தவறான உள்நோக்கம் கற்பிப்பதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்
பிரபல தொலைக்காட்சி சுவிசேஷகர் ஒருவர் தன்னுடைய சக பிரசங்கியார் விபச்சாரம் செய்ததற்காக அவரை கடுமையாக சாடினார். ஆனால், ஒரு வருஷத்திற்குள்ளாகவே, குற்றம்சாட்டிய அந்த சுவிசேஷகரே ஒரு விபச்சாரியுடன் சரசமாடிக்கொண்டிருக்கையில் எதிர்பாரா விதமாக பிடிபட்டார்.
மற்றொரு விஷயத்தில், சமாதான பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போரிடும் கும்பல்களை அழைத்துவர முன்னணி உலக வல்லரசு ஒன்று இரகசிய தூதுவர்களை அனுப்பியது. இதற்கிடையில், அதே நாடு, கோடிக்கணக்கான மதிப்புமிக்க ஆயுதங்களை விற்பனை செய்ய அதன் வியாபாரிகளை இரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியது.
அப்பட்டமான மாய்மாலம் அவ்வளவு பரவலாக ஆகியிருப்பதால், நம்பிக்கையின் இடத்தை சந்தேகவாதம் பிடித்துக்கொண்டதில் ஏதாவது ஆச்சரியமுண்டா? பிறருடைய உள்நோக்கத்தை கேள்விகேட்பதே அநேகருக்கு ஊறிப்போன பழக்கமாகிவிட்டது.
கிறிஸ்தவர்களாக, உண்மையுள்ள சக விசுவாசிகளுடன் கொண்டுள்ள நம் உறவை இப்படிப்பட்ட மனப்பான்மைகள் பாதிக்க அனுமதிக்காதவாறு கவனமாயிருக்க வேண்டும். நம்முடைய விரோதிகள் மத்தியில் இருக்கும்போது ‘சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாய்’ இருக்கும்படி இயேசு கிறிஸ்து நம்மை உந்துவித்தபோதிலும், தம்மை உண்மையாய் பின்பற்றுகிறவர்கள்மீது சந்தேகப்பட வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. (மத்தேயு 10:16) அப்படியானால், மற்றவர்கள்மீது தவறான உள்நோக்கம் கற்பிப்பதால் வரும் ஆபத்துக்கள் யாவை? இப்படிப்பட்ட மனப்பான்மையைத் தவிர்ப்பதற்கு நாம் எந்த அம்சங்களில் முக்கியமாக கவனமாயிருக்க வேண்டும்? உடன் கிறிஸ்தவர்களோடு வைத்திருக்கும் நம்முடைய அருமையான உறவை எவ்வாறு நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்?
கடந்தகாலத்திலிருந்து ஒரு பாடம்
நியாயமான காரணமில்லாமல் மற்றவர்கள்மீது தவறான உள்நோக்கம் கற்பிப்பது அவர்களைத் தீர்ப்புசெய்வதற்கு சமமாகும். இது, அவர்களுடைய வார்த்தைகளோ அல்லது செயல்களோ ஏதோ தந்திரமிக்க, தீய எண்ணம் மறைந்துள்ள சூழ்ச்சி என்று முன்கூட்டியே முடிவுசெய்துவிடுவதைப் போல இருக்கிறது. பெரும்பாலும் காரியங்களை தவறான கண்ணோட்டத்தில் காண்பதில்தான் உண்மையில் பிரச்சினையே உள்ளது; யோசுவா 22-ம் அதிகாரத்தில் காணப்படும் பைபிள் விவரப்பதிவிலிருந்து இதைக் காணலாம்.
