வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வெள்ளாடுகளையும் செம்மறியாடுகளையும் பற்றிய இயேசுவின் உவமையைக் குறித்த நம் படிப்பு கிளர்ச்சியூட்டியது. 1995 அக்டோபர் 15 தேதியிட்ட காவற்கோபுர இதழில் வெளிவந்த புதிய புரிந்துகொள்ளுதலைச் சிந்தித்துப் பார்க்கையில், யெகோவாவின் சாட்சிகள் இன்று பிரிக்கும் வேலையில் பங்குகொண்டு வருகிறார்கள் என்பதாக இன்னமும் சொல்ல முடியுமா?
ஆம், மத்தேயு 25:31, 32 பின்வருமாறு சொல்வதன் காரணமாக அநேகர் இதைப் பற்றி யோசித்திருக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கதுதான்: “மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரி”ப்பார். மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பின்பே ஏன் இந்த வசனங்கள் பொருந்துகின்றன என்பதை அக்டோபர் 15, 1995 தேதியிட்ட காவற்கோபுரம் காட்டியது. இயேசு மகிமைப்பொருந்தினவராய் தம்முடைய தூதரோடுகூட வந்து தம்முடைய நியாயாசனத்தில் மேல் வீற்றிருப்பார். பின்பு, அவர் மக்களை பிரிப்பார். எந்தக் கருத்தில்? அந்தச் சமயத்திற்கு முன்பாக மக்கள் என்ன செய்தார்கள் அல்லது செய்யவில்லை என்பதன் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்குவார்.
ஒரு நீதிமன்ற வழக்குக்கு தீர்ப்பு வரையாக வழிநடத்துகிற சட்ட சம்பந்தமான காரியங்களில் உள்ள ஒவ்வொரு கட்டத்துக்கும் நாம் இதை ஒப்பிடலாம். நீதிமன்றம் தீர்ப்பு செய்து தண்டனையை வழங்குவதற்கு முன்பாக ஒரு நீண்ட காலப் பகுதியில் அத்தாட்சி குவிந்துகொண்டே இருக்கிறது. இப்பொழுது வாழ்ந்துவருகிற மக்கள் செம்மறியாடுகளாக அல்லது வெள்ளாடுகளாக மாறுவார்களா என்பதற்கான அத்தாட்சி, நீண்ட காலமாக குவிந்துகொண்டே வந்திருக்கிறது. அந்த அத்தாட்சி இன்னும் வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இயேசு தம்முடைய சிங்காசனத்தில் அமரும்போது வழக்கு முடிவடையும், தண்டனைத் தீர்ப்பை வழங்குவதற்கு அவர் தயாராக இருப்பார். அப்பொழுது மக்கள் நித்திய அழிவுக்காக அல்லது நித்திய ஜீவனுக்காக பிரிக்கப்படுவார்கள்.
என்றபோதிலும், மத்தேயு 25:32-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜீவனுக்கு அல்லது மரணத்துக்கு மக்கள் பிரிக்கப்படுவது இன்னும் எதிர்காலத்துக்குரியதாக இருப்பதன் காரணமாக, அதற்கு முன்பாக எந்தப் பிரித்தலும் நடைபெறுவதில்லை என்பதை அது அர்த்தப்படுத்துவது இல்லை. இதற்கு முன்பே நடைபெறும் ஒரு பிரிக்கும் வேலையைப் பற்றி பைபிள் மத்தேயு 13-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறது. ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் புத்தகம் பக்கங்கள் 179-80-ல் இதை “ஜனங்கள் பிரிக்கப்படுதல்”a என்ற தலைப்பின்கீழ் கையாளுவது அக்கறைக்குரியதாக உள்ளது. புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவோடு முனைப்பாய்த் தோன்றும் வண்ணம் இயேசு சம்பந்தப்படுத்திய தனிக் கவனிப்புக்குரிய மற்றச் சம்பவங்களும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று, “ராஜ்யத்தின் புத்திரரைப்” “பொல்லாங்கனுடைய புத்திரரி”லிருந்து பிரித்தலாகும். சத்துரு, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுச் சென்ற கோதுமை வயலைப் பற்றிய தம்முடைய உவமையில் இயேசு இதைப் பற்றி பேசினார்.”
மத்தேயு 13:24-30-ல் குறிப்பிடப்பட்டு வசனங்கள் 36-43 வரையாக விளக்கப்பட்டுள்ள இயேசுவின் உவமையைக் குறித்து அந்தப் புத்தகம் பேசிக்கொண்டிருந்தது. கோதுமையின் நல்ல விதைகள் ராஜ்யத்தின் புத்திரரையும் ஆனால் களைகளோ பொல்லாங்கனுடைய புத்திரரையும் பிரதிநிதித்துவம் செய்வதை வசனம் 38 குறிப்பிடுவதைக் கவனியுங்கள். ‘உலகத்தின் முடிவில்’—நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற அந்தக் காலத்தில்—களைகள் சேர்க்கப்படுவதை வசனங்கள் 39 மற்றும் 40 காட்டுகின்றன. அவை பிரிக்கப்பட்டு கடைசியாக சுட்டெரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
உவமை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைப் பற்றி பேசுகிறது (செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றிய உவமையில் இவர்கள் இயேசுவின் சகோதரர்களென அழைக்கப்படுகிறார்கள்). இப்பொழுதேகூட, அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டிக்கொண்டு ஆனால் தங்களைப் “பொல்லாங்கனுடைய புத்திர”ராக நிரூபிக்கும் ஆட்களிடமிருந்து பிரிக்கப்படும் இன்றியமையாத ஒரு பிரிக்கும் வேலை நம்முடைய காலத்தில் நடைபெற்று வருகிறது என்ற குறிப்பு தெளிவாக இருக்கிறது.
