விடுதி வசதியுள்ளஒரு பள்ளிக்கு உங்கள் பிள்ளை செல்ல வேண்டுமா?
வளர்ந்து வரும் ஒரு தேசத்தில் ஒரு சிறிய ஊரில் நீங்கள் வாழ்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு தொடக்கப் பள்ளிக்கு செல்லும் வயதில் பல பிள்ளைகள் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் 12 வயதில், இடைநிலைப் பள்ளிக்குச் செல்வார்கள். நீங்கள் வாழும் பகுதியில் இடைநிலைப் பள்ளிகளில் அளவுக்கு அதிகமான பிள்ளைகள் படிக்கிறார்கள், தேவையான உபகரணங்கள் இல்லை, போதிய அளவில் தகுதிப்பெற்ற ஆசிரியர்கள் இல்லை. சில சமயங்களில் போராட்டங்களின் காரணமாக ஒரே சமயத்தில் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் பள்ளிகள் மூடப்பட்டுவிடுகின்றன.
யாரோ ஒருவர் நகரத்திலுள்ள, விடுதி வசதியுள்ள ஒரு பள்ளியை (Boarding School) வருணிக்கும் கண்கவரும் ஒரு சிற்றேட்டை உங்கள் கைகளில் தருகிறார்கள். நல்ல வசதிகளுடைய வகுப்பறைகளிலும், ஆய்வுக்கூடங்களிலும் நூலகங்களிலும் படித்துக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியுள்ள, நேர்த்தியாக உடை உடுத்திய மாணவர்களின் படங்களை நீங்கள் அதில் பார்க்கிறீர்கள். மாணவர்கள் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகிறார்கள், சுத்தமான மனதைக் கவரும் பல படுக்கைகளைக் கொண்ட அறைகளில் ஓய்வெடுத்துக்கொள்கிறார்கள். பள்ளியின் ஒரு குறிக்கோள் மாணவர்களுக்கு “அவர்களால் பெற முடிகிற மிக உயர்ந்த தரமுள்ள கல்வியைப்பெற்றுக்கொள்ள” உதவுவதே என்பதை சிற்றேட்டில் வாசிக்கிறீர்கள். மேலுமாக நீங்கள் அதில் வாசிப்பது: “பொதுவாக ஒரு குடும்பத்தில் வலியுறுத்தப்படும் அதே மரியாதை, பண்பட்ட நடத்தை, பெற்றோரிடமும் வயதானவர்களிடமும் மதிப்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, தயவு, நேர்மை மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றுக்குரிய நடத்தையே அனைத்து மாணவர்களிடமும் எதிர்பார்க்கப்படுகிறது.”
புன்முறுவலோடு ஒரு இளைஞன், “என்னுடைய பெற்றோர் மிகச் சிறந்த பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை எனக்குத் தந்தார்கள்,” என்பதாக சொல்வது மேற்கோள் காண்பிக்கப்படுகிறது. ஒரு பெண் சொல்கிறாள்: “பள்ளி ஊக்கமூட்டுவதாயும் கிளர்ச்சியூட்டுவதாயும் இருக்கிறது. இந்தப் பள்ளி கற்பதற்கு உகந்ததாய் இருக்கிறது.” விடுதி வசதியுள்ள இப்படிப்பட்ட ஒரு பள்ளிக்கு நீங்கள் உங்கள் மகனை அல்லது மகளை அனுப்புவீர்களா?
கல்வியும் ஆவிக்குரிய தன்மையும்
பொறுப்புள்ள எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல ஆரம்பத்தைக் கொடுக்க விரும்புகின்றனர், அந்த இலக்கை அடைவதற்கு, சிறந்த சமநிலையுள்ள ஒரு கல்வி முக்கியமாக இருக்கிறது. அநேகமாக உலகப்பிரகாரமான கல்வியானது, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பளித்து தங்களையும் தங்களுடைய எதிர்கால குடும்பங்களையும் கவனித்துக்கொள்ள முடிகிற பெரியவர்களாக வளருவதற்கு இளைஞருக்கு உதவிசெய்கிறது.