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை இஸ்ரவேலர் வென்று, இப்போதுதான் தங்கள் கோத்திர பிராந்தியங்களைப் பெற்றிருந்தார்கள். ரூபன், காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் யோர்தான் நதிக்கு அருகில் “பார்வைக்குப் பெரிதான” ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள். இது விசுவாசதுரோக செயல் என மற்ற கோத்திரத்தார் தவறாக நினைத்துக்கொண்டார்கள். வணக்கத்திற்காக நியமிக்கப்பட்ட இடமாகிய சீலோவில் உள்ள ஆசரிப்புக் கூடாரத்திற்குப் போவதற்குப் பதிலாக, பலி செலுத்துவதற்காக இந்த மூன்று கோத்திரத்தாரும் இந்தப் பெரிதான பலிபீடத்தைப் பயன்படுத்தப் போகிறார்கள் என கருதப்பட்டது. குற்றம்சாட்டும் கோத்திரத்தார் உடனடியாக போருக்கான ஆயத்தங்களைச் செய்தார்கள்.—யோசுவா 22:10-12.
பினெகாசை தலைமையாகக் கொண்ட அதிகாரப்பூர்வமான ஒரு பிரதிநிதிக் குழுவை அனுப்பி இஸ்ரவேல சகோதரர்களுடன் அவர்கள் பேச்சுத்தொடர்பு கொண்டது பாராட்டத்தக்கது. உண்மைத்தன்மை இல்லாமை, கலகம், யெகோவாவுக்கு விரோதமான விசுவாசதுரோகம் போன்ற குற்றச்சாட்டுகளைக் கேட்டு, தவறிழைத்தாக கூறப்படும் கோத்திரத்தார் இந்தப் பெரிய பலிபீடத்திற்கான தங்களுடைய காரணத்தை விளக்கினார்கள். அது பலிசெலுத்துவதற்கான ஒரு பலிபீடமாக இல்லாமல், யெகோவாவை வணங்குவதில் இஸ்ரவேல கோத்திரத்தாரின் ஐக்கியத்திற்கு ‘ஒரு சாட்சியாய்’ இருப்பதற்காகவே கட்டப்பட்டது. (யோசுவா 22:26, 27) தங்கள் சகோதரர்கள்மீது எந்தவித தவறுமில்லை என்ற திருப்தியுடன் அந்தப் பிரதிநிதிக் குழு வீடு திரும்பியது. இவ்விதமாய் ஓர் உள்நாட்டுப் போரும் பயங்கரமான இரத்தம் சிந்துதலும் தடுக்கப்பட்டன.
அவசரப்பட்டு மற்றவர்கள்மீது தவறான உள்நோக்கம் கற்பிக்காமலிருப்பதற்கு நமக்கு என்னே ஒரு பாடம்! வெறும் மேலோட்டமான பார்வைக்கு உண்மையானவை போல பெரும்பாலும் தோன்றுகிற விஷயங்கள், கூர்ந்து ஆராய்கையில் முற்றிலும் வித்தியாசமாக காணப்படுகின்றன. ஒரு கிறிஸ்தவருடைய வாழ்க்கையின் அநேக அம்சங்களில் இது உண்மையாக இருக்கிறது.
மூப்பர்களைப் பற்றிய நமது நோக்குநிலை
மூப்பர்கள் “[தேவனுடைய] சபையை மேய்ப்பதற்கான” தங்களுடைய உத்தரவாதத்தை நிறைவேற்றுவதில், சபையிலுள்ள பல்வேறு ஆட்களுக்கு சிலசமயங்களில் ஆலோசனை கொடுப்பதை அவசியமாக காண்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:28) உதாரணமாக, கெட்ட கூட்டுறவு அல்லது எதிர்பாலார் ஒருவருடன் மோசமான நடத்தை போன்ற காரியங்கள் சம்பந்தமாக நம்முடைய பிள்ளைகளைப் பற்றி நம்மிடம் ஒரு மூப்பர் பேசுவாராகில் நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்? மறைவான ஒரு உள்நோக்கம் அவருக்கு இருப்பதாய் நினைத்துக்கொண்டு, ‘எங்க குடும்பமென்றாலே அவருக்கு பிடிக்கவே பிடிக்காதே’ என்று மனதிற்குள்ளாகவே சொல்லிக்கொள்கிறோமா? இப்படிப்பட்ட உணர்ச்சிகள் நம்மில் செல்வாக்கு செலுத்த நாம் அனுமதிப்போமானால், அதற்காக பின்னால் நாம் வருந்தக்கூடும். நம் பிள்ளைகளுடைய ஆவிக்குரிய நலன் ஆபத்தில் இருக்கலாம், பயனுள்ள வேதப்பூர்வமான ஆலோசனையை நாம் போற்ற வேண்டும்.—நீதிமொழிகள் 12:15.