மக்கள் பிரிக்கப்பட்டு வருவதைப் பற்றிய மற்ற உதாரணங்களை இயேசு அளித்தார். அழிவுக்குப் போகிற விசாலமான வழியைக் குறித்து அவர் சொன்னதை நினைவுபடுத்திப் பாருங்கள்: ‘அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.’ (மத்தேயு 7:13) அது முடிவான விளைவை மட்டுமே பற்றிய ஒரு குறிப்பு அல்ல. ஜீவனுக்குப் போகிற குறுகலான வழியைக் கண்டுப்பிடிக்கும் சிலருடைய விஷயத்தில் இப்பொழுது உண்மையாக இருப்பது போலவே, இது தொடர்ந்து நடைபெறும் ஒரு விஷயத்தைப் பற்றிய குறிப்பாகும். அப்போஸ்தலர்களை வெளியே அனுப்பும்போது, பாத்திரவான்களாக இருக்கும் சிலரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்பதாக இயேசு சொன்னதை நினைவுபடுத்திப் பாருங்கள். மற்றவர்கள் பாத்திரவான்களாக இருக்கமாட்டார்கள்; அப்போது அப்போஸ்தலர்கள் இப்படிப்பட்ட ஆட்களுக்கு “சாட்சியாக” கால்களில் படிந்த தூசியை உதறிப்போட வேண்டும். (லூக்கா 9:5) உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பொது ஊழியத்தை இன்று நிறைவேற்றிவருகையில் இதைப்போன்ற ஏதோவொன்றே சம்பவிப்பது உண்மையாக இருக்கிறதல்லவா? சிலர் நன்றாக கேட்கிறார்கள், மற்றவர்களோ நாம் கொண்டுசெல்லும் தெய்வீகச் செய்தியை நிராகரித்துவிடுகிறார்கள்.
செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய அந்த காவற்கோபுர கட்டுரைகள் இவ்வாறு குறிப்பிட்டன: “உவமையில் விவரிக்கப்பட்டிருக்கும் நியாயத்தீர்ப்பு சமீபத்திய எதிர்காலத்தில் இருக்கப்போவதால், இப்போதும்கூட முக்கியமான ஏதோவொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் ஜீவனைப் பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம்; நாம் அறிவிக்கும் செய்தி ஜனங்கள் மத்தியில் ஒரு பிரிவினையை ஏற்படுத்துகிறது. (மத்தேயு 10:32-39).” மத்தேயு 10-ஆம் அதிகாரத்திலுள்ள அந்தப் பகுதியில், அவரைப் பின்பற்றுவது பிரிவினைக்கு ஒரு காரணமாக இருக்கும்—மகனுக்கு விரோதமாக தகப்பன், தாய்க்கு விரோதமாக மகள்—என்பதாக இயேசு சொன்னதை நாம் வாசிக்கிறோம்.
கடைசியாக, கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் உலகமுழுவதிலும் ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை முன்னின்று வழிநடத்தியிருக்கிறார்கள். அதை மக்கள் கேட்டு சாதகமாகவோ பாதகமாகவோ செயல்படும்போது தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மத்தேயு 25-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்தின்படி, ‘இந்த நபர் ஒரு செம்மறியாடு அல்லது அந்த நபர் ஒரு வெள்ளாடு’ என்பதாக மனிதர்களாகிய நாம் சொல்ல முடியாது, சொல்லவும்கூடாது. என்றபோதிலும், கடவுளுடைய செய்தியை மக்கள் கேட்கும்படி நாம் செய்வது, அவர்களுடைய நிலை என்ன என்பதை—அவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள், அவர்கள் இயேசுவினுடைய சகோதரர்களுக்கு எவ்வாறு செவிசாய்க்கிறார்கள் என்பதை—அவர்கள் காண்பிக்கும்படி அனுமதிக்கிறது. ஆகவே, ஒரு நீதிமன்ற வழக்கிற்காக அத்தாட்சி குவிந்துகொண்டே வருவது போல, இயேசுவின் சகோதரர்களை ஆதரிப்பவர்களுக்கும் அவர்களை ஆதரிக்க மறுப்பவர்களுக்கும் இடையே பிரிவினையானது மேன்மேலும் தெளிவாகிக்கொண்டே வருகிறது. (மல்கியா 3:18) காவற்கோபுரம் காண்பித்தபடி, இயேசு விரைவில் தம்முடைய சிங்காசனத்தில் அமர்ந்து, நியாயப்படி மக்களை அவர் பிரித்து ஜீவனுக்கு அல்லது மரணத்திற்கு என்ற முடிவான கருத்தில் தண்டனைத் தீர்ப்பை அளிப்பார்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் 1983-ல் பிரசுரிக்கப்பட்டது.