளுடைய அரசுரிமைக்கு சவால் விட்டார்கள். ஆட்சி செய்வதற்கும் “நன்மைதீமை” என்பதைப்பற்றியதில் ஒரே நியாயாதிபதியாக இருப்பதற்கும் அவருக்கிருக்கும் உரிமையைப் பற்றி அவர்கள் சந்தேகத்தை எழுப்பினார்கள்.—ஆதியாகமம் 2:15-17; 3:1-5.
ஏன் தம்முடைய விருப்பத்தை உடனடியாக அமல்படுத்தக்கூடாது?
‘அப்படியென்றால் ஏன் கடவுள் உடனடியாக தம்முடைய விருப்பத்தை அமல்படுத்தவில்லை?’ என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம். அநேகருக்கு, இந்த விஷயம் அவ்வளவு எளிதாக தோன்றுகிறது. ‘கடவுளுக்கு வல்லமை இருந்தது. அதை அவர் பயன்படுத்தி கலகக்காரர்களை அழித்துவிட்டிருக்கவேண்டும்,’ என்பதாக அவர்கள் சொல்கின்றனர். (சங்கீதம் 147:5) ஆனால் உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள், ‘தங்கள் விருப்பத்தை அமல்படுத்த உயர் அதிகாரத்தைப் பயன்படுத்தும் எல்லாரையும் நான் தயக்கமில்லாமல் ஆதரிக்கிறேனா? என்னுடைய விரோதிகளை ஒழித்துக்கட்டுவதற்கு, ஒரு சர்வாதிகாரி, கொலை படைகளைப் பயன்படுத்துகையில் இயல்பாகவே ஒரு வெறுப்புணர்வு எனக்கு ஏற்படுவதில்லையா?’ நியாய உணர்வுள்ள பெரும்பாலான மக்கள் இப்படிப்பட்ட காரியத்தைக் குறித்து அதிர்ச்சியடைகிறார்கள்.
‘ஆனால் கடவுள் அந்த அதிகாரத்தை உபயோகித்தால், யாருமே அவருடைய செயல்களைக் குறித்து கேள்விகேட்க மாட்டார்கள்,’ என்பதாக நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் நிச்சயமாயிருக்கிறீர்களா? கடவுள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதத்தைக் குறித்து மக்கள் கேள்வி எழுப்புவது உண்மையல்லவா? தீமையைச் சகித்துக்கொள்வதில் அவர் செய்வது போல அதை அவர் ஏன் சில சமயங்களில் பயன்படுத்துவதில்லை என்பதாக கேள்வி கேட்கிறார்கள். மற்ற சமயங்களில் அதை அவர் ஏன் பயன்படுத்தியிருக்கிறார் என்பதாக அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். உண்மையுள்ள மனிதனாகிய ஆபிரகாமுக்கும்கூட, கடவுள் தம்முடைய சத்துருக்களுக்கு விரோதமாக அவருடைய வல்லமையைப் பயன்படுத்தும் விஷயத்தில் சங்கடமான ஒரு நிலை இருந்தது. சோதோமை அழிப்பதற்கு கடவுள் தீர்மானித்திருந்ததை நினைவுபடுத்திப்பாருங்கள். நல்ல ஆட்களும் கெட்டவர்களோடு சேர்ந்து அழிந்துவிடுவார்களோ என்ற தவறான பயம் ஆபிரகாமுக்கு இருந்தது. அவர் சொன்னார்: “துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக.” (ஆதியாகமம் 18:25) சரியான மனதுள்ளவனாயிருந்த ஆபிரகாமைப் போன்ற ஆட்களுக்கும்கூட வரம்பற்ற வல்லமை தவறாகப் பயன்படுத்தப்படாது என உறுதியளிக்கப்படுவது அவசியமாகும்.
