கடவுள் என்னுடைய அடைக்கலமும் பெலனுமானவர்
ஷார்லோட் மியூலர் சொன்னபடி
ஹிட்லரின்கீழ் ஒன்பது ஆண்டுகள் நீங்கள் துன்பமனுபவித்தது நிச்சயமாகவே பாராட்டப்பட வேண்டிய காரியம்,” என்பதாக கம்யூனிஸ்ட் நீதிபதி கூறினார். “நீங்கள் உண்மையில் போருக்கு எதிராக இருந்தீர்கள், ஆனால் இப்பொழுது நீங்கள் எங்களுடைய சமாதான இயக்கத்துக்கு
எதிராக இருக்கிறீர்கள்!”
முன்னர் நான் நாசிக்களாலும் பின்னர் ஜெர்மன் குடியரசு குடியாட்சியில் சோஷியலிசம் காரணமாக சிறையிலடைக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். முதலில் நான் வாயடைத்துப்போனேன், ஆனால் பிறகு பின்வருமாறு பதிலளித்தேன்: “ஒரு கிறிஸ்தவன் உண்மையான சமாதானத்துக்காக மற்ற மக்கள் செய்கிற அதே விதத்தில் போராடுவது கிடையாது. கடவுளையும் என்னுடைய அயலாரையும் நேசிக்கும்படியாக சொல்லும் கடவுளுடைய கட்டளையைப் பின்பற்ற நான் வெறுமனே முயற்சிசெய்கிறேன். கடவுளுடைய வார்த்தை, சொல்லிலும் செயலிலும் சமாதானத்தைக் காத்துக்கொள்ள எனக்கு உதவிசெய்கிறது.”
அந்த நாளில், செப்டம்பர் 4, 1951 அன்று கம்யூனிஸ்டுகள் எனக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்கள்—நாசி ஆட்சி செய்ததைவிட ஓராண்டு காலம் குறைவாக.
தேசிய சோஷியலிஸ்டுகளாலும் கம்யூனிஸ்ட்டுகளாலும் யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் துன்புறுத்தப்பட்டபோது, சங்கீதம் 46:1 எனக்கு ஆறுதலளிப்பதை கண்டேன்: “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.” யெகோவா மாத்திரமே சகித்திருப்பதற்கு எனக்கு பெலத்தைக் கொடுத்தார், அவருடைய வார்த்தையை எவ்வளவு அதிகமாக சொந்தமாக்கிக்கொண்டேனோ அவ்வளவு அதிகமாக பலமுள்ளவளானேன்.
எதிர்காலத்துக்காக பலப்படுத்தப்படுதல்
நான் 1912-ல் ஜெர்மனியில், துரிங்கியாவிலுள்ள கோட்டா செப்ளேபெனில் பிறந்தேன். என்னுடைய பெற்றோர் புராட்டஸ்டன்டுகளாக இருந்தபோதிலும், என்னுடைய அப்பா பைபிள் சத்தியத்துக்காகவும் நீதியுள்ள ஒரு அரசாங்கத்துக்காகவும் தேடிக்கொண்டிருந்தார். “படைப்பின் நிழற்பட-நாடக”த்தை என்னுடைய பெற்றோர் பார்த்தபோது, அவர்கள் கிளர்ச்சியடைந்தார்கள்.a அப்பா அவர் தேடிக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்துவிட்டார்—தேவனுடைய ராஜ்யம்.
அப்பாவும் அம்மாவும், பிள்ளைகளாகிய நாங்கள் ஆறுபேரும் மார்ச் 2, 1923-ல் சர்ச்சிலிருந்து விலகிக் கொண்டோம். நாங்கள் சாக்சானியிலுள்ள கெம்நிட்சில் இருக்கும்போது, அங்கே பைபிள் மாணாக்கர்களோடு கூட்டுறவுகொண்டு வந்தோம். (என்னுடைய சகோதர சகோதரிகளில் மூன்று பேர் யெகோவாவின் சாட்சிகளாக மாறினார்கள்.)