‘விடுதி வசதியுள்ள ஒரு பள்ளியால் நல்ல கல்வியை ஓரளவு நன்னெறி வழிநடத்துதலோடு கொடுக்க முடிந்தால், அதை ஏன் பிரயோஜனப்படுத்திக்கொள்ளக்கூடாது?’ என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம். அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கையில், கிறிஸ்தவ பெற்றோர் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறித்து ஜெபசிந்தையோடு யோசித்துப் பார்க்கவேண்டும்—அவர்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய நலன். இயேசு கிறிஸ்து கேட்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36) நிச்சயமாகவே இதில் எந்தப் பிரயேஜனமும் இல்லை. ஆகவே விடுதி வசதியுள்ள ஒரு பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப தீர்மானிப்பதற்கு முன்னால், கிறிஸ்தவ பெற்றோர் இது தங்களுடைய பிள்ளைகளின் நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பின்மீது உண்டாக்கக்கூடிய பாதிப்பைப் பற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
மற்ற மாணவர்களின் செல்வாக்கு
விடுதி வசதியுள்ள சில பள்ளிகள் மிக உயர்ந்த தரமான கல்வியை அளிக்கக்கூடும். ஆனால் அங்கு படிக்கிறவர்களின் அல்லது இப்படிப்பட்ட பள்ளிகளை நடத்துகிறவர்களின் ஒழுக்க தராதரங்கள் எப்படிப்பட்டவை? இந்தக் “கடைசிநாட்களில்” என்ன வகையான ஆட்கள் அதிகமாக இருப்பார்கள் என்பதைக்குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவபிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.”—2 தீமோத்தேயு 3:1-5.
இந்த ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய சீர்குலைவு உலககெங்கிலும் காணப்படுகிறது, பைபிள் நியமங்களின்படி வாழ்வதில் யெகோவாவின் சாட்சிகளுக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது. வீட்டிலிருந்து சென்று படிக்கும் மாணவர்களே உலகப்பிரகாரமான பள்ளி சகாக்களோடு தங்களுடைய மட்டுப்படுத்தப்பட்ட கூட்டுறவும்கூட தங்களுடைய ஆவிக்குரிய தன்மையின்மீது வலிமையான பாதகமான செல்வாக்கு செலுத்துவதைக் காண்கிறார்கள். தினந்தோறும் தங்களுடைய பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஆதரவு, புத்திமதி மற்றும் ஊக்குவிப்போடும்கூட அந்தச் செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது சாட்சி பிள்ளைகளுக்கு உண்மையில் ஒரு சவாலாக இருக்கக்கூடும்.
அப்படியென்றால், தங்கள் வீடுகளிலிருந்து, வெகு தூரத்திலுள்ள விடுதி வசதியுள்ள பள்ளிகளுக்கு அனுப்பிவிடப்படும் பிள்ளைகளின் நிலைமை என்ன? அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள், அன்புள்ள பெற்றோரின் ஒழுங்கான ஆவிக்குரிய ஆதரவிலிருந்து துண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் 24 மணிநேரமும் தங்கள் வகுப்பு மாணவர்களுடனே வாழ்வதால், வீட்டிலிருந்து பள்ளி சென்று படிக்கும் மாணவர்களைவிட கூட்டத்தோடு ஒத்துப்போவதற்கான அழுத்தம் இவர்களுடைய இளம் மனங்களிலும் இருதயங்களிலும் பலமான செல்வாக்கைச் செலுத்துகிறது. ஒரு மாணவர் சொன்னார்: “ஒழுக்க சம்பந்தமாக, விடுதி வசதியுள்ள ஒரு பள்ளியில், மாணவன் எந்நேரமும் ஆபத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.”
