உங்கள் பிள்ளையின் ஜீவனைக் காப்பாற்றுங்கள்!
மைக்கலும் அல்ஃபீனாவும் தென் ஆப்பிரிக்காவிலுள்ள குவாசூலு-நேட்டலின் பசுமையான குன்றுகளின் மத்தியிலுள்ள ஒரு கிராமப்புற பள்ளத்தாக்கில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் ஏழு பிள்ளைகளை வளர்ப்பதில் அநேக சவால்களை எதிர்ப்பட்டனர். தன் மனைவியின் முழு ஆதரவோடு, தகப்பன்மாருக்கு பைபிள் கொடுக்கும் கட்டளைக்குக் கீழ்ப்படிய மைக்கல் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார்: “கர்த்தருக்கேற்ற [“யெகோவாவுக்கேற்ற,” NW] சிட்சையிலும் போதனையிலும் அவர்களை [உங்கள் பிள்ளைகளை] வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) ஆனால் சில சமயங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உதாரணமாக, ஆப்பிரிக்காவில் மந்தையை மேய்க்கும் சிறுவர்கள், ஒன்றாகச் சேர்ந்து அதிக நேரம் விளையாடுவதற்காக தங்கள் கால்நடைகளை மற்றவர்களுடையதோடு சேர்த்து மேயவிடுவது சர்வசாதாரணமாக இருக்கிறது. சிலசமயங்களில் அவர்கள் குறும்புத்தனம் செய்து பேசக்கூடாத காரியங்களைப் பேசுகிறார்கள். மைக்கலின் மகன்கள் குடும்பத்தின் கால்நடைகளை மேய்க்கச் சென்றபோது, ஒருசில பிள்ளைகளோடு அவர்கள் சகவாசம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதாக அவர் அவர்களுக்கு கண்டிப்பான அறிவுரைகளைக் கொடுத்தார். (யாக்கோபு 4:4) இருப்பினும் வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, சிலசமயங்களில் அவர்கள் இந்தப் பிள்ளைகளோடு சகவாசம் வைத்துக்கொண்டிருப்பதை அவர் கண்டார். இதன் விளைவாக, அவர் அவர்களைச் சிட்சிக்க வேண்டியதாக இருந்திருக்கிறது.—நீதிமொழிகள் 23:13, 14.
மைக்கல் தன்னுடைய பிள்ளைகளை அளவுக்கதிகமாக கண்டித்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா? சிலர் அவ்விதமாக நினைக்கலாம், ஆனால் இயேசு கிறிஸ்து “ஞானமோ தன் செயல்களால் நீதியுள்ளதென்று தீர்க்கப்பட்டது” என்று சொன்னார். (மத்தேயு 11:19, NW) மைக்கலும் அல்ஃபீனாவும் தங்களுடைய பிள்ளைகளோடு நேரத்தை செலவழித்து பைபிள் பதிவுகளையும் சத்தியங்களையும் அவர்களுக்குக் கற்பித்து வீட்டில் ஒரு அன்பான சூழலை உருவாக்கினர்.
மைக்கலுக்கும் அல்ஃபீனாவுக்கும் நான்கு மகள்கள் இருக்கிறார்கள்—டிம்பகிலி, சஃபிவா, டோலக்கெலி மற்றும் டிம்பக்கானி. அவர்கள் அனைவரும் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியின் முழு நேர பிரசங்கிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய இரண்டு மகன்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நடத்தும் கண்காணிகளாக சேவை செய்கிறார்கள். அவர்களுடைய மூன்றாவது மகன் உதவி ஊழியராக இருக்கிறார், அவருடைய மனைவி முழு நேரம் சுவிசேஷ வேலையைச் செய்கிறார்.