நிச்சயமாகவே ஆதாமையும் ஏவாளையும் சாத்தானையும் கடவுளால் உடனடியாக அழித்திருக்கமுடியும். ஆனால் பின்னால் அவருடைய செயல்களைப்பற்றி அறியவரக்கூடிய மற்ற தேவதூதர்களை அல்லது எதிர்கால படைப்புகளை அது எவ்விதமாக பாதித்திருக்கக்கூடும் என்பதை எண்ணிப்பாருங்கள். கடவுளுடைய ஆட்சியின் நியாயமானத்தன்மையைக் குறித்து அவர்கள் மனதை சதா உறுத்திக்கொண்டே இருக்கும் கேள்விகளை விட்டுச்செல்லக்கூடுமா? இது கடவுளை, நயாட்ஷி அவரை விவரித்த வண்ணமாக உண்மையில் ஒரு வகையான சர்வாதிகார கொடுங்கோலராக, தன்னை எதிர்க்கிற எவரையும் இரக்கமில்லாமல் ஒழித்துக்கட்டிவிடும் ஒருவராக இருப்பதாக குற்றஞ்சாட்டும்படியாக செய்யாதா?
சரியானதையே செய்யும்படி மனிதர்களை ஏன் செய்விக்கக்கூடாது?
‘மனிதர்கள் சரியானதையே செய்யும்படியாக கடவுளால் செய்யமுடியதா?’ என்று சிலர் ஒருவேளை கேட்கலாம். சரி, இதையும்கூட சிந்தித்துப் பாருங்கள். வரலாறு முழுவதிலுமாக, அரசாங்கங்கள் தாங்கள் சிந்திக்கும்விதமாக மக்களைச் சிந்திக்கச் செய்ய முயன்றுவந்திருக்கின்றன. ஒருசில அரசாங்கங்கள் அல்லது தனிப்பட்ட ஆட்சியாளர்கள் தெரிவு செய்யும் சுயாதீனம் என்ற சிறந்த பரிசை தங்களுக்குப் பலியாகிறவர்களிடமிருந்து பறித்துவிட்டு ஒருவேளை மருந்துகளை அல்லது அறுவை மருத்துவத்தைப் பயன்படுத்தி பல்வேறு விதமான மூளைச்சலவை முறைகளை கையாண்டு வந்திருக்கிறன்றன(ர்). அந்தப் பரிசை துர்ப்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்பிருந்தாலும் தெரிவு செய்யும் சுயாதீனம் உடையவர்களாய் இருப்பதை நாம் உயர்வாக மதித்துப் போற்றுவதில்லையா? அந்தச் சுதந்திரத்தைப் பறித்துக்கொள்வதற்கு முயலும் எந்த அரசாங்கத்தையும் அல்லது ஆட்சியாளரையும் நாம் பொறுத்துக்கொள்கிறோமா?
அப்படியென்றால், உடனடியாக அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்தை அமல்படுத்துவதற்கு கடவுளுக்கு அங்கே வேறு என்ன வழி இருந்தது? அவருடைய சட்டத்தை நிராகரிப்பவர்களுக்கு அவருடைய ஆட்சியிலிருந்து அவர்களை விடுவிக்கும் தற்காலிகமான ஒரு காலப்பகுதியை அனுமதிப்பதே கலகத்தைக் கையாளுவதற்கு மிகச் சிறந்த வழி என்பதாக யெகோவா தேவன் தீர்மானித்தார். இது ஆதாம் ஏவாளின் சந்ததியாராகிய மனித குடும்பத்தினருக்கு கடவுளுடைய சட்டத்துக்கு உட்படாமல் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதற்கு ஒரு குறுகிய காலத்தை அனுமதிக்கும். அவர் ஏன் இதைச் செய்தார்? ஏனென்றால் காலப்போக்கில், அவர் தம்முடைய விருப்பத்தை அமல்படுத்துவதற்கு தம்முடைய எல்லையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தினாலும்கூட அவர் ஆட்சி செய்யும் விதமே எப்போதும் சரியாகவும் நியாயமாகவும் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் மறுக்கமுடியாத அத்தாட்சி குவியும் என்பதையும் அவருக்கு எதிராக செய்யப்படும் கலகம் விரைவிலேயோ தாமதமாகவோ பேராபத்தாகவே முடியும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.—உபாகமம் 32:4; யோபு 34:10-12; எரேமியா 10:23.
அப்பாவிகளான எல்லா பலியாட்களையும் பற்றி என்ன?