பைபிள் மாணாக்கர்களின் கூட்டங்களில், பைபிள் வசனங்களும் அருமையான சத்தியங்களும் என்னை வெகுவாக கவர்ந்தன, இவை என்னுடைய இளம் இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பினது. 50-க்கும் மேற்பட்டவர்களாயிருந்த கிறிஸ்தவ வாலிபர்களான எங்களுக்கு ஞாயிறு அன்று விசேஷித்த போதனை கொடுக்கப்பட்டது, என்னுடைய அக்கா கேத்தியும் நானும் கொஞ்ச நாட்கள் இதைப்பெற்றுக்கொண்டோம். உல்லாசமாக நெடுந்தொலைவு நடந்துசெல்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து எங்களோடு பாடுவதற்கு பயிற்சிசெய்துகொண்டிருந்த இளம் கோன்ராட் ஃபிராங்கி எங்கள் தொகுதியில் இருந்தார். பின்னால், 1955 முதல் 1969 வரையாக, சகோதரர் ஃபிராங்கி ஜெர்மனியிலுள்ள உவாட்ச் டவர் கிளை காரியாலயத்தில் கண்காணியாக சேவைசெய்துவந்தார்.
1920-கள் கொந்தளிப்பான வருடங்களாக இருந்தன, சில சமயங்களில் கடவுளுடைய மக்களின் மத்தியிலும்கூட அவ்வாறு இருந்தது. காவற்கோபுர பத்திரிகையை ‘ஏற்றவேளையில் கொடுக்கப்படும் உணவாக’ சிலர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், அவர்கள் வீட்டுக்கு வீடு செய்யப்பட்ட பிரசங்க வேலையை எதிர்க்கிறவர்களாக இருந்தனர். (மத்தேயு 24:45) இது விசுவாசதுரோகத்துக்கு வழிநடத்தியது. ஆனால் இந்த “உணவு”தானே அந்தச் சமயத்தில் எங்களுக்கு வெகுவாக தேவைப்பட்ட பலத்தை கொடுத்தது. உதாரணமாக, “பயமில்லாதவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” (1919), “யார் யெகோவாவை கனம்பண்ணுவார்?” (1926) போன்ற கட்டுரைகள் வந்தன. தைரியத்தோடு செயல்படுவதன் மூலமாக நான் யெகோவாவைக் கனப்படுத்த விரும்பினேன், ஆகவே நான் சகோதரர் ரதர்ஃபோர்ட்டின் அநேக புத்தகங்களையும் சிறு புத்தகங்களையும் விநியோகித்தேன்.
யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக நான் மார்ச் 1933-ல் முழுக்காட்டப்பட்டேன். அதே வருடத்தில், எங்களுடைய சுவிசேஷ வேலைக்கு ஜெர்மனியில் தடைவிதிக்கப்பட்டது. முழுக்காட்டுதலின்போது, வெளிப்படுத்துதல் 2:10 எதிர்காலத்திற்குரிய அறிவுரையாக கொடுக்கப்பட்டது: “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.” எனக்குக் கடினமான சோதனைகள் காத்திருந்தன என்பதைக் குறித்து சந்தேகமில்லாதவளாக நான் இந்த வசனத்தின்பேரில் ஆழமாக தியானம்செய்தேன். இது உண்மையாக இருந்தது.
அரசியல் சம்பந்தமாக நாங்கள் நடுநிலையைக் காத்துக்கொண்டதால், அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் அநேகர் எங்களை சந்தேகக் கண்ணோடு பார்த்தார்கள். ஒரு அரசியல் தேர்தலுக்குப் பின், சீருடையிலிருந்த நாசி காவலாளர்கள் எங்கள் வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு “துரோகிகள் இங்கே வசிக்கிறார்கள்!” என்பதாக கத்தினார்கள். டிசம்பர் 1933-ல் காவற்கோபுர பத்திரிகையின் ஜெர்மன் பதிப்பில் வெளியாகியிருந்த “அவர்களுக்கு பயப்படவேண்டாம்” என்ற கட்டுரை எனக்கு விசேஷமாக உற்சாகமளிப்பதாய் இருந்தது. மிக மோசமான சூழ்நிலைமைகளின்கீழும்கூட நான் யெகோவாவுக்கு உண்மையுள்ள ஒரு சாட்சியாக நிலைத்திருக்க விரும்பினேன்.