பெரிய குடும்பங்களையுடைய அநேக கிறிஸ்தவ பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை வெற்றிகரமாக வளர்ப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இருப்பினும் பெற்றோரால் நல்ல முறையில் வளர்க்கப்பட்டிருக்கும் சில பிள்ளைகள் சத்தியத்தை புறக்கணித்துவிட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெற்றோர் கெட்ட குமாரனைப் பற்றிய இயேசுவின் உவமையை மனதில் கொண்டவர்களாக, தங்களுடைய மகனோ அல்லது மகளோ மனந்திரும்பி கடைசியில் இரட்சிப்பை பெற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துவருகிறார்கள்.—லூக்கா 15:21-24.
ஆனால் வருத்தப்பட வேண்டிய விஷயமானது, சில கிறிஸ்தவ பெற்றோர் தங்களுடைய எல்லா பிள்ளைகளையும் உலகத்திற்கு பறிகொடுத்துவிடுகிறார்கள். ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விசேஷமாக இது கவலைக்குரிய விஷயமாய் இருக்கிறது; அங்கு, பிள்ளைகள் தங்கள் பருவ வயதை அடையும்வரையாக நன்றாக நடந்துகொள்வதாக தோன்றுகிறது. அதன் பின்னரோ, மலரும் பருவத்தில் அவர்கள் சாத்தானுடைய உலகின் ஒழுக்கக்கேடான வழிகளுக்குக் கவர்ந்திழுக்கப்பட்டுவிடுகிறார்கள். (1 யோவான் 5:19) இதன் விளைவாக, அநேக தகப்பன்மார் சபை மூப்பர்களாக சேவிக்க தகுதிபெற முடியாதவர்களாகிவிடுகிறார்கள். (1 தீமோத்தேயு 3:1, 4, 5) ஒரு கிறிஸ்தவ தகப்பன் தன்னுடைய சொந்த குடும்பத்தின் இரட்சிப்பை அதிமுக்கியமான ஒரு விஷயமாக கருதவேண்டும் என்பது தெளிவாக உள்ளது. ஆகவே தங்களுடைய பிள்ளைகளின் ஜீவனைக் காப்பாற்ற பெற்றோர் என்ன செய்யலாம்?
ஒரு நெருங்கிய நண்பராயிருங்கள்
இயேசு பரிபூரணராக இருந்தது மட்டுமல்லாமல் வேறு எந்த மனிதனைக் காட்டிலும் அறிவிலும் அனுபவத்திலும் மிகவும் மேம்பட்டவராக சிறந்து விளங்கினார். இருப்பினும், தம்முடைய அபூரணமான சீஷர்களை அவர் நெருங்கிய நண்பர்களாக நடத்தினார். (யோவான் 15:15) அதன் காரணமாகவே அவர்கள் அவரோடுகூட இருக்க ஆசைப்பட்டனர், அவர் சமுகத்தில் செழிப்பாயிருந்தார்கள். (யோவான் 1:14, 16, 39-42; 21:7, 15-17) பெற்றோர் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். அனலான சூரிய ஒளியை நோக்கி விரிந்திருக்கும் இலைகளையுடைய சிறிய தாவரங்களைப் போல, அன்பான, நட்பான சூழல் நிறைந்த வீட்டில் பிள்ளைகள் செழிப்பாயிருக்கிறார்கள்.
பெற்றோரே, உங்களுடைய பிள்ளைகள் தங்களுடைய எல்லா கவலைகளையும் உங்களிடம் மனம்விட்டு சொல்லமுடியுமா? அவர்களுக்கு செவிகொடுத்து நீங்கள் கேட்கிறீர்களா? மனதில் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பாக அதிக முழுமையாக காரியங்களைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் நீங்கள் வெளியே கொண்டுவருகிறீர்களா? பைபிள் பிரசுரங்களை அவர்களோடு சேர்ந்து ஆராய்ச்சி செய்து அவர்களுடைய சில கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுப்பிடிப்பதற்கு நீங்கள் பொறுமையாக உதவிசெய்கிறீர்களா?