சபை மூப்பர் ஒருவர் நமக்கு ஆலோசனை கொடுக்கும்போது, அதற்குப் பின்னால் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா என சிந்திக்காமலிருப்போமாக. அதற்கு மாறாக, பைபிள் அடிப்படையிலான அவருடைய ஆலோசனையிலிருந்து பயன்பெற ஏதாவது வழியிருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோமாக. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எந்த சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” (எபிரெயர் 12:11) எனவே, நாம் நன்றியுள்ளவர்களாய் இருந்து காரியங்களை எதார்த்தமாக சிந்திப்போமாக. அறிவுரையை ஏற்றுக்கொள்வது நமக்கு கடினமாய் இருப்பது போலவே, மூப்பர்கள் அறிவுரையைக் கொடுப்பதும் பெரும்பாலும் அவர்களுக்கு கடினமாய் இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.
பெற்றோர்களைப் பற்றிய உணர்ச்சிகள்
பெற்றோர் விதிக்கும் சில கட்டுப்பாடுகளை எதிர்ப்படும்போது, சில இளைஞர் தங்கள் பெற்றோருடைய உள்நோக்கங்களைக் குறித்து சந்தேகப்படுகிறார்கள். இளைஞர் சிலர் சொல்லலாம்: ‘தொட்டது தொன்னூருக்கும் என்னுடைய அப்பா அம்மா ஏன் சட்டம் போடறாங்க? வாழ்க்கையை என்ஜாய்பண்ண விடமாட்டாங்களே.’ ஆனால் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வராமல், இளைஞர் சூழ்நிலைமையை எதார்த்தமாக பகுத்தாராய்வது அவசியம்.
பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைக் கவனிப்பதில் பல வருஷங்களை செலவழித்திருக்கிறார்கள். பொருளாதார காரியங்களிலும் மற்ற விதத்திலும் இது பெரிய தியாகத்தை உட்படுத்தியிருக்கிறது. தங்களுடைய பருவவயது பிள்ளைகளின் வாழ்க்கையை வருந்தத்தக்கதாக ஆக்குவதற்கு இப்பொழுது தீர்மானித்துவிட்டார்கள் என்ற முடிவுக்கு வர ஏதாவது காரணமிருக்கிறதா? தங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அன்புதானே பெற்றோராகிய இவர்களைத் தூண்டுகிறது என்று நினைப்பது அதிக நியாயமானதல்லவா? இப்பொழுது வாழ்க்கையில் புதிய சவால்களை எதிர்ப்படுகிற தங்களுடைய பிள்ளைகளின்மீது சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அதே அன்பு அவர்களைத் தூண்டாதா? அன்பான பெற்றோர்மீது தவறான உள்நோக்கம் கற்பிப்பது எவ்வளவு அன்பற்றதாகவும் நன்றிகெட்டதாகவும் இருக்கும்!—எபேசியர் 6:1-3.
உடன் கிறிஸ்தவர்களிடம் நம்முடைய மனப்பான்மை
மற்றவர்களை முன்னதாகவே எடைபோட்டுவிட, அவர்கள் அப்படித்தான் என்று எண்ணிவிட அநேகர் மனம்சாய்கிறார்கள். நாம் இப்படிப்பட்ட மனப்பான்மையுள்ளவர்களாயும் சில ஆட்களைப் பற்றி ஓரளவு சந்தேகப்படுகிறவர்களாயும் இருந்தால், அப்போது என்ன செய்வது? இந்த விஷயத்தில் நாம் உலகத்தால் செல்வாக்கு செலுத்தப்படக்கூடுமா?