விரோதியின் பரிகாரம்—சிறைச்சாலை
1935-ன் இலையுதிர் காலம் வரையாக கெம்நிட்சில் இரகசியமாக எங்களால் காவற்கோபுர பத்திரிகையின் பிரதிகளை தயாரிக்க முடிந்தது. அதற்குப்பின்னர் இதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ட்யூப்ளிகேட்டிங் மெஷினை ஓர் (Ore) மெளண்டன்ஸில் உள்ள பையர்ஃபெல்ட்டுக்கு எடுத்து செல்லவேண்டியதாயிற்று. அங்கே ஆகஸ்ட் 1936 வரையாக இலக்கியங்களை திரும்ப தயாரிக்க அது பயன்படுத்தப்பட்டது. கேத்தியும் நானும், அப்பா எங்களிடம் கொடுத்திருந்த சகோதரர்களின் விலாசங்களில் பிரதிகளை விநியோகித்தோம். சிறிது காலம் எல்லாம் சுமுகமாக இருந்தது. ஆனால் அதற்குப்பின் ஜெர்மனின் இரகசிய போலீஸ் தொடர்ந்து என்னைக் கண்காணித்து, ஆகஸ்ட் 1936-ல் என்னை என்னுடைய வீட்டில் கைதுசெய்தனர்; விசாரணைக்காக காவலில் காத்துக்கொண்டிருந்தேன்.
பிப்ரவரி 1937-ல், என்னையும் சேர்த்து 25 சகோதரர்களும் 2 சகோதரிகளும் சாக்சானியில் ஒரு விசேஷித்த நீதிமன்றத்துக்கு முன்பாக ஆஜர்படுத்தப்பட்டோம். யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பு தேசவிரோதமானது என்பதாக உறுதியாக சொல்லப்பட்டது. காவற்கோபுர பத்திரிகையைப் பிரதிகள் எடுத்த சகோதரர்கள் ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனைப் பெற்றனர், நான் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டேன்.
என்னுடைய தண்டனைக்காலம் முடிவடைந்தப் பின்பும் விடுதலைசெய்யப்படுவதற்குப் பதிலாக இரகசிய போலீஸால் அழைத்துச் செல்லப்பட்டேன். யெகோவாவின் ஒரு சாட்சியாக நான் இனிமேலும் வேலைசெய்ய மாட்டேன் என்பதாக குறிப்பிட்டிருந்த ஒரு அறிக்கையில் கையெழுத்துப்போடும்படி எதிர்பார்க்கப்பட்டேன். நான் உறுதியாக மறுத்தபோது, அந்த அதிகாரி கடுஞ்சினம் கொண்டு குதித்தெழுந்து என்னை காவலில் வைக்கும்படியாக உத்தரவுபோட்டார். உத்தரவு பத்திரம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. என்னுடைய பெற்றோரைப் பார்க்க அனுமதிக்கப்படாமல் நான் உடனடியாக எல்பி நதிக்கரையில் லிக்டென்பர்க்கில் மகளிருக்கென இருந்த ஒரு சிறிய சித்திரவதை முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டேன். அதற்குப்பின் விரைவில் நான் கேத்தியைச் சந்தித்தேன். டிசம்பர் 1936 முதற்கொண்டு அவள் மாரின்ஜெனிலுள்ள சித்திரவதை முகாமில் இருந்திருக்கிறாள், ஆனால் அந்தச் சித்திரவதை முகாம் மூடப்பட்ட போது, அவளும் மற்ற அநேக சகோதரிகளும் லிக்டென்பர்க்கிற்கு வந்தார்கள். என்னுடைய அப்பாவும்கூட காவலில் வைக்கப்பட்டிருந்தார், 1945 வரையாக மறுபடியும் அவரை நான் பார்க்கவே இல்லை.
லிக்டென்பர்க்கில்
மற்ற பெண் சாட்சிகளோடு சேர்ந்திருப்பதற்கு நான் உடனடியாக அனுமதிக்கப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் வேறு காரணங்களுக்காக தண்டிக்கப்பட்டு வந்தார்கள். அறைகள் ஒன்றில் நான் இரண்டு தொகுதியான கைதிகளைக் கவனித்தேன்—மேசைகளில் பொதுவாக அமர்ந்திருந்த பெண்களும், முழு நாளும் ஸ்டூல்களில் உட்கார்ந்துகொண்டு, சாப்பிடுவதற்கு எதுவுமே கொடுக்கப்படாத சாட்சி பெண்களும்.b
எப்படியாவது கேத்தியை சந்திக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் எந்த வேலையையும் செய்ய நான் தயங்காமல் ஒப்புக்கொண்டேன். சரியாக இதுவே நடந்தது. மற்ற இரண்டு கைதிகளோடு அவள் வேலைக்குப் போய்க்கொண்டிருந்த போது நான் அவளை நேரில் சந்தித்தேன். சந்தோஷம் பொங்க, நான் அவளை இறுக அணைத்துக்கொண்டேன். ஆனால் அங்கிருந்த பெண் காவலர் உடனடியாக எங்களைப் பற்றி புகார் செய்துவிட்டார். நாங்கள் விசாரிக்கப்பட்டோம், அப்போது முதற்கொண்டு நாங்கள் வேண்டுமென்றே பிரித்து வைக்கப்பட்டோம். அது மிகவும் வேதனையாக இருந்தது.