‘இதற்கிடையில், அப்பாவிகளான எல்லா பலியாட்களையும் பற்றி என்ன?’ என்பதாக நீங்கள் கேட்கலாம். ‘சட்டத்தின் ஏதோ ஒரு குறிப்பை நிரூபிப்பதற்கு அவர்கள் படும் வேதனை உண்மையில் தகுதியானதா?’ சரி, வெறுமனே சட்டத்தின் ஏதோ ஒரு விளங்காத குறிப்பை நிரூபிப்பதற்காக கடவுள் தீங்கை அனுமதிக்கவில்லை. அதற்கு மாறாக, அவர் மாத்திரமே பேரரசர், அவருடைய எல்லா படைப்புகளும் தொடர்ந்து சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டிருப்பதற்கு அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பது இன்றியமையாதது என்ற அடிப்படை உண்மையை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிலைநாட்டுவதற்கே அவ்வாறு செய்தார்.
மனதில் வைக்க வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், தீமை அழியாமல் இருப்பதால் மனித குடும்பத்துக்கு இது கொண்டுவரக்கூடிய எந்தத் தீங்கையும் கடவுள் முழுமையாக மாற்றி அமைத்திடமுடியும் என்பதை கடவுள் அறிந்திருக்கிறார் என்பதே. காலம் செல்லச்செல்ல தற்காலிகமான வேதனையும் துன்பமும் நன்மையில் விளைவடையும் என்பது அவருக்குத் தெரியும். ஒரு குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஏதோவொரு நோய்க்கு எதிராக பாதுகாப்பளிப்பதற்காக மருத்துவர் போடும் தடுப்பூசி வலியை ஏற்படுத்துகையில் தன் குழந்தையை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் தாயைப் பற்றி எண்ணிப்பாருங்கள். எந்தத் தாயும் தன் பிள்ளை வேதனைப்படுவதை விரும்புவது கிடையாது. எந்த மருத்துவரும் தன் நோயாளிக்குத் துன்பத்தை உண்டுபண்ண விரும்புவதில்லை. அந்தச் சமயத்தில் வலிக்கான காரணத்தை குழந்தை புரிந்துகொள்வது கிடையாது, ஆனால் பின்னால் அது ஏன் அனுமதிக்கப்பட்டது என்பதை அவன் புரிந்துகொள்வான்.
துன்பப்படுகிறவர்களுக்கு உண்மையான ஆறுதலா?
இந்தக் காரியங்களைத் தெரிந்துகொள்வதுதானே துன்பத்திலிருக்கிறவர்களுக்கு எந்த ஆறுதலையும் கொண்டுவராது என்பதாக சிலர் நினைக்கலாம். துன்பம் தொடர்ந்திருப்பதற்கான அறிவுப்பூர்வமான விளக்கம், “உணவுப்பொருட்களின் வேதியலைப் பற்றிய ஒரு சொற்பொழிவு பட்டினியாயிருக்கும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு பிரயோஜனமாய் இருக்குமோ அப்படியே துன்பப்படுகிறவனுக்கும் இருக்கிறது” என்பதாக ஹான்ஸ் கங் சொல்லுகிறார். “இந்த எல்லா புத்திநுட்பமுள்ள விவாதங்களும் துன்பத்தில் திணறிக்கொண்டிருக்கும் மனிதனுக்கு உண்மையில் உற்சாகத்தை அளிக்கமுடியுமா?” என்று அவர் கேட்கிறார். ஆம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை அசட்டை செய்யும் மனிதர்களின் எல்லா “புத்திநுட்பமுள்ள விவாதங்களும்” துன்பப்படுகிறவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கவில்லை. மனிதன் துன்பப்பட வேண்டும் என்பது கடவுளுடைய எண்ணம் என்றும் பூமியானது கண்ணீரின் பள்ளத்தாக்காக அல்லது கடைசியாக பரலோகத்தில் ஜீவனைப் பெறப்போகிறவர்களுக்கு சோதனைக்குரிய ஒரு இடமாக இது வடிவமைக்கப்பட்டது என்பதாக குறிப்பாகச் சொல்வதன் மூலம் இப்படிப்பட்ட மனித விவாதங்கள் பிரச்சினையை இன்னும் அதிகமாக்கியே இருக்கின்றன. என்னே ஒரு தெய்வ நிந்தனை!