உதாரணமாக, நம்முடைய ஆவிக்குரிய சகோதரர் ஒருவரிடம் ஓர் அழகான வீடும் விலையுயர்ந்த ஒரு வாகனமும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைக்காத பொருளாசைமிக்கவர் என நாமாகவே முடிவுகட்டிவிட வேண்டுமா? கிறிஸ்தவர்கள் சிலருக்கு நல்ல பொருட்களை வாங்க வசதியிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு கெட்ட உள்நோக்கம் இருக்கிறது என்பதையோ அல்லது ‘ராஜ்யத்தை முதலாவதாக தேடு’வதில்லை என்பதையோ அது அர்த்தப்படுத்தாது. ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு தங்களுடைய பொருள் சம்பந்தமான சொத்துக்களை, ஒருவேளை டாம்பீகமாய் இல்லாமல் தாராளமாய் பயன்படுத்தி ஆவிக்குரிய நடவடிக்கைகளில் அவர்கள் அதிக சுறுசுறுப்பாய் இருக்கலாம்.—மத்தேயு 6:1-4, 33.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை எல்லா வகையான மக்களாலும்—பணக்காரராலும் ஏழைகளாலும்—ஆனது. (அப்போஸ்தலர் 17:34; 1 தீமோத்தேயு 2:3, 4; 6:17; யாக்கோபு 2:5) பண அந்தஸ்தின்படி மக்களை கடவுள் மதிப்பிடுவதில்லை, நாமும் அப்படி மதிப்பிடக்கூடாது. ‘பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமல்,’ பரீட்சிக்கப்பட்டவர்களாயும் உண்மையுள்ளவர்களாயும் இருக்கும் நம்முடைய சக விசுவாசிகளிடம் நாம் அன்புகூர வேண்டும்.—1 தீமோத்தேயு 5:21.
சாத்தானின் அதிகாரத்தில் கிடக்கிற இந்த உலகில், அவர் அப்படித்தான் என்று ஒருவரை முடிவுகட்டுவதும் சந்தேகப்படுவதும் அநேக விதங்களில் வெளிப்படுகிறது. உதாரணமாக, ஒரு நபருடைய பின்னணியின் காரணமாக அவரை மூர்க்கமானவர் என்றோ பொருளாசைமிக்கவர் என்றோ எடைபோட்டு விடலாம். ஆனால் கிறிஸ்தவர்களாக, நாம் இப்படிப்பட்ட மனப்பான்மைகளுக்கு பலியாகிவிடக்கூடாது. யெகோவாவின் அமைப்பு, பிடிவாதத்திற்கும் சந்தேகப்படுவதற்குமுரிய இடமல்ல. உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் யெகோவா தேவனைப் பின்பற்ற வேண்டும், அவரில் “அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை.”—2 நாளாகமம் 19:7; அப்போஸ்தலர் 10:34, 35.