லிக்டென்பர்க்கில் நடந்த மற்ற இரண்டு சம்பவங்கள் என்னால் மறக்கமுடியாதவை. ஒரு சந்தர்ப்பத்தில் வானொலியில் ஹிட்லரின் அரசியல் பேச்சுக்களைக் கேட்பதற்காக எல்லா கைதிகளும் முற்றத்தில் கூடிவர வேண்டியதாக இருந்தது. யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் அதை மறுத்துவிட்டோம், ஏனென்றால் தேசப்பக்திக்குரிய சடங்குகள் அதில் உட்பட்டிருந்தன. ஆகவே காவலர்கள் தீயணைப்பு குழாய்களை எங்கள்மீது திருப்பிவிட்டு, பிரதான குழாய் ஒன்றிலிருந்து வேகமாக வந்த தண்ணீரை எங்கள்மீது பாய்ச்சி, தப்பித்துக்கொள்ள முடியாதவர்களாக இருந்த பெண்களாகிய எங்களை நான்காவது மாடியிலிருந்து முற்றம்வரையாக துரத்திக்கொண்டு வந்தார்கள். அங்கே சொட்ட சொட்ட தண்ணீரில் நனைந்தவர்களாக நாங்கள் நிற்கவேண்டியதாக இருந்தது.
மற்றொரு சந்தர்ப்பத்தில் ஹிட்லரின் பிறந்த நாள் நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, கட்ருட் ஓமி மற்றும் கெர்டெல் பியூர்லென் என்ற பெண்களோடுகூட சேர்ந்து படைத்தலைவரின் தலைமைக் காரியாலயத்தை விளக்குகளால் அலங்கரிக்கும்படியாக எனக்கு உத்தரவிட்டார்கள். சிறிய காரியங்களில் ஒத்திணங்கிச் செல்ல செய்விப்பதன் மூலம் எங்களுடைய உத்தமத்தை முறித்துப்போட சாத்தான் கையாளும் தந்திரங்களை உணர்ந்தவர்களாய் நாங்கள் மறுத்துவிட்டோம். இதற்கு தண்டனையாக, இளம் சகோதரிகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும் அடுத்த மூன்று வாரங்களை தனித்தனியே சிறிய இருட்டான ஒரு சிறையில் கழிக்கவேண்டியதாயிற்று. ஆனால் யெகோவா எங்களுக்கு அருகில் இருந்தார், இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான இடத்திலும்கூட அவர் ஒரு அடைக்கலமாக நிரூபித்தார்.
ரேவன்ஸ்பர்க்கில்
மே 1939-ல் லிக்டென்பர்க்கிலிருந்த கைதிகள் ரேவன்ஸ்பர்க் சித்திரவதை முகாமுக்கு மாற்றப்பட்டார்கள். அங்கே மற்ற அநேக சாட்சி பெண்களோடுகூட சலவைச்சாலையில் வேலை செய்யும்படி அனுப்பப்பட்டேன். போர் துவங்கிய கொஞ்ச காலத்துக்குப் பின்னர் நாங்கள் ஸ்வஸ்திக் சின்னமுள்ள கொடியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டோம், அதைச் செய்ய நாங்கள் மறுத்துவிட்டோம். இதன் விளைவாக, மெல்கென் எர்னஸ்டும் நானும் சிப்பாய்கள் வசிக்கும் இடத்துக்கு அனுப்பப்பட்டோம். அதுவே மிகவும் கடுமையான ஒரு தண்டனையாக இருந்தது, ஒவ்வொரு நாளும், ஞாயிற்றுக்கிழமையிலும்கூட, வானிலை எப்படி இருந்தாலும் கஷ்டமான வேலையைச் செய்வதை அது அர்த்தப்படுத்தியது. சாதாரணமாக, அதிகபட்ச தண்டனை மூன்று மாதங்களாக இருந்தன, ஆனால் நாங்கள் அங்கே ஒரு வருடத்துக்கு இருந்தோம். யெகோவாவின் உதவி இல்லாவிட்டால் நான் ஒருபோதும் உயிரோடிருந்திருக்க மாட்டேன்.