பவுல் எழுதினார்: “மோசம் போகாதிருங்கள். கெட்ட கூட்டுறவுகள் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15: 33, NW) தங்களுடைய பிள்ளைகள் கடவுளைச் சேவிக்காத பிள்ளைகளோடு எப்பொழுதும் கூட்டுறவுக்கொண்டிருந்தால், எந்த ஆவிக்குரிய தீங்கையும் அனுபவிக்கமாட்டார்கள் என்று கிறிஸ்தவப் பெற்றோர் யோசிக்கும்படி தவறாக வழிநடத்தப்படக்கூடாது. ஒரு காலப்பகுதியில், தேவபக்தியுள்ள பிள்ளைகள் கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு உணர்ச்சிகளற்றவர்களாகி ஆவிக்குரிய காரியங்களிடமான எல்லா போற்றுதலையும் இழந்துவிடலாம். சில சமயங்களில் தங்களுடைய பிள்ளைகள் விடுதி வசதியுள்ள ஒரு பள்ளியைவிட்டு வெளியேறும்வரையாக பெற்றோர்களுக்கு இது தெரிவதே இல்லை. அப்பொழுது காரியங்களைச் சரிசெய்வதற்கு அநேகமாக காலம் பிந்திவிடுகிறது.
க்ளமென்டின் அனுபவம் இதற்கு ஒரு மாதிரியாக உள்ளது. அவன் சொல்லுகிறான்: “விடுதி வசதியுள்ள பள்ளிக்குச் செல்வதற்கு முன்னால், நான் சத்தியத்தை நேசித்தேன், சகோதரர்களோடு வெளி ஊழியத்துக்குச் சென்றேன். எங்களுடைய குடும்ப பைபிள் படிப்பிலும் சபை புத்தகப் படிப்பிலும் கலந்துகொள்வதை நான் குறிப்பாக அனுபவித்து மகிழ்ந்தேன். என்றபோதிலும், 14 வயதில் நான் விடுதி வசதியுள்ள பள்ளிக்குச் சென்றபிறகு, நான் சத்தியத்தை முழுவதுமாக மறந்துவிட்டேன். விடுதியிலிருந்த அந்த ஐந்து வருடங்களின்போது நான் கூட்டங்களுக்குச் செல்லவே இல்லை. கெட்ட கூட்டுறவின் காரணமாக, நான் போதைப்பொருள், புகைத்தல், அதிகமாக குடித்தல் போன்ற பழக்கங்களில் ஈடுபடுகிறவனானேன்.”
ஆசிரியர்கள் செல்வாக்கு
எந்த ஒரு பள்ளியிலும் தங்கள் அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்யும் ஒழுக்கக்கேடான ஆசிரியர்களும் இருக்கலாம். சிலர் கொடூரமாயும், கடுமையாயும் நடந்துகொள்கையில், மற்றவர்கள் தங்கள் மாணவர்களைப் பாலியல் சம்பந்தமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். விடுதி வசதியுள்ள பள்ளிகளில் இப்படிப்பட்ட ஆசிரியர்களின் செயல்கள் பெரும்பாலும் வெளியே தெரிவது கிடையாது.
என்றபோதிலும், பெரும்பாலான ஆசிரியர்கள் பிள்ளைகளைச் சமுதாயத்தில் பயனுள்ள அங்கத்தினர்களாகும்படி, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்திற்குள் தலைநிமிர்ந்து வாழ உண்மையான மனதுடன் முயற்சிசெய்கின்றனர். ஆனால் இங்கே சாட்சி பிள்ளைகளுக்கு மற்றொரு பிரச்சினை இருக்கிறது. உலகத்தின் கருத்து மதிப்பீடுகள் எப்பொழுதும் கிறிஸ்தவ நியமங்களோடு ஒத்துப்போவதில்லை. ஆசிரியர்கள் மாணவர்களை இந்த உலகத்தோடு ஒத்துவாழ உற்சாகப்படுத்தும்போது இயேசு தம்மைப் பின்பற்றுவோர் ‘உலகத்தின் பாகமாக இருக்கமாட்டார்கள்’ என்பதாக சொன்னார்.—யோவான் 17:16, NW.