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு தாய் விளக்குகிறார்கள்: “எங்களுடைய மகள் பள்ளிக்குச் சென்ற முதல் நாளிலிருந்தே, அந்த நாளில் நடந்த சம்பவங்களை எங்களுக்குத் தெரியப்படுத்தும்படியாக நாங்கள் அவளை உற்சாகப்படுத்திவந்தோம். உதாரணமாக, ‘மதிய இடைவேளையில் நீ யாரோடு இருந்தாய்? உன்னுடைய புதிய ஆசிரியரைப் பற்றி எனக்குச் சொல்லு. அவர்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள்? இந்த வாரத்துக்கு என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்?’ என்றெல்லாம் நான் கேட்பேன். ஒரு சமயம் எங்களுடைய மகள் தன்னுடைய ஆங்கில பாட ஆசிரியர் வகுப்பிலுள்ளவர்களை ஒரு திரைப்படத்துக்கு அழைத்துச்செல்லப்போவதாகவும், அதைக் குறித்து அவர்கள் பின்னால் விமர்சனம் எழுதப்போவதாகவும் வீட்டுக்கு வந்து சொன்னாள். திரைப்படத்தின் பெயர் கேள்விக்குரியதாக இருந்தது. அதைப்பற்றி கூடுதலான தகவலைப் பெற்றுக்கொண்டபோது அது ஒரு கிறிஸ்தவருக்கு தகுந்ததாக இராது என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். ஒரு குடும்பமாக அதைப் பற்றி கலந்துபேசினோம். அடுத்த நாள் எங்களுடைய மகள் ஆசிரியரை அணுகி, அந்தப் படத்தில் சித்தரிக்கப்படும் ஒழுக்கங்கள் தன்னுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு இசைவாக இருக்காது என்பதால் அந்தப் படத்தை தான் பார்க்க விரும்பவில்லை என்று விளக்கினாள். ஆசிரியர் இந்த விஷயத்தை மறுபடியும் பரிசீலனை செய்து, பின்னால் எண்ணி வருந்தக்கூடிய ஒன்றைப் பார்ப்பதற்கு வகுப்பை அழைத்துச் செல்ல தான் விரும்பவில்லை என்பதாகச் சொல்லி எங்களுடைய மகளுக்கு நன்றிதெரிவித்தார்கள்.” தங்களுடைய மகளின் இரட்சிப்பில் இந்தப் பெற்றோர் எப்போதும் காட்டிவந்த அக்கறை நல்ல பலன்களை அளித்தது. அவள் மகிழ்ச்சியான, நம்பிக்கையான ஆளுமையை வளர்த்துக்கொண்டிருக்கிறாள்; இப்பொழுது உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தில் ஒரு வாலன்டியராக சேவைசெய்து வருகிறாள்.
இயேசு மற்றவர்களுடைய பிள்ளைகளைக் கையாளும் விதத்தில் மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்தார். அவர்களுடைய தோழமையை அவர் அனுபவித்து மகிழ்ந்தார். (மாற்கு 10:13-16) தங்களுடைய சொந்த பிள்ளைகளோடு காரியங்களைச் செய்ய பெற்றோர் எவ்வளவு சந்தோஷமுள்ளவர்களாக இருக்கவேண்டும்! ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், ஒரு தகப்பன் தன் பிள்ளைகளோடு பந்தையோ அல்லது வேறு விளையாட்டுகளையோ விளையாடுவதை பிறர் பார்ப்பது அவமானமெனக் கருதுகிறார். ஆனால் தன் பிள்ளைகளோடு காரியங்களைச் செய்வதை ஒரு கிறிஸ்தவ தகப்பன் ஒருபோதும் கௌரவக் குறைச்சலாக நினைக்கக்கூடாது. இளைஞருக்குத் தங்களோடு நேரத்தை செலவழிப்பதை அனுபவித்து மகிழும் பெற்றோர் தேவை. இது தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்துவதை பிள்ளைகளுக்கு சுலபமானதாக ஆக்குகிறது. இப்படிப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான தேவைகள் அசட்டை செய்யப்படுகையில், பிள்ளைகள் எரிச்சலடையக்கூடும் அல்லது விலகிவிடக்கூடும்; விசேஷமாக அவர்கள் எப்போது பார்த்தாலும் திருத்தப்பட்டுக்கொண்டே இருந்தால் அப்படி நடக்கும்.