1942-ல் கைதிகளாகிய எங்களுக்கு நிலைமை ஓரளவு இலகுவாக இருந்தது, முகாமுக்கு அருகே சிறப்பு காவல் படையைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் வீட்டு வேலைகள் செய்யும் வேலை எனக்குக்கொடுக்கப்பட்டது. அந்தக் குடும்பம் எனக்கு ஓரளவான சுயாதீனத்தை அனுமதித்தார்கள். உதாரணமாக, ஒருசமயம் நான் அவர்கள் பிள்ளைகளை வெளியே அழைத்துக்கொண்டு சென்றபோது, ஊதா வர்ணத்தில் முக்கோண சின்னத்தை அணிந்திருந்த யூசெஃப் ரேவால்ட், காட்ஃபெரிட் மால்ஹார்ன் என்ற இரண்டு கைதிகளைச் சந்தித்து அவர்களோடு உற்சாகமூட்டும் சில வார்த்தைகளை என்னால் பகிர்ந்துகொள்ள முடிந்தது.c
போருக்குப் பிற்பட்ட கடினமான வருடங்கள்
1945-ல் நேச நாடுகளின் படைகள் நெருங்கிவந்தபோது, நான் வேலை பார்த்துவந்த அந்தக் குடும்பம் தப்பியோடியது, நானும் அவர்களோடு செல்லவேண்டியதாயிற்று. மற்ற சிறப்பு காவல் படையினரின் குடும்பங்களோடு சேர்ந்து அவர்கள் அனைவரும் ஒரு தொகுதியாக மேற்கு திசையை நோக்கி பயணப்பட்டார்கள்.
போர் நடந்துக்கொண்டிருந்த அந்தக் கடைசி சில நாட்கள் குழப்பமும் ஆபத்துக்களும் நிறைந்ததாக இருந்தன. கடைசியாக, நாங்கள் ஒரு சில அமெரிக்க படைவீரர்களைச் சந்தித்தோம், அவர்கள் அடுத்தப் பட்டணத்தில் விடுதலையான ஒரு நபராக என்னைப் பதிவுசெய்துகொள்ள அனுமதி கொடுத்தனர். அங்கே நான் யாரைச் சந்தித்தேன்? யூசெஃப் ரேவால்ட் மற்றும் காட்ஃபெரிட் மால்ஹார்ன். சாக்சென்ஹாசனில் சித்திரவதை முகாமிலிருந்த எல்லா சாட்சிகளும் ஆபத்தான ஒரு மரண அணிவகுப்பியக்கத்தைத் தொடர்ந்து ஷிவேரினை அடைந்த செய்தியை அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். ஆகவே நாங்கள் மூவரும் சுமார் 75 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த அந்தப் பட்டணத்துக்குப் புறப்பட்டோம். கோன்ராட் ஃபிராங்கி உட்பட சித்திரவதை முகாம்களிலிருந்து தப்பிவந்திருந்த அந்த எல்லா உண்மையுள்ள சகோதரர்களையும் ஷிவேரினில் சந்திப்பது எத்தனை மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
டிசம்பர் 1945-க்குள் என்னால் இரயிலில் பிரயாணம் செய்ய முடிகிற அளவுக்கு தேசத்தில் நிலைமை முன்னேறியிருந்தது. ஆகவே நான் வீட்டைநோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன்! இருந்தபோதிலும், ரயில் பெட்டியின் மேல்தளத்தில் ஏறிப் படுத்துக்கொண்டும், படிக்கட்டில் நின்றுகொண்டும் நான் பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. கெம்நிட்சில், இரயில் நிலையத்தில் இறங்கி நாங்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்துவந்த இடத்தை நோக்கிச் சென்றேன். ஆனால் தெருவில் ஒரு சமயம் நாசி காவலாளர்கள் “துரோகிகள் இங்கே வசிக்கிறார்கள்!” என்பதாக கத்திக்கொண்டு நின்ற இடத்தில் ஒரு வீடும்கூட இல்லை. முழு குடியிருப்பு பகுதியும் வெடி குண்டினால் தகர்க்கப்பட்டு முழுவதுமாக அழிக்கப்பட்டிருந்தது. ஆனால் அம்மா, அப்பா, கேத்தி, என்னுடைய சகோதர சகோதரிகள் இன்னும் உயிரோடிருந்ததைக் கண்டு நான் நிம்மதியடைந்தேன்.