பைபிள் நியமங்களைப் பிள்ளைகள் பின்பற்றும்போது பிரச்சினைகள் எழுமானால் அப்போது என்ன? பிள்ளைகள் வீட்டில் தங்கி, உள்ளூர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தால், அப்படிப்பட்ட விஷயங்களைத் தங்கள் பெற்றோரோடு கலந்துபேசலாம். முறையே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் துணையாக இருந்து ஒருவேளை அவர்களுடைய ஆசிரியரோடு பேசலாம். இதன் விளைவாக, பிரச்சினைகளும் தவறான கருத்துக்களும் பொதுவாக வேகமாக சரிசெய்யப்படுகின்றன.
விடுதி வசதியுள்ள பள்ளிகளில் இது வித்தியாசமாக உள்ளது. இப்படிப்பட்ட மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களின் கட்டுப்பாட்டின்கீழ் எப்பொழுதும் இருக்கின்றனர். கிறிஸ்தவ நியமங்களுக்காக பிள்ளைகள் ஒரு நிலைநிற்கையை எடுக்கையில், தினந்தோறும் அவர்கள் தங்கள் பெற்றோரின் ஆதரவு இல்லாமலே அப்படிசெய்ய வேண்டும். சில சமயங்களில், இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளைச் சமாளித்து பிள்ளைகள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்கிறார்கள். என்றபோதிலும் அநேக சமயங்களில், அவர்கள் அவ்விதமாகச் செய்வதில்லை. ஒரு பிள்ளை தன்னுடைய ஆசிரியரின் விருப்பத்துக்கு வளைந்துகொடுத்துவிடும் சாத்தியம் இருக்கிறது.
கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டம்
பொதுவாக மாணவர்களுக்கு விருப்பப்படி வந்துபோகும் சுதந்திரம் இருக்கும் பல்கலைக்கழகங்களைப் போல் இல்லாமல், விடுதி வசதியுள்ள பள்ளிகள் பிள்ளைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை ஞாயிற்றுக்கிழமையைத் தவிர, பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேற தங்கள் மாணவர்களை அனுமதிப்பது கிடையாது. சில பள்ளிகள் அதையும்கூட அனுமதிப்பதில்லை. 11 வயதிலிருந்த ஆரு என்ற பெயருடைய ஒரு விடுதி மாணவி இவ்வாறு சொல்கிறாள்: “பள்ளி அதிகாரிகள் எங்களைக் கூட்டங்களுக்குச் செல்ல ஒருபோதும் அனுமதிப்பது கிடையாது, நிச்சயமாகவே வெளி ஊழியத்துக்கு அனுமதி கிடையாது. பள்ளியில், கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மாத்திரமே மத ஆராதனை கூட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாணவனும் இந்த இரண்டு மதங்களில் ஒன்றை தெரிவுசெய்ய வேண்டும் அல்லது ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய இருவரின் கடுமையான விரோதத்தை எதிர்ப்பட்டே ஆகவேண்டும். மாணவர்கள் தேசீயகீதத்தையும் சர்ச் பாடல்களையும்கூட பாடும்படியாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.”
பெற்றோர் இப்படிப்பட்ட ஒரு பள்ளியில் தங்கள் பிள்ளையைச் சேர்க்கும்போது, அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன அபிப்பிராயத்தைக் கொடுக்கிறார்கள்? உலகப்பிரகாரமான கல்வி, வணக்கத்துக்காக ஒன்றுகூடிவருவதையும் சீஷராக்கும் வேலையில் பங்குகொள்வதையும்விட முக்கியமானது—கடவுளுக்கு உத்தமமாய் இருப்பதைவிட அதிக முக்கியமானது—என்ற அபிப்பிராயத்தையே கொடுக்கிறார்கள்.—மத்தேயு 24:14; 28:19, 20; 2 கொரிந்தியர் 6:14-18; எபிரெயர் 10: 24, 25.
