அடிப்படைவாதம் பரவுதல்
அடிப்படைவாதம்—ஒருசில பத்தாண்டுகளுக்கு முன், புராட்டஸ்டண்ட் மதத்தொகுதிக்குள் இருந்த சிறுபான்மையான ஓர் இயக்கமாக மட்டுமே இது இருந்தது. இப்போது நிலைமை எவ்வளவாய் மாறிவிட்டது! 20-ம் நூற்றாண்டின் இறுதியில், மக்கள்தொடர்பு சாதனத்திற்கும், பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கும் இவ்வளவு முக்கியமான, எங்குப் பார்த்தாலும் ஒரே பேச்சாக அடிப்படைவாதம்,a இருக்கும் என்று சுமார் 30 வருடங்களுக்கு முன் எவருமே நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என புருஸ் பி. லாரன்ஸ் என்ற ஒரு மத விரிவுரையாளர் எழுதினார்.
ஆனால், அதுதான் நடந்தது. தெருக்களில் வெறித்தனமாக நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், கொலைகள், கருச்சிதைவுக்கு எதிரான இயக்கங்கள், மத செல்வாக்கு குழுக்களின் அரசியல் சதித்திட்டங்கள், தேவதூஷனம் என்று கருதப்பட்ட புத்தகங்களை பகிரங்கமாக கொளுத்துதல் போன்ற செய்தி அறிக்கைகள் அடிப்படைவாதிகளின் செயல்களை தொடர்ந்து பறைசாற்றுகின்றன. எங்குப் பார்த்தாலும் “கடவுளின் பேரில் பயங்கரமான தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது” இந்த அடிப்படைவாதம் என்று மோன்டோ எக்கனாமிக்கோ என்னும் இத்தாலிய வாராந்தர பொருளாதார பத்திரிகை ஒன்று குறிப்பிட்டது.
அடிப்படைவாதிகள் பெரும்பாலும் மிதமிஞ்சி செல்பவர்களாகவும், மத வெறியர்களாகவும், சதி செய்பவர்களாகவும், தீவிரவாத தாக்குதலை நடத்துபவர்களாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். ரோமன் கத்தோலிக்க மதத்தில் இருக்கும் கமியுனியோனா ஏ லிபாராடஸோனா (Comunione e Liberazione), யூத மதத்திலுள்ள குஷ் எமியூனிம் (Gush Emunim), வட அமெரிக்காவின் புராட்டஸ்டண்ட் மதத்திலுள்ள கிறிஸ்டியன் கொலிஷன் போன்ற கும்பல்களின் வளர்ச்சியைக் கண்டு மக்கள் திகிலடைகிறார்கள். ஏன் அடிப்படைவாதம் பரவுகிறது? அதனை எது உந்துவிக்கிறது? பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சமூகவாதி ஜீல் கேபெல் கூறுவதைப்போல், ஒருவேளை அது “கடவுளின் பழிவாங்கும் செயலாக” இருக்குமோ?
[அடிக்குறிப்புகள்]
a பாரம்பரிய, பழமையான மத மதிப்பீடுகளை விடாப்பிடியாக பின்பற்றுபவரே அடிப்படைவாதி. “அடிப்படைவாதம்” என்பதன் அர்த்தம் அடுத்த கட்டுரையில் இன்னும் முழுமையான அளவில் கலந்தாலோசிக்கப்படும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Nina Berman/Sipa Press