போருக்குப் பின் இருந்த ஜெர்மனியில் பொருளாதார நிலைமை அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது. இருந்தபோதிலும், கடவுளுடைய மக்களின் சபைகள் ஜெர்மனி முழுவதிலுமாக எல்லா இடங்களிலும் செழித்து வளர ஆரம்பித்தன. பிரசங்க வேலைக்கு எங்களைத் தயார்செய்வதற்காக உவாட்ச் டவர் சொஸைட்டி சாத்தியமான அனைத்தையும் செய்தது. நாசிக்கள் மூடிவிட்டிருந்த மேக்டிபர்க்கிலுள்ள பெத்தேலில் மறுபடியுமாக வேலை ஆரம்பமானது. 1946-ன் வசந்த காலத்தில் நான் அங்கே வேலை செய்வதற்காக அழைக்கப்பட்டு சமையலறையில் வேலை கொடுக்கப்பட்டேன்.
தடையுத்தரவின்கீழும் காவலிலும் இன்னும் ஒரு முறை
மேக்டிபர்க் என்பது கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்த ஜெர்மனியின் ஒரு பகுதியில் இருக்கிறது. அவர்கள் 1950, ஆகஸ்ட் 31-அன்று எங்களுடைய வேலைக்கு தடையுத்தரவு போட்டு மேக்டிபர்க் பெத்தேலை மூடிவிட்டார்கள். மதிப்புள்ள பயிற்சியை அளித்த ஒரு சமயமாக இருந்த பெத்தேலில் என்னுடைய பணி இப்படியாக முடிவுக்கு வந்தது. கம்யூனிஸ்டுகளின்கீழும்கூட சத்தியத்தை இறுகப்பற்றிக் கொண்டு துன்பத்திலுள்ள மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கையான கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்பதற்கு தீர்மானித்தவளாக நான் கெம்நிட்சுக்கு திரும்பினேன்.
ஏப்ரல் 1951-ல், காவற்கோபுர பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு சகோதரருடன் பெர்லினுக்கு பயணம்செய்தேன். நாங்கள் திரும்பிவந்தபோது, கெம்நிட்சிலிருந்த இரயில் நிலையத்தை இராணுவத்தைச் சாராத போலீஸ் சூழ்ந்திருப்பதைக் கண்டு நாங்கள் பயந்துபோனோம். அவர்கள் சந்தேகமில்லாமல் எங்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டோம்.
விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்ட சமயத்தில், நாசிக்களால் பல ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டதற்கு சான்றாக இருந்த ஆவணங்களை என் கைவசம் வைத்திருந்தேன். இதன் விளைவாக, காவலாளர்கள் என்னை மரியாதையுடன் நடத்தினார்கள். தலைமை மகளிர் காவலாளி இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகளாகிய நீங்கள் குற்றவாளிகள் அல்ல; சிறைச்சாலை உங்களுக்குரிய இடமல்ல.”
ஒரு சமயம் அவர்கள், மற்ற இரண்டு சகோதரிகளோடு நான் தங்கியிருந்த என்னுடைய சிறை அறைக்கு வந்து ஒரு படுக்கையின்கீழ் இரகசியமாக எதையோ வைத்துவிட்டுப் போனார்கள். அது என்ன? அவர்கள் எங்களுக்கு வைத்துக்கொள்ளும்படியாக கொடுத்த அவர்களுடைய சொந்த பைபிள். மற்றொரு சந்தர்ப்பத்தில், அவர்கள் என்னுடைய பெற்றோர் சிறைக்கு அருகில் வசித்துக்கொண்டிருந்தபடியால் வீட்டுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தார்கள். காவற்கோபுர பத்திரிகையின் சில பிரதிகளையும் கொஞ்சம் உணவையும் தன் உடலினுள் மறைத்து வைத்து எல்லாவற்றையும் என்னுடைய சிறை அறைக்குள் கடத்திவந்தார்கள்.
நான் நினைவுபடுத்திப் பார்க்க விரும்பும் மற்றொன்றும் இருக்கிறது. சில சமயங்களில் ஞாயிறு காலையில், நாங்கள் அத்தனை சப்தமாக எங்களுடைய தேவராஜ்ய பாடல்களைப் பாடியதால் ஒவ்வொரு பாட்டுக்கும் மற்ற கைதிகள் சந்தோஷமாக கைத்தட்டினார்கள்.
யெகோவாவிடமிருந்து பெலனும் உதவியும்
செப்டம்பர் 4, 1951 அன்று நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்தை நீதிபதி சொன்னார். வால்ட்ஹிமிலும், பின்னர் ஹேலியிலும் கடைசியாக ஹோயநெக்கிலும் நான் சிறை தண்டனையை அனுபவித்தேன். யெகோவாவின் சாட்சிகளாகிய எங்களுக்கு எவ்விதமாக கடவுள் அடைக்கலமாகவும் பெலனுமாகவும் இருந்தார் என்பதையும் அவருடைய வார்த்தை எவ்விதமாக எங்களை திடப்படுத்தியது என்பதையும் ஓரிரண்டு சுருக்கமான சம்பவங்கள் காண்பிக்கும்.