விடுதி வசதியுள்ள சில பள்ளிகளில், சாட்சி மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பைபிளைப் படிக்கிறார்கள், ஆனால் இது அநேகமாக கடினமாக உள்ளது. பிளெஸ்சிங் என்ற பெயரையுடைய 16 வயதுள்ள ஒரு இளம்பெண் தன்னுடைய, விடுதி வசதியுள்ள பள்ளியைக்குறித்து இதைச் சொல்கிறாள்: “ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஜெபத்திற்காக கூடிவருகிறார்கள். எங்களுடைய பைபிள் படிப்பை அனுமதிக்க சாட்சிகளாகிய நாங்கள் கெஞ்சிப் பார்ப்போம், ஆனால் மேல் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் எங்களுடைய மதத்திற்கு அங்கீகாரமில்லை என்பதாக சொல்கிறார்கள். பின்னர் அவர்கள் தங்களோடு ஜெபத்திற்கு வரும்படியாக எங்களைக் கட்டாயப்படுத்த முயற்சிசெய்கிறார்கள். நாங்கள் மறுத்தால் அவர்கள் எங்களைத் தண்டிக்கிறார்கள். ஆசிரியர்களிடம் முறையிட்டால் இன்னும் மோசமாகிவிடுகிறது. எல்லாவிதமான பட்டப்பெயர்களையும் வைத்து எங்களைக் கிண்டலாக கூப்பிட்டு, மேல் வகுப்பு மாணவர்களிடம் எங்களுக்குத் தண்டனைக் கொடுக்கும்படியாகவும் சொல்கிறார்கள்.”
வித்தியாசமானவர்களாக தனித்து நிற்பது
விடுதி வசதியுள்ள பள்ளியில் மாணவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பது தெளிவாக அறியப்பட்டிருந்தால், இது அவர்களுடைய நன்மைக்கே ஏதுவாக இருக்கும். பள்ளி அதிகாரிகள் சாட்சிகளுடைய நம்பிக்கைகளுக்கு முரணாக இருக்கும் கட்டாய பொய் மதசம்பந்தமான நடவடிக்கைகளில் கலந்துகொள்வதிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்கலாம். உடன் மாணவர்கள் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளிலும் உரையாடல்களிலும் அவர்களை உட்படுத்தாமலிருக்கலாம். உடன் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் சாட்சிகொடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கலாம். மேலுமாக, கிறிஸ்தவ நியமங்களின்படி வாழ்பவர்கள் படுமோசமான தவறிழைப்பவர்களாக சந்தேகிக்கப்படும் வாய்ப்பில்லை, சிலசமயங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மரியாதையை அவர்கள் சம்பாதித்துக்கொள்கிறார்கள்.
என்றபோதிலும், காரியங்கள் எப்போதும் எதிர்பார்க்கும் விதமாக நடப்பது கிடையாது. வித்தியாசமானவராக தனித்து நிற்பது, மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் ஒன்றுபோல துன்புறுத்துப்படுவதற்கும் பரியாசம் செய்யப்படுவதற்கும் ஒரு இளம் நபரை ஆளாக்குகிறது. விடுதி வசதியுள்ள ஒரு பள்ளிக்குச் செல்லும் 15 வயது இன்கா என்ற பையன் இவ்வாறு சொல்கிறான்: “பள்ளியில் நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்பது அறியப்பட்டிருந்தால், நீங்கள் குறிவைக்கப்படுவீர்கள். அவர்கள் நம்முடைய ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சம்பந்தமான நிலைநிற்கையை அறிந்திருப்பதால், நம்மை சிக்க வைப்பதற்கு கண்ணிகளை வைக்கிறார்கள்.”
பெற்றோரின் உத்தரவாதம்
எந்த ஒரு ஆசிரியரும், பள்ளியும் அல்லது கல்லூரியும் பிள்ளைகளை யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாக உருவாக்கும் அந்தப் பணியை சரியாகவே செய்ய முடியாது. அது அவர்களுடைய வேலையும் அல்ல, அவர்களுடைய பொறுப்பும் அல்ல. பெற்றோர்தாமே தங்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனிக்க வேண்டும் என்பதாக கடவுளுடைய வார்த்தை அறிவுரை கூறுகிறது. பவுல் எழுதினார்: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) பெற்றோர் மாதத்திற்கு ஓரிரு முறை மாத்திரமே சந்திக்கமுடியும் என்பதாக கட்டுப்படுத்தும், விடுதி வசதியுள்ள ஒரு பள்ளியில் தங்கள் பிள்ளைகள் இருப்பார்களேயானால் பெற்றோர் எவ்விதமாக இந்த தெய்வீக புத்திமதியைப் பின்பற்ற முடியும்?