அன்பால் தூண்டப்படுங்கள்
“எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களா[னார்கள்]” என்று பைபிள் வெளிப்படையாக சொல்லுகிறது. (ரோமர் 3:23) யெகோவாவுக்கு ஏற்கத்தக்க சேவை செய்வதற்கு கடினமாய் முயற்சிப்பதில் நம்முடன் ஐக்கியப்பட்டிருப்பவர்கள் என நம்முடைய உடன் வணக்கத்தாரை நாம் கருத வேண்டும். ஆவிக்குரிய ஒரு சகோதரருடன் அல்லது சகோதரியுடன் நாம் கொண்டுள்ள உறவை பாதிப்பதற்கு சந்தேகத்தையோ எதிர்மறையான உணர்ச்சிகளையோ அனுமதித்திருப்போமானால், சாத்தானுக்கு இரையாகிவிடாமலிருக்க இப்படிப்பட்ட மனப்பான்மையை எதிர்த்துப் போராடுவதற்கு கடவுளுடைய உதவிக்காக ஜெபிப்போமாக. (மத்தேயு 6:13) யெகோவாவுக்கு கெட்ட உள்நோக்கம் இருந்தது, அவளுடைய நலனைக் குறித்து அக்கறைகொள்வதில்லை, அவளை உண்மையிலேயே மகிழ்விக்கும் சுதந்திரத்தை கொடாமல் வைத்துக்கொண்டிருந்தார் என்றெல்லாம் ஏவாள் நம்பும்படி செய்தான். (ஆதியாகமம் 3:1-5) நம்முடைய சகோதரர்கள்மீது தவறான உள்நோக்கம் கற்பிப்பது அவனுடைய நோக்கங்களுக்கே துணைபுரிகிறது.—2 கொரிந்தியர் 2:11; 1 பேதுரு 5:8.
மற்றவர்கள்மீது தவறான உள்நோக்கம் கற்பிக்கும் மனச்சாய்வு நமக்கு இருப்பதை நாம் காண்போமாகில், இயேசு கிறிஸ்துவினுடைய முன்மாதிரியை சிந்தித்துப் பாருங்கள். கடவுளுடைய பரிபூரண குமாரனாக இருந்தபோதிலும், தம்முடைய சீஷர்களில் கெட்ட உள்நோக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்துக்கொண்டில்லை. அதற்குப் பதிலாக, அவர்களில் இருந்த நல்ல குணங்களையே இயேசு பார்த்தார். முதன்மை ஸ்தானத்திற்காக அவருடைய சீஷர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு மோசமான உள்நோக்கம் இருப்பதால் அவர்களுடைய இடத்தில் 12 புதிய அப்போஸ்தலர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. (மாற்கு 9:34, 35) அபூரணராக இருந்ததால், பெருமையையும் வகுப்புவாதங்களையும் பிரதானமாக கொண்ட விசுவாசதுரோக யூத மத பண்பாட்டினால் அவர்கள் ஏதாவது முறையில் செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்கலாம். யெகோவாவுக்கான அன்பே தம்மை பின்பற்றியவர்களுடைய அடிப்படை நோக்கம் என்பதை இயேசு அறிந்திருந்தார். இப்படிப்பட்ட அன்பை காண்பித்து இயேசுவை பற்றிக்கொண்டிருந்ததற்காக, அவர்கள் பேரளவில் பலனளிக்கப்பட்டார்கள்.—லூக்கா 22:28-30.
நம்முடைய உண்மையுள்ள சக விசுவாசிகளை சந்தேகக் கண்ணுடன் பார்ப்போமானால், காரியங்களை தெளிவற்ற ஒரு கண்ணாடியில் பார்ப்பதைப்போல இது இருக்கும். உண்மையில் என்ன உள்ளதோ அவ்வாறே எதுவும் தெரியாது. ஆகவே, அன்பின் கண்ணாடி வழியாக நாம் பார்ப்போமாக. உண்மைப்பற்றுறுதியுள்ள உடன் கிறிஸ்தவர்கள் நம்மை நேசிக்கிறார்கள், நம்முடைய அன்பான கரிசனைக்கு தகுதிவாய்ந்தவர்கள் என்பதற்கு ஏராளமான அத்தாட்சி இருக்கிறது. (1 கொரிந்தியர் 13:4-8) ஆகவே, அவர்களுக்கு அன்பைக் காண்பித்து, தவறான உள்நோக்கம் கற்பிக்காமல் இருப்போமாக.
[பக்கம் 26-ன் படம்]
கடவுளை உண்மையோடு வணங்குகிற மற்றவர்களை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?
[பக்கம் 27ன் படம்]
நம்பிக்கையும் மரியாதையும் யெகோவாவின் சாட்சிகளை மகிழ்ச்சியுள்ள ஒரே குடும்பமாக்குகிறது