வால்ட்ஹிமிலிருந்த சிறைச்சாலையில், கிறிஸ்தவ கூட்டங்களை நடத்துவதற்கேதுவாக எல்லா சாட்சி சகோதரிகளும் ஒரு அறையில் ஒழுங்காக ஒன்றுகூடினோம். பென்சிலும் பேப்பரும் அனுமதிக்கப்படவில்லை, ஆனால் “பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவைத் தொழுதுகொள்ளுங்கள்,” என்ற 1953-ம் ஆண்டுக்குரிய வாக்கியத்தைக் கொண்ட ஒரு சிறிய பேனரை சில சகோதரிகள் எப்படியோ ஒரு சில துண்டு துணிகளைக்கொண்டு செய்தார்கள்.—சங்கீதம் 29:2, அமெரிக்கன் ஸ்டான்டர்டு வர்ஷன்.
மகளிர் காவலாளி ஒருவர் எங்களைக் கையும் களவுமாக பிடித்து தாமதமின்றி எங்களைப்பற்றி புகார் செய்துவிட்டார். சிறைச்சாலையின் தலைவர் வந்து சகோதரிகளாகிய எங்கள் இருவரிடம் அந்தப் பேனரை உயரமாக தூக்கிப் பிடிக்கும்படியாகச் சொன்னார். “யார் இதைச் செய்தார்?” என்பதாக அவர் அதிகாரத்துடன் கேட்டார். “இதற்கு அர்த்தம் என்ன?”
சகோதரிகளில் ஒருத்தி எங்களுக்காக பழியை தன்மீது ஏற்றுக்கொள்ள விரும்பினாள், ஆனால் நாங்கள் உடனடியாக எங்களுக்குள் மெதுவாக பேசிக்கொண்டு பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொண்டோம். ஆகவே நாங்கள், “எங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காக நாங்கள் இதைச் செய்தோம்,” என்பதாக பதிலளித்தோம். அந்தப் பேனர் கைப்பற்றப்பட்டது, தண்டனையாக எங்களுக்கு சாப்பாடு தரப்படவில்லை. இந்த விசாரணை முடியும் வரையாக உற்சாகமூட்டிய அந்த வசனத்தை எங்களுடைய மனங்களில் பதிய வைப்பதற்காக சகோதரிகள் அதைத் தூக்கிப் பிடித்த வண்ணமாகவே இருந்தார்கள்.
வால்ட்ஹிமிலிருந்த மகளிர் சிறைச்சாலை மூடப்பட்டபோது, சகோதரிகளாகிய நாங்கள் ஹேலிக்கு மாற்றப்பட்டோம். இங்கே பொட்டலங்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டோம், என்னுடைய அப்பா எனக்கு அனுப்பிவைத்த ஒரு ஜோடி செருப்பினுள் என்ன தைத்து வைக்கப்பட்டிருந்தது? காவற்கோபுர கட்டுரைகள். “உண்மையான அன்பு நடைமுறையானது,” மற்றும் “பொய்கள் ஜீவனை இழப்பதற்கு வழிநடத்துகிறது” என்ற தலைப்புகள் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. இந்தக் கட்டுரைகளும் மற்ற கட்டுரைகளும் உண்மையில் ருசியான பண்டங்களாக இருந்தன, இதை இரகசியமாக நாங்கள் ஒருவர் மற்றவரிடமாக கடத்தியபோது, ஒவ்வொருவரும் சொந்தமாக குறிப்பெடுத்துக்கொண்டோம்.
ஒரு திடீர் சோதனையின்போது, காவலாளிகளில் ஒருவர் என்னுடைய வைக்கோல் மெத்தையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொந்த குறிப்புகளை கண்டுபிடித்துவிட்டார். பின்னால், அவர்கள் விசாரணைக்காக என்னை அழைத்து “யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களுக்கு 1955-க்கான எதிர்பார்ப்புகள்” என்ற கட்டுரையின் அர்த்தத்தை தான் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். கம்யூனிஸ்ட்டாக இருந்த அவர்கள், 1953-ல் தன்னுடைய தலைவர் ஸ்டாலினின் மரணத்தைக் குறித்து மிகவும் கவலையாக இருந்திருக்கிறார்கள், எதிர்காலம் இருண்டதாக அவர்களுக்குத் தோன்றியது. எங்களுக்கோ, சிறைச்சாலையில் எங்களுடைய நிலைமைகளில் ஒரு சில முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் இருக்கும், ஆனால் அதை இன்னும் அறியாதவளாக நான் இருந்தேன். யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிர்கால நம்பிக்கை மிகச் சிறப்பானது என்பதை நான் உறுதியாக விளக்கினேன். ஏன்? கட்டுரையின் தலைப்பு வசனத்தை, சங்கீதம் 112:7-ஐ நான் மேற்கோள் காண்பித்தேன்: “துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.”—AS.