சூழ்நிலைமைகள் வெகுவாக வித்தியாசப்படலாம், ஆனால் கிறிஸ்தவப் பெற்றோர் பின்வரும் ஏவப்பட்டெழுதப்பட்ட இந்தக் கூற்றுக்கு இசைவாச செயல்பட முயற்சி செய்கிறார்கள்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”—1 தீமோத்தேயு 5: 8.
மாற்று வழிகள் இருக்கின்றனவா?
பெற்றோருக்கு இரண்டே தெரிவுகள் மாத்திரமே இருப்பதாக தோன்றினால்—விடுதி வசதியுள்ள ஒரு பள்ளி அல்லது வசதி குறைவுள்ள உள்ளூர் பள்ளி—அவர்கள் என்ன செய்யலாம்? இந்த நிலையில் தாங்கள் இருப்பதை கண்டிருக்கும் சிலர், உள்ளூர் பள்ளி ஒன்றில் கற்கும் தங்கள் பிள்ளைகளின் கல்வியை நிறைவுசெய்ய ட்யூஷன் ஏற்பாடுசெய்கின்றனர். மற்ற பெற்றோர் தாங்களாகவே அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க நேரத்தை ஒதுக்கிவைக்கின்றனர்.
சிலசமயங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இடைநிலைப்பள்ளிக்குப் போவதற்கு வெகு முன்னதாகவே இதைத் திட்டமிடுவதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கிறார்கள். உங்களுக்கு சிறு பிள்ளைகள் இருந்தால், அல்லது ஒரு குடும்பத்தைக் கொண்டிருக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தால், நீங்கள் வாழுமிடத்தில் இடைநிலைப்பள்ளி ஒன்று இருக்கிறதா என்பதை விசாரித்தறியலாம். இல்லையென்றால், அப்படிப்பட்ட இடமொன்றின் அருகில் இடமாறிச்செல்வது சாத்தியமாய் இருக்கலாம்.
பெற்றோர் நன்றாக அறிந்திருக்கும் வண்ணமாகவே, யெகோவாவிடமாக அன்பை புகட்டுவதற்கு திறமையும், பொறுமையும் அதிகமான நேரமும் தேவையாக இருக்கிறது. ஒரு பிள்ளை வீட்டிலிருக்கும்போதே இது கடினமாக இருக்குமானால், ஒரு பிள்ளை வெகு தூரத்தில் வாழ்ந்துகொண்டிருந்தால் இது எவ்வளவு அதிக கடினமாக இருக்கும்! பிள்ளையின் நித்திய ஜீவன் உட்பட்டிருப்பதால், ஆபத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் பிள்ளையை, விடுதி வசதியுள்ள ஒரு பள்ளியில் சேர்த்துவிடுவது தகுதியானதா என்பதை பெற்றோர் கருத்தோடும் ஜெபசிந்தையோடும் தீர்மானிக்க வேண்டும். விடுதி வசதியுள்ள ஒரு பள்ளி படிப்பின் நன்மைக்காக ஒரு பிள்ளையின் ஆவிக்குரிய அக்கறைகளை அடகு வைப்பது எத்தனை குறுகிய நோக்குடையதாக இருக்கும்! சொற்ப மதிப்புள்ள ஒரு நகையை காப்பாற்றுவதற்காக தீப்பற்றி எரியும் ஒரு வீட்டுக்குள் ஓடுவதைப் போல இது இருக்கும்—அக்கினி ஜூவாலைகளால் விழுங்கப்பட்டுவிடுவோம்.
கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 22:3) நிலைமை மோசமாகி பின் சரிசெய்வதைவிட வரும்முன் காப்பது மேலானது. ‘என்னுடைய பிள்ளை விடுதி வசதியுள்ள ஒரு பள்ளிக்குச் செல்லவேண்டுமா?’ என்பதாக உங்களையே நீங்கள் கேட்டுக்கொண்டால் அதைப்பற்றி சிந்திப்பது ஞானமாக இருக்கும்.