குடும்ப உறவுகளைக் குறித்து கொலோசெயருக்கு எழுதுகையில், பவுல் இவ்வாறு சொன்னார்: “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.” (கொலோசெயர் 3:21) அளவுக்கு அதிகமான சிட்சையும் மிகக் குறைவான நட்பும் இருக்கும் ஒரு ஏற்ற தாழ்வை இது சுட்டிக்காட்டலாம். பருவ வயதினர் உட்பட பிள்ளைகள் அன்பு காட்டப்பட்டு பாராட்டப்படுகையில், தேவையான சிட்சைக்கு அதிக சாதகமாக பிரதிபலிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
கடவுளிடம் அன்பு
பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு கடத்தக்கூடிய அதிக மதிப்புள்ள சுதந்தரமானது, அன்பு காட்டுவதில் அவர்களுடைய சொந்த முன்மாதிரியே ஆகும். பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர் கடவுளிடம் உண்மையான அன்பை வெளிப்படுத்துவதைப் பார்ப்பதும் கேட்பதும் அவசியமாகும். உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தில் வேலைசெய்யும் ஒரு இளம் நபர் விளக்குகிறார்: “நான் சிறு பையனாக இருந்தபோது வீட்டில் சிறிய சிறிய வேலைகளைச் செய்வதற்கு என்னுடைய அப்பாவுக்கு உதவியாயிருப்பேன். அப்பா நான் செய்த சிறிய காரியத்தையும் உண்மையில் பாராட்டியதால் அவருக்கு உதவிசெய்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யெகோவாவைப் பற்றி பல காரியங்களை எனக்குச் சொல்லுவதற்கு அந்த நேரத்தை அவர் பயன்படுத்திக்கொள்வார். உதாரணமாக, ஒரு சனிக்கிழமையன்று புல்லை சமமாக வெட்டுவதற்காக நாங்கள் கஷ்டப்பட்டு வேலைசெய்து கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. வெயில் மண்டையைப் பிளந்தது. அப்பாவுக்கு வியர்த்துக்கொண்டிருந்தது, ஆகவே நான் ஓடிப்போய் இரண்டு டம்ளர்களில் தண்ணீர்கொண்டுவந்து அவற்றில் ஐஸ் கட்டிகளைப் போட்டேன். அப்போது அப்பா சொன்னார்: ‘யெகோவா எவ்வளவு ஞானமுள்ளவர் என்பது உனக்குப் புரியுதா? ஐஸ், தண்ணீரில் மிதக்கிறது. அது மூழ்கிப்போனால், ஏரிகளின் அடியிலும் குளங்களின் அடியிலுமுள்ள எல்லா உயிரினங்களும் செத்துவிடும். மாறாக, ஐஸ் வெப்பத்தைக் கடத்தாத ஒரு போர்வைபோல் இருக்கிறது! யெகோவாவை இன்னும் நன்றாக தெரிந்துகொள்வதற்கு அது நமக்கு உதவிசெய்கிறது, இல்லையா?’a நடுநிலைமையை காத்துக்கொண்டதற்காக பின்னால் நான் சிறையிலடைக்கப்பட்டபோது, எனக்கு யோசிப்பதற்கு நேரமிருந்தது. ஒரு இரவு சிறையில் நான் சோர்வுற்றவனாய் உணர்ந்தபோது, அப்பாவின் அந்த வார்த்தைகள் எனக்கு ஞாபகத்துக்கு வந்தன. அவை எத்தனை அர்த்தமுள்ளவையாக இருந்தன! என்னால் முடிந்தால் நான் என்றென்றுமாக யெகோவாவையே வணங்குவேன்.”