யெகோவா என்னுடைய அடைக்கலமும் பெலனுமாய் நிலைத்திருக்கிறார்
கவலைக்குரிய சுகவீனத்தின் காரணமாக என்னுடைய சிறை தண்டனை முடிவுக்கு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே மார்ச் 1957-ல் நான் விடுதலை செய்யப்பட்டேன். யெகோவாவின் சேவையில் என்னுடைய நடவடிக்கைகளின் காரணமாக கிழக்கு ஜெர்மன் அதிகாரிகள் மறுபடியும் எனக்கு கஷ்டங்களைக் கொடுத்தனர். ஆகவே மே 6, 1957-ல் நான் மேற்கு பெர்லினுக்குத் தப்பிச்செல்லும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். பின்பு அங்கிருந்து மேற்கு ஜெர்மனிக்கு இடம் மாறிச் சென்றேன்.
என்னுடைய சரீர சுகத்தை மீண்டும் பெறுவதற்கு பல ஆண்டுகள் எடுத்தன. ஆனால் இந்நாள் வரையாக எனக்கு ஆரோக்கியமான ஆவிக்குரிய பசியுணர்வு இருக்கிறது, ஒவ்வொரு புதிய காவற்கோபுர பிரதிக்காகவும் நான் ஆவலாய் காத்திருக்கிறேன். அவ்வப்போது நான் என்னை ஆராய்ந்துப் பார்த்துக்கொள்கிறேன். நான் இன்னும் ஆவிக்குரிய சிந்தையுள்ளவளாக இருக்கிறேனா? நான் நற்பண்புகளை வளர்த்திருக்கிறேனா? என்னுடைய விசுவாசத்தின் பரிட்சிக்கப்பட்டத் தன்மை யெகோவாவுக்குத் துதியையும் கனத்தையும் கொண்டுவருகிறதா? கடவுள் என்றென்றுமாக என்னுடைய அடைக்கலமும் பெலனுமாய் நிலைத்திருப்பதற்கு எல்லாவற்றிலேயும் அவரைப் பிரியப்படுத்துவதே என்னுடைய இலக்காக இருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a ஸ்லைடுகளையும் இயங்கும் படங்களையும் “நிழற்பட-நாடகம்” கொண்டிருந்தது; 1914 முதல் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் பிரதிநிதிகளால் பரவலாக காண்பிக்கப்பட்டு வந்தது.
b லிக்டென்பர்க்கில் நாசி பாடல்கள் இசைக்கப்பட்டபோது கனத்துக்குரிய ஒரு சைகையைச் செய்ய மறுத்த காரணத்தால், ஒரு சமயம் 14 நாட்களுக்கு யெகோவாவின் சாட்சிகளாயிருந்த பெண்களுக்கு பகல் உணவு கொடுக்கப்படாமலிருந்ததை ஸ்விட்ஸர்லாந்திலுள்ள பெர்னில் உவாட்ச் டவர் சொஸைட்டியால் வெளியிடப்பட்ட டிராஸ்ட் பத்திரிகை (ஆறுதல்), மே 1, 1940 பக்கம் 10-ல் அறிவிப்பு செய்தது. அங்கே 300 யெகோவாவின் சாட்சிகள் இருந்தனர்.
c யூசெஃப் ரேவால்ட் பற்றிய ஒரு அறிக்கை பிப்ரவரி 8, 1993, பக்கங்கள் 20-3 ஆங்கில விழித்தெழு!-வில் வெளியானது.
[பக்கம் 26-ன் படம்]
ரவன்ஸ்பர்க்கில் SS அலுவலகம்
[பக்கம் 26-ன் படம்]
முகாமுக்கு வெளியே வேலைசெய்ய என்னுடைய அனுமதி சீட்டு
[பக்கம் 26-ன் படம்]
மேலே: Stiftung Brandenburgische Gedenkstätten