[பக்கம் 28-ன் பெட்டி]
விடுதி வசதியுள்ள பள்ளியைக்குறித்து இளம் சாட்சிகளின் கருத்து
“விடுதி வசதியுள்ள பள்ளியில் சாட்சிப்பிள்ளைகள் ஆவிக்குரிய கூட்டுறவிலிருந்து துண்டிக்கப்படுகிறார்கள். அது தவறு செய்வதற்கு அழுத்தங்கள் அதிகமிருக்கும் மிகவும் பகைமை உணர்ச்சியுள்ள ஒரு சூழலாக உள்ளது.”—ரோட்டிமி, 11 மற்றும் 14-க்கு இடைப்பட்ட வயதுகளில் விடுதி வசதியுள்ள பள்ளிக்குச் சென்றவர்.
“கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்வது அசாதாரணமாக கடினமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாத்திரமே நான் செல்லமுடியும், அதைச் செய்வதற்கு, சர்ச்சுக்குச் செல்ல மாணவர்கள் வரிசையில் நிற்கும் சமயம் பார்த்து நான் யாருக்கும் தெரியாமல் செல்ல வேண்டியதாக இருந்தது. நான் ஒருபோதும் சந்தோஷமாயிருக்கவில்லை, ஏனென்றால் வீட்டில் இருந்தபோது எல்லா சபை கூட்டங்களுக்கும் செல்லும் பழக்கமுள்ளவளாக நான் இருந்தேன், சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நான் வெளி ஊழியத்துக்கு சென்றுகொண்டிருந்தேன். பள்ளி கட்டியெழுப்பும் ஒரு அனுபவமாக இருக்கவில்லை. அநேக நன்மைகளை நான் பறிகொடுத்தவளாக இருந்தேன்.”—எஸ்தர், பள்ளி சர்ச் ஆராதனைகளில் கலந்துகொள்ளாத காரணத்தால் ஆசிரியர்களிடமிருந்து வழக்கமாக அடிவாங்கியவள்.
“விடுதி வசதியுள்ள பள்ளியில் சக மாணவர்களுக்கு சாட்சிகொடுப்பது சுலபமில்லை. வித்தியாசமானவராக தனித்து நிற்பதும் எளிதல்ல. நான் கும்பலைப் பின்பற்ற விரும்பினேன். என்னால் கூட்டங்களுக்குச் சென்று வெளி ஊழியத்தில் ஈடுபட முடிந்திருந்தால் ஒருவேளை நான் அதிக தைரியமுள்ளவளாக இருந்திருப்பேன். ஆனால் வருடத்துக்கு மூன்று முறை கிடைத்த விடுமுறை நாட்களில் மட்டுமே என்னால் அதை செய்யமுடிந்தது. எண்ணெய் மறுபடியுமாக நிரப்பப்படாத ஒரு விளக்கு உங்களிடம் இருந்தால், வெளிச்சம் மங்கலாகிவிடுகிறது. பள்ளியில் அதேவிதமாகவே இருந்தது.”—லாரா, 11 முதல் 16 வயது வரையாக விடுதி வசதியுள்ள பள்ளிக்கு சென்றவள்.
“விடுதி வசதியுள்ள பள்ளியில் இப்போது நான் இல்லாத காரணத்தால், எல்லா கூட்டங்களுக்கும் செல்லவும், வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளவும், குடும்பத்திலுள்ள மற்றவர்களோடு தின வாக்கியத்தை வாசித்து அனுபவிக்கவும் முடிவதைக் குறித்து நான் சந்தோஷப்படுகிறேன். பள்ளியில் தங்கியிருப்பதில் சில அனுகூலங்கள் இருந்தபோதிலும், யெகோவாவோடு எனக்குள்ள உறவைக் காட்டிலும் வேறு எதுவும் அதிக முக்கியமானதாக இல்லை.”—நயோமி, விடுதி வசதியுள்ள பள்ளியிலிருந்து தன்னை விலக்கிவிடும்படியாக தன் அப்பாவை தன்வழிக்குக் கொண்டுவந்தவள்.