ஆம், பெற்றோர் செய்யும் எல்லா காரியத்திலேயும் கடவுளிடமாக அன்பு வெளிப்படுத்தப்படுவதை பிள்ளைகள் பார்க்க வேண்டும். கிறிஸ்தவ கூட்டங்களில் ஆஜராவது, வெளி ஊழியத்தில் கலந்துகொள்வது, குடும்ப பைபிள் வாசிப்பு மற்றும் படிப்பு ஆகியவற்றிற்கு பின்னால், கடவுள் மீதுள்ள அன்பும் அவருக்கான மனமுவந்த கீழ்ப்படிதலுமே உந்துவிக்கும் சக்தியாக இருப்பது விசேஷமாக காணப்பட வேண்டும். (1 கொரிந்தியர் 13:3) அதிக முக்கியமாக, முழு இருதயத்தோடு செய்யப்படும் குடும்ப ஜெபங்கள் கடவுள் மீதுள்ள அன்பைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சுதந்தரத்தை உங்களுடைய பிள்ளைகளுக்கு கொடுப்பதன் முக்கியத்துவத்தை இதற்கும் மேலாக வலியுறுத்தமுடியாது. அதன் காரணமாகவே, இஸ்ரவேலர் இவ்விதமாக கட்டளையிடப்பட்டார்கள்: ‘நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில்நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’—உபாகமம் 6:5-7; மத்தேயு 22:37-40-ஐ ஒப்பிடுக.
சுதந்தரிக்கப்பட்ட நம்முடைய பாவமுள்ள சுபாவமே கடவுளை நேசிப்பதற்கும் கீழ்ப்படிவதற்கும் பெரிய ஒரு இடையூறாக உள்ளது. (ரோமர் 5:12) ஆகவே, பைபிள் பின்வருமாறும்கூட கட்டளையிடுகிறது: “கர்த்தரில் [“யெகோவாவில்,” NW] அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்.” (சங்கீதம் 97:10) தீமையான சிந்தனைகளே தீமையான செயல்களுக்கு அநேகமாக வழிநடத்துகின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்கு, மற்றொரு இன்றியமையாத குணத்தையும் ஒரு பிள்ளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கடவுள் பயம்
யெகோவாவை கோபப்படுத்திவிடுவோமோ என்ற பயபக்தியோடுகூடிய அன்பு மிகவும் விரும்பத்தக்க ஒன்றாகும். ‘யெகோவாவுக்கு பயப்படுகிற பயத்தில்’ இன்பம் கண்ட இயேசு கிறிஸ்துதாமே நமக்கு பரிபூரணமான ஒரு முன்மாதிரியை வைத்திருக்கிறார். (ஏசாயா 11:1-3) ஒரு பிள்ளை மலரும் பருவத்தை அடைந்து பலமான பாலியல் தூண்டுதல்களை அனுபவிக்க ஆரம்பிக்கும்போது இப்படிப்பட்ட ஒரு பயம் அத்தியாவசியமாகும். ஒழுக்கக்கேடான நடத்தைக்கு வழிநடத்தக்கூடிய உலகப்பிரகாரமான அழுத்தங்களை எதிர்ப்பதற்கு கடவுள் பயம் ஒரு வாலிபனுக்கு உதவிசெய்யக்கூடும். (நீதிமொழிகள் 8:13) ஒருசில சமுதாயங்களில், பெற்றோர் சங்கடப்பட்டுக்கொண்டு பாலியல் சோதனைகளை எவ்வாறு கையாளுவது என்பதைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு கற்பிக்காமல் இருந்துவிடுகிறார்கள். உண்மையில் இப்படிப்பட்ட விஷயங்களைக் கலந்துபேசுவது தவறு என்பதாக அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் பெற்றோரின் இத்தகைய அலட்சியத்தின் விளைவு என்னவாக இருந்திருக்கிறது?