என்றபோதிலும், பைபிள்தானே உண்மையான ஆறுதலை அளிக்கிறது. துன்பம் தொடர்ந்திருப்பதற்கு முரண்பாடுகள் இல்லாத ஒரு விளக்கத்தை அளிப்பது மாத்திரமல்லாமல், தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்தத் துன்பம் உண்டுபண்ணியிருக்கும் எல்லா தீங்கையும் அவர் மாற்றிடுவார் என்ற கடவுளுடைய நிச்சயமான வாக்குறுதியின் பேரில் நம்பிக்கையையும் கட்டியெழுப்புகிறது.
‘அனைத்தும் திரும்ப நிலைநாட்டப்படும்’
வெகு சீக்கிரத்தில் கடவுள் தம்முடைய முதல் மனித படைப்புகள் கலகம் செய்வதற்கு முன்பாக இருந்தவிதமாக நிலைமையை மீண்டும் கொண்டுவருவார். மனிதனுடைய சுயேச்சையான ஆட்சிக்கு கடவுள் நியமித்திருந்த காலம் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. “உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித்தீருங் [“அனைத்தும் திரும்ப நிலைநாட்டப்படும்,” NW] காலங்கள் வருமளவும் பரலோக”த்தில் இருக்கவேண்டியவராகிய இயேசுவை அவர் அனுப்பும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.—அப்போஸ்தலர் 3:20, 21.
இயேசு கிறிஸ்து என்ன செய்வார்? கடவுளுடைய எல்லா சத்துருக்களையும் பூமியிலிருந்து நீக்கிப்போடுவார். (2 தெசலோனிக்கேயர் 1:6-10) மனித சர்வாதிகாரிகள் செய்வது போல அதிரடி நடவடிக்கையான ஒரு அழிவு அல்ல. மனிதனின் மோசமான ஆட்சியின் அழிவுக்கேதுவான விளைவுகளை நிரூபிக்கும் அத்தாட்சிக் குவியல், தம்முடைய விருப்பத்தை அமல்படுத்துவதற்கு தம்முடைய எல்லையற்ற வல்லமையை விரைவில் பயன்படுத்துவதில் கடவுள் முற்றிலும் நியாயமாக இருக்கிறார் என்பதைக் காட்டும். (வெளிப்படுத்துதல் 11:17, 18) ஆரம்பத்தில், முன்னொருபோதும் பூமி அனுபவித்திராத ‘உபத்திரவத்தை’ இது அர்த்தப்படுத்தும்; நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்தை ஒத்ததாக, ஆனால் அதைவிட மிகப் பெரிதாக இது இருக்கும். (மத்தேயு 24:21, 29-31, 36-39) இந்த “மகா உபத்திரவத்தைத்” தப்பிப்பிழைக்கிறவர்கள் ‘தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினால்’ உரைக்கப்பட்ட கடவுளுடைய எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுவதைக் காணும்போது ‘இளைப்பாறுதலின் காலங்களை’ அனுபவிப்பர். (அப்போஸ்தலர் 3:19; வெளிப்படுத்துதல் 7:14-17, NW) கடவுள் என்ன வாக்களித்திருக்கிறார்?
ஆம், கடவுளுடைய பண்டைய தீர்க்கதரிசிகள் போரினாலும் இரத்தஞ்சிந்துதலினாலும் உண்டாகும் துன்பம் முடிவுக்கு வரும் என்பதாக சொல்கின்றனர். உதாரணமாக, சங்கீதம் 46:9 நமக்கு இவ்வாறு சொல்கிறது: “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.” அப்பாவிகளான பலியாட்களும், பரிதாபத்துக்குரிய அகதிகளும், கொடூரமான போர்களில் கற்பழிக்கப்பட்டு, ஊனமாக்கப்பட்டு கொல்லப்படுகிறவர்களும் இனிமேலும் இரார்! ஏசாயா தீர்க்கதரிசி சொல்கிறார்: “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:4.