பியூகி, அமோக்கோ, செயேனி என்ற பெயருள்ள மூன்று மருத்துவ நிபுணர்கள் தென் ஆப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்காவின் கிராமப்புறங்களில் 1,702 பெண்களையும் 903 பையன்களையும் பேட்டி கண்டனர். “இந்தச் சுற்றாய்வில் உட்படுத்தப்பட்ட 76 சதவீத பெண்களும் 90.1 சதவீத பையன்களும் ஏற்கெனவே பாலுறவு அனுபவங்களைப் பெற்றிருந்தனர்” என்பதாக செளத் ஆப்பிரிக்கன் மெடிக்கல் ஜர்னல் அறிவிப்பு செய்தது. பெண்களின் சராசரி வயது 15, மேலும் அநேகர் பாலுறவில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 250-க்கும் அதிகமானவர்கள் ஓரிரண்டு முறை கருவுற்றிருந்தார்கள். பாலுறவால் கடத்தப்பட்ட நோய்களின் அதிகரிப்பு மற்றொரு பின்விளைவாக இருந்தது.
திருமணத்துக்கு முன்பாக பாலுறவை எவ்வாறு தவிர்ப்பது என்பதைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியத்தை அநேக பெற்றோர் உணர்வதில்லை என்பது தெளிவாக இருக்கிறது. அதற்குப் பதிலாக, முன்சொல்லப்பட்ட பத்திரிகை இவ்வாறு விளக்குகிறது: “பிள்ளைபெற்றுக்கொள்வதும் தாய்மையும் கிராமப்புற டிரான்ஸ்கி சமுதாயங்களில் பெண்மைக்குரிய மிக உயர்வான குணங்களாக கருதப்படுகின்றன; பூப்புப்பருவத்தை அடையும் பெண்களால் வேகமாக இது உணர்ந்துகொள்ளப்படுகிறது.” உலகின் மற்ற பகுதிகளிலும் இதே பிரச்சினை இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள அநேக இளைஞர்கள் தங்களுடைய பாலியலைப் புரிந்துகொள்ள தங்கள் பெற்றோர் தங்களுக்கு உதவிசெய்யாமலிருப்பதைக் குறித்து குறைகூறுகிறார்கள். உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல்b என்ற ஆங்கில புத்தகத்தை பயன்படுத்த சில கிறிஸ்தவ பெற்றோர் மிகவும் சங்கடமாக உணர்ந்திருக்கிறார்கள். பக்கங்கள் 20-3-ல் அது பாலுறுப்புகளின் கனத்துக்குரிய உபயோகத்தைப் பற்றியும் பூப்புப்பருவத்தில் நிகழும் மாற்றங்களைப் பற்றியும் விளக்குகிறது.
பாலியலைப் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையைக் குறித்து தங்களுடைய பிள்ளைகளோடு கலந்துபேச முற்படும் கிறிஸ்தவ பெற்றோர் பாராட்டப்பட வேண்டும். காரியங்களைக் கிரகித்துக்கொள்ளக்கூடிய ஒரு பிள்ளையின் திறமைக்கு ஏற்ப இதைப் படிப்படியாகச் செய்வதே சிறந்தது. பிள்ளையின் வயது போன்ற காரியத்தைப் பொருத்து, உடல் உறுப்புக்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் பற்றிக் குறிப்பிடுவதில் தெளிவாக இருப்பது அவசியமாக இருக்கலாம். மற்றபடி, அனுபவமில்லாத ஒரு இளைஞன் சொல்லப்படுகின்ற குறிப்பை புரிந்துகொள்ளாமல் போய்விடலாம்.—1 கொரிந்தியர் 14:8, 9.