குற்றச்செயலாலும் அநீதியாலும் உண்டாகும் துன்பமும்கூட முடிவுக்கு வரும் என்று தீர்க்கதரிசிகள் முன்னறிவிக்கிறார்கள். “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்,” என்றும் துயரத்தையும் துன்பத்தையும் உண்டுபண்ணுகிறவர்கள் “அதில் இராதபடி நிர்மூலமாவார்கள்” என்றும் நீதிமொழிகள் 2:21, 22 வாக்களிக்கிறது. இனிமேலும் ‘மனிதன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனிதனை ஆள’மாட்டான். (பிரசங்கி 8:9) பொல்லாதவர்கள் என்றுமாக அழிக்கப்படுவர். (சங்கீதம் 37:10, 38) அனைவருமே துன்பத்திலிருந்து விடுபட்டவர்களாய் சமாதானமாயும் பாதுகாப்பாயும் வாழ முடிகிறவர்களாக இருப்பர்.—மீகா 4:4.
மேலுமாக, தீர்க்கதரிசிகள், சரீர மற்றும் உணர்ச்சிக்கோளாறுகள் உண்டுபண்ணும் துன்பத்துக்கு ஒரு முடிவு இருக்கும் என்பதாகக்கூட வாக்களிக்கிறார்கள். (ஏசாயா 33:24) குருடர், செவிடர், ஊனமுற்றவர்கள் மற்றும் நோயாலும் பிணியாலும் நலிவுற்றவர்கள் அனைவரும் சுகமடைவர் என்பதாக ஏசாயா வாக்களிக்கிறார். (ஏசாயா 35:5, 6) கடவுள் மரணத்தின் விளைவையும்கூட மாற்றிப்போடுவார். ‘பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு’ வெளியேவருவர் என்பதாக இயேசு முன்னுரைத்தார். (யோவான் 5:28, 29) “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” பற்றிய ஒரு தரிசனத்தில் அப்போஸ்தலன் யோவானிடம், “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை,” என்பதாக சொல்லப்பட்டது. (வெளிப்படுத்துதல் 21:1-4) அதை எண்ணிப்பாருங்கள்! வருத்தமில்லை, கண்ணீரில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை—எந்தத் துன்பமும் இனிமேல் இல்லை!
தற்காலிகமாக தீமை சகித்துக்கொள்ளப்பட்டிருக்கும் இந்தக் காலத்தின்போது சம்பவித்திருக்கும் எந்தச் சோக சம்பவங்களும் சரிசெய்யப்பட்டுவிடும். கடவுள் ஒருபோதும் நோக்கங்கொண்டிராத மனிதரின் வருத்தம் மற்றும் துன்பத்தின் நினைவுகள்கூட முழுமையாக துடைத்தழிக்கப்பட்டுவிடும். “முந்தின இடுக்கண்கள் மறக்கப்படு[ம்] . . . முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை,” என்பதாக ஏசாயா முன்னுரைத்தார். (ஏசாயா 65:16, 17) பரிபூரண மனித குடும்பம் ஒரு பரதீஸான பூமியில் முழுமையான சமாதானத்திலும் மகிழ்ச்சியிலும் வாழவேண்டும் என்ற கடவுளுடைய ஆதிநோக்கம் முழுமையாக நிறைவேறும். (ஏசாயா 45:18) அவருடைய அரசுரிமையில் முழு நம்பிக்கை இருக்கும். கடவுள் எல்லா மனித துன்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் சமயத்தில், நயாட்ஷி குற்றஞ்சாட்டிய விதமாக அவர் ஏதோ ஒருவகையான “கொடுங்கோலர், வஞ்சகர், மோசக்காரர், கொலையாளி” அல்ல; அவர் எப்போதும் அன்புள்ள, ஞானமுள்ள மற்றும் முழுமையான வல்லமையைப் பயன்படுத்துவதில் நியாயமானவராக இருப்பதை அவர் காண்பிக்கும் சமயத்தில், நாம் வாழ்ந்துகொண்டிருப்பது என்னே ஒரு சிலாக்கியம்!
[பக்கம் 5-ன் படம்]
UPI/Bettmann
[பக்கம் 5-ன் படம்]
சில ஆட்சியாளர்கள் தெரிவு செய்யும் சுயாதீனத்தை தங்களுக்குப் பலியாகிறவர்களிடமிருந்து பறித்துவிட்டு மூளைச்சலவை முறைகளை கையாண்டு வந்திருக்கிறார்கள்
[பக்கம் 7-ன் படம்]
இனி துன்பமே இல்லாமல் போகையில், அனைவரும் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து மகிழ்வர்