இரண்டு மகள்களையும் ஒரு மகனையும் கொண்ட ஒரு தென் ஆப்பிரிக்க தகப்பன் இவ்வாறு விளக்குகிறார்: “கூச்ச உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய பாலியல் விஷயங்களை என்னுடைய பெண்பிள்ளைகளிடம்கூட கலந்துபேச எனக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் என்னுடைய மனைவி உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் புத்தகத்தை பயன்படுத்தி விசேஷமாக எங்களுடைய மகள்களுக்கு குறிப்பாக கவனம்செலுத்தினாள். [பக்கங்கள் 26-31 பார்க்கவும்.] என்னுடைய மகனுக்கு 12 வயதானபோது, அவனைக் கூட்டிக்கொண்டு மலைகளில் நீண்ட தூரம் நடந்துசெல்ல நான் தீர்மானித்தேன். அந்தச் சமயத்தில், பையனுடைய உடலின் வளர்ச்சியைப் பற்றியும் பின்னால் திருமணம் செய்துகொள்ளும்போது இதற்கு விசேஷமான நோக்கமிருப்பதைப் பற்றியும் நான் விளக்கமாக அவனோடு கலந்துபேசினேன். கீழ்த்தரமானதாக தற்புணர்ச்சிப் பழக்கத்தை தவிர்க்க வேண்டிய அவசியத்தையும் பெண்களை மரியாதையோடும் மதிப்போடும்—தன்னுடைய அம்மாவையும் சகோதரிகளையும் கருதுவதுபோல—கருதவேண்டிய அவசியத்தையும்கூட கலந்துபேசினேன்.”
சந்தோஷமான பலன்கள்
இங்கே குறிப்பிடப்பட்ட தாயும் தகப்பனும் ஊக்கமாக உழைத்தார்கள், தங்களுடைய மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதில் நல்ல பலன்கள் கிடைத்ததற்காக சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் இப்பொழுது வயது வந்தவர்களாக, உண்மையுள்ள கிறிஸ்தவர்களைத் திருமணம் செய்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய மகனும் மருமகன்களும் கிறிஸ்தவ சபையில் மூப்பர்களாக சேவைசெய்கிறார்கள், அவர்களில் இரண்டு தம்பதிகள் பல வருடங்களாக முழு நேர சுவிசேஷ வேலையில் இருந்துவருகிறார்கள்.
ஆம், தங்களுடைய குடும்பத்தின் இரட்சிப்புக்காக ஊக்கமாக உழைக்கும் பெற்றோர், இப்படிப்பட்ட பைபிள் போதனைக்குச் செவிகொடுக்க தெரிந்துகொள்ளும் பிள்ளைகளிடமிருந்து சந்தோஷமான பலன்களை எதிர்பார்க்கலாம்; ஏனென்றால் நீதிமொழிகள் 23:24, 25 பின்வருமாறு சொல்கிறது: “நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்.” இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்தப் பெரிய குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள். “என்னுடைய பிள்ளைகள் செய்திருக்கும் ஆவிக்குரிய முன்னேற்றத்தைப் பற்றி நான் சிந்தித்துப் பார்க்கும்போது, என்னுடைய இருதயம் சந்தோஷத்தினால் பொங்கிவழிகிறது” என்பதாக அல்ஃபீனா சொல்லுகிறாள். எல்லா கிறிஸ்தவ பெற்றோரும் இந்த சந்தோஷமான பலனுக்காக உழைப்பார்களாக.
[அடிக்குறிப்புகள்]
a தண்ணீர் உறை நிலையை அடையும்போது, அதன் அடர்த்தி குறைவதால் அது மேற்பரப்புக்கு எழும்பிவருகிறது. உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டுள்ள உயிர்—அது எப்படி இங்கே வந்தது? பரிணாமத்தினாலா அல்லது படைப்பினாலா? என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 137-8 பார்க்கவும்.
b உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆப் இண்டியா வெளியிட்டுள்ள இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தையும்கூட பார்க்கவும்.
[பக்கம் 23-ன் படம்]
வாழ்க்கையின் உண்மைகளைப் பற்றி விளக்குவதற்கு ஒரு தகப்பன் தகுதியான ஒரு சூழ்நிலையை ஏற்பாடுசெய்